அது எப்படி எனில்

இன்றிலும் நேற்றிலும்
காலத்தின் பிரக்ஞை அற்று
மாறிமாறி கிடக்கிறாய்

சில நேரம் நீ உண்டிருந்தாய்
சில நேரம் உண்ணவில்லை
நேற்று நீ காதலிக்கிறாய்
நாளை காதலிக்கப்பட்டாய்
இன்று உனக்கு காதலே இல்லை
நீ எப்போதோ இறந்துவிட்டாய்
அது உனக்கும் தெரியும்
ஆனாலும் நீ இப்போதும்
உயிரோடு இருக்கிறாய்

ரயில் பயணத்தில்
சூரிய வெளிச்சம் தாங்காமல்
நள்ளிரவில் விழிக்கிறாய்
நீ எந்த ஊரில் இருப்பதாய்
நினைத்தாயோ உண்மையில்
அந்த ஊரில் தான்
இருக்கிறாய்


வேறொன்றுமில்லை

அறிமுகமான நாளில்
ஒருவரின் பெயரை
மீண்டும் ஒருமுறை கூறிப்பார்க்கிறோம்
முடிந்த அளவு பேசுகிறோம்
அலைபேசி எண் கிடைத்தபிறகு
உரையாடும்போதெல்லாம் அட்டைப்படத்தை
பார்த்துக்கொள்கிறோம்
பெயர் பதிந்து போகிறது
கேட்டுக்கேட்டு சலித்த குரல்
கூட்டத்திலும் தனித்து தெரிகிறது
முகமும் பதிகிறது

நமக்குள் ஏற்றிய
ஒரு பெயரை
ஒரு குரலை
வலுக்கட்டாயமாய் மறப்பதற்கு
மொத்த வாழ்க்கையையும் துண்டங்களாக்கிப் படைக்கிறோம்
ஊனின் ருசி கண்ட ஒற்றை முகம்
புறங்கையை நக்கித் துடைக்கிறது
வேறொன்றுமில்லை
கையிலிருந்து சிதறிய
ஒற்றைத் துளி உதிரமும்
அந்த முகத்தைப் பிரதிபலிப்பதைத் தான்
நம்மால் தாங்கிக்கொள்ள முடிவதேயில்லை


ஒரு துளிப் பச்சையம்

நிலத்தில் வேரூன்றிய நெடுமரத்தில்
வேர்கள் மட்டுமே இருக்கிறது
முன்பொரு சமயம் தனதிரு கைகள் நீட்டி வாறி அணைத்துக்கொண்ட மழை
எரிமலையிலிருந்து பொழிந்ததென
அது அறிந்திருக்கவில்லை
வெக்கையில் உறைந்த மரத்தை
சிலர் பட்டுப்போனதென்றார்கள்
சிலர் வெட்டிவிடலாம் என்றார்கள்
வேர்களின் எஞ்சிய பச்சயத்தை நுகர்ந்தபடி
எங்கிருந்தோ அணில்குட்டியொன்று
வந்து சேர்கிறது
பேசிய முகங்களிலெல்லாம்
மரத்தின் அடர் கிளைகளிலிருந்து
குளிர் காற்று வீசுகிறது
கணப்பொழுதில்
ஒரு யுகாந்திர மழை பெய்திருக்கலாம்
அல்லது
கரித்திரையால் கசங்கிய அணிலின் கண்களிலிருந்து வேர்களில் விழுந்திருக்கலாம்
ஒரு துளிப் பச்சையம்

— வீரசாேழன். க.சாே.திருமாவளவன்

வெயில் சூடுகளின் பொட்டலாக
வெப்பம் தாேய்ந்த புதராக
மீப்பெருக்கலின் எண்ணமாக
மதியத்தின் கொடூரங்கள்

காற்றாடியின் குடிலுக்குள்
உடலை பதப்படுத்தி
வியர்வை பொசுக்கிய உடலாக விரிந்திருக்கவே வாசல் செய்கிறது

