— அரி சங்கர்

சந்திரன் பேருந்துக்காக நின்றுக்கொண்டிருந்தார். அருகே அவர் மகன் குமரனும் நின்றுகொண்டிருந்தான். பேருந்து வர தாமதமானது. குமரனின் நடவடிக்கைகளை பேருந்துக்காக நின்றுகொண்டிருந்தவர்கள் விநோதமாக பார்த்துகொண்டிருந்தனர். ஒருவழியாக வீராம்பட்டிணம் பேருந்து வர சந்திரனும் குமரனும் அதில் ஏறிகொண்டனர். பேருந்தில் கூட்டமில்லாமல் இருந்தது. ஜன்னல் இருக்கையில் குமரனும் அருகில் சந்திரனும் அமர்ந்துகொண்டனர். பேருந்தில் ஏறியதும் தான் குமரனின் சற்று அமைதியடைந்தான். வேடிக்கைப் பார்க்க ஆரம்பித்தான். அருகில் இருந்த தன் அப்பாவிடம் கேள்விகள் கேட்கத் தொடங்கினான்.

“அப்பா இது இன்னா…”

“ஆட்டோ…”

“அப்பா இது இன்னா…”

“காரு…”

“அப்பா இது இன்னா…”

“பஸ்”

“இது…”

“அதுவும் பஸ்…”

வீராம்பட்டினம் போகும் வரை இவ்வாறே இருவரும் பேசிக்கொண்டு சென்றனர். பேருந்தில் சுற்றி இருந்தவர்கள் அவர்களை கொஞ்ச நேரம் வேடிக்கப்பார்த்தாலும் பிறகு தங்கள் வேலையைப் பார்க்கத் தொடங்கினர்.

இருவரும் வீராம்பட்டினத்தில் இறங்கி அங்குள்ள கோவிலுக்கு சென்று சிறிது நேரம் உட்கார்ந்திருந்தனர். சந்திரனுக்கு வீட்டு நினைவாகவே இருந்தது. தனது அம்மாவிற்கு என்ன ஆனது என்ற பதட்டத்திலேயே இருந்தார். ஆனால், அவர் புறப்படும் போது எதிரே மூத்தமகன் வந்ததை நினைத்து சுற்று நிம்மதியடைந்தாலும், கடைசியாக அவன் பார்த்த பார்வையை நினைத்து அஞ்சினார்.

“அப்பா… போலாமா…” என்று அவரை யோசனையிலிருந்து மீட்டான் குமரன்.

இருவரும் எழுந்து வெளியே வந்தனர். அடுத்தப் பேருந்து இன்னும் வராததால் இருவரும் காத்திருந்தனர். தூரத்தில் கடல்காற்று வேகமாக வீசிக்கொண்டிருந்தது. அலைகளின் ஓசை பலமாக கேட்டுக்கொண்டிருந்தது. குமரன் கடலைக் கண்டால் பயப்படுவான் என்பதால் அவர்கள் எப்போதும் கடலுக்கு போவதில்லை.

ஏதிரே இருந்த ஐஸ் வண்டியைப் பார்த்து குமரன் ஐஸ் வேண்டும் என்றான். சந்திரன் அவனுக்கு ஐஸ் வாங்கிக்கொண்டுத்தார். அவன் அதை ருசித்து சாப்பிடுவதை சந்திரன் பார்த்துக்கொண்டிருந்தார். பின்பு அவன் தாடியிலும் மீசையிலும் வழிந்திருந்த ஐஸைத் துடைத்துவிட்டார். தூரத்தில் பேருந்து வந்துக்கொண்டிருநது.

*

கதிர்  தெருமுனையில் திரும்பும்போதே ஏதோ பிரச்சனை என்று கவனித்துவிட்டான். அவன் வீட்டைச் சுற்றி ஆங்காங்கே தெருக்காரர்கள் நின்று வேடிக்கை பார்த்துகொண்டிருந்தனர். பல ஜன்னல்களில் அசைவுகள் தெரிந்தன. கதிர் வேகமாக வந்து தன் வீட்டு வாசலில் வண்டியை நிறுத்தினான். தெருவாசிகள் அனைவரும் தன்னைத்தான் பார்த்துகொண்டிருக்கிறார்கள் என்று அவனுக்குத் தெரிந்தது. வண்டியை விட்டு இறங்காமலேயே எட்டிப்பார்த்தான். வாசலின் அருகே இருந்த படிக்கட்டுகளின் அருகே அவன் பாட்டி தலையில் ரத்தம் வழிய உட்கார்ந்துகொண்டிருந்தாள். மேலே பால்கனியில் அவன் அம்மா நின்று கத்திக்கொண்டிருக்க, படிக்கட்டுகளில் யாரோ இறங்கி வரும் சத்தம் கேட்டது. கதிர் வண்டியை விட்டு இறங்கி தன் பாட்டியிடம் வேகமாகச் சென்று அவளை எழுப்பினான். அவள் இடுப்பைப் பிடித்துக்கொண்டு மெதுவாக எழுந்தாள். அப்போது அப்பாவின் கையை பிடித்து தரத்தரவென்று இழுத்துக்கொண்டும் கத்திக்கொண்டும் வேகமாகப் படிக்கட்டுகளில் இறங்கி வந்துகொண்டிருந்தான் கதிரின் தம்பி. அவன் அப்பா அவன் இழுத்த இழுப்புக்கு அவன் பின்னால் ஓடிக்கொண்டிருந்தார். கீழே தலையில் ரத்தம் வழியும் தன் அம்மாவையும், கொலைவெறியுடன் பார்த்துக்கொண்டிருக்கும் தன் மகனையும் எதிர்கொள்ள தைரியமில்லாமல் தலைகுனிந்தவாறு வெளியேறினார். வீட்டைச் சுற்றி வேடிகைப்பார்த்துக்கொண்டிருந்த அனைவரும் ஒருமுறை தனித்தனியாகப் பார்த்தார். அவர் பார்ப்பது அனைவரும் என்மீது இறக்கப்படுங்கள் என்று கெஞ்சுவது போல் இருந்தது. ஆனால் அவர் தாய் ரத்தம் வழியக் கீழே கிடக்கும் போது அவர் இவ்வாறு தன் இரண்டாவது மகனின் இழுப்புக்கேற்றவாறு ஓடிக்கொண்டிருந்ததைப் பார்த்துக்கொண்டிருந்த பலர் முகம் சுளித்தார்கள். அவர்கள் இருவரும் தெரு முனையைத் தாண்டும் முன்னரே கதிர் ஒரு ஆட்டோவுடன் வந்து தன் பாட்டியை மருத்துவமனைக்குள் கூட்டிச்சென்றான். இவ்வளவும் நடந்துகொண்டிருந்த சமயத்தில் மேலே பால்கனியிலிருந்து கத்திக்கொண்டிருந்த கதிரின் அம்மாவை ஒருவரும் கண்டுகொள்ளவேயில்லை. அனைவரும் கலைந்து சென்ற பின் அவள் வழக்கம் போல டீவி பார்க்கச் சென்றுவிட்டாள்.

ஆட்டோவில் போகும் போது கதிர் தன் பாட்டியிடம் கேட்டான்.

“இன்னாச்சி ஆயா…”

அவன் பாட்டி வலியில் அழுதுகொண்டே சொன்னாள்.

“நான் வெளியில உக்காந்துனு இருந்தேன்… தீடீர்ன்னு உங்கொம்மா கத்திகினே ஓடு வந்த… நான் ஏந்துபோயி கதவாண்ட நின்னு பாத்தேன்… உள்ள உன் தம்பி டீவிய தூக்கி ஒடைக்க போனான்…. நான் போயி அவன மெதுவா பேசி வெளிய இட்டுகினு வந்தேன்… உங்கம்மா கத்திகினே இருந்தா… உன் தம்பி என்ன புடிச்சி மேலருந்து தள்ளிவுட்டான்…”

“அப்பா இன்னா பண்ணின்னு இருந்தாரு…”

“அவன் உனுக்கு கொஞ்சத்திக்கி முன்னாடி தான் வந்தான்…”

கதிர் அமைதியாக இருந்தான். ஆட்டோ மெல்ல மருத்துவமனையை நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. பாட்டி விடாமல் பினாத்திக்கொண்டே வந்தாள்.

“உங்கொம்மா தான் அவன எதுனா நோண்டிவுட்டிருப்பா… என்னைய இன்னும் இட்டுகின்னு போவாம அவன் இப்புடி சாவடிக்கறானே… எனக்கு ஒரு சாவு வந்து ஒழியக்கூடாதா…”

“கம்முன்னு வா ஆயா…”

“நோவுதுடா… நீ எப்போ வருவேன்னு அப்புடியே உக்காந்துன்னு இருந்தேன்… உங்கொப்பன் அவன் பாட்டுக்கு மேலப்போயி புள்ளய கொஞ்சின்னு இருந்தான்… ரெண்டு பேரும் போனத பாத்துகினு தான இருந்த…”

“அதுக்கு இன்னாப் பண்ண சொல்ற… தலையெழுத்துன்னு ஆயிடுச்சி…”

ஆட்டோ அவசர சிகிச்சைப்பிரிவின் வாசலில் நிற்க, இருவரும் மருத்துவமனைக்குள் சென்றனர்.

கட்டுப்போட்டுக்கொண்டு இருவரும் வீட்டிற்கு வந்தார்கள். தெருவே இருளில் மூழ்கி அமைதியாக இருந்தது. அவரவர் தங்கள் வேலைகளில் மூழ்கியிருந்தனர். அவர்களுக்கு இது அவ்வப்போது நடக்கும் பொழுதுபோக்கு.

கதிரும் பாட்டியும் வீட்டிற்குள் நுழைந்தபோது அவன் தம்பி டீவி பார்த்துக்கொண்டிருந்தான். அவன் அப்பா தலையில் கையை வைத்துக்கொண்டு சோகமாக அமர்ந்திருக்க அவன் அம்மா உள்ளே கட்டிலில் படுத்துக்கொண்டிருந்தாள். உள்ளே நுழைந்த கதிரிடம் அவன் அப்பா “இன்னாடா சொன்னாங்க…” என்றார். அவன் பதிலேதும் சொல்லாமல் உள்ளே சென்றான். அவன் அறைக்குள் சென்றதும் அவன் அம்மா அறையை விட்டு வெளியேறினாள். தன் மாமியார் தலையில் கட்டைப்பார்த்ததும் அவள் முகத்தில் ஒரு சிறு சிரிப்பு தோன்றி மறைந்தது.

கதிர் தன் உடைகளை மாற்றிக்கொண்டிருந்தான். வெளியே பேசுவது அவனுக்குக் கேட்டது. அவன் பாட்டி தம்பியிடம் கேட்டுக்கொண்டிருந்தாள்.

