மிட்டாய் நிலத்திற்கு சென்ற சின்னுவும், ஜிங்கியும் ஆச்சரியமாக சுற்றிச் சுற்றி பார்த்துக் கொண்டிருந்தார்கள். கண்களுக்கு தெரிந்த இடமெல்லாம் மிட்டாய்களும், சாக்லேட்களும் இருந்தது. லாலிப்பாப் போன்ற சின்னச் சின்ன  கம்பங்கள், பிங்க் நிறத்தில் நின்றுக் கொண்டிருந்தது. குட்டி குட்டியான  மலைகள் சாக்லேட் நிறத்தில் இருந்தது. மெதுவாக இருவரும் நடந்துச் சென்றார்கள்

அங்கு இருக்கும் எல்லாச் செடிகளிலும், விதவிதமான மிட்டாய்கள் தொங்கிக் கொண்டிருந்தன. சின்னுக்கு  தனக்கு பிடித்த  டைரி மில்க்கைப் பார்த்தவுடன் நாக்கில் எச்சில் ஊற ஆரம்பித்துவிட்டது. ஜிங்கியை எடுத்துக் கொண்டு அந்த மரத்திற்கு கீழே உட்கார்ந்து இரண்டு, மூன்று, நான்கு என்று டைரி மில்க்கை சாப்பிட்டு முடித்தாள். 

ஜிங்கி பக்கத்தில் இருந்த இன்னொரு மரத்தில் கலர்கலரான ஜெம்ஸ் மிட்டாய் இருப்பதைப் பார்த்து துள்ளி குதித்து போனான். அவன் அங்கு போய் நின்றவுடன், ஜெம்ஸ் மிட்டாய்கள் ஜிங்கியின் தலைக்கு மேல் கொட்டியது. அவன் சந்தோஷத்தில் குரைக்க, சின்னுவும் சென்றாள்.

இப்படியாக இருவரும் மிட்டாய்களைப் பார்த்து வியந்து சந்தோஷமாக சாப்பிட்டுச் சுற்றிக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது சாக்லேட் ஆற்றில், ஓரியோ பிஸ்கட்டில் குட்டியான ஒரு தோணி தெரிந்தது. எப்பொழுதும்  போல ஜிங்கி ஓட, பின்னாடியே சின்னுவும் ஓடிச் சென்று ஏறினாள்.

சாக்லேட் ஆற்றின் இரு புறமும், தென்னைமரங்கள் போன்ற உயரமான மரங்களில் இருந்து நீளமான சக்கர் சாக்லெட் தொங்கிக் கொண்டு இருந்தது. அவர்கள் கொஞ்ச தூரம் போன பிறகு, சாக்லேட் நிலம் கண்களில் இருந்து மறைந்து போனது. அந்த சாக்லேட்டு ஆறும் காய்ந்து போக, தோணியும் நின்றுவிட்டது.

சின்னுவிற்கும் ஜிங்கியிருக்கும் வீட்டு ஞாபகம் வர, எப்படியாவது போக வேண்டும்மென்று வழியைத் தேடிக் கொண்டிருந்தார்கள். இவர்களை பார்த்து கை அசைப்பது போலவே ஒரு கோட்டை கண்ணில் பட்டது.

“ஜிங்கி, சீக்கரம் ஓடி வா, அங்க ஒரு கேசில் தெரியுது” என்று சொல்ல ஜிங்கியும் ஓட்டம் பிடித்தது.

கோட்டையை அடைந்த சின்னுவிற்கு அதிர்ச்சியாக இருந்தது. ஜிங்கியும் பயந்து சின்னு பின்னாடி மறைந்துக் கொண்டான். கோட்டையின் வாசலில் பெரிய மீசையும், தொந்தியையும் வைத்துக்கொண்ட பெரிய அரக்கன் தூங்கிக் கொண்டு இருந்தான். குறட்டை சத்தம் நிலத்தில் லேசான நடுக்கத்தை தந்தது.

அவன் காலுக்கு நடுவில்  இருக்கும்  சின்ன சந்து வழியாக சத்தம் போடாமல் இருவரும் நடந்துச்  செல்ல, ஜிங்கி மட்டும்  பயத்தில் நின்றுவிட்டது.

பக்கத்தில் ஜிங்கி இல்லாததை  பார்த்த சின்னு, திரும்பிப் பார்த்து திடுக்கிட்டாள். அந்த அரக்கனின் விரல்கள் அசைந்து மண் புழுதியை கிளப்பியது. கண் இமைக்கும் நேரத்தில் சின்னு ஜிங்கியை எடுத்துக் கொண்டு கதவருகே  வர மீண்டும் குறட்டை சத்தம் பெரிதாகக் கேட்டது.

உள்ளே சென்ற சின்னுவும், ஜிங்கியும் பெரிய பாதாளம் போன்ற குழயில் தொம் என்று விழுந்து விட்டார்கள்.

==========================================================================================

– நசீமா ரசாக்

தொடரும்……