குறுங்கதை 1: மண்

அன்றைய தினத்தின் அலுவலை முடித்துவிட்டு மாடியிலிருந்து கீழே இறங்கி வந்தேன். எதிரே பூட்டியிருந்த டீக்கடையின் மர பெஞ்சில், சபை கூடும் போதெல்லாம் எல்லோருக்கும் பிரதானமாய் வீற்றிருந்து புகையிலைச் சீவல் தெறிக்க கதைகள் சொல்லி, கைகொட்டி சிரித்தபடி இருக்கும் நமச்சிவாயம் தாத்தா தனியே அமர்ந்திருந்தார். அவர் நான் பார்த்தேயிராத என்னுடைய அப்பா வழித் தாத்தாவின் பால்யக்கால சிநேகிதர். எப்போது பார்த்தாலும் வாஞ்சையாக கைகளைப் பற்றிக்கொள்வார்.

அவரை அப்படி தனிமையில் பார்க்க என்னவோ போலிருந்தது. உள்ளே ஒன்று உந்தித் தள்ள இறங்கி அவர் பக்கமாக நடந்தேன். பெருந்தொற்று மட்டும் இல்லாது இருந்திருந்தால் இந்நேரத்துக்கு புகை கக்கும் வண்டிகளுக்கு இடையே பழைய மகாபலிபுரம் சாலையின் ஏதேனும் சிக்னல் ஒன்றில் நின்றுகொண்டிருந்திருப்பேன்.

தலையைக் குனிந்தபடி அமர்ந்திருந்தார் என்றாலும் என் வருகையின் சலனத்தில் மெதுவாக நிமிர்ந்து பார்த்தார்.

“வாய்யா..” என்றபடி கைகளைப் பிடித்து இழுத்து பெஞ்சில் அமர வைத்தார். கைகளை சானிட்டைஷர் போட்டுக்கொள்ளும் வரை முகத்தில் வைக்காமல் இருக்க வேண்டும் என்பதை நினைவில் நிறுத்திக்கொண்டேன்.

இரண்டு நிமிடங்கள் இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. அவருடைய நினைவுச் சரடை இடைவந்து நான் அறுத்துவிட்டேன் என்பது மட்டும் புரிந்தது. தலை நிமிர்ந்து எதிரே நின்றுகொண்டிருந்த எங்கள் வீட்டைப் பார்த்தவர்.

“இந்த இடத்தில் ஒரு பெரிய கிணறு இருந்தது” என்றார்.

நாலாபுறமும் கருங்கற்கள் பாவப்பட்டு சுவர் போல் அமைத்திருக்க சின்ன கல் ஒன்றை எடுத்து எறிந்தாலும் அள்ளித் தெறிக்கும் விதமாய் தண்ணீர் நிறைந்து தழும்பி நின்றது அக்கிணறு. அவ்வப்போது காக்கைகள் அமர்ந்து தாழும் மின்சார கம்பிகளை ஏந்தி நிற்கும் டிரான்ஃபார்மர் இருக்கும் இடத்தில்தான் அடர்ந்து செழித்த அவ் வேப்ப மரம் நின்றுகொண்டிருந்தது. கிணற்றில் குதித்து எழுந்த அவ்விரு பையன்களும் வேப்ப மரத்தை வந்து தொடுவதும் அங்கிருந்து வேகமாய் ஓடிவந்து விசையேற்றி கிணற்றில் தொப்பென்று குதிப்பதுமாய் விளையாடிக்கொண்டிருந்தனர். இந்த முறை வேப்பமரத்தின் மேலேறி கிளைகளில் ஏறி பழங்களைக் குலுக்கிக்கொண்டிருந்தனர். ஒவ்வொரு கிளையாக மேலே மேலே என்றேறி குலுக்கி விளையாடிக்கொண்டிருக்கும்போது அதில் ஒருவன் கால் இடரக் கீழே விழுந்தான். பெரிய அடி இல்லை. உள்ளங்கை முழுவதும் அங்கிருந்த செம்மண் அப்பியிருந்தது. சுற்றியிருந்த காரை வீடுகள் அமிழ்ந்து ஒரு பக்கம் வயலும், எதிர்புறம் பனைமரக் காடுமாய் மெல்ல எழுந்து நின்றன. ஸ்பிளண்டர் சென்று கொண்டிருந்த மண் மூடிய தார்ச்சாலைக்கு உள்ளே குவித்து நிறுத்திய வரப்பு ஒன்று ஓடிக்கொண்டிருந்தது. வரப்பின் மேல் சட்டையில்லாமல் அழுக்கின் களிம்பேறிய பாவடை நுனியை இழுத்துச் சுவைத்தப்படி எதிர்ப்படும் சிறுமிக்கு அப்படியே அம்மாச்சியின் சாயல். கோபுரம் எழும்பாமல் கிரானைட் பாவப்படாத பீடத்தில் வீற்றிருந்த முத்தாளம்மன்னுக்கு அப்போதும் அதே கருணை பொங்கும் கண்கள்.