“சாப்டியாடா கண்ணு…”

“இல்ல…”

“சோறு துண்றியா… இரு ஆயா போட்டாறன்…” என்று உள்ளே சென்று சோறு போட்டுக் கொண்டுவந்தாள். தட்டில் சோறும் ரசமும் இருந்தது. அதைப் பார்த்த அவன் அப்பா, “வெறும் சோத்தப் போட்டா அவன் எப்புடி சாப்டுவான்… ரெண்டு வத்தல் வறுத்துக்குடு…” என்றார் தன் மனைவியைப் பார்த்து. அவள் எதுவும் பேசாமல் உள்ளே போனாள். பாட்டி நேராக அறையின் வாசலில் வந்து நின்று “நீயும் வாயேண்டா…” என்றாள்.

“அவன் சாப்ட்டும்… நான் அப்பறம் சாப்டறன்… என்றான் கதிர்.

அனைவரும் சாப்பிட்டு அவரவர் வழக்கமாக படுத்துறங்கும் இடத்தில் படுக்கையைப் போட்டனர். கதிரின் அருகில் அவன் தம்பி படுத்திருந்தான். கதிர் அவனையேப் பார்த்துக்கொண்டிருந்தான். இப்போது அவன் முகம் அமைதியாக இருந்தது. மீசை தாடியெல்லாம் அடர்த்தியாக இருந்த அவன் முகம் கதிருக்கு வித்தியாசமாக தெரிந்தது.  பெருமூச்சொன்றை விட்டுவிட்டு கண்களை மூடிக்கொண்டான். சிறிது நேரத்திற்குப் பிறகு  கதிரின் மேல் கைகளையும் கால்களையும் போட்டுக்கொண்டு அணைத்தபடி தூங்கிப்போனான் அவன் தம்பி குமரன். அனைத்து களேபரங்களுக்குப் பிறகு அன்றைய இரவு வழக்கமான ஒரு இரவாகவே தொடர்ந்தது.

*

குமரன் விடுதியிலிருந்து நிரந்தரமாக வீட்டிற்கு வந்த ஓர் இரவு.

கதிர் நன்றாக அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தான். அந்த வீட்டில் ஒரு பெரிய கட்டிலிருந்தது. பழையத் தேக்குக் கட்டில். கதிருடைய தாத்தா காலத்தில் வாங்கியது. நல்ல உயரமான தேக்குக்கட்டில். அந்தக் குடும்பம் பல்வேறு அளவுகள் கொண்ட வீடுகளுக்கு வெவ்வேறு காலங்களில் மாறியபோதும் அந்த கட்டிலை மட்டும் விட்டுவிடவேயில்லை. அவர்கள்  குடும்பம் கடும் வறுமையிலிருந்த சந்தர்ப்பங்களில் தெரிந்தவர்கள் சொந்தக்காரர்கள் எனப் பலரும் அந்த கட்டிலைக் கொடுத்துவிடும்படி கேட்டுள்ளனர். ஆனால், அதை மட்டும் எக்காரணத்தைக்கொண்டும் கொடுக்கவேயில்லை. அதில் தான் கதிரும் அவன் தம்பியும் பல்வேறு விளையாட்டுகளை விளையாடினர். இரவுகளில் அந்த கட்டில் கதிரும் குமரனும் தான் தூங்குவார்கள். பகல் வேளையில் எப்போதாவது அவன் அப்பாவோ அம்மாவோ ஓய்வெடுப்பார்கள். கதிரின் அம்மாவிற்குப் பயந்து அவன் பாட்டி அதில் ஏறுவதேயில்லை. ஒருகாலத்தில் தான் ஆண்ட கட்டில் என்ற ஏக்கம் கதிரின் பாட்டிக்கு எப்போதும் உண்டு. அந்த வீட்டிற்கு யார் வந்தாலும் அந்த கட்டிலில் உட்காரவே விரும்பினர். அது நிறமாறி, உருமாறி சில இடங்களில் சிதைந்து இருந்தாலும் தன் கவர்ச்சியை மட்டும் இழக்கவேயில்லை.

குமரன் விடுதியிலிருந்த காலத்தில் கதிர் மட்டுமே அந்த கட்டிலில் தூங்கிக்கொண்டிருந்தான். இப்போது குமரன் மீண்டும் வந்து கதிருடன் கட்டிலை பகிர்ந்துகொண்டான். இதில் கதிருக்கு எந்த வருத்தமோ தயக்கமோ இருந்ததில்லை. அவன் எப்போதும் போலத்தான் தம்பியைப் பார்த்தான். சிறுவர்களாக இருந்தது போலவே தற்போதும் அவ்வப்போது கட்டிப்பிடித்தே தூங்கினர்.

தூக்கத்திலிருந்த கதிருக்கு திடீரென்று விழிப்பு வந்தது. மெல்லக் கண்விழித்தான். பக்கத்தில் குமரன் படுத்திருந்தான். நெருக்கமாகப் படுத்து கதிரின் மேல் கால்களைப் போட்டிருந்தான். அதுதான் கதிருக்கு ஒரு மாதிரியாக இருந்தது. தன் தொடையில் ஏதோ ஒட்டியிருப்பதை உணர்ந்தான். மெல்லக் குமரனை நகர்ந்திவிட்டு தன் கைலியைத் தொட்டுப்பார்த்தான். ஈரமாக இருந்தது.  அது என்னவென்று அவனுக்கு உடனடியாக தெரிந்தது. அது தன்னுடைய தல்ல என்றும் உணர்ந்தான். மெல்லக் குமரனை உருட்டிப்பார்த்தான். அவன் கால்சட்டை நனைந்திருந்தது. கதிருக்குக் கடுப்பாக இருந்தது. மெல்ல எழுந்து கழிவறைக்குச் சென்று தன் கால்களை கழிவிவிட்டு துணியை நனைத்துவிட்டு வேறு கைலியை எடுத்து உடுத்திக்கொண்டு வந்தான். இருட்டில் அவன் அம்மாவும் அப்பாவும் படுத்திருப்பது தெரிந்தது. பாட்டி சமையற்கட்டில் படுத்திருந்தாள். கதிர் சிறிது நேரம் அப்படியே நின்றிருந்தான். குமரன் எழுந்து தூக்கக்கலக்கத்தில் நடந்துவருவது தெரிந்தது. அவன் நேராகக் கழிவறைக்குச் சென்று சிறுநீர் கழித்தான். கதிர் வேறு ஒரு கால்சட்டையை எடுத்துச்சென்று, அவனை பழைய கால்சட்டையைக் கழட்டச்சொல்லி நன்றாகக் கழுவச்சொல்லி, வேறு கால்சட்டையை உடுத்த செய்தான். அவனுடைய கால்சட்டையையும் நனைத்துவிட்டு வந்து படுத்தான். அதன்பிறகு அவனுக்கு தூக்கமே வரவில்லை. மீண்டும் குமரன் கதிரை அணைத்துக்கொண்டு தூங்கத் தொடங்கினான்.

அப்பா அம்மா பாட்டி மற்றும் தம்பி

கதிரின் குடும்பம் தொண்ணூறுகளில் தான் புதுச்சேரிக்கு வந்தது. அப்போது அது பாண்டிச்சேரி. சந்திரன் பாண்டிச்சேரிக்கு வந்த பொழுது கதிருக்கு நான்கு வயது. குமரன் கைக்குழந்தை. தன் மனைவி, அம்மா மற்றும் இரண்டு குழந்தைகளுடன் அவர் தன் புதிய வாழ்க்கையைத் தொடங்கியிருந்தார். பாண்டிச்சேரிக்கு வந்தவுடன் கதிரின் அப்பா சந்திரன் சில தொழில்கள் செய்துப்பார்த்தார். ஆனால், எந்தத் தொழிலும் அவருக்கு கைகொடுக்கவில்லை. பிறகு பல வேலைகள் செய்து கடைசியாக ஒரு ஓட்டலில் வேலைக்குச் சேர்ந்து தன்னையும் தன் குடும்பத்தையும் தற்காத்துக்கொண்டார். அவர் தன் வாழ்க்கையில் ஒருமுறை கூட மேல் நோக்கிச் சென்றதேயில்லை. முதலில் கடைவைத்தார். அதை இழந்தார். பிறகு புலம்பெயர்ந்து துணி வியாபாரம் செய்தார். அதையும் இழந்தார். பிறகு லாட்டரிக்கடை அதன் பிறகு துணிக்கடை, கடைசியாக ஒரு ஓட்டல். அதிலும் கூட முதலில் கணக்காளராக சேர்ந்து பின் சப்ளையாராக பதிவியிறக்கம் செய்யப்பட்டார். அதைப்பற்றிய புலம்பல்கள், கவலைகள் அவருக்கு இருந்தாலும் அதைவிடப் பெரிய கவலைகளும் துன்பங்களும் அவர் குடும்பத்தில் நடந்தேறிக்கொண்டிருந்தது.

குமரன் வளர வளரத் தான் அவன் மூளை வளர்ச்சியில்லாத குழந்தை என்றே தெரியவந்தது. அதன் பிறகு அவர் கவனமெல்லாம் முழுக்க குமரன் மீதே இருந்தது. அவருக்குக் கதிர் என்று மற்றொரு மகன் இருக்கிறான் என்று அவ்வப்போது தான் நினைவில் வரும். ஆனால், குமரனின் இந்த நிலை குறித்து சந்திரன் கவலைப்பட்டதில் ஒரு துளிகூட அவர் மனைவி அரசி கவலைப்படவேயில்லை.

