அ.ராமசாமி

டிஸ்கவரி புக்பேலஸின் நிலவெளி என்ற அச்சிதழின் நீட்சியாக வரும் ‘நகர்வு’ இணைய இதழ் தனது மூன்றாவது இதழைப் பெண்கள் சிறப்பிதழாகப் பதிவேற்றம் செய்துள்ளது. கவிதை, கதை, நூல் மதிப்புரை எனப் பெண்களின் எழுத்துகள் இடம்பெற்றுள்ளன. அதில் வரிசைப்படுத்தப்பெற்றுள்ள சிறுகதைகள்:       

  1. உமா மகேஸ்வரி – மோனா
  2. குதிரைச்சவாரி – நறுமுகை தேவி
  3. கொலப்பசி – நாச்சியாள் சுகந்தி
  4. பிடிமானக்கயிறு – அகிலா
  5. மறைப்பு – ப்ரியா
  6. உள்ளங்கை அல்லி – அம்பிகாவர்ஷினி
  7. வெள்ளைப்பூனை – லாவண்யா சுந்தரராஜன்

வாசிப்பைக் கட்டுப்படுத்துவது அல்லது கவனத்தைக்குவிப்பது என்பதற்குச் சில வழிகள் உண்டு. வாசிப்பவர்களுக்கு வழிகாட்டக்கூடும் என நினைத்து நூலின் முன்பகுதியில் இடம் பெறும் முன்னுரைகளும், பனுவலைக் குறித்த பின்னட்டைக் குறிப்புகளும்   வாசிப்பவர்களின் வாசிப்புகளைக் கட்டுப்படுத்தக்கூடியனவே.  இதழ்கள் வெளியிடும் சிறப்பிதழ்களும் அப்படியான கட்டுப்பாட்டை அல்லது கவனக்குவிப்பைச் செய்கின்றன. அதன் மூலம் குறிப்பிட்ட வகையான வாசகர்களைக் கவர நினைக்கின்றன. 

எழுத்தாளர் எழுதுபவராகச் செயல்படுவதுபோல, வாசகர் வாசிப்பவராக மட்டும் செயல்பட்டால் போதும். அவருக்கு வாசிக்கக் கிடைக்கும்  இலக்கியப்பனுவல் மட்டுமே  வாசிப்புக்கானது. ஆசிரியரின் பிற செயல்பாடுகளோ, அவருக்கிருக்கும் சமூக அரசியல் பார்வைகளோ, அவரின் கலை, இலக்கியப் பார்வைக்கோணங்களோ வாசிப்பின் குறுக்கே நிற்கக் கூடாது. அவற்றை வாசிப்பவர்கள் பொருட்படுத்த வேண்டியதில்லை என்று நினைக்கும் வாசிப்பு ஒற்றைத்தள வாசிப்பாக  முடிய வாய்ப்புண்டு. ஒற்றைத்தள வாசிப்பு, வாசிக்கப்பட்ட பனுவல்களின் மீது கருத்தையோ, மதிப்பீடுகளையோ, விவாதப்புள்ளிகளையோ விமரிசனப்பார்வையையோ எழுப்ப முனைவதில்லை. வாசிப்பு என்னும் வினையை முடித்துவிட்டு பனுவல்களிலிருந்து விலகிக் கொள்ளும். ஆனால் ஒற்றைத் தளத்தைத் தாண்டிய வாசிப்பு முறைமைகளே விமரிசனத்தை நோக்கி நகரக்கூடியன.  

 ‘சிறுகதை வடிவம் ஒன்றிரண்டு நிகழ்வுகளையும் சில கதாமாந்தர்களையும் கொண்டதாக அமையவேண்டும்; கதைப்பொருண்மையின் மையத்தை முன்வைத்து விட்டு    அதற்குள் ஒரு திருப்பத்தையும் கதை முடியும்போது முன்வைக்கப்பட்ட மைய விவாதத்தின் மீது ஒரு புரிதலை அல்லது எழுத்தாளரின் முடிவைக் காட்டிவிட வேண்டும்’ என்ற மரபான சிறுகதை வடிவத்தைக் கொண்டுள்ளன. ஆனால் விவாதப்பொருண்மைத் தேர்வு, கதை சொல்வதில் கவனம், மொழியாளுமை, உரையாடல்களில் ஏற்படக்கூடிய நம்பகத்தன்மை போன்றவற்றைக் கவனித்து வாசிக்கும்போது எல்லாக் கதைகளும் திறன் மிக்க எழுத்தாளர்களின் வெளிப்பாடு என்று சொல்லமுடியவில்லை. 

நகர்வின் பெண்கள் சிறப்பிதழ் – என்ற வகைப்பாட்டுதொகுப்பு முயற்சியின் மீதான வாசிப்பைப் பொதுநிலை வாசிப்பாகச் செய்ய முடியாது. பொதுநிலை வாசிப்பைத் தவிர்த்துக் குறிப்பிட்ட வகை வாசிப்போடு பனுவல்களை அணுகும்படி வாசிப்பவர்களுக்கு நெருக்கடி ஒன்றை உருவாக்கியுள்ளது. அதற்குத் தயாரில்லாத வகையினரை விலக்கிவைக்கவும் செய்யும். பெண்கள் சிறப்பிதழில் எழுதியவர்கள் அனைவரும் பெண்கள் என்பதால், எழுதப்பெற்றுள்ள எல்லாமும் பெண்கள் மீதான கவனக் குவிப்பாக இருக்க வாய்ப்புண்டு என்ற முன்குறிப்போடு- முன்முடிவோடு வாசிப்புக்குள் நுழைய வேண்டியுள்ளது. முன்முடிவு பெரிதும் பிழையாகவில்லை. இடம்பெற்றுள்ள ஏழ கதைகளில் ஐந்து கதைகள் பெண்களை – பெண்களின் பிரச்சினைகளை – பெண் மன உணர்வுகளை கதைப்பொருளாக்கியுள்ளன.  

விலகிநிற்கும் இரண்டு கதைகளிலும் பெண்களே மையக்கதாபாத்திரங்களாக இருக்கிறார்கள் என்றாலும் எழுப்பப்பட்ட உணர்வுகளும் முன்வைக்கப்படும் விவாதமும் பெண்களுக்கானது மட்டுமல்ல. பால் வேறுபாடுகள் இல்லாது பொதுவான மனிதர்களுக்குரியன. மறைப்பு என்ற தலைப்பில் ப்ரியா எழுதியுள்ள கதை ஆண்களும் பெண்களுமான  கூலித்தொழிலாளிகளின் – கட்டிடத் தொழிலில் சித்தாள்களாக வேலை செய்பவர்களின் துயரச்சித்திரம் ஒன்றைத் தருகிறது. சொந்த ஊரைவிட்டுக் குடிபெயர்ந்து தற்காலிகக் குடியிருப்பில் இருக்கும் மறைப்பை முன்வைத்து அந்தக் கதையை உருவாக்கியுள்ளார். சொந்த ஊரில் விவசாயமும் வீடும் இருந்தபோதிலும் பெண் பிள்ளைகளின் திருமணத்தின் பொருட்டு நகரங்களுக்கு வந்து கட்டடத் தொழிலில் ஈடுபடுபவர்களின் துயரவாழ்வின் ஒரு கீற்றைப் பதிவுசெய்வதே அந்தக் கதையின் நோக்கம். இத்தகைய துயரச்சித்திரங்களை அதிகம் எழுதிய காலமாகத் தமிழ்ப் புனைகதை வரலாற்றில் எண்பதுகளையே சொல்லவேண்டும். அந்த வகையில் இந்தக் கதை நாற்பதாண்டுகளுக்கு முந்திய புனைகதைப் போக்கின் ஒரு தொடர்ச்சியாக இருக்கிறது 

 அம்பிகாவர்சினியின் உள்ளங்கை அல்லி கதை கடவுளை வணங்குவதில் ஈடுபாடும் நம்பிக்கையும் கொண்டவர்களின் உள்மனதின் நேர்மறைச் சக்தியையும் மனவோட்டத்தையும் எழுதிக்காட்டியுள்ள கதையாக நகர்த்தப்பட்டுள்ளது. ஒன்றுக்கு மேற்பட்ட நிகழ்வுகள் அடுக்கப்படாத இந்தக்கதை முழுவதும் ஒருவித விவரிப்பும் அதற்குள் மனவோட்டங்கள் என்பதாக நகர்கிறது.  இவ்விரு கதைகளுமே சொல்முறையாலும் மொழிநடையாலும் புதிய கதைகள் என்பதான உணர்வைத் தரவில்லை.   

பெண் நிலைவாதக் கருத்துகளில் ஈடுபாடும் செயல்தளத் தளமுமே முதன்மையானது எனக் கருதும் பெண்ணியச் செயலாளிகள் இலக்கியவாதிகளாகவும் இருக்க நினைப்பதுண்டு. அப்படி நினைக்கும்போது அவர்களின் புனைவுகளில் இலக்கிய நுட்பங்களுக்கு முதன்மை குறைந்து, கருத்தியல் முன்வைப்புகள் முதன்மை பெற்றுவிடுவது எப்போதும் நிகழ்ந்துவிடுகிறது. அதனை அவர்கள் தெரிவுசெய்து முன்வைக்கும் எதிரிணைகள் வழியாகச் சுலபமாக அறிந்துகொள்ள முடியும். வரிசைப்படுத்தப்பட்டுள்ள ஏழு கதைகளில் நறுமுகை தேவியின் குதிரைச்சவாரியும் நாச்சியாள் சுகந்தியின் கொலப்பசியும் இந்த வகைப்பாட்டிற்குள் நிற்கின்றன. நிகழ்வொன்றின் போக்கில் ஒற்றைத் திருப்பம் நிகழ்ந்துவிட்டால் கதையாகிவிடும் என்ற புரிதல் அடிப்படையில் எழுதப்பட்ட கதை குதிரைச்சவாரி. திருமணம் செய்யாமலேயே எல்லாம் கிடைத்துவிடுகிறது; அதனால் திருமணத்திற்கு அவசரம் இல்லை என்றவன் மீது ஏற்பட்ட விலகல் நிலை, சட்டென மறைந்து அவனை விரும்புவதற்கும் பாராட்டுவதற்கும் அவனது ஒற்றைக் கூற்றே போதும் என நினைக்கும் அந்தப் பாத்திரத்தின் மனமாற்றம் இயல்பான மாற்றமாக இல்லை.  ‘ஒரு பாலியல் தொழிலாளியைத் திருமணம் செய்துகொண்டு, அவளது கடந்த காலத்தைப் பற்றி எதுவும் கேட்காமல் சேர்ந்து வாழவேண்டும்’ என்ற விருப்பத்தைக் கேட்டவுடன், அவனது நிலையை விஸ்வரூபம் கொண்டதாகச் சொல்லும் கதையின் கடைசிச் சொற்றொடரைச் சொல்வதற்காக எழுதப்பட்டது போலக் கதையின் அமைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது. அப்படி ஆக்குவதுதான் கதையைச் செயற்கைத்தன்மை கூடிய கதையாக்குகிறது. 

நறுமுகைதேவியின் கதையில் கடைசியில் வெளிப்படும் செயற்கைத்தன்மை, நாச்சியாள் சுகந்தியின் கதையில் தொடக்கத்திலேயே வெளிப்பட்டுள்ளது. ஒரு மர்மக்கதையின் தொடக்கம் போல   கதை தொடங்குகிறது.   குடிபோதையில் இருக்கும் கணவனை – அவன் பிரியமாக வாங்கிக் கொடுத்த மஞ்சள் சேலையால் இறுக்கிக் கொலைசெய்யும் மனைவி. அந்தக் கொலையைச் செய்யும்போது தூங்கிக் கொண்டிருந்த மகனை எழுப்பி அவனது உதவியோடு அந்தக் கொலையைச் செய்கிறாள். 

இந்த முக்கோணப்புள்ளிக்குள் – மணிமேகலையும் அவளது மகன் சுதாகரும் சேர்ந்து  கணவன் முருகவேல் எம்.எல்.ஏ.வைக் கொல்வதன் காரணங்கள் முன்கதையாக – முன்னோக்கு உத்தியாக அடுக்கப்பட்டுள்ளன. சாதி வேறுபாடெல்லாம் பார்க்காமல் -அறியாமல் ஏற்படும் காதலைத் தடுக்கும் சாதி ஆணவமும் அதிகார இருப்பையும் கேள்வி கேட்கும் கருத்தியலை முன்வைத்து உருவாக்கப்பட்டுள்ள கதை காலத்தின் தேவை என்பதை மறுப்பதற்கில்லை. இப்படியான நிகழ்வுகளும் பாலியல் கொடூரத்தை நிகழ்த்திச் சாதி தாண்டிய காதலை – திருமண முறிவைச் சாதிக்கும் நிகழ்வுகள், இந்திய/ தமிழ்ச் சமூகம் தொடர்ந்து சந்தித்துக்கொண்டு இருக்கக் கூடிய நிகழ்வுகளே  . ஆனால் இந்தக் கதையில் வரும் அம்மாவைப் போலத் தனது மகனின் காதலை நிறைவேற்றக் கணவர்களைக் கொல்லும் பெண்களைத் தான் சந்திப்பது அரிதாக இருக்கிறது. 

குடும்ப அமைப்பில் சாதிய விருப்பமும் ஆணவமும் ஆண்களிடம் அதிகமா? பெண்களிடம் கூடுதலா? என்ற கேள்விக்குப் பெண்களிடம் குறைவாக வெளிப்படுகிறது என்று சொல்லிவிட முடியாது. அதே நேரம், நாச்சியாள் சுகந்தி எழுதிக்காட்டும் அம்மாவைப் போன்றவர்கள் இல்லவே இல்லையென்றும் சொல்லிவிட முடியாது. அப்படியிருக்கும் மிகக் குறைவானவர்களில் ஒருத்திதான் மணிமேகலை என்று காட்ட வேண்டுமென்றால் அந்தப் பெண்ணின் மனமாற்றம் கதைக்குள் நிகழ்வதாக எழுதிக்காட்ட வேண்டும். அப்படிச் செய்யாமல் திடீரென்று சாதியெல்லாம் பார்ப்பதைப் பொருட்படுத்தாது கணவனைக் கொல்ல நினைக்கிறார் எனக் காட்டும்போது நம்பகத்தன்மை தோன்றாமல் போய்விடும். கணவனின் அதிகாரத்தையும் பிற பெண்களின் மீது செலுத்திய பாலியல் வல்லுறவுகளையும் ஏற்க மறுத்த சில நிகழ்வுகளையாவது கதைக்குள் முன் நிகழ்வாகக்காட்டியிருக்க வேண்டும். அப்படிக் காட்டாமல் எழுதி முடிக்கத் தூண்டியது நாச்சியாள் சுகந்திக்குள் இருக்கும் செயல் முதன்மை மனம் என்று சொன்னால் அவர் ஏற்கத் தயங்கக்கூடும்; ஆனால் அதுதான் உண்மை.

இவ்விருவரின் கதையைப் போலல்லாமல் குடும்ப அமைப்பில் பெண்களின் நிலை இதுதான்; இவ்வளவுதான் அவர்களால் இயலக்கூடியது என்பதைக் காட்டும் கதையொன்றை எழுதிக் காட்டிக் குடும்ப அமைப்பின் மீதான தனது அதிருப்தியை மெல்லிய கோபமாகக் காட்டியுள்ளார் அகிலா. குடும்ப அமைப்பில் பெண்களுக்கான சுதந்திரம், அதன் எல்லை, அதன் இறுக்கம் என விவாதிக்கப்பட வேண்டியவற்றை எதிர்மறையாக விவாதிக்காமல் நேர்மறை மொழியில் விவாதிக்கும் இந்தக் கதை ‘வேறு வழியில்லை; இதற்குள் தான் பெண்கள் இருக்க வேண்டியவர்களாக இருக்கிறோம்’ என்ற புலம்பலைச் சொல்லக்கூடிய கதையாக வாசிக்கும் வகையில் பிடிமானக்கயிறு நிகழ்வுகளை அடுக்கித் தந்துள்ளது.

இவ்வைந்து கதைகளிலிருந்தும் முற்றிலும் விலகிய புனைவுகளாக இருப்பன உமாமகேஸ்வரியின் மோனாவும் லாவண்யா சுந்தரராஜனின் வெள்ளைப்பூனையும் எழுத்தில் நீண்ட அனுபவமும் தொடர்ச்சியாக எழுதியெழுதிப் பழகிய பக்குவமும் கொண்ட இருவரும் உருவாக்கித் தரும் வாசிப்பு அனுபவங்கள் மற்றவர்களின் பனுவல்கள் உருவாக்கும் வாசிப்பனுவங்களைவிட நுட்பமாக இருப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. நான் வாசித்த வரையில் இதுவரையிலான உமா உமாமகேஸ்வரியின் புனைகதைகளில் வெளிப்படும் மென்மையான முன்வைப்பை இந்தக் கதையில் மீறியிருக்கிறார் என்றே சொல்லத்தோன்றுகிறது. இளைய ஆடவனோடு தனிமையில் பேசிக்கொண்டும் உடல் சார்ந்த நெருக்கத்தோடும் இருக்கும்    அம்மாவை ஏற்றுக் கொள்வதா? நிராகரிப்பதா? எனத் தவிக்கும் மோனாவிற்கு ஆறுதலாக ஒரு பாத்திரத்தை -நிதியை உருவாக்கிப் புதிய வெளியில் பயணம் செய்ய வைத்திருக்கிறார். தனது வேலையின் பொருட்டுத்   அம்மாவையும் தன்னையும் விட்டு விலகி இருக்கும் அப்பாவின் மீது அவளுக்கு இயல்பாக் கோபமும் வருத்தமும் ஏற்பட்டிருக்க வேண்டும். அப்படி ஏற்படக்கூடிய கோபத்தைத் தாண்டியதாக அம்மாவின் செயல்கள் தோன்றும்போது அந்தச் சின்னப்பெண் நிலைதடுமாறவே செய்வாள்; செய்கிறாள்.  அவளது தனிமையைத் தனது வருகையால் இட்டு நிரப்பும் இளைஞனை ‘மகளின் கணவனாக ஆக்க நினைக்கும் அம்மா’ என்பது நமது சமூகத்தில் பார்க்க முடியுமா?  கதையை வாசிக்கும்போது ஏற்படும் முக்கியமான கேள்வி. இதைத் தனது   ‘அப்பாவிடம் தடுமாற்றமில்லாமல் சொல்லிவிடும் மகள்’ என்பதும் நடக்க க்கூடியதா? என்பதும் இன்னொரு கேள்வி. இவ்விரண்டு கேள்விகளையும் தொடர்ந்து உருவாகும் முடிச்சுகளும் அதற்குப் பின்னான நகர்வுகளும் பல கேள்விகளோடு கூடியன. அப்படியான கேள்விகள் எழுவது இயல்புதான். இந்த இயல்பைத் தாண்டிய பிறழ்வுகளும் விலகல்களும் தான் அதிர்ச்சிகரமான வாழ்க்கையாக இருக்கின்றன. அப்படியொரு பிறழ்வைக் கதையாக்கிய – சின்னச் சின்ன நகர்வுகளாலும் பாத்திரங்களின் செயல்களாலும் சமாதானப்படுத்திவிடும் உரையாடல்களாலும் வாசிப்பவர்களை ஏற்கச் செய்கிறார் கதாசிரியர். தனது கதையின் சொல்முறையால் முழுமையடையச் செய்துள்ள உமா மகேஸ்வரியின் எழுத்து எப்போதும் போல ஈர்ப்புடன் இருக்கிறது.

லாவண்யா சுந்தரராஜனின் கதை கதையின் மையப்பாத்திரத்தின் தேர்வு மூலம் விவாதிக்கத் தக்க கதையாக மாறியிருக்கிறது.  பன்னாட்டுக் குழும நடைமுறைகள் பின்பற்றப்படும் தகவல் தொழில் நுட்பம் சார்ந்த நகரிய வாழ்க்கையை இதுவரை எழுதிக் காட்டிய புனைவுகள் பலவற்றை வாசித்திருக்கிறோம். பெரும்பாலும் உயர்கல்வியும் எல்லாத்தேவைகளையும் நிறைவேற்றிக்கொள்ளும் சம்பளமும் கொண்ட மனிதர்களையே அக்கதைகளில் சந்தித்திருக்கிறோம். உயர் நடுத்தர வர்க்க மனிதர்களுக்கிடையே இருக்கக்கூடிய- உருவாகும் புதிய வாழ்க்கை நடைமுறைகளையும், பணிசார்ந்த வெளியிலும் குடும்ப வெளியிலும் வெவ்வேறாக இருக்க வேண்டிய நெருக்கடிகளையும் எழுதிய புனைவுகள் உருவாக்கிய நம்பகத்தன்மை அது.  குறிப்பாக தேச எல்லைகளைக் கடந்த தகவல் தொழில் நுட்பத்துறையில் ஒருநாள் என்பதைக் கறாராகக்  கடைப்பிடிக்க முடியாத கால மாற்றம், ஆண் – பெண் உறவில் ஏற்படும் நெகிழ்ச்சிகள், அதனால் உருவாகும் புதுவகைக் குடும்பக் கட்டமைப்பு எனவும் கதைகள் எழுதப்பெற்றுள்ளன. இந்தப் பொதுப் போக்குகளிலிருந்து விலகிய கதையொன்றை வெள்ளைப்பூனையாகத் தந்துள்ளார் லாவண்யா சுந்தரராஜன் 

உயர்நடுத்தர வர்க்க வாழ்க்கைக்குள் நுழைபவர்களிடம் காணப்படும் தொழில் போட்டியும் தங்களை நிலைநிறுத்திக்கொள்ளத் துடிக்கும் தவிப்பும் புதிய தொழில் நுட்பப்பணிகள் சார்ந்த வேலைகளில் காணப்படும் பணிப்பண்பாடு. அந்தப் பண்பாட்டைப் பன்னாட்டுக்குழுமங்களின் குறிப்பான வேறுபட்ட பணிப் பண்பாடாகவே சொல்லலாம். இத்தகைய பணிப்பண்பாடு உயர்மட்டத்தில் மட்டுமில்லை;  அடிமட்டப்பணிகளில் ஒன்றான துப்புரவுப் பணிக்குள்ளும் நிலவுகிறது என்பதை நுட்பமாகச் சொல்கிறது கதை. இந்தப் பணிப்பண்பாடு இந்தியச் சாதிய மனோபாவத்தில் உயர்சாதி/ உயர்வர்க்க மனங்களில் தங்கியுள்ள நிறம் சார்ந்த/ தீண்டாமை சார்ந்த வேறுபாடுகளின் நீட்சியாகவும் இருக்கக்கூடும் என்ற எண்ணவோட்டங்களை உருவாக்கும் உரையாடல்களையும் கதை நிகழ்வு மாற்றங்களையும் கதையில் உருவாக்குகிறார் லாவண்யா. குடியிருப்புப் பகுதி மனிதர்களும் வேலைபார்க்கச் செல்லும் மனிதர்களும் வெள்ளை வண்ணத்தின் மீது காட்டும் மோகத்தையும் அசூயையும் நுட்பமாகச் சொல்கிறார்.  ஒவ்வொரு நிகழ்வும் கதை அடுக்குகளும் சொல்லப்படுகிறது என்பதை உணர்த்தாமல், தானாக நகர்கிறது என்பதைப்போல எழுதும் லாவகம் லாவண்யாவின் மொழிநடையாலும் விவரிப்புகளினாலும் சாத்தியமாகியிருக்கிறது.

பெண்கள் எழுதிய ஏழு கதைகளை ஒன்றாகத் தொகுத்துப் பெண்களின் பார்வைகளை ஒருசேர வாசிக்கவும் விவாதிக்கவுமான வாய்ப்பை உண்டாக்கியிருக்கும் நகர்வின் இந்தச் சிறப்பிதழ் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.சில கதைகள் ஏற்கெனவே வாசித்த கதைகளின் மாதிரிகளாகத் தோன்றுகின்றன; சில கதைகள் செயற்கைத்தன்மை தூக்கலான கதைகளாக உள்ளன. சில கதைகள் கவனித்துப் பேச வேண்டியனவாக இருக்கின்றன. இந்தக் கலவையான தொகுப்பிற்காக நகர்வு ஆசிரியர்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள்.  