வறண்ட நாவில் குளிர் படுத்த
எலுமிச்சையும் ஒரு தேக்கரண்டி வெள்ளையினிப்பும்
போதுமானதாகவே இருக்கிறது

அலுவலக கட்டிடங்கள்
வெயில் நுழைய அனுமதிப்பதே இல்லை
ஊழியர்களின் தோலுமே
வெள்ளை நிறத்தை எட்டுகிறது
கருப்பசாமிகள் வெள்ளைச்சாமிகளாக உலாவலாம்
ஆயுள் குறைத்தே நாட்காட்டிகள் கிழிக்கப்படும்

வனாந்திர மானுடர்கள் பாவம்
சருகுகளாக போன பச்சையங்களை
கண்காட்சி செய்தே வயிறை நிரப்புகிறார்கள்

கண்மாயின் பாதையிலாடும் சிறுவர்களின் மட்டையை
வேடிக்கை பார்க்கிறது மேகப்பிள்ளைகள்

ஊருக்குள் நுழைய பார்க்கும்
களிறுவின் கால்கள் பொசுக்கலாம்
காலங்கள் களிறுவை எழுத மறுக்கிறது
காடும் காடுகளால் ஆன உலகும்
சருகுகளை பிரசவிக்கிறது

வெயில் என்பது வெயிலாக இருக்கலாம்.

01. ஆச்சி

இறுதி ஊர்வலத்தில்
வீசிய காற்று

சவமாய்க் கிடந்தவரை தீண்டியதும்
தன்னுடல் மீதிருந்த பூக்களை உதிர்த்து
நிலமெங்கும் விட்டுச்சென்றார்

02. அபூர்வ நிழல்

ஏதேனும் ஓர் அபூர்வ நிழலில்
என்னை மறைத்துக்கொள்ள ஆசைப்படுகிறேன்.

மரத்தினுடையதாகவோ பறவையினுடையதாகவோ
மனிதனுடையதாகவோ
மறைக்குமந்த அந்த அபூர்வ நிழல்
இருக்கலாமென
ஒரு அசரீரி கேட்கிறது.

என் மனதின் அபூர்வ நிழல்
தனிமையில் மறைந்திருக்கிறது.
சாபத்தில் எழுந்திருக்கிறது.
என்னுடைய நிழலில்
நீயேன் இன்னும்
தோன்றவில்லையென
அபூர்வத்திடம் கேட்கலாமெனில்
அபூர்வம் மறைந்திருக்கும் நிழல் எதுவென்று
அறியேன்.

03. துளிர்

தருணத்தில்
சிறகசைக்க காத்திருக்கும்
வலசை மனத்தில்
அமைதியின் கிளை
துளிர்க்கிறது

1.
பல்லாயிரம் உயிர்களை வாரிச்சுருட்டியதைச் சொல்லி
கழுத்தறுக்க வேண்டும்
கடலின் கழுத்துயெது

லட்சக்கணக்கான உயிர்களைச் சுழற்றியெரிந்ததைக் காண்பித்து
மாறுகால் கை வாங்க வேண்டும்
காற்றின் கை கால்யெது

பெருகியோடும் குருதி வெள்ளத்தின் வீச்சம் நுகரவைத்து
சங்கு அறுக்க வேண்டும்
நதியின் முகமெது

எண்ணிக்கையற்ற உயிர்களை
புதைத்துக் கொண்டது குறித்தக் கேள்வியுடன்
தலைக்கொய்ய வேண்டும்
நிலத்தின் தலையெது

மிதக்கும் முழுநிலவு
அலையாடும் கப்பல்
கடல் பார்ப்பது எவ்வளவு ஆனந்தம் நண்ப


2.
இங்கிருந்து தெரியும்
கடலசையும் கப்பலுக்குள்
வாழ்நாட்களை..

மாலுமிக்கு தெரிந்திருக்கிறது
நகரத்தில் சுவையான தேனீர் கிடைக்குமிடம்.


