பழனிக்குமார், மதுரை

நண்பர் ஒருவர் கார் வாங்க வேண்டும்,” என்ன வாங்கலாம் “என்று கேட்டார். நான் ஒன்றும் கார் விசயத்தில் அல்லது டெக்னிக்கல் விசயங்களில் பெரிய நிபுணத்துவம் பெற்றவன் எல்லாம் இல்லை. கார்களை வேடிக்கைப் பார்க்கும் பழக்கம் உண்டு. அதனால் ஓரளவு அது பற்றிய செய்திகள் இருந்தால் படிப்பதுண்டு. “செவரால்ட்” கம்பெனி நிறுவனத்தின் ஓர் ஆலையை மூடுவதாய் அறிவித்ததும் , அந்த நிறுவனத்தின் கார் ஒன்றை வாங்கவேண்டும் என்று முடிவு செய்திருந்த நண்பர் ஒருவருக்கு அது பற்றி பேசியிருந்தேன். 

ஆக, ஒரு கார் வாங்க வேண்டும் என்றால் அந்த நிறுவனம் பாதியிலேயே ஆலையை மூடிக்கொண்டு போய்விட்டால், அந்த நிறுவனத்தை நம்பி காரை வாங்கிவைத்திருப்போர் சர்வீஸ், மற்றும் உதிரிப்பாகங்களுக்கு எங்கு செல்வது?!காரில் ஏற்படும் பிரச்சினைக்கு எங்கு போவது?!. அப்படியென்றால் கார் வாங்க வேண்டுமானால் அந்த நிறுவனத்தின் விற்பனை எப்படி இருக்கிறது , இந்தியாவில் அதற்கானச் சந்தை எப்படி இருக்கிறது என்பதை எல்லாம் பார்க்கவேண்டியிருக்கிறது. 

2005ம் வாக்கில் ஓர் உறவுக்காரர்,” டி சி எல் என்ற கம்பெனி சிடி ப்ளேயர் தான் வளைகுடா நாடுகளில் பிரசித்தம் மாப்ளே” என்று அதை வாங்கப் பரிந்துரைத்து, ஆளும் பார்க்க ஜாம்பவானாய் இருக்கிறார், “இன்” லாம் பண்ணிருக்கிறார், ரோட்டில் அவரைப்பார்த்து நான்கு பேர் வணக்கம்போடுகின்றனர் என்று அவர் பரிந்துரையும் செல்லுபடியாகும் என்று அதை வாங்கினேன். ஒரிஜினல் சிடி போட்டால் தான் அந்த ப்ளேயர் வேலை செய்யும். அந்தக் காலகட்டத்தில் கிடைக்கும் எந்த சிடியும் அதில் ஓடவில்லை. சர்வீஸ் செய்வதற்குத் தகுதியான ஆட்கள் கிடைக்கவில்லை. என் பணம் வீணாகிப்போனது தான் மிச்சம். 

நாம் சார்ந்திருக்கும் பொருளை வாங்கப்போகும்பொழுது என்ன எல்லாம் பார்க்கவேண்டியதாயிருக்கிறது. போன மாதம் கூட வாஷிங்மிஷின் வாங்கவேண்டும் என்று நண்பரிடம் பேசினேன். “ஐ எஃஃப் பி” தானே மார்க்கெட் லீட் ( பொதுவாகவே, நான் விற்பனைத் துறை என்பதனால், எந்த நிறுவனத்தையும் அதன் சந்தையில் அதனின் விற்பனை , கள நிலவரம் போன்றவற்றில் கவனம் செலுத்துவதில் எனக்கு ஆர்வம் உண்டு) 

ஆனால் என் நண்பன் சொன்ன விசயம் ஐ எஃப் பி க்கு மோட்டர் சப்ளை செய்துகொடுத்த போஷ் நிறுவனம் தனியாகக் களத்தில் இறங்கியதில் கொஞ்சம் யோசிக்கவேண்டும் என்று. நெடு நாட்களாய் நம்பிக்கையாய் விற்றுக்கொண்டிருந்த ஒரு இயந்திரத்தின் பின் நிர்வாகச்சீரமைப்பு நடக்கும்பொழுது அந்த இயந்திரத்தின் நம்பகத்தன்மை கூடுமா குறையுமா என்றும் நாம் பார்க்கவேண்டியதாயிருக்கிறது. 

நாம் நுகரும் ஒரு பொருள் வாகனமோ, வீட்டு உபயோகப்பொருளோ எதுவாக ஆயினும் அதன் கடந்தகால சரித்திரம் என்ன, களத்தில் அதனின் நிலைப்பாடு என்ன, வருங்காலம் இதே போல் நிரந்தரமாய் இருக்குமா, நாளை ஏதாவது பிரச்சினை என்று போனால், அந்த நிறுவனம் இன்னும் ஐந்து வருடங்களுக்கு அந்தப் பிரச்சினையைத் தீர்க்கத் தகுந்த வல்லமை கொண்டுள்ளதா என்றுலாம் நாம் பார்க்கிறோம் தானே. 

தலைமையிடம் தவிர, நம் வீட்டுக்கு அருகில் சர்வீஸ் நிலையங்கள் இருக்கிறதா என்றும் சர்வீஸ் செய்துகொடுப்பவர்கள் நம் மாவட்டத்தில் நம் பகுதியில் நமக்கு இணக்கமாய் இருப்பார்களா என்றுலாம் கூட நாம் பார்த்தால் தானே நாம் போடும் முதலீடு வீணாகப்போகாமல் பலன் தரும் வகையில் இருக்கும் . நாம் நம் வீட்டில்வாங்கும் பொருள் வெறுமனே நம் பணம் அல்ல. அது நம் உழைப்பு. நாம் வேலைபார்ப்பதற்குக் கிடைத்த ஊதியம். அதற்காக நம்மைச் சார்ந்தோர் நமக்காகச் சில தியாகங்களைச் செய்திருப்பார்கள். அவர்களின் தியாகமும் தான். இப்படியான உழைப்பும் தியாகமும் சேர்த்து காணிக்கையாக்கி ஒரு நிறுவனத்தின் மீது ஓர் இயந்திரத்தின் மீது நம்பிக்கை வைக்க, இவ்வளவு விசயங்களைப் பார்க்கவேண்டியதாகி இருக்கிறது. 

நிற்க.

இது உங்கள் வீட்டு உபயோகப்பொருள் கண்காட்சிக்குரிய கட்டுரை இல்லை. ஓர் இயந்திரத்திற்கு நீங்கள் காட்டும் அக்கறை, உங்கள் வீட்டிற்கு நீங்கள் காட்டும் அக்கறை தானே ஒரு நாட்டிற்கும். 

தேர்தல் வருகிறது. 

லெட்டர்பேட் கட்சிகள் எல்லாம் தன் சாதிக்காரர்களைக் கூட்டி கூட்டம் காண்பித்து, பராக்கிரமம் காண்பித்து சாலையில் வந்துகொண்டிருக்கிறார்கள். 

தமிழகத்தில் அண்ணாவிற்குப் பின் எந்தத் தேசிய கட்சியும் எழவில்லை என்பது உண்மை. தமிழகத்தில் இருப்பது வெறும் ‘கட்சி அரசியல்’ அல்ல. தமிழகத்தில் இருப்பது ‘கொள்கை அரசியல்’. ‘கொள்கை அரசியலை’ வார்த்தெடுத்ததன் விளைவு தான் பல துறைகளில் தமிழகம் முன்னேறிக்கொண்டு வருவதும், சமத்துவம் ஓரளவிற்கு இங்கு பேணப்படுவதும் அந்த அச்சாணியில் தான். இப்பொழுது நிலைமை வேறு. இந்தியா முழுதும் தன் மதக் கொள்கைகளை நிலை நிறுத்தும் ஃபாசிச முகங்கள் தமிழகத்தில் தலைதூக்கியுள்ளன. அதில் ஒன்று தான் புது கட்சிகள் முளைப்பது. 

தமிழகத்தில் பிஜேபியின் இலக்கு என்பது, ஆட்சியை பிஜேபி பிடித்து முதல்வராய் இருப்பது அல்ல. அவர்களது இலக்கு அதிகாரமையமாய் இருப்பது. அதிகாரமையமாய் ஒருவன் இருப்பதற்கு அவனுக்குப் பதவி முக்கியமானது அல்ல. தமிழகத்தில் பிஜேபியின் திட்டம் ஒன்று தான். தனக்குச் சாதகமான ஓர் ஆளை ஜெயிக்கவைப்பது. அவர்களுக்குச் சாதகமான ஓர் ஆள் (?) இப்போதைக்கு திமுக இல்லை(இப்போதைக்கு). ஆதலால், தனக்குச் சாதகமான ஆள் ஜெயிக்குறானோ இல்லையோ, தனக்குச் சாதகமாய் இல்லாத  ஆள் ஜெயிக்கக்கூடாது என்பது தான் பிஜேபியின் இலக்கு. கிட்டத்தட்ட நான் வாழாவிட்டாலும் பரவாயில்லை எதிரி வாழக்கூடாது என்ற கண்ணோட்டம்.

தமிழகத்தில் பிஜேபியினர் வேலை பார்ப்பதை உற்று நோக்குங்கள். அவர்கள் தேர்தலில் அவர்கள் ஜெயிப்பதற்கு வேலை பார்க்கவில்லை. திமுகவைத் தோற்கடிக்கத் தான் வேலை பார்க்கிறார்கள். அவர்களது முகமாக ஆளும் அதிமுகவைக் கையில் வைத்துக்கொண்டிருக்கிறார்கள். அதிமுகவின் ஆளும் தலைமை மீது பிஜேபி க்கு இருக்கும் நம்பிக்கை,  அதிமுகவின் உண்மையான விசுவாசிகள் மீதும், அதிமுக விற்கு ஓட்டுப்போட்ட அபிமானிகள் மீதும், அதிமுகவிற்கு ஓட்டுப்போட்ட அதிருப்தி திமுக ஓட்டுகள் மீதும் இல்லை. ( இந்த இடம் உங்களுக்குப் புரியவில்லை எனில் மறுபடியும் படிக்கவும்) 

பிஜேபியின் தமிழக இலக்கு அரியணையில் தன் அடிமையை அமரவைப்பது என்பது தான் நிதர்சனம். அதிமுக மீதான அதிருப்தி ஓட்டுகளைத் திமுக விற்கு போகவிடாமல் தடுப்பது தான் பிஜேபியின் வேலை. அதற்கான முகம் தான் ரஜினி அண்ட் கோ வருவது. 

கதைக்கு வாருங்கள். 

நீங்கள் கார் வாங்கப்போகிறீர்கள்.

நீங்கள் ஒரு கட்சிக்கு ஓட்டுப் போடப்போகிறீர்கள்.

கார் தயாரிக்கும் நிறுவனத்தின் பின்புலம் பார்ப்பீர்களா மாட்டீர்களா, 

நீங்கள் ஓட்டுப்போடப்போகும் கட்சியின் பின்புலம் என்ன? என்று பார்க்காமல் ஓட்டுப்போடுவீர்களா என்ன?

உங்கள் கார் சார்ந்திருக்கும் நிறுவனம் எதிர்காலத்தில் எந்த நிலைமையில் இருக்கும், நீடித்து இருக்குமா என்று பார்ப்பீர்கள் தானே?

நீங்கள் ஓட்டுப்போடப்போகும் கட்சி தலைவரின் எதிர்காலம் என்ன, அவரது கட்சியில் இரண்டாம் கட்டத்தலைவர்கள் ஜனநாயக அமைப்போடு கட்சியை இன்னும் பல ஆண்டுகளுக்கும் பல தேர்தலுக்கும் கொண்டு செலுத்தும் அமைப்பு கொண்டவர்களா? இல்லை ஒரே தேர்தலோடு காணாமல் போவார்களா, இல்லை அவர் காலத்திற்குப்பின் ஏதாவது ஒரு பெரிய கட்சியோடு இணைத்துக்கொண்டு அவர்களது உறவினர்கள் மட்டும் ஆதாயம் பெறுவார்களா? அப்படி மாறும் தன்மை கொண்டவர்களாய் இருந்தால் அவர்களுக்கு ஓட்டளிக்க முடியுமா என்றும் பார்ப்பீர்கள் தானே?

