கவிதைக்காரன் இளங்கோ – கவிதைகள்

நகர்வு

குகைக்குள் தொங்கும் முகங்கள்..
*
வாசலை விட்டு வெகு தொலைவுக்கு அப்பால்
தொலைந்த ஊர்
காதறுந்த ஊசியில் முன்பொரு காலம் தையலிட்ட
பழைய வாக்குறுதிகள்

நினைவின் கந்தலில் உறுமுகிறது மிருகம்

விலகுதலில் இருந்த தீர்க்கம் தளர்வதாக இல்லை
ஒரு சொல்லுக்கும் இன்னொரு பகலுக்கும்
நடுவே
தீர்ந்திடாத தகிப்பில் நட்சத்திரங்கள் கரைந்திருந்தன

துணை வர மறுக்கும் முகத்தை தேக்கி வைத்துக் கொள்கிறது
கண்ணாடியின் பாதரசம்
அவமானத்தின் மூக்கு நுனி துடிக்கும்போது
நாடகத்தின் திரை கீழே இறங்குகிறது

புழுங்கும் நெடியில் தூசு பரத்துகிறது மௌனம்
அர்த்தம் திரிந்து தொலைந்த ஊர்
வெகு தொலைவுக்கு அப்பால்
ஊன்றுகிறது ஒரு வாசலை

பின்னர்
ஒவ்வொன்றாய் நுழைகின்றன முதன்மை நிழலென
நாடி உயர்த்தி


அங்கிருக்கும்போதே இங்கேயும்..
*
முந்தைய நிமிடத்தில் வேறோர் ஆளாகத்தான் இருந்தேன்
நீ பேசிக்கொண்டே இருக்கிறாய்
இந்நிமிடத்தின் புதியதில் திணறுகிறேன்

மீட்டெடுத்துக் கொள்வதற்கான தகவல்கள்
அறிவாக மாறுவதற்கு
எந்த நொடியின் அனுபவமும் போதவில்லை

சமூக அமைப்பு பேணுகின்ற
ஒழுங்குகளின் வரிசை குலையும்போது
நம் மூச்சுக்காற்றினை வெயில் உறிஞ்சி கொண்டிருந்தது

ஒரு பெட்டிக்கடையில் தொங்கும்
தலைப்புச் செய்திகளாக
நீயும் நானும் நின்றுகொண்டிருக்கிறோம்

பிரச்சார பேச்சுகள் மண்டையோட்டில்
மோதி மோதி
ஈரெழுத்துகளாகி சிதறுகின்றன
எல்லா தீர்க்கரேகைகளிலும்


யாவற்றையும் யாவுமென..
*
வினைகளை முடையும் விரல்கள் உருவிக்கொள்கின்றன
தருணங்களை
ஈரப்பதம் நீங்காத அக்காட்சிகளில்
வேறெந்த உணர்ச்சிகளும் எடுபடுவதாக இல்லை

சாவகாசமான உரையாடல்களை
நெருக்கிப் பின்னி பரிமாறிக்கொண்ட வடிவங்களோடு
உருக்கொள்ளும் சித்திரங்களில்
எல்லோரும் இருந்திருக்கிறோம்

அகாலங்களை எச்சில் தொட்டுப் புரட்டும் பக்கங்களில்
அடைப்புக்குறிக்குள் சுழியிடப்பட்ட
எண்கள் முகவரிகள் மற்றும் வீதிகள் பாதைகள்
கொஞ்சம் பின்கோடுகள்

புரளிக்கான ஈடுகள் கலையும்போது எஞ்சும்
வெற்றிடத்தை
சொற்கள் கொண்டு வேய்ந்தபடியிருக்கும் சுள்ளென்று
ஒரு பகல்

பதிவை பகிர

Add your first comment to this post

You cannot copy content of this page