3.
நீள்வெளிச்சபாதையைச் சுழற்றியடிக்கும்
கலங்கரை விளக்கு
சிறிதும் பெரிதுமாய் மின்னொளி புள்ளிகள்
தீப்பொறி சிதறும் சோள கதிர்கள்

நடந்தும் அமர்ந்தும் பேசிக்கொண்டும் உணவருந்தியும்
தனித்தும்
அலைபேசி மனிதர்கள்
இளைப்பாறும் குதிரைகள்
மோந்து களைத்த மூச்சிரைக்கும் நாய்கள்
ஒருக்களித்தும் ஒய்யாரமாகவும் படகுகள்

முப்பாக கரிப்பு அலைகளின்
நுரை குமிழ்களை
மிச்ச நிலத்தின் கரைகள் உடைக்கின்றன

மீண்டும் மாலுமி வான் நோக்குகிறார்
நட்சத்திர எண்ணிக்கை தொடர்கிறது

(அகரமுதல்வனுக்கு..)

-வேல் கண்ணன் 

மேய்ப்பவனிடமிருந்து தவறிய ஆடுகள் :

உயிர்தெழும் நாளுக்கு முன்னதாக
கனவிலாழ்கிறார் ஜீசஸ்.
பிறக்கப்போகும் தேவதூதனுக்காக
கடும் பனி பொழிந்துக் கொண்டிருக்கிறது.
பாதங்கள் பூமியை நெருங்கும் முன்
தன் சின்னஞ்சிறிய கரங்களால்
நடுங்கும் உடலுடைய இந்த உலகிற்கு
கதகதப்பூட்டுகிறான்.
துயரார்ந்த விழிகளை துடைத்து பதப்படுத்துகிறான்.
திசைகளை செழிப்பாக்குகிறான்.
மனிதநேயமிக்கவரென மதிக்கப்படுகிறான்.
அழிவில் இருந்து ரட்சிக்கவந்தவரென அறியப்படுகிறான்.
அன்பின் மகத்துவரென போதிக்கப்படுகிறான்.

ஒரு கொசுவர்த்தி வில்லையை சுழற்றிவிடும் வினாடிக்குள்
மேய்ப்பர், ஏய்ப்பவராக ஏசப்படுகிறார்.
அப்பம் கொடுத்தவர், அற்பரென அல்லல்படுகிறார்.
இளைப்பாற்றிய மரத்தில்
சின்னஞ்சிறிய கற்கள் பாய்கிறது.

ரத்தம் தோய்ந்து நகர்கிறது காலச்சக்கரம்.

காலத்தின் அடியாழத்தில் ஊன்றிய வேரின்
செழித்த விருட்சத்தில்
பிதா சுதன் பரிசுத்த ஆவியின் பெயரால்
சிலுவையிலேற்றுகிறார்கள்.

கால்களும் கரங்களும்
ஆணிகளால் அறையப்பட,
நெற்றியிலிருந்து வழி்ந்தது அன்பின் துளி.
வலியின் முனகளில் புரண்டு படுத்த ஜீசஸ்
திடுக்கிட்டு எழுகிறார்.
மழங்க விழிக்கிறார்.
காதிரண்டை பொத்திக்கொள்கிறார்.
ஐயோவென அரற்றுகிறார்.

“அட ஆண்டவரே..
மந்தை தவறிய ஆடுகளை மேய்ப்பது
அவ்வளவு சுலபமல்ல”
என உறக்கச் சிரிக்கிறான் மனிதன்.

அலைகின்ற உயிர்களை கேளாதிருங்கள்

அகன்று விரிந்த கண்களில்
கடுஞ்சுடரென தகிக்கும் மாகா காளியின்
கழுத்தில் தொங்கும்
மண்டையோட்டு மாலையென கிடக்கிறேன்.
தலையறுந்து,
செங்குருதியின் வெம்மையோடு
நா வறண்டு
கண்கள் செருகி
உன் திசை அலைகின்றது என்உயிர்.
என்றாவது
உங்களது திசையில் எதிர்படும் என்னை
யாரென்று மட்டும்
கேளாதிருங்கள் நன்பர்களே.