 “ஏய்யா” என்ற குரல் கேட்டுத் திரும்பினேன். “போயிலைக்குச் சில்லறை இருக்கா” என்றார் என் முகத்தைப் பார்க்காமலேயே.

பர்ஸ் எடுத்து வரவில்லை. இருந்த அத்தனை பாக்கெட்களிலும் தடவினேன். எப்போதோ மிச்சமாக வாங்கி வைத்திருந்த மூன்று பத்து ரூபாய்கள் பேண்ட்டின் பின் பாக்கெட்டில் இருந்தன.

செம்மண் அப்பியிருந்த அக்கைகளில் ரூபாய்களை திணித்துவிட்டு கிணற்றுக்குள் விரைந்தேன்.

O

குறுங்கதை 2: Artist

சுற்றியிருந்த அத்தனைபேரும் சிந்தட்டிக் பிரஷ்களைக் கொண்டு வண்ணங்கள் குழைத்து சித்திரங்களை எழுதிக்கொண்டிருந்தபோது நான் என் சிறகிலிருந்த இறகொன்றைப் பிய்த்து ஓவியங்களைத் தீட்டிக்கொண்டிருந்தேன். எல்லோரும் அந்தி கருக்கலில் கூடடையும் பறவைகளை வரைந்துகொண்டிருந்தபோது நான் மட்டும் ஜட்டிங்காவில் கூட்டமாய் தற்கொலை செய்துகொள்ளும் பறவைகளின் அந்திமத்தைத் தீட்டிக்கொண்டிருந்தேன். மற்றவர்களுக்கு பச்சையும், மஞ்சளும், நீலமும் பிரதானமாய் இருந்தபோது என்னை சிவப்பொன்று மட்டுமே பித்துகொள்ளச் செய்திருந்தது.

முதலில், இறகுகளால் வரையப்படும் ஓவியங்களில் தீட்டல்கள் அத்தனை துல்லியமாக இல்லை என்றார்கள். அவை வண்ணங்களை ஓரிடத்தில் குவித்தும் மற்றோரிடத்தில் குறைத்தும் ஓவியத்தை பாழ்படுத்துகிறது என்று என்னை நம்பவைத்தனர். என் விரல்கள் பற்றியிருந்த இறகினைப் பறித்து சிந்தட்டிக் பிரஷ் ஒன்றைக் கையளித்தார்கள். அதைக் கொண்டு வரைவது எளிதாகவும் இலகுவாகவும் இருந்தது. அது என் சொல் பேச்சுக்கெல்லாம் வளைந்தது. நில் என்றதும் நிறுத்தியது. செல் என்றதும் பாய்ந்தது.

சிவப்பின் உக்கிரம் தணியுமிடங்களில் மட்டுமே உணர்வுகள் துலக்கமாகின்றன என்றார்கள். அதன்பொருட்டு மஞ்சளை அறிமுகம் செய்தார்கள். அது, என் சிவப்போடு இணைந்து நிகழ்த்திக்காட்டிய அற்புதம் என்னை நீலத்தையும் ஏற்கச் செய்தது.

பிரஷ்களைப் பற்ற ஆரம்பித்ததிலிருந்து பிடுங்கப்படாத என் இறகுகள் தாமே உதிரத் தொடங்கியிருந்தன. மஞ்சளுக்கும் நீலத்துக்கும் பச்சைக்கும் பழகிய கண்களுக்கு பின்பு சிவப்பு தெரியவேயில்லை.

எல்லாவற்றுக்கும் பிறகும் நான் விடாமல் ஜட்டிங்காவின் பறவைகளையே வரைந்துகொண்டிருந்தேன். இரவும் குளிரும் கவியும் மலையிலிருந்து உதிர்ந்து மோதிய பறவை ஒன்றுக்கு நான் நீலக் கலரில் இரத்ததை வரைந்தேன்.

O

குறுங்கதை 3: குருவி

அது கனவுதான் என்று சமனப்பட்டு ஆசுவாசம்கொள்ளவே சில நிமிடங்கள் தேவைப்பட்டன. படுக்கையிலிருந்து எழுந்து அமர்ந்து வேட்டியில் ஏதேனும் இருக்கிறதா என்று உதறிப் பார்த்தேன். நல்ல வேளை அது கனவேதான். இதே வீடு. முதல் மாடியில் தூங்கிக்கொண்டிருக்கிறேன். காற்றுக்காக ஜன்னல் திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. புழுக்கத்தின் பொருட்டு காற்றை வேண்டித் திறப்பதும், பின்பு பின்னிரவில் கவியும் குளிரின் காரணமாய் எழுந்து சாத்துவதுமாய் ஜன்னலுக்கும் எனக்கும் இரவுகள் முழுவதும் தீராத பந்தம்.