பிப்ரவரி இதழை வாசிக்க:

https://nagarvu.com/category/இதழ்-நகர்வு/பிப்ரவரி-2021-இதழ்-நகர்வு/

லாவண்யா சுந்தர்ராஜன்

தகவல் தொழிற்நுட்பத்துறையில் பணிபுரிவது வரமா, சாபமா என்பது எனது நீண்டநாள் கேள்வி. நான் பள்ளிப்பருவத்தில் பலவிதமான பரிசோதனைகளுக்கு எலியாகியிருக்கிறேன். அப்படிப்பட்ட பரிசோதனைகளில் ஒன்று எனது ஊழ்வினையால் நிகழ்ந்ததென்று சொல்ல வேண்டும். பதினொன்றாம் வகுப்பில் கணிதப் பிரிவு, அறிவியல் பிரிவு, வணிகவியல் பிரிவு என்று எந்த துறையில் மேற்கொண்டு படிக்க வேண்டுமோ அதனைச் சார்ந்து இதில் ஏதேனும் ஒரு பிரிவை விருப்பத் தேர்வு செய்து கொள்ளலாம். மருத்துவம், பொறியியல் இரண்டில் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுக்க வகை செய்யும் உயிரியல் என்ற பாடம் நான் பதினொன்றாம் வகுப்பு சென்ற போது கணினி அறிவியல் என்று மாற்றப்பட்டு கணித பிரிவு பொறியாளர்கள் பக்க சார்வானது. பதினொன்றாம் வகுப்பில் கண்ணி அறிவியல் பயிற்றுவிக்க வந்த இளம் ஆசிரியை அப்போது தான் கல்லூரியை முடிந்து விட்டு வந்திருந்தார். பிற ஆசிரியர்கள் போலன்றி எங்களிடம் மிகவும் நட்பு பாராட்டினார். அதன் பொருட்டோ கணினி அறிவியலின் கணினி மொழிகள் மற்றும் அவற்றில் கோட்பாடுகளை எழுதிப் பெற்ற மாய போதை பொருட்டோ எனக்குத் தகவல் தொழிற்நுட்பத் துறை அதீத ஈடுபாட்டைக் கொடுத்தது. அதன் பொருட்டே உயர் கல்வியைப் பயின்று இந்தத்துறையுள் நுழைந்தேன். கடந்த பதினாறாண்டுகளாக என் வேலை எனக்கு எந்த நேரமும் சலிப்பே ஏற்படுத்தியதில்லை. தினமும் அதில் கிடைக்கும் சவால்கள் என் வேலையை மிகவும் சுவாரஸ்யமாக்குகின்றன, அப்படியென்றால் இது வரம் தானே இல்லை அதை வரமென்று மட்டும் அவ்வளவு எளிதாக வரையறுத்து விட முடியாது. இந்த துறையுள் நடக்கும் அரசியல்கள், வேலையைச் சரியாகச் செய்கின்றோமா என்று நிமிடத்துத்துக்கொரு முறை நடக்கும் கண்காணிப்புகள், கொடுக்கும் சம்பளத்துக்கு 24 மணி நேரத்தில் எப்போது வேண்டுமானாலும் உங்களைப் பணி நிமித்தம் தொந்தரவு செய்வோம் என்று நினைக்க்/மேலாளர்களின் அத்துமீறல்கள், அந்த அத்துமீறல்களே இல்லை அவர்களின் உரிமை என்பது போல நடந்து கொள்ளும் மெத்தனங்கள், மேலாளர்களை மனம் கவர உடன் பணிபுரிபவர்களுக்குக் குழி தோண்டிக் கொண்டேயிருக்கும் பிற பணியாளர்கள், கொடுத்த பணிகளைத் திறன் படி முடித்தாலும் இன்னும் இன்னும் என்று எதிர்பார்த்து கொண்டேயிருக்கும் சூலைவாய் அரக்கன் அந்தத் துறை. ஆடம்பரமான கட்டிடம், எந்த நேரம் பளீரென்று இருக்கும் பணியிடம், தேவைக்கு அதிகமாய் குளிரூட்டப்பட்ட அறைகள், யாருமே அமர்ந்து இளைப்பாறாமல் ஏங்கிக் கிடக்கும் உயர்தர இருக்கைகள், எந்த நேரமென்றாலும் இலவசமாய் கிடைக்கும் காப்பி, தேநீர் மற்றும் குளிர்பானங்கள், இன்னபிற உணவு வகைகள், இதைத் தவிர மாதம் ஒருமுறை நான்கு நட்சத்திர விடுதியில் மதிய உணவு, வருடம் ஒருமுறை குடும்பத்தோடு உல்லாச பயணங்கள் எல்லாமிருக்கும். ஆனாலும் இங்கே பணிபுரியும் எல்லோரும் தனித்தனியானவர்கள் மணல் போன்றவர்கள், உயிருள்ள இயந்திரங்கள். இந்தத் துறையில் பணியிலிருப்போர் வெளியிலிருந்து காண்போர் கண்களுக்குத் தெரிவது போல மின்னும் நட்சத்திரங்கள் அல்லர். தன்னைத் தானே எரித்துக் கொண்டு எப்போதும் விழத் தயாராக இருக்கும் எரிகற்கள். நான் உட்பட இந்தத் துறையில் வேலை செய்யும் எல்லோரும் ஏன் இப்படி உதிரிகளாக அலுவலகத்துக்குள் ஒட்டாது இருக்கிறோம் என்பது எனது நெடுநாள் கேள்வி. அதற்கான விடையை இந்த கட்டுரை மூலம் தேடியிருக்கிறேன்.

இந்தத் துறையில் பதினாறாண்டுகளும் மேல் பணிபுரிந்த அனுபவம், எஸ் செந்தில்குமார் தகவல் தொழிற்நுட்ப துறை சார்ந்து வெளியாகியுள்ள  நாவல்களை வாசித்து ஒரு கட்டுரை எழுத முடியுமா என்று கேட்டவுடன் மறுக்காமல் ஒத்துக் கொண்டேன். இந்தக் கட்டுரைக்கு எழுதும் பொருட்டு  இத்துறை சார்ந்த பதிவுகளை உள்ளடக்கிய நாவல்களைத் தேடத் தொடங்கினேன். இரா முருகனின் மூன்று விரல், கனகதூரிகாவின் இருள் தின்னும் இரவுகள், ஆர். வெங்கடேஷின் இடைவேளை, விநாயக முருகனின் ராஜீவ் காந்தி சாலை, செல்லமுத்து குப்புசாமியின் இரவல் காதலி, சைலபதியின் பெயல்,  தமிழ் பிரபாவின் பேட்டை, ஆரூர் பாஸ்கரின் வனநாயகன்,, கார்த்திக் பாலசுப்ரமணியனின்  நட்சத்திரவாசிகள், சுனில் கிருஷ்ணனின் நீலகண்டம், ஹரிசங்கரின் உண்மைகள் பொய்கள் கற்பனைகள் என்று பத்துக்கும் மேற்பட்ட நாவல்களை இந்த ஆய்வுக்கென எடுத்துக் கொண்டேன். இதில் பெயல், பேட்டை இரவல் காதலி ஆகியவற்றில் கதை மாந்தர்கள் சிலர் தகவல் தொழிற்நுட்ப துறையில் பணிபுரிபவர்கள், ஆகவே அவர்களின் பணியிடம், நடவடிக்கை போன்ற சில பதிவுகள் இந்த நாவல்களில் இருப்பதால் அவற்றை இந்த துறைசார் நாவல் என்று வட்டத்தின் விளிம்புக்கு அருகே கொண்டு வந்திருக்கிறது.  ஆனால் அவற்றின் கதைக்களங்கள் வேறு. ராஜீவ் காந்தி சாலை தகவல் தொழிற்நுட்ப துறையில் நடக்கும் பைத்தியக்காரத்தனங்களை மட்டுமல்லாது அவை எப்படி சென்னை போன்ற மாநகருக்குள் நுழைந்தது என்ற தொடங்கி அவை நகரை அதன் எழிலை விளைநிலங்களை சூறையாடி மாற்றி கான்கிரீட்டால் செய்து கண்ணாடியால் மூடிய பளபளக்கும் கல்வனங்களாக்கியது என்ற வரலாறு பற்றி விரிவாகப் பேச முயற்சி செய்திருக்கிறது. அதில் தகவல் தொழிற்நுட்ப துறையின் சிலர்  வாழ்க்கையையும் பதிவு செய்கிறது. இதனை முழுமையாகத் தகவல் தொழில்நுட்ப துறை சார்ந்த நாவல் என்ற குறுகிய வட்டத்துக்குள் அடக்கிவிட முடியாது. மூன்று விரல், வனநாயகன் இந்த நாவல்களில் கதைசொல்லியே இந்தத் துறையில் பணிபுரிபவன். அந்தத் துறைக்குள் நடக்கும் துரோகங்கள், சலிப்புகளை, கோமாளித்தனங்களை, வில்லங்கங்களைப் பதிவு செய்ய முயற்சி செய்திருக்கின்றது. ஆனால் இந்த நாவல்களில் துறைசார் பதிவுகள் எவ்வளவு உண்டோ அதே அளவில் துறை சாராத பதிவுகளும் உண்டு. இடைவேளை பொருளாதார மந்தநிலையின் போது பணி நீக்கம் செய்யப்பட்ட மூவரின் வலி மிகும் வாழ்க்கையைப் பதிவு செய்கிறது. இந்த நாவலில் அடிப்படையான அம்சம் பகட்டான வேலையிலிருந்த மூவர் திடீரென ஒருநாள் வேலை இழந்த பின்னர் அவர்களுக்கு நடக்கும் உளவியல் சிக்கல்களை பதிவு செய்கிறது. ஆனால் நாவல் மொத்தமும் துறைசார் பதிவுகளை விடப் பொருளாதார தேக்கநிலை எந்தெந்த துறையை எப்படி எல்லாம் பாதித்தது என்ற பதிவுகள் அதிகமிருக்கின்றன. உண்மைகள் பொய்கள் கற்பனைகள் நாவல் தகவல் மிக முக்கியமான உளவியல் சிக்கலை, இதுவரை யாரும் பேசிடாத சிக்கலையும், மிக உயர்ந்த வகுப்பு துறையாக கருதப்படும் இந்தத்துறையில் சாதி அரசியலுண்டு என்ற அதிர்ச்சியை பதிவு செய்கிறது. ஆனால் இந்த நாவலில் தகவல் தொழில்நுட்ப துறைசார் பதிவுகளோடு பல்வேறு சமூக அவலங்களைப் பேசுகிறது.  இந்தத்துறை நாவல் முழுவதும் தகவல் தொழிற்நுட்ப துறைசார் பதிவுகளும் அதன் கதைமாந்தர்களின் வாழ்க்கையும் அதிக பாசாங்கில்லாமல் பதிவு செய்வது இருள் தின்னும் இரவுகள், நட்சத்திரவாசிகள் இந்த இரண்டு நாவல்களில் மட்டுமே. இருப்பினும் பிற நாவல்களில் வரும் இத்துறை சார் பதிவுகளை ஆங்காங்கே சேர்த்துக் கொண்டால் போதுமானது என்று முடிவுக்கு வந்தேன்.

இரா முருகன் எழுதிய மூன்று விரல்கள் மென்பொருள் துறையில் வெளியான முதல் நாவல். வெளியான ஆண்டு 2005. மற்ற எல்லாமே இதன் பிறகு எழுதப்பட்டவை என்று தான் சொல்ல வேண்டும். அயல் நாட்டில் சென்று அங்கே உணவு முறைகள், உறக்க முறைகள் போன்ற ஒவ்வாமைகளோடு, பயன்பாட்டாளர்கள் நாயைப் பிடிக்க, நரியைப் பிடிக்க மென்பொருள் எழுதச் சொன்னாலும், ஆயுள் காப்பீடு மென்பொருள் எழுதச் சொன்னாலும் செய்ய வேண்டிய கட்டாயம் மென்பொருள் துறைசார் வல்லுநர்களுக்கு எப்போதும் உண்டு. பயனாளர்கள் கடவுள் அவர்கள் சொல்வது வேதவாக்கு என்பது இந்த துறையின் அடிப்படை விதி. அவர்கள் செய்யச் சொன்னதை வேறு வழியின்றி செய்வதைச் சலிப்போடு இந்த நாவல் பதிவு செய்கிறது. இந்த நாவல் கையாண்டிருக்கும் தொழிற்நுட்பத்துறை சார் மற்றொரு மிக முக்கியமான, அதிகம் பேசப்பட வேண்டிய சிக்கல் சிறு நிறுவனங்களை தங்களது வியாபாரத்தின் முன்னேற்றத்திற்காகவோ அல்லது அந்த சிறு நிறுவனத்தின் வியாபாரத்தைக் கெடுப்பதற்காகவோ  பெரிய நிறுவனங்கள் விலைக்கு வாங்கிக் கொள்ளும் போது உண்டாகும் குளறுபடிகள், பிரச்சனைகளைப் பதிவு செய்கிறது. ஆனால் அந்த சிக்கலின் அடி ஆழம்வரை செல்லாமல் கதை சொல்லி தனது நிறுவனத்தை மாற்றுவதற்கான காரணி போல மிகக்குறைவாகவே தொட்டிருக்கிறது. வலுவான இந்த கதைக்களத்திலேயே மிகநுட்பமான நாவலை எழுதிவிட முடியும். புதிய நிறுவனத்தின் இணைப்பின் மூலம் ஏற்கனவே நிறுவனத்தில் இருப்பவர்களுக்கு வேலை தகுதி, சம்பளம் போன்றவை குறைக்கப்படுவது, சிறு நிறுவனத்தின் பணியாளர்கள் அலட்சியமாகக் கையாளப்படுவது  போன்ற அரசியலில் சில கூறுகளை இந்த நாவல் பதிவு செய்திருக்கிறது. நிறுவனத்திற்காக தன்னுடைய எல்லா சக்தியையும் செலவளித்து அதனை நிலைநிறுத்துபவன், தானே நிறுவனத்தைத் தொடங்கினால் என்ன என்ற எண்ணத்துக்குள் எப்போதுமே போகாத ஒரு மனநிலையை பெரும்பாலான தென் மாநிலத்தவர்கள் கொண்டிருப்பதையும் இந்த நாவல் சுட்டத்தவறவில்லை. காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ் தனது one hundred years of solitude நாவி்ல் banana company என்று கிண்டல் தொனியில் எழுதிய அதே உத்தியை நாய் வளர்ப்போர் சங்கத்துக்கான மென்பொருள் என்று இரா.முருகன் எழுதியிருப்பதும் அதன் விளக்கங்களும் பல இடங்களில் முகஞ்சுளிக்க வைக்கிறது. கதைசொல்லிக்கு நிறுவன முதலாளி அல்லது மேலாளர் பொருட்டு உண்டான கடும் மன உளைச்சலிருக்கிறது என்பது பல இடங்களில் பதிவாகிறது ஆனால் அந்த காரணத்துக்காகக் கொச்சையான வாக்கியங்களைக் கொண்டு அவர்களைத் திட்டுவது போலவும், அவர்களின் நடவடிக்கைகளைப் பாலுணர்வுடன் கூடிய வசைச் சொற்களால் சொல்லி மகிழ்வதும் நாவலாசிரியரின் மனச்சிக்கலையே காட்டுகிறது. இந்த துறையில் மட்டுமே நடக்கச் சாத்தியமான பலவிஷயங்கள் பேசி வாசகர்கள் இந்த துறை மீது கொண்டுள்ள மாயை போன்றதொரு உணர்வை மாற்றவல்ல பல சாத்தியங்களை உள்ளடக்கிய நாவலுக்கு வலு சேர்க்க தாய்லாந்து மசாஜ் அழகிகளின் உதவியை நாடியிருப்பது வருந்தத்தக்கது. மேலும் இந்த நாவலைப் பற்றிக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய இன்னொரு விஷயம் இதன் மொழி பல இடங்களில் மிக அசூசையாக உணர வைக்கிறது. மென்பொருள் வடிவமைப்பில் அதன் செயல்பாடுகள் சரியாக இருக்கிறதா என்று சோதனை செய்வது மிக முக்கியமான கட்டம், அந்த சோதனைகளில் போது கண்டறியப்படும் பிழைகளுக்கு ஆங்கிலத்தில் finding bugs என்பார்கள். அதனைப் பூச்சி பிடித்து என்று எழுதியிருக்கிறார் இரா.முருகன். “Bugs” என்பது மென்பொருள் துறையில் எந்த பொருளோடு வழங்கப்படுகிறது என்ற விஷயம் அறியாத வாசகர்களுக்குப் பூச்சி பிடித்தல் என்று நேரடியாக எழுதியிருப்பது நகைப்புக்குரியது. இரா.முருகன் நகைச்சுவை என்று நினைத்து எழுதியிருக்கும் மொழி இவ்வாறாக விபரீதமாக இருப்பது கொஞ்சம் ஆதங்கத்துக்குரியது.

இருள் தின்னும் இரவுகள் கனகதூரிகா எழுதிய நாவல், இவர் இதனை எழுதிய வருடம் 2010 திரிசக்தி வெளியீடாக வந்த இந்த நாவலில் கால்சென்டர்கள் பற்றிய முதல் நாவல் என்று அதன் அட்டையிலேயே பதிவு செய்யப்பட்டிருக்கிறது. தகவல் தொழிற்நுட்பத்துறை போன்றதொரு துறையே அழைப்பு/சேவை மையங்கள். உதாரணத்துக்கு நமக்கு அடிக்கடி வரும் உங்களுக்கு இந்தக் கடன் வேண்டுமா அந்தக் கடன் வேண்டுமா என்று வரும் தொலைப்பேசி உரையாடல்களுக்குப் பின்னர் இயக்கும் ஒரு தொழில்நுட்ப துறை இது. இவர்கள் அந்த ஒரு நிறுவனத்தின் வாடிக்கையாளர்களின் பிரச்சனைகளைக் கேட்டு அதற்குத் தீர்வுகளை வழங்குபவர்களாக இருப்பார்கள் அல்லது அவர்களுக்கு சில பொருட்களை விற்பனை செய்யும் இடைத்தரகர்கள் போலிருப்பார்கள். இந்த நிறுவனங்கள் பெரும்பாலும் அமெரிக்க நாடுகள் சார்ந்தது என்றால் அதன் வாடிக்கையாளர்களுக்கு சேவையை வழங்க இந்த சேவை மையங்கள் இரவு நேரத்தில் இயங்கும். இருள் தின்னும் இரவுகள் இந்த தலைப்பே கதையின் மையக்கருத்தை சொல்லிவிடும். இந்த நாவலில் கனகதூரிகா தனது முன்னுரையிலேயே பொருந்தா வேலை என்று ஒன்றை குறிப்பிட வேண்டுமென்றால் கால் சென்டர் வேலை என்று குறிப்பிட்டிருப்பார். குடும்பச் சூழல் பொருட்டு தவிர்க்க முடியாது இந்த பணியில் இருக்கும் கதைசொல்லியின் கதை சிறந்தொரு வாசிப்பனுபவத்தை தருகிறது.

அதன் பிறகு வெளியான இடைவேளை ஆர் வெங்கடேஷ் எழுதியது வெளியான ஆண்டு 2013 ஜூலை. முதல் அத்தியாயத்தில் ஒரு ஓவியத்தை கவித்துவமாக விளக்கியபடி ஆரம்பிக்கும் கதை சடரென மூவர் வேலையும் பறிக்கப்பட்டதும் அவர்கள் மேற்கொண்டு வாழ்வை எப்படி எதிர்கொள்கின்றார்கள் என்ற வகையில் விரிகிறது நாவல். தகவல் தொழிற்நுட்பத் துறையை 2007 ஆண்டு தொடங்கிய பொருளாதார மந்த நிலைக்கு முன்னால் அதற்குப் பின்னால் என்று இரண்டு காலமாகப் பிரித்துக் கொண்டு பார்த்தால் துறைக்கு உள்ளேயே செயல்படுபவள் என்று சலுகையை கையில் எடுத்துக் கொண்டு என்னால் சில விஷயங்களைக் கட்டாயம் பகிரமுடியும். 1992 – 1993 ஆண்டு காலகட்டத்தில் என்னுடைய கல்லூரி தோழியின் உறவினர், இந்தியன் ரயில்வேயின் முக்கிய அதிகாரியாக இருந்தவர், “நாங்கள் எங்கள் மென்பொருள்களில் வரும் பிழைகளைச் சரி செய்ய அமெரிக்காவிலிருந்து வரவழைத்திருக்கும் இந்தியப் பொறியியல் வல்லுநருக்கு மாதம் ஒரு லட்சத்துக்கு மேல் சம்பளம் அளிக்கிறோம்” என்று அதிர்ச்சி கொடுத்தார். தகவல் தொழிற்நுட்பத் துறை தனது சிறு கால்களை மெல்ல இந்தியாவில் பதிக்கத் தொடங்கியது அந்த காலத்தில் தான். கிட்டதட்ட 28 வருடங்களுக்கு முன்னர் ஒரு லட்சமென்றால் அதன் மதிப்பு எத்தகையது என்று கணக்கிட்டுக் கொள்ளலாம். அதன் பின்னர் படிப்படியாக இந்திய நிறுவனங்கள் தங்களது மனிதவளங்களை கணக்குக் காட்டி அவர்களுக்கான மென்பொருள்களை இங்கிருந்து தயாரித்துக் கொடுப்பது அல்லது அங்கே சென்று செய்து தருவது என்று செய்யத் தொடங்கினர். இந்த நிறுவனங்களில் ஒவ்வொரு மனிதனும் நிறுவனத்துக்கு வருமானம் ஈட்டித்தரும் சொத்து என்ற கட்டமைப்பு இருந்தது. ஆகவே அவர்கள் கிட்டத்தட்ட தெய்வீக அந்தஸ்தைப் பெற்றிருந்தனர். இந்த நிறுவனங்கள் அசுரத்தனமாக வளர்ந்தன. தனது ஊழியர்களுக்குக் கொடுக்கும் சம்பளத்தின் ஐந்து மடங்கை அவர்கள் பயனாளர்களிடமிருந்து வசூலித்தனர். பெரும்பாலான மென்பொருள்கள் அமெரிக்க, ஐரோப்பா, ஆஸ்திரேலிய நிறுவனங்களுக்கென தயார் செய்யப்பட்டன. இது போன்ற காலகட்டத்தில் 2007 பொருளாதார மந்தநிலை வந்த போது அமெரிக்க பொருளாதாரம் மட்டும் பாதிக்கப்படவில்லை அதைச் சார்ந்து இருந்த உலகநாடுகள் எல்லாமே நேரடியாகவோ மறைமுகமாகவோ பொருளாதார வீழ்ச்சியை அடைந்தனர். இடைவேளை நாவலில் “அந்த காலத்தில் ரஷ்யாவில் பனி பொழிந்தால் இந்தியாவில் சளி பிடிக்கும் என்பார்கள். தற்போது அமெரிக்கா” என்றொரு வரி வரும். அப்படி அமெரிக்கப் பொருளாதாரம் பதித்த துறைகள் பல. அதில் முக்கியமாகவும் நேரடியாகவும் பாதிக்கப்பட்டது தகவல்தொழிற்நுட்பத் துறையைச் சார்ந்தவர்கள் தான். பணி நீக்கம், சம்பள குறைப்பு இன்னும் பல்வேறு விதமான செலவினங்கள் குறைக்கப்பட்டன. பல இளைஞர்களின் வாழ்க்கையை அது பறித்தது என்றே சொல்ல வேண்டும். மறுபடி பொருளாதார நிலை ஓரளவுக்குச் சீரானதும் முன்னர் கொடுக்கப்பட்டது போன்ற பகட்டான சம்பளம் பொறியாளர்களுக்கு வழங்கபடவில்லை. ஓரளவு நிதானமான போக்கு வந்தது. இடைவேளை நாவலில் பல இடங்களில் வேலையிழந்த இளைஞர்களில் மனவோட்டங்களை வேலை தந்த பாதுகாப்பைப் பின்னர் அதுவே அவர்களை நடுத்தெருவில் இழுத்து விட்ட அவலத்தைப் பதிவு செய்கிறது. முற்றிலும் தகவல் தொழிற்நுட்ப துறை சார் பதிவுகள் இல்லாவிடினும் அந்த துறையில் பணி புரிபவர்களின் உளவியலை சிக்கல்களை மிக நுட்பமாகப் பதிவு செய்வதால் தகவல் தொழிற்நுட்ப துறைசார் நாவல்களில் இது மிக முக்கியமான ஒன்று.   

இரவல் காதலி செல்லமுத்து குப்புசாமி எழுதியது 2013 டிசம்பரில் வெளியாகியிருக்கிறது. திருமணத்துக்கு வெளியான நட்பு என்பதற்கும் தகவல் தொழில்நுட்பத்துறைக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை. இதில் கதை சொல்லி தகவல் தொழில்நுட்ப துறையில் இயங்கும் ஒரு மிகப்பெரிய நிறுவனத்தில் பணி புரிகிறார் என்பதைத் தவிர வேறு எந்த முக்கிய பதிவுகளும் இல்லை. தகவல் தொழிற்நுட்பத்துறையில்  நடைபெறும் நேர்முகத் தேர்வில் அலட்சியமான போக்கினை சார்ந்த பதிவுகளும், பிடிக்காத அல்லது பணி சார்ந்து அதிக அழுத்தம் தரும் ஆண் மேலாளர் மீது சக பெண் பணியாளர் தரும் தகாத புகார் போன்ற வெகு சில பதிவுகள் மட்டுமே உள்ளன. பணியிடத்தில் பல்வேறு அழுத்தங்களுக்கு ஆளாகும் தகவல் தொழில்நுட்ப துறையிலுள் நடக்கும் நுண்ணரசியல் சார்ந்த இன்னும் பல்வேறு விஷயங்கள் உண்டு அதைச் சார்ந்த பதிவுகள் எதுவும் இந்த நாவலில் இல்லை.