அவள் ஒரு தனியுலகத்தில் வாழ்ந்துகொண்டிருந்தாள். அவளுக்குக் கணவன் மீதோ, பிள்ளைகள் மீதோ, குடும்பம் மீதோ எந்த அக்கறையும் இருந்ததேயில்லை. அன்றைய நாள் அன்றைய சந்தோஷம் என தன் வாழ்க்கையைக் கழித்துக்கொண்டிருந்தாள். பெட்டிக்கடையில் விற்கும் அத்தனையையும் வாங்கித்தின்றாள். வாரத்திற்கு நான்கு முறை சினிமாவுக்கு சென்றாள். கேள்வி கேட்கும் கணவனையும் மாமியாரையும் வசைமாறிப் பொழிந்தாள். கணவன் தன் அம்மாவை வைத்திருப்பதாகக் கூசாமல் பேசினாள். அவள் வார்த்தைகள் உண்டாக்கும் வலிகளைத் தாங்க முடியாமல் சந்திரன் மெளனத்தை மருந்தை தேர்ந்தெடுத்தார். அவ்வப்போது எதாவது கேட்கும் மாமியாரை உண்டு இல்லை என்றாக்கினாள். அதன் பிறகு சந்திரனின் அம்மா தன் வாழ்க்கையின் பாதி நாட்களை தன் மகள்களின் வீட்டில் கழிக்க ஆரம்பித்தாள். அவ்வப்போது தன் மகன் வீட்டிற்கு வந்து சிறிது காலம் தங்கியிருந்து தன் மருமகளிடம் திட்டோ சில சமயங்களில் அடியோ வாங்கிக்கொண்டு செல்வாள். உண்மையில் கதிரின் பாட்டி இருக்கும் போது மட்டுமே கதிரும் குமரனும் கொஞ்சம் நல்ல சாப்பாடு சாப்பிட்டார்கள். கதிரின் அம்மாவிற்குச் சரியாகச் சமைக்கவும் தெரியாது, அதை மனங்கோணாமல் பரிமாறவும் தெரியாது. அவளின் இத்தனை அடாவடித்தனங்களைச் சந்திரன் சகித்துக்கொள்வதற்கு என்ன காரணம் என்று யாருக்குமே தெரியவில்லை.

ஒருபக்கம் மகன், ஒருபக்கம் மனைவி எனச் சந்திரனின் நிலை நாளுக்கு நாள் பரிதாபமாகவே மாறிக்கொண்டிருந்தது. அவரின் இந்த இந்த நிலையைப் பார்த்தது நண்பர்கள் சொந்தங்கள் எனப் பலர் பல யோசனைகள் சொல்ல ஆரம்பித்தார்கள். ஜோசியம், மருத்துவம், மாந்திரீகம் எனப் பலவித ஆலோசனைகள். தன்னால் இயன்ற அனைத்தையும் அவர் செய்தார். இதில் சந்திரனை விடப் பரிதாபகரமான நிலை கதிருக்குத்தான்.

அம்மா எப்போதும் யாரையும் கண்டுகொண்டதில்லை. அப்பாவின் முழு கவனமும் குமரன் மீதேயிருக்க, கதிரை கண்டுகொள்ளவே குடும்பத்தில் யாருமில்லாமல் போனது. ஏதோ பள்ளிக்கூடத்திற்குச் சென்றான். வந்தான். விளையாடினான். இருப்பதை உண்டான். அவ்வளவு தான் அவன் இருப்பு அந்த வீட்டில். சில சமயங்களில் சந்திரன் வெளியே செல்லும் போது அவனை அழைத்துச் செல்வார். இந்த நேரத்தில் சந்திரனின் சொந்தக்காரர் ஒருவர் சந்திரனுக்கு ஒரு யோசனை சொன்னார். சந்திரனும் அதைச் செய்து பார்க்க முடிவெடுத்தார். அந்த நேரத்தில் என்ன நினைத்தாரோ தெரியவில்லை கதிரையும் அழைத்துக்கொண்டு புறப்பட்டர். போகும் வழியெங்கும் கதிர், “எங்கப்பா போறோம்…” என்று கேட்டுக்கொண்டே சென்றான். அவர் எதுவும் சொல்லவில்லை. வழக்கமாக அப்பா பகலில் தான் கூட்டிக்கொண்டு செல்வார். இருட்டிய பிறகு அப்பா எங்கும் கூட்டிக்கொண்டு போக மாட்டார். எங்கே போகிறோம் என்ற குழப்பத்துடனே தான் கதிர் அவருடன் சென்றான்.

முதலியார்பேட்டையில் பேருந்து  ஏறி இருவரும் பதினைந்து நிமிடத்தில் பூர்னாங்குப்பத்தில் இறங்கினர். சிறிது தூரம் ஊருக்குள் சென்று ஒரு வீட்டிற்குள் சென்றனர். அங்கு ஏற்கனவே யோசனை சொன்ன சொந்தக்காரர் இருந்தார். அவர் கதிரைப் பார்த்ததும், “இவன ஏன் இட்டுன்னு வந்தீங்க…” என்றார். சந்திரன் பதிலேதும் சொல்லாமல் உள்ளே சென்றார். அவர்களை தொடர்ந்து அவரும் வந்தார்.

சிறிய குடிசைவீடு. கதிர் அந்த வீட்டைப் பயத்துடன் பார்த்தான். வாசலில் ஒரே ஒரு குண்டு பல்ப் எரிந்துகொண்டிருக்க எதிரே இருந்த கொஞ்சம் காலி இடத்தில் சில செடிகளும், இரண்டு வாழை மரங்களும் ஒரு வேப்பமரமும் இருந்தது.

உள்ளே ஒரு கிழவி ஏற்கனவே சில ஏற்பாடுகளைச் செய்திருந்தாள். வாழை இலைபோட்டு அதில் சோற்றில் சில உருண்டுகளைப் பிடித்து வைத்திருந்தாள். மற்றபடி வழக்கமான பூஜைப் பொருட்கள் இருந்தன. ஒரு  சேவல் அவள் அருகில் அமைதியாக அமர்ந்திருந்தது. சந்திரனும் கதிரும் போகும் போது அவள் குனிந்து எலுமிச்சைகளை கீறி உள்ளே குங்குமத்தை நிரம்பிக்கொண்டிருந்தாள். காலடிச் சத்தம் கேட்டுக் குனிந்தபடியே திரும்பிப் பார்த்தவள் கதிரைப் பார்த்ததும் நிமிர்ந்தாள். எதுவும் பேசாமல் பின்னாடிப் பக்கம் கையை காட்டினாள். சந்திரன் கதிரை அங்கேயே நிற்கச் சொல்லிவிட்டு உள்ளே சென்றார். அவள் கதிரையும் கூட்டிக்கொண்டு போகும் படி சைகைக் காட்டினாள். கதிரும் சந்திரனும் உள்ளே சென்றனர். பின்னே குளிப்பதற்கான இடம் இருந்தது. ஆனால் குளியல் அறையெல்லாம் இல்லை. ஒரு சிறிய தொட்டி, அதில் பாதி நீர் நிரம்பியிருந்தது. நீர் குளிர்ந்திருந்தது. இருவரும் ஆளுக்குக் கொஞ்சம் தண்ணீரை ஊற்றிக்கொண்டு துவட்டிக்கொண்டு அதே துணிகளை அணிந்துகொண்டு வெளியே வந்தனர். அவள் அவர்களை அருகில் வரச்சொல்லிவிட்டு ஏதேதோ செய்யத் தொடங்கினாள். அவள் என்ன செய்கிறாள் என்று கதிருக்கும் புரியவில்லை, சந்திரனுக்கும் புரியவில்லை, கூட்டிக்கொண்டு சென்றவருக்கும் புரியவில்லை. கிட்டதட்ட முக்கால் மணிநேரம் பூஜை செய்து கடைசியாக அந்த சேவலை பலிகொடுத்தாள். அதுவரை சாதாரணமாக இருந்த கதிர் அதன்பிறகு வீடு வந்த சேரும் வரை நடுங்கிக்கொண்டேயிருந்தான். இந்த பூஜை விஷயத்தை வீட்டில் சொல்லக்கூடாது என்று சந்திரன் கதிரிடம் கண்டிப்பாகச் சொல்லியிருந்தார். அந்தப் பூஜைக்குப் பிறகு எல்லாம் சரியாகிவிடும், மகன் இயல்பாக மாறிவிடுவான், மனைவி சரியாகி குடும்பத்தை நன்றாகக் கவனித்துக்கொள்வாள் என்று சந்திரன் நம்பினார். அது அனைத்தும் வீண் என்று சில நாட்களிலேயே புரிந்துகொண்டார்.  ஒருபக்கம் மகன் குழந்தையாகவே வளரத்தொடங்கினான். மறுபக்கம் மனைவியின் ஆட்டங்கள் அதிகரிக்கத் தொடங்கியது.

*

தன்னிடமும் குமரன் அவ்வாறு நடந்துகொண்டதாகச் சந்திரன் கதிரிடம் சொன்னார். கதிர் நைட் ஷிப்டிற்கு சென்ற சமயம் தான் அவனுடன் தூங்கியதாகவும், அப்போதும் அதுபோல் நடந்ததாகவும் அவர் சொன்னார். கதிருக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. இது வழக்கமாக ஒன்றுதான் என்று இருவருக்குமே தெரிந்திருந்தது. ஆனால், குமரன் சாதாரணமான ஒருவன் அல்லவே. இருவருக்கும் உள்ளுக்குள் சிறு பயம் ஏற்படத் தொடங்கியது. பக்கத்திலும் கீழ் வீட்டிலும் பெண்பிள்ளைகள் இருக்கிறார்கள் என்றார் சந்திரன். பிறகு தானே மருத்துவரிடம் ஆலோசனை கேட்பதாகவும் சொன்னார். கதிரும் சரியென்று அதை அத்தோடு விட்டான். அதன்பிறகு சந்திரன் குமரனைத் தொடர்ந்து மருத்துவரிடம் கூட்டிக்கொண்டு போக ஆரம்பித்தார். அவனுள் ஒரு மாற்றம் நிகழ ஆரம்பித்தது.

குமரனும் அவன் அப்பாவும்

சிறுவயதில் குமரனை விடுதியில் சேர்த்தப் பின்பு வாரம் தவறாமல் ஞாயிறு மாலை விடுதிக்குச் சென்று குமரனைப் பார்த்துவிட்டு வந்தார் சந்திரன். அவ்வப்போது கதிரையும் அழைத்துச்சென்றார். குமரனின் அம்மாவிற்கு எப்போதுமே தன் மகனைப் பிரிந்திருக்கிறோமே என்ற கவலை இருந்ததேயில்லை. கதிருக்கு எப்போதுமே தம்பி மீது ஒரு ஈர்ப்பு இருந்துகொண்டேயிருந்தது. அதுவும் அவனைப் பிரிந்திருந்த நாட்களில் அது அதிகரிக்கத்தான் செய்திருந்தது. ஆனால், சந்திரன் மட்டும் எப்போதுமே அதே மாறாத அன்போடு இருந்தார். தனக்காக கிடைக்கும் அனைத்து ஓய்வு நேரங்களையும் அவனுக்காகவே செலவிட்டார்.