வெம்மை உணர் தருணம்

நடை சார்த்திய திருக்கதவுகளுக்கு பின்புறம்
அனிலத்தின் இசைவில்
அசைந்து இசைத்த மணியின் ஒலியே நயமென
அம்பிகையைக் காண அறையில் ஆடுகிறார் அம்பலவாணன்.
சின்னஞ்சிறிய தழலடர்ந்து கூடிய வெம்மை
திரியம்பகனின் முன்நெற்றியில் ஜோதியென விரிகிறது.
ஆனந்தத்திலிருந்து ருத்ரமாக மாறிக்கொண்டிருக்கும் தாண்டவத்தில்
வலதுகரமுயர்ந்து டமருகம் முழங்க
இடமோ உயர்த்திய பாதத்தை உணர்த்த
ஓங்கியொலிக்கும் பிரணவத்தில்
அட்சரம்பிசகாது சுழல்கிறது பிரபஞ்சம்.

பூஷனங்கள் தரித்த நித்யசர்வாலங்காரியோ
கருமமே கண்ணாக இன்னமும் அயர்ந்துறங்குகிறாள்

1) வாலும் வாதையும்

நினைப்பதெல்லாம் பேசி விட முடிந்தால்
எவ்வளவு எளிதாய்
வாழ்ந்திருக்கும் இந்த எலி,
வளைக்குள் பதுங்கியிராமல்.

சாக்கடைக்குள் புகாமல்
ரேஷனின் புழுத்த
அரிசியினைத் தின்னாமல்
எப்புத்தகத்தை கடிக்க
வேண்டுமென்ற தெளிவின்றி

கோட்பாடுகள் குறித்தான
பிரக்ஞையின் சங்கொலியின்றி

எலியின் வாதையின்
பாஷையினைப் புரிந்து
கொள்ள வேண்டிய
அவசியம் எழாததால்
நாமதனை ‘வாயில்லா ஜீவன்’ வரிசையில்
வைத்திருக்கிறோம்.

2) கொலைஞர்

‘ஆரிகேமி’யில்
சிறந்த ஒருவர்
மணமான புதிதில்
விரும்பிச் செய்த
பறவை ஒன்றினை
பரிசளித்தார் மனைவிக்கு.

பின் எதற்கும்
இருக்கட்டுமென்று
அதன் சிறகுகளை
வெட்டிவிட்டுக் கொடுத்தார்.

3) சாசனங்களின் அளவையியல்

வெவ்வேறான அளவைகளை எப்போதும் கைக்கொள்கிறோம்

அறிமுகமற்றவர்க்கு
அறிமுகமானவர்க்கு
பிடித்தவருக்கு
பிடிக்காதவருக்கு

பைப் புகைப்போருக்கு
பீடி வலிப்போருக்கு
வெட்டவெளியில் கடன் கழிப்போருக்கு
கட்டண கழிப்பறைக்கு காசு சேர்ப்போருக்கு

நகல் வானம் கொண்ட படுக்கையறை கொண்டவருக்கும்
வானமே கூரை என்றானவருக்கும்

அளப்பதின் பொருட்டு
அளவை மாற்றும்
அற்பப் பதர்கள்
கற்றுக் கொள்ள
ஒன்றிருக்கிறது சாசனத்திடம்.

எவ்வளவோ நைந்த கடைசி ஒற்றைக்
கோவணத் துணிக்கும்

ஒன்றரை லட்சத்து
ஒற்றை கோட் சூட்டுக்கும்
ஓட்டென்னவோ
ஒன்றே ஒன்று தான்.

