தேநீர்- சிறுகதை – கணேசகுமாரன்

நகர்வு

                                           
                                           

கால் நீட்டி அமர்ந்திருந்தான். அவன் கையிலிருந்த தேநீர் கோப்பையில் கடல் ததும்பிக் கொண்டிருந்தது. சாய்ந்திருந்த பாறையின் முதுகுப்புறத்தில் ஓர் அலை வந்து செல்லமாய் மோதிவிட்டுச் சென்றது. கோப்பையிலிருந்து ஆவி எழுந்து காற்றில் எழுதிய கவிதையெங்கும் தேயிலை வாசம். கோப்பையின் விளிம்பை நாசி அருகில் வைத்து மூச்சிழுத்தான். அவன் மூளைக்குள் பரவியது யாரோ சொல்லிப்போன குட்மார்னிங் வாசனை. உறுத்தாத இளம் வெயில் ஆடையில்லாத அவன் மேனியைத் தழுவியிருந்தது. கோப்பையிலிருந்து இன்னொரு சிப் அருந்தினான். தொண்டையைத் தாண்டி இறங்கும்போது அவனின் இமை துடித்தது. கீழ் உதட்டில் பரவிய தேநீர் ஈரத்தினை நாவினால் தடவி உள்ளிழுத்துக் கொண்டான். வலது காதின் ஓரமாய் சில்லென்ற காற்று வீசிக்கொண்டிருந்ததில் காதின் மடல் மட்டும் அவன் உடம்பிலிருந்து தனியாய் பிரிந்து நின்றிருந்தது. கட்டை விரலாலும் ஆட்காட்டி விரலாலும் அந்த ஐஸ் மடலைத் தடவி விட்டுக்கொண்டான். உள்ளங்காலில் ஒரு நண்டுக்குஞ்சு வந்து கிச்சுகிச்சு மூட்டிப் போனது. கால் மேல் கால் போட்டுக்கொண்டான். இன்னொரு சிப் தேநீர் விழுங்கினான். பொன்னிற திரவம் இளஞ்சூடாய் வயிற்றுக்குள் பரவி சிலிர்ப்பூட்டியது. கோப்பையின் ஆழத்தில் இருந்த கடைசி மிடறு தேநீரை அருந்த மனமின்றி உதட்டில் வைத்து உறிஞ்சினான். அவன் தலைக்குப் பின்னாலிருந்த பாறையில் மோதிய அலையொன்று சற்றே உயர எழும்பி அவன் கழுத்தில் விழுந்து நுரையாய் பரவியது. தூரத்தில் சூரியன் தன் ஆரஞ்சு உடம்பை வெளிக்காட்டியபடி தகதகத்து வெளிவந்து கொண்டிருந்தான். ‘காலேஜ் பீஸ் கட்ட லாஸ்ட் டேட் நெருங்கிடுச்சி…என்ன பண்ணப் போறீங்க..’ ஒரு பெண் குரல் அவன் ஈரமடலைச் சுட்டபடி காதுக்குள் விழுந்தது.

சுள்ளென்ற வெயில் கன்னம் தொட்டுப் பொசுக்கியதில் இமை சிலிர்த்து கையிலிருந்த டீ கிளாஸை தான் அமர்ந்திருந்த பெஞ்சில் வைத்தான். பாக்கெட்டில் கைவிட்டு பணம் எடுத்துத் தந்தான். ‘‘வேற நோட்டு இருந்தா குடுங்க… நம்பர்கிட்ட கிழிஞ்சிருக்கு…” என்றார் கல்லாவில் இருந்தவர். பாக்கெட்டில் எதுவும் இல்லையென்று அவனுக்குத் தெரியும். இருந்தாலும் உடனே எப்படி அந்த பதிலைச் சொல்வது என்று பாக்கெட்டில் கைவிட்டு தேடுவது போல் தேடிவிட்டு… ‘‘வேற பணம் இல்ல… ஈவ்னிங் வரும்போது தந்துடுறேன்…” என்றபடி கை நீட்டினான் கிழிந்த நோட்டை வாங்குவதற்காக. ‘‘பரவால்ல…பேங்க்ல குடுத்துப் பாக்குறேன். போகாட்டி எடுத்து வைக்கிறேன். வந்து மாத்திக்குங்க…” என்று பணத்தை கல்லாவில் போட்டார். கிழிந்த நோட்டுக்கான மதிப்பு கூட தன் முகத்துக்குக் கிடையாது என்று மனதுக்குள் முணுமுணுத்தபடி வீதியில் இறங்கினான். அவனின் பெருமூச்சு வீதியின் அனலைச் சுட்டது.

