ஆரஞ்சு  வண்ணத்  தீற்றலின்  ஓரத்தில்  தங்க  சரிகை  இழையோடியது போலிருந்தது  மாலை  வானம். அந்தி  சாய்ந்து  இரவு  வந்ததும் கருநீலப்  பட்டில்  வைரங்கள்  பதிக்கப்பட்டதுபோல  நட்சத்திர  துணுக்குகள்  வானத்தில்  ஒட்டிக்கொண்டிருந்தன.  

விதவிதமான  தோற்றம்  காட்டிய  வானத்தை  நான்  ரசித்துக்  கொண்டிருந்தேன். சன்னலின்  கம்பியை  அழுந்த  பற்றியபடி  வானத்தைப்  பார்த்ததில்  என்  விரல்கள்  சிவந்திருந்தன. கடந்த  நான்கு  நாட்களாக  இப்படி  எதையாவது  ரசிப்பதும், மனதுக்குப்  பிடித்த  பாடலை  ஹம்  செய்தபடி  வீட்டிற்குள்  வளைய  வருவதும்  எனக்கு  வாடிக்கையாகிவிட்டிருந்தது. லாவண்டர்  நிறப்பூக்கள்  மிதந்த  திரைச்சீலை, அடித்த  காற்றுக்கு  என்னை  உரசி  விலகியது.

” லாவண்டர்  கலர்  எனக்கு  ரொம்பப்  பிடிக்கும். நான்  பொண்ணு  பார்க்க  வந்தப்ப  நீ  அதே  கலர்  புடவை  கட்டியிருந்த. நான்  யோசிக்காம  தலையசைச்சிட்டேன். “

அவர்  முதலில்   பேசிய  பேச்சு  ஞாபகத்துக்கு  வந்தது. நான்  திரைச் சீலையை  சீராக  இழுத்துவிட்டேன்.

நிலவின்  வெளிச்சத்தைப்  பிழிந்து, வடிகட்டி  மெலிதான  ஒளியை  அறைக்குள்  அனுப்பி  எங்களின்  இரவுகளை  சொர்க்கமாக்கிய  திரைச்சீலை  எத்தனை   இரவுகள்  இழுத்துவிடப்படாமலே  கிடந்து  நொந்திருக்கிறது. ஏனோ  என்னையுமறியாமல்  பெருமூச்சு  கிளம்பிற்று.  நான் பிரிட்ஜைத்  திறந்து  ஐஸ்வாட்டர்  பாட்டிலை  எடுத்து  வாயில்  கவிழ்த்துக்கொண்டேன்.  சிலீரென்று  உள்ளேப்   பாய்ந்த  நீர்  ஒருவித  ஆசுவாசத்தைத்  தர, இரவு  விளக்கை  ஒளிரவிட்டு  படுக்கையில்  சரிந்தேன். மின்விசிறியின்  வேகத்தைக்கூட்டியதில்  அதன்  கிரீச்சொலி  அறையில்  உழலும்  மௌனத்தைத்  துடைத்துப்  போட்டது.

” இது  எப்போலேருந்து  இப்படி  கத்துது….?”

அவர்  கேட்டபோது,

” நீங்க  என்னை  விட்டுப்  போனதும்  நான்  அழுத  அழுகை  பொறுக்காம  இது  முனக  ஆரம்பிச்சிடுச்சு…’ என்று  சொல்ல  நினைத்து  நான்  வாயை  மூடிக்கொண்டேன்.

விரிந்து  கிடந்த  என்  கூந்தல்  மெத்தையில்  அலையலையாய்  பரவியிருந்தது. பின்  உச்சியில்  கிளிப்  சொருகி  கூந்தலை  முதுகில்  படரவிடுவது  அவருக்கு  மிகவும்  பிடிக்கும். 

” முடியை  விரிச்சுப்  போட்டுக்கிட்டு  அலையக்கூடாது. அது  அபசகுனம்” என்பாள்  அம்மா.

அதனால்  எண்ணெய்  தடவி  வழுவழுவென்று  பின்னிக்கொள்ளும்  நான், அவருக்காக  அந்தப்  பழக்கத்தை  அடியோடு  தவிர்த்திருந்தேன்.

” எனக்காக  உன்  பழக்கத்தை  மாத்திக்கிட்டியே. உனக்காக  நான்  ஏதாவது  செய்யணும்னு  நினைக்கிறேன். சொல்லு ” என்று  அவர்  ஒருமுறை  கேட்டபோது,

‘ நீங்க  எனக்கானவரா  கடைசிவரை  இருக்கணும் ‘ என்று  சொல்ல  நினைத்து  அது  அபத்தமாக  தோன்றவே,

” யோசிச்சு  சொல்றேன் ” என்று  கூறிவிட்டேன். சூழ்நிலை  மாறும்  என்பதில்  எவ்வித  ஐயமும்  தோன்றாததில்  சொல்வதற்கு  அவசியமென்ன  என்று  அப்போது  தோன்றிற்று.