விநாயக முருகன் எழுதிய ராஜீவ் காந்தி சாலை வெளியான ஆண்டு 2013 டிசம்பர். முன்னரே பதிவு செய்து போல ராஜீவ் காந்தி சாலை வெறும் தொழிற்நுட்ப துறைசார் நாவலல்ல. அது ஒரு வரலாறு. அந்த வரலாற்றில் சாக்கடை போல கலந்துவிட்டது சபிக்கப்பட்ட தகவல்துறை நுட்பத்தின் பைத்தியக்கார இளைஞர்கள், இளம்பெண்களின் வாழ்க்கை முறை. அந்த சாக்கடையில் ஊறிப் புரண்ட முடை நாற்றம் பிடித்த முதலாளிகள், அவர்களில் இல்லப்பெண்கள் இப்படி விரியும் கதையில் துறைசார் பதிவுகளை தேடிப்பிடித்து இந்தக் கட்டுரையில் பதிவு செய்திருக்கிறேன். இரவல் காதலி மற்றும் ராஜீவ்காந்தி சாலை இரண்டுமே ஒரே பதிப்பகத்தில் வெளியான நாவல்கள். இரண்டிலும் வயதுக்கு வந்தவர்கள் மட்டுமே படிக்க முடிந்த பல விஷயங்கள் எழுதப்பட்டிருக்கின்றன. என்னை மிகவும் சங்கடபட வைத்த ஒரு விஷயம் தகவல் தொழிற்நுட்பத்துறையில் மென்பொருள்கள் உருவாக்கம் செய்யும் ஆணையை பெற்றுத் தர பெண்களை அந்த ஆணை வழங்கும் அதிகாரிகளோடு சென்று உல்லாசமாக இருக்க அனுப்பி வைப்பார்கள் என்ற பதிவு வருகிறது. இரவல் காதலியில் இப்பெண்கள் பற்றி எந்த அடையாளமும் சொல்லாமல் மேலோட்டமாகவும், ராஜீவ் காந்தி சாலையில் நிறுவனத்தில் பணிபுரியும் பெண்களையே அப்படிப்பட்ட காரியங்களுக்கு அனுப்புவார்கள் என்ற பதிவும் வருகிறது. அப்படி அனுப்பப்படும் பெண்கள் நிறுவனத்தில் பணியழுத்தம் மிகுந்த குழுவில் இருந்தாலும், வேலை எதுவும் செய்யாவிடினும் எந்த கேள்வியும் கேட்கப்பட மாட்டார்கள். அவர்களுக்கு இன்னுமின்னும் பணியில் உயரம் அடைய வாய்ப்புகள் நிறையவரும் என்ற பதிவுகள் உள்ளது. இது மிகவும் கண்டிக்கத்தக்கதும், வருத்தமளிப்பதும் ஆகும். இந்தத் துறையில் பதினாறாண்டுக் காலம்  பல்வேறு நிறுவனங்களில் பணிபுரிந்தவள் என்ற சலுகையோடு பெண்கள் மிகவும் கண்ணியமாக நடத்தப்படும் துறைகளில் முதன்மையானது தகவல் தொழிற்நுட்பத்துறை என்பதை உறுதியாகச் சொல்லமுடியும். மேல் சொன்ன விஷயம்  மட்டுமல்லாமல் இன்னும் பல காம சித்தரிப்புகளும், ஒரு மொழி பேசும் கதை மாந்தர்களைப் பற்றிய வன்மமான சித்தரிப்புகளும் நாவலாசிரியரின் மன வக்கிரத்தை மட்டுமே காட்டுகிறது. மேலும் இந்த கட்டுரைக்குத் தேவையான விஷயங்கள் பிற நாவல்களிலும் இருப்பதால் இந்த நாவலைப் பொருட்படுத்தி மதிக்க தேவையற்றது என்றே எனக்கு தோன்றுகிறது.

வனநாயகன் வெளியான வருடம் 2017 ஜனவரி. எழுதியவர்  அரூர் பாஸ்கர். இதில் வெளிநாட்டில் பணம் சம்பாதிக்கப் போய், பாதியில் வேலையிழந்து தவிக்கும் கதைக்களம். இதிலும் மூன்று விரல் போல வெளிநாடுகளில் அவதியுறும் தொழிற்நுட்பத்துறையாளர்கள் சார்ந்த பதிவு வருகிறது. தொழிற்நுட்பதுறையில் மிக முக்கியமான பிரச்சனை மொழி சார்ந்தது. இதன் பயனாளர்கள் பெரும்பாலும் அயல்தேசத்தவர்களே அதில் அவர்களில் ஆங்கில மொழியைக் கூர்ந்து நோக்கி அறிந்து கொள்வதற்கே தனிப்பயிற்சி வேண்டும். இந்த நாவலில் முதல் அத்தியாயத்திலேயே மலாய் மொழியில் பேசும் ஒருவனுடன் மன்றாட வேண்டியது போன்ற ஒரு காட்சி வரும். வேற்று மொழியாளரிடம் ஆங்கிலத்தில் பேசிய குற்றம் சாற்றிக் கதை சொல்லிப் பணி நீக்கம் செய்யப்படுவார். அதன் பின்னர் கதைசொல்லியின் வேலை பறிக்கப்பட்டதன் காரணத்தைத் துப்பறிவது போலவே மொத்த நாவலும் இயங்குகிறது.  மேலும் வன நாயகன் நாவலில் பல இடங்களில் துறை சார்ந்த வார்த்தைகளும், மென்பொருள் உருவாக்கக் கோட்பாடுகளும், திட்ட வரையறைகளும் அதன் செயல்பாடுகளும் அப்படியே விளக்கப்பட்டிருக்கின்றது. தகவல் தொழிற்நுட்பத்துறை பற்றிய அறியாத வாசகர்களுக்கு இந்த விளக்கம், வர்ணனைகள் எவ்விதம் புரியுமென்றும் அல்லது அது அந்த புனைவிலிருந்து விலகிச் செல்ல வழிவகுக்குமோ என்பதில் எனக்குக் கொஞ்சம் சந்தேகம் இருக்கிறது.

2017 டிசம்பர் வெளியான பெயல் சென்னை வெள்ளத்தைப் பற்றிய கதைக்களம், இதில் சென்னை வெள்ளத்தில் பலியாகும் ஓரிரு நபர்கள் பேய் போல உலவிக் கதை மாந்தர்கள் சிலருக்கு நல்லதையும் சிலருக்குக் கெடுதலையும் செய்வது போன்ற தன்மையில் மாய எதார்த்த கதை போல இதனை வடிவமைக்க முயன்றிருக்கிறார் சைலபதி. ஆனால் அது கை கூடியிருக்கிறதோ இல்லையோ கதைசொல்லியின் காதலி பணிபுரியும் நிறுவனமுள்ள அந்த கட்டிடத்தில் வார இறுதியில் நிலவும் அமானுஷ்ய அமைதி, வாரநாட்களின் பரபரப்பு இவை யாவும் மிகத் தெளிவாகப் பதிவாக அவை உதவியிருக்கின்றன. 2017 டிசம்பரில்  வெளியான தமிழ் பிரபாவின் நாவல் பேட்டை. வடசென்னை மக்களை ரத்தமும் சதையுமாகக் காட்டும் இந்த நாவலில் தகவல் தொழிற்நுட்ப சார்ந்த பதிவுகள் அதன் உள்ளரசியல்கள் எதுவுமே இல்லை என்றே சொல்ல வேண்டும். இந்த நாவல் சென்னையின் சிந்தாதரிபேட்டையின் வரலாற்றையும் அங்கே தற்சமயம் வாழும் சிலரைப் பற்றியும் அவர்களின் வாழ்க்கை முறைகளையும் பதிவிடுகிறது. கதை மாந்தரில் ஒருவர், கிட்டதட்ட நாவலை எழுதுபவர் பணிபுரிவது தகவல் தொழிற்நுட்பத் துறை என்பது போன்ற பதிவுகள் உள்ளன. அலுவல்களைத் துரிதமாக முடித்தால் அமெரிக்க, ஐரோப்பா நிறுவனங்களில் பணி புரிபவர்கள் மனம் திறந்து பாராட்டுவதையும், அதுவே ஆசியக் கண்டத்தில் வாழ்பவர்கள் வேலை செய்வது பணியாளர்களின் கடமை என்ற மனநிலையைப் பதிவு செய்கிறது இந்த நாவல்.  ஒரு காசுக்குக் கூட பிரயோஜனப்படாத வார்த்தைகள் தகவல் தொழில்நுட்ப துறையில் பணிபுரியும் சகபயணி என்றவிதத்தில் அந்த பாராட்டுக்கள் பல நன்மைகளைப் பயக்கும் என்பதை உறுதியாக என்னால் சொல்ல முடியும். பணிச்சுமை பெரியதாகத் தெரியாமல் இருக்க இது போன்ற பாராட்டுகள் பெரிதும் உதவும். அதே சமயம் பேட்டை நாவலில் நாவலாசிரியர் பதிவு செய்திருப்பது போலவே அந்த பாராட்டு வார்த்தைகள் தான் சம்பள, பணி உயர்வுகளுக்கு நமது தரப்பு ஆதாரங்களாக இருக்கும்.  

கார்த்திக் பாலசுப்ரமணியன் நட்சத்திரவாசிகள் 2019 ஜனவரி வெளியீடு அசல் தகவல் தொழிற்நுட்பத்துறை சார்ந்த பல பிரச்சனைகளை பதிவு செய்கிறது. ராஜீவ்காந்தி சாலை நாவலில் இரண்டு மூன்று இடங்களில் தகவல் தொழிற்நுட்ப துறை நிறுவனங்கள் இயங்கும் கட்டங்களில் வாசலிலேயே தனியார் வங்கி ஊழியர்கள் வரிசையாக கடைவிரித்திருப்பது போலப் பதிவு வரும். இவர்களில் வேலை தகவல் தொழிற்நுட்பத்தில் பணிபுரிவர் அனைவரையும் கடனாளிகள் ஆக்குவதே, வீடு, சீருந்து, பிள்ளைகளுக்கு மிக உயர்தரமான கல்வி என்று மிகவும் ஆடம்பர வாழ்க்கைக்கு பழக்குவது இந்த வங்கிக்காரர்களே, தொழிற்நுட்பத்துறையுள் இயக்கும் அதி நுட்பமான அரசியலையும், பணியழுத்ததையும் தாண்டி இவர்கள் பணிக்கு வருவது மாந்தர தவணைகளைக் கட்டவே என்பதை விரிவாகப் பதிவு செய்கிறது. அதைத் தவிரவும் பணியை மிகவும் நேசிக்கும் ஜீவன்களைப் பண சிக்கன நடவடிக்கை என்று சொல்லி ஒரே நாளில் அடையாளங்களை எல்லாம் பிடுங்கிக் கொண்டு ஆகாயத்திலிருந்து பூமிக்கு வீசியெறியும் அவலத்தைப் பதிவு செய்யும் களம். அந்த உலகத்தில் நடக்கும் பெரும்பாலான எல்லா பிரச்சனைகளையும் பேசியிருக்கிறது. நம்மை அந்த உலகத்தில் கொஞ்சம் வாழவைத்திருக்கிறது. 2019 ஆகஸ்டில் வெளியான சுனில் கிருஷ்ணனின் நீலகண்டம் நாவலில் இந்த துறைசார் பதிவுகள் ஒருசில இருக்கின்றன. இந்த நாவலில் பேசுபொருள் மனவளம் குன்றிய ஒரு குழந்தையைப் பற்றியது என்றாலும், நாவல் இத்துறையில் இயங்குவர்களின் கட்டற்ற உணவு பழக்க வழக்கத்தைப் பற்றிச் சொல்லியிருக்கிறது. இரவு பகல் என்று ஓயாத வேலையழுத்தில் அளவுக்கு அதிகமான உணவு உட்கொள்ளும் பழக்கம் என்ன மாதிரியான பக்கவிளைவுகளைக் கொண்டு வருகிறது என்பதை இந்த நாவல் சொல்லியிருக்கிறது. அதீதமாக உணவுப்பழக்கமும், வீட்டு வெளியே உணவுண்ணும் பழக்கமும் இத்துறைசார் மக்களின் பண்பாடாக இருக்கிறது என்பதை மிக நுட்பமாகப் பதிவிடுகிறது இந்த நாவல்.  2021 ஜனவரியில் வெளிவந்த உண்மைகள் பொய்கள் கற்பனைகள் நாவல்கள் தகவல் தொழிற்நுட்பதுறையில் நாற்பதை நெருக்கும் மென்பொருள் பொறியாளரை இளவயது பொறியாளர்கள் எப்படி தனிமைபடுத்துக்கின்றனர் அப்படி தனிமைபட்டவன் எவ்வாறான உளவியல் சிக்கல்களுக்கு உள்ளாகிறான், குழுவோடு அவன் ஒட்டாமல் இருப்பது அவனுக்கு என்னென்ன பிரச்சனை கொண்டு அவன் வாழ்வு எவ்வாறு சிதைகிறது என்பதை மிக வித்தியாசமான வடிவில் சொல்கிறது. முற்றிலும் அறிவு சார்ந்து இயங்கும் இந்தத்துறையில் தலைமுறை இடைவேளை என்ற சிக்கல் இதுவரை கையாளாப்படாத களம்.  இந்த நாவலில் என்னை பாதித்த விஷயம் காமம் இவ்வளவு வெளிப்படையாக இத்துறையில் பேசப்படுவது போல பதிவாகியிருப்பதே.

இடைவேளை நாவலில் ஒரு வாசகம் வருகிறது “சட்டென துடைத்துத் தூர எரிந்துவிட்டது கார்ப்பரேட் உலகம்”  இதுவே தகவல் தொழிற்நுட்பத் துறையின் இயக்கமுறை. எப்போதும் யாரையும் காகிதம் போலக் கசக்கி வெளியே எரியும் ஆயத்தத்தோடே இந்த நிறுவனங்கள் கட்டமைக்கப்படுகின்றன. இங்கே தவிர்க்கவே முடியாதவர்கள் என்று எவருமே இல்லை. அதைச் சார்ந்த ஊழியர்களின் உளவியல் இயங்குகிறது. இது அனைவர்க்கும் தெரிந்திருக்கும் காரணத்தாலே அவர்கள் எல்லோருமே இயந்திரங்கள் போல எதிலும் அதிகம் ஈர்ப்பு கொள்ளாமல் கொடுத்த வேலை குறிப்பிட்ட வேலை முடிக்கும் உயிருள்ள அறிவுள்ள இயந்திரங்களாக மாற்றப்படுகின்றார்கள்.  தகவல் தொழிற்நுட்ப கனவு உலகம், கற்பனை கண்களுக்கு ஜொலிக்கும் நட்சத்திரம் போன்றது உள்ளே பணிபுரிபவர்களுக்கு மட்டுமே தெரியும் அதன் உக்கிரம் என்னவென்று. அதில் முக்கிய சில பிரச்சனைகளான நேர்முகத் தேர்வு, மொழிசார் பிரச்சனைகள், இன அரசியல், பணியழுத்தம், நுண்ணரசியல் சார்ந்த விஷயங்கள், செலவின குறைப்பு, பணி நீக்கம், பணி நீக்கத்தின் பின்னர் நடந்தேறும் உளவியல் சிக்கல்கள் இன்னும் பலவற்றை இந்த ஒவ்வொரு நாவல்களும் எப்படிக் கையாண்டிருக்கின்றன என்று விரிவாக அலசுவது முக்கியமானது.

நேர்முகத் தேர்வு – தகவல் தொழிற்நுட்ப துறை தொள்ளாயிரங்களின் இறுதியிலும், இரண்டாயிரங்களில் தொடக்கத்திலும் பெருமளவில் இந்தியாவில் நுழைந்த சமயம் பல மாணவர்கள் கல்லூரியை முடிக்கும் முன்னரே கையில் வேலையோடு வெளிவந்தனர். என்ன படித்தாலும் இறுதியில் பணியமர்வது தகவல் தொழிற்நுட்பத் துறையில். இதனை நக்கலாக நட்சத்திரவாசிகள் மெக்கானிகல் படித்த இரண்டு கதாபாத்திரங்கள் தகவல் தொழிற்நுட்ப துறையில் பணிபுரிவது போல சித்தரித்துக் காட்டியிருக்கும். இப்படி வேலை கிடைப்பது வெளியிலிருந்து பார்ப்பதற்கு ஆனந்தமானது ஆனால் இதற்கு இரண்டு கோர முகங்கள் உண்டு. முதலாவது கல்லூரி வளாகத்தில் அதிக மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைக்க வேண்டுமென்பதற்காக ஒரே ஒரு நிறுவனத்தில் வேலை கிடைத்த உடன் மீண்டும் தேர்வுக்கு அமரக் கூடாது என்பார்கள். அதில் முதலில் வரும் நிறுவனங்கள் எல்லாமே மிக நல்ல நிறுவனமாக இருக்க வேண்டிய கட்டாயமுமில்லை. அதே சமயம் வாய்ப்பினை விட்டுவிடவும் முடியாது. அப்படியே தேர்வு செய்யப்பட்டாலும் தேர்வு செய்த நிறுவனம் எல்லா மாணவர்களையும் பணியில் அமர்த்திக் கொள்ளாமல் போகும் வாய்ப்பும் உண்டு. ஆகவே பணியில் சேரும் வரை வேலை கிடைத்து விட்டது என்று ஆசுவாசம் கொள்ள முடியாது. ஒருவேளை அந்த நிறுவனங்கள் பணியில் அமர்த்தாமல் இருக்கச் சொல்லும் காரணங்கள் மிக அபத்தமாக இருக்கும். இதனை நம்பி பெருநகரங்களுக்கு வந்துவிட்ட ஏழை மாணவர்கள் பொருளாதார சூழல் காரணமாக வேறு வழியில்லாமல் கிடைத்த வேலையை செய்வார்கள். அந்த துயரத்தை அதிர்ச்சியைக் கொஞ்சமும் கூட்டிக் குறைக்காமல் இருள் தின்னும் இரவுகள் நாவலில் கனகதூரிகா பதிவு செய்து இருக்கிறார். இதன் இரண்டாவது கோர முகம் அப்படி கல்லூரிகளில் இவ்வளவு நபர்களை வேலைக்குச் சேர்க்க வேண்டுமென்று ஒரு இலக்கு வைத்துக் கொண்டு ஒரே நாளில் ஒவ்வொருவரும் நேர்முக தேர்வாளரும் இயந்திரத்தனமாக நாற்பது முதல் ஐம்பது நபர்களை நேர்முகம் செய்து தேர்வு செய்ய வேண்டும் என்று பணிக்கும். இந்த கொடுமையை இரவல் காதலி நாவல் பதிவு செய்திருக்கிறது. அதில் கதை சொல்லி ஒரு பெண்ணை தேர்ந்தெடுத்தற்கு முதல் காரணம் அவள் அணிந்திருக்கும் உடையும், அவளது அழகும் என்பது கூடுதல் அதிர்ச்சி தகவல். நேர்முக தேர்வுகள் சார்ந்த மற்றொரு கோணம் பணி அனுபவம் கொண்டவர்களாக இருந்தாலும் பணியிலிருந்து நீக்கப்பட்டவர்கள் அல்லது தனது வேலையை ஏதோ ஒரு வேகத்தில் பதவி விலகுவதாக கடிதம் கொடுத்தவர்கள் எவ்வாறு பாடுபடுகின்றார்கள் என்று இடைவேளையும், வனநாயகனும், நட்சத்திரவாசிகளும் பதிவு செய்கிறது.

பணியிடம் சித்தரிப்புகள் –  தகவல் தொழிற்நுட்ப நிறுவனங்கள் இயங்கும் கட்டிடங்கள் எல்லாமே பளபளக்கும் கண்ணாடி கட்டிடங்கள். அதனுள் எண்ணற்ற விலையுயர்ந்த வசீகரமான இருக்கைகள் இருப்பிடங்கள். விலையுயர் அலங்கார விளக்குகள். அதீத கலையலங்காரங்கள் கொண்ட வரவேற்பறைகள் என்று பார்க்க ஒரு நட்சத்திர விடுதி போலவே இருக்கும், ஆனால் இதன் பயன்பாடுகள் எல்லாமே குறைவாகவே இருக்கும். இந்த இருக்கைகளில் அமர்ந்து நேரம் செலவளிக்க உண்மையான பணியாளர்களுக்குப் பொழுதோ மனமோ வாய்ப்போ அமைவதில்லை. அவர்கள் இருக்கையெல்லாம் நான்குக்கு நான்கடியில் அமைக்கப்பட்ட சுழல்நாற்காலி மட்டுமே. பகலிலும் எரியும் பளீர் விளக்குகள், எந்த நேரமும் இயங்கும் காப்பி தயாரிக்கும் இயந்திரங்கள், எப்போதும் குளிரூட்டும் ஏசிகளின் இரைச்சல், மூச்சு முட்டச் செய்யும் வாசனையூட்டிகள், விதவிதமான உணவுப் பொருட்களைக் கடை விரிக்கும் உணவு அருந்துமிடங்கள் என்ற ஒரு மாய உலகம் இந்த நிறுவனங்கள். இதில் நகைப்புக்குரிய விஷயம் இந்த காப்பி தயாரிக்கும் இயந்திரம், குளர்பானங்கள் சேமிக்கும் குளிர்பதனூட்டிகள், ஏசி எல்லாமே வாடகைக்கு எடுக்கப்பட்டிருக்கும். இரண்டு அல்லது மூன்று மாத வாடகை அதன் விலைக்கு இணையானதாக இருக்கும். இந்த கட்டிடங்களுக்கு திங்கள் முதல் வெள்ளி வரை ஒரு அசுர முகமுண்டு. வார இறுதியில் அதுவே அமைதி பூங்காவாக அல்லது அசந்து உறங்கும் குழந்தை போலக் காணப்படும் இந்த காட்சியைப் பெயல் மிக அழகாக பதிவு செய்து இருக்கிறது. இந்த நிறுவனங்களில் குளிரூட்டிகளை இயக்குவதில் கூட உள்ள அரசியலை  பதிவு செய்கிறது நட்சத்திரவாசிகள். வெளிநாட்டிலிருந்து வாடிக்கையாளர்களோ அல்லது அதே நிறுவனத்தின் மேலதிகாரிகளோ வரும் போது அவை பதினெட்டு டிகிரி செல்சியஸில் இயக்கப்படும் அப்போது வாசனையூட்டிகளும் அதிகப்படியாக இருக்கும் என்று சொல்லியிருப்பது மிக நுட்பமான பதிவு.

மொழி சார்ந்த பிரச்சனை – தகவல் தொழிற்நுட்ப துறை இந்த அளவுக்கு இந்தியாவிற்குள் நுழைந்த முக்கிய காரணம் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் இந்த மென்பொருளை உருவாக்க அவர்கள் செலவளிக்கும் வெள்ளிகளில் ஐந்தில் ஒரு பங்கில் இந்தியாவில் செய்துவிட முடியும். அவ்வாறு செலவு செய்து தயார் செய்யும் பொருட்களை வாங்கும் பயனாளர்களும் பெரும்பாலும் ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில் வாழ்பவர்களே. ஆகவே அவர்களுக்கு என்ன தேவையென்று சொல்வதும், பின்னர் பயன்பாட்டில் என்ன பிரச்சனை என்று சொல்வதும் அயல்நாட்டவரே. அயல்நாட்டுப் பயனாளர்கள் அனைவரும் ஆங்கிலத்தை வேறு விதமாகப் பேசுவார்கள் அல்லது அவர்களில் உள்ளூர் புழங்கு மொழியை பொறுத்து அவர்களது ஆங்கிலம் வேறு விதமாகத் திரிந்திருக்கும். அவர்கள் அனைவருக்கும் இந்தியர்கள் பேசும் ஆங்கிலம் புரியும் ஆயினும் மதிக்க தகுந்ததாக இருக்காது. நட்சத்திரவாசிகள் நாவலில் ஒரு கதாபாத்திரத்துக்கு அவருடைய பயனாளரிடம் மொழியை புரிந்து கொள்ளாமல் பல்வேறு சிக்கல்கள் எழும். அதற்காக அவர் பிரத்தியேகமாக ஆங்கில பயிற்சி மேற்கொள்ளும் பதிவுகள் வருகின்றது. இது மிக முக்கியமான ஒருவிஷயம். நமது தொழிற்நுட்ப கல்லூரிகளிலிருந்து மந்தை மந்தையாக ஒவ்வொரு வருடமும் வெளிவரும் பொறியாளர்கள் பெரும்பாலோருக்கு ஆங்கிலம் பேசுவதும் எழுதுவதும் மிகப் பெரிய சவால். அதுவும் ஒவ்வொரு உரையாடலும் ஆங்கிலத்தில் தான் செய்ய வேண்டும் என்பதே பெரும் மன உளைச்சலைத் தரவல்லது. அதுவே பயனாளர்கள் பேசும் ஆங்கிலத்தைப் புரிந்து கொள்ளாமல் ஏதேனும் மென்பொருளில் குளறுபடியானால் அவ்வளவு தான். ஒட்டு மொத்த நிறுவனமும் அந்த ஒற்றை அப்பாவி மேல் தனது உட்சபட்ச ஆயுதங்களைச் செலுத்தத் தொடங்கும்.  வனநாயகனில் வரும் மொழி சார்ந்த பிரச்சனை வேறு விதமான அரசியலைப் பதிவு செய்யும். அந்த நாவலின் பேசப்படும் மென்பொருள் களம் வங்கியிணைப்பு. அதில் சில தில்லுமுல்லுக்களைச் செய்து பணமோசடி செய்ய இருந்த இடத்துக்குத் தன்னையறியாமல் போய் சிக்கிக் கொள்ளும் கதைசொல்லியிடம் மோசடி செய்ய இருந்தவன் வேறு மொழியில் பேசுவான். பின்னர் இதனை அரசியல் செய்து பயனாளரை அவமதித்தாக சொல்லிப் பணி நீக்கம் செய்யப்படுவார் கதைசொல்லி. ஆக மொழி சார்ந்த பிரச்சனை தகவல் தொழிற்நுட்ப துறையில் மிகவும் மன உளைச்சல்களை தரக்கூடிய ஒன்று. இருள் தின்னும் இரவுகள் நாவலிலும் மொழி சார்ந்த உச்சரிப்புகளைச் சரி செய்ய வேண்டி ஒரு மாதம் பயிற்சி நடப்பது போல ஒரு காட்சி பதிவாகிறது.