வீட்டுக்குள் நுழையும்போதே அவளின் குரல் உரத்துக் கேட்டது. ‘‘நமக்கெல்லாம் எங்காவது வெளிய போக முடியுதா… ஞாயித்துக்கிழமைனுதான் பேரு. வீட்டுப் பொம்பளைங்க காலண்டர்ல ஞாயித்துக்கெழமையே கெடையாது. ஏதாச்சும் ஒண்ணு கேட்டா போதும். ஒடனே டீக்கடையில போய் ஒக்காந்துக்குறது. அந்த டீக்கடைக்காரன் மட்டும் ஒட்டகப் பால்லையா டீ போட்டுத் தரான்… இங்க குடிக்கிறது பத்தாதுன்னு தெண்டத்துக்கு அங்க வேற… பொம்பளைங்க டீ குடிக்கிறதுக்கின்னு தனிக்கட ஒண்ணு நான்தான் தொறக்கணும்…” வீட்டின் பின்புறத்திலிருந்து சத்தம் கேட்டது. அவளின் உரத்த கத்தலுக்கு நடுவே துணி துவைக்கும் சத்தமும் கேட்டது.

எல்லோருக்கும் இரண்டு மணி நேரப் பொழுதாக அவசர அவசரமாக முடிந்துவிடும் ஞாயிற்றுக்கிழமை இவனுக்கு மட்டும் நாற்பத்தெட்டு மணி நேர ஐ சி யூனிட் அவஸ்தையாகக் கழியும். அப்படியும் சாயங்காலம் ஐந்து மணி போல் வெளியே போய் ஒரு டீ உள்ளே இறங்கிவிடும். ஆறு மணிக்கு மேல்தான் வழக்கமான வீட்டுத் தேநீர். சில்வர் டம்ளரை உதட்டில் பொருத்தி கண்ணையும் மூக்கையும் காதையும் மனசையும் இறுக மூடிக்கொண்டு ஒரே மடக்கில் குடித்துவிடுவான். அப்படி சொல்ல முடியாது. விழுங்கிவிடுவான். கல்யாணம் ஆன நாளிலிருந்தே சொல்லி வருகிறான். அவனுக்குப் பிடித்த டீத்தூள்தான். என்ன தலைகீழாய் நின்றாலும் அவளுக்கு டீ போட வரவில்லை. மகள் பிறந்து வளர்ந்து கல்லூரி போகிறாள். அவனுக்குதான் நல்லதொரு டீ வீட்டிலிருந்து உருவாகவில்லை. கடையிலும் அதே பால்தான். அவனுக்குப் பிடித்த அதே டீத்தூள்தான். பின் எப்படி அந்த டீ மாஸ்டருக்கு மட்டும் சர்க்கரையின் அளவு, பாலின் அளவு, ஊற்றப்படும் தேயிலைத் தண்ணீரின் அளவு முதற்கொண்டு கனகச்சிதமாக கை வருகிறது. இவ்வளவுக்கும் ஒரு நாளைக்கு ஆயிரம் பேருக்கு மேல் டீ போடுபவர். கற்பகம் டீக்கடை என்றால் தனி மவுசு ஏரியாவில். அந்த டீ மாஸ்டர் பெயர் பாவாடை என்பது மிகச் சிலருக்குதான் தெரியும். இவனுக்குத் தெரியாது. தெரிந்தால் அந்தப் பேர் குறித்து கூட இன்னும் அரை பக்கத்துக்கு யோசித்துக் கொண்டிருப்பான்.