நீங்கள் வாங்கப்போகும் கார் பிரச்சினை செய்கிறது என்றால் உடனே அணுகி சர்வீஸ் பெறும் அளவிற்கு அவர்கள் திற்மையானவர்களைக் கையில் வைத்திருக்கிறார்களா என்று பார்ப்பீர்கள் தானே?

நீங்கள் ஓட்டுப்போடப்போகும் கட்சியின் கொள்கை, அதன் மூலம் அவர்கள் எதிர்காலத்தில் சமத்துவமான, நம்பிக்கையான அனைவருக்குமான ஓர் எளிய கட்டமைப்பை அமைத்துத் தரமுடியுமா என்று யோசிப்பீர்கள் தானே?

ஒரு மன்னார் அண்ட் கம்பெனி திடீரென ஒரு நாள் காலையில் நான் டாட்டாவைப் போல் காரை உற்பத்தி செய்து தருகிறேன். என்னிடம் வாங்குங்கள் என்றால் வாங்குவீர்களா? ஒழுங்காய் கார் உற்பத்தி செய்து விற்பனை செய்யும் நிறுவனமே கொரோனா கால பிரச்சினையில் திணறுகிறது. இதில் புது நிறுவனத்தை எப்படி நம்புவீர்கள். 

நான்கு பேர் வணக்கம் சொல்கிறார்கள் , இன் பண்ணிருக்கார் என்றும் மாப்ளே என்று என்னை உரிமையாய் அழைத்தார் என்பதற்கும் மயங்கி நான் டி சி எல் சிடி ப்ளேயர் வாங்கி காசை வீணாக்குவது போல், ஒருவரிடம் மயங்கி நாம் ஓட்டளிக்க முடியுமா? 

உங்களுக்குத் தேவை, இப்போதைக்கு வெளிப்படையானச் சமத்துவத்தை நேரடியாகச் சொல்லுகிற , சாதி மதப் பாகுபாடுகள் அற்ற ஓர் அரசாங்கத்தை இதற்கு முன் கட்டமைத்த அனுபவமுள்ள,அல்லது அதைக் கட்டமைத்துத் தருவோம் என்ற நம்பிக்கை / கொள்கை அரசியல் சார்ந்த ஓர் இயக்கத்தைத் தேர்ந்தெடுப்பது தான். 

கேஸ்விலை போன்ற சாமான்யனைப் பாதிக்கும் விலைக்காரணிகள், கடந்த பதினொரு ஆண்டுகளாக இல்லாத பொருளாதார மந்த நிலை, கொரோனா காலத்திற்கு முன்பே தேய ஆரம்பித்திருந்த வளர்ச்சி, ஜி எஸ்டி விலை ஏற்றங்கள், மதம் சாதி களின் பெயர்களால் கொலை , வன்முறை, வேலையில்லாத் திண்டாட்டம், ஜன நாயகத்தின் குரலை நெறிப்பது என்று  எதைப் பற்றியும் கவலைப்படாமல் மதத்தின் பெயரால் மக்களைப் பாகுபடுத்தி அதில் குளிர் காயும் ஃபாசிஸ அரசிற்கு ஒத்துழைத்துப்போகும் நரிக்கூட்டத்தைத் தூக்கி எறிவது தான் ஒட்டு மொத்தச் சமூகத்திற்கும் ஆரோக்கியமான முன்னெடுப்பு. 

எப்படி ஒரு பொருள் வாங்குவதற்கான உங்கள் ஊதியம் உங்களைச் சார்ந்தவர்களின் தியாகத்தாலும் ஆனதோ, அது போல் நீங்கள் போடும் ஒரு ஓட்டு என்பது உங்களைச் சார்ந்திருக்கும் உங்கள் சமூகத்திலும் அந்தத் தாக்கத்தை ஏற்படுத்தும். உங்கள் வீட்டின் தெருமுக்கில் கால் கடுக்க நின்று பூக்கட்டி விற்கும் ஒரு பாட்டிக்குக் கூட உங்கள் ஓட்டு உதவி செய்யலாம். 

மழை வறட்சி புயல் எனப் பல இக்கட்டான நேரங்களையும் தாண்டி மண்ணை நம்பி விவசாயத்திற்குள் தன்னைப் புகுத்திக்கொண்டு இருக்கிறார்களே விவசாயிகள்- அவர்களுக்கும் நீங்கள் போடும் ஒரு ஓட்டு பயனுள்ளதாகவே இருக்கும். 

ஒன்று தெரிந்துகொள்ளுங்கள், உங்கள் எதிரி தைரியமானவன் அல்ல. அவன் நேரடியாகத் தேர்தல் களத்தில் இறங்கி அறத்தின்பொருட்டு மோதுபவன் அல்ல. இங்கிருக்கும் ஓடுகின்ற குதிரையை மிரட்டி உருட்டி அதன் மேல் சொகுசு சவாரி செய்து கடைசியில் அந்தக் குதிரையையே காவு வாங்கும் கிருமிக்காரர்கள் அவர்கள். 

எந்தத் தலைமை , தன் நாட்டின் குடியானவர்கள் மிரட்டும் பனியில் போராட்டம் நடத்திக்கொண்டிருக்கும் வேளையிலும் அவர்கள் பற்றிச் சிறிதும் கவலைகொள்ளாமல் அவர்களை ஜலாய்ப்பு செய்ய அவர்கள் தொழும் தெய்வத்தை வணங்குவது போல் பாவ்லா செய்யத்துணிகிறதோ, அவர்கள் இலக்கு நாட்டின் ஆரோக்கியமான முன்னேற்றம் இல்லை. அழுக்கு ஃபாசிசம் தான். தங்கள் மதக்கொள்கை கள் தான். அவர்களைச் சார்ந்தோரை ஆதரிப்பதும், அவர்களின் முகமாய் வருவோரை ஆதரிப்பதும், அவர்களின் நிழலாய் ஆடுபவர்களை ஆதரிப்பதும் அவர்களுக்கே பலத்தைத் தரும். 

ஆரோக்கியமானச் சமூகத்தை நம் குழந்தைகளுக்கும் நம்மைச் சார்ந்தவர்களுக்கும் நாம் தர விரும்புவது உண்மை என்றால், ஃபாசிஸத்தின் முகமூடி எதுவாயிருந்தாலும் கிழித்தெறிந்து ஜனநாயகத்தின் பொருட்டு, சமத்துவ அரசியலின் பொருட்டு, வேற்றுமையிலும் ஒற்றுமையின் பொருட்டு, ஒரே குரலில், ஒருங்கிணைந்து போராடவேண்டும். நாம் போடப்போகும் ஓட்டு கூட நம் போராட்டத்தின் வடிவம் தான். 

ஜன நாயகத்தை மீட்டெடுக்க மதவாதிகளின் அரசை விரட்டியடித்தே ஆகவேண்டும். 

சு.கஜமுகன் (லண்டன்)

gajan2௦5௦@yahoo.com

அக்டோபர் மாதம் முதல் நைஜீரிய மக்கள் சார்ஸ் (SARS- Special Anti Robbery Squad) என அழைக்கப்படும் சிறப்பு கொள்ளை எதிர்ப்புப் படைக்கெதிராக போராடி வருகின்றனர். 1992 ஆம் ஆண்டு நைஜீரிய அரசினால் உருவாக்கப்பட்ட காவல்துறை அமைப்பான சார்ஸ், பல வருடங்களாக கொலை கொள்ளை வழிப்பறி என பல அட்டுழியங்களை செய்து வந்துள்ளன. மக்களைப்பாதுகாக்கும் நோக்குடன் உருவாக்கப்பட்ட இப் பொலிஸ் படை அமைப்பானது தம் நோக்கத்திலிருந்து முற்றாக விலகி மக்களை அச்சுறுத்தும் ஒரு அமைப்பாக வளர்ந்து வந்துள்ளது. இவ்வமைப்பின் கொடுமைகளை பொறுக்க முடியாத மக்கள் தற்பொழுது வீதிகளில் இறங்கி மிகப்பெரும் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

ஏற்கனவே புகைந்து கொண்டிருந்த கோபம் இளைஞர் ஒருவரின் கொலையோடு வெடித்துக் கிளம்பியது. இளைஞர் ஒருவரைக் கைது செய்து பின்னர் அவ்விளைஞனை சுட்டுத் தள்ளிவிட்டு அவரின் காரினையும் திருடிக் கொண்டு சென்ற சார்ஸ் அமைப்பிலுள்ளவர்களின் செயலானது நைஜீரிய மக்களை மிகுந்த கோபத்திற்கு உள்ளாகியது. இக்காணொளி மக்கள் மத்தியில் வைரலாகியதைத்தொடர்ந்து மிகப் பெரும் போராட்டம் வெடிக்கத் தொடங்கியது. அண்மையில் ஜார்ஜ் பிளாயிட் எனப்படும் அமெரிக்கரின் கழுத்தை நெரித்து கொலை செய்த காணொளி மக்கள் மத்தியில் பரவி எவ்வாறு மிகப் பெரும் போராட்ட்டம் அமெரிக்காவில் வெடித்ததோ அதே போல் இவ்விளைஞனின் காணொளி நைஜீரிய மக்களை கிளர்ந்தெழச்செய்தது.

சார்ஸ் அமைப்பிலுள்ள போலீசார் அப்பாவி பொது மக்களின் மீது பொய்க் குற்றம் சுமத்தல், மிரட்டிப் பணம் பறித்தல் மற்றும் கொலை செய்தல் என பல நீதிக்குப் புறம்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது. ஒருவர் கார், கைமணிக்கூடு, தொலைபேசி, லேப்டாப் போன்றன வைத்திருந்தால் அவர்களை யாஹூ பாய்ஸ் (Yahoo Boys) என முத்திரை குத்தும் சார்ஸ் அமைப்பினர் அவர்களிடமிருந்து அவற்றை பிடுங்கிக் கொள்கின்றனர் .யாஹூ பாய்ஸ் என்றால் சார்ஸ் அமைப்பினரைப் பொறுத்தவரை இணைய திருட்டில் ஈடுபடுபவர் என்று பொருள்.

ஆட்கடத்தல், ஆயுதக் கொள்ளை, சித்திரவதை, சட்டவிரோத உடல் உறுப்பு வர்த்தகம், வீடு புகுந்து கொள்ளையடித்தல், மக்களைக் காணாமல் போகச் செய்தல் எனப் பல ஜனநாயக விரோத கடமைகளில் ஈடுபட்டமையாலேயே மக்கள் இன்று அவர்களுக்கு எதிராக கிளர்ந்தெழுந்துள்ளனர். இலங்கையின் விசேட அதிரடிப் படையினர் யுத்த காலத்தில் எவ்வாறு மக்களுக்கு எதிராக செயற்பட்டர்களோ அதே போன்ற நடவடிக்கைகளையே சார்ஸ் உறுப்பினர்களும் இன்று மேற்கொள்கின்றனர்.