அடிக்கடி காணாமல் போகும் ஸ்டாப்ளர் பற்றிய குறிப்புகள்

நேற்று என் டேபிளுக்குக் கீழே ஒளிந்து கொண்டாய்
இரு நாள்களுக்கு முன் படி தாண்டி அடுத்த அறைக்கே போய் விட்டாய்
போகலாமா என்று அழைத்தவருடன் என்னிடம் சொல்லாமலே சென்றாய் சென்ற வாரத்தில்
இப்படி இருந்தால் எப்படி அன்பே
இரு உதடுகள் திறக்கும் சிறு புன்னகையும்
களுக்கென்ற உன் சிரிப்போசையும் கேளாது பஞ்சடைந்தன என் செவிகள்
வழவழப்பான உன்னை அள்ளியெடுக்காது வாழ்வே வெறுத்தது
சிறைப்படுத்த நினைக்காத என்னைப் புரிந்து கொள்ளவில்லை நீ
இப்போது என்ன நடந்தது பார்..
நீளமான, இறுக்கமான கயிறொன்றில் கட்டித் தொங்க விட்டிருக்கிறேன்
நானா காரணம் இதற்கு..


தலைமுடி கோதிய விரல்
தேடும் மனம்
சுண்டுவிரல் பற்றி அலைய ஆசைப்பட்ட
கதை பேசத் துடிக்கும் உதடுகள்
அருகமர்ந்து பயணிக்க
உற்றுநோக்க
தோள்சாயவெழும்
அடியாழக் கற்பனைகள்

ததும்பும் குளத்தின்மேல்
மிதக்கும் ஆமையெனக் கிடக்கிறேன்
மீன்கொத்திப் பாய்ச்சலை அவதானித்தபடி

புருவச்சுழிப்பை
கண்களை
காலடிகளை
சின்ன மூக்கை
முரட்டுக் கைகளை
காணும் தொலைவில்
மர அடர்வுகளினிடையில் மறைந்திருப்பேன்

காணும்தோறும் எழும்
குழலினதிர்வுகளை மயிலிறகென
அடுக்குள் பொதித்து வைப்பேன்

வசீகர வலையில்
நட்சத்திர மினுமினுப்பில்
என் கானகத்துள் இருக்குமெனக்கு

வேறென்ன வேண்டும் வாழ.


**
அமைதியாயிரு அன்பின் துயரமே
கயிற்றின் விசையடித்து ஓய்ந்திருக்கும் கணமிது
வலி கடந்துவிட்டது
மீண்டுமொரு முறை இழுக்க இனி அனுமதியில்லை

அமைதியாயிரு அன்பின் துயரமே
மணிக்கட்டின் காயம் ஆறிவிட்டது
இனியெப்போதும்
வாழ்வின் முடிவு பற்றிய கேள்வியில்லை

அமைதியாயிரு அன்பின் துயரமே
விளையாடும் குழந்தைகளின்
ஆனந்தக் கூச்சல் கேட்கிறதா?
விடியலின் குளுமை
பறவையின் கீசல்
மென்மையாய்ப் படரும் பனி
ஓங்காரமாய் ஒலிக்கும் மணி

கொஞ்சம் கொஞ்சமாய் வெளுக்கும் கிழக்கை
கட்டியணைக்கிறது புலரி


**
செம்புலப் பெயல்நீரெனக் கலந்திருந்த நாமின்று வேறுவேறு திசைகளில்
அன்றாடங்களின் அவசம் அன்பைப் பரிகசிக்கிறது
நாள்களின் மெல்லோட்டத்தில் நம் சந்திப்பு ஒவ்வொரு நாளும் ஒத்திவைக்கப்படுகிறது
அன்பே
நாம் அடுத்த வாரம் சந்திப்போமா
வாய்ப்பில்லை அவசர வேலை
பரவாயில்லை அடுத்த வாரம் பார்க்கலாமென
காதலை ஒத்திவைத்துக் காத்திருக்கிறோம்
அன்பு எந்நாளும் அறாதெனும்
நூற்றாண்டுச் சொற்பசை
காத்து நிற்கிறது
நிலவு தேய்ந்தும் வளர்ந்தும்
உன்னிடம் வந்து
என்னிடம் திரும்பி
காலத்தைத் தேய்க்கிறது
தேய்ந்துபோன திரைச்சுருளின் இழுவை ஒலியென நம் அலைபேசிக் குரல்கள்
ஒவ்வொரு நாளும் ஒரே பாடலைப் பாடுகிறது
இருக்கிறதோ இல்லையோவென
அங்குமிங்கும் இழுத்துப் பார்க்கிறது
தேய்புரிப் பழங்கயிறு