குமரனுக்கு மூளை வளர்ச்சி குன்றியிருப்பதைச் சரி செய்துவிடலாம் என்று அவர் திடமாக நம்பிக்கொண்டிருந்தார். ஆனால், அது அவர் மனைவி குடும்பத்தில் வரிசையாகப் பலருக்கு அவ்வாறு ஏற்பட்டுள்ளது என்பதை எல்லோரும் எடுத்துச் சொல்லி, குமரன் கடைசிவரை இப்படித்தான் இருப்பான் என்று சொல்லியபோது அவர் மிகவும் சோர்ந்துபோனார். குமரனின் நிலையையே அவருக்கு பெரும் சோர்வை ஏற்படுத்திக்கொண்டிருந்த தருணத்தில் மனைவியும் நாளுக்கு நாள் மிக மோசமாக நடக்க ஆரம்பித்திருந்தாள். எதற்கெடுத்தாலும் சண்டைகள், வசைகள் என அவள் அட்டகாசம் அதிகரித்துக்கொண்டிருந்தது. சினிமாவிற்கு போகவும் வாங்கி சாப்பிடவும் வீட்டிலிருக்கும் பொருட்களையும் விற்க ஆரம்பித்திருந்தாள். இதற்கெல்லாம் உச்சமாக அவள் தனது திருமணப் பட்டுப்புடவையின் சரிகைகளைக் கூட பிரித்து விற்றிருந்தாள். அந்த குடும்பத்தின் வறுமை செயற்கையாக உருவாகிக்கொண்டிருந்தது. அக்கம்பக்கத்தார்கள், சொந்தங்கள் என யாருமே சந்திரனை மதிக்கவில்லை. அனைவரின் பார்வையிலும் அவர் மனைவியை அடக்கத்தெரியாதவராகவும், கையாலாகாதவராகவும் தெரிந்தார். உறவினர்களின் எந்த விசேஷங்களிலும் அவருக்கு மரியாதையே இருந்ததில்லை. கதிர் வளர வளர இதை நன்றாக புரிந்துகொள்ளத் தொடங்கினான். ஒருகட்டத்தில் அவன் எந்த உறவினர் வீடுகளுக்கும் அவர்கள் வீட்டு விசேஷங்களுக்கும் போதையே நிறுத்தியிருந்தான். சந்திரன் இதைப்பற்றியெல்லாம் கவலைப்பட்ட மாதிரியே காட்டிக்கொள்ளவில்லை. அதன் காரணமாகவே கதிருக்கு அவர் மீது ஆழ்மனதில் ஒரு வெறுப்பு இருந்துகொண்டேயிருந்தது.

சரியாக பதினாறு வயது முடிந்ததும் குமரன் வீட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டான். இத்தனை ஆண்டுகளில் அவன் அம்மா துளிகூட மாறாமலேயே இருந்தாள். அதனால் குமரன் திரும்பி வீட்டிற்கு வந்து அவளுக்கு மீண்டும் இடைஞ்சலாகவே இருந்தான்.

அவன் பொருட்டு அவள் மீண்டும் சந்திரனிடம் சண்டை பிடிக்க ஆரம்பித்தாள்.

*

வழக்கம் போலக் குமரனை அவனது அம்மா எதற்கோ திட்டிக்கொண்டேயிருந்தாள். அவளுக்கு அதுதான் மிகவும் பிடித்தமான பொழுதுபோக்கு யாரையாவது திட்டிக்கொண்டேயிருக்க வேண்டும். கணவனை, மாமியாரை, பிள்ளைகளை, கடைக்காரனை, கீழ் வீட்டு எதிர் வீட்டு, பக்கத்துவீட்டு ஆட்களை என யாரையாவது திட்டிக்கொண்டேயிருப்பாள். அவளுக்கு தன் பிள்ளைகள் உட்பட அனைவருமே தேவடியாப்பையன்ங்கள் தான், தேவடியாக்கள் தான்.  அன்றும் வழக்கம் போலக் குமரனைத் திட்டிக்கொண்டேயிருந்தாள். அவன் அமைதியாக டீவிப் பார்த்துக்கொண்டிருந்தான். அவள் உள்ளே போவதும் வெளியே வருவதுமாக இருந்தாள். அவள் வாய் ஓயவேயில்லை. ஒருமுறை வெளியே வரும்போது குமரனின் கால் அவளைத் தடுக்கிவிட்டது. அவள் அவன் தலையில் ஒரு கொட்டு வைத்தாள். அவள் கொட்டிய அடுத்த நொடி அந்த வீட்டில் ஆக்ரோஷமான ஒரு மிருகத்தின் அலறல் அந்த தெருவையே திணறடித்தது. குரல் கேட்ட பலரும் ஜன்னல் வழியாக வாசல் வழியாக எட்டிப்பார்த்தனர். குமரனின் அலறலைக் கேட்டு அவன் அம்மா மிரண்டு சுவரோடு சுவராக ஒட்டிக்கொண்டாள். வெளியே உட்கார்ந்துகொண்டிருந்த அவன் பாட்டி எழுந்து உள்ளே வந்தாள். உள்ளே குமரனின் முகம் விகாரமாக ஆக்ரோஷத்தோடு அவன் அம்மாவை நோக்கியிருந்தது. அவன் உரும்பிக்கொண்டேயிருந்தான். அவன் கைகள் எப்போது வேண்டுமானாலும் தாக்கக்கூடம் என்பது போல் அசைந்துகொண்டிருந்தது. அவள் இன்னும் கூடுதலாக அவனைத் திட்ட ஆரம்பித்தாள். பாட்டியோ அவனைக் கொஞ்சிக்கொண்டே அவன் அருகில் சென்றாள். ஆனால், குமரனின் காதுகளில் எதுவும் விழவேயில்லை. அவன் அம்மா திட்டத் திட்ட அவனுக்கு வெறியேற்றிக்கொண்டேயிருந்தது. கிட்ட வந்த குமரனை அவள் மீண்டும் அடிக்க கையை ஓங்கினாள். அவன் வெறிகொண்டு அவள் முடியைப் பிடித்து இழுத்துக் கடாசினான். அவன் சமையலறையிலிருந்த அம்மிக்கல்லின் அருகில் சென்று விழுந்தாள். “அய்யோ அடிக்கிறான்… கொல்றான்…” எனக் கத்த ஆரம்பித்தாள். அவன் பாட்டி அவன் அருகில் சென்று அவனைச் சமாதானப்படுத்த முயன்றாள்.  அந்த சந்தர்ப்பத்தில் வேகமாக எழுந்த அவன் அம்மா வாசல் பக்கமாக ஓடிச்சென்று கதவை வெளிப்புறமாகத் தாழ்ப்பாள் போட்டுவிட்டாள். உள்ளேயிருந்த பாட்டி கதவைத் திறக்கும்படி கத்தினாள். ஆனால் அவள் திறக்கவேயில்லை. உள்ளேயிருந்து பொருட்கள் உடைபடும் சத்தம் கேட்கத் தொடங்கியது. தெருவே வேடிக்கை பார்க்கத் தொடங்கியது.

குமரனும் அவன் அம்மாவும்

குமரனும் பள்ளிக்கூடத்திற்குச் சென்றான். சில ஆண்டுகள் ஒன்றாம் வகுப்பு படித்தான். எத்தனை ஆண்டுகள் தான் ஒன்றாம் வகுப்புலேயே வைத்திருப்பது என்று அவனைப் பள்ளியிலிருந்து நிறுத்திவிட்டார்கள். அதன் வீட்டோடு இருந்துவிட்டான். பெரும்பாலும் வாசலில் அமர்ந்து வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருப்பான். சில நேரம் தனக்குத் தானே சிரித்துக்கொண்டிருப்பான். சிறிது கோவமாகப் பேசினாலே அழத்தொடங்கிவிடுவான். அப்போது அவன் அம்மா ஒரு சினிமா பைத்தியமாக இருந்தாள். வாரத்திற்கு மூன்று அல்லது நான்கு முறை சினிமாவிற்கு சென்றுவிடுவாள். முதலியார்பேட்டையிலேயே கண்ணம்மை என்று ஒரு தியேட்டர் இருந்தது. இரண்டு மணிக்கெல்லாம் சென்று உட்கார்ந்துவிடுவாள். மூன்று மணியாட்டம் பார்த்துவிட்டு மெதுவாக ஆறு மணிக்கு வீட்டிற்கு வருவாள். குமரனை எப்போதும் கையில் பிடித்துக்கொண்டே அலைவாள். தியேட்டாரில் குமரனைப் பார்த்து இறக்கப்பட்டு இடைவேளையில் யாராவது எதாவது வாங்கிக்கொடுப்பார்கள்.

குமரன் எப்போதும் அவளுக்கு ஒரு சுமையாகியிருந்தான். அவன் வீட்டிலேயே இருப்பதால் அவனையும் எங்கு சென்றாலும் அழைத்து செல்ல வேண்டிய நிலை அவளுக்கு இருந்தது. அவனுக்குச் சேர்த்து செலவு செய்வது அவளுக்கு பெரும் கஷ்டமாக இருந்தது. அவ்வப்போது வரும் மாமியாரை சண்டைபோட்டு அனுப்பிவிடலாம். ஆனால், பெற்ற பிள்ளையை என்ன செய்து என்று யோசித்துக்கொண்டிருந்தாள். கடைசியில் அவளுக்கு ஒரு விடைக் கிடைத்தது. இரண்டு தெருத் தள்ளி ஒரு வீட்டில் குமரனை போலவே ஒரு குழந்தை இருந்தது என்றும் அவர்கள் அதை விடுதியில் விட்டுவிட்டார்கள் என்று கேள்விப்பட்டு தன் கணவனை நச்சரிக்கத் தொடங்கினாள். இதன் பொருட்டு வீட்டில் தினம் ஒரு சண்டை எனச் சந்திரனின் உயிரை எடுக்க ஆரம்பித்தாள். காலை முதல் இரவு வரை உழைத்துவிட்டு நேராக வீட்டிற்கு வரும் சந்திரனுக்கு ஒருநாள் கூட நிம்மதியே இல்லாமல் போய்விட்டது. பொருத்துப் பொருத்துப் பார்த்த சந்திரன் குமரனை விடுதியில் சேர்க்க ஒப்புக்கொண்டார்.

இருவரும் சென்று குமரனை மனநலம் குன்றிய சிறுவர் இல்லம் எனும் ஒரு அரசாங்க விடுதியில் சேர்த்துவிட்டனர். எதுவுமே தெரியாமல் குமரன் உள்ளே சென்றான். அந்த இடத்தில் அழுது கண்ணீர்விட்டு ஒரு சிறு நாடகத்தை அரங்கேற்றினாள். “வேணூம்னா கூட்டின்னு போயிடலாமா” என்று சந்திரன் கேட்க, உடனே அழுகையை நிறுத்திவிட்டு மறுத்தாள். குமரனை அவர்கள் பதினாறு வயது வரை தான் வைத்துக்கொள்வார்கள் என்பது மட்டும் அவளுக்கு உறுத்திக்கொண்டேயிருக்க, அதற்குப் பல வருடங்கள் இருக்கிறது என்று தன்னை சமாதானப்படுத்திக்கொண்டாள்.