நைஜீரியாவில் உள்ள லாகோஸ் என்னுமிடத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அடக்குவதற்காக மிருகத்தனமாக செயற்பட்டது நைஜீரிய ராணுவம். கண்ணீர்புகை, நீர் பீரங்கி என்பன பயன்படுத்தப்பட்டதுடன் பலரை சுட்டும் கொன்றுள்ளது நைஜீரிய அரசு. 12 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாக அதிகாரபூர்வ தகவல் தெரிவிக்கப்பட்ட போதும், மேலும் பலர் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கலாம் என அச்சம் தெரிவிக்கப்படுகின்றது. மேலும் சுட்டுக் கொள்வதோடு மட்டும் நிறுத்திக் கொள்ளாமல் இறந்த உடல்களை அப்புறப்படுதியும், சம்பந்தப்ப்பட்ட இடத்திலுள்ள சீசீடீவி காமெராக்களை செயலிழக்கச்செய்தும் இச்சம்பவத்தை மறைக்க முயன்றது நைஜீரிய ராணுவம். அத்தோடு நில்லாமல் அரை குறை காயங்களுடன் தப்பி ஓடியவர்களின் மூலம் உண்மை நிலை கசிந்து விடும் என்பதனால் அவர்களைக் கொலை செய்வதற்கு வலை வீசி தேடி வந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மக்களை சுட்டுக் கொன்ற குற்றவாளிகள் மீது எதுவித நடவடிக்கையும் எடுக்காமல் அமைதியாகவிருக்கும் ஜனாதிபதி புஹாரியின் நடைவடிக்கையானது மக்களை மிகுந்த ஆத்திரத்திற்குள்ளாக்கியுள்ளது. மேலும் மக்களின் போராட்டத்தைக் கண்டு கதிகலங்கிய நைஜீரிய அரசு சார்ஸ் கலைக்கப்பட்டு விட்டதாக அறிவித்தது. எனினும் அதற்குப் பதிலாக ஸ்வாட் – SWAT எனப்படும் புதிய அமைப்பு உருவாக்கப்பட்டு அதிலுள்ள காவல்துறையினர் இதில் இணைத்துக் கொள்ளப்படுவார்கள் எனத் தெரிவித்திருந்தது. பழைய கள்ளை புதிய போத்தலில் தரும் நைஜீரிய அரசின் இவ் விளையாட்டானது மக்களை இன்னும் கடும் கோபத்திற்கு ஆளாக்கியது. சார்ஸ் கலைக்கப்பட்டு விட்டதாக நைஜீரிய அரசு கூறினாலும் மக்கள் அதனை நம்பி போராட்டத்தைக் கைவிடத் தயாராக இல்லை. புதிய அரசியல் சீர்திருத்தம் ஒன்றை வேண்டியே மக்கள் தற்போது அப்போராட்டத்தை தொடர்கின்றனர்.

சார்ஸ் என்னும் போலீஸ் படைக்கு எதிராக பலமுறை போராட்டங்கள் நிகழ்த்தப்பட்டாலும் இம்முறை போராட்டம் வீரியமடைவதற்க்கு முக்கிய காரணம் நைஜீரிய நாட்டில் நிலவும் அரசியல் பொருளாதார நெருக்கடிகளாகும். வேலையில்லாப்பிரச்சனை, ஊழல், மின்சாரமின்மை, மோசமான சாலைகள் போன்றன அரசின் மீதான மக்களின் அதிருப்திக்குரிய சில காரணங்களாகும். தொடர்ச்சியான மின்சாரம் வழங்குவதற்கு நைஜீரியாவிற்கு இன்னும் நாற்பத்தியொரு ஆண்டுகள் எடுக்கும் என செனட் சபை அண்மையில் தெரிவித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. இது தவிர அதிகரிக்கும் பணவீக்கத்தால் உணவுப்பொருட்களின் விலை வருடந்தம் 17 வீதத்தால் அதிகரிக்கின்றது. இது தவிர அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலை செய்வோருக்கு முழுமையான சம்பளம் வழங்கப்படாமை, மக்களுக்கான முறையான அரச கொடுபனவுகள் கிடைக்காமை போன்ற காரணிகளால் மக்கள் சாதாரண வாழ்க்கையைக் கூட வாழ முடியாத நிலையிலேயே காணப்படுகின்றனர்

205 மில்லியன் சனத்தொகை கொண்ட நைஜீரியாவின் 102 மில்லியன் மக்கள் வறுமைக் கோட்டிற்கு கீழே வாழ்கின்றனர். அதாவது கிட்டத்தட்ட ஐம்பது வீதமான மக்கள் வறுமையுடன் வாழுகின்றனர். அதிலும் குறிப்பாக 15-34 வயதிற்குட்பட்டோரின் எண்ணிக்கை நாற்பது மில்லியன் ஆகவும் அதில் வேலை வாய்ப்புள்ளோரின் எண்ணிக்கை வெறும் 14.7 மில்லியன் ஆகவுமே காணப்படுகின்றது. நாட்டின் பெருந்தொகையான மக்கள் வேலைவாய்ப்பில்லாதவர்களாகவும் மிகுந்த ஏழ்மை நிலையிலுமே காணப்படுகின்றனர்.

பிரித்தானியாவிடமிருந்து விடுதலை பெற்று அறுபது ஆண்டுகள் ஆகியும் நைஜீரியா இன்னும் வளர்ச்சியடையாமல் இருக்கின்றது. மாற்றத்தைக் கொண்டுவருவேன் என வாக்குறுதி அளித்து 2௦15 இல் பதவிக்கு வந்த புஹாரி மக்கள் நலன் சார்ந்த நடவடிக்கைகள் எதுவும் எடுக்காமல் அதிகார வர்க்கத்துக்கு சார்பாகவே இயங்கி வருகிறார். இதேபோல் தான் 2௦15 ஆம் ஆண்டு மைத்திரிபால சிறிசேனாவும் நல்லாட்சியை வழங்குவேன், மாற்றத்தைக் கொண்டு வருவேன் என வாக்குறுதி அளித்து இலங்கையில் ஜனாதிபதி ஆகியவர் என்பது குறிப்பிடத்தக்கது. அனைத்து அதிகார சக்திகளும் பதவியைக் கைப்பற்ற ஒரே விதமான பொய்களையே உலகம் முழுவதும் கூறுகின்றன. மைத்திரி முதல் புஹாரி வரை அனைவரும் சொல்லி வைத்தாற்போல் மாற்றத்தைக் கொண்டு வரமால் இருந்ததை விட இன்னும் கீழான நிலைமைக்கே நாட்டை கொண்டு சென்றனர்.

2016 – 2020 வரையான காலப்பகுதியில் பிரித்தானிய அரசும் நைஜீரியாவின் சார்ஸ் படைக்கு பயிற்சி மற்றும் இலத்திரனியல் உபகரணங்களை வழங்கி உதவியும் செய்துள்ளதாக தெரிய வருகிறது. அதிலும் குறிப்பாக பிரித்தானியாவால் நைஜீரிய காவல்துறைக்கு வழங்கப்பட்ட வானொலி உபகரணங்கள் சார்ஸ் அமைப்பினரால் பயன்படுத்தப்பட்டுவந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. பிரித்தானியா வழங்கிய உதவியானது மறைமுகமாக மக்களை துன்புறுத்துவதற்கே பயன்படுத்தப்பட்டு வந்திருக்கின்றது என சர்வதேச மன்னிப்புச் சபை குற்றம் சாட்டியுள்ளது. மேலும் நைஜீரிய காவல்துறை மற்றும் இராணுவத்திற்கு பிரித்தானியா அரசு வழங்கிய அனைத்து பயிற்சிகளையும் மறு ஆய்வு செய்யுமாறு ஆயுத வர்த்தகத்திற்கு எதிராக இயங்கும் அமைப்பான CAAT (Campaign Against Arms Trade) கோரிக்கை விடுத்துள்ளது.

பிரித்தானியா உள்ளிட்ட உலகின் பல இடங்களில் நைஜீரிய அரசின் அடக்குமுறையைக் கண்டித்து பல ஆர்பாட்டங்கள் இடம்பெற்றன. மக்கள் நலனை பற்றிச் சிந்திக்காது அதிகாரத்தை மட்டும் நோக்காகக் கொண்டு இயங்கும் புஹாரியின் தற்போதைய அரசு வீழ்த்தப்படவேண்டும். அதற்காக மக்கள் DSM (சனநாயக சோஷலிச இயக்கம்) போன்ற மக்கள் நலனுக்காக இயங்கும் அமைப்புகளுடன் சேர்ந்து பலமான அணியாகத் திரண்டு தமக்கான உரிமையை வென்றெடுக்கவேண்டும். DSM பல சர்வதேச நாடுகளுடன் தமது தொடர்புகளைக் கொண்டிருப்பதால் நைஜீரிய மக்களின் பிரச்சினை சர்வதேசத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அவர்களின் போராட்டம் சர்வதேசமயப்படவைக்கும் முயற்சிகள் நிகழ்கிறது. மக்கள் புஹாரி அரசுக்கு எதிராக ஒரு அணியாகத் திரண்டாலே இது சாத்தியமாகக்கூடும். அத்துடன் இந்த போராட்டத்துக்கான ஆதரவை நாமும் வழங்க வேண்டும்.

ஜெகநாத் நடராஜன்

1

குலசரம் சொன்னதை மகள் கோசலையைப் பெண்பார்க்க வந்தவர்கள் கேட்டுக் கொண்டார்கள். நூறு பவுன் நகையும், ரொக்கமாக  இருபது லட்ச ரூபாயும், குறிப்பிட்ட வகை காரும் கேட்டார்கள். மாப்பிள்ளை வீட்டினரோடு வந்திருந்த பெரியவர் நிதானமாகவும், புன்னகைத்தபடியும் ஒன்று ஒன்றாகக்  கேட்டார். அவர்கள் கூடி விவாதித்து ஒத்திகை பார்த்து வந்தது போல இருந்தது. மாப்பிள்ளையின் அம்மா குலசரத்தையும், மாப்பிள்ளையின் அப்பா அவளையும் பார்த்துக் கொண்டிருந்தார்கள். இப்படியெல்லாம் கேட்பதற்கு அவர்கள் பரம்பரை பணக்காரர்கள் இல்லை. பையனைப் படிக்க வைத்திருக்கிறார்கள். நல்ல விதமாய் வளர்த்திருக்கிறார்கள். குலசரத்திடம் வசதி இருப்பதால் கேட்டுப் பார்க்கலாம் என்று கேட்கிறார்கள். முதலிலேயே இவ்வளவுதான் தருவோம் என்று சொல்லியிருக்கலாமோ என்று குலசரத்துக்கு தோன்றியது. அவன் யோசனையில் இருந்தான். தனக்குப் பின் எல்லாம் தன் ஒரே மகளுக்குத்தான் ஆனாலும் கல்யாணத்தின் போது பேசி வாங்குவது சம்பிரதாயம், சாமர்த்தியம், பெருமை. யார் இதையெல்லாம் கொண்டு வந்தார்கள் என்று தெரியவில்லை.

“இது எங்க விருப்பம் அப்புறம் உங்க விருப்பம். நிர்பந்தமெல்லாம் எதும் இல்ல. உங்க மகளுக்கு நீங்க செய்யறீங்க. இடையில நாங்க யாரு?” பெரியவர் சற்று உரத்த குரலில் பொதுவாக எல்லோரையும் பார்த்துச் சொன்னார்.

அவர்கள் நூறு பவுன் கேட்டதற்கு, அறுபது பவுன். இருபது  லட்சம் கேட்டதற்கு பத்து லட்சம். அவர்கள் கேட்டதைவிட கொஞ்சம் குறைச்சலான விலையுள்ள கார். சட்டி சாமான், பண்ட பாத்திரமெல்லாம்  குறையில்லாமல் செய்கிறேன் என்று குலசரம் சொன்னான். அதைத்தான் எதிர்பார்த்து வந்ததுபோல சரி என்று சொல்லிவிட்டார்கள். நீங்களே நிச்சயதார்த்தத்திற்கும், கல்யாணத்திற்கும் நல்லநாள் பாருங்கள் என்று சொல்லிவிட்டு, பெண் பார்க்க வந்த வெளியூர்க்காரர்கள் சந்தோஷத்துடன்  கைகூப்பி திரும்பிப்போனார்கள்.

 அவர்கள் படியிறங்கியதும் அந்த வீட்டை அமைதி சூழ்ந்து கொண்டது. அமைதியைக் கலைத்தபடி உள்ளூர் ஜனங்கள் மெல்ல எட்டிப் பார்த்தார்கள். அவர்களிடம் வீட்டிலுள்ளவர்கள் யாரும் எதுவும் பேசாததால் அமைதியாகத் திரும்பிப் போய்விட்டார்கள். தூக்குச் சட்டியிலும், குத்துப் போகணியிலும் மிச்சமிருந்த சாப்பாடு வீடு வீடாகப் போயிற்று.