திங்கள்கிழமை அலுவலகம் புறப்படும்போதே மண்டைக்குள் உறுதியாகி விட்டது. யாரிடமாவது கடன் வாங்கித்தான் சமாளிக்க வேண்டும். ஹிந்துஸ்தான் லீவர் லிமிட்டட் தயாரிப்பு பொருட்களை ஹோல்சேலில் விற்கும் கம்பெனியில் சேல்ஸ்மேன் உத்தியோகம். உடன் வேலை பார்க்கும் கலியபெருமாள் குழந்தையில்லாதவர். நல்ல சம்பளம். செலவு அதிகமில்லாத காரணத்தாலே பணத்தை வட்டிக்கு விடுபவர். இரண்டொரு முறை கடனாக சொற்பத்தொகை வாங்கியிருக்கிறான். அவரிடம்தான் இந்த முறையும் கேட்கவேண்டும் என்று முடிவெடுத்தான்.

ரிஜிஸ்டரில் கையெழுத்துப் போட்டுவிட்டு நேராக குடோவ்ன் செக்‌ஷனுக்குதான் சென்றான். கலியபெருமாள் சேல்ஸ்மேன் தான் என்றாலும் காலையிலேயே கம்பெனிக்கு சீக்கிரமே வந்து குடோவ்னுக்குச் சென்று முந்தைய நாள் எடுத்த ஆர்டர் காப்பியைக் கையில் வைத்துக்கொண்டு கடைகளுக்குத் தேவையான பொருட்களை அட்டைப்பெட்டியில் எடுத்து நிரப்பத் தொடங்கிவிடுவார். பொதுவாக இது டெலிவரி பாய்ஸின் வேலை. கம்பெனியிலும் கஸ்டமரிடத்திலும் நல்ல பேர் வாங்குவதற்காக கலியபெருமாள் செய்யும் வேலை இது. இதற்கென்று தனி சம்பளமெல்லாம் கிடையாது. இவனுக்கு இதிலெல்லாம் பெரிதாய் விருப்பம் இல்லை. செய்யும் வேலைக்கான கூலி கிடைத்தால் போதும் என்று இருப்பவன். குடோவ்னில் கலியபெருமாள் இல்லை.

பத்து மணிக்கு மேல் எல்லா சேல்ஸ்மேனும் வந்தபின்புதான் ஏரியா பிரித்துக் கொடுப்பார்கள். இன்னும் அரைமணி நேரம் இருக்கிறது. அதுவரை கம்ப்யூட்டர் செக்‌ஷனில் பில் எடுத்துக் கொடுக்கும் இடத்தில் அமர்ந்திருந்தான். கற்பகம் டீக்கடை போலவே இங்கும் கம்பெனி வாசலில் சற்றுத்தள்ளி ஒரு டீக்கடை உண்டு. ட்ரிபிள் எம் டீ சென்டர். அவ்வப்போது செல்பவன் தான். ஆனாலும் காலையிலேயே அங்கு செல்ல அவனுக்கு விருப்பமில்லை. பத்தரை மணி போல்தான் கலியபெருமாள் வந்தார். வந்ததிலிருந்து ஏனோ பரபரப்பாக இருந்தார். வசூல் செய்ய வேண்டிய போன வார பில்களை வாங்கியவர் பேக்கை எடுத்து தோளில் மாட்டிக்கொண்டு கிளம்பினார். பின்னாலேயே அவன் ஓடினான்.

‘‘அண்ணே… என்ன காலையிலேயே ரொம்ப பிசியாருக்கீங்க… குட்மார்னிங் சொன்னேன். அதைக்கூட கவனிக்கல நீங்க…”

‘‘அப்படியா… ஸாரிப்பா… வீட்டுல சின்னதா ஒரு பிராப்ளம். அதுதான் மைண்ட்ல ஓடிக்கிட்டு இருக்கு. அதான் கவனிக்கல… சொல்லுப்பா என்ன விஷயம்…”

‘‘ஒண்ணுமில்லைணே… பாப்பாவுக்கு செமஸ்டர் ஃபீஸ் கட்டணும். கொஞ்சம் பணம் தேவைப்படுது. அதான் உதவி பண்ணீங்கன்னா சம்பளம் வந்ததும் தந்துடுறேன்…” கடன் கேட்பதற்கெல்லாம் தனி தைரியம் சாமர்த்தியம் வேண்டும். அவனுக்கு அது சுட்டுப் போட்டாலும் வராது.

