வீட்டுக்குக் கம்பி வலையடித்தார்
ஆசாரி அத்தனை ஜன்னலுக்கும்
மரங்கள் கைவிரித்துப்
பிரார்த்திக்கின்றன சன்னக் கட்டம்போட்ட கம்பி வலைக்குள்
மலைகள் சிக்கி விம்முகின்றன
அந்தியில் வந்த மழை
தங்கமிறைத்ததும் தாளங்கள்
போட்டதும் கம்பிகளுக்குள்தான்
அணில்கள் ஆடுகள்
இலைகள் ஈக்கள்
எல்லாமே கைதியாக
மலர்களைத் தீண்டமுடியாமல்
வலையிட்டதைத்தான்
தாங்க முடியவில்லை
இரவு நட்சத்திரங்கள்
ஈர மேகங்கள்
பாலிதீன் பகல்கள்
சாமக் கோடாங்கிகள்
பூம் பூம் மாடுகள்
கிளி ஜோஸ்யம்
கீரை வியாபாரிகள்
பழைய இரும்பு ஓட்டை உடைசல்
பழைய பட்டு சேலை வண்டிகள்
என என்னைத் தவிர
ஏழேழ் உலகமும்
இப்போது அடைபட்டு இருக்கிறது
ஒரேயொரு மாபெரும்
கம்பி வலையில்.
– உமாமகேஸ்வரி கவிதைகள்