கடைசி சிரிப்பாக இருக்கலாம்

நகர்வு

கங்காரு போல தகப்பன்கள்
குழந்தைகளை மடியில் வைத்துக் கொள்ளுங்கள்
பெண்களுக்கு வேலைகள் இருக்கிறது
தேயிலை பறிப்பவளென முதுகில் கட்டிக் கொள்ளட்டும்.
எவ்வளவு வேலைகளுக்கிடையிலும்
குழந்தைகள் சிரிப்பை தவறவிடாதீர்கள்.
பிஞ்சு பாதங்கள் விளையாட நிலமில்லை
கைகளை இறுக்கிப் பிடித்துக் கொள்ளுங்கள்
ஆதார் எண் இருக்கிறது என்ற அலட்சியம் வேண்டாம்
அரசுக்கு கண்காணிக்கத்தான் தெரியும்.
இந்த இடத்தில் நீங்கள் உமிழ்நீர் தானம் செய்யலாம் தப்பில்லை.
மைக் தந்தால் பேசத்தானே செய்வார்கள்!?
எல்லோரும் மண்டியிட்டு பிரார்த்தியுங்கள்
நேரத்தை வீணடிக்காதீர்
மருத்துவமனையில் தாய் பிள்ளை பெறலாம்
களைப்பில் உறங்கினால்
அரசா காவல் காக்கும் !?
ராக்கெட் வேறு விடணும்.
பிச்சையெடுக்கும் குழந்தைகளின் வருகையை விசாரிக்க நேரமில்லை
சுதந்திரக் கொடி ஏற்றும் நேரம் இது.
நாடகம் முடிந்தது
கருணையின் உருவங்கள் குறுக்கும் மறுக்குமாக நேரலையில் ஓடிக் களைத்தாச்சு
தொலைக்காட்சி அதிபர்கள் நெட்டிமுறித்து ஓய்வெடுக்கட்டும்
விளம்பரங்கள் நிறைந்து விட்டன
24 மணி நேரத்தை நீட்ட ஏதும் வழி உண்டா !?
சுருக்கென்பது அதிகாரத்தின் கைகளில்
சக்கரமென நிற்காமல் சுழல்கிறது
வாயைப் பிளந்து நிற்காதீர்கள்
எப்போதும் விழலாம் உங்கள் கழுத்தில்

– ஸ்டாலின் சரவணன்

பதிவை பகிர

One Comment

You cannot copy content of this page