பெருநிறுவன கலாச்சாரம் –  தகவல் தொழிற்நுட்ப துறையின் வித்தியாசமான இன்னொரு முகம் இன்று பணிக்கு நுழைந்த கல்லூரி கல்வியை முடித்த இளைஞன், நிறுவனத்தின் தலைவரை பெயர் சொல்லி அழைக்க முடியும். இது மேலைநாடுகளிலிருந்து இந்தியாவுக்குப் பரவிய கலாச்சாரம். வயது அல்லது வேலை அனுபவம் சார்ந்த மரியாதை சுவர்களைக் கட்டமைத்தால் பணி நிமித்தமான சந்தேகங்களை எளிதாக நெருங்கிக் கேட்டுத் தெரிந்து கொள்ளத் தடையெதுவும் இருக்கக் கூடும் என்பதாலும், அப்படிப்பட்ட எந்த அற்பமான விஷயமும் பணியைப் பாதித்துவிடக் கூடாது என்பதற்காகவும்  இந்த கலாச்சாரம் உருவானது. எந்த காரணம் கொண்டும் பயனாளர்கள் பாதிக்கப்படக் கூடாது. அதற்கு எளிய அணுகுமுறையில் குழுவினர் அனைவருமிருந்தால் பணி எளிதாக முடிய வாய்ப்புகள் அதிகம் என்ற கணிப்பு. மேலும் பெயர் சொல்லி அழைக்கும் போது இளகுவான சூழ்நிலையும், நெருக்கமான குழு உணர்வும் வரும் வாய்ப்புகள் அதிகம். இரவல் காதலி நாவலில் நிறுவனத்தில் மிக உயர்ந்த பதவியில் இருக்கும் நபரை நிறுவனத்தில் ஆறு மாதத்துக்கு முன்னரே சேர்ந்த திறமைசாலி பெண் “நாங்கள் செய்யும் பணிக்கு நீங்கள் பாராட்டை பெறுவீர்கள்” என்று கிண்டலாகச் செல்வது போன்ற காட்சி வரும். அந்த பெண்ணும், அவள் குழுவின் தலைவனும், நிறுவன உயர் அதிகாரியும் நிறுவனத்துக்கு அந்த பெண்ணால் கிடைத்த பெரிய பணி ஒப்பந்தத்தைக் கொண்டாட நட்சத்திர விடுதியில் உணவருந்திக் கொண்டிருப்பது போன்ற காட்சியில் இது சொல்லப்படும். இது தகவல் தொழிற்நுட்ப துறை தவிர வேறு எங்குமே காணக்கிடைக்காத ஒன்று. அது மட்டுமல்ல குழுவில் இணைக்கத்தை கட்டமைக்க வேண்டி மனிதவளத் துறை வல்லுநர்கள் பயிற்சியரங்கங்களை நிறுவனத்தின் உள்ளேயே நடத்துவதும் உண்டு. மேலும் இந்த நிறுவனங்கள் சமூக அக்கறையுடன் செயல்படுகிறோம் என்று பெயரிட்டு சமூக நலம் சார் விஷயங்களையும் அவ்வப்போது செய்வது இந்த கலாச்சாரத்தின் இன்னொரு முகம். அப்படிப்பட்ட பயிற்சிகள், சமூகப் பணி செய்யும் கதையாளர்கள் சார்ந்த பதிவுகள் ராஜீவ் காந்தி சாலையின் வரும். இவ்வாறான கருணை கொண்ட ஏற்ற தாழ்வுகள் கொஞ்சமும் இல்லாத ஒரு உள் சமூகத்தைக் கையாளும் அதே நிறுவனங்களில் பணியாளர்கள் ஏன் உதிரியாகவே இருக்கின்றனர் என்பதை ஒரு போதும் கவனிப்பது இல்லை என்பது ஒரு நகைமுரண். ஒருவேளை தொழிலாளர்கள் உதிரியாக இல்லாமல் ஒன்றுபட்டால் அதற்கான விலையைக் கொடுக்க நிறுவனங்கள் விருப்பாதது காரணமாக இருக்கலாம். இந்த கலாச்சாரத்தின்படி அனைவரும் சமமானவர்களே என்ற கட்டமைப்பை தலைமுறை இடைவெளி நுட்பமாக உடைப்பதை அழுத்தமாக கையாளுகிறது உண்மைகள் பொய்கள் கற்பனைகள். ஆம் இந்த நிறுவனங்களில் நிர்வாக இயங்குனர்களைக் கூட பெயர் சொல்லி அழைப்பார்கள். ஆனால் பெயர் சொல்லி அழைப்பதால் மட்டுமே குழு ஒற்றுமையோ, இணக்கமோ, நிற இன சாதி வேறுபாடுகள் கலைந்தெரியப்பட்டதா என்ற கேள்வியை மிக ஆழமாக எழுப்புகிறது. மேலாளர்களை தன்னலத்துக்காக தேவையில்லாமல் புகழ்வது செயற்கைத்தனமாக இயங்கும்  போலிமனிதர்களை நிறங்களை குறியீடாகக் கொண்டு சித்திரிப்புகள் செய்யப்பட்டிருக்கின்றன.

பணியழுத்தம் – தகவல் தொழிற்நுட்ப துறையின் மிக முக்கியமான பிரச்சனை பணியழுத்தம். மன உளைச்சல். அளவுக்கு அதிகமான சம்பளத்தைத் தருகிறோம் ஆகவே இவர்கள் எல்லோரும் அளவுக்கு அதிகமான வேலை செய்ய கடமைப்பட்டவர்கள் என்ற இந்திய முதலாளித்துவ மனநிலை பெரும்பாலான மேலாளர்களிடமிருக்கிறது. மேலாளர்கள் தனது குழுவின் உறுப்பினர் அனைவருமே ஒரு நிமிட நேரம் கூட வீணாக்காமல் வேலை வாங்க வேண்டுமென்று நினைப்பார்கள். குறிப்பிட்ட நேரத்தில் வேலையை முடித்துக் கொடுத்தாலும் ஒருவேளை வேலையை முடிக்கக் கொடுத்த கெடு அதிகப்படியோ என்ற எண்ணமே கொண்டிருப்பார்கள். அலுவலின் முன்னேற்றங்களை பார்க்க மாதமொருமுறை என்று இருந்திருந்த திறனாய்வுகள், மதிப்பீடுகள் வாரமொரு முறை என்று மாற்றிக் கொண்டு அதிலும் நிறைவடையாமல் தினமும் நேற்றென்ன நடந்தது இன்றென்ன செய்வீர்கள் என்று கேட்கும் கட்டமைப்புக்குள் நுழைந்து நுண் மேலாண்மைகளை செய்யத் தொடங்குவார்கள். அதுவும் போதனென்று ஏதேனும் வலைப்பக்கத்தில் என்னென்ன நடக்கிறது என்று பதிவு செய்யச் சொல்வார்கள். அதே  சமயம் சில நிறுவனங்களில் மொத்த குழுவில் சிலர் மிகச் சோம்பேறியாக எதையும் செய்யாமல் இருப்பதும், அவர்கள் வேலையும் சேர்த்து இன்னொருவர் செய்வதுபோன்று ஏற்ற தாழ்வுகளும் அதிகமாக நடக்கும் இந்த சித்திரங்களை ராஜீவ் காந்தி சாலை பதிவு செய்கிறது, ஒரு சில பணியாளர்கள் நிறுவனத்தை ஏமாற்றுவதன் பொருட்டு பணி இயந்திரங்களில் பொருத்தப்பட்டுக் கண்காணிப்பு மென்பொருள்கள் எல்லா பணியாளர்களையும் மன உளைச்சலுக்கு உள்ளாக்குவதை நட்சத்திரவாசிகள் பதிவு செய்கிறது. அந்த நாவலில் பணியாளர்கள் தனது கணினியில் எவ்வளவு நேரம் வேலை செய்தார்கள். எவ்வளவு நேரம் வீணாகக் காலம் கழித்தார்கள், எப்போது இருக்கையிலிருந்து எழுந்து சென்றார்கள் என்ற நேரப்பட்டியல்களை மேலாளருக்கு வழங்கும் கணினி செயலியை ஒவ்வொரு பணியாளர்களின் கணினிகளில் நிறுவுவது போன்ற சித்தரிப்பு வரும். பணிக்கு இந்த நேரத்துக்கு வந்து விட வேண்டும், இவ்வளவு நேரம் அலுவலகத்தில் இருக்க வேண்டுமென்ற எல்லா கட்டுப்பாடுகளுடன் இயங்கும் இந்த நிறுவனங்கள், பணி நிமித்தம் அயல்நாடுகளிலிருந்து வரும் நேரம் காலமற்ற அழைப்புகளையும் கையாள வேண்டும் என்று பணிக்கும். பெரும்பாலான மென்பொருட்கள் தயாரிப்புகளில் உலகத்தின் இரு துருவங்களில் இருப்பவர்கள் இணைந்து செயல்படும் போது இரவு நேரங்களிலும் பணி நிமித்தம் வரும் அழைப்புகளை நிராகரிக்க முடிவதில்லை. அது நள்ளிரவைத் தாண்டி தொடர்ந்தாலும் மறுநாள் நேரத்துக்கு அலுவலகத்தில் இருக்க வேண்டும். எல்லா பணிகளையும் திறம்படச் செய்யவும் வேண்டும். இந்த பணியாளர்கள் குடும்பத்துடன் செலவளிக்கும் நேரம் மிகக் குறைவாக இருப்பதை மனைவி மக்களைப் பார்ப்பதே அவர்கள் உறக்கும் போது என்பது போன்ற காட்சிகள் ராஜீவ்காந்தி சாலையிலும், நட்சத்திரவாசிகள் இரண்டிலுமே வெகு அழுத்தமாகச் சித்தரிக்கப்பட்டிருக்கின்றன. பேட்டை நாவலில் மேலே சொன்னது போலக் குறிப்பிட்ட அளவுக்கு அதிகமான வேலையைச் செய்து கொடுத்த பின்னரும் மரியாதை நிமித்தம் நன்றியோ பாராட்டோ சொல்லாமல் அடுத்த வேலையைச் சுமத்துவதும் பலமடங்கு மன அழுத்தத்தை உண்டாக்கவல்லது. பாராட்டு வார்த்தை எல்லாமே அடுத்த சம்பள, பணி உயர்வுக்கான பாதையை அமைக்கக் கூடும் என்ற இடத்தில் மேலாளர்கள் மிகக் கவனமாக அதனை தாண்டி நகர்ந்துவிடுவார்கள். 

தங்குமிடம் சார்ந்த சித்தரிப்புகள் – பெருநகரங்களில் மட்டுமே இயங்கும் தகவல் தொழிற்நுட்ப துறையில் பணிபுரிய நகரை நோக்கி வரும் இளம்பிராயத்தினர் தங்குமிடங்கள் மிக முக்கியமான் மற்றொரு அம்சம். பணம் கொடுக்கும் விருந்தாளிகள் என்று பொருள்படும் பெண்களுக்குகான தங்கும் விடுதிகள் பற்றிய பிரத்தியேகமான சித்தரிப்புகள் இருள் தின்னும் இரவுகள் நாவலில் வருகின்றன. இந்த விடுதிகளில் காலை மதிய, இரவு உணவுகள் வழக்கப்படும். ஒரே அறையில் இரண்டு முதல் ஐந்து பெண்கள் உறங்கும் வண்ணம் 5க்கு இரண்டரை அடி கொண்ட படுக்கைகள் தாராளமாக நடக்கக் கூட முடியாதபடிக்கு அடுக்கப்பட்டிருக்கும். இந்த விடுதியில் தங்கும் பொருட்டு தனது சம்பளத்தை அதிகமாகச் சொல்லி அவமானப்படும் ஒரு பணியாளரைப் பற்றிய சித்தரிப்பு இந்த நாவலில் வரும். மேலும் இவ்வாறு தங்கியிருக்கும் போது உடன் தங்கியிருப்பவர்களில் விபரீதமான போக்கினால் கதை சொல்லி அனுபவிக்கும் பல்வேறு தொல்லைகளையும் இந்த நாவலில் மிக நுட்பமாகப் பதிவாகியிருக்கும். நான்கைந்து பேர் தங்கும் அந்த அறைக்கு ஒரே ஒரு கழிப்பறையுடன் கூடிய குளியலறையிருக்கும். மேலும் உடைமாற்றக்கூட மறைவிடங்கள் இருக்காது. இரவு பணி முடித்து வரும் பணியாளர்களுக்கு பகலில் உறங்க முடியாத வண்ணம் உடன் தங்கியிருக்கும் மற்ற பெண்கள் சத்தம் செய்து கொண்டிருப்பார்கள். அதே போல இரவில் விரைவில் உறங்க நினைப்பவர்களுக்கும் விளக்கை விரைவில் அணைத்து விட முடியாத தொல்லைகள் இருக்கும். சதா தொலைப்பேசியில் யாருடனாவது பேசிக் கொண்டிருப்பார்கள். இது போன்ற தங்குமிடம் சார்ந்த பல பதிவுகள் இருள் தின்னும் இரவுகள் நாவலில் உள்ளது. நட்சத்திரவாசிகள் நாவலில் வாகனம் ஓட்டுநர் தனது தங்குமிடத்தின் இடநெருக்கடியைத் தனது சொந்த ஊரில் தன் மிகப்பெரிய வீட்டோடு ஒப்பிட்டு எழுதியிருப்பார். மிக அருமையான பதிவு. சொந்த ஊரை, மிகப் பெரிய வீட்டை, சொந்தங்கள் பந்தங்களை விட்டு கான்கிரிட் காடுகளில் வாழ்வாதாரம் என்ற ஒரே ஒரு காரணத்துக்காக வாழ்வது எவ்வளவு பொருந்தாத வாழ்க்கை கனகதூரிகா சொல்வது போலத் தொழில்நுட்பத் துறையில் வேலை என்பது எவ்வளவு பொருந்தாத வேலை?

உல்லாச பயணங்கள், பார்ட்டிகள் – பெருநிறுவன கலாச்சாரத்தின் இன்னொன்றாக வருவது தனது குழுவில் இணக்கத்தைப் பிணைப்பை உண்டாக்க மதிய உணவு வெளியில் சென்று அருந்துவது, வருடம் ஒருமுறை வெளியூர்களுக்கு உல்லாச பயணம் செல்வது மாதந்தோறும் குழுவினரின் பிறந்தநாளைக் கொண்டாடுவது, வருட இறுதியில் ஒன்றாக வெளியில் ஏதேனும் உல்லாச விடுதியில் குழுவாகப் போய் வருவது, வெளிநாடுகளுக்குப் போகும்போதோ போய் வந்த உடனேயோ பெரிய விடுதியில் மதிய உணவைக் குழுவினர் அனைவரையும் அழைத்துச் செல்வது என்று பல நடைமுறைகள் இருக்கும். இருள் தின்னும் இரவுகள் நாவலில் வருட இறுதியில் நடக்கும் உல்லாச பயணம் எவ்வாறு இருக்கும் என்று விரிவாகச் சொல்லும் நுட்பமான பதிவிருக்கிறது. நட்சத்திரவாசிகளில் வெளிநாட்டிலிருந்து திரும்பும் கதைசொல்லி தனது குழுவினர்க்கு ஏதோ நிர்ப்பந்தத்தின் பெயரில் மதிய உணவுக்கு விருப்பமின்றி செலவு செய்வது போன்ற நுட்பபதிவு இருக்கிறது. ஒரு மதிய உணவுக்குக் கிட்டத்தட்ட தனது ஒருமாத குடும்ப செலவினை செய்வது போன்ற பதிவு நிஜத்தில் அந்த மகிழ்ச்சியைக் கொண்டாட வேறு உருப்படியான செலவு செய்யலாமே என்று வாசிக்கும் நம்மை யோசிக்க வைக்கும். இங்கே எல்லா கொண்டாட்டங்களும் இயந்திரத்தனமான அது இன்னொரு வேலை போல நடப்பது இந்தத் துறையில் மட்டுமே. 

செலவின குறைப்பு என்பது தகவல் தொழிற்நுட்பத்துறை சமீப காலமாகக் கண்டுவரும் மிகப்பெரிய சிக்கல். கிட்டதட்ட 2000 வரையிலிருந்த ஆடம்பர செலவுகள் எல்லாவற்றையும் இரண்டாயிரத்து இரண்டு மூன்று காலகட்டத்தில் இருந்த பொருளாதார வீழ்ச்சியின் போது படிப்படியாகக் குறைக்கத் தொடங்கின இந்த பெருநிறுவனங்கள். இரண்டாயிரத்துப் பத்துகளுக்குப் பிறகு கொத்து கொத்தாக ஆட்குறைப்பு, பல நிறுவனங்கள் மூடப்படுவது அல்லது அடிமாட்டு விலைக்குப் பிற பெரிய நிறுவனங்களோடு இணைதல் இப்படிப் பல விஷயங்கள் நடந்தேறின. பல்வேறு பொருளாதார ஏற்ற தாழ்வின் போதும் ஒவ்வொரு நிறுவனமும் கையில் எடுக்கும் ஆயுதம் செலவின குறைப்பு ராஜீவ் காந்தி சாலை நாவலில் முதல் சில அத்தியாயத்திலேயே தனது எல்லா கிளைகளிலும் காப்பி தேநீர் தயாரிக்கும் ஆட்களை நீக்கிவிட்டு அதற்குப் பதிலாகக் காப்பி தயாரிக்கும் இயந்திரங்களை வாங்கி வைப்பது என்ற முடிவை நிறுவனத்தின் முதலாளி சொல்வது போல இருக்கும். மேலும் உயர்தர தொழில் இலச்சினை பெற்ற தண்ணீர் புட்டிகளை வாங்குவதற்குப் பதில் விலை குறைவான தண்ணீர் புட்டிகளை வாங்குவது போன்ற சித்தரிப்புகள் வந்திருக்கும். இதே செலவின குறைப்பு என்ற காரணத்தைக் காட்டியே நல்ல பணியாளரை வேலையில்லாமல் பைத்தியம் பிடிக்கும் நிலைக்கும் தள்ளுவது போன்ற சித்தரிப்பு வரும். நட்சத்திரவாசிகள் நாவலிலும் இரக்கமற்ற பணி நீக்கும் நடவடிக்கை அதே செலவின குறைப்பின் பெயரிலேயே நடந்தேறும். இது மிக நுட்பமான அரசியல். அவ்வாறு பணி நீக்கம் செய்யப்படும் பணியாளர் மிகச் சிறந்த பணியாளராக இருந்தாலும் தனது வாழ்க்கை முழுவதும் அந்த நிறுவனத்தின் முன்னேற்றத்திற்காக மட்டுமே செலவளித்தாலும் அவர் மேல் இந்த நிறுவனங்களுக்கு எந்த இரக்கமும் இருக்காது. ஒரு காசுக்குக் கூடப் பெறாத அடையாள அட்டையைக் கூட அவரிடம் பிடிக்கத் தயங்காது. எந்த அளவுக்குக் கருணை கொண்டவை என்று இந்த நிறுவனங்கள் காட்டிக் கொள்கின்றனவோ அந்தளவுக்கு அவை இரக்கமற்றவை மனிதநேயமற்றவை. அப்படி செலவினத்தைக் குறைக்கப் பெருநிறுவனத்திலிருந்து வெளியேற்றப்பட்ட கதை மாந்தரின் மனச்சிக்கல்களை வாழ்வியல் பிரச்சனைகளை சித்தரிக்கிறது இடைவேளை. வேலை என்பதும் வருமானம் என்பதும் மனிதனுக்கு எவ்வளவு மிடுக்கைக் கொடுக்கிறது அது இல்லாமல் போகும் போது எவ்வளவு அவமானமுறுகிறான், மனச்சிதைவடைகிறான் அல்லறுகிறான் என்று பல கோணங்களில் இந்த நாவல் படம் பிடித்துக் காட்டுகிறது. பெருநிறுவனங்களில் வேலை செய்யும் போது மருத்துவ காப்பீடு முதல் இன்னும் பல்வேறு பாதுகாப்புகள் இருக்கும், வேலை போன பின்னர் எதற்குமே காப்பீடு கிடையாது. குடும்பத்திலிருப்போர் கூட ஆறுதலோ அரவணைக்கும் வார்த்தைகளையோ சொல்வது சில நாட்களுக்கு மட்டுமே என்று மிக அழகாகப் பதிவு செய்கிறது.

எல்லா துறையினர் போலவே தகவல் தொழிற்நுட்ப துறையிலும் நடக்கும் நுட்ப அரசியலில் ஒன்று தனக்குப் பிடிக்காதவரை  மிக எளிதாக அவமானம் செய்வது, அது மிக நன்றாக வேலை செய்பவராக இருந்தாலும் தன்னை மீறி வேறு வழியில் தனது தேவையை நிறைவேற்ற முற்பட்டால் எல்லாவிதத்திலும் அவரை நிராகரிப்பவர்கள் உண்டு. அவர் கருத்துக்கு எந்த மதிப்பும் கொடுக்காமல் அவர்கள் சொல்வது எல்லாமே தேவையற்றது என்பது போல நிராகரிக்கும் மேலாளர் மிக திறமை வாய்ந்த பணியாளர்களைப் பைத்தியங்களாக ஆக்குவார்கள். இந்த பதிவு நட்சத்திரவாசிகளில் இருக்கிறது. பெயல் நாவலில் குழுவின் எல்லோர் முன்னும் இப்படி வேலையே தெரியாமல் வந்து ஏன் உயிரை எடுக்கின்றீர்கள் என்று சொல்லி கதைசொல்லியின் காதலியை அவமானம் செய்வார்கள். எந்த கருத்தையும் எதிர்மறை கருத்தையும் சொல்லத் தகுந்த அந்தரங்கம் இருக்க வேண்டும் என்று மனிதவள கோட்பாட்டறிக்கைகள் உண்டு இருந்தாலும் இதெல்லாம் இங்கே சாதாரணம் பணியாளர்கள் எல்லோரும் ஒன்றுக்கும் உதவாதவர்கள் என்று உள் உணர்வோடும், தாழ்வுணர்வோடும் வைத்திருக்க மேலாளர்கள் தனிப் பயிற்சி எடுத்துக் கொண்டு வருவார்கள். இது மட்டுமல்லாது தன்னை அவமானம் செய்த மேலாளர் மேல் பாலியல் துன்புறுத்தல் என்று தகாத புகாரை செய்யத் தயங்காத பணியாளர்களும் உண்டு என்பதைப் பதிவு செய்வது இரவல் காதலி. அங்கீகாரம் சார்ந்த அரசியல்களும் இந்த துறையில் மிகச் சாதாரணம். அங்கீகாரம் என்பது கண்துடைப்பே, முதல் நாள் விருது பெறும் கதை மாந்தர் மறுநாள் தனது வேலையை ராஜினாமா செய்யும் போது மேலாளர் கொஞ்சமும் வருத்தம் கொள்வதில்லை என்று பதிவு செய்து அதிரவிடுகிறது நட்சத்திரவாசிகள். பணி முடிக்கும் வரை தொடர் அங்கீகாரம் பெறும் கதைசொல்லி அற்ப காரணத்துக்காகப் பணி நீக்கம் செய்யப்படுவதைப் பதிவிடுகிறது வனநாயகன். உண்மைகள் பொய்கள் கற்பனைகள் நாவலிலும் மூத்த தலைமுறையில் இருக்கும் பொறியாளரை இளம்பணியாளர்கள் பலமுறையில் அவமானம் செய்கின்றனர்.

இன அரசியல் – பெரும்பாலான தகவல் தொழிற்நுட்ப பெருநிறுவனங்கள் சென்னை, பெங்களூரு, பூனே, நொய்டா, குர்காவுன் போன்ற நகரங்களில் பெரிய அளவில் இயங்குகின்றன, இந்த நிறுவனங்களில் உள்ளூர்வாசிகள் மட்டுமல்லாது எல்லா மாநிலம் சார்ந்த மக்கள் வந்து வேலை செய்கின்றனர். பிற துறைகளைப் போலவே இந்தத் துறையிலும் ஒரே மொழி பேசும், ஒரே மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் குழுவாகச் சேர்ந்து உணவருந்த போவது, பணியிடம் தாண்டி குடும்ப நண்பர்களாக வலம் வருகின்றனர். இவ்வாறு குழுக்கள் உருவாகும் போது அங்கே சில குழு அரசியல்களும் உருவாகின்றன. ராஜீவ்காந்தி சாலை நாவலில் ஒரு மொழி பேசும் மக்கள் எல்லோரையும் மிகவும் கயவர்கள் போலவும், கீழ்மை குணம் படைத்தவர்கள் காசுக்காக எதையும் செய்யத் துணிந்தவர்கள். எல்லாவித விட்டுக்கொடுத்தல்களையும் செய்து தான் பணி உயர்வு பெற்றனர் என்று சித்தரிக்கும் பல காட்சிகளும், கட்டமைப்புகளும் வசனங்களும் வந்திருக்கின்றன. அந்த மொழி பேசும் மக்கள் மீதான நாவலாசிரியரின் வன்மத்தையே இது வெளிப்படுத்துகிறது. வனநாயகன் நாவலில் தமிழ் அல்லாத தென்னிந்திய மொழி பேசும் ஒரு நபரின் உச்சரிப்பைக் கிண்டல் செய்து அவர் இன்ன மொழி பேசும் நபர் என்று சித்தரிப்பைச் செய்திருப்பார். நட்சத்திரவாசிகள் நாவலில் குறிப்பிட்ட மொழி பேசும் பெண்ணை அவளுக்குத் தகுதி தகுந்த வேலையைக் கொடுக்காமல் அவளை மன உளைச்சலுக்கு உள்ளாக்கும் சித்தரிப்பு வருகிறது. அவள் பேசும் மொழியும் அவளது மேலாளர் பேசும் மொழியிலிருந்து வேறுபட்ட மொழி, பாலின வேறுபாடு சார்ந்த மற்றொரு நுட்பமான பதிவு நட்சத்திரவாசிகள் நாவலில் இருக்கிறது. கொடுத்த வேலையை மிகத் திறம்படச் செய்யும் திறமைசாலி பெண்ணை பிரசவ விடுப்பிலிருந்து திரும்பிய காரணத்தால் அடிக்கடி விடுப்பெடுக்க வாய்ப்புண்டு என்று ஒரு பணிக்குழு அவளைத் தேர்ந்தெடுக்கத் தயங்கியது என்று வரும் பதிவு மிகவும் முக்கியமானதும் நுட்பமானதுமாகும். பேட்டை நாவலில் பதிவாகியிருக்கும் இன அரசியல் ஒருவித நகைச்சுவையோடு அதீத கற்பனையோடு எழுதப்பட்டிருக்கிறது. அதில் இலங்கையை சார்ந்த பயனாளர் ஒருவர் கதைசொல்லி தமிழன் என்று பழிவாங்கும் நோக்கோடு குறைகளைக் கண்டறிகிறார் என்று முன்முடிவுக்குக் கதைசொல்லி வந்திருப்பார். இது வெறும் கற்பனை என்று நினைத்து நகர்ந்து விட முடியாது. தனது வாழ்வாதாரத்தை பிடிக்கும் இந்தியர்களை வெறுக்கும் இன வெறியர்கள் பல கண்டங்களில் நிஜத்திலும் உண்டு. பிற நாடுகளுக்குப் பயணமாகும் இந்திய தொழிற்நுட்பதுறையினர் பலரும் சந்திக்கும் மிக முக்கியமான பிரச்சனைகளில் இதுவும் ஒன்று. இந்த களம் மிக விரிவாக எழுதப்பட வேண்டிய களமாகும். சாதி அரசியலையும், அதனால் பணியுயர்வு உள்ளிட்ட பாதிப்புகளுக்கு உள்ளாவது போன்ற சித்தரிப்பு உண்மையகள் பொய்கள் கற்பன்னைகள் நாவலில் உண்டு. 