நான்  புரண்டு  படுத்தபோது  கொலுசிலிருந்த  வெள்ளி  மணிகள்  சப்தமிட்டன. மெட்டியிலும்  மூன்று  மணிகளுண்டு. அவையும்  நடக்கும்போது  சப்தமிடும். ஒவ்வொரு  நடைக்குமான  அவைகளின்  சிலுசிலுப்புகள்  அவரின்  ரசிப்புத்  திறனைக்  கூட்டிக்  கொண்டிருந்ததாக  அவர்  ஒருநாள்  சொன்னார். நான்  மலையுச்சியிலிருந்து  வழியும்  வெள்ளிக்  குழம்பென  உருகி  வழிந்தேன்.

சுமார்  நான்கு  வருடங்கள்  மெல்லுணர்வுகளோடு  நுரைத்துத்  ததும்பிய   இளமை  எங்களைத்  தன்  கட்டுப்பாட்டில்  வைத்திருந்தது. இப்போது  அந்த  மாதிரியானதொரு  சந்தர்ப்பம்  உருவாகவே  நான்  விரும்பினேன்.

” எனக்கு  அவளைப்  பிடிச்சிருக்கு.”

“…………………”

” அவளை   மறக்க  முடியாது.”

“………………..”

” அவ  இல்லாம  என்னால  வாழமுடியாது.”

“……………….”

சொல்லிச்  சென்ற  அவருக்கு  அவளே  உலகமாகிப்போனபோது  என்னுலகம்  இருளுக்குள்  அமிழ்ந்து  போனது.

வர்ணக்கலவைக்குள்  குழைந்து  கிடந்த  என்  நாட்கள்  நிறமிழந்தன. நீலம்  உறைந்த  என்  வானம்  நிலவு, நட்சத்திரங்களை  உதிர்த்துப்போட்டது. என்  பெருமூச்சின்  உஷ்ணம்  காற்றில்  அனல்  காய்ச்சிற்று. 

” நான், அவளை  விட்டு  வந்துட்டேன்.”

“…………………..”

” இனிமே  என்னால  அவளோட  இருக்கமுடியாது.”

“…………………..”

” எனக்கு  அவளைப்  பார்த்தாலே  பிடிக்கலை.”

“…………………..”

” நான், அவளை  அடியோட  வெறுக்கறேன். “

“…………………..”

” எனக்கு  நீ  போதும்.”

நான்கு மாதங்கள்  கழித்துத்  திரும்பி   வந்தவர் உதிர்த்த  வார்த்தைகளில்  நான்  உயிர்  மீண்டேன். குழைவான  வெல்லப்பாகு  பதத்தில்  மனம்  தளதளத்தது. இறுகிக்கிடந்த  தன்மைக்கு  முற்றிலும்  மாறாக  அது  இளகி  வழிந்தது. நான், அவரை  இறுகத்  தழுவிக்  கொண்டேன். 

கொல்லைக்  கிணற்றின்  சுற்றுச்சுவரில்  அமர்ந்து, அதைப்  பற்றியெல்லாம்  இனி  பேசவேண்டாம், போனது   போகட்டும்  என்று நான் அழுத்தமாக சொன்னபோது  கிணற்று நீரில் கிடந்த நிலவு மெல்லச் சிரித்தது.

மல்லிகைப் பந்தலில் படர்ந்திருந்த கொடியில் குபீரென்று மலர்ந்திருந்த பூக்கள் தாங்கள் பருவமடைந்து விட்டதை மறைக்க முயன்று தோற்றன. அவர் பூக்களைக் கொய்து இரு கைகளால் ஏந்தி வந்து என்மீது சொரிந்தார். கருப்பில் தாழம்பூ கரை சரிகையிட்ட பட்டுப்புடவையில் பூக்கள் சிதறி விழுந்தன.

” என் மேல உனக்கு கோபமிருக்கும். நான் செய்தது அநியாயம் “என்ற அவரை நான் மேலே பேசவிடாது தலையசைத்தேன்.

