1
அவன் தலையைக்
கருப்புத் துணியால் மூடினார்கள்
யோனிகளின் வாசனையோடு
வந்த இரவு
அவன் தோளில் கைபோட்டு
தன்அறைக்குள் அழைத்துச்சென்று
கருப்புத் துணியை நீக்கித்
தூர எறிந்து
இரண்டு கால்களின் நடுவே
அவனைப் புதைத்துக் கொண்டது
அடுத்த நாள்
எழுந்து
ஒரு இளையராஜா பாடலோடு
குளிக்கப் போனான் அவன்.
முழுக்க
ஆடைகளைப் பூட்டிக்கொண்டு
வேறுவேடத்தில்
காத்திருந்தது இரவு.
2
சித்தார்த்தன் விட்டு வெளியேறிய
வாசலில் தான்
நின்றுகொண்டிருக்கிறேன்
நரிகள் ஊளையிடும் பொழுதுகளில்
மேகங்களுக்குள் மறைந்து கொள்கிறது
நிலா
முதுகில் துளையிட்டு
கொக்கியாய் இழுக்கிற சுகந்தமும்
காலடியில் வழுக்கிப் போகிற
மணற்துகளும்
சமநிலை குலையாத ஊஞ்சலாய்
என்னை ஆட்டுவிக்க
தூரத்திலிருந்து
கையசைக்கிறான் புத்தன்.
3
நான் ஒரு கதவு
எனக்குப் பின்னே
ஒரு படுக்கை அறையும் உணவு மேசையும்
அறைக்கு வெளியே பகலாகவும்
உள்ளே இரவாகவும்
திறந்தும் மூடியும்
நின்றுகொண்டிருக்கிறேன்
அறைக்கு வெளியே
அறையின் பகுதியாக
அறையாகவும் நானிருக்கிறேன்
இந்த அறை
என்னை மூடி வைத்துக்கொள்கிறது
உட்புகவும் வெளியேறவும்
என
இரண்டே இரண்டு காலம் தான்
எனது அண்டம்
இல்லாத சுவர்களுக்கும் கூட
நின்றிருக்கிறேன்
கதவாகவே.

4
படிந்திருந்த காலத்தின் மீது
ஒருவன்
அம்புக்குறி பாய்ந்த இதயத்தையும்
தன் காதலியின் பெயரையும்
வரைகிறான்
அடுத்தநாள்
மற்றொருவன்
காலத்தைக் கழுவிவிடுகிறான்
வழிந்து ஓடி
ஓடையொன்றில் கலக்கிறது
நகராட்சிக் குழாயில்
விநியோகிக்கப்பட்ட காலத்தில்
தன் கூந்தலைக் கழுவுகிறாள்
ஒருத்தி
சுத்திகரிக்கப்பட்டு
போத்தலில் அடைக்கப்பட்டதை
ஒருவன் குடிக்கிறான்
வேலிக் கள்ளியில்
அம்பு பாய்ந்த இதயத்தை
ஒருத்தி வரைகிறாள்
வெள்ளை நிறத்தில் எட்டிப் பார்க்கிறது
காலம்.