மென்பொருள் தயாரிக்கும் நிறுவனங்களில் பொறியாளர்கள், மேலாளர்கள், உயர் அதிகாரிகள் தவிர காவலாளிகள், வாகன ஓட்டிகள், கட்டிடம், புல்வெளியை பராமரிப்பவர்கள், தரை, கழிவறைகளைச் சுத்தம் செய்பவர்கள். பணியிடத்து மிக அருகில் பெட்டிக்கடைகளை வைத்திருப்பவர்கள் என்று பல்வேறு தொழிலாளர்களும், சிறு தொழில் முனைவர்களும் இருப்பார்கள்.  ராஜீவ்காந்தி சாலை நாவலில் வாகன ஓட்டிகள், அவர்களை ஒப்பந்தத்தில் பணியமர்த்தியிருக்கும் பணியாளர்கள், பெரிய கண்ணாடி வளக்கத்திற்கு வெளிய பழைய தள்ளுவண்டியில் பழம், சிகரெட் போன்றவை வியாபாரம் செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்ட வேறு வாழ்வாதாரங்களை எல்லாம் இழந்த வயதான பெண்மணி அவர்களில் கதை, வாழ்க்கை பின்னணி என்று விரிவாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது ஆனால் அவர்கள் எல்லோருமே ஒரு பதுமைகளாக வந்து போகின்றனர். நாவலுக்கு வலு சேர்க்கும் ஒரு சில கதாபாத்திரங்களைக் குறிப்பிட்டு சொல்லிவிடலாம். நட்சத்திரவாசிகள் முதல் அத்தியாயத்திலிருந்தே இந்த ஒப்பந்த தொழிலாளர்கள் வருவார்கள் இவர்கள் ஒவ்வொருவரும் நாவலில் மையக்கருவான “பின்க் ஹேன்ட் ஷேக்” என்ற நிகழ்வில் ஏதேனும் ஒருவகையில் பிணைக்கப்பட்டிருப்பார்கள். உதாரணத்துக்கு ராமசுப்பு என்ற காவலாளி அந்த நிகழ்வு நடக்கும் போது அசம்பாவிதம் எதுவும் நடக்கக் கூடாதென்று வரவழைக்கப்படுவார், இப்படி ஒரு துன்பியல் சம்பவத்துக்கு தானும் ஒரு சாட்சியாகப் போவது தெரியாமல் முதல் நாள் இரவுபணி முடித்து அதிகாலை நான்கு மணிக்கு திரும்பியவரை, எட்டுமணிக்கு முக்கியமான வேலை நீங்கள் வரவேண்டுமென்று சொல்லி அழைத்திருப்பார்கள். அவரை அலுவலகத்துக்கு விட வந்திருக்கும் வரும் வண்டியின் வாகன ஓட்டுநர் அவருக்கும் அது நீட்டிக்கப்பட்ட பணியாக அமைந்திருக்கும் ஒருவரை ஒருவர் உறக்கத்தை விரட்டிக் கொள்ள ஊர்கதை பேசி, தேநீர் அருந்தி வேலைக்குச் செல்வார்கள். இதில் பின்னணியாக முன்பே சொல்லியது போலச் செலவின குறைப்பு என்ற கட்டமைப்பும் இருக்கும். இருந்தாலும் அவர்களின் வாழ்வைத் துயரங்களை மிகச்சிறப்பாக நட்சத்திரவாசிகள் காட்சிப்படுத்தியிருக்கும். அதே போலவே நிறுவன வளாகத்திலுள்ளேயே இயங்கும் பெட்டிக்கடை போன்ற ஒன்றில் இருக்கும் மணி என்ற சிறு தொழில் முனைவரிடம் அந்த பெரிய நிறுவனத்தில் பணிபுரியும் பொறியாளர் கடன் வாங்கியிருப்பார். வாங்கும் சம்பளம் எல்லாம் கடன் தவணைக்கு போய் விடும் போது வருமான வரி சேமிப்புக்கு திடீரென பெரிய தொகை கட்ட கடன் வாங்குவதாக பதிவு செய்யப்பட்டிருக்கும். பளபளக்கும் கண்ணாடி மாளிகையில் லட்சங்களில் புரளும் பல பொறியாளர்களின் நிலை இதுவே.

பெருநகரங்கள் இந்த துறையின் மூலம் அடைந்த நன்மைகள் சில அவற்றுள் ஒன்று பலருக்கு நல்லவேலையும் வாழ்க்கையும் மேலும் இந்த நிறுவனங்களைச் சார்ந்த ஒப்பந்த தொழிலாளர்கள் பலரது வாழ்வாதாரம் என்ற நன்மைகள், ஆனால் விளைந்த தீமைகளில் முக்கியமானது நகர விரிவாக்கம், அதன் பொருட்டு விவசாய நிலங்கள் குடியிருப்பு மனைகளாகவும், பெரிய நிறுவனங்களுக்கு விற்கப்படுபவையாகவும் மாறியது, நிலமோசடிகள், குற்றங்கள், போக்குவரத்து நெரிசல், கை மீறிய காசு கொடுக்கும் தீய பழக்கங்கள் என்று பட்டியலிடலாம். நகரப் பெருக்கத்தால் விளைந்த பல்வேறு இயற்கை சூழல் சீர்கேடுகள் பொருட்டு விளைந்த மாபெரும் வெள்ளம் எல்லாமே ஒரு தொடர் நிகழ்வுகள். இவை சுற்றுச் சூழலுக்கும், நகரங்களுக்கும் கொண்டு வந்த பாதிப்புகள் ஒருபுறமிருந்தாலும், சமூக தனிமனித உளவியலை இந்த பெருநிறுவனங்கள் எவ்வாறெல்லாம் பாதித்து என்பதை மிக அருமையாக இடைவேளை நாவலில் சொல்லியிருக்கும் சில வரிகள் கொண்டே எழுதிவிட முடியும்  பெருநிறுவனங்களில் வேலை பார்க்கும் போது எதையும் நினைத்துப் பார்க்க நேரமில்லாமல் ஓடிக் கொண்டேயிருக்கும் வாழ்க்கை எல்லாமே என்னால் தான் நடக்கிறது என்று பெருமிதம் அது தரும் வேலையின் மீதான போதை இது மனசிக்கல்களுக்கான தொடக்கம். இந்த நிறுவனங்களுக்கு உள்ளே இருக்கும் போது எல்லாம் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும் அதே நேரம் இன்னுமின்னும் என்று ஒப்பீடுகளைச் சொல்லிச் சொல்லி இதைத் தவிர வேறு எதைச் செய்யவும் திறமையற்றவர்கள் என்று அவநம்பிக்கையை உருவாக்கிவிடுகிறது.  இடைவேளை நாவலில் வரும் ஒருவரி இந்த துறையில் பணிபுரிபவர்களின் மனப்போக்கை எளிதாகச் சித்தரிக்கும் “ பார்க்கறதுக்கு தான் ஐடி வேலை கவர்ச்சியா இருக்கும் ஹை கிளாஸ் கூலிகள். எல்லாம் நல்லா போச்சுன்னா மண்டை கனம் ஏறிக்கும். கீழ விழ ஆரம்பிச்சா பிடிச்சிக்க பிடிமானம் கூட கிடையாது” என்ற வரிகள் இந்த நிறுவனத்தில் இயங்கும் எல்லோருக்கும் பொருந்தும். எப்போதுமே இந்த துறையுள் இயங்கும் ஊழியர்களின் ஆழ்மனநிலை பாதுகாப்பின்மையும், நம்பிக்கையின்மையும் கொண்டே அலைவுரும். இத்தனை தாண்டி இந்த பணியை என்னைப் போலவே பைத்தியக்காரத்தனமாய் காதலிக்கும் பல கதைமாந்தர்களை இங்கே பட்டியலிடப்பட்ட நாவல்களில் காணலாம்.

இத்துறையின் மிக முக்கியமான பிரச்சனைகளான பணி நிரந்தரமின்னை, வேலை போன பின்னர் கசக்கி எரியப்பட்ட காகிதங்களாக வாழச் சபிக்கப்பட்ட மனிதர்கள், பணி அழுத்தம், பணியிடத்தில் நிகழும் நுண் அரசியல், இரவு பணியினால் உண்டாகும் மன உளைச்சல்கள், உடல் கோளாறுகள் போன்ற பல்வேறு விஷயங்கள் இந்த நாவல்களில் சித்தரிக்கப்பட்டாலும் இந்த துறையில் இன்னும் எழுதப்படாத பல பக்கங்கள் இன்னும் இருக்கின்றன. புதிது புதிதாக மாறும் தொழிற்நுட்பம் அதை எப்போதும் பந்தயக் குதிரைகள் போலத் துரத்தி பிடித்து தன்னை எப்போதுமே மேம்படுத்திக் கொண்டே இருக்க வேண்டிய கட்டாயம் இந்த துறையின் முக்கியமான சிக்கல். கல்லூரி படிப்பு முடித்து விட்டு வரும் இளம்பிள்ளைகளுடன் போட்டிப் போட்டு மென்பொருள்களை கட்டமைக்க வேண்டிய சவால் அது உண்டாக்கும் மன அழுத்தம், சிக்கல்கள் இது மற்றொரு மிகப்பெரிய களம். மேலும் பயனாளர்கள் இடத்துக்கே போய் வேலை செய்யும் ஒப்பந்த தொழிளாளர்களுக்கு உரிய பல்வேறு பிரச்சனைகள் அவர்களால் குழுவோடு இணைங்க முடியாத மனோநிலையிருக்கும், ஒப்பந்த பொறியாளர்களுக்கும் முழுநேர பொறியாளர்களும் கிடைக்கும் இடையே நடக்கும் ஒப்பீடுகள் போன்ற பல சிக்கல்கள், உளவியல் பிரச்சனைகள். மென்பொருள் ஒப்பந்தம் பணியாளர்களுக்கு இருக்கும் மற்றொரு பிரச்சனை அவர்கள் அடிக்கடி நேர்முகத் தேர்வுக்கு போக வேண்டிய  கட்டாயம் இருக்கும், நிறுவனத்தில் வருமானம் ஈட்டு தருபவர்களுக்கும் (billing candidate), வருமானம் ஈட்டாதவர்களுக்குமிடையே மேலாளர்கள் காட்டும் பாகுபாடு இவையாகவும் மிக முக்கியமான களங்கள், தகவல் பாதுகாப்பு பொருட்டு இந்த துறையுள் நடக்கும் கோட்பாடுகளும் அதன் மீறல்கள் பின் விளைவுகள், இயந்திரமயமாக்குதல் பின் விளைவுகள், பணி இழந்ததன் பொருட்டு புதிய நிறுவனங்களைத் தொடங்கிய சிறு தொழிலதிபர்கள், தொடர்ந்து பணி மாற்றம் செய்வதால் நட்பு வட்டம் இல்லாமல் தவிக்கும் ஊழியர்களின் சமூக அந்தஸ்து, பாதுகாப்பு, நம்பதன்மை சார்ந்த உளவியல் சிக்கல்கள், ஒரு பணியின் குழு உலகில் பல்வேறு மூலைகளில் பணிபுரிவதால் அவர்களுக்கிடையே நடக்கும் ஒருங்கிணைப்பு அவர்களுக்கு எந்தெந்தவிதமான சிக்கலைக் கொண்டு வருகிறது முக்கியமாக உறக்க நேரத்தை இந்த தொலைப்பேசி வழி நடக்கும் பின்னிரவு கலந்துரையாடல்கள் எப்படிப் பாதிக்கின்றன அவை உண்டாக்கும் உறவுச் சிக்கல்கள் என்னென்ன என்று எழுத ஏராளமான விஷயங்கள் இந்த துறை சார்ந்து ஏராளம் மிச்சமிருக்கின்றன. வரும் காலம் அப்படிப்பட்ட நாவல்களை ஆவலோடு எதிர்நோக்கியபடி இந்த கட்டுரையை நிறைவு செய்கிறேன்.

பழனிக்குமார், மதுரை

நண்பர் ஒருவர் கார் வாங்க வேண்டும்,” என்ன வாங்கலாம் “என்று கேட்டார். நான் ஒன்றும் கார் விசயத்தில் அல்லது டெக்னிக்கல் விசயங்களில் பெரிய நிபுணத்துவம் பெற்றவன் எல்லாம் இல்லை. கார்களை வேடிக்கைப் பார்க்கும் பழக்கம் உண்டு. அதனால் ஓரளவு அது பற்றிய செய்திகள் இருந்தால் படிப்பதுண்டு. “செவரால்ட்” கம்பெனி நிறுவனத்தின் ஓர் ஆலையை மூடுவதாய் அறிவித்ததும் , அந்த நிறுவனத்தின் கார் ஒன்றை வாங்கவேண்டும் என்று முடிவு செய்திருந்த நண்பர் ஒருவருக்கு அது பற்றி பேசியிருந்தேன். 

ஆக, ஒரு கார் வாங்க வேண்டும் என்றால் அந்த நிறுவனம் பாதியிலேயே ஆலையை மூடிக்கொண்டு போய்விட்டால், அந்த நிறுவனத்தை நம்பி காரை வாங்கிவைத்திருப்போர் சர்வீஸ், மற்றும் உதிரிப்பாகங்களுக்கு எங்கு செல்வது?!காரில் ஏற்படும் பிரச்சினைக்கு எங்கு போவது?!. அப்படியென்றால் கார் வாங்க வேண்டுமானால் அந்த நிறுவனத்தின் விற்பனை எப்படி இருக்கிறது , இந்தியாவில் அதற்கானச் சந்தை எப்படி இருக்கிறது என்பதை எல்லாம் பார்க்கவேண்டியிருக்கிறது. 

2005ம் வாக்கில் ஓர் உறவுக்காரர்,” டி சி எல் என்ற கம்பெனி சிடி ப்ளேயர் தான் வளைகுடா நாடுகளில் பிரசித்தம் மாப்ளே” என்று அதை வாங்கப் பரிந்துரைத்து, ஆளும் பார்க்க ஜாம்பவானாய் இருக்கிறார், “இன்” லாம் பண்ணிருக்கிறார், ரோட்டில் அவரைப்பார்த்து நான்கு பேர் வணக்கம்போடுகின்றனர் என்று அவர் பரிந்துரையும் செல்லுபடியாகும் என்று அதை வாங்கினேன். ஒரிஜினல் சிடி போட்டால் தான் அந்த ப்ளேயர் வேலை செய்யும். அந்தக் காலகட்டத்தில் கிடைக்கும் எந்த சிடியும் அதில் ஓடவில்லை. சர்வீஸ் செய்வதற்குத் தகுதியான ஆட்கள் கிடைக்கவில்லை. என் பணம் வீணாகிப்போனது தான் மிச்சம். 

நாம் சார்ந்திருக்கும் பொருளை வாங்கப்போகும்பொழுது என்ன எல்லாம் பார்க்கவேண்டியதாயிருக்கிறது. போன மாதம் கூட வாஷிங்மிஷின் வாங்கவேண்டும் என்று நண்பரிடம் பேசினேன். “ஐ எஃஃப் பி” தானே மார்க்கெட் லீட் ( பொதுவாகவே, நான் விற்பனைத் துறை என்பதனால், எந்த நிறுவனத்தையும் அதன் சந்தையில் அதனின் விற்பனை , கள நிலவரம் போன்றவற்றில் கவனம் செலுத்துவதில் எனக்கு ஆர்வம் உண்டு) 

ஆனால் என் நண்பன் சொன்ன விசயம் ஐ எஃப் பி க்கு மோட்டர் சப்ளை செய்துகொடுத்த போஷ் நிறுவனம் தனியாகக் களத்தில் இறங்கியதில் கொஞ்சம் யோசிக்கவேண்டும் என்று. நெடு நாட்களாய் நம்பிக்கையாய் விற்றுக்கொண்டிருந்த ஒரு இயந்திரத்தின் பின் நிர்வாகச்சீரமைப்பு நடக்கும்பொழுது அந்த இயந்திரத்தின் நம்பகத்தன்மை கூடுமா குறையுமா என்றும் நாம் பார்க்கவேண்டியதாயிருக்கிறது. 

நாம் நுகரும் ஒரு பொருள் வாகனமோ, வீட்டு உபயோகப்பொருளோ எதுவாக ஆயினும் அதன் கடந்தகால சரித்திரம் என்ன, களத்தில் அதனின் நிலைப்பாடு என்ன, வருங்காலம் இதே போல் நிரந்தரமாய் இருக்குமா, நாளை ஏதாவது பிரச்சினை என்று போனால், அந்த நிறுவனம் இன்னும் ஐந்து வருடங்களுக்கு அந்தப் பிரச்சினையைத் தீர்க்கத் தகுந்த வல்லமை கொண்டுள்ளதா என்றுலாம் நாம் பார்க்கிறோம் தானே. 

தலைமையிடம் தவிர, நம் வீட்டுக்கு அருகில் சர்வீஸ் நிலையங்கள் இருக்கிறதா என்றும் சர்வீஸ் செய்துகொடுப்பவர்கள் நம் மாவட்டத்தில் நம் பகுதியில் நமக்கு இணக்கமாய் இருப்பார்களா என்றுலாம் கூட நாம் பார்த்தால் தானே நாம் போடும் முதலீடு வீணாகப்போகாமல் பலன் தரும் வகையில் இருக்கும் . நாம் நம் வீட்டில்வாங்கும் பொருள் வெறுமனே நம் பணம் அல்ல. அது நம் உழைப்பு. நாம் வேலைபார்ப்பதற்குக் கிடைத்த ஊதியம். அதற்காக நம்மைச் சார்ந்தோர் நமக்காகச் சில தியாகங்களைச் செய்திருப்பார்கள். அவர்களின் தியாகமும் தான். இப்படியான உழைப்பும் தியாகமும் சேர்த்து காணிக்கையாக்கி ஒரு நிறுவனத்தின் மீது ஓர் இயந்திரத்தின் மீது நம்பிக்கை வைக்க, இவ்வளவு விசயங்களைப் பார்க்கவேண்டியதாகி இருக்கிறது. 

நிற்க.

இது உங்கள் வீட்டு உபயோகப்பொருள் கண்காட்சிக்குரிய கட்டுரை இல்லை. ஓர் இயந்திரத்திற்கு நீங்கள் காட்டும் அக்கறை, உங்கள் வீட்டிற்கு நீங்கள் காட்டும் அக்கறை தானே ஒரு நாட்டிற்கும். 

தேர்தல் வருகிறது. 

லெட்டர்பேட் கட்சிகள் எல்லாம் தன் சாதிக்காரர்களைக் கூட்டி கூட்டம் காண்பித்து, பராக்கிரமம் காண்பித்து சாலையில் வந்துகொண்டிருக்கிறார்கள். 

தமிழகத்தில் அண்ணாவிற்குப் பின் எந்தத் தேசிய கட்சியும் எழவில்லை என்பது உண்மை. தமிழகத்தில் இருப்பது வெறும் ‘கட்சி அரசியல்’ அல்ல. தமிழகத்தில் இருப்பது ‘கொள்கை அரசியல்’. ‘கொள்கை அரசியலை’ வார்த்தெடுத்ததன் விளைவு தான் பல துறைகளில் தமிழகம் முன்னேறிக்கொண்டு வருவதும், சமத்துவம் ஓரளவிற்கு இங்கு பேணப்படுவதும் அந்த அச்சாணியில் தான். இப்பொழுது நிலைமை வேறு. இந்தியா முழுதும் தன் மதக் கொள்கைகளை நிலை நிறுத்தும் ஃபாசிச முகங்கள் தமிழகத்தில் தலைதூக்கியுள்ளன. அதில் ஒன்று தான் புது கட்சிகள் முளைப்பது. 

தமிழகத்தில் பிஜேபியின் இலக்கு என்பது, ஆட்சியை பிஜேபி பிடித்து முதல்வராய் இருப்பது அல்ல. அவர்களது இலக்கு அதிகாரமையமாய் இருப்பது. அதிகாரமையமாய் ஒருவன் இருப்பதற்கு அவனுக்குப் பதவி முக்கியமானது அல்ல. தமிழகத்தில் பிஜேபியின் திட்டம் ஒன்று தான். தனக்குச் சாதகமான ஓர் ஆளை ஜெயிக்கவைப்பது. அவர்களுக்குச் சாதகமான ஓர் ஆள் (?) இப்போதைக்கு திமுக இல்லை(இப்போதைக்கு). ஆதலால், தனக்குச் சாதகமான ஆள் ஜெயிக்குறானோ இல்லையோ, தனக்குச் சாதகமாய் இல்லாத  ஆள் ஜெயிக்கக்கூடாது என்பது தான் பிஜேபியின் இலக்கு. கிட்டத்தட்ட நான் வாழாவிட்டாலும் பரவாயில்லை எதிரி வாழக்கூடாது என்ற கண்ணோட்டம்.

தமிழகத்தில் பிஜேபியினர் வேலை பார்ப்பதை உற்று நோக்குங்கள். அவர்கள் தேர்தலில் அவர்கள் ஜெயிப்பதற்கு வேலை பார்க்கவில்லை. திமுகவைத் தோற்கடிக்கத் தான் வேலை பார்க்கிறார்கள். அவர்களது முகமாக ஆளும் அதிமுகவைக் கையில் வைத்துக்கொண்டிருக்கிறார்கள். அதிமுகவின் ஆளும் தலைமை மீது பிஜேபி க்கு இருக்கும் நம்பிக்கை,  அதிமுகவின் உண்மையான விசுவாசிகள் மீதும், அதிமுக விற்கு ஓட்டுப்போட்ட அபிமானிகள் மீதும், அதிமுகவிற்கு ஓட்டுப்போட்ட அதிருப்தி திமுக ஓட்டுகள் மீதும் இல்லை. ( இந்த இடம் உங்களுக்குப் புரியவில்லை எனில் மறுபடியும் படிக்கவும்) 

பிஜேபியின் தமிழக இலக்கு அரியணையில் தன் அடிமையை அமரவைப்பது என்பது தான் நிதர்சனம். அதிமுக மீதான அதிருப்தி ஓட்டுகளைத் திமுக விற்கு போகவிடாமல் தடுப்பது தான் பிஜேபியின் வேலை. அதற்கான முகம் தான் ரஜினி அண்ட் கோ வருவது. 

கதைக்கு வாருங்கள். 

நீங்கள் கார் வாங்கப்போகிறீர்கள்.

நீங்கள் ஒரு கட்சிக்கு ஓட்டுப் போடப்போகிறீர்கள்.

கார் தயாரிக்கும் நிறுவனத்தின் பின்புலம் பார்ப்பீர்களா மாட்டீர்களா, 

நீங்கள் ஓட்டுப்போடப்போகும் கட்சியின் பின்புலம் என்ன? என்று பார்க்காமல் ஓட்டுப்போடுவீர்களா என்ன?

உங்கள் கார் சார்ந்திருக்கும் நிறுவனம் எதிர்காலத்தில் எந்த நிலைமையில் இருக்கும், நீடித்து இருக்குமா என்று பார்ப்பீர்கள் தானே?

நீங்கள் ஓட்டுப்போடப்போகும் கட்சி தலைவரின் எதிர்காலம் என்ன, அவரது கட்சியில் இரண்டாம் கட்டத்தலைவர்கள் ஜனநாயக அமைப்போடு கட்சியை இன்னும் பல ஆண்டுகளுக்கும் பல தேர்தலுக்கும் கொண்டு செலுத்தும் அமைப்பு கொண்டவர்களா? இல்லை ஒரே தேர்தலோடு காணாமல் போவார்களா, இல்லை அவர் காலத்திற்குப்பின் ஏதாவது ஒரு பெரிய கட்சியோடு இணைத்துக்கொண்டு அவர்களது உறவினர்கள் மட்டும் ஆதாயம் பெறுவார்களா? அப்படி மாறும் தன்மை கொண்டவர்களாய் இருந்தால் அவர்களுக்கு ஓட்டளிக்க முடியுமா என்றும் பார்ப்பீர்கள் தானே?

நீங்கள் வாங்கப்போகும் கார் பிரச்சினை செய்கிறது என்றால் உடனே அணுகி சர்வீஸ் பெறும் அளவிற்கு அவர்கள் திற்மையானவர்களைக் கையில் வைத்திருக்கிறார்களா என்று பார்ப்பீர்கள் தானே?

நீங்கள் ஓட்டுப்போடப்போகும் கட்சியின் கொள்கை, அதன் மூலம் அவர்கள் எதிர்காலத்தில் சமத்துவமான, நம்பிக்கையான அனைவருக்குமான ஓர் எளிய கட்டமைப்பை அமைத்துத் தரமுடியுமா என்று யோசிப்பீர்கள் தானே?