கவிஞர் மஞ்சுளா

இந்தச் சந்திப்பு
இவ்வளவு அழகானதாக
என்றுமே இருந்ததில்லை

நீ வரும் சாலையில்
எதிர்நோக்கும் எனது
கண்களை நோக்கி
வெயில் பறவைகள் எனக்காகத்
தூது வரலாம்

அசைந்து அசைந்து
மெல்ல நகரும் கணங்கள்
உன் நிழல் தொட்டு
நகரும் பொழுதில்
என் கண்கள் சுழல்கின்றன

சில பல பழைய கனவுகள்
என் மௌனங்களை
மொழி பெயர்த்து
உதடுகள் வழி கசிகின்றன

பொழுதின் சாயலில்
சிறு மழைத் தூறல்..

மண்வாசனை மணக்க..மணக்க..
அரூபமாய் சொற்கள்
குழைந்து வழிகின்றன

என் எதிரே
மழைத் துளிகள்
சாளரம் அமைக்க
மழையே அறியாதவாறு
புன்னகையை
என் மீது விசுறுகிறாய்

இருள் கவியும் நேரத்தில்
உன் உருவம் தேடியபோது
என்னைக் கடந்து செல்லும்
காற்றாய்
உன் மூச்சிருப்பது தெரிந்து
தள்ளாடி …தள்ளாடி..
நடந்து செல்கிறேன்

என் காலுக்கடியில்
குறு குறுக்கிறது
உன் பாதம் பதிந்த மணல்

இப்போது
என் கரங்களைப் பற்றியது
நீ அல்ல

உனக்காக நான் வரித்துக்கொண்ட
சொற்கள் மட்டுமே

அவளுக்கு ‘அவள்’ என்று பெயர் வைக்கும் முன்
இந்தச் சொற்களும்
இவ்வளவு அழகானதாக
என்றுமே இருந்ததில்லை

நிலவொளி பட்டுத்
தெறிக்கிறது
பெருங்குளத்தின்
மௌனம்..

புற்களின் வலிமையறிய
துளிகளைத்
தோளேற்றுகிறது
வானம்..

கூதல் காற்றை
செவியனுப்பி
சிலிர்க்கிறது
காற்று..

நிஜத்தை நிதர்சனமாய்
வாழச்சொல்லித்
தூண்டுகிறது
நிழல்..

வெளிச்சத்தை
வயிறுபுடைக்க
விழுங்கி ஏப்பமிடுகிறது
இருட்டு..

ஆயினும்
வசந்தங்கள் கொக்கரிக்கும்
பகலைத் தேடி
தனித்திருக்கிறது
இரவு..


நேற்று சந்திப்பில்
சில அன்பின் சொற்களை பரிசாக்கினீர்கள்..

இன்று அதே சொற்களை
திரும்ப வாங்கி அடித்து
திருத்தி மீண்டும்
கையில் தருகிறீர்கள்..

நாளை உங்களது
சொற்களை திரும்பவும் பெற்றுக் கொண்டு
பயணப்பட்டு விடுவீர்கள் ..

நானோ முந்தின நாள்
கைகளோடு இருந்த
வெறுமையோடு
நாளை மறுநாளையும்
வாழப் பழக்குகிறேன்
என்னை..

நீங்களோ புத்தனாகி
போகிறீர்கள் ..


கனவைப் பதியனிட்டு
உன் நிழல் போர்த்தித் துயிலும் கவிதையொன்றில்
வலசை போகலாம் என் குருவி..

தாகித்த வனம் தேடி உழவு மழையளவு மழைக் கொத்து ஏந்தி வரும் பல ஜென்மத்துத்
தொன்மம் நிறைந்தவன் நீ ..