சில நாட்களாக இருண்டு கிடந்த வானத்தில் இப்போது நட்சத்திரங்களும், நிலவும் பூக்கத் தொடங்கி விட்ட பிறகு இருளின் தன்மையை ஆராய்ந்து மன வேதனை அடைய எனக்கு விருப்பமில்லை. உயிரினும் மேலானது திரும்பக் கிடைத்துவிட்டதை எண்ணி நான் பெருமகிழ்வுற்றேன். கிணற்று நீரின் சில்லிட்ட தன்மையை ஒத்திருந்தது என் நிலை. உடலும் குளிர்ந்து கிடந்தது. அவர், என்னைத்  தன் வலிய கரங்களுக்குள் அடைக்கலப்படுத்திக் கொண்டார். நான் கதகதப்பாய் உணர்ந்தேன். அந்த உணர்வுக்காக நான் ஏங்கிய நாட்கள் என் நினைவுக்கு வந்தன. அதைக் கட்டாயமாக புறந்தள்ளிவிட்டு அவர் தோளில் தலைசாய்த்துக் கொண்டேன்.

பதினொன்றடிக்க இருபது நிமிடங்களிருந்தன. நான் கசங்கிக் கிடந்த மெத்தை விரிப்பை சீராக்கினேன். அலைபேசியில்  குறுஞ்செய்திகள்  கொட்டி  வழிந்தன. ஏனோ பார்ப்பதற்கு விருப்பமில்லை. அவரின் வருகையில் ஆவல் கொண்டு அழைப்புமணி சத்தம் கேட்டதும் ஓடிச்சென்று கதவு  திறக்க தயாராயிருந்தேன். 

வந்ததும் குளிர, குளிர ஒரு கிளாஸ் தண்ணீர் கொடுத்து, உடை  களைய உதவி, வேண்டுமானால் கால் பிடித்துவிட்டு………ஓ……. இருபத்தியோராம் நூற்றாண்டு பெண்மணி இல்லை நீ என்று யாராவது கூறினாலும் அது பற்றி கவலைப்பட போவதில்லை. நான் தோள்களை குலுக்கிக் கொண்டேன்.

செண்பகப் பூவின் மலர்ந்த வாசம் என்னைக் கிறங்கடித்தது. வாசல் பக்கம் இருந்த செண்பகமரம் திருமணமான புதிதில் அவர் வைத்தது. சிறுதளிராக அவர் நட்ட செடி விறுவிறுவென வளர்ந்து விட்டாலும் அதில் வெகு சொற்ப பூக்களே பூத்தன. தினம் பூக்கும்  நான்கைந்து பூக்களின் வாசம் காற்றில் ஊடுருவி கலந்து அவர் இல்லாத தருணங்களில் அவரின் நினைவுகளைக் கிளர்ந்தெழச் செய்தன.

”  உன்னை விட்டுட்டு அவகூடப் போனவனை நினைச்சு நீ எதுக்கு அழற…….அவன் நினைப்பை தொலைச்சு தலைமுழுகிட்டு புது வாழ்க்கைக்கு தயாராகு”  என்று  அம்மா கோபத்தில் பேசிய போது அமைதியாக இருந்த எனக்கு அவர் திரும்ப வருவார் என்கின்ற எண்ணம் திடமாக இருந்தது.

மனதின் ஓரத்தில் மினுக்கிய  ஒரு ஒளி, அது எப்போதும் ஒளிர்ந்து கொண்டேயிருந்தது. உயிரின் கூட்டுக்குள் இழைந்தோடும் உயிர் என்னுள்  மட்டும் பாதரசமணியாய் உருண்டோடிக்கொண்டிருந்தது. அவருடனான பகல்களும், இரவுகளும் ஒரு ஒளிப்படக் காட்சியாய்  என் கண் முன்னே விரிந்தன. மனவெளியில் விரியும் காட்சிகள் கொஞ்சம் அந்தரங்கமானவை. அறைக்குள் நடக்கும் நிகழ்வுகளை சாயம் ஏற்றாமல் வீசி எறியும் மனம். அவைகளை ஒளிக்கற்றைகளாக்கி விசிறி மடிப்புகள் செய்து  திரும்பவும் மனப்பேழைக்குள் பத்திரப்படுத்திக் கொண்டேன். 

வேண்டும்போது குப்பியைத் திறந்து வாசனை திரவியத்தை நுகர்வது  போல மனப்பேழையைத் திறந்து இரவுக் காட்சியை ஒளிரவிட்டு  மயிர்க்கூச்செறிந்தேன் . வெளிப்புற கிரில் கதவு கிறீச்சிடும் தருணத்துக்காக நான் ஏங்கிக்கிடந்தேன். முடிவற்ற பகல்களும், இரவுகளும் என்னை பயமுறுத்தின. இளமஞ்சள் வெயிலும் உக்கிர மதியமும் கூடும் பொழுதுகளில் அவரின் அருகாமையை உணர்ந்து வெம்மையடைந்தேன். 