ஒரு மன்னார் அண்ட் கம்பெனி திடீரென ஒரு நாள் காலையில் நான் டாட்டாவைப் போல் காரை உற்பத்தி செய்து தருகிறேன். என்னிடம் வாங்குங்கள் என்றால் வாங்குவீர்களா? ஒழுங்காய் கார் உற்பத்தி செய்து விற்பனை செய்யும் நிறுவனமே கொரோனா கால பிரச்சினையில் திணறுகிறது. இதில் புது நிறுவனத்தை எப்படி நம்புவீர்கள். 

நான்கு பேர் வணக்கம் சொல்கிறார்கள் , இன் பண்ணிருக்கார் என்றும் மாப்ளே என்று என்னை உரிமையாய் அழைத்தார் என்பதற்கும் மயங்கி நான் டி சி எல் சிடி ப்ளேயர் வாங்கி காசை வீணாக்குவது போல், ஒருவரிடம் மயங்கி நாம் ஓட்டளிக்க முடியுமா? 

உங்களுக்குத் தேவை, இப்போதைக்கு வெளிப்படையானச் சமத்துவத்தை நேரடியாகச் சொல்லுகிற , சாதி மதப் பாகுபாடுகள் அற்ற ஓர் அரசாங்கத்தை இதற்கு முன் கட்டமைத்த அனுபவமுள்ள,அல்லது அதைக் கட்டமைத்துத் தருவோம் என்ற நம்பிக்கை / கொள்கை அரசியல் சார்ந்த ஓர் இயக்கத்தைத் தேர்ந்தெடுப்பது தான். 

கேஸ்விலை போன்ற சாமான்யனைப் பாதிக்கும் விலைக்காரணிகள், கடந்த பதினொரு ஆண்டுகளாக இல்லாத பொருளாதார மந்த நிலை, கொரோனா காலத்திற்கு முன்பே தேய ஆரம்பித்திருந்த வளர்ச்சி, ஜி எஸ்டி விலை ஏற்றங்கள், மதம் சாதி களின் பெயர்களால் கொலை , வன்முறை, வேலையில்லாத் திண்டாட்டம், ஜன நாயகத்தின் குரலை நெறிப்பது என்று  எதைப் பற்றியும் கவலைப்படாமல் மதத்தின் பெயரால் மக்களைப் பாகுபடுத்தி அதில் குளிர் காயும் ஃபாசிஸ அரசிற்கு ஒத்துழைத்துப்போகும் நரிக்கூட்டத்தைத் தூக்கி எறிவது தான் ஒட்டு மொத்தச் சமூகத்திற்கும் ஆரோக்கியமான முன்னெடுப்பு. 

எப்படி ஒரு பொருள் வாங்குவதற்கான உங்கள் ஊதியம் உங்களைச் சார்ந்தவர்களின் தியாகத்தாலும் ஆனதோ, அது போல் நீங்கள் போடும் ஒரு ஓட்டு என்பது உங்களைச் சார்ந்திருக்கும் உங்கள் சமூகத்திலும் அந்தத் தாக்கத்தை ஏற்படுத்தும். உங்கள் வீட்டின் தெருமுக்கில் கால் கடுக்க நின்று பூக்கட்டி விற்கும் ஒரு பாட்டிக்குக் கூட உங்கள் ஓட்டு உதவி செய்யலாம். 

மழை வறட்சி புயல் எனப் பல இக்கட்டான நேரங்களையும் தாண்டி மண்ணை நம்பி விவசாயத்திற்குள் தன்னைப் புகுத்திக்கொண்டு இருக்கிறார்களே விவசாயிகள்- அவர்களுக்கும் நீங்கள் போடும் ஒரு ஓட்டு பயனுள்ளதாகவே இருக்கும். 

ஒன்று தெரிந்துகொள்ளுங்கள், உங்கள் எதிரி தைரியமானவன் அல்ல. அவன் நேரடியாகத் தேர்தல் களத்தில் இறங்கி அறத்தின்பொருட்டு மோதுபவன் அல்ல. இங்கிருக்கும் ஓடுகின்ற குதிரையை மிரட்டி உருட்டி அதன் மேல் சொகுசு சவாரி செய்து கடைசியில் அந்தக் குதிரையையே காவு வாங்கும் கிருமிக்காரர்கள் அவர்கள். 

எந்தத் தலைமை , தன் நாட்டின் குடியானவர்கள் மிரட்டும் பனியில் போராட்டம் நடத்திக்கொண்டிருக்கும் வேளையிலும் அவர்கள் பற்றிச் சிறிதும் கவலைகொள்ளாமல் அவர்களை ஜலாய்ப்பு செய்ய அவர்கள் தொழும் தெய்வத்தை வணங்குவது போல் பாவ்லா செய்யத்துணிகிறதோ, அவர்கள் இலக்கு நாட்டின் ஆரோக்கியமான முன்னேற்றம் இல்லை. அழுக்கு ஃபாசிசம் தான். தங்கள் மதக்கொள்கை கள் தான். அவர்களைச் சார்ந்தோரை ஆதரிப்பதும், அவர்களின் முகமாய் வருவோரை ஆதரிப்பதும், அவர்களின் நிழலாய் ஆடுபவர்களை ஆதரிப்பதும் அவர்களுக்கே பலத்தைத் தரும். 

ஆரோக்கியமானச் சமூகத்தை நம் குழந்தைகளுக்கும் நம்மைச் சார்ந்தவர்களுக்கும் நாம் தர விரும்புவது உண்மை என்றால், ஃபாசிஸத்தின் முகமூடி எதுவாயிருந்தாலும் கிழித்தெறிந்து ஜனநாயகத்தின் பொருட்டு, சமத்துவ அரசியலின் பொருட்டு, வேற்றுமையிலும் ஒற்றுமையின் பொருட்டு, ஒரே குரலில், ஒருங்கிணைந்து போராடவேண்டும். நாம் போடப்போகும் ஓட்டு கூட நம் போராட்டத்தின் வடிவம் தான். 

ஜன நாயகத்தை மீட்டெடுக்க மதவாதிகளின் அரசை விரட்டியடித்தே ஆகவேண்டும். 

சு.கஜமுகன் (லண்டன்)

gajan2௦5௦@yahoo.com

அக்டோபர் மாதம் முதல் நைஜீரிய மக்கள் சார்ஸ் (SARS- Special Anti Robbery Squad) என அழைக்கப்படும் சிறப்பு கொள்ளை எதிர்ப்புப் படைக்கெதிராக போராடி வருகின்றனர். 1992 ஆம் ஆண்டு நைஜீரிய அரசினால் உருவாக்கப்பட்ட காவல்துறை அமைப்பான சார்ஸ், பல வருடங்களாக கொலை கொள்ளை வழிப்பறி என பல அட்டுழியங்களை செய்து வந்துள்ளன. மக்களைப்பாதுகாக்கும் நோக்குடன் உருவாக்கப்பட்ட இப் பொலிஸ் படை அமைப்பானது தம் நோக்கத்திலிருந்து முற்றாக விலகி மக்களை அச்சுறுத்தும் ஒரு அமைப்பாக வளர்ந்து வந்துள்ளது. இவ்வமைப்பின் கொடுமைகளை பொறுக்க முடியாத மக்கள் தற்பொழுது வீதிகளில் இறங்கி மிகப்பெரும் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

ஏற்கனவே புகைந்து கொண்டிருந்த கோபம் இளைஞர் ஒருவரின் கொலையோடு வெடித்துக் கிளம்பியது. இளைஞர் ஒருவரைக் கைது செய்து பின்னர் அவ்விளைஞனை சுட்டுத் தள்ளிவிட்டு அவரின் காரினையும் திருடிக் கொண்டு சென்ற சார்ஸ் அமைப்பிலுள்ளவர்களின் செயலானது நைஜீரிய மக்களை மிகுந்த கோபத்திற்கு உள்ளாகியது. இக்காணொளி மக்கள் மத்தியில் வைரலாகியதைத்தொடர்ந்து மிகப் பெரும் போராட்டம் வெடிக்கத் தொடங்கியது. அண்மையில் ஜார்ஜ் பிளாயிட் எனப்படும் அமெரிக்கரின் கழுத்தை நெரித்து கொலை செய்த காணொளி மக்கள் மத்தியில் பரவி எவ்வாறு மிகப் பெரும் போராட்ட்டம் அமெரிக்காவில் வெடித்ததோ அதே போல் இவ்விளைஞனின் காணொளி நைஜீரிய மக்களை கிளர்ந்தெழச்செய்தது.

சார்ஸ் அமைப்பிலுள்ள போலீசார் அப்பாவி பொது மக்களின் மீது பொய்க் குற்றம் சுமத்தல், மிரட்டிப் பணம் பறித்தல் மற்றும் கொலை செய்தல் என பல நீதிக்குப் புறம்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது. ஒருவர் கார், கைமணிக்கூடு, தொலைபேசி, லேப்டாப் போன்றன வைத்திருந்தால் அவர்களை யாஹூ பாய்ஸ் (Yahoo Boys) என முத்திரை குத்தும் சார்ஸ் அமைப்பினர் அவர்களிடமிருந்து அவற்றை பிடுங்கிக் கொள்கின்றனர் .யாஹூ பாய்ஸ் என்றால் சார்ஸ் அமைப்பினரைப் பொறுத்தவரை இணைய திருட்டில் ஈடுபடுபவர் என்று பொருள்.

ஆட்கடத்தல், ஆயுதக் கொள்ளை, சித்திரவதை, சட்டவிரோத உடல் உறுப்பு வர்த்தகம், வீடு புகுந்து கொள்ளையடித்தல், மக்களைக் காணாமல் போகச் செய்தல் எனப் பல ஜனநாயக விரோத கடமைகளில் ஈடுபட்டமையாலேயே மக்கள் இன்று அவர்களுக்கு எதிராக கிளர்ந்தெழுந்துள்ளனர். இலங்கையின் விசேட அதிரடிப் படையினர் யுத்த காலத்தில் எவ்வாறு மக்களுக்கு எதிராக செயற்பட்டர்களோ அதே போன்ற நடவடிக்கைகளையே சார்ஸ் உறுப்பினர்களும் இன்று மேற்கொள்கின்றனர்.

நைஜீரியாவில் உள்ள லாகோஸ் என்னுமிடத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அடக்குவதற்காக மிருகத்தனமாக செயற்பட்டது நைஜீரிய ராணுவம். கண்ணீர்புகை, நீர் பீரங்கி என்பன பயன்படுத்தப்பட்டதுடன் பலரை சுட்டும் கொன்றுள்ளது நைஜீரிய அரசு. 12 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாக அதிகாரபூர்வ தகவல் தெரிவிக்கப்பட்ட போதும், மேலும் பலர் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கலாம் என அச்சம் தெரிவிக்கப்படுகின்றது. மேலும் சுட்டுக் கொள்வதோடு மட்டும் நிறுத்திக் கொள்ளாமல் இறந்த உடல்களை அப்புறப்படுதியும், சம்பந்தப்ப்பட்ட இடத்திலுள்ள சீசீடீவி காமெராக்களை செயலிழக்கச்செய்தும் இச்சம்பவத்தை மறைக்க முயன்றது நைஜீரிய ராணுவம். அத்தோடு நில்லாமல் அரை குறை காயங்களுடன் தப்பி ஓடியவர்களின் மூலம் உண்மை நிலை கசிந்து விடும் என்பதனால் அவர்களைக் கொலை செய்வதற்கு வலை வீசி தேடி வந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மக்களை சுட்டுக் கொன்ற குற்றவாளிகள் மீது எதுவித நடவடிக்கையும் எடுக்காமல் அமைதியாகவிருக்கும் ஜனாதிபதி புஹாரியின் நடைவடிக்கையானது மக்களை மிகுந்த ஆத்திரத்திற்குள்ளாக்கியுள்ளது. மேலும் மக்களின் போராட்டத்தைக் கண்டு கதிகலங்கிய நைஜீரிய அரசு சார்ஸ் கலைக்கப்பட்டு விட்டதாக அறிவித்தது. எனினும் அதற்குப் பதிலாக ஸ்வாட் – SWAT எனப்படும் புதிய அமைப்பு உருவாக்கப்பட்டு அதிலுள்ள காவல்துறையினர் இதில் இணைத்துக் கொள்ளப்படுவார்கள் எனத் தெரிவித்திருந்தது. பழைய கள்ளை புதிய போத்தலில் தரும் நைஜீரிய அரசின் இவ் விளையாட்டானது மக்களை இன்னும் கடும் கோபத்திற்கு ஆளாக்கியது. சார்ஸ் கலைக்கப்பட்டு விட்டதாக நைஜீரிய அரசு கூறினாலும் மக்கள் அதனை நம்பி போராட்டத்தைக் கைவிடத் தயாராக இல்லை. புதிய அரசியல் சீர்திருத்தம் ஒன்றை வேண்டியே மக்கள் தற்போது அப்போராட்டத்தை தொடர்கின்றனர்.

சார்ஸ் என்னும் போலீஸ் படைக்கு எதிராக பலமுறை போராட்டங்கள் நிகழ்த்தப்பட்டாலும் இம்முறை போராட்டம் வீரியமடைவதற்க்கு முக்கிய காரணம் நைஜீரிய நாட்டில் நிலவும் அரசியல் பொருளாதார நெருக்கடிகளாகும். வேலையில்லாப்பிரச்சனை, ஊழல், மின்சாரமின்மை, மோசமான சாலைகள் போன்றன அரசின் மீதான மக்களின் அதிருப்திக்குரிய சில காரணங்களாகும். தொடர்ச்சியான மின்சாரம் வழங்குவதற்கு நைஜீரியாவிற்கு இன்னும் நாற்பத்தியொரு ஆண்டுகள் எடுக்கும் என செனட் சபை அண்மையில் தெரிவித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. இது தவிர அதிகரிக்கும் பணவீக்கத்தால் உணவுப்பொருட்களின் விலை வருடந்தம் 17 வீதத்தால் அதிகரிக்கின்றது. இது தவிர அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலை செய்வோருக்கு முழுமையான சம்பளம் வழங்கப்படாமை, மக்களுக்கான முறையான அரச கொடுபனவுகள் கிடைக்காமை போன்ற காரணிகளால் மக்கள் சாதாரண வாழ்க்கையைக் கூட வாழ முடியாத நிலையிலேயே காணப்படுகின்றனர்

205 மில்லியன் சனத்தொகை கொண்ட நைஜீரியாவின் 102 மில்லியன் மக்கள் வறுமைக் கோட்டிற்கு கீழே வாழ்கின்றனர். அதாவது கிட்டத்தட்ட ஐம்பது வீதமான மக்கள் வறுமையுடன் வாழுகின்றனர். அதிலும் குறிப்பாக 15-34 வயதிற்குட்பட்டோரின் எண்ணிக்கை நாற்பது மில்லியன் ஆகவும் அதில் வேலை வாய்ப்புள்ளோரின் எண்ணிக்கை வெறும் 14.7 மில்லியன் ஆகவுமே காணப்படுகின்றது. நாட்டின் பெருந்தொகையான மக்கள் வேலைவாய்ப்பில்லாதவர்களாகவும் மிகுந்த ஏழ்மை நிலையிலுமே காணப்படுகின்றனர்.

பிரித்தானியாவிடமிருந்து விடுதலை பெற்று அறுபது ஆண்டுகள் ஆகியும் நைஜீரியா இன்னும் வளர்ச்சியடையாமல் இருக்கின்றது. மாற்றத்தைக் கொண்டுவருவேன் என வாக்குறுதி அளித்து 2௦15 இல் பதவிக்கு வந்த புஹாரி மக்கள் நலன் சார்ந்த நடவடிக்கைகள் எதுவும் எடுக்காமல் அதிகார வர்க்கத்துக்கு சார்பாகவே இயங்கி வருகிறார். இதேபோல் தான் 2௦15 ஆம் ஆண்டு மைத்திரிபால சிறிசேனாவும் நல்லாட்சியை வழங்குவேன், மாற்றத்தைக் கொண்டு வருவேன் என வாக்குறுதி அளித்து இலங்கையில் ஜனாதிபதி ஆகியவர் என்பது குறிப்பிடத்தக்கது. அனைத்து அதிகார சக்திகளும் பதவியைக் கைப்பற்ற ஒரே விதமான பொய்களையே உலகம் முழுவதும் கூறுகின்றன. மைத்திரி முதல் புஹாரி வரை அனைவரும் சொல்லி வைத்தாற்போல் மாற்றத்தைக் கொண்டு வரமால் இருந்ததை விட இன்னும் கீழான நிலைமைக்கே நாட்டை கொண்டு சென்றனர்.

2016 – 2020 வரையான காலப்பகுதியில் பிரித்தானிய அரசும் நைஜீரியாவின் சார்ஸ் படைக்கு பயிற்சி மற்றும் இலத்திரனியல் உபகரணங்களை வழங்கி உதவியும் செய்துள்ளதாக தெரிய வருகிறது. அதிலும் குறிப்பாக பிரித்தானியாவால் நைஜீரிய காவல்துறைக்கு வழங்கப்பட்ட வானொலி உபகரணங்கள் சார்ஸ் அமைப்பினரால் பயன்படுத்தப்பட்டுவந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. பிரித்தானியா வழங்கிய உதவியானது மறைமுகமாக மக்களை துன்புறுத்துவதற்கே பயன்படுத்தப்பட்டு வந்திருக்கின்றது என சர்வதேச மன்னிப்புச் சபை குற்றம் சாட்டியுள்ளது. மேலும் நைஜீரிய காவல்துறை மற்றும் இராணுவத்திற்கு பிரித்தானியா அரசு வழங்கிய அனைத்து பயிற்சிகளையும் மறு ஆய்வு செய்யுமாறு ஆயுத வர்த்தகத்திற்கு எதிராக இயங்கும் அமைப்பான CAAT (Campaign Against Arms Trade) கோரிக்கை விடுத்துள்ளது.

பிரித்தானியா உள்ளிட்ட உலகின் பல இடங்களில் நைஜீரிய அரசின் அடக்குமுறையைக் கண்டித்து பல ஆர்பாட்டங்கள் இடம்பெற்றன. மக்கள் நலனை பற்றிச் சிந்திக்காது அதிகாரத்தை மட்டும் நோக்காகக் கொண்டு இயங்கும் புஹாரியின் தற்போதைய அரசு வீழ்த்தப்படவேண்டும். அதற்காக மக்கள் DSM (சனநாயக சோஷலிச இயக்கம்) போன்ற மக்கள் நலனுக்காக இயங்கும் அமைப்புகளுடன் சேர்ந்து பலமான அணியாகத் திரண்டு தமக்கான உரிமையை வென்றெடுக்கவேண்டும். DSM பல சர்வதேச நாடுகளுடன் தமது தொடர்புகளைக் கொண்டிருப்பதால் நைஜீரிய மக்களின் பிரச்சினை சர்வதேசத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அவர்களின் போராட்டம் சர்வதேசமயப்படவைக்கும் முயற்சிகள் நிகழ்கிறது. மக்கள் புஹாரி அரசுக்கு எதிராக ஒரு அணியாகத் திரண்டாலே இது சாத்தியமாகக்கூடும். அத்துடன் இந்த போராட்டத்துக்கான ஆதரவை நாமும் வழங்க வேண்டும்.

 வெளி ரங்கராஜன்

தஞ்சைப் பின்புலத்தில் தமிழின் முக்கிய இலக்கியப் படைப்பாளிகளான கு.ப.ராஜகோபாலன், தி.ஜானகி-ராமன்,எம்.வி.வெங்கட்ராம் ஆகியோர் வரிசையில் வைத்து கணிக்கப்படுபவர் கரிச்சான்குஞ்சு. கு.ப.ராஜ-கோபாலனின் எழுத்துக்கள் மீதுள்ள அபிமானத்தால் அவருடைய கரிச்சான் என்கிற புனைப்பெயரை எடுத்துக்கொண்டு கரிச்சான்குஞ்சு என்ற பெயரில் படைப்புகள் செய்தவர் இவர் 50க்கும் மேற்பட்ட சிறுகதைகள், ஒரு நாவல், 2 குறுநாவல்கள், 6 நாடகங்கள் மற்றும் 5 மொழிபெயர்ப்பு நூல்கள்  என படைப்பிலக்கியத்தின் பல துறைகளிலும் பங்களிப்புகள் செய்தவர். சமஸ்கிருதத்தில் ஆழ்ந்த புலமையும், வரலாறு மற்றும் தத்துவவியல் குறித்த ஈடுபாடுகளும் கொண்ட கரிச்சான்குஞ்சு பல்வேறு வரலாற்று மாந்தர்களையும், சமகால வாழ்வின் விசித்திர மனிதர்களையும் தன்னுடைய படைப்புகளில் உலவவிட்டவர். வறுமை மற்றும் இயலாமைகளுக்கிடையிலும் வாழ்க்கை குறித்த கொண்டாட்ட உணர்வும், அதன் புதிர்த்தன்மை குறித்த பல்வேறு அனுமானங்களும் கொண்டவர். அதனாலேயே எந்த வகைமைக்குள்ளும் சிக்கிக்கொள்ளாமல் வாழ்வின் பன்முகத்தன்மையில் நம்பிக்கை கொண்டு பல்வேறு கருத்தோட்டங்களுடனும் தன்னுடைய தொடர்புநிலையை உருவாக்கிக்கொண்டவர்.

அவருடைய நாடகப் படைப்புகளிலும் இத்தகைய பார்வைகள் எதிரொலிப்பதை பார்க்கமுடியும். சரித்திரத்துடன் உரையாடல் என்கிற அம்சம் கு.ப.ரா, புதுமைப்பித்தன் போன்ற அந்த காலகட்ட படைப்பாளிகளிடம் அதிகமாக வெளிப்படுகிறது. முக்கியமாக வரலாற்றின் குருட்டுப் பார்வையால் கறைபடிந்த பாத்திரங்களை ஒழுக்கம் குறித்த பழமைவாத கண்ணோட்டங்களிலிருந்து விலக்கி புதிய பார்வையில் அப்பாத்திரங்களின் நடத்தைகள் குறித்து ஒளி பாய்ச்சுவது என்பது அவர்களின் உத்தியாக இருந்தது. அவ்வகையில் ராமாயண அகலிகையின் அழகியல் மனம் குறித்தும், அவள் உயிர்பெற்று மீண்டும் கல்லாவது குறித்தும் கு.ப.ராவும், புதுமைப்பித்தனும் புதிய பார்வைகளை தங்கள் நாடகங்களில் வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

அதேபோல் கரிச்சன்குஞ்சுவும் மணிமேகலை காப்பியத்தில் வரும் மாதவி மற்றும் மணிமேகலை பாத்திரங்களை தன்னுடைய `காலத்தின் குரல்`நாடகத்தில் ஒரு புதிய கண்ணோட்டத்தில் உலவ விடுகிறார்.மணிமேகலை எழுதப்பட்ட காலகட்டம் என்பது இந்தியாவில் பெளத்த மதத்துக்கும், சநாதன வைதீக மதங்களுக்கும் இடையே ஏற்பட்ட கருத்துப் போராட்டங்களின் பின்புலத்தில் எழுதப்பட்ட ஒரு காப்பியம்.மாதவி மணிமேகலையை கண்ணகியின் மகளாகவே பாவித்து அவளை நடனமாட அனுப்பாமல் துறவை வலியுறுத்துகிறாள். மணிமேகலையும் புத்த மதத்தில் ஈடுபாடு கொண்டு அது போதிக்கும் துறவுநிலையின் குறியீடாக இருக்கிறாள். தன்னுடைய நடனக்கலையையும், காதலையும் துறந்து அட்சய பாத்திரமேந்தி பசித்தவர்க்கு சோறிட்டு பசிப்பிணி போக்கும் மானுட சேவையில் தன்னை ஈடுபடுத்திக்கொள்கிறாள். உதயகுமாரன் கொலையால் சினம் கொண்ட அரசனும், அரசியும் அவளை பழிவாங்க துடித்தாலும், புத்த மதம் பரப்பிய மாறுதல் என்ற அம்சத்தின் தாக்கத்தை உணர்வதாக கரிச்சான்குஞ்சு நாடகத்தை உருவாக்கியுள்ளார். சடங்குகளையே பற்றிக்கொண்டிருந்த சநாதன இந்து மதத்துக்கும், மடங்களை நிறுவி சாதிப் பாகுபாடின்றி மக்கள்சேவையில் ஈடுபட்ட புத்த மதத்துக்கும் இடையே ஏற்பட்ட கருத்துப் போரில் மணிமேகலையின் பாத்திரம் பிரகாசிப்பதாக கரிச்சான்குஞ்சு அப்பாத்திரத்தை உருவாக்கி தன்னுடைய சமூகவியல் பார்வைக்கு அழுத்தம் கொடுத்துள்ளார்.

அதேபோல் `கழுகு`தொகுப்பில் உள்ள ஐந்து நாடகங்களிலும் காப்பிய மாந்தர் குறித்தும், வரலாற்று மன்னர்கள் குறித்தும் ஒரு கேலிச் சித்திரத்தை உருவாக்கியுள்ளார். `வில் எங்கே` நாடகத்தில் காட்டுக்கு வந்து மரவுரி தரித்தும் வில்லேந்தத் துடிக்கும் ராமனை சீதை கேலி செய்கிறாள். `ஈஸ்வர் அல்லா தேரா நாம்` நாடகத்தில் இரு கடவுள்களும் சமம் என்று போலி ஒற்றுமை பேசும் இந்து அடிப்படைவாதத்தை அம்பலப்படுத்துகிறார். `மேதினி` மற்றும் `ரஸியா சுல்தான்` நாடகங்களில் வீண் சண்டையிட்டு மடிந்த ராஜபுத்திர மற்றும் இஸ்லாம் மன்னர்கள் பற்றியும், அரசியலில் பெண்கள் பகடைக்காய்களாவதையும், பிற்போக்கு வாதங்களை எதிர்த்து பெண் எழுச்சிபெறுவதையும் சித்தரிக்கிறார். `கழுகு` நாடகத்தில் ஆங்கிலேயர் இந்தியாவில் நுழைய ஏதுவாக குறுநில மன்னர்களின் சுயநல ஆசைகளும், அதிகாரப் போட்டிகளும் அமைந்தது சுட்டிக்காட்டப்படுகிறது. இந்த நாடகங்கள் எல்லாம் வரலாற்று சம்பவங்களுக்கு பின்னால் உள்ள மனித பலகீனங்கள் மீது கவனத்தை உருவாக்குவதாக அமைந்துள்ளன.