“.எந்த வீடும் வய்த்தெரிச்சப் பட்றக்கூடாது. பாத்து நடந்துக்க”. குலசரம் தன் மனைவி சாலாட்சியிடம் சொல்லியிருந்தான்.

மகள் கோசலை அலங்காரம் கலைக்காமல் மாப்பிள்ளை வீட்டாருக்காகக் கட்டிய சேலை மாற்றாமல் அறைக்குள்ளேயே முடங்கிவிட்டாள். கோசலை எதாவது சொல்கிறாளா? என்று அம்மாக்காரியிடம் குலசரம் கண்களாலேயே கேட்டான். அவள் இரண்டுமுறை அந்த அறைக்குள் போனாள். கோசலை அமைதியாகவே இருந்தாள். அவளிடம் பேச பயமாக இருந்தது. அவளும் என்னதான் பேசுவாள். முதல் மாப்பிள்ளை சொந்தத்தில் பார்த்து, நிச்சதார்த்தம் வரைக்கும்போய் நின்றுவிட்டது. ஜாதகம் சரியில்லை என்று காரணம் சொன்னார்கள். குலசரம் அரிவாளைத் தூக்கிக்கொண்டு போனான்.

 ”என்ன வெட்டுனா உம்மக சந்தோஷமா இருந்துருவான்னா வெட்டு.” என்று அக்கா முறைக்காரி பூவக்கா தலையைக் கொடுக்க வந்தாள். அவள் சொல்லில் அமைதியாகி, சொம்புத் தண்ணீரை வாங்கிக் குடித்துவிட்டு, தன் வீட்டுக்குள் வந்து குலசரம் அழுததில் மற்றவர் அழுகை சத்தமில்லாமல் போனது.

 இரண்டாவதாக மாப்பிள்ளையாகப் பார்த்தவனை கோசலையே வேண்டாம் என்று சொல்லி விட்டாள். குலசரம் அவளிடம் பேசாமல் மனைவியிடம் பொங்கித் தணிந்தான். 

” கல்யாணத்துக்கு பெறகு வாழமாட்டன்னு சொன்னாலோ, எதையாது அரச்சு தின்னு உசிர போக்கிக்கிட்டாலோ என்ன பண்ணுவோம். பிடிக்கலன்னு சொன்னாளே இந்த மட்டுக்கு நல்லதுன்னு நினப்பியளா அத விட்டுட்டு ..”

 அவள் சொல்லச் சொல்ல அமைதியானான்.

அடுத்ததாக மாப்பிள்ளை பார்க்கும்முன்,  ஒரு முறை ஜோஸ்யம் பார்த்துவிடலாம் என்று சாலாட்சி சொன்னாள். அவனுக்கு அதிலெல்லாம் விருப்பமில்லை என்றாலும் சூழ்நிலை அவனுக்கு எதிராக இருந்தது.

எந்த ஜோதிடரைப் பார்க்க என்று யோசித்து வீரசிராமணி  ஜோஸியரைக் கண்டுபிடித்துப் போனான். நிறைய கூட்டம். காத்திருக்க வேண்டியிருந்தது. ஜாதகத்தைக் கொடுத்ததும் பிரிக்கும் போதே, குல தெய்வத்தைக் கும்பிடுகிறீர்களா? என்று ஜோஸியர் சாதாரணமாகக் கேட்டார். குலசரம் என்ன இப்படியொரு கேள்வி என்று யோசிப்பதற்குள் ”கும்புடுறியா? குடுக்கிறியா? என்று விலுக்கென நிமிர்ந்து கோபமாகக் கேட்டார், அந்தக் குரலின் சீற்றமும், கோபமும் சாமி என்று அவனுக்கு தெரிந்து போயிற்று. அவன் நடுங்கினான். ஜாதகத்தை எடுத்து கண்ணில் ஒற்றி, வெற்றிலை பாக்கும், அரளிப் பூவும் சேர்த்து அவனிடமே ஜோஸியர் திருப்பிக் கொடுத்தார். வாங்கிய அவனுக்கு கை நடுங்கிற்று, கண்கள் கலங்கின. முட்டிக்கொண்டு அழுகை வந்தது.

”இனி வரவேண்டாம்.”

 ”பொண்ணோட  கல்யாணம்?”

“ சாமிகிட்ட கேளு.”

குலசரத்தின் கால்கள் வலுவிழந்தன. அவன் தன்னைத் தாங்கி, நடக்க ஆரம்பித்தபோது

” யார்கிட்டயும் ஜாதகத்த காட்ட வேண்டாம். பணம் பெருத்த அப்பனுக்கு பொறந்த மகன்னு ஜாதகம் சொல்லுது. அத இத சொல்லி காச கறப்பானுவ. தப்பான பாதையில போயிட்டா பெருத்த சங்கடம் வந்து சேரும்.”

அவன் சம்மதம் என்பது போல் ஜோஸியரைக் கும்பிட்டான். நடந்தான்.

சாலாட்சி புருஷன் வரவுக்காக வாசலில் நின்று பார்த்துக் கொண்டிருந்தாள். தரையிலிருந்து நாலடி உயரத்தில் உயர்த்தி தளம் போட்டுக் கட்டிய வீடு. ஊருக்குள் வரும் சாலையில் பேரூந்து தூரமாக வந்து கொண்டிருப்பது தெரிந்தது. ஊருக்குப் பக்கத்தில் வரும்வரை பார்த்துக் கொண்டிருந்தாள். ஜன்னல் ஓரமாக குலசரம் அமர்ந்திருந்தான். வீட்டைக் கடந்துபோய் அரச மரத்தடியின் திரும்பி ஒலி எழுப்பி, புழுதியைக் கிளப்பிக்கொண்டு நின்றது. அவன் வீட்டுக்குள் வருவதற்குள் அடுப்பில் காப்பிக்கு தண்ணி வைத்து விட்டாள். காய்ந்த தென்னை ஓலை பற்றிப் படபடவென்று எரிந்தது. வீட்டுக்குள் வந்து அமர்ந்தவனிடம் உடனே பேச வேண்டாமென்று காத்திருந்தாள். தண்ணீர் குடித்தான். காப்பி குடித்தான். ஜாதகப் பையை சாமி படத்துக்கு முன்னால் வைத்தான். கும்பிட்டான். அமைதியாக இருந்தான். அவளைப் பார்க்கவில்லை. அவளும் அவனிடம் எதுவும் கேட்கவில்லை.

 அவன் பஸ் ஏறியபோதே மூக்கு வியர்த்து ஜோசியம் பார்க்கப் போயிருப்பதை ஊர்க்காரர்கள் தெரிந்து கொண்டார்கள். வீரசிராமணி ஜோஸியர் அப்போதுதான் ஊரில் மிகப் பிரபலமாகிக் கொண்டிருந்தார். சொன்னது சொன்னபடி நடக்கிறது என்று பெயர் வாங்கியிருந்தார். அவனிடம் அவர் என்ன சொன்னார் என்று ஊருக்கு தகவல் தெரியாமல், நேரம் அமைதியில் கழிந்து கொண்டிருக்க, குமாரசாமி தாத்தாதான் வீட்டுக்குள்  முதலில் வந்தார். ”வாங்க தாத்தா.” என்று அவன் அழைத்து நாற்காலியை எடுத்துப் போட்டான். ”காப்பி கீப்பி போட்டுறாதத்தா. “ தாத்தா சாலட்சியைப் பார்த்துச் சொன்னார்.

“ வீரசிராமணிக்குப் போயிருக்கறதா சொன்னாங்க..” தாத்தா பொடி டப்பியிலிருந்து பொடியை எடுத்து உறிஞ்சிக் கொண்டார். அவன் முகத்தைப் பார்த்தார். சாலட்சிக்கு அது பிடித்திருந்தது. அவளும் நெடு நேரமாக வாய்க்குள் வார்த்தைகள் சிக்கி தவித்துக் கொண்டிருந்தாள்.

”நா, என் குல சாமிக்கி என்ன குற வச்சேன்.”

குலசரம் தலை குனிந்திருந்தவன் நிமிர்ந்து கேட்டான்.

”யாரு சொன்னா. நாக்கு அழுகிரும்.” 

”ஜோஸியர் சாமிய கும்பிடுதியான்னு கேட்டாரு” குலசரம் அழுது விடுபவன்போல சொன்னான்.

” அப்படியா “

குமாரசாமி தாத்தா அமைதியாகப் பார்த்தார். வடிவு ஆச்சி, கருப்பாயி ஆச்சி, தாமரை, முப்புடாதி, செண்பகம் என்று ஆளாளுக்கு வந்து விட்டார்கள். வருத்தமான நேரத்தில் அவர்கள் வந்தது சாலாட்சிக்கு எரிச்சல் முட்டிக்கொண்டு வந்தது.

“ என்னவோ ஒரு குறை இருக்கு போலருக்கு. எதாவது நேந்துட்டு செய்யாம விட்டியா?”

”இல்லையே. நம்ம சாமி முண்டன் அப்படி என்ன கேட்டுறப் போகுது, சைவச்சாமி. சிலை கூட கிடையாது. பீடம்தான் அலங்காரம் பண்ண. காவி வேட்டி. லாலா கட பலகாரம்.அது கேட்டு நா எத இல்லன்னு சொல்லிறப் போறேன். எப்படியோ கெடந்த என்ன இன்னக்கி இந்த உசரத்ல சாமி வச்சிருக்கு. அதுக்கு செய்யாம யாருக்குச் செய்யப் போறேன்.”

” அதுதான.” வந்தவர்கள் உச்சுக் கொட்டினார்கள்.

”ஆமா வாஸ்தவந்தான. ஜோசியன் வேற எதும் சொல்லலியா?”

தாத்தா கூர்மையாகப் பார்த்துக் கேட்டார்

”இல்லயே. அந்த ஒரு கேள்வியோட ஜாதகத்த மடக்கி கையில குடுத்துட்டாரு.”

வந்தவர்கள் முகம் ஒரு மாதிரி ஆயிற்று

”நீ எதாவது வேண்டியிருந்தியா சாலாச்சி?”

”கோசல கல்யாணம் நல்ல விதமா நடக்கணும்னுதான் வேண்டியிருந்தேன். நா, என்ன அவுகளும் அதத்தான் வேண்டியிருந்தாஹ. வேற என்ன வேணும் எங்களுக்கு. அதுதான் எங்க மனசில குறை. சாமிக்கு என்ன குறை வச்சோம்ன்னு தெரியலயே. லாரிக் கம்பெனிக்கு சாமி பேரத்தான் வச்சிருக்கோம். சாமி பேர சொல்லாம அவுஹ சாப்பாட்டகூட கையில எடுக்க மாட்டாஹ.”

”சொன்ன ஜோஸியன் முழுசாச் சொல்லாம ஏன் முழுங்கிச் சொல்லியிருக்கான். வேற யாரையாவது பாக்கலாமா?”

”வேற யார்கிட்டயும் ஜாதகத்த காட்ட வேண்டாம்ன்னு சொல்லிட்டாரு.”

அங்கு அமைதி நிலவியது. முகங்கள் முகங்களைப் பார்த்துக் கொண்டு பார்க்காததுபோல நின்றன.

”சரிப்பா நாம நமக்குள்ள  பேசி என்ன ஆவப்போகுது. நீ குளிச்சுட்டு முதல்ல கோவிலுக்குப்போயி சூடத்த ஏத்தி கும்பிட்டுட்டு வா. சாமி கிட்ட உனக்கு எதாவது குறை வச்சிருக்கனான்னு மனசார கேளு. சொல்லாமலா போயிரும்.”

குமாரசாமி தாத்தா எழுந்து கொண்டார். சாலட்சி திருநீற்றுக் கொப்பறையைக் கொண்டுவந்து நீட்டினாள்.