” இன்னொருத்தி கிட்ட போனவனைப் பத்தி இனி யோசிக்கிறதுக்கு எதுவும் இல்லை. அவனை மறந்திடு…..”

அம்மா இதமாய் சொல்லிப் பார்த்தாள். 

வைரம் எவரிடமிருந்தாலும் அதன் மதிப்பு குறைவதில்லையே.  சொன்னால் அம்மாவுக்குப் புரியாது என்பதால் நான் மவுனமாய் இருந்தேன். 

ஒவ்வொரு இரவும் கொல்லைக் கிணற்று சுற்றுச்சுவரில் அமர்வது வழக்கமாகி விட்டிருந்தது பளிங்கு நீரில் விழும் நிலவு எங்கள் ஊடலின்றி  சோகமாய்க் கிடந்தது. 

அதற்கொரு சம்பவத்தை ஞாபகப்படுத்த விழைந்தது மனம். அன்றொரு நாள் பாசிபடர்ந்த, கிணற்றின் பக்கவாட்டுத் தளத்தில் நிகழ்ந்த அந்த கூடுகை ஆயிரம்  நட்சத்திரங்களின் பார்வையில் அரங்கேறியதை நினைவூட்டிய போது நிலவு தன்னை மறந்து சிரித்தது. முதுகில் சில்லிட்ட நீர் கண்ணாடித் துண்டுகளாகி காட்சியை பிரதிபலிக்குமோ என்றெண்ணி அப்போது  அஞ்சிய எனக்கு மல்லிகைப்   பூக்களின் சுகந்த மணம் சற்று ஆறுதலா யிருந்தது.

சரியாக நான்கு மாதங்கள் கழித்து அன்று மாலை கிரில் கதவு திறக்கப்படும் சத்தம் கேட்ட போது எனக்குள் சுருண்டிருந்த உயிர்ச்சுருள் மெதுவாக உடலெங்கும் பரவி,  அடர்ந்து மயிர்க்கால்களை குத்திட வைத்தது.

அவரின் கைவிரல்கள் எனது இடையை அழுந்த பற்றியபோது கொதிகலனுக்குள் குதித்தது போல உடல் கொதித்தது. 

” உனக்கு, நான் செஞ்ச துரோகத்துக்கு நீ என்னை என்ன செய்யப் போற……?”

அவர் முகம் பார்க்கக் கூசி தலைகுனிந்து நின்று கேட்டார். 

“இன்னொரு பிறவியிலும் உங்களுக்கு மனைவியா வந்து தொல்லை பண்ணப்போறேன்.” 

நான் குறும்போடு கூறினேன். அவர் திகைத்துப் போனார். அதன் பிறகு இரண்டு நாட்கள் வரை குற்ற உணர்வோடு தவித்துக்கொண்டிருந்தவரை நான் சமாதானப்படுத்த வெகுபிரயாசைப்பட்டேன். அன்றிரவு குளிர்ந்த காற்று வீசிய பொழுதில் அவரை அழைத்து வந்து கிணற்றுச்சுவரில் அமர வைத்தேன்.

செந்தழல்களாய் சிவந்திருந்த என் மருதாணி விரல்களால் கன்னம் வருடிய போது அவர் விழியிலிருந்து உதிர்ந்த துளிகள் பட்டு  என் விரல்கள் இரண்டு மாணிக்கங்கள் போல் ஒளிர்ந்தன. நான் பாய்ந்து அவரை அணைத்துக் கொண்டேன். அன்று இரவு நிலவு எங்களின் அன்யோன்யத்தை வெகுவாக ரசித்தது.

கேட் கிரீச்சிடும் சத்தம் கேட்க நான் படுக்கையிலிருந்து பாய்ந்தெழுந்தேன்.  ஜன்னல் கம்பிகளின் வழியே அவரின் பிஸ்தா  கிரீன் சட்டை தெரிய, மனம்  உற்சாக துள்ளல் போட்டது. அவசரமாய் கண்ணாடியில் முகம் பார்த்துக் கொண்டேன். பாலேடு தேய்த்து  பளபளப்பாக்கியிருந்ததில் முகம் ஸ்படிகம் போல ஜொலித்தது.

வலது கன்னத்தின் மையத்தில் துளிர்த்திருந்த பரு கூடுதல் அழகைத் தந்தது போல எனக்குத்தோன்றியது.  மயில்கழுத்து வண்ணப் புடவையில் நூல் புட்டாக்களின் சிதறல் நிச்சயம் அவருக்குப் பிடிக்கும் என்ற எண்ணத்தோடு கதவைத் திறந்தபோது அவர் மந்தகாசமாய் புன்னகைத்து  நின்றிருந்தார்.

  • ஐ.கிருத்திகா.