பாம்பு இரண்டு – கவிதைகள் – கணேசகுமாரன்

நகர்வு

நேற்றிலிருந்து ஆப்பிள் கசக்கிறது
ஏவாளின் எச்சிலில் விஷம் சுரக்க
முதல் பெண் முதல் காதல் முதல் காமம் போலவே
முதல் துரோகம் தொடங்கியிருக்கிறது
அவனுக்கு இது முதல் புதிது
ஒளிந்துகொள்ள இடமற்றவனின் கண்கள் முன்
நிகழ்த்தப்படும் துரோகத்தினை விட
மிகப்பெரிய வன்மம் வேறெதுவும் இல்லை
வலியின்றி பெருகும் ரத்தம்
இனி இது புரையாகும்
ஆறாது புதியதாகும் பழைய துரோகம்
தொடங்கியது தெரியாமல் முடிந்துவிட்ட
துரோகத்துக்கான தண்டனைதான்
சாகும்வரை மூச்சில் நெளிகிறது
விஷம் தீராமல்


மொத்தம் இரண்டே இரவுகள்
ஒன்றில் நீ கிடைத்தாய்
ஒன்றில் தொலைந்துபோனாய்
இனி உன்னைத் தேட
என் கண்களில் இரவேதுமில்லை
குட்டிப்பூனையாகவோ
குட்டிநாயாகவோ கிடைத்திருந்தால்
பெயரிட்டு பாலூற்றி நெஞ்சோடணைத்து
வளர்த்திருப்பாய்
இன்னும் சரியாக விஷம் வளராத
குட்டிப்பாம்பாகவே சிக்கினேன்
இரட்டை நாக்கில் ஊறியது
பச்சை துரோகம்
சாதகமாக்கிக்கொண்ட இரவு
சட்டை உரித்தது
என் பிஞ்சுப் பற்களால்
பதித்திருந்த நஞ்சினை
துடைத்திருந்தாய்
வால் நெளித்துவந்த அந்த ராத்திரி
வந்திருக்கவே கூடாது என்ற இப்போதைய
உன் குற்ற உணர்வு
இன்னொரு பௌர்ணமி வரையிலுமா
என்ற என் கேள்வியில்
கசக்கத் தொடங்குகிறது
நம் முதல் ஆப்பிள்.
.

பதிவை பகிர

பின்னூட்டம் இடுக


You cannot copy content of this page