கால்களைச் சுற்றி நிறையக் கட்டங்கள்
காலம்தான் வரைந்து வைத்துஇருப்பதாக சொல்வார்கள்
துயரம் ,காதல்,அவமானம்,அழுகை என்ற பட்டியல் நீளமானது.
எல்லாம் ஒரே வண்ணத்தில் குழப்புகிறது
எதிரெதிரே நம்மை நிறுத்தி விசில் ஊதும் காலம் விதிகளில் கறாரானது
சத்தம் கேட்டதும் தாமதிக்காமல் கால்களை கட்டங்களில் மாற்ற வேண்டும்
நான் காதலில் கால் வைக்கையில்
நீ துயரத்தில் நிற்கிறாய்
நான் காமத்தில் ஊன்றி நிமிர்ந்தால்
உன் கால்கள் துறவறத்தை தேர்வு செய்கின்றன.
காலம் அசரும் நேரம் உன் கால்கள் சாடைக் காட்டிவிட்டன
இப்போது நம் பாதங்கள் ஒன்றின் மீது ஒன்றாய்!
– ஸ்டாலின் சரவணன்