காப்பியப் பாத்திரங்களும், வரலாற்றுப் பாத்திரங்களும் மாறுபட்ட கண்ணோட்டங்களில் புதிய விளக்கம் பெறும் நாடகக் களன்களை உருவாக்குவது எப்போதும் ஒரு நாடகப் படைப்பாளியின் முக்கிய தேர்வாகவே உள்ளது. ஆனால் பெரும்பாலும் இந்த நாடகங்கள் உரையாடலை மடக்கிப்போட்டு கதைசொல்லும் பாணியிலேயே இயங்குகின்றன. நாடகக் கணங்களை தேர்ந்தெடுத்து அவற்றின் மோதல்கள் உருவாக்கும் ஒரு நாடக இயங்குதளத்தை கட்டமைப்பதும், அந்த வரலாற்றுடனான உரையாடல்களை சமகாலப் பார்வையுடன் செழுமைப்படுத்துவதிலேயே ஒரு நாடகப் படைப்பாளியின் வெற்றி உள்ளது. அதில் குறைந்த அளவில் வெற்றி பெற்றவையே கரிச்சான்குஞ்சுவின் நாடகங்கள் எனக்கூற முடியும். ஆனால் காப்பிய மாந்தர்களையும்,வரலாற்று மாந்தர்களையும் மறுவாசிப்பு செய்வதும், காலத்தின் கேள்விகளுக்கு அவர்களை உட்படுத்துவதும் இப்படைப்புகளில் கவனம் பெறுவது ஒரு நேர்மறையான அம்சம்.

— தி . ஜா. பாண்டியராஜு

‘’ ஒரு பெண்ணின் பெயர் என்னை சிறை பிடித்து வைத்திருக்கிறது

ஒருத்தி என் அன்பை உதறிச்செல்வாளாயின்

காலத்தின் ஊடாக அதிர்வுகளை உண்டாக்கிக்கொண்டிருக்கும்

ஒரு அகண்ட நதி என

என் துயரத்திலிருந்து என் இசையை உருவாக்குவேன் ‘’

  • ஜோர்ஜ் லூயி போர்ஹ

காதலன் மஞ்சள் நதிக் காதலன்

1986 ஆவணி மாதம் சனிக்கிழமை மதியம் அம்பை கல்யாணி திரையரங்கம் அருகில் உள்ள வீட்டில் வாசகர்கள் மூவர் வண்ணதாசனை பார்க்கிறார்கள் . அருமையான பேச்சு அன்பு மயமான உணவுக்கு பிறகு பிரமிப்புடன் அவன்கள் விடைபெறும் போது சாயுங்காலமாகியிருந்தது .

ஒருவன் சுவரில் மாட்டப்பட்டிருக்கும் ஒவியத்தை காண்பித்து

‘’  நீங்க வரைந்ததா சார் ’’ என்கிறான் .

ஒவியத்தில் கூண்டு வண்டிக்குள் முக்காடிட்ட பெண் இருக்கிறாள் கொஞ்சம் தள்ளி இருக்கும் லாந்தரில் இருந்து வரும் வெளிச்சம் அவளுக்கு துணையாக இருக்கிறது .கல்யாணியண்ணன் புன்னகையுடன் சுவர் ஒவியத்தை பார்த்துவிட்டு சொல்கிறார்

‘’ நான் வரைந்து இருந்தால் நன்றாக இருக்கும்  ‘’

மறுபடி நாங்கள் விடைபெறும்போது ‘’ படிச்சிட்டு கோபாலிடம் கொடுத்திடுங்கள் ‘’  என்று குறைந்தது 40 புத்தகங்கள் இருக்கும் தருகிறார். நான் திருமேனியை பார்க்கிறேன். மகரந்தன் வெடுக்கென்று சொல்கிறான் 

‘’ கோவால் … கலாப்ரியா சார் .

குற்றாலத்தில் பருவ நிலை சரியான பதத்தில் இருந்த நாளின் மாலையில் தென்காசி பொது நூலக மாடியில் நின்று கொண்டிருந்தோம். யவனத்தின் தென்றல் வருவதும் போவதுமாக இருந்தது. சட்டென மகரந்தன் கீழே சாலையைப்பார்த்து சொன்னான்

‘’ அதோ கலாப்ரியா போறப்ல ’’

நான் பார்க்கும்போது மக்களிடையே மக்களாக மொட்டைத்தலையுடன் கலாப்ரியா நகர்ந்து போகிறார் .

அப்பா உறங்காத வீடு .

இன்னும் வீடு திரும்பாத சின்னஞ் சிறு கவிதைக்காக ( வயது 8 _ பெயர் மாற்றப்படவில்லை ) காத்திருக்கும் தந்தைதான் கவிஞன் .

கவிஞன் சில வேளைகளில் இருள் விளக்கின் முன் தன் குட்டியூண்டு சிறகு விரித்து பேருரு காட்டுகிறான் . மற்ற எல்லா கணங்களிலும் நம் எல்லோரின்  கூட்டு நினைவுகளின் வசிப்பிடமாக இருக்கிறான். நினைவுகள் யாருடையதாக இருந்தாலும் வலி என்று அறிக . சில ஆண்டுகளுக்கு முன் புலம் பெயர்ந்த நண்பர் ஒருவர் தமிழ்நாடு வருகிறார் . இலக்கிய நண்பர்களுடன் அள்ளி அள்ளிப்பருகிறார். இரவு தீர்ந்து போகிற பதட்டத்தில் கவிஞருக்கு தொலைபேசுகிறார் .

‘’ கலா கார் வாடகை நீங்க தருவீங்கன்னு டிரைவரிடம் சொல்லிவிட்டேன் ஆனா அவரால்  நம்ப ஏலவில்லை நீங்கள் சொல்லுங்கோ .. ‘’

‘’ தம்பி நண்பரை இங்க கூட்டிட்டு வாங்க பேசுனபடி ரூவா நான் தாரேன்

சரி அண்ணாச்சி … உங்க பெயர் என்ன சார் ..’’

சோமசுந்தரம் …

இந்த சார்வா வேற ஏதொ பெயர் சொல்லுதாக .. எனக்கு விளங்கலை..’’

பின்னிருந்து புலம் நண்பரின் குரல் கேட்கிறது

’’.. கலாப்ரியா  கலாப்ரியா  .. ’’ .

அதிகாலை வெளிச்சத்தில் சுடலைமாடன் தெரு . சுந்தரம்  வசியை பார்க்க  மிதிவண்டியில் ஏறுகிறான்

காற்றில் சக்கரங்கள்  ஒளிவேகத்தில்  பின்னோக்கி விரைகின்றன காலம் முழு நீள்வண்ணத்திலிருந்து பிறழ்ந்து வெள்ளை கருப்பாகிறது. தோடுடைய செவியன் . வசி தன் கண்களுக்கு மையிடுகிறாள் . காதில் ஒற்றை தோடு மட்டும் இருப்பதை காண்கிறாள் . இன்னொரு தோடு எங்கே .

காதல் தோடுடைய செவியன் சுந்தரம் மிதிவண்டியை விட்டு இறங்காமல் வசியை சுற்றுகிறான் . 50 வருடங்களுக்கு பிறகும் வசிக்காக மிதிவண்டியை விட்டு இறங்காமல் இயங்கும் சுந்தரை யாருக்காவது நினைவில் இருக்குமா தெரியவில்லை . ஆனால் உறுதியாகச்சொல்கிறார்கள், வசி பூமியின் ஆகப்பிரமாண்டமான தன் காதலனை அறியாள் கூடுதலாக , வசிக்கு தன் பொருட்டு பீறிட்டு பாய்ந்த வெள்ளம் மற்றும் .. இடையறாது ஒடும் நதி பற்றி ஏதுவும் தெரியாதாம்.

வசி தொலைத்த ஒற்றை முத்து தோடுதான் சுந்தர் என்பதும்  யாருக்கும் புரியாமல் போய்விடுகிறது . ஒரு நாள் அதிகாலை கனவில் ,  சுந்தர் காதில் மின்னும் தன் ஒற்றை தோடை வசி பார்க்கிறாள். பின்பு  மறக்கிறாள் . அதே நேரம் கண்விழிக்கும் சுந்தர் கவியாகுகிறான் .

இன்னொரு கனவில் வசி ,  ஒற்றை முத்துவின் வெளிச்சத்தில் சுந்தர் வேகமாக எழுதுவதை பார்க்கிறாள். வசி வசி வசி….வசி வசி …… . ஆற்றுமணலில் மிதித்தெழும் கால்களின் பின்வரும் … வசி வசி வசி   .. என்னும் வார்த்தை கூட்டம். வசி திகைக்கிறாள் .

சொற்களின் நரகம் மிக அருகில் சொர்க்கம் .

சுந்தரை சுடலை மாடனுக்கு நேர்ந்துவிடும் வசி பதட்டத்தில்   ,  மாற்றியமைக்க முடியாத விதியின் பொத்தானை அழுத்திவிடுகிறாள்  . பிறகு எப்போதும் வெயில் பெய்யும் யதார்த்த உலகில் காணாமல் போகிறாள் . நமக்கு இப்போது சூடாக வந்திருக்கும் வேனல் நாவல் வரை எழுத –    கலாப்ரியா கிடைத்துவிடுகிறார் . எப்படி பார்த்தாலும் கவிகள் கலைஞர்கள்  இந்த உலகிற்கு பெரும் தீனிதானே .

சரியாக இரவு 12 மணிக்கு புலம் நண்பர் டாக்ஸியில் வந்து இறங்குகிறார். டிரைவர் கவிஞரிடம் பணத்தை மகிழ்வுடன் பெறுகிறார். கலாப்ரியாவும் நண்பரும் கொஞ்ச  நேரம் பேசுகிறார்கள். விடியும்போது நண்பர் சென்னைக்கு போவதாக சொல்லிவிட்டு புறப்படுகிறார்.

தினசரியின் குரல்களுக்கு முன்னுரிமை தரும்கவிஞர் வீடு நீங்கி பணிக்கு திரும்புகிறார் . வங்கி  வேலையில் தீவிரமாக இருக்கும் கவிஞர். அது வழக்கமான மற்றோரு..  வரும் , போகும் , கரன்சிகளின் நாள்தான் . என்றாலும் கலாப்ரியா மனதில் எப்போதும் போல படிமம் பின் தொடரும் சொற்கள்.. சொற்கள் பின் தொடரும் படிமம் . அல்லது மிகச்சிறிய சொல்லுக்காக ஏங்கும் சொற்பெரும் படை .

திடுமென வங்கியில் கொள்ளையர்கள் போல் நுழையும் ,

போலிசார் ’’ கலாப்ரியா யாரு   ..’’  என்று கேட்கிறார்கள்

‘’ நாந்தான் ‘’ என கவிஞர் சொல்லவும் .. உடனே துப்பாக்கி முனையில்   கலாப்ரியாவை அழைத்து சென்று வெளியில் நிற்கும் ஜீப்பில் ஏற்றுகிறார்கள். ஒரு சிகிரெட் கரையும் நேரத்திற்குள் இதெல்லாம் நடந்து விடுகிறது. அந்த பகுதி முழுவதும் உள்ள மக்கள் வேடிக்கை பார்க்கிறார்கள். அவர்களுக்கு  இது எதிர்பாராத சிறு தின்பண்டம். கவிஞரின் வீடு செல்லும் வழியில் ஜீப்பினுள் காவலர் தலைவர் நேற்று இரவு வந்து சென்ற நண்பரை பற்றி திரும்ப திரும்ப கேட்கிறார் . கவிஞர் உண்மையாக பதில் சொல்கிறார் .

கவிஞரின் வீடு வந்து விடுகிறது . ஏற்கனவே காத்திருக்கும் காவலர் படை, கவிஞரின் வீடு முழுவதும் சோதனையிடுகிறார்கள். சும்மா சாத்தியிருக்கும் அறைக்கதவை திறக்கச்சொல்லும் காவலர்கள் கையில் துப்பாக்கிகள் உள்ளேயிருந்து வரும் தீவிரவாதிக்காக காத்திருக்கின்றன .

கதவு திறந்த பிறகு , அந்த அறையில் துணிகள் தவிர ஒன்றும் இல்லை என்பதை போலிசாரால் நம்பவே முடிவதில்லை . அதன் பிறகு ஏகப்பட்ட கேள்விகள். மறுபடியும் கேள்விகள். எந்த பணச் செலவும் இல்லாமல்  நாம் இஷ்டம்போல் விரயம் செய்யும் தாய் மொழியை கவிஞன் வேறு விதமாக பயன் படுத்துவது அவர்களுக்கு வெறுப்பாகவும் அச்சம் தரும் வினோதமாகவும் இருக்கிறது.

இப்போது   , அதற்குள் காவலர் சமூகத்தை உள்வாங்கிக்கொண்ட கவிஞர் மறுபடி ஜீப்பில் ஏறி வங்கி திரும்புகிறார்.

’’ நடந்தது என்ன அண்ணாச்சி ..’’ என கேட்க ஆவலுடன் காத்திருக்கிறார்கள் சகஇதயர்கள்  .

சரியான முகவரிக்கு மிக தாமதமாக அஞ்சலில் வந்து சேர்கிறது குட்டி டைனோசர் .  பரிசாக அனுப்பியவரின் பெயர் காலத்தில் அழிந்து இருக்கிறது . அது  பல விதமான சாத்தியங்களை , பழைய பாடல்களை , எம்ஜியார்  திரைப்படம் முதல் நாள் முதல் காட்சி ஆரம்ப கணங்களை , இன்னும் எழுதவேண்டிய வரிகளை , இன்னும் இன்னும் என்று பரந்து கெடுகிறது .  இனி என்ன … ஆனாலுமென்ன என ,  கவிஞர் துணிவுடன் குட்டி டைனோசாரை  தன் வீட்டில் சேர்த்துக்கொள்கிறார் . குட்டி டைனோவுக்கு என்ன பெயர் வைப்பது  என்கிற ( வழக்கமான ) பதட்டத்துடன் கவிஞர் மனிதர்கள் பறவைகள் மிருகங்கள் பெயர் வைக்கவேண்டாம் என்று  நினைக்கிறார்.

காணாமல் போய் இன்னும் பூமி திரும்பாத உயிரியின் பெயர் கிடைத்தால் நலம் என்றும் விரும்புகிறார் .தெய்வ விருப்பமாக கவித்துணைவர் குட்டி டைனோ வந்து சேர்ந்த கிழமையை பெயராக வைக்கலாமென்கிறார் .

ஆகா  சனியே  வருக வருக ..

எதைக்கொடுத்தாலும் தின்னாத சனி . தற்செயலாக மிக தற்செயலாக புத்தகம் ஒன்றை நாவால் தீண்டியதும் கவிஞருக்கு தெரிந்து விடுகிறது. பத்து கவிதை நூல்கள் , மூன்று புதினங்கள் , ஒரு கட்டுரை தொகுப்பு போதுமானதாயிருக்கிறது சனிக்கு. தின்ற களைப்பில் உடனே உறங்கவும் ஆரம்பிக்கிறது சனி.

இதுபோல,    யாரும் அறியாமல் உடன் இருந்தபடி கொல்லும் நினைவுகளை , சனி தின்று தீர்த்தால் நிம்மதியாக இருக்குமென கவிஞர் ஏங்குகிறார் . சனி தீவீர சைவம் போலும் . இறைச்சி ஞாபங்கள் வேண்டாம்  , செரிக்க சிரமம் என்று எளிமையாக சொல்லிவிடுகிறது .. மேலும் லட்சக்கணக்கில் கவிதைகளை தின்று செரித்து இருந்தாலும் ஒரே ஒரு கவிதை கூட எழுதமாட்டேன் என்று உறுதியாக சனி சொல்லும்போது  … ஏன்  ..?  ..என்று கவிஞர் கேட்கிறார்

அரசியல் அரசியல் .. என்கிறது சனி  .

என்ன அரசியல் சனி .. என்கிறார் கவிஞர்

என் மொழியின் கடைசி உயிர் நான். அப்படியானால்?

’’ என் ஒரே வாசகன் கவிஞன் நான்தன்னே  ‘’

சரிதான் காதல் கவிதையாவது எழுது .. என்கிறார் கவிஞர் . ‘’ உலகத்தில இருக்கிற எல்லா காதல் கவிதைகளையும் நீங்களே எழுதிட்டீங்களே சார்வாள் . என்றது சனி .

குற்றாலம் கவிதைப்பட்டறை ஒரு விதத்தில் எங்களுக்கு புனித பயணம்தான் .. இப்போது  ஆசான்கள் , பெரும்கவிகள் புனைவு முனிவர்கள் , அறம்சால் அண்ணாவிகள் என விளம்பப்படும் எல்லோருடனும் தரையில் உடன் இருக்கும் பாக்கியம் பெற்றோம்.

கவிஞர் பிரம்மராஜன் , கலாப்ரியா இருவரும் எங்களுக்காக செய்த எல்லாமே புதியது . மாலையில் பிரம்மராஜன் ஏற்பாட்டில் அமெடியஸ்  மொசார்ட் /1984 இயக்குனர் மிலாஸ் போர்மன் . மிஸ்ஸிங் / 1982 / இயக்குனர் costa gavres ,என்று இரண்டு படங்கள் பார்த்தோம்  .

சுந்தர்ராமசாமி என்னிடம் ஒரு  சிகிரெட் கிடைக்குமா என்றார் . யாரிடமோ வாங்கி கொடுத்தேன் . நகுலன் திருவனந்தபுரத்திலிருந்து வந்திருந்தார் . முழுமையாக ஒன்றும் புரியாவிட்டாலும், நம்புங்கள் நாங்கள் மகிழ்ந்திருந்தோம் .

’’ அந்த காலத்தில் டாஸ்மாக்  இல்லை ’’

இது போதுமானது நாங்கள் வாழ்ந்திருந்தோம் என்பதற்கு . வேகமாக மாறிவரும் உலகில் எல்லா வஸ்துகளுக்கும் மாற்று வந்துவிட்டதாக நொடி தோறும் அறிகிறோம் ஆனால் கலாப்ரியாபோன்ற கவிஞனுக்கு மாற்று இல்லை என்பது நிஜமாகவே மகிழ்ச்சிதான்.

வெளி ரங்கராஜன்

ஒரு இலக்கியப்பிரதியும் ஒரு நாடகப் பிரதியும் வேறுபட்ட அளவுகோல்களுடன் இயங்குகின்றன. ஒரு இலக்கியப் பிரதி தன்னளவில் முழுமையானது. ஆனால் ஒரு நாடகப் பிரதி தனக்குரிய நிகழ்விடத்தை மனதில் வைத்தே உருவாக்கப்படுகிறது. ஒரு நாடக உடலின் இருப்பும் அதன் லயமுமே நாடகப் பிரதியை இயக்குகின்றன. அது ஒரு ஓவியச் சிதறல் போல இலக்கியம், கவிதை, இசைத் தன்மை, நடனம் ஆகிய கூறுகளிலிருந்து தனக்கான உத்வேகத்தையும் வடிவத்தையும் எடுத்துக்கொண்டு ஒரு காட்சித்தளத்தில் இயங்குகிறது. நிகழ்வித்தலுக்கான சங்கேதங்களாகவும், குறியீடுகளாகவும், குறிப்புகளாகவும் தான் அவை வடிவம் கொள்கின்றன. ஒரு நாடகப் பிரதியில் இயல்பான வாசிப்பு நிலையில் அதன் முழுப்பரிமாணமும் கிடைப்பதில்லை. அதற்கான ஒரு நாடக உடலை முன்னிறுத்தி ஒரு பிரத்யேகமான வாசிப்பை கோரும் போதுதான் அதன் பல்வேறு தொடர்புநிலைகள் புலப்படுகின்றன. நிகழ்வின் போதே பிரதி இன்னும் முழுமை அடைகிறது.

மேற்கத்திய நாடகங்கள் ஒரு பிரதி சார்ந்த கலாச்சாரத்திலிருந்து உருவானவை. ஆனால் நம்முடைய கீழை நாடகக் கலாச்சாரம் பிரதி சார்ந்தது அல்ல. அது நிகழ்கலை மரபுகள் சார்ந்தது. நம்முடைய நாட்டுபுறக் கலைமரபுகளின் வடிவாக்கத்தையே இந்திய நாடகம் சார்ந்துள்ளது. இலக்கியப் படைப்பாளிகளால் புதிய நாடகப் பிரதிகள் அவ்வப்போது எழுதப்பட்டு வந்திருக்கின்றன.  பரவலாக வாசிக்கப்பட்டாலும் அவை நிகழ்தளத்துடன் தொடர்பற்று இருந்ததால் ஒரு செறிவான நாடக இயக்கமாக விரிவடையவில்லை.  தமிழிலும் புதுமைப்பித்தன் கு.ப.ரா., தி, ஜானகிராமன் போன்றவர்கள் புதிய நாடகப் பிரதிக்கான படைப்பு முயற்சியில் ஈடுபட்டாலும் அவர்களுடைய புனைவுலகின் நீட்சியாகவே அவை பார்க்கப்பட்டன. நம்முடைய காலம்காலமான மகாபாரத நிகழ்வுகள் வெவ்வேறு காலகட்டங்களில் எண்ணற்ற கூத்துப்பிரதிகள் உருவாகக் காரணமாக இருந்திருக்கின்றன. நிகழ்வு தரும் உத்வேகமே ஒரு புதிய பிரதிக்கான உத்வேகமாக அமைகிறது. இலக்கிய நிலைப்பாடுகளின் பலத்தில் உருவாகும் பிரதிகள் சில பொறிகளை உருவாக்கினாலும் அவை அதிக நீட்சி பெறுவதில்லை.

நம்முடைய புனைவு எழுத்தாளர்களில் முத்துசாமி மட்டுமே நாடகப் பிரதியின் இயங்குதளம் குறித்த பார்வை கொண்டவராக இருந்தார். அவருடைய சிறுகதைகள் போன்று அவருடைய நாடகங்கள் எழுதப்படவில்லை. தமக்குரிய ஒரு இயங்குதளத்துடனேயே அவை செறிவாக அர்த்தப்படுகின்றன. வெவ்வேறு நிகழ்விப்புகளில் அவை வெவ்வேறு விதமாக தோற்றம் கொள்கின்றன. அரசியல் விளையாட்டாகிப் போவதை சொல்லும் முத்துசாமியின் நாற்காலிக்காரர் நாடகம் அதன் முரண்பட்ட பிம்பங்களால் பல்வேறுபட்ட நிகழ்வுகளுக்கு இடமளித்தது. தொன்மம், பெளரானிகம், பாலியல் தன்மை ஆகியவற்றின் இழைகள் கொண்ட கிரிஷ் கர்னாடின் நாடகப் பிரதிகள் பரவலான வாசிப்புசுவை கொண்டிருந்தபோது சந்திரசேகர கம்பார் மற்றும் காவாலம் நாராயண பணிக்கர் ஆகியோரது பிரதேசத்தன்மை கொண்ட பிரதிகள் வேறுபட்ட வாசிப்பை கோரின. எம்.டி. முத்துக்குமாரசாமியின் ‘சைபீரிய நாரைகள் இனி இங்கு வரப்போவதில்லை’ நாடகப் பிரதி ஒருபுறம் அரசியல் உள்ளீடுகள் நிறைந்ததாகவும், மறுபுறம் சங்கீத ஆலாபனைகள் கொண்டதாகவும் வாசிக்கப்பட்டது. அண்மைக்காலங்களில் நிகழ் வெளியில் பெரும் பாய்ச்சலை நிகழ்த்திவரும் முருகபூபதியின் நாடகப் பிரதிகளை அதன் பின்புலத்தில் உள்ள நாடக நிலம் மற்றும் இசை நடனக்கூறுகளின் அனுமானமின்றி வாசிக்க முடியாது.

பிரதிக்கும் நிகழ்விப்புக்குமான சங்கேதங்களும் குறியீடுகளும் சோதிக்கப்படாத நிலையிலேயே தமிழ்ச்சூழலில் இவை இரண்டும் வெவ்வேறு தளங்களில் நிகழ்வதான உணர்வு உள்ளது. நாடகப் பரிமாணங்களின் பலத்தில் அல்லாமல் வெறும் வாசிப்பின் நீட்சியாகவும், கருத்துக்குவியல்களின் திரட்சியாகவும் எழுதப்படும் பிரதிகள் நாடகமாக விரிவுகொள்ளும் சாத்தியங்கள் குறைவு. இன்று நாடக நிகழ்வுகள் அருகிவிட்ட நிலையிலேயே நாடகப் பிரதிகளின் உருவாக்கத்தில் எழுச்சியற்ற சூழல் உள்ளது. மனித ஸ்பரிசத்தையும், மனித உடலின் நெகிழ்வுகளையும் நிகழ்கலைகளே மீட்டெடுக்க முடியும். வீரியமான நிகழ்தளம் குறித்த அக்கறைகளுடன் எழுதப்பட்ட பிரதிகள் குறித்த மாறுவாசிப்பும், எழுதப்படாத பிரதிகளின் சாத்தியங்கள் குறித்த அனுமானமும் இன்று அவசியமானதாக இருக்கின்றன.