குமாரசாமி தாத்தா கும்பிட்டு எதையோ முணுமுணுத்து தான் முதலில் பூசிக்கொண்டு குலசரம் நெற்றியிலும் பூசினார். சாலாட்சி காலில் விழுந்து கும்பிட்டு எழுந்தாள்.. ஏ கோசல என்று மகளைக் கூப்பிட்டாள். உள் அறையிலிருந்து எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்த கோசலை ஓடிவந்தாள். தாத்தா அவளைப் பார்த்தார். ”பூசுங்க தாத்தா” சாலாட்சி சொன்னாள்.

 தாத்தாவின் கைகள் திருநீற்றுக் கொப்பறையையே துழாவியது. கோசலையின் முகத்தைப் பார்த்தது. துழாவுவதும், பார்ப்பதும் எதையோ ஆழ்ந்து யோசிப்பதுமாக இருந்தார்.அவர் கையை நகரவிடாமல் எதோ விடுக் விடுக்கென்று இழுத்தது போல இருந்தது. அவரையே அனைவரும் பார்த்தார்கள். ஆள் காட்டி விரலை மூக்கில் வைத்து இமைகள் படபடக்க கண்மூடி நின்ற கோசலையும் பார்த்தாள். தாத்தா பூசாமல் திருநீற்று கொப்பறையைக் கொடுத்து நகர்ந்து விட்டார். சாலாட்சி திருநீற்றைப் பூசி மகளை அழைத்துக் கொண்டு போனாள். கட்டிலில் அமர்ந்த கோசலை அம்மாவைப் பார்த்தாள். 

“பயப்படாத” என்றாள் அம்மா.

2

சாயங்காலமாக கோவிலுக்குப் போனார்கள். ஆள் அனுப்பி தென்காசியிலிருந்து குலதெய்வத்திற்கு மட்டுமல்லாமல் கோவிலிலிருக்கும் எல்லா சாமிக்கும் மாலை வாங்கிவரச் சொன்னான். கனத்த மல்லி மாலை. குலதெய்வத்துக்கு மண்டப லாலாக் கடையில் இனிப்புகள், நான்கு வாழைத்தார் என்று ஆட்டோவில் வந்து இறங்கிற்று. பாயசம் வைக்க சாலாட்சி பானையை தயார் செய்தாள். அரிசி, வெல்லம் , தேங்காய் என்று தேடித்தேடி சேர்த்து வைத்தாள். மாவிளக்குப் போட மாவு திரித்தாள்.

 ”போடறதோ போடற கொப்பற பாயாசமா போடு.” என்று யாரோ சொல்லி விட்டுப் போனார்கள். யார் என்ன சொன்னாலும் அது சாமி சொல்லச் சொல்வதாகவே குலசரம் நினைத்தான். கொப்பறை பாயாசம் போட்டு விட்டு ஊருக்குச் சொல்லாமலிருக்க முடியுமா? வீடு வீடாக சாலட்சி போய்  கோவிலில் கொப்பறை பாயசம் போடுவதைச் சொல்லி பூஜைக்கு வரச்சொல்லி சொல்லிவிட்டு வந்தாள்.

எல்லோருக்கும் சொல்லியாகிவிட்டதா என்பதை கணவனும் மனைவியும் பேசி உறுதிப்படுத்திக்கொண்டார்கள். மறந்த வீட்டுக்கு மறுபடி போனார்கள். சாமிக்கு மனசு குளிருதோ இல்லையோ ஊரில் ஆவலாதி எதும் வந்து விடக் கூடாது என்பதில் குலசரம் கவனமாக இருந்தான்.

அந்த ஊரில் அவன் எல்லோருக்கும் எடுபிடியாகத்தான் சின்ன வயதில் இருந்தான். சோத்துக்குத்தான் வேலை பார்த்தான். அழுக்கு சட்டை, நிறம் மங்கி நாளான வேட்டி, வேட்டிக்கி கீழே தொங்கும் பெரிய டிரவுசர். பட்ட வெட்டிய தலைமுடியோடு அவன் ஊரில் எல்லா வீடுகளுக்கு வெள்ளையடித்தான். மாடு மேய்த்தான். மரம் வெட்டிக் கொடுத்தான். ஓலை பிரித்துக் கொடுத்தான். நெல் அவித்தான். காயவைத்தான். காய்ந்த்தும் மில்லுக்குக் கொண்டுபோய் அரைத்து அரிசியாக்கிக் கொண்டு வந்தான். நெல் அறுவடையின்போது களத்தைக் காவல் காத்தான். பக்கத்து ஊர் டிராக்டர் உழவுக்கு ஊருக்கு வந்தபோது டிரைவிங் பழகினான். லைசன்ஸ் வாங்கினான். ஊருக்கு வந்த லாரியில் ஏறி சென்னைக்குப் போனான். டிரைவர் ஆனான். யார் யாரோ அவனுக்கு உதவி இன்று ஐந்தாறு லாரிகள், டிராக்டர், நிலபுலன், கல்யாணம், மனைவி என்று வாழ்கிறான். யாரையாவது அவன் கூப்பிடாமல் விட்டால் புதுப் பணக்காரன், திமிறு என்று சொல்லி  விடுவார்கள். ”வாங்கித் தின்னதெல்லாம் மறந்து போச்சா?” என்று நாலு பேருக்கு முன்னால் நிறுத்தி அவமானப்படுத்தி விடுவார்கள். கோபம் கொண்டால் வீட்டு விசேஷம் எதற்க்கும் வர மாட்டார்கள். ”என்னத்ல குறைஞ்சு போயிட்டோம்ன்னு எங்ககிட்ட சொல்லல.” என்று பஞ்சாயத்து கூட்டி விடுவார்கள்.

பிரச்சினை வரக்கூடாதென்று யோசித்து எல்லோருக்கும் சொன்னதால், சின்னதாக கோவில் பூஜை என்று ஆரம்பித்தது எதோ பெரிய விசேஷம் போல வீடு ஆட்களால் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது.. சவுண்ட் செட்டுக்குச் சொல்லி கோவிலைச் சுற்றி நான்கைந்து டியூப் லைட்டுக்குச் சொல்லி விட்டான்.

” மத்த சாமிக்கு எல்லாம் வாங்கியிருக்கியா?” என்று குமாரசாமி தாத்தா கேட்ட பிறகுதான் மறந்து விட்டதெல்லாம் ஞாபகம் வந்தது. தீவெட்டி, சாராயம், சுருட்டு, சின்ன ஆட்டுக் குட்டி அம்மனுக்கு, சேவல், அதோடு ஒரு கிடாயும் வாங்கியாகி விட்டது. எல்லாம் மனசுக்கு நிறைவாக இருந்தாலும் குலசரத்துக்கு. அடிக்கடி ஜோஸியக்காரனின் முகம் நினைவில் வந்து வந்து போயிற்று. ”என்ன குறை வைத்தேன் என் சாமிக்கு” என்று  நெருக்கமானவர்களிடமெல்லாம் கண்ணீர் சிந்தினான். யாராவது எதாவது காரியமாக எதையாவது சொல்வார்கள் என்று எதிர் பார்த்தான். கவலைப்படாதே என்று எல்லோரும் வெறும் வார்த்தைகளைத்தான் சொன்னார்கள்.

”பூவக்காவை கூப்பிட்டியாடா? என்று கருப்பாயி ஆச்சி சாப்பிட்டு வட்டு இலையை மடித்து தூரப் போடப் போனவள் அவனைப்பார்த்துக் கேட்டாள்.

”வெளையாடுதியா?” என்று குலசரம் சீறினான். அவள் வந்து பேசுகிறேன் என்று என்று சைகையில் சொல்லிவிட்டுப் போனாள்.

அவன் ஒரு நாளில் ஒரு தடவையாவது அவன் தூரத்து சொந்தமான பூவக்கா மீது கோபப்பட்டான். அவள் மகனுக்கு நிச்சயதார்த்தமான கோசலையின் கல்யாணத்தை நிறுத்தியிராவிட்டால் கல்யாணமாகி ஆறு மாதம் ஆகியிருக்கும். கோசலை கர்ப்பவதியாகிக்கூட இருக்கலாம். புத்தி கெட்ட கிழவி அவளைக் கூப்பிடச் சொல்லுது பாரு என்று நினைத்த போது.

”கூப்புடு ஒண்ணும் குறஞ்சுடாது.”

என்று கையை துடைத்துக் கொண்டு கருப்பாயி வந்தாள்.

அவன் கோபம் கொண்டான்.

“ தள்ளி வச்ச பொல்லாப்பு உனக்கு ஏன்னு கேக்கறேன். உன் மகள கட்டிக்க அவ மகனுக்கு குடுத்து வைக்கலன்னு நின.”

கருப்பாயி ஆச்சி பேசிக்கொண்டே போனாள்.

 குலசரம் அமைதியாக யோசிக்க

’உன் சம்சாரத்துகிட்ட யோசன கேக்காத அவ வேண்டாம்ன்னுதான் சொல்லுவா.”

என்று சொல்ல, உள்ளே வந்த

சாலாட்சி ”கூப்பிடுங்க” என்றுதான் சொன்னாள்.

இருவரும் பூவக்கா வீட்டுக்குப் போனார்கள். பெரிய வீடு. வாசல் கடந்து தளம் கடந்து நடுவீடு கடந்து உள்ளேபோன போது மானவெளியில் பருத்தியைக் குவித்துப்போட்டு நான்கைந்து பேர் அமர்ந்து பஞ்சைப் பிரித்தெடுத்துக் கொண்டிருந்தார்கள்.

”வாங்க வாங்க”

என்று அக்கா அவர்கள் வந்ததை சந்தோஷமாகச் வரவேற்றுச் சொன்ன மாதிரித்தான் இருந்தது. தளத்திற்குள் வந்து அமர்ந்தார்கள். நல்ல பூச்செங்கல் பதித்த தளம். குளிர்ச்சியாய் இருந்தது. வீரசிராமணிக்கு ஜாதகம் பார்க்கப்போனது முதல் கோவிலில் பூசை வரைக்கும் குலசரம் விலாவரியாகச் சொல்லி முடித்தான். பூவக்காவுக்கு எல்லாமே தெரிந்திருந்தது. பூசைக்கு கண்டிப்பாக வருவதாகச் சொன்னாள். குலசரத்துக்கு மனசு குளிர்ந்தது போலிருந்தது

.” வந்து இருந்து எல்லாருமா சேந்து கோசலை கல்யாணத்தையும் நடத்திக் குடுக்கணும்.” கெஞ்சுவது போலச் சொன்னான்.

 பூவக்கா சரி என்று சொல்வதற்குள். ”வருவாஹ வாராம எங்க போவாஹ” என்று சாலாட்சி வரிசை வைத்தாள்.” பின்ன ..” என்று அக்காக்காரி சொல்லி வாசல் வரைக்கும் வந்தாள். அவர்கள் தெரு திரும்பும் வரையில் பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் மனசு கனமாக மாறியது.

வீட்டுக்குள் வந்தவள் கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தாள். பின் குளிக்க தண்ணீர் எடுத்து வைத்தாள். சேலைகளை எடுத்துப் பார்த்து கோவிலுக்குக் கட்டிப்போகும் வாக்கில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து கட்டிலில் போட்டாள். வீடெங்கும் தேடி மயிர்க் கொடியை எடுத்து வைத்தாள்.

 அவள் புருஷன் வயலுக்குப் போயிருக்கிறார். மிளக்காய்ப் பழம் பிடுங்குகிறார்கள். வர இருட்டாகி விடும். அவருக்கு காத்திருக்கும் அவசியமில்லை. அவள் போயிருக்கிறாள் என்று தெரிந்தால் அவரும் கோவிலுக்கு வந்து விடுவார். கோசலை தன் வீட்டுக்கு மருமகளாக வராமல் போனதில் அவருக்கும் வருத்தம் உண்டு. வாழ்வில் சில வருத்தங்கள் எதுவும் செய்ய முடியாமல் வருத்தங்களாகவே தங்கி விடுகின்றன.