குமரனை விடுதியில் விட்டதிலிருந்து கதிர் கொஞ்சம் வருத்தத்திலிருந்தான். தன்னுடன் விளையாடவில்லையென்றாலும் பேசவில்லையென்றாலும் துணைக்குத் தம்பி என்று ஒருவன் இருந்தான். ஆனால், இப்போது யாருமற்ற வெறுமை கதிரைத்தான் அதிகமாகத் தாக்கியது. குறிப்பாக விடுமுறை நாட்களில் கதிருக்கு வெறுப்பாகவே கழிந்தது. ஆனால், அவன் அம்மா தன் வழியிலிருந்த சிறுப் புல்லையும் நசுக்கிவிட்டோம் என்று மகிழ்ந்தாள்.

*

கதிர் வீட்டிற்கு வரும் வரை அவன் அம்மா தெருவேப் பார்க்கும்ம்படி கத்திக்கொண்டிருந்தாள். அவன் வந்து கதவைத் திறந்து உள்ளே சென்றபோது குமரன் அமைதியாக டீவிப் பார்த்துக்கொண்டிருந்தான். அவன் பாட்டி உள்ளே சமையலறையைச் சுத்தம் செய்துகொண்டிருந்தாள். அவன் பாட்டியைப் பார்க்க அவள் எட்டி அவன் அம்மா வருகிறாளா என்று பார்த்தாள். கதிர் வெளியே சென்று அவன் அம்மாவை உள்ளே அழைத்தான். அவள் கத்திக்கொண்டே உள்ளே வந்தாள். அவளின் நீண்ட கத்தலையும் புலம்பலையும் கொண்டு என்ன நடந்தது என்று கதிர் ஒருவாறு ஊகித்திருந்தான். ஆனால், குமரன் ஏன் இவ்வாறு நடந்துகொண்டான் என்று அவனுக்குப் புரியவில்லை. தற்போது அவன் அமைதியாக இருந்ததால் அவன் தன் வேலையைப் பார்க்கச் சென்றான். இரவு சந்திரன் வீட்டிற்கு வந்ததும் மீண்டும் அதே புராணம் வாசிக்கப்பட்டது. அவர் எதையுமே நம்பவில்லை. கதிரிடம் கேட்க, அவனும் தான் எதையும் பார்க்கவில்லை என்று சொல்லிவிட்டுப் படுத்துவிட்டான்.

பிறகு குமரனின் நடவடிக்கைகளில் ஏற்பட்ட மாற்றத்தைக் கதிரும் சந்திரனும் கவனிக்கத் தொடங்கினர். சந்திரன் எதற்கெடுத்தாலும் அவனை மருத்துவரிடம் அழைத்துச்சென்றார். அவனுக்குக் கொடுக்கப்படும் மாத்திரைகளின் அளவுகள் அதிகரித்துக்கொண்டேயிருந்தது. சந்திரன் எதையுமே யாரிடமும் சொல்லவில்லை. கதிரிடம் கூட அவர் குமரனுக்கு என்ன மருத்துவம் பார்க்கிறார் என்று சொல்லவில்லை. தற்போது அவன் இரவுகளில் அமைதியாகத் தூங்குகிறான். எந்த வித உணர்ச்சிகளும் அவனிடம் இல்லை என்பதை மட்டும் கதிர் கவனித்தான். ஆனால், நாளுக்கு நாள் அவன் ஆக்ரோஷம் அதிகரித்துக்கொண்டே சென்றது. தெருவில் உள்ளவர்களுக்கு அவன் ஒரு வேடிக்கைப் பொருளாக மாறினான். சந்திரனை அடிக்கடி வெளியே கூட்டிக்கொண்டு செல்லும் படி தகராறு செய்ய ஆரம்பித்தான். அவனுடைய ஆக்ரோஷத்தை சந்திரன் கதிர் இருவராலும் சமாளிக்க முடியவில்லை. அனைவரையும் அடித்தான். கிடைத்ததையெல்லாம் உடைத்தான். சமயம் கிடைக்கும்போதெல்லாம் அவன் அம்மா அவன் ஆத்திரத்தைத் தூண்டிவிட்டுக்கொண்டேயிருந்தாள். அவன் பாட்டியை மாட்டிவிட்டு ஓடிவிடுவாள். பலமுறை பாட்டிதான் அவனைச் சமாதானப்படுத்துவாள்.

கதிருக்கு சந்திரன் மேல் சந்தேகமாகவே இருந்தது. அவர் கொடுக்கும் மாத்திரைகளின் பக்கவிளைவுகளே குமரனின் நடவடிக்கைகள் என்று நினைத்தான். ஒருநாள் அதைச் சந்திரனிடம் கேட்கவும் செய்தான்.

“அவன இன்னாத்துக்கு அடிக்கடி ஆஸ்பத்திரிக்கு இட்டுன்னு போற… எதுக்கு இத்தன மாத்தர…”

“ஓன்னும் இல்லடா… அதெல்லாம் சத்து மாத்தர…”

“இப்ப நீயா சொல்றயா… இல்ல நான் இதெல்லாம் எடுத்துகினு போயி மெடிக்கல்ல கேக்கவா… இதெல்லாம் இன்னா மத்திரன்னு கண்டுபுடிக்க முடியாதுன்னு நெனக்கறியா…”

சந்திரன் அமைதியாக இருந்தார். அவர் கண்கள் கலங்கியிருந்தன. இவர்கள் பேசுவது எதையும் கண்டுகொள்ளாமல் குமரன் டிவிபார்த்துக்கொண்டிருந்தான். அவன் அம்மாவும் இவர்கள் பேசுவதைப் பற்றி கவலையில்லாமல் சாப்பிட்டுக்கொண்டிருந்தாள். பாட்டி மட்டும் சந்திரனிடம் கோவமாகக் கேட்டாள்.

“இன்னா தாண்டா பண்ணி வெச்ச அந்த கொழந்தையா…”

“அவன் எதனா தப்பா நடந்துக்க போறான்னு அவனுக்கு அதுமாதிரி எதுவும் தோணாத மாதிரி டாக்டருகிட்ட கேட்டு மாத்திர குடுத்தேன்… ஆனா இப்படி சைட் எஃப்க்ட் ஆவும்ன்னு எனக்கு தெரிலயே… டாக்டரு கூட எதுவும் ஆவாதுன்னுதான் சொன்னாரு…”

சந்திரன் என்ன சொல்கிறார் என்று பாட்டிக்கு ஒன்றும் புரியவில்லை. ஆனால், கதிருக்குப் புரிந்தது. அவனுக்கு ஆத்திரம் தலைக்கேறியது.

“உனுக்கு எதுனா அறிவு இருக்குதா…”

“நீதாணடா சொன்ன… அவனுக்கு ராத்திரில இப்புடி ஆவுது… கட்டி கட்டி புடிச்சிக்கிறான்… யாரன்னா எதுனா பண்ணிடப்போறான்னு…”

“அதுக்கு… ஏன் வெஷம் கொடுத்துக் கொல்ல வேண்டியது தான…”

சந்திரன் அமைதியாக இருந்தார். அவன் அம்மா சாப்பிட்டு ஏப்பம் விட்டுக்கொண்டே வந்தாள்.

அனைவரும் ஏதோ பேசிக்கொண்டிருப்பதைக் கண்டு “இன்னாச்சி” என்றாள்.

யாரும் எதையும் பேசாமல் படுத்துக்கொண்டனர். சந்திரன் அனைத்து மாத்திரைகளையும் எடுத்துச் சென்று கழிவறையில் போட்டுவிட்டு வந்து படுத்துக்கொண்டார். ஆனால் தூங்கவில்லை.

உள்ளேயிருந்து குமரன், “அப்பா… அப்பா… இங்க வா…” என்றான்.

அவர் மெல்ல எழுந்து அவன் அருகில் சென்றார். அவன் மட்டும் கட்டிலில் படுத்திருந்தான். கதிர் ஜன்னலில் வேடிக்கைபார்த்துக்கொண்டிருக்கக் குமரன் அவன் அப்பாவை அருகில் படுத்துக்கொள்ளும்படி சொன்னான். அவர் தயங்கியவாறே அவன் அருகில் படுத்துக்கொண்டார்.

“அப்பா… நாளிக்கு பஸ்ல போலாமா…”

“ம்…”

“நீல பஸ்ஸா… செவப்பு பஸ்ஸா…”

“நீல பஸ்ல போலாம்…”

“பீச்சிக்கா…”

“கோயிலுக்கு போலாம்…”

“பஸ்லயா…”

“ஆமா…”

“நீல பஸ்லயா…”

கீழே படுத்துக்கொண்டிருந்த அவன் அம்மா “ஏய் சனியனே… கம்முன்னு தூங்கு…” என்றாள்.

ஜன்னல் அருகே வேடிக்கப் பார்த்துக்கொண்டிருந்த கதிர் வேகமாக வந்து அவன் அம்மாவை ஒரு மிதி மிதித்தான். அவள் ‘அய்யோ’ என்று அலறினாள்.

குமரன் பலமாகச் சிரித்தான்.

*

குமரனை எதாவது விடுதியில் சேர்த்துவிடும் படி மீண்டும் தகராறு செய்ய ஆரம்பித்திருந்தாள் அவன் அம்மா. சந்திரனுக்கு இது மேலும் மன வேதனையை அதிகரித்தது. தன் மனைவியின் தொல்லை தாங்காமல் வீட்டிற்குத் தாமதமாக வரலாம் என்று நினைத்தாலும் அவர் குமரனை நினைத்துப் பயந்தார். யாரை யார் என்ன செய்வார்களோ, எப்போது என்ன நடக்கும் என்றோ  அவர் பயந்தவாறே தன் காலத்தைக் கழிக்க ஆரம்பித்திருந்தார்.

இதுபோன்ற ஒரு சூழலில் தான் குமரன் தன் பாட்டியை மாடியிலிருந்து கீழே தள்ளிவிட்டிருந்தான். அது அவர் மனைவிக்குச் சாதகமாகவே அமைந்தது. அவள் தனக்குப் பயமாக இருப்பதாகத் தினமும் இரவுகளில் ரகளை செய்தாள். கதிருக்கு தன் அம்மாவைப் பார்க்கப் பார்க்க அருவருப்பாக இருந்தது. அவன் வீட்டிற்கு வருவதையேக் குறைத்துக்கொண்டான். வாரத்தில் இரண்டு மூன்று நாட்கள் மட்டுமே வந்தான். குமரன் தாக்கியதால் பலவீனமடைந்திருந்த அவன் பாட்டி சமையலறையில் நடக்கும்போதே இடுப்பொடிந்து கீழே விழுந்தாள். அதன் பிறகு அவளை எங்காவது கொண்டு விடும் படி பிரச்சனை செய்ய ஆரம்பித்தாள். ஒருகட்டத்தில் சந்திரனுக்கு வேறு வழியே தெரியவில்லை. அங்கே இங்கே என அலைந்து ஒரு விடுதியைக் கண்டுபிடித்தார்.

