கவிதைகள் – கணேசகுமாரன்

நகர்வு

e

-வெயிலாட்டம்-

தகிக்கும் நெடுஞ்சாலையின்
கொதிப்பறியா வண்ணம்
லாவகமாய் விரையும்
பறவையின் நிழல்

தொடரும் கண்கள் மறையும்
வெயில் மூடி

நதியைச் சூடேற்றி நகரும்
வெயிலின் நாக்கு
வறண்டு களைக்கும்
கடலினையுறிஞ்சி

இலக்கற்று திரியும் வெயில்
பித்து நிலை ஓய
இளைப்பாறும் ஆயாசத்தில்
பெருமர நிழலினைத் தழுவி

மது விடுதியொன்றின் வாசலில்
பகலைப் பழித்தவனின்
போதையைப் புணர்ந்து
தோற்றழும் கோடை.

           ()

-நான் ஒரு காலம்-

கடந்த நாட்களில் கண்டிருக்கிறேன்
தும்பிக்கை கனத்துடன்
பவனி வந்த உன் கண்களில்
மிதிபட்ட
சிற்றெறும்புகளின் சாபம்
இன்று பலிக்கத் தொடங்கியிருப்பதையும்

சுக்கிலம் கொட்டும் குறியுடன்
பெருங்காட்டையழிக்கிறாய்
இடையில் யாசகம் பெற்றலைந்த
வீதியெல்லாம்
உன்மத்த ஓலம்

அங்குசம் கொண்டாடிய ஆட்டத்தில்
தெறிக்கும் சங்கிலி
தோற்ற மன்னன் தலை கால் கீழ்

கற்தூண்களில் கதைச் சிற்பத்தின்
தீரும் தாகம்
பாகனின் குருதி வழியும் வழியில்
சிவக்கும் களிறுகள் சிரிக்கும்

தலை முறிந்து சாகும்
படமெடுத்தாடிய அரவங்களின் சாபம்
தொடர
ஓடும் உன்னைப் பார்த்தேன்
நானொரு காலம்.

      ()

கடவுள்களைப் புணரும்
சாத்தானின் சாபத்திலிருந்து
தப்பிக்கும் வழியற்றவன்
தேர்ந்தெடுக்கும் சிலுவை
வரைந்து காட்ட எளிது
இரு சடலங்கள் போதும்
இல்லை குருதி மணம் வீசும் இரு வாட்கள்.

பதிவை பகிர

2 Comments

You cannot copy content of this page