3

நாலு மணிக்கு மேல் பூஜைப் பொருட்களையும், பண்ட பாத்திரங்களையும் எடுத்துக் கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக ஆட்கள் கோவிலுக்கு கிளம்பத்துவங்கினார்கள். எல்லோரும் முக்கிய விஷேஷம் போல பளிச்சென்ற துணியுடுத்தியிருந்தார்கள். ”கொட்டு மேளமும், கெரக ஆட்டமும்தான் இல்ல. இருந்தா கோவில் கொட மாதிரித்தான்”. கூட்டத்தில் யாரோ யாரிடமோ பேசினார்கள். சின்னஞ் சிறுசுகள் புடைசூழ, அழகின் உருவமாக கோசலை சென்று கொண்டிருந்தாள்.

அரை ஏக்கர் நிலப்பரப்பில் கோவில். ஈசான மூலையில் பெருவாகை மரம் உயரமாக வளர்ந்து நின்றது. காய்ந்த அதன் காய்கள் காற்றில் உரசி சலசலத்தன. பூசை செய்யும் பண்டாரம் இவர்களுக்காகவே காத்திருந்தான்.   ஒத்தாசைக்கு இரண்டு மூன்று சின்னப் பையன்கள் ஓடிக் கொண்டிருந்தார்கள்.” மாலைய சொன்ன இடத்ல வையி. பூச சாமாங்கள சொன்ன இடத்ல வையி. கேக்கும்போது எடுத்துத் தரணும் எங்க வச்சம்ன்னு தெரியாம தலையச் சொறிஞ்சன்னா நிமிட்டிப் புடுவேன் நிமிட்டி.” என்று விரட்டிக் கொண்டிருந்தான்.

 கொப்பறை பாயசத்துக்கு மண்தோண்டி பனைமட்டை துடுப்புகளோடு தயாராக இருந்தது. கல்யாண சமையல் செய்யும் பிச்சையா நெற்றி முழுக்க பட்டையடித்து, வேட்டியும் துண்டுமாக நின்று கொண்டிருந்தான். அடுப்புக்கு விறகுக் கட்டைகள் வாங்கிப் போட்டிருந்தான். அடுப்பு பற்ற வைக்க குப்பியில் மண் எண்ணெய். ரெண்டு கற்பூரத் துண்டுகள். அருகே தீப்பெட்டி. சுவர் ஓரமாக ஒரு மாசமே ஆகியிருக்கும் ஆட்டுக் குட்டியும், வளர்ந்த ஆடும் நின்றன. இரு கால்களும் கட்டப்பட்ட சேவல் குதிக்க முயன்று கொண்டிருந்தது. வந்தவர்கள் அவரவர்க்குப் பிடித்த இடங்களில் அமர்ந்தார்கள். வந்தவர் அமர வைக்கோல் விரிக்கப்பட்டிருந்தது. சமுதாயக் கூட வாடகை சமுக்காளங்களும் கிடந்தன.

”சொன்னதெல்லாம் வந்திருக்கா?”

”ஒரு குறையும் இல்ல.”

பண்டாரம் சந்தோஷமாக குலசரத்திடம் சொன்னான்.

குலசரத்துக்கு தன் குலதெய்வமான முண்டனுக்குப் பக்கத்தில் போக பயமாக இருந்தது. ஓரமாய் நின்று பார்க்கும்போதே உடல் சிலிர்த்தது.

பண்டாரம் சாமிகளைக் கவனிக்க துவங்கினான். முத்தாலம்மன். கருப்பச்சாமி. சுடலைமாடன், சிலைகள் நீர் விட்டு கழுவப்பட்டிருந்தன. சந்தனக் குழைச்சலில் பண்டாரத்தின் கைகள் நடமாடின, கும்பிட்டபடி சாமியின் கண்களைத் திறந்தான். முதலில் முத்தாலம்மன் கண் திறந்து பார்த்தாள். மாலையைப் போட்டு குங்குமம் வைத்து, பறித்துக்கொண்டு வைத்திருந்த வேப்பிலையும் சூலாயுதமும் முன்னால் வைத்து, பழக்குலை ஒன்றை வைத்து இலை விரித்து தேங்காய் உடைத்தான். அப்படியே அடுத்த சாமிகளும் அவன் கை வண்ணத்தில் உயிர் பெற்றன. கல்லில் வடித்திருந்த கருப்பசாமி சந்தனக் குழைவின் இடை வெளியில் முறுக்கிய கறுப்பு மீசையோடிருந்தார், சுடலை மாடனுக்கு பெயிண்ட் அடித்திருந்ததால் பண்டாரத்திற்கு பெரிய வேலையில்லை.

பிச்சையா அதற்குள் பாயசக் கொப்பறையை சூடாக்க ஆரம்பித்திருந்தான். துணைக்கு வந்த முத்தம்மா தேங்காய்களை உடைத்து திருக ஆரம்பித்திருந்தாள். கூப்பிடாத நிறையப் பேர் வந்து எட்டிப் பார்த்து பூசைக்கும் பாயசத்துக்கும் நேரமிருக்கிறது என்று போய்விட்டார்கள்.

நேரமாக நேரமாக ஒரு ஈரக் காற்று வீசியது. அடுப்பைச் சுற்றி வந்து திபு திபு வென எரிந்த நெருப்பை அணைத்து புகையைச் சுருட்டி வானம் நோக்கிக் கொண்டு போயிற்று. மழை வருமோ, எல்லாம் நல்ல படியாக நடக்க வேண்டுமே என்ற கவலை திடீரென்று குலசரம் மனதில் தோன்றி கவலைக் குள்ளாக்கியது. கோவிலில் இருந்துகொண்டு இப்படி நினைக்கலாமா என்று ஆறுதல் சொல்லிக்கொண்டான். தன் குலசாமி பக்கம் போக அவனுக்கு ஆசையாக இருந்தது. நடக்க, ஜோசியரின் கோபக் குரல் காதில் ஒலித்து அடங்கியது. அவன் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு சாமி பக்கம் போனான். அவனையே பார்த்துக் கொண்டிருந்த சாலாட்சி, அவன் போவதைப் பார்த்து தானும் வந்தாள். எழுந்த கோசலையை இரு என்று கைகாட்டி இருக்க வைத்துவிட்டு வந்தாள்.

சாமியைப் பார்த்ததும் அவனுக்கு அழுகை வந்தது. இத்தனைக்கும் பீடம்தான் அது. மாலையிடப் பட்டிருந்தது. மஞ்சளில் நனைத்தெடுத்த கோடி வேட்டியை குறுக்கும் நெடுக்குமாக கட்டியிருந்தான் பண்டாரம். பெரிய வாழை இலையில் இனிப்புகள். பழங்கள் கதலிப்.பழக்குலை, சாமியின் ஆணிச் செருப்பு. கக்கத்துக் கட்டை. சரம் சரமாய் துளசி மாலை. கல்விளக்கு எரிந்து கொண்டிருந்தது. குலசரம் சாமிக்கு முன் அமர்ந்தான்.சாலாட்சி பக்கத்தில் நின்று பார்த்துக் கொண்டிருந்தாள். புகை காற்றில் அங்கும் இங்கும் படர்ந்து கண் கரித்தது. சில்லென்று குளிர் பரவியது. 

”மழ வரும்போலருக்கே”

யாரோ சொன்னார்கள்

”பாயாசம் என்னாச்சு. எல்லாம் ரெடியா இருக்கு. பாயாசம் கொதிச்சுட்டா மணியடிச்சு சூடம் காட்டிறலாம்.”

பண்டாரம் சூழ்நிலையைச் சொன்னான்.

பிச்சை கோபமாக அவனைப் பார்த்தான்.

கொப்பரை பாயசம் போடச்சொன்ன குமாரசாமி தாத்தாவை சிலர் கடிந்து கொண்டார்கள்.

”மழக்கி அவரு என்ன செய்வாரு””

தாத்தா மூக்குப் பொடியை உறிஞ்சியபடி மழ அது பாட்டுக்கு வரட்டும். ஆகறத பாருங்க என்றார். கட்டைகளை அள்ளிப்போட்டு எரித்தும் தண்ணீர் கொதிக்கவில்லை. துருவிய தேங்காயும், சிப்பத்தில் இருந்த அச்சுவெல்லமும் காத்திருந்தது.

“தீய பேப்பய காத்து எங்கிட்டோ கொண்டுக்கிட்டுப் போவுது.”

பிச்சை மொத்தமாகச் சொன்னான். யாரும் அதனை ஆமோதிக்க வில்லை.சற்று நேரத்தில் மழை வந்துவிட்டது. விருந்தாளி மழை. ஒவ்வொரு சாமிக்கும் பத்துக்குப் பத்து இடம்தான் இருந்தது. அதற்குள் கூடிய மட்டும் ஒண்டினார்கள். சிலர் ஓடினார்கள். குடை பிடித்துக் கொண்டு பூவக்கா வந்தாள். உள்ளே வராமல் வெளியிலேயே நின்றாள்.

”என்னக்கா எனக்கு மட்டும் இந்த மாதிரி ஆகுது”

மழையை பொருட்படுத்தாமல் வெளியே வந்த குலசரம் கேட்டான். அக்கா அவனை ஆவி சேர அணைத்துக்கொண்டான்.

கருப்பாயி ஆச்சிக்கு சாமி வந்தது. முத்தாலம்மன்தான். ஐந்து சாமிகள் இருக்கும் கோவிலில் தாய்ச்சாமி. எப்போதும் முதலில் அவள்தான் வருவாள். வேப்பிலையும் சூலாயுதமும் பண்டாரம் கொண்டுவந்து கொடுத்தான். கொட்டும் மழையில் அவள் அங்கும் இங்கும் ஓடினாள். வேப்பிலையை ஆக்ரோஷமாகக் கடித்துக் உருவினாள். கூடவே ஓடியவர்கள் அவள் சேலையை நழுவி விடாமல் கட்டினார்கள். அவள் இன்னும் கொஞ்சம் அருளோடு ஆடினால் மற்ற சாமிகளும் ஆடத் துவங்கி விடுவார்கள். குமாரசாமி தாத்தா அவளைச் சாந்தமாக்குவதில் தீவீரமாக இருந்தார். வெற்றிலை உதட்டோடு அவள் சிரித்தாள். ”இரு இரு அமைதியா இரு ஆத்தா.” என்றபடி அவளை நகரவிடாமல் பிடித்தார்.

சுடலமாடன் ஆடும் முத்து கிட்டினன், கருப்பசாமியாடும் விக்ரம்வந்து விட்டார்கள். குலசரம் தன் குலசாமி முண்டணைப் பார்த்தான்

“.என்னப்பா பாக்க உன் குல சாமியாட யாருமில்லன்னா,” அக்கா கேட்டாள். அவன் ‘’ஆமா’’ என்றான். அவனுக்கு சாமி வராது. பத்து வருஷமாக அவனுக்கு சாமி வருத்திப் பார்த்துவிட்டு வேண்டாம் என்று விட்டு விட்டார்கள். சித்தப்பா, பெரியப்பா என்று பெரிய குடும்பம்தான். சின்ன வயதில் சாமியாட இடமில்லாமல் கூட்டம் சிதறும். நாளடைவில் ஆளுக்கொருவராகப் போய்ச் சேர்ந்து விட்டார்கள். அவர்கள் வாரிசுகளும் ஆண்கள் இல்லை. ஒன்றுவிட்ட பெரியப்பா முறையில் செல்லையாப்பா இருக்கிறார். அவருக்கும் அவன் சாமிதான் குலதெய்வம். செல்லையாப்பா மிலிடரியில் இருந்தவர். சென்னையில் ஏ டி எம்மில் காவலுக்கு இருக்கிறார். அவருக்கு குழந்தைகள் இல்லை. மனைவியின் அக்கா மகளை எடுத்து வளர்த்தார். வளர்ப்பு மகள் வீட்டில்தான் வாசம். அவர்  இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் அவருக்குச் சொல்லாதது கடைசி நேரத்தில் அவனுக்கு உறைத்து வருத்தமாக இருந்தது. 