*

தன்னை சுற்றியிருந்த மிருகங்களிடமிருந்து தப்பிக்கக் குமரனுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துவிட்டதாக நினைத்தான் கதிர். குமரனிடம் எந்த ஆக்ரோஷமும் இல்லை அமைதியாகவே இருப்பதாக விடுதியில் சொன்னார்கள். வாரம் ஒருமுறை சந்திரன் குமரனைச் சென்று பார்த்து வந்தார். கதிர் அவ்வப்போது சென்று வந்தான். சந்திரனும் கதிரும் சேர்ந்து எப்போதாவது செல்வார்கள்.

சந்திரனும் கதிரும் குமரனை நடுவில் உட்காரவைத்து கேக் ஊட்டிவிட்டுக்கொண்டிருந்தனர். அவன் அதை ரசித்து சாப்பிட்டுக்கொண்டிருந்தான். இருவரும் அமைதியாக அவனைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். அவன் சாப்பிட்டுக்கொண்டே அமைதியாகக் கேட்டான்.

“அம்மா வரல செத்துட்டாளா…”

சந்திரன் அமைதியாக இருந்தார்.

“அம்மா வரல செத்துட்டாளா…”

“இன்னும் இல்ல…” என்றான் கதிர்.


–அரிசங்கர்

வீடெங்கும் கூச்சல் நிறைந்திருந்தன. அது ஒரு பெரிய வீடு. முன்புறம் திண்ணை வைத்து, பின்புறம் தோட்டம் வைத்து பார்க்கவே அரிதாகிப்போன ஒரு வீடு. புதிதாக வெள்ளையடிக்கப்பட்டிருந்தது. கொம்புகளுக்குப் புதிதாக வண்ணம் தீட்டப்பட்ட மாடுகள் வீட்டின் பின்பக்கம் கட்டப்பட்டிருந்தது. தோட்டத்தில் பெரும்பாலும் காய்கறிகளே போடப்பட்டிருந்தன. ஆங்காங்கே சில செம்பருத்தி செடிகளும் அதில் பூத்தும் பூக்கத் தயாராகவும் வாடியும் சில மலர்கள் இருந்தன. சில மலர்கள் கீழே விழுந்து காய்ந்து போயிருந்தது. சிறுவர்கள் ஓடியாடி விளையாடிக்கொண்டிருந்தனர். ஆளுக்குக் கையில் ஒரு கரும்புத் துண்டை வைத்துக்கொண்டிருந்தனர். வெவ்வேறு வயதுடைய சொந்தக்கார பெண்கள் சுற்றி உட்கார்ந்து பேசிக்கொண்டே ஆளுக்கொரு வேலையை இழுத்துப்போடு செய்துகொண்டிருந்தனர். பொங்கல் முடிந்தும் யாரும் இன்னும் தங்கள் வீடுகளுக்கு புறப்படாமலேயே இருந்தனர். சுப்பையாவின் வீட்டில் கூடுதலாக ஒரு விசேஷம். அதனால் வீடே உறவினர்களால் நிறைந்திருந்தது. பொங்கல் பண்டிகை முடிந்து இரண்டொரு நாளிலேயே அவர் மகளின் வளைகாப்பு ஏற்பாடாகியிருந்தது. எல்லா உறவினர்களுக்கும் சொல்லியாகிவிட்டது. நெருங்கிய உறவினர்கள் பிள்ளைகளைத் தூக்கிக்கொண்டு பொங்கலுக்கு முன்பே வந்துவிட்டார்கள்.

அவர் குடும்பத்தில் அதுதான் வழக்கும். பொங்கலுக்கு அனைத்து உறவினர்களும் சுப்பையா வீட்டில் கூடிவிடுவார்கள். இப்போதைக்கு அவர்கள் அனைவருக்கும் சுப்பையாதான் மூத்தவர். அவர்கள் வந்ததிலிருந்து சுப்பையாவிற்கும் அவர் மனைவி விஜயாவிற்கும் பாதி வேலை குறைந்திருந்தது. அவர்கள் மகள் எந்நேரமும் யாரிடமாவது தொலைப்பேசியில் பேசிக்கொண்டே இருந்தாள். ஒற்றை மகளை சுப்பையா இதுவரை கண்டித்ததேயில்லை. சுப்பையா கருத்த உயரமானவர். ஆனால் முனிபிருந்த உடல்கட்டு இப்போது கானாமல் போயிருந்தது. சக்கரை அவரை உருக்க ஆரம்பித்திருந்தது. ஆனால், அவர் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படுபவர் அல்ல. அவர் அமைதியாக நாற்காலியிலோ அல்லது தூணில் சாய்ந்தோ உட்கார்ந்துகொண்டோ எதையாவது வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பார். அவ்வப்போது சொல்லும் வேலையைச் செய்துகொடுப்பார்.

“இன்னா மாமா… இன்னா சித்தப்பா… என்று யாராவது அவரிடம் எதையாவது கேட்டுக்கொண்டே இருப்பார்கள். அவரும் சலிக்காமல் பதில் சொல்லிக்கொண்டே இருப்பார். ஆனால் அவர் மனைவி சமீபத்தில் கேட்டுக்கொண்டேயிருக்கும் ஒரு விஷயம் அவருக்கு பெரும் சலிப்பாக இருந்தது.

கடந்த இரண்டு நாட்களாக அவர் வீட்டில் அதிகம் தங்குவதில்லை. எதாவது வெளிவேலை இருப்பதாகச் சொல்லி எங்காவது புறப்பட்டுவிடுகிறார். வீட்டில் இருந்தாலும் அவர் மனைவியை நெருங்குவதில்லை.

அந்த விஷயத்தைக் கேள்விப்பட்டதிலிருந்து அவள் அவரை நச்சரித்துக்கொண்டேயிருந்தாள். அவரால் அவளைச் சமாளிக்க முடியவில்லை. தன்னை அங்கே கூட்டிக்கொண்டு போயே ஆக வேண்டும் என்று உடும்புப்பிடியாக இருந்தாள். விசேஷம் முடிந்து போகலாம் என்றால் கூட அவளுக்குப் பொறுமையில்லை. அவள் கண்களால் மிரட்டிக்கொண்டே இருப்பதை அவரால் தாங்கமுடியவில்லை. இப்போதெல்லாம் அவள் மிரட்டலுக்குத் தான் அதிகம் அஞ்சுகிறோமோ என்று அவருக்கு தோன்றியது.

எப்படியோ டவுனுக்கு போய் சில பொருட்கள் வாங்க வேண்டியது இருந்தது. அவர் மனைவி, தானும் கணவரும் போய் வருவதாகச் சொல்லிவிட்டாள். சொந்தக்காரர் தாங்கள் போய்வருவதாக கேட்டுப்பார்த்தும் மறுத்துவிட்டாள்.

சுப்பையாவிற்கு ஏதோ போல் இருந்தது. மீண்டும் அங்குப் போவதைக்குறித்து அவர் இதுவரை நினைத்துப்பார்த்துக் கூட இல்லை. அவர் தன் உடலில் ஒரு நடுக்கம் குடிகொண்டதைக் கவனித்தார்.

மறுநாள் காலை. விஜயா உற்சாகத்துடன் புறப்பட்டுக்கொண்டிருந்தாள். வீட்டிலிருந்தவர்களே ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டிருந்தனர். அவள் அண்ணன் மகள் கேட்டேவிட்டாள்.

“இன்னா அத்த… மார்கெட்டுக்கு தான போற… இல்ல மாமா கூட டூயட் எதுனா பாடப்போறயா…”

அதைக்கேட்டு அனைவரும் சிரித்துவிட்டனர். ஆனால், விஜயா அதைக் கண்டுகொள்ளாமல் புறப்பட்டுக்கொண்டிருந்தாள். சுப்பையா ஏற்கனவே புறப்பட்டு வாசலில் சலிப்புடன் நின்றுகொண்டிருந்தார். பிறகு திரும்பி வீட்டின் உள்ளே பார்த்து சத்தம் கொடுத்தார்.

“ஏய் பஸ் வரப்போவுது வா… இன்னா ஓடிப்போயி ஏறிக்கிலாம்ன்னு இருக்கியா…”

சத்தம் கேட்ட சிறிது நேரத்தில் விஜயா வெளியே வந்தாள். அவருக்கு இப்போது விஜயாவைப் பார்க்கப் பிடித்திருந்தது. ஆனால், அதை முகத்தில் காட்டிக்கொள்ளவில்லை. முகத்தை விரைப்பாகவே வைத்திருந்தார். விஜயாவிற்கு தெரியும், சுப்பையா தன்னை  ரசிக்கிறார் என்று. அவர் முகத்தில் லேசாகத் தோன்றி மறைந்த ஒரு மின்னலை அவள் கவனித்திருந்தாள். நேராக அவரிடம் வந்து, “சிரிச்சா ஒன்னும் கொறஞ்சிட மாட்ட…” என்றாள். அவர் மனதிற்குள் சிரித்துக்கொண்டார்.

இருவரும் பேருந்து நிறுத்தத்தை நோக்கி நடந்தனர். மணி காலை ஒன்பதாகியும் வெய்யில் ஏற ஆரம்பித்தும் லேசாகக் குளிரத்தான் செய்தது. எல்லாம் இங்கிருக்கும் வரைக்கும் தான். தவளக்குப்பம் தாண்டிவிட்டால் இந்த குளிர் இருக்காது. வெய்யில் நன்றாக உறைக்க ஆரம்பித்துவிடும் என்று நினைத்துக்கொண்டார்.

அவர்கள் பேருந்து நிறுத்தத்தை அடைந்த போது பேருந்து புறப்படாமல் நின்றுகொண்டிருந்தது. அவர்கள் அதைப்பற்றி கவலைகொள்ளாமல் நிதானமாகச் சென்றனர்.

பாகூர் தான் கடைசி நிறுத்தம். பிறகு திரும்பி பாண்டிக்குத் தான் செல்ல வேண்டும். அதனால் சிறிது நேரம் நின்றுவிட்டு தான் செல்லும். அவர்கள் மெல்ல நடந்து சென்று பேருந்தில் ஏறி அமர்ந்தனர். வலது புறம் அமரச்சென்ற விஜயாவை கையைப் பிடித்து இடதுபுறம் அமரவைத்தார். கேள்விக்குறியுடன் பார்த்த விஜயாவிடம் “அந்தாண்ட வெய்யிலடிக்கும்” என்றார்.