உன் நத்தையோட்டில் உடல்
சுருக்கி உயிர் வளர்க்கும்
என்னை காளியின்
சிங்கமாக்குகிறாய்..

பாறையிடுக்கில் மண் முட்டி
விதை துளிர்த்து கல் உடைத்த
வேரொன்று திறக்கிறது
தேரையின் வாழ்வு..


சின்னஞ்சிறு
பறவையென்னுலகம்
விழியிழந்து விரல்
துழாவும்
உங்களுக்கு மிகச்
சிறியதாய் புலப்படலாம்..

கூட்டின் நீள அகலங்கள்
என்னைக் குறித்து
குறைவாகக் கூட
மதிப்பிடலாம்..

ஆனால் என் சிறகுகள்
விரிக்கும் வானத்தின்
எல்லைகளை நீங்கள்
அறிந்திட வாய்ப்பேயில்லை..!


சே. பிருந்தா

ஆயிரம் அறைகள் கொண்ட
அலுவலகம் அது
ஒவ்வோர் அறையிலும்
இலட்சம் கோடி பெட்டகங்கள்
ஒவ்வோர் பெட்டகத்திற்கும் ஒரு திறப்பு

திறப்பை மாற்றித் திறந்தால்
அலுவலகமே அலறும்
அதனுடையதால் திறந்தால்
ஒவ்வொன்றிலும்
ஒரு கண்ணீர் கதை
மனிதர்கள் பாதி கல்லாக மாறிய கதை
ஒவ்வொரு கதையிலும் நூறாயிரம் புதிர்கள்

பாசி அடர் குளங்களின் தாமரை வேர்களில்
அமிழ்ந்து விடாமல்
அவள் ஒவ்வொரு புதிரையும் விடுவிக்கப் போராடினாள்

ஒவ்வொரு விடுவிப்பும் ஒரு பரிசு
மனிதர்கள் முழுக்க கல்லாகி விடல்
அல்லது பறவையாகி விடல்

அலுவலக விதிகள் கறாரானவை
இரகசியங்கள் காக்கப்பட வேண்டும்
தனக்குள்ளாகக் கூட உரக்கச் சொல்லிவிடலாகாது

அதிசீக்கிரம் வந்த ஒருநாளில்
அவளறையின் புதிர் விநோதமாக இருந்தது
அது அவளது அறையல்ல என்று உணர்வதற்குள்
கதவு சாத்திக்கொண்டது

ஏன் திறந்தது
எதனால் ஈர்க்கப்பட்டாளென அறியவில்லை

கனத்த இரும்புக் கதவுகளின் இருளுக்குள் தொலைந்து போனாள்
கரும் பச்சை வனாந்திரத்தில் கண் விழித்தாள்
கண்ணுக்குத் தெரியாத பறவைகளின் கீச்சொலிகள்

அவளால் விடுவிக்கப் பட்டிருந்த
பறவையொன்றும்
உலவிக் கொண்டிருந்தது
அது அவளிடம் பேசியது போலிருந்தது
‘இரகசியங்களைச் சுமக்காதே, அப்படியே காற்றில் விடு’

அவள் ‘கடலலைகள் உறங்காததன் இரகசியத்தையா
உயிர்கள் சாகாத இரகசியத்தையா’ என்று கேட்க…

கேட்கும்போதே
கால்கள் பூமியில் வேர்விடுவதைப் பார்த்தாள்
கைகளெல்லாம் இலைகள் முளைத்தன
தலையெல்லாம் பூக்கள்

அராபியக் கதைகளின் ராணியும் ஒரு புதிராக உறையத் தொடங்கினாள்
அவளோடு அவளது அறையின் இலட்சம் கோடிப் பெட்டகங்களின் புதிர்களும்
கல்லாக இறுகத் தொடங்கின

சில யுகங்கள் கழிய
அன்றுதான் அலுவலகத்திற்குப் புதிதாக வந்த ஒருத்தி
முதல் காலடியை அந்த அறையுள் வைத்தாள்
புதிர்கள் விழித்துக் கொண்டன

  • * * * * *