நேரம் ஆகஆக கோவிலுக்குள் கூட்டமும், கூச்சலும் அதிகரித்துக் கொண்டே இருந்தது. சின்ன தூறலாய் மழை விழ ஆரம்பித்தது. திடீரென்று மின்சாரம் போயிற்று. இருட்டில் ஆளாளுக்கு ஒருபக்கம் ஓடினார்கள். ஆய் என்ற பெரிய சத்தத்துடன் சுடலை மாடன் துள்ளினான். தொடர்ந்து கருப்பன். முத்தாலம்மையும் கூடச் சேர்ந்து கொண்டாள். கொட்டு மேளம் இல்லை. நாதஸ்வரம் இல்லை. வில்லுப்பாட்டு இல்லை. மழையில் தேய்த்த சந்தனம் மார்பில் வழிய, மாலைகளோடு ஆட வழியில்லாமல் சாமிகள் துடிப்பதும் அடங்குவதுமாக இருந்தார்கள். வெளிச்சத்துக்கு கொளுத்திய தீவெட்டியை சுடலை மாடன் பிடுங்கிக் கொண்டான் செஞ்சோடு அணைத்துக் கொண்டு இன்னும் இன்னும் என்றான். இன்னும் இரண்டையும் வாங்கி மார்புடன் அணைத்துக் கொண்டு முன்னால் ஓடப் போகிறவனைப் போல எட்டுவைத்து எட்டுவைத்து நின்றான், இருட்டில் யாரோ குலவையிட்டார்கள். நேரமாயிற்று. இனியும் காத்திருக்க முடியாது. மழை நிற்கும் பாடில்லை. இன்னும் பெரிதாகப் பெய்யும். சாமிக்கு சூடம்காட்ட முடிவாயிற்று. அதற்குள் அச்சு வெல்லத்தை நொறுக்கி தேங்காய்ப் பூவை தூவி பச்சரியைக் கலந்து குத்துச் சட்டிகளில் பிச்சை கொண்டு வந்து வைத்தான்.

பண்டாரம் ”நல்ல வேலை செய்திய” என்றான்.

 குலசரத்துக்கே திருப்தியில்லாமல் அன்றைய குலதெய்வ பூஜை முடிந்து போயிற்று.

”என்ன குறை வச்சோம். ஏன் சாமிக்கி பிடிக்கல.” என்று குலசரம் வீட்டுக்கு வந்ததும் மனைவியிடம் கேட்டான். எதுவும் பேசத் தோன்றாமல் அவளும் கண்ணீர் உகுத்தாள். மகள் கோசலைக்குத் தெரியாமல் அவர்கள் இருவரும் கலக்கமாக இருந்தபோது மழை மீண்டும் உக்கிரமாக ஆரம்பித்து. விடிய விடியப் பெய்தது.

4

தெய்வக் குத்தம் என்று ஊருக்குள் பேச்சாயிற்று. விடிந்ததும் கணவனும் மனைவியும் கோவிலுக்குப் போனார்கள். அலங்கோலமாகக் கிடந்த அனைத்தையும் அள்ளிப் போட்டு சுத்தம் செய்தார்கள். குலசரம் மனம் உடைந்து போனான். சாமிக்கு முன்னாலேயே நெடு நேரம் அமர்ந்திருந்தான். ’’வீரசிராமணி ஜோதிடரை நான் போய் பார்த்து விட்டு வரட்டுமா?’’ என்று சாலாட்சி கேட்டாள். அவனுக்கு அவரது ஆக்ரோஷமான குரல் மீண்டும் ஞாபகம் வந்தது அமைதியானான். வேண்டாம் என்று தலையசைத்தான். அவர்கள் கோவிலிலிருப்பதைக் கேள்விப்பட்டு பூவக்கா வந்தாள். வீட்டுக்குப் போனதாகச் சொன்னாள். மூவரும் என்ன பேசுவதென்று தெரியாமலிருந்தார்கள்.

”உனக்கு எதோ தெரியும் நீ சொல்ல மாட்டங்கற, எம்மகள உன் மகனுக்கு கல்யாணம் பண்ணி வைக்கல. பரவால்ல அந்த வருத்தம் இப்ப எனக்கு இல்ல. ஆனா நீ ஜோஸியம்ன்னு சொன்னியே அது என்ன? சொல்ல மாட்டியாக்கா?”

அக்கா எதிர்பாராமல் குலசரம் கேட்டான்.

”சொல்ல என்னப்பா இருக்கு. ஜாதகத்த பாத்தாரு இடைகால் ஜோஸியரு. வேண்டாம் சரிப்பட்டு வாரதுன்னு சொல்லிட்டாரு. எங்க வீட்டு அவுஹளுக்கு இடைகால்காரரு சொல்லுததுதான் வேதம். நா, மறுத்து என்ன சொல்லமுடியும். எல்லா வருத்தத்தையும்  முழுங்கிக்கிட்டு பேசாம இருந்தேன். நீ நெஞ்ச தொட்டுச் சொல்லு, உன் மகளவிட அழகான பொண்ணையா என் மகனுக்கு கட்டி வச்சிருக்கேன். இல்ல, உன்னவிட உசத்தியான இடத்லயா பொண்ணு பாத்திருக்கேன்.”

அக்கா அழுது புடவையில் மூக்கைச் சிந்தினாள்.

குமாரசாமி தாத்தாவும் வந்து சேர்ந்தார். என்ன பிரச்சினை என்று ஆழ்ந்து யோசித்த குமாரசாமி தாத்தா, ’’உன் மகளுக்கு கல்யாணம் நடக்கணும். மாப்பிள்ளை பாக்கலாமான்னு கேக்கத்தான நீ ஜோஸியர்கிட்ட போன. உனக்கு பதில் கிடைக்கல. அதுதான உன் பிரச்சினை. சாமிகிட்ட பூக்கட்டி கேப்போம். என்ன தாயீ சொல்லுத.” என்றார்.

”வேண்டாம் தாத்தா முன்ன பின்ன எதாவது  வந்தா மனசுக்கு கஷ்டமா இருக்கும்“ என்று சாலாட்சி தயங்கினாள். 

’’எந்த வழியும் தெரியலன்னா கால்போன போக்குல, போக வேண்டியதுதான் அப்பதான எதாவது வழி கிடைக்கும். பூவு நீ ராசாமணி வீட்டுல பிச்சிப் பூவும், அரளிப்பூவும் இருக்கும். இதுல நாலு அதுல நாலு பறிச்சு  பொட்டலம் கட்டி எடுத்துட்டு வா.”

என்று ஆணையிட்டது போலச் சொன்னார். தளர்ந்து கிடக்கும் நேரத்தில் அவர் அப்படிச் சொல்வது குலசரத்துக்கு ஆறுதலாக இருந்தது.

போன வேகத்தில் பூவக்கா வந்து விட்டாள். கையில் இலையில் நார் கட்டிய இரண்டு பொட்டலங்கள்.

குமாரசாமி தாத்தா வாங்கி சாமிக்கு முன்னால் வைத்தார். அதற்கென்றே வந்தவள் போல கருப்பாச்சி தன் பேத்தியை இடுப்பில் வைத்தபடி வந்தாள்.

”வா நல்ல நேரத்துக்கு வந்திருக்க.” என்ற தாத்தா குழந்தையை இறக்கி விடச் சொன்னார்.

குழந்தை இரண்டு பொட்டலங்களையும் பார்த்தது. ஒன்றை எடுத்தது. தாத்தாவிடம் கொடுத்தது. வாங்கி கண்ணில் ஒற்றிக் கொண்டு குலசரத்திடம் கொடுத்தார், 

“வீட்டுக்குப் போயி பிரிச்சுப் பாரு. சாமி உத்தரவு குடுத்திருந்தா நீ ஆசைப்பட்டத செய்யி.”

” பயமா இருக்கு தாத்தா” என்றாள் சாலாட்சி 

“ நடக்கும் நடக்கும். எல்லாத்துக்கும் ஒரு முடிவு வரும். பயப்படாம இரு தாயி. உன் மக நல்லா இருப்பா. பூவு நீ இந்த போட்டலத்த எடுத்துட்டுப் போயி கிணத்துல போட்டிரு.”

என்று சாமிக்கு முன்னாலிருந்த இன்னொரு பொட்டலத்தை எடுத்து பூவிடம்  கொடுத்தார். அவள் கனமான ஒன்றை வாங்குவதுபோல் அதனை வாங்கி தன் முந்தியில் முடிச்சிட்டுக் கொண்டாள்.

குலசரம் வீட்டுக்கு வந்து சாமிக்கு முன்னால் பிரித்துப் பார்த்தபோது பிச்சிப்பூ வந்திருந்தது. அவன் சந்தோஷமானான். கல்யாணம் நல்ல படியாக நடந்தால் தனிக்கொடை போடுவதாக சாமியிடம் வேண்டிக் கொண்டான். சாலாட்சி சந்தோஷமாக நடந்தவைகளை கோசலையிடம் சொன்னாள். கோசலை அப்படியா என்பது போல பார்த்தாள். அம்மாக்காரிக்கு அது மனசைப் பிசைந்தது. ஆட்கள் கூடி விட்டார்கள். அந்த ஊரில் இருப்பவர்கள். வேலைக்காக வெளியூர் போனவர்கள். வெளி நாட்டில் இருப்பவர்கள் என்று எல்லோரைப் பற்றியும் விசாரிக்கச் சொன்னான் குலசரம். சொந்தக்காரர்கள் வீடு வீடாய் சாலாட்சி ஏறி இறங்கினாள். கோசலைக்குப் பொருத்தமாக எந்த வீட்டில் மாப்பிள்ளை இருக்கிறான். லட்சாதிபதி குலசரத்தின் மகள் கோசலையைக் கட்டிக் கொள்ளப் போகும் மாப்பிள்ளை யார் என்பது பெரிய கேள்வியாயிற்று.

5

மாப்பிள்ளை யாரென்று முடிவாகும் வரை அந்த வீட்டில் இருக்க வேண்டாம் என்று கோசலையை வெளியூரில் இருக்கும் சாலாட்சியின் தங்கை வீட்டில் கொண்டுபோய் விட்டுவிட்டு வந்து விட்டார்கள். கோசலையும் ஒன்றும் சொல்லவில்லை. சித்தியோடும் அவள் குழந்தைகளோடும் சந்தோஷமாகவே இருந்தாள் என்று குலசரம் வீட்டில்வந்து சொன்னான். உண்மையில் மாப்பிள்ளை யாரும் அமையாத பெண்ணாக மகள் ஆகிப்போனதில் குலசரம்தான் துடித்துப்போனான். 

வெளியூரில் மாப்பிள்ளை பார்க்கலாம் என்ற யோசனையை குமாரசாமி தாத்தாதான் சொன்னார். அவர் பேத்தி ஒருத்தி வெளியூருக்கு வாழ்க்கைப்பட்டு சந்தோஷமாக இருக்கிறாள். ஆனால், அது காதல் திருமணம். அதனைப் பூசிமெழுகி இரு வீட்டார் திருமணம் போல நடத்திவிட்டார்கள். தாத்தாவுக்கு இதெல்லாம் தெரியாது. அந்தப்பெண் சந்தோஷமாகத்தான் இருக்கிறாள். அவர் சொன்னது நல்ல யோசனையாகப் பட்டது. அதோடு வேறு வழியும் இல்லை.

அங்கும் இங்குமாக வலைவீசித்தான்  ஒரு மாப்பிள்ளையைப் பிடித்தார்கள். படித்திருக்கிறார். திருச்சி பெல் கம்பெனியில் வேலை. தொடர்ந்து படித்துக்கொண்டும் இருக்கிறார். அப்பா ஓய்வுபெற்ற அரசு அதிகாரி. அம்மா இன்னும் வேலைக்குப் போகிறார். ஒரு அக்கா. கல்யாணமாகிவிட்டது. சொந்த வீடு. கடன் கஷ்டம் இல்லை.பெண் பார்க்க வந்தவர்கள் தன்மையாகப் பேசினார்கள். மாப்பிள்ளையைப் பிடித்திருக்கிறது என்று கோசலையும் சொல்லிவிட்டாள். பெண்ணைப் பிடித்திருக்கிறது என்று சபையிலேயே மாப்பிள்ளை வீட்டுக்காரர்களும் சொல்லிவிட்டார்கள். சீர் செனத்தி பற்றிக் கேட்டதும், தங்கள் ஆசையைச் சொன்னார்கள். தன்னால் இதுதான் முடியும் என்று சொன்னதற்கு சரியென்று விட்டார்கள். எல்லாம் நல்லபடியாக முடியும் போது அவர்கள் கேட்டதையெல்லாம் கொடுத்து விடலாம் என்று குலசரம் முடிவு செய்திருந்தான்.