ஜன்னலோரம் அமர்ந்துகொண்ட விஜயாவின் அருகில் சுப்பையா அமர்ந்துகொண்டார். பேருந்தில் அதிகம் கூட்டமில்லை. பள்ளிக்கூடம் மற்றும் காலை வேலைக்குப் போகும் கூட்டம் எல்லாம் போன பேருந்திலேயே சென்றிருந்தது. பேருந்து மெல்ல நகர ஆரம்பித்ததும். இருவரின் நினைவுகளும் வெவ்வேறு திசையில் இலக்கில்லாமல் பறந்து திரிய ஆரம்பித்தது. பேருந்தில் கூட்டம் ஏறியதையும் அது இப்போது எங்கே நகர்ந்துகொண்டிருக்கிறது என்பதையும் உணராமலேயே பயணித்துக்கொண்டிருந்தனர்.

விஜயாவின் நினைவுகள் முழுக்க அவள் வாழ்க்கையின் கொடுமையான நாட்களில் சுழன்றுகொண்டிருந்தது. அதைப் பற்றி நினைக்கும்போதெல்லாம் அவள் இதயத்துடிப்பு அதிகரிப்பதை எப்போதும் உணர்வாள். அந்நினைவுகளை விட்டு வெளியேறும் ஒவ்வொரு தடவையும் அவள் உடல் முழுக்க வியர்த்துக்கொட்டியிருக்கும். இப்போதும் அவள் உடல் வியர்த்துக்கொண்டுதான் இருந்தது.

*

விஜயாவிற்கு குழந்தைப் பிறந்திருந்த நேரம். மழைப் பொய்த்து அந்த ஆண்டு கடுமையான பஞ்சத்தில் ஊரே துவண்டிருந்தது. கடன் கொடுக்கும் நிலையில் தெரிந்தவர்கள், உறவினர்கள் என யாரும் இல்லை. இருப்பவர்கள் கூட அநியாய வட்டிக்குக் கொடுத்துக்கொண்டிருந்தனர். அசலுக்கே வழியில்லாத சூழலில் எங்கே வட்டிக்கட்டுவது என்று குழம்பினர். எதுவுமே முடியாத ஒரு  சூழலில் குழந்தையின் மருத்துவ அவசரத்திற்கு சுப்பையா திருட வேண்டியதாகிவிட்டது.

குழந்தையின் உயிரைக் காப்பாற்றத்தான் என்றாலும் திருட்டு திருட்டுதான் என்று அவர் உணர்ந்தேயிருந்தார். திருட்டுக்கொடுத்தவரிடம் ஊர்க்காரர்கள் சிலர் சுப்பையாவைப் பற்றியும் அவர் நிலைமையை பற்றியும் எவ்வளவு எடுத்துச் சொல்லியும் அவர் வழக்கை வாபஸ் வாங்க மறுத்துவிட்டார். பிறகு திருடியதை ஒப்புக்கொண்ட சுப்பையா அதற்காகக் கைது செய்யப்பட்டு ஆறுமாதம் சிறை சென்று வந்தார். அந்த ஆறு மாதம் தான் விஜயாவை துடிக்கவைத்தக்காலம். எத்தனை பொழுதுகள் பட்டினி, குழந்தைக்குக் கொடுக்க ஒன்றுமில்லாமல் அவள் அடைந்த துயரம் என்று அப்போது அவள் அழாத நாட்கள் இல்லை. அவமானத்தின் ஊசி ஒவ்வொரு நொடியும் அவளைக் குத்திக்கொண்டேயிருந்தது. பல நேரங்களில் குழந்தையைக் கொன்றுவிட்டு தானும் செத்துவிடலாம் என்று அவளுக்கு தோன்றும். ஆனால் தாங்கள் சாகவா தன் கணவன் திருடினான். எப்பாடு பட்டாவது தங்களைக் காக்கவே அவன் அவ்வாறு செய்தான். அதனால் அவள் வைராக்கியத்துடன் சப்பையா வரும் வரை காத்திருந்தாள்.

ஆனால், அவர்கள் எதிர்பார்த்தது போல் எதுவும் நடக்கவில்லை. சுப்பையா வரும் வரை ஊர்க்காரர்கள் விஜயாவை ஓரளவு கவனித்துக்கொண்டனர். தர்மசங்கடத்துடன் ஊர்க்குள் வந்த சுப்பையாவையும் யாரும் எதுவும் பேசவில்லை. ஒருசிலர் பேசினாலும் சுப்பையாவின் எதிரில் அமைதியாக இருந்தனர். அதன் பிறகு அனைவரும் அதை மறந்தேவிட்டார்.

ஆனால், சுப்பையாவும் விஜயாவும் மாட்டும் அவ்வப்போது அதை நினைத்துக்கொள்வர். பலநேரங்களில் அது அவர்கள் கனவிலும் துரத்தும்.

*

பேருந்து புதுச்சேரி புது பஸ் ஸ்டாண்டிற்குள் நுழைந்த போதுதான் இருவரும் சுய நினைவிற்கு வந்தனர். விஜயா முழுக்க நனைந்திருந்தாள். சுப்பையா சிரித்துக்கொண்டே அவளிடம், “இந்தாண்ட உக்காந்ததுக்கே இப்புடி நனஞ்சிருக்குது… அந்தாண்ட உக்காந்திருந்தா அவ்ளோதான்…”

விஜயா பதிலேதும் பேசாமல் பஸ்ஸிலிருந்து இறங்கி தன் முந்தானையில் முகத்தைத் துடைத்துக்கொண்டாள். பிறகு இருவரும் பேருந்து நிலையத்தின் வேறு பகுதிக்குச் சென்று பெரியாஸ்பத்திரி போகும் பேருந்தில் ஏறி அமர்ந்துகொண்டார். பேருந்தில் ஓட்டுநர் நடத்துநர் இருவருமே இல்லை. சுப்பையா சலிப்புடன், “இவனுங்க எப்ப வந்து, எப்ப எடுக்கறது. எடுத்தாலும் வண்டிய உருட்டிகினுதான் போவானுங்க…”

“இப்ப அர்ஜண்ட்டா போயி இன்னா பண்ணப்பெற…”

“பொழுதன்னிக்கி வூட்டுக்கு போவ வேணாமா… மனசுல இன்னா சின்னப்பொண்ணுன்னு நெனப்பா…”

 “நாமலே என்னிக்கினாதான் வரோம்… இரண்டு எடம் பாத்துட்டு போனாத்தான் இன்னா…”

“க்கும்… அப்பறம் ராத்திரிக்கி வந்து முட்டி நோவுது, இடுப்பு நோவுதுன்னு என் உசுரெடுப்பா…”

விஜயா பதிலேதும் சொல்லாமல் ஜன்னல் வழியாக வேடிக்கைபார்க்கத் தொடங்கினாள்.

வெவ்வேறு பேருந்தின் அருகில் அதன் செக்கர்கள் நின்றுகொண்டு ஊர்ப்பெயர்களைச் சொல்லிக் கத்திக்கொண்டிருந்தனர். பேருந்து எப்போது நகர்ந்து காற்று வரும் என்று விஜயா நினைத்துக்கொண்டாள். ஒருவழியாக ஓட்டுநர் வந்து பேருந்தை இயக்கினான். ஆனால், நகர்த்தவில்லை. இவர்களுக்கு எல்லாமே கணக்குதான். சரியான நிமிடத்திற்குத் தான் எடுப்பார்கள். பேருந்து நிரம்பிக்கொண்டிருந்தது. பிறகு மெல்ல நகரத்தொடங்கியது. டவுனுக்குள் ஓடும் பேருந்துகளில் போவது எப்போதும் வித்தியாசமான அனுபவம் தான். ஒவ்வொரு கடையாக நடந்து வேடிக்கைபார்த்துக்கொண்டே போவது போலத்தான் இருக்கும். பெரியாஸ்பத்திரி வரைக்குமே இப்படித்தான் போவார்கள். சரியாக பத்தாரை மணிக்கு இருவரும் பெரியாஸ்பத்திரி நிருத்தத்தில் இறங்கினர்.

அவர்கள் எப்போது டவுனுக்கு வந்தாலும் ஒரு அரைமணி நேரம் கடற்கரையில் எங்காவது அமருவார்கள். இதுநாள் வரையில் அது அவர்கள் வாழ்க்கையில் எழுதப்படாத சட்டம் போலவே நடந்துகொண்டிருக்கிறது. முதல் வேலையாகவே அதைச் செய்துவிடுவார்கள். பெரும்பாலும் அவர்கள் பெரிய மார்க்கெட்டுக்குத் தான் வருவார்கள் என்பதாலும் எல்லாமே அருகருகே நடக்கும் தூரம் தான் என்பதாலும் அது ஒன்றும் கஷ்டமாக இருப்பதில்லை.

மெல்லக் கடலை நோக்கி நடக்கத் தொடங்கினர். மருத்துவமனையைத் தாண்டியதும் மனித நடமாட்டம் மெல்லக் குறையத் தொடங்கியது. இதுவரை தெரிந்த ஊரின் தோற்றம் முழுவதுமாக மாறியிருந்தது. அவர்களுக்கு எப்போது இந்த இடத்தில் ஒரு அந்நியத்தன்மை மனதில் குடிவந்துவிடும். வேறு ஏதோ பிரதேசத்துக்குள் நுழைந்துவிட்ட ஒரு உணர்வு. பெரும்பாலும் பிரஞ்ச்காரர்களும் ஆசிரம காரர்களும் நடமாடும் பகுதி. விடுமுறை நாட்களின் மாலை வேளையில் தான் ஊர்க்காரர்களின் முகங்கள் அதிகம் தென்படும். இருவரும் சற்று நெருக்கமாகவே நடந்தனர். கடற்கரை சாலைக்கு இரண்டு தெருவுக்கு முன்னால் வலதுபுறம் திரும்பினர். அவர்கள் வழக்கமாக இந்தப்பக்கம் வரும்போதெல்லாம் அங்கிருக்கும் போலிஸ் கேண்டீனில் எதாவது சாப்பிட்டு டீக்குடிப்பார்கள். பிறகு கடற்கரைச் சாலையில் நிழலாக இருக்கும் எதாவது ஒரு இருக்கையில் சிறிது நேரம் அமர்ந்துவிட்டுப் புறப்படுவார்கள். இந்த நேரத்தில் பெரும்பாலும் அவர்கள் எதுவும் பேசிக்கொள்வதில்லை.