நன்றாகத் தூங்கிக்கொண்டிருந்தேன். இது கனவில். கவணிலிருந்து புறப்பட்டுத் தெறிக்கும் கல்போல அந்தப் பறவை அறைக்குள் நுழைந்தது. நுழைந்த வேகத்தில் அது என்ன பறவை என்று அறிய முடியவில்லை. உள்ளே நுழைந்துவிட்டது. வெளியேறும் பாதை தெரியவில்லை. ஜன்னல் இருக்கும் சுவரை மட்டும் விட்டுவிட்டு அறையின் மற்ற மூன்று சுவர்களிலும் முட்டி மோதுவதும் நான் இருப்பதை உணர்ந்து பயத்தில் படபடவென சிறகசைப்பதுமாய் இருந்தது. அதன் சிறகசைப்பு மனதைப் படுத்தியது. எழுந்து விளக்கைப் போட்டால் ஜன்னல் புலப்பட்டு அது வெளியேறிவிடக்கூடும் என்று நினைத்தேன். காட்டுப் பறவைகளுக்கு எந்த மடையன் விளக்கெரிக்கிறான் என்ற கேள்வி எழுந்தபோது மெலிதாகச் சிரித்துக்கொண்டேன்.

கண்கள் இருளுக்குப் பழகி வந்தன. பழுத்துச் சுருங்கிய மாம்பழத்தின் தோலைப் போலிருந்த என் உள்ளங்கை ஒன்றுக்குள் அடங்கிவிடும் உருவம். பட்டுப் போன்ற சாம்பல் நிற அடி வயிறும் மிளகுக் கண்களும் மரப்பட்டை வண்ணச் சிறகுகளும் கொண்ட அழகிய சின்னச்சிறு படைப்பு. உள்ளே நுழைந்திருந்தது ஒரு சிட்டுக் குருவி. நிஜத்தில் யானையே பூடகமாகத்தான் புலப்படும் ஆனால், கனவில் மட்டும் பார்வையில் அத்துணை துல்லியம் எங்கிருந்தோ கூடிவிடுகிறது.

பொழுது ஓடிக்கொண்டிருந்தது. அதன் போராட்டம் என்னவோ தொடர்ந்துகொண்டிருந்தது. எத்தனை முட்டல் மோதல்கள், அலைக்கழிப்புகள், சிறகசைப்புகள். பாவமாக இருந்தது. திறந்த வெளியை கட்டற்ற சுதந்திரத்தை  அடைய உதவும் ஜன்னலைத் தவிர மற்ற எல்லாம் அதற்கு புலப்பட்டது. புகழ்பெற்ற தமிழ்க் கவிதை ஒன்றில் வருவதைப் போல எனக்கதன் பாஷை தெரியவில்லை. அப்போதுதான் அது நிகழ்ந்தது. ஜன்னலைக் கண்டுகொண்டுவிட்டது. உடல் பொருள் ஆவி என அனைத்தும்கூடி ஜன்னலை நோக்கிப் பாய்ந்தது. ஜன்னல் தெரிந்த அதற்கு ஏனோ சுற்றிக்கொண்டிருந்த மின்விசிறி தெரியவில்லை. சுற்றிக்கொண்டிருந்த மின்விசிறியில் அடித்துத் தூக்கி எறியப்பட்டு என் மடியில் வந்து விழுந்தது அதன் வெதுவெதுப்பான உயிரற்ற உடல்.

அதுவரையிலான ஒட்டுமொத்த வாழ்வையும் ஆல்பம் போட்டு புரட்டிப் பார்ப்பதைப் போல், வாழ்வின் அந்திமக் காலத்தில் வரும் கனவுகள் எல்லாமே இப்படித்தான் இருக்கின்றன.பூட்டாமல் விடப்பட்ட கதவுகள், தாகம் விரட்டும் தனித்த பாலைநிலப் பயணம், விடைதெரியாமல் விழிக்கும் தேர்வறைகள், துரத்துவது யார் என்றே தெரியாத முடிவில்லாத ஓட்டம், பொது இடம் ஒன்றில் தரிக்கும் நிர்வாணம். இன்றைய கனவு எல்லாற்றிலும் கொடூரமான ஒன்று. இன்னும்கூட மனம் ஆறவில்லை. பொழுது மெதுவாகப் புலர ஆரம்பித்திருந்தது. தூக்கம் முற்றிலும் விலகியிருக்கவில்லை. நெஞ்சில் இறுக்கம் கவிந்தது. படுக்கையிலிருந்து எழாமலேயே ஜன்னலை எட்டிப் பார்த்தேன். திறந்திருந்தது. மின்விசிறியும் ஓடிக்கொண்டிருந்தது.  

எழுந்துபோய் ஜன்னலை இழுத்துச் சாத்தினேன். மின்விசிறியின் வேகத்தை மட்டுப்படுத்தினேன். மறுபடியும் படுக்கையில் படுத்துக்கொண்டேன். தூக்கம் கூடவில்லை. முந்தைய இரவின் எண்ணெய்ப் பலகாரம் வயிற்றில் அமிலத்தைக் கிளப்பியது. வலப்பக்கமாய் ஒருசாய்த்து படுத்துக்கொண்டேன். அப்போதுதான் அதைக் கவனித்தேன். பழுப்பும் சாம்பலுமாய் ஒரு சிறிய இறகு. கண்களை இறுக்க மூடிக்கொண்டேன்.

O