‘‘அய்யோ ஸாரிப்பா… கொஞ்சம் பணம் நெருக்கடியா இருக்கு. வீட்டுல திடீர் செலவு. அதனால இந்த டைம் நீ வெளில எங்காவது பாத்துக்கேயேன்…” என்றார்.

‘‘எனக்கு யாரையும் தெரியாதுண்ணே… நீங்களே எங்காவது ஏற்பாடு பண்ணிக் குடுத்துடுங்களேன்…ப்ளீஸ்ணே…”

கொஞ்சம் யோசித்தவர்… ‘‘சரிப்பா… ட்ரை பண்றேன்…” விலகினார். அவனுக்கு டீ குடிக்க வேண்டும் போலிருந்தது.

                                          -

எப்போதோ பெய்த மழையின் மிச்ச சாரல் குளுமை இப்போது இந்த இடத்தில் இருந்தது. ஒரு தளர்வான டீ ஷர்ட்டும் ஷார்ட்ஸும் அணிந்திருந்தான். மெலிதான சாயங்கால வெயில் அவனைச் சுற்றிலும் படர்ந்திருந்தது. வெயிலின் சிறு துண்டு அவனின் பாதங்களின் மீது படிந்திருந்தது. கோப்பையிலிருந்த தேநீரின் ஒரு சிப் அருந்தினான். அவன் கழுத்துக்குப் பின்புறம் காது மடல்களில் குளிர்ந்த காற்று தடவிப்போனது. சிவப்பு நிற இலைகளும் சருகுகளும் நிறைய கொட்டிக்கிடந்தன. அதன் நடுவிலே அவன் அமர்ந்திருந்தான் ஒரு நீளமான பிரம்பு நாற்காலியில். அடர்த்தியாய் பின்னப்பட்டிருந்ததில் மெத்துமெத்தென்று அவன் முதுகைத் தாங்கிக் கொண்டிருந்தது. தேநீரின் மணம் அவன் நாசியில் மிதந்த அதே கணம் தூரத்திலிருந்து அவனுக்குப் பிடித்த பெயர் தெரியா மலரின் புதுவித நறுமணம் புறப்பட்டு வந்தது. ஒவ்வொரு முறை கானகத் தேநீர் பருகுதலின் போதெல்லாம் அவன் மனம் நிறைக்கும் பூ மணம் அது. இரு வேறுவிதமான உணர்வில் அவன் திளைத்தான். இரண்டாவது மிடறை அருந்தினான். மிதமான சூடும் மிதமான கசப்பும் அவன் தொண்டையில் இறங்கியது. பெரும் நன்மைகள் சூழ இருப்பதான சமிக்ஞைகளுடன் சில பறவைகள் வானில் பறப்பதைக் கண்டான். உச்சியிலிருந்து ஒரு சிவப்பு இலை உதிர்ந்தது. காற்றில் தன்னை எழுதி எழுதி இறங்கி அண்ணாந்திருந்த அவன் நெற்றியில் மோதி காலடியில் சேகரமானது. அது ஒரு சிறந்த ஆசிர்வாதம் என அவனுக்குப் பட்டது. புன்னகையுடன் மூன்றாவது மிடறு தேநீரை அருந்தினான். பறவைகள், வானம், இலை தாண்டி உடம்புக்குள் ஒருவித நடனத்தை உற்பத்தி செய்யும் இசைக்கோர்வை எங்கிருந்தோ அவனுக்குக் கேட்டது. தன்னியல்பாய் அவன் கால்கள் தரை மோதுவதை உணர்ந்தான். கையில் தேநீர் கோப்பையுடன் இன்னொரு கையை உயர்த்தி நடனமாடுவதாய் கற்பனை செய்தான். யாரோ அவனைப் பார்த்துச் சிரித்துக்கொண்டே நடனத்தின் ஒலி அளவைக் கூட்டினார்கள். கடைசி மிடறை அருந்தி முடித்து காலி கோப்பையை எட்டிப் பார்த்தான். அதில் இன்று உங்கள் ஏரியா எண்ணூர் என்று எழுதியிருந்தது.