கடற்கரையிலிருந்து இருவரும் புறப்பட்டனர். பூங்கா வழியாக இருவரும் நடந்து சென்றனர். திடீரென்று விஜயா, “புள்ளார் கோயிலுக்கு போயிட்டு போவோமே…” என்றாள்.

சுப்பையா எதுவும் பேசாமல் பிள்ளையார் கோவிலை நோக்கி நடந்தனர். பெண்ணிற்கு நல்லபடியாகப் பிரசவம் நடக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டனர். வாசலிலிருந்த யானையிடம் ஆசீர்வாதம் வாங்கிக்கொண்டனர். பிறகு பெரிய மார்க்கெட்டை நோக்கி நடக்கத் தொடங்கினர்.

“இன்னாலாம் வாங்கனும்னு நெனப்புல இருக்குதுல்ல…” என்றார் சுப்பையா.

“இருக்குது இருக்குது… ஏன்….”

“நீ இன்னா இப்போ பொருளு வாங்கவா வந்துகிற… உன் நெனப்புலாம் வேற எதுலயோ தான் இருக்குது…”

“எதுல இருந்த உனக்கின்னா… உன் வேல ஆவுதான்னு மட்டும் பாரு…”

“செரி செரி… முடிஞ்சா ஆயாவுக்கு ஒரு வாயில் பொடவ எடுத்துடலாம்…” என்றார்.

அவள் சரியென்று தலையாட்டினாள்.

இருவரும் காந்தி வீதி நேரு வீது சந்திப்பில் இருந்த நுழைவாயிலில் நுழைந்தனர். பெரிய மார்க்கெட்டுக்கு மூன்று நுழைவாயில்கள் இருந்தன. காந்தி வீதியில் ஒன்று, நேர் எதிரில் பாரதி வீதியில் ஒன்று பக்கவாட்டில் நேரு வீதியில் ஒன்று. இருவரும் மார்க்கெட்க்குள் சுற்றி தேவையான பொருட்களை ஒவ்வொன்றாகப் பேரம் பேசி வாங்கிக்கொண்டிருந்தனர். ஆனால் சுப்பையாவின் மனதில் எப்படியாவது இப்படியே விஜயாவை வீட்டிற்கு அழைத்து சென்றுவிட வேண்டும் என்றே ஓடிக்கொண்டிருந்தது. ஆனால் விஜயா பிடித்த பிடியில் உறுதியாக இருப்பாள் என்று அவருக்குத் தெரிந்தே இருந்தது. எப்படியாவது பாரதி வீதி நுழைவாயில் பக்கமாக இவளை நகர்த்திக்கொண்டு சென்றுவிட்டாள் அப்படிச் சென்றுவிடலாம் என்று கணக்குப்போட்டார்.

விஜயா ஒவ்வொன்றையும் நின்று நிதானமாக பேரம் பேசிவாங்கிக்கொண்டிருந்தாள். அவள் கவனம் முழுக்க பொருட்கள் வாங்குவதில் குவிந்துவிட்டதோ என்று அவருக்கு தோன்றியது. எப்படியாவது இங்கிருந்து சென்றுவிட்டால் போது எனத் தவித்துக்கொண்டிருந்தார். விஜயா வாங்கும் ஒவ்வொரு பொருட்களுக்கும் பணத்தைக் கொடுத்துக்கொண்டு பின்னாலேயே சென்றுகொண்டிருந்தார். பை நிரம்பிக்கொண்டிருந்தது. கனத்தைத் தூக்கிக் கொண்டு நடக்க முடியாமல் இருவரும் நடந்தனர்.

“பூ அந்த கடைசிலதான் இருக்கும் என்று அவளை நகர்த்திக்கொண்டு சென்றார். விஜயா எதுவும் பேசாமல் அவருடன் சென்று தேவையானப் பூக்களை வாங்கிக்கொண்டாள். இவர் மெதுவாக வெளியேற முயல, விஜய அவர் கையைப் பிடித்து இழுத்துத் திரும்ப  மார்க்கெட்டுக்குள் நகர்ந்தாள். இவள் விடமாட்டாள் போல என்று நினைத்துக்கொண்டு அவளுடன் நடந்தார். இருவரும் நேரு வீதி நுழைவாயிலை நோக்கி நடந்தனர். இருவருக்குமே இதயத்துடிப்பு அதிகரிக்கத் தொடங்கியது. நடையின் வேகம் குறைவதை உணர்ந்தனர். அந்த நுழைவாயிலின் அருகிலிருந்த பழக்கடைக்காரர்களின் குரல்கள் எதுவும் அவர்கள் காதுகளில் விழவேயில்லை. இருவருமே நினைவுகளின் அலைகளில் மிதந்துகொண்டிருந்தனர். மெல்ல மார்க்கெட்டைவிட்டு வெளியே வந்தனர். எதிரில் புதுச்சேரியின் பழைய மத்திய சிறைச்சாலை இருந்தது. 

*

சுப்பையாவின் உடல் நடுங்கியது. அவர் சிறையிலிருந்து விடுதலையான பிறகு பல முறை இந்த வழியே வந்துள்ளார். சில முறை விஜயாவுடனேயே கூட வந்துள்ளார். ஆனால் அப்போதெல்லாம் எதுவும் பெரிதாகத் தோன்றியதில்லை. பெரும்பாலும் அந்த சமயங்களில் அவர்கள் எதுவும் பேசிக்கொள்ள மாட்டார்கள். ஆனால் இப்போது அப்படியில்லை. இருவருமே ஒருவித பதட்டத்திலிருந்தனர். எதிரில் இருப்பது இப்போது சிறைச்சாலை இல்லை. புதிய சிறைச்சாலை வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுவிட்டது. இப்போது இது வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிவிட்டாது. யார் வேண்டுமென்றாலும் உள்ளே சென்று வரலாம். இந்த செய்தியைக் கேட்டதிலிருந்து தான் விஜயா அடம்பிடித்துக்கொண்டிருக்கிறாள். உள்ளே சென்று தன் கணவன் இருந்த சிறையைப் பார்த்தே ஆக வேண்டும் என்று அவள் வீம்பாக இருந்தாள். ஆனால் இதை அவள் சுப்பையாவைத் தவிர யாரிடமும் சொல்லவில்லை. தனக்காகவும் தன் குழந்தைக்காகவும் சுப்பையா கஷ்ட்டப்பட்ட இடத்தை தான் ஒரு முறையாவது பார்த்தே ஆக வேண்டும் என்று சிறைச்சாலை வாகனம் நிறுத்துமிடமாக மாறியதிலிருந்து கேட்டுக்கொண்டே இருந்தாள். ஒரு கட்டத்தில் விஜயாவின் வேண்டுகோளை நிராகரிக்க முடியாத நிலையில் சுப்பையாவும்  அவளும் இன்று இங்கு வந்துள்ளனர்.

இருவரும் சிறிது நேரம் அதன் வாயிலையே பார்த்துக்கொண்டிருந்தனர். இருசக்கர வாகனங்கள் உள்ளே சென்றுகொண்டும் வந்துகொண்டும் இருந்தது. நகருக்கு மத்தியில் ஒரு சிறைச்சாலை என்பதையே பல நேரம் வியப்புக்குரிய ஒன்றாகவே இருந்தது. இருவரும் மெல்ல அதன் வாயிலை நோக்கி நடந்தனர் விஜயா முழுவதும் வியர்வையில் நனைந்திருந்தாள். வெய்யிலும் நன்றாக உச்சிக்கு ஏறியிருந்தது. தங்களை கடந்து செல்லும் வாகனங்களால் இருவரும் சிறிது தடுமாறினர். தயங்கி தயங்கி மெல்ல உள்ளே நுழைந்து நடு சிறைக்குச் சென்று சுற்றி அதனை வேடிக்கை பார்த்தாள். சுப்பையாவிற்கு எதையுமே பார்க்கப் பிடிக்கவில்லை. அவர் விஜயாவையே பார்த்துக்கொண்டிருந்தார். அவள் ஒவ்வொரு அறையாக, ஒவ்வொரு செங்கல்லாக பார்த்துக்கொண்டிருந்தாள். வாகனங்களை நிறுத்திவிட்டுப் போவோர்களும் எடுக்க வருபவர்களும் இவர்கள் விநோதமாக பார்த்துவிட்டுச் சென்றனர்.

விஜயாவின் கண்களில் எப்போது வேண்டுமென்றாலும் கண்ணீர் கொட்டிவிடக் காத்திருந்தது. அவளையறியாமல் அவள் சுப்பையாவின் கையை பிடித்துக்கொண்டாள். இனி உன்னை எப்போதும் விட்டுவிடமாட்டேன் என்ற ரீதியில் இருக்கமாக இருந்தது அவள் பிடி. மெல்ல சுப்பையாவிடம், “நீ எந்த ரூம்ல இருந்த…” என்றாள்.

“ரூமா… இது இன்னா லாட்ஜா…”

“கேக்கறன்ல…”

அவர் விஜயாவை அழைத்துக்கொண்டுபோய் ஒரு இருட்டு அறையைக் காண்பித்தார். அது பூட்டியிருந்தது. கிட்டச் சென்று பார்த்தாள். இருட்டாக இருந்தது. எதுவும் சரியாகத் தெரியவில்லை. ஜன்னல் இல்லை. இரவில் வெளிச்சம் என்று எதாவது நுழையுமா என்று தெரியவில்லை. மெல்லப் பின்னோக்கி வந்தவள் அழ ஆரம்பித்தாள். சுப்பையாவிற்கு தர்மசங்கடமாக இருந்தது.

“இதுக்குத்தான் நான் வேணாம்னு சொன்னேன்… எதுக்கு இப்போ அசிங்கமா அழுதுகினு இருக்க… எப்பவோ ஆச்சு, முடிஞ்சி போச்சி… நான் இன்னா சொம்மாவா வந்தேன்… தப்பு பண்ணிட்டு தான வந்தேன்… கம்முன்னு வா போலம்…”

விஜயா அழுதவாறே சொன்னாள். “அன்னிக்கி நீ பண்ணத் தப்புதான் ஒரு உசுர காப்பாத்துச்சு… அதுதான் இன்னிக்கி இன்னொரு உசுர பெக்கப்போவுது…”

சுப்பையா அமைதியாக இருந்தார். பின்பு மெல்லச் சொன்னார். “இன்னா இருந்தாலும் திருடனது தப்புதான…”

விஜயா அவரை முறைத்தாள்.

“செரி மொறைக்காத… மணியாயிடிச்சி… பசிக்குது வா… எதுனா வவுத்துல போட்டுகினு வூடு போயி சேருவோம்… அதான் பாத்தாச்சுல…”

முற்றும்.