நாடகத்தளத்தில் வெளிப்பாடு கொள்ளும் மனித உடல்கள் அதிக வலியுறுத்தல்கள் இன்றி மனித இயல்புகளின் பல்வேறு நெகிழ்வுகளை சரளமாக புலப்படுத்தும் சாத்தியங்கள் கொண்டிருக்கின்றன. மனித உடல்களின் ஊடாக வெளிப்பாடு கொள்ளும் இருப்பின் நியாயங்கள் அறவியல் வரையறைகளைக் கடந்து செல்லும் முகாந்திரங்களை எளிதில் வழங்கிவிடுகின்றன. முக்கியமாக பெண் உடல் குறித்த வெற்று பாலியல் முன்அனுமானங்களிலிருந்து விடுபட்டு காட்சித்தளங்களில் வடிவம் கொள்ளும் பெண் உடல் குறித்த சமூகப்புரிதலும், பரிவும் ஆண் பெண் உறவு நிலைகள் குறித்த நுண்ணுணர்வுத் தளங்களை மேம்படுத்தும் வல்லமை கொண்டவையாக இருக்கின்றன. தாய் மகன் உறவு குறித்த இடிபஸ் மன நிலை ஒரு இலக்கிய வாசிப்பில் தரும் அதிர்வுகள் ஒரு ஸ்தூலமான நாடக இருப்பில் அதிகம் சமனப்பட்டுவிடுவதை நாம் பார்க்க முடியும்.

இவ்வாறு ஒவ்வொரு நிகழ்வும் பிரதிக்கு புதிய பரிமாணம் அளிக்கிறது. பிரெக்ட், ஜெனே போன்றவர்கள் ஒவ்வொரு நிகழ்வுக்கு பிறகும் தங்கள் பிரதிகளை திருத்தி எழுதியிருக்கிறார்கள். மரபை அறியவும், மரபைக் கடந்து செல்வதற்கான உத்வேகங்களையும், எழுச்சிகளையும் பெறுவதற்கான முகாந்திரங்களைக் கொண்டிருப்பதாலேயே இன்று அரங்கச் செழுமை கொண்ட கலாச்சாரங்கள் மனித நடத்தைகள் குறித்த புரிதலை முன்னெடுத்துச் செல்வதில் முன்னோடிகளாக விளங்குகின்றன.

சரவணன் சந்திரன்

தொலைக்காட்சித் துறையில் இருந்தபோது, ஒரு நிகழ்ச்சி செய்யவேண்டுமெனத் திட்டமிட்டிருந்தேன். எந்தக் கணம், என்னை அடியோடு மாற்றியது? என்கிற அடிப்படைக் கேள்வியை எழுப்புவதே அந்நிகழ்ச்சி. உதாரணமாக, சில கதைகளையும் மேலதிகாரிகளுக்குக் கொடுத்திருந்தேன். வழக்கம்போல அது, இன்னொரு மேஜைக்கு நகரவில்லை. பல இடங்களில் கடைவிரித்தும் கொள்வாரில்லை என்பதால் அம்முயற்சியைக் கைவிடவும் செய்தேன். அது நடந்து மாமாங்க காலமும் ஆகிவிட்டது. இப்போதெல்லாம் நேற்று அடித்த சதத்தைக்கூட இன்றைக்கு ஞாபகம் வைத்திருப்பதில்லை. இன்றைக்கு எத்தனை ரன் அடித்தாய் என்ற கேள்வி ஓடுகிற எல்லைக்கோட்டிற்குள் துரத்துகிறது. அடிக்கிற காலத்தில் எகிறி அடித்துவிட வேண்டுமென்பதையும் நினைவில்கொள்ளுங்கள். பந்து நமக்குச் சாதகமாக எழும்புகிறதா என்பதையும் உற்றுக் கவனிக்கவேண்டும். அப்போதுதான் கோட்டைத் தாண்டி அது வெளியே போகவும்செய்யும். மொத்தத்தில், நாமெல்லாம் கையடக்கப் பந்துகளே. ஓங்கி ஒரு மோதிரக் கையால் அடிபட்டால் 180 மீட்டர் உயரத்திற்குப் பறக்கவும் செய்யலாம், யார் கண்டது?

இப்போது அதில் ஒரு கதை ஞாபகத்திற்கு வருகிறது. அரிசியில் கல்லைத் தேடுவதைப் போல அதில் தரவுகளைத் தேடாதீர்கள். அந்தக் கதையின் ஆன்மாவை மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள். நட்சத்திர ஹோட்டலொன்றுக்கு ஒரு தகப்பனும் தாயும் மகளும் போகிறார்கள். தாய்க்கும் தந்தைக்குமிடையில் சண்டை இன்னொரு மேஜையில் உக்கிரமாக நடக்கிறது. இருவரும் பிரிவதற்காக அங்கே வந்திருக்கிறார்கள். சிக்கலில்லாமல் சொத்துகளைப் பிரித்துக்கொள்வதற்காக அடித்துக் கொண்டிருந்தார்கள். ஒருகட்டத்தில், ஆளை வைத்து உன்னைக் கொலை செய்துவிடுவேன் என்றெல்லாம் தடித்த வார்த்தைகள் வந்து விழுந்தன. இதையெல்லாம் தூரத்திலிருந்த இன்னொரு மேஜையில் அமர்ந்து பத்து வயதுச் சிறுமி மஃபின் கடித்தபடி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.

அப்போதுதான் முதல் குண்டு அந்த வளாகத்திற்குள் வெடித்தது. சுதாரித்து மனிதர்கள் சிதறி ஓடினார்கள். மேஜைக்குக் கீழே பதுங்கி அமர்ந்தார்கள். கணவனும் மனைவியும் தூரத்தில் மேய்ந்துகொண்டிருந்த தன்னுடைய குஞ்சையும் வாரிச் சேர்த்தணைத்து அந்த மேஜைக்கு அடியில் உயிரைக் கையில் பிடித்து அமர்ந்திருந்தார்கள். அந்தக் கணத்தில் அவர்கள் இருவரும் சேர்ந்து வாழவேண்டுமெனத் தீர்மானித்தார்கள். அந்தக் கணம், இந்தக் கணம் என்கிறார்களே! அது எவ்வளவு அடர்த்தியானது தெரியுமா?

விளையாட்டாக, ஒருதடவை அந்தக் கணம் என்றால் என்ன என்பதை விரட்டிப் போய்ப் பார்த்தேன். அடுத்த நாள் காலையில் மிகச்சரியாக பத்து ஐம்பதிற்கு ஒரு வேலையைச் செய்யவேண்டுமெனத் திட்டமிட்டேன். காலை எழுந்ததுமே பதற்றம் தொற்றிக்கொண்டது. ஒன்பது அம்பதா? எனக் குழப்பம் வந்தது. நினைவை விரட்டிப் பிடித்து இல்லையென உறுதி செய்துகொண்டேன். மறந்துவிடுவேன் என நினைத்து பத்து மணிக்கெல்லாம் வேப்ப மரத்தடியில் கட்டிலைப் போட்டு அமர்ந்துவிட்டேன். நான் வளர்க்கிற வெள்ளாடுகளுக்கு மேரி பிஸ்கெட் போட்டு நேரத்தைப் போக்கினேன். இடையில் வந்த தொலைபேசி அழைப்புகளை வேகவேகமாகத் துண்டித்தேன். பத்து ஐம்பதிலேயே இருந்தது குறி.

பத்து நாப்பது வரை எந்தப் பிரச்சினையுமில்லை. அடுத்த பத்து நிமிடங்களைக் கடந்ததை விவரித்தால் இன்னொரு அத்தியாயம் எழுதவேண்டும். அப்படியெல்லாம் எழுதுவதற்கு எனக்கு விருப்பமே இருப்பதில்லை. ஒரே தாவலில் ஓடையைத் தாவிக் குதித்துவிட வேண்டும் என்று நினைக்கிறவன். ஆனால் அப்போது நொடிகளின் வேகத்திற்குக் கட்டுப்பட்டிருந்தேன். ஒவ்வொரு நொடியும் எவ்வளவு நீளமானது என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்தேன்.

பத்து நாப்பத்தொன்பது வரும்போது தொலைபேசியில் அந்த எண்களையே பார்த்துக் கொண்டிருந்தேன். எப்போது வரும் ஐம்பது? சீரான மூச்சுச் சத்தம் மட்டுமே கேட்டது. என்னைச் சுற்றி என்ன நடக்கிறது? என்பது உறைக்கவில்லை. அது ஒருமாதிரியான கனவுநிலை. ஆழ்ந்த அமைதியில் இருந்தேன். பத்து ஐம்பது ஆனபோது, அந்த வேலையைச் செய்தபோது கிடைத்த திருப்திக்கு அளவேயில்லை. நிதானமாகப் பிறகு நிறைய அதைப் பற்றி யோசித்துப் பார்த்தேன்.

ஒரு பப்ஸைக் கூட கையில் ஏந்த முடியாமல் கைகள் நடுங்குகிறவனாக இருந்த நான், எப்படி பதற்றமற்றவனாக மாறிப்போனேன்? இப்போதும் பதற்றம் வருகிறது. ஆனால் பதற்றம் அதுதான் என்பதைக் கண்டுபிடித்த சிலநிமிடங்களில் அதைக் கடக்கவும் முயல்கிறேன். என்ன ஆனது எனக்குள்? அப்போதுதான் என்னுடைய பால்ய நண்பரொருத்தர் பல வருடங்களுக்குப்பிறகு என்னைப் பார்க்க வந்திருந்தார். போராளியாக இருக்கும் எங்களுடைய இன்னொரு நண்பர் குறித்துப் இருவரும் பொதுவாக பேசிக்கொண்டோம். பெயரெல்லாம் வேண்டாமென்று தோன்றுகிறது. அவருடைய உயிருக்கு அடுத்த நிமிடத்தில்கூட உத்தரவாதம் இல்லை என்கிற நிலையில் நடமாடிக் கொண்டிருக்கிறார். “ஆனா, நான் பாத்தேன் சரவணா. அவன்ட்ட துளிப் பதட்டம் இல்ல” என்றார், என்னுடைய நண்பர். அதற்கான காரணமும் அவருக்குத் தெரிந்தேயிருந்தது. உளவியலை பாடமாக எடுத்துப் படித்தவரும்கூட. அவரே அதற்கான பதிலையும் எங்களுடைய பால்ய மொழியில் சொன்னார். “அவன் கிடைக்கிற ஒவ்வொரு நாளையும் போனஸா பாக்க ஆரம்பிச்சிட்டான்” என்றார். எத்தனை சத்தியமான  வார்த்தைகள்?

வெற்றி என்றால் என்னவென்று, முகத்திற்கு நேராக என்னிடம் ஒருமுறை கேள்வியொன்று வந்து விழுந்தது. அடுத்த நாள் காலையில் உயிரோடு இருப்பது என உடனடியாகவே பதிலளித்தேன். நம்புவதற்குச் சங்கடமாக இருக்கும். ஆனால் அதுதான் முகத்திலடிக்கிற உண்மை. அந்தப் போராளியின் ஒருநாள் அடர்த்தியான வாழ்க்கையும்கூட. இந்தப் பக்குவமெல்லாம் வருவதற்கு பழனி கோயிலில் ரெண்டாயிரம் தடவை ஒரே மூச்சில் ஏறி இறங்கவேண்டும். ஆனால் வாழ்க்கை இயல்பான போக்கில் கற்றுக் கொடுத்துவிட்டது அவருக்கு.

அவரைப் பற்றி நிறைய பேசினோம். பதற்றம் வரும்போதெல்லாம் அவர் குறித்து யோசித்துக்கொள்ள வேண்டுமென முடிவெடுத்தேன். இந்த இடத்திற்கு எப்படி வந்து சேர்ந்தேன் என்பதை நினைக்கையில் ஆச்சரியமாக இருந்தது. உடன் வாழ்பவர்களெல்லாம், “இவ்வளவு நிதானமா பேசாத. கொஞ்சம் சத்தமா சட்டுன்னு முடி” என்று இப்போதே சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். அவர்களின் நேரத்தை எடுத்துக்கொள்ளக்கூடாது என்பதற்காக வலிந்து கூட்ஸ் வண்டியைப்போல பேசுகிறேன்.

இப்போதெல்லாம் எனக்கு நிதானமாகப் பேசவேண்டுமென்றே தோன்றுகிறது. கல்லூரியில் நான் பேசும்போது கொஞ்சம் நிறுத்து என்பார்கள். தலைகீழான மாற்றம். விவசாயத்திற்கு வரும்போது மனதளவிலும் உடலளவிலும் நிறையச் சிக்கல்கள் இருந்தன. எந்நேரமும் நெஞ்செரிச்சலுக்கான மாத்திரையோடே அலைவேன். வயிறு பற்றி எரிந்துகொண்டிருக்கும். எந்நேரமும் மேஜைக்குக் கீழே வெடிக்கப்போகும் குண்டைப்போல இருந்தது சூழல். அப்போது மகிழ்ச்சியும் இருந்தது. ஆனால் அதிலிருந்தெல்லாம் வெகுதூரம் விலகியிருந்தேன்.

பார்ட்டிகளுக்குப் போனால், மூலையில் மஞ்சள் வெளிச்சம் விழும் மேஜையில் அமர்ந்து காலை படபடவென ஆட்டிக் கொண்டிருப்பேன். நா.முத்தண்ணன் இறந்துபோன சமயத்தில், தம்பிகள் சிலருடன் காரில் போய்க் கொண்டிருக்கும்போது, திடீரென நெஞ்சு வலிப்பதைப் போல இருந்தது. ஓடிப்போய் மருத்துவமனையில் பரிசோதித்தபோது ஒரு இதுவும் இல்லை என சிரித்துக்கொண்டே அனுப்பிவைத்தார் மருத்துவர். “முதல்ல அந்த வேலைச் சனியனை விட்டுத் தொலை. பூமியில கஷ்டமில்லாத வேற வேலையே கிடைக்காதா?” என்றார், நான் பெரிதும் மதிக்கும் அந்த மருத்துவர். ஆனால் இப்போது அந்த வேலையையே ரசித்துச் செய்வேன் என்பது வேறு கதை.

இரண்டாயிரம் செடிகள் கருகிவிடும் என்கிற இக்கட்டான நிலையில் ஆம்புலன்ஸ் வேகத்தில் கிளம்பி ஓடிவந்தேன். பதினைந்து நாளில் மறுபடியும் திரும்பிப் போய்விட வேண்டும் எனத் திட்டமிட்டு, அதற்கான துணிமணிகளுடனே வந்தேன். காலம் என்ன செய்தது என்பதைச் சொல்லியும் தெரியவேண்டுமா? ஆரம்பத்தில் செடிகளுடனான ஒட்டுதல் இல்லாமலேயே இருந்தேன். அதன் அடிப்படைகூடத் தெரியாது. தண்டைத் தொட்டுக்காட்டி வேர் என்பேன். நாவல் செடியைக்காட்டி மாமரம் என்பேன். தோப்புகள்தான் சிக்கல் எனக்கு. காடுகளில் ஓடியாடி அலைந்திருக்கிறேன். ஆனால் அது என்ன மரம்? என உற்றுக் கவனித்ததில்லை.

பறவைகளின் பெயர்களெல்லாம் ஓரளவிற்குத் தெரியும். ஆனால் கொத்திவிடுமோ என ஒரு சிறு சிட்டுக்குருவியைக் கண்டால்கூடப் பயப்படுவேன். அதைச் சிறுவயதில் சுட்டுச் சாப்பிட்ட நினைவே உடனடியாக வரும். முந்தாநாள், இளங்கோவன் முத்தையாவிடம் சொல்லிக்கொண்டிருந்தேன். தவிட்டுக் குருவியொன்று பிஸ்கெட் சாப்பிட வருகிறது என்றபோது, “எல்லாத்தையும் கெடுத்து வச்சிருக்கீங்க” என்றார், உடனடியாக. தொலைபேசியை வைத்தபிறகு, இதை எழுதுவதற்காகவே விரிவாக யோசித்தேன். இளங்கோ கல்லாணை அண்ணன் வந்தபோது, “டேய், கிங்ஃபிஷர் இவ்வளவு பக்கத்தில வந்திருச்சுன்னா. உன்னை நம்பிருச்சுன்னுதான் அர்த்தம். அது லேசில பக்கத்தில வராது” என்றார்.

பொதுவாகவே, இப்படி ஒரு கதை கேட்டிருக்கிறேன். அது உண்மையா என்றும் தெரியவில்லை. தவிட்டுக் குருவிகள் ஒரு இடத்தில் அச்சமில்லாமல் உலவத் துவங்கினால் மற்ற பறவைகளும் இயல்பாகவே வந்துவிடும். தவிட்டுக் குருவிகளை முதலில் அனுப்பி வேவு பார்ப்பார்கள்போல. அப்புறம் மெதுவாய் காலைத் தூக்கி, வெளிவட்டத்தில் மற்றவர்கள் வைப்பார்கள். நாமே என்ன செய்வோம்? சேக்காளியை அனுப்பி வேவு பார்த்துவிட்டுத்தானே வேலி தாண்டுவோம். வந்து உறவாடும் பறவைகளைக் கூர்ந்து பார்த்திருக்கிறேன். மிகச்சரியாக மழைக்கு முதல்நாள் காகமொன்று தயிர்ச்சோறை வாய் நிறைய அள்ளிக்கொண்டு கூட்டிற்குப் போகும். குஞ்சுகளுக்கு அல்லாமல் வேறு யாருக்கு எடுத்துப் போகும்?

லகுடு நாவலில் அதைப் பற்றியெல்லாம் கொஞ்சமாக எழுதவும் செய்திருக்கிறேன். பறவை காணலுக்கு மிக முக்கியமானதே அசைவின்றி இருத்தல். அதிலும் பக்கத்தில் வருகிறதென்றால், இன்னும் சிலையாக உறைந்துபோதல். அந்த நேரத்தில் செல்பி எடுக்க, தொலைபேசியைத் தூக்க உடலை அசைக்கக்கூட முடியாது. ஆழ்ந்த அமைதியில் சிலையைப் போல அமர்ந்திருக்க வேண்டும். அது சாத்தியமானவகையில் இந்தப் பேருண்மைக்கு நன்றி சொல்லியே ஆகவேண்டும்.

எதிலும் ஒட்டாமல் அலைந்துகொண்டிருந்த நான், ஒருநாள் என்னையும் அறியாமல் மெதுவாக செடிகளை கவனிக்கத் தொடங்கினேன். நிச்சயம், அதுதான் உள்ளே இழுத்துப் போட்டது. அதிகாலையொன்றில் கொய்யா மொட்டுகளின்மீது மழைத்துளி ஒட்டியிருந்ததை அருகில் பார்த்தபோது மகிழ்ச்சியாக இருந்தது. அந்தக் கணத்தில், சட்டென அந்த உலகம் உள்ளிழுத்துக் கொண்டது. “பரவாயில்லையே சார்… சிட்டில இருந்து வந்து கோடையத் தாக்காட்டீங்களே!” என்றார் ஒருத்தர். நானா செய்தேன்? மழை வந்ததால் தப்பித்தேன். ஆனால் அந்த வார்த்தைகள் ஆழமான உள்விளைவுகளை எனக்குள் உருவாக்கின. ஆழமான நம்பிக்கையொன்று படர்ந்தது. அது, விஷமில்லா கனியொன்றை என்னாலும் உற்பத்தி செய்துவிடமுடியுமென்கிற அர்ப்பணிப்புடன்கூடிய நம்பிக்கையாகவும் இருந்தது.

அவை என்மீது ஆதிக்கம் செலுத்த அனுமதிக்கத் துவங்கினேன். எப்போது அப்படிச் செய்தேன் என்பதே தெரியவில்லை. அதற்குமுன்னர் பழனி நகரத்தில் வீடெடுத்து இங்கே வந்து போகவேண்டுமென முடிவெடுத்திருந்தேன். சட்டென அந்த முடிவைக் கைவிட்டேன். குறைந்த வாய்ப்பில் இங்கேயே தங்கவேண்டுமென முடிவெடுத்ததற்கு ஒரு காரணமும் இருந்தது. விவசாயத் துறை சார்ந்த நண்பரான ஜார்ஜ், “டெய்லி எந்திரிச்சதும் அது முகத்தில முழிக்கணும் தலைவரே. ‘நம்ம ஆளு, நம்மளப் பாக்காம எந்த வேலையும் பாக்கமாட்டாரு’ன்னு செடிக நம்பணும்” என்பார். நிஜமாகவே செடிகளுடன் உரையாடிக் கொண்டிருக்கும் மனிதர் அவர்.

நெஞ்செரிச்சல் மாத்திரைகளை எப்போது நிறுத்தினேன் என்பதே நினைவில் இல்லை. அந்தச் சமயத்தில்தான் உடலையும் மனதையும் ஊன்றிக் கவனிக்கவேண்டுமென முடிவுசெய்தேன். செய்கிற வேலையில், கைநடுங்காமல் துல்லியத்தைக் கொண்டு வரவேண்டுமெனவும் திட்டமிட்டேன். தாத்தா பூ செடி கேள்விப்பட்டிருப்பீர்கள்தானே! அந்தச் செடி, எல்லாப் பருவத்திலும் எப்படியிருக்குமென எனக்கு நன்றாகத் தெரியும். மெல்லமாக அதன் இதழ்களை விரித்து உள்ளுக்குள் இருக்கும் அத்தனை நெழிவுகளையும் நெருங்கிப் பார்த்திருக்கிறேன். பொறுமையாக அந்த வேலையை ஒரு வேலையாகவே வைத்துச் செய்வேன்.

ஒரு அதிகாலை நேரத்தில் என்னுடைய உணவுப் பழக்கமும் மாறியது. அங்கேயே கிடைக்கும் கீரைகள், பழங்கள் என பலதும் பறித்துச் சாப்பிட்டுக்கொள்வேன். கோவைக் கீரையில் துவங்கி கள்ளிப் பூ வரை எல்லாவற்றையும் வதக்கிச் சாப்பிட்டு விட்டேன். கள்ளிப் பழங்களை சின்ன வயதிற்குப் பிறகு இப்போதுதான் சாப்பிட்டேன். உடல் மெல்ல சீரடைய ஆரம்பித்தது. பதற்றத்திற்கும் நெஞ்செரிச்சலுக்கும் நேரடியாகச் சம்பந்தமிருக்கிறது என்பதை அனுபவபூர்வமாகவே உணர்ந்தேன்.

ஒவ்வொரு விஷயத்தையும் அதன் அடிப்படையிலிருந்து தெரிந்துகொள்ள வேண்டும் என்கிற ஆழமான முடிவிற்கு வந்து சேர்ந்தேன். தாத்தா பூ செடி செயல்படும்விதம், உடல் செயல்படும்விதம், நாய்க்குட்டிக்கு வந்த மேஞ்ச் செயல்படும்விதம் என எல்லாமும் ஒருவகையில் ஒன்றுதான். கூடவே  மனதை, செல்ல நாய்க்குட்டி மாதிரி பழக்குவிப்பதற்கான பயிற்சிதான் மிகக் கடுமையானது. உண்மையிலேயே, உடலுக்கு உண்டான மரியாதையைக் கொடுத்துவிட்டால் அது தன்னைப் போல அமைதியாகி விடுகிறது. சண்டிக்குதிரை வேலையெல்லாம் இந்த மனம்தான் செய்கிறது. நான் வளர்க்கிற நாய்க்குட்டி டோனியைப் போல கொஞ்சம் முரட்டு சுபாவம். ஆனாலும் பழக்கப்படுத்துகிறேன்.

உடலும் மனமும் இயைந்துவருகிற நேரத்தில், எதை வேண்டுமானாலும் செய்துவிடலாம் என்றே தோன்றுகிறது. கார் ஓட்டுவதற்கே பதற்றப்பட்டவன் என்பது நெருங்கிய நண்பர்களுக்குத் தெரியும். ஆழமாகச் சொல்வதென்றால், இப்போது விமானம் கிடைத்தால், ஆரம்பக்கட்ட பதற்றங்களுக்குப் பிறகு அது செயல்படும்விதத்தை எளிமையாகவே புரிந்துகொள்வேன் என நம்புகிறேன். அதற்குத் தேவை துல்லியமான கவனம். பதற்றமில்லாமல் இருந்தால் எளிதாகவே கூடிவிடும் அது என்பதையும் உணர்கிறேன். ஒரு குண்டூசியை ஆட்டாமல் வானத்தில் ஏந்திப் பிடித்திருப்பதைப் போல அரிதான செயலாகவும் அது இருக்கக்கூடும்.

அதற்காகக் கிளம்பி, எல்லோரும் காடு கரைகளுக்கு ஓடிப் போய்விட வேண்டும் என்பதல்ல. கிடைக்கிற நிலத்தில் பதற்றங்கள் அலையடிக்காமல், கவனத்தைக் குவிப்பது என்றே நான் புரிந்துகொள்ள விரும்புகிறேன். என் இயல்புப்படி, என்றேனும் ஒருநாள் இங்கிருந்தும் வெளியேறி இன்னொரு புதிய நிலத்தில் நடைபோடுவேன் என்றே தோன்றுகிறது. பதற்றமாக உள்ளே நுழைந்த ஒருவனை வெப்பம், குளிர், மழை, காற்று எல்லாமும் சேர்ந்து துவைத்தெடுத்து, கொய்யாவில் படரும் ஒரு சிறுபூச்சியாக உருமாற்றம் செய்திருக்கிறது. பதற்றங்களே இல்லாத சிலந்தியாக இந்தக் கணத்தில் உணர்கிறேன்.

*

பத்து மணிக்கெல்லாம் வேப்ப மரத்தடியில் கட்டிலைப் போட்டு அமர்ந்துவிட்டேன். நான் வளர்க்கிற வெள்ளாடுகளுக்கு மேரி பிஸ்கெட் போட்டு நேரத்தைப் போக்கினேன்

“அவன், கிடைக்கிற ஒவ்வொரு நாளையும் போனஸா பாக்க ஆரம்பிச்சிட்டான்” என்றார்

தாத்தா பூ செடி செயல்படும்விதம், உடல் செயல்படும்விதம், நாய்க்குட்டிக்கு வந்த மேஞ்ச் செயல்படும்விதம் என எல்லாமும் ஒருவகையில் ஒன்றுதான்