சென்ற வார எண்ணூர் பில்களை எடுத்துக்கொண்டு புறப்பட்டான். எல்லா கடைகளிலும் பில் தந்து பணம் வரவு வைக்கும் போதெல்லாம் அவனுக்கு மகளின் காலேஜ் ஃபீஸ் அலாரம் மண்டைக்குள் அடித்துக் கொண்டே இருந்தது. அவன் செல்லும் கடை முதலாளிகளை ஒரு வருடமாகத் தெரியும். அவர்களிடம் பணம் கேட்டுப் பார்க்கலாமா என்று கூட அவனுக்குள் யோசனை ஓடியது. கலிய பெருமாளின் சரி பார்க்கலாம் அந்நேரத்துக்கான சமாதான பதில் என்று அவனுக்குத் தெரியும். அவனுடைய துயர காலத்தில் அவன் மனதுக்குள் தோன்றும் எல்லாமே அவனுடைய முந்தைய துன்ப நிகழ்வுகள்தான். ஏனோ அவனுக்கு இதுவரை அவன் வாழ்வில் நிகழ்ந்த சந்தோஷங்களெல்லாம் அன்று மறந்து போனது. ஏதோ ஒரு கடையில் வசூலுக்கான பில்லை நீட்டும்போது சார் டீ சாப்புடுறீங்களா என்றார்கள். வேண்டாமென்று தலையசைத்து மறுத்தான். நிஜமாய் அந்நேரத்துக்கு அவன் அடிவயிற்றில் பசி அவனைத் தொந்தரவு செய்து கொண்டுதான் இருந்தது. நாளை ஒருநாள்தான் இருக்கிறது பீஸ் கட்டுவதற்கு. நாளைய ஒருநாளுக்குள் ஏதாவது அற்புதம் நடக்குமென்று அவன் நம்பினான். ஆனால் அன்று மாலை வீட்டுக்குச் சென்றபின்பு நடப்பதை நினைத்தால்தான் அவனுக்கு உலகளவு வெறுப்பு வந்தது. மதியம் சாப்பிடக்கூடத் தோன்றவில்லை. காலையில் கட்டித்தந்த புளி சாதம் டிபன் பாக்ஸுக்குள் அப்படியே இருந்தது.

நாலு மணிக்கு கம்பெனி திரும்பினான். கலியபெருமாளைக் காணவில்லை. மற்ற சில சேல்ஸ்மேன்கள் வந்திருந்தனர். அன்றைய வரவை பேக்கிலிருந்து எடுத்து எண்ணத் தொடங்கினான். வசூலாகாத மிச்ச பில்களை எடுத்து வைத்தான். காலையில் தந்திருந்த வசூல் சார்ட்டையும் வசூலித்த தொகையும் கூட்டிப் பார்த்தான். மிகச் சரியாய் ஆறாயிரம் ரூபாய் இடித்தது. மீண்டும் மீண்டும் எண்ணினான். பேக் முழுவதும் கவிழ்த்து தேடிப்பார்த்தான். இல்லை. தன் சட்டை பேண்ட் பாக்கெட்டில் மறதியாய் வைத்துவிட்டோமோ என்று பார்த்தான். இல்லை. இதயத் துடிப்பின் சதவீதம் கூடிக்கொண்டே போனது. இந்த ஒரு வருடத்தில் இப்படி நடந்ததில்லை. முந்தைய கம்பெனியில் கொரோனா காலத்தில் வேலை போனபின்பு மிகவும் கஷ்டப்பட்டுதான் இந்தக் கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்திருந்தான். இதுவரையில் எந்த ப்ளாக் மார்க்கும் நிகழ்ந்ததில்லை. சக சேல்ஸ்மேன்களிடம் சொல்லலாமா வேண்டாமா… அவர்கள் தனக்கு தீர்வு தருவார்களா… இல்லை சந்தோஷம் கொள்வார்களா… யாரை எப்படி தீர்மானிப்பது. குழம்பினான். அவன் பதற்றத்தையே உற்றுப் பார்த்தபடி அருகில் அமர்ந்து பணம் எண்ணிக்கொண்டிருந்த இன்னொரு சேல்ஸ்மேனைப் பார்த்துப் புன்னகைத்தான். குமார் வேலைக்குச் சேர்ந்து ஆறு மாதம்தான் ஆகிறது. பெரிதாய் பழக்கம் இல்லையென்றாலும் நம்பிக்கை தரக்கூடிய முகம். விபரத்தைச் சொன்னதும் அதிர்ந்துபோனான் குமார். அவனின் அதிர்ச்சி இவனுக்கே கொஞ்சம் அதிகமாகத்தான் தெரிந்தது.

‘‘ தெரிலியே சார் என்ன செய்றதுன்னு… பேசாம எம் டி கிட்டையே சொல்லிடுங்க…” என்றான்.

இதைச் சொல்ல எதற்கு இவன் என்று தோன்றியது. ஆனாலும் அப்படித்தான் நடந்தது. இந்தப் புது கத்துக்குட்டி அவனை வேலைக்குச் சேர்த்துவிட்ட சீனியரிடம் போய் சொல்லி அபிப்ராயம் கேட்டுவைக்க அவர் எம் டியிடம் நல்ல பெயர் சம்பாரிக்க எல்லா விஷயத்தையும் சொல்லிவிட்டார். எம் டி அழைத்ததும் இவன் போய் நின்றான்.

‘‘ நல்லா இன்னொரு தடவ ஃபுல்லா செக் பண்ணிக்குங்க. நாளைக்கு வரையிலும் டைம் தர்றேன். இல்லைனா என்ன பண்ண முடியும்…இந்த மாசம் உங்க சேலரியில இந்த அமவுன்ட்ட லெஸ் பண்ற மாதிரிதான் இருக்கும். பர்ஸ்ட் டைம் அப்டிங்கிறதால ஏதும் சலுகை காட்ட முடியுமா என்ன…?” எம் டி மும்பையில் சைக்காலஜி படித்துவிட்டு வந்தவர். அவர் அமரும் நாற்காலிக்குப் பின்புறம் பெரிய சைஸ் கண்ணாடி இருக்கும். அவர் எதிரில் நின்று அவர் முகம் பார்த்துப் பேசினால் பேசுபவர் முகம் கண்ணாடியில் தெரியும். லீவ் சொல்லக்கூட இவன் அந்தத் திணறு திணறுவான். கண்ணாடியில் தெரியும் அவனின் முக மாற்றமே அவனைப் பதற்றத்துக்குள்ளாக்கி விடும். இப்போதும் அதே பதற்றத்தில் இருந்தான். வேறு வழியின்றி தலையாட்டிவிட்டு வந்தான்.

அலுவலகத்தை விட்டுப் புறப்படும்போது கலியபெருமாள் அவன் தோளில் கை வைத்து, ‘‘ அதான் நாளைக்கு வரையிலும் டைம் தந்துருக்காருல்ல… பணம் கெடச்சிடும். நம்பிக்கையா இருங்க…” என்றார்.

வீட்டுக்கு வந்தவன் டேபிள் மீது பேக்கை வைத்தான். நடு ஜிப்பைத் திறந்து டிபன் பாக்ஸ் எடுத்து வெளியில் வைத்தான். தலையை லேசாக வலிப்பது போல் இருந்தது. வாட்ச்சில் மணி பார்த்தான். ஏழு. டீ பிரியன்தான் என்றாலும் ஆறு மணிக்கு மேல் டீ குடிக்கும் வழக்கம் அவனிடம் இல்லை. கடைக்குச் செல்லும் யோசனையைக் கைவிட்டு நாற்காலியில் அமர்ந்தான். உள்ளே மகள் வாய்விட்டு படித்துக் கொண்டிருப்பது காதில் விழுந்தது. மனைவி சமையல் அறைக்குள் இரவு டிபனுக்கான வேலையில் இருந்தாள். ஏகப்பட்ட ஜிப்புகளுடன் இருந்த அந்த பேக்கை போன மாதம்தான் வாங்கி இருந்தான். ஸ்கூல் பையன் பேக் போல் எதற்கு இத்தனை ஜிப்புகள் என்று வாங்கும்போதே யோசித்திருந்தான். மேஜை மீது மல்லாந்திருந்த அந்த பேக், டிபன் பாக்ஸை வெளியில் எடுத்த பின்னும் முதல் ஜிப் இருந்த இடத்தில் லேசாக உப்பி இருந்தது. கேள்வியாய் முகம் சுருக்கியவன் எழுந்து சென்று அந்த ஜிப்பைத் திறந்து உள்ளே கைவிட்டான். தட்டுப்பட்டதை வெளியில் எடுத்துப் பார்த்தான். ரப்பர் பேண்ட் சுற்றி மடித்து வைக்கப்பட்ட பணம். ஆறாயிரம் ரூபாய். சரசரவென்று மூளையின் குறுக்கே காலையில் வசூல் செய்த முதல் கடை ஞாபகம் வந்தது. இரண்டு பில் என்பதால் அதிலும் இது பெரிய தொகை என்பதால் பணத்தை வாங்கியதுமே முதல் ஜிப்பைத் திறந்து வைத்திருந்தான். அடுத்த தொகை சிறியது என்பதால் அதை வழக்கமாக பணம் வசூல் செய்து வைக்கும் ஆபீஸ் பேக்கில் வைத்துவிட்டான். தன் பேக்கில் வைத்த பணத்தை முற்றிலும் மறந்துவிட்டுதான் இவ்வளவு நேரமும் அவஸ்தையில் கிடந்தான்.

ஒரு கணம் நெஞ்சு முழுவதும் விம்மி அடங்கியது. எல்லா ஜன்னல்களும் திறந்து காற்று குபீரென அவன் உடம்பு முழுவதும் வீசியது போல் இருந்தது. பணத்தை எடுத்துப் பாக்கெட்டில் வைத்தவன் வீட்டை விட்டு வெளியேறினான்.

‘‘ என்ன சார் இந்நேரத்துக்கு வந்துருக்கீங்க…” என்ற பாவாடை கையில் வைத்திருந்த குவளையிலிருந்த பாலை மேலே உயர்த்தி அங்கிருந்து அடுப்பின் மீதிருந்த சட்டியில் கவிழ்த்து ஆற்றினார்.

‘‘ ஒரு டீ போடுங்க மாஸ்டர்…” என்றான் அவன்.

                                               -

கையில் வைத்திருந்த கிளாஸிலிருந்து புகை கிளம்பி வலது பக்கமாய் வளைந்து அலைந்து கலைந்தது. ஒரு மிடறு அருந்திவிட்டு புகை சென்ற திசையை நோக்கியவன் திடுக்கிட்டான். முழு இருட்டாய் இருந்த அவ்விடத்தில் அவன் கண்ணுக்குத் தெரிந்த பச்சை மரம் ஒன்று திடீரென்று பற்றி எரிந்து கொண்டிருந்தது. எரிந்த வெப்பம் இவன் முகத்தைத் தாக்கியதும் கண்கள் சுருக்கி இடது பக்கமாய் பார்வையைத் திருப்பினான். ஆச்சர்யமானான். இளம் வெள்ளை நிறத்தில் தூறல் தூறிக் கொண்டிருந்தது. குளிர்ந்த காற்று அவன் மீது வந்து மோதிப்போனது. காலில் கட்டியிருந்த இரும்புச் சங்கிலியை உணர்ந்தான். வலியுடன் புன்னகைத்தபடி இன்னொரு மிடறு அருந்தினான். தொண்டைக்குள் விழுந்த சூடான தேநீர் அவன் உடம்பு முழுவதும் பயணப்பட்டு மூளையைத் தொட்டு சாந்தப்படுத்தியது. தளும்பிய தேநீரில் அவனின் நிறை மனம் தெரிந்து மறைந்தது. தீயின் பக்கம் திரும்பாமலே தேநீர் அருந்திக் கொண்டிருந்தான். வேட்டியை மடித்துக் கட்டியவாறு இருட்டுக்குள்ளிருந்து வெளிப்பட்ட அவன் பக்கத்து வீட்டுக்காரரைப் பார்த்து, ‘‘ அண்ணே…வாங்கண்ணே… ஒரு டீ குடிங்க… கம்பெனி குடுங்கண்ணே…” என்றான் புன்னகைத்தபடி.

பதிவை பகிர

3 Comments

You cannot copy content of this page