6


வெளியூர்க்காரர்கள் பெண் பார்த்துவிட்டுப்போன இரவில் தூங்கிய குலசரத்துக்கு கெட்டகனவு வந்தது. தனிமையான இடத்தில் தான் யாருக்கோ பயந்து ஓடுவதுபோல. துரத்தும் உருவம் தன்னை மிரட்டுவதுபோல. தன்னைத் துரத்தியது யாரென்று அடையாளம் காண முடியவில்லை. ஆனால் குரல் வீர சிராமணி ஜோசியனின் கனத்த குரல். அதே கோப வீச்சு. நெஞ்சு பொறுக்காத உக்ரம். ஆவேச மூச்சு. அவன் திடுக்கிட்டு எழுந்துவிட்டான். தளத்துக்கு வந்து பார்த்தபோது அப்போதுதான் குளித்த சாலாட்சி சாமி கும்பிட்டுக் கொண்டிருந்தாள்.’’சாலா’’ என்றான் அவளைக் கூப்பிடும் அன்பான குரலில். அவள் மூன்று முறை கூப்பிட்ட பின்னால்தான் கண்திறந்தாள். பதட்டமாகப் பார்த்தாள். அவனருகே வந்து உட்கார்ந்தாள். கெட்ட கனவொன்றைக் கண்டதாகச் சொன்னாள். தான் கண்ட கனவைப்பற்றி அவன் சொல்லவில்லை. என்ன சொல்லி அவளை ஆறுதல் படுத்துவது என்றும் தெரியவில்லை.

விடிந்ததும் இருவரும் குமாரசாமி தாத்தாவைப் பார்க்கப் போனார்கள். தாத்தா விழித்திருந்தார். ஆனால் அவரால்  எழுந்து நடமாட முடியாமல் படுத்த நிலையிலேயே பேசினார். அவரிடம் தாங்கள் இருவரும் கண்ட கனவைச் சொன்னான்.

’’நானும் வாரேன். ஏழு மணிக்கி கெழக்க போற பஸ்ஸுல போயி ஜோஸியன பாத்துட்டு வந்துருவோம். இனிமே தாமதிக்கப் படாது.’’ தாத்தா எழ முயற்சித்தார். ஆச்சி காப்பியோடு வந்தாள். வேண்டாம் என்று சொல்லாமல் வாங்கிக் கொண்டார்கள். அது தேவை என்பது போலவும் இருந்த்து.

”எதுக்கு பஸ்ஸுல போயிக்கிட்டு. கார வரச் சொல்லுதேன்”. 

”தாத்தா வேண்டாம்.” என்று சொல்லவில்லை.

தாத்தாவும் அவனும் சென்றபோது ஜோசியர் ஊரிலில்லை. எதோ விஷேசத்துக்குப் போயிருப்பதாகச் சொன்னார்கள். அவர் வருவதற்குள் சங்கரன் கோவிலிக்குப் போய் வரலாம் என்று தாத்தா சொன்னார். அங்கு சாமி கும்பிட்டு புற்றுமண் எடுத்து நெற்றியில் பூசிக்கொண்ட போது சர்ப்பச் சீறல் கேட்டது. திடுக்கிட்ட அவனிடம் தாத்தா விபரம் கேட்டார். அவன் சொன்னதும் ”எதோ இருக்கு” என்றார். அவனுக்குப் பயமாக இருந்தது. பக்கத்து வீட்டில் வாங்கிய போன் நம்பரில் ஜோஸியருக்குப் பேசிய போது ”உங்கள வர வேண்டாம்ன்னுதான சொன்னேன். பாத்தியளா நீங்க வரும்போது நா இல்ல.” என்றார். அவன் எவ்வளவு நேரமானாலும் காத்திருப்பதாகவும், எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருவதாகவும் சொன்னான். தாத்தாவிடமும் சொல்லிப் பேசச் சொன்னான்.பிராப்தமில்லை என்று ஜோஸியர் உறுதியாகச் சொல்லி விட்டார். ”குல தெய்வம் தவிர வேறு யாரும் எதுவும் சொல்ல முடியாது செய்ய முடியாது. நீங்கள் மாப்பிள்ளை பார்த்ததிலேயே ஏதோ தவறு இருக்கிறது.” என்று சொல்லி போனைத் துண்டித்துவிட்டார்.

வீரசிராமணியிலிருந்து வந்த கார் நேரடியாக பூவக்கா வீட்டுக்குத்தான் போயிற்று. மாமாவும் அங்கு இருந்தார். மிளகு வத்தல் வியாபாரிகள் கணக்கு வழக்குப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். வேலையாட்கள் இருந்தார்கள். ஒரு பக்கம் பருத்தி பிரிப்பு. மாமா எல்லோரையும் பார்த்தார். ஒவ்வொருவராக வெளியேறியபின் தாத்தா வெற்றிலையை துப்பிவிட்டு வந்தார். பூவக்கா தண்ணீர் சொம்புடன் வந்தாள்.

சாலாட்சி விஷயம் தெரிந்து வந்துவிட்டாள். இன்னும் சிலர் வந்த போது ”கொஞ்சம் இருங்கத்தா முக்கியமா பேசிட்டு இருக்கோம்.” என்று தாத்தா விரட்டினார்.

’’குலசரம் பொண்ணு வாழ்க்கை நீங்க சொல்லுததுலதான் இருக்கு. நீங்க எந்த ஜோஸியன் கிட்ட அவ ஜாதகத்த காட்டுனீங்க. ஏன் அவள உங்க பையனுக்கு வேண்டாம்ன்னு சொன்னீங்க. ஜாதகத்ல எதாவது குறை இருக்கா. இருந்தா சொல்லுங்க அது நிவர்த்திக்கு எதாவது பரிகாரம் இருக்கான்னு விசாரிக்கலாம்.”

தாத்தா அவசர அவசரமாகப் பேசினார். மாமா என்ன பேசுவதென்று தெரியாதவர் போல இருந்தார்.

அத்தையும் மாமாவும் அமைதியாக இருந்தார்கள்.

சாலாட்சி விசும்பினாள்.

”பொம்பள கண்ணீரு சிந்தப்படாது”

மாமா சொன்னார்

”எம் பொண்ணுக்கு வழி சொல்லுங்க. நா அழல”

மாமா அப்போதும் அமைதியாக இருந்தார். பூவக்கா அவன் முகத்தையே பார்த்தாள். குலசரம் வீரசிராமணிக்குப் போய் வந்த விஷயத்தைச் சொன்னான்.’’எதோ ஒரு குத்தம் இருக்கு. சொல்லுங்க மாமா. உங்க கால்ல விழுந்து கேக்கறேன்.’’ விழுந்தான். அழுதான். மாமா அவனை தூக்கினார்.

”நீங்க கேக்கறதனால சொல்லுதோம். மனசில வச்சுக்க கூடாது. எதாவது நேரத்ல இதபத்தி பேசக்கூடாது”

பூவாக்கா பேச ஆரம்பித்தாள்.

”சொல்லுத்தா இவங்களுக்கு அதா வேல”

கோசலைய குமாருக்கு நிச்சயம் பண்னுனதுல இருந்து வீடு சரியில்லாம போச்சு. அவுஹ வரப்பு வழுக்கி விழுந்தாக. நா அங்கணத்ல வழுக்கி விழுந்து ரெண்டு நா நடக்க முடியாம கெடந்தேன். குமாருக்கு திடீருன்னு வேலை போச்சி. தோப்புல நூறு தேங்காக்கு மேல அவண்டு குடிஞ்சு போட்டுச்சு. கன்னுக்குட்டிக்கி கூட இல்லாம பசுவில பால் சுரப்பு நின்னு போச்சு. எல்லாத்துக்கும் மேல யாரோ கதவ தட்டுற சத்தம் எதோ அவசரம் போல, எதோ ஒரு விஷயம் சொல்ல வரது மாதிரி சத்தம் கேக்கும். திறந்து பாத்தா யாரும் இருக்க மாட்டாங்க. நா அவுஹன்னு மாறி மாறி கதவ திறப்போம். பயமா இருக்கும். கால் நடுக்கம் கை நடுக்கம் வந்து பகல்ல கதவ பூட்டிக்கிட்டு தூங்கிகிட்டு இருப்போம். எனக்கும் அவுஹளுக்கும் கல்யாணத்ல எதோ பிரச்சினை இருக்குன்னு மனசில பட ஆரம்பிச்சுது. கோசலைய கல்யாணம் பண்ணி வைக்க வேண்டாம்ன்னு நா வலிச்சுத்தான் முடிவு பண்ணுனேன். அதுக்குப் பெறவு பிரச்சின ஒண்ணு ஒண்ணா குறஞ்சிது. குமாருக்கு கூடுதல் சம்பளத்ல வேலை கிடச்சுது. நாங்க எந்த ஜோஸியத்தையும் பாக்கல. எங்களுக்கு வேற வழி இல்ல.  

அனைவரும் பதட்டமாகப் பார்த்தார்கள்.

கோசலைக்கு மாப்பிள்ளை பாக்கலாம்ன்னு முண்டன்கிட்ட பூப்போட்டுப் பாத்தமே. 

அக்காக்காரி அழ ஆரம்பித்தாள்.

”என்ன மன்னிச்சிருங்க”

பூவக்கா இன்னும் அழுதாள்

குலசரம் திடுக்கிட்டுப் பார்த்தான்

”நீ ரெண்டு பொட்டலமும் பிச்சிப்பூதான் வச்சிருக்கன்னு தெரிஞ்சதனாலதான் ஒரு பொட்டலத்த உன் கிட்ட கொடுத்து கிணத்ல போடச் சொன்னேன்.”

தாத்தா அமைதியாகச் சொன்னார். 

”நா, கோசலைக்கு நல்லது நடக்கட்டும்ன்னு நினைச்சேன். எங்களால அவ கல்யாணம் நடக்காம இருக்குன்னு ஊர்ல ஒரு பேச்சு இருக்கே அது மாறட்டும்ன்னு நினைச்சேன். சாமி முன்னால நல்லதுக்குத்தான பொய்ய சொல்றோம்ன்னு நினைச்சேன்”.

அவ அழுகை அதிகமாகிக்கொண்டே போனது. வாசலில் நிழல்.

”சொன்னா கேக்க மாட்டியளா மூதேவிஹளா.”

தாத்தா அதட்டியதும் திபுதிபுவென ஆட்கள் ஓடினர்.

சாமிகிட்டதான் நீ கேக்கணும் குலசரம். தனி ஊட்டு போட்டுறலாமா அப்பதான் எல்லா சாமியும் வரும்.

அவன் பார்க்க

”மழ கிழ வரும்ன்னு  பயப்படாத கொட்டக போட்டுறலாம். கரண்டுக்கு கவலைப் படாத ஜெனெரேட்டர் வச்சுக்கலாம். சீவல்குளம் தங்கையா வில்ல கூப்பிடு. நல்ல கொட்டுக்காரன் அடிக்கற அடில சாமிய வர வைக்கறவன் யாருன்னு விசாரிப்போம்.”

ஆங்…

என்று கத்தினார் மாமா. அவருக்கும் சாமி வரும். உடலை முறுக்கிப் பிழிவது போல சுட்டினார். குலசாரம் பிடித்துக் கொண்டான். சகுனம் நல்லாத்தான் இருக்கு. குலசரம்மா நீதான் நல்ல படியா நடக்க துணை இருக்கணும். பாரத்த உன் மேல போட்டுட்டு வேலைய ஆரம்பிக்கலாமா?

தாத்தா மாமாவுக்குள் பாலித்திருந்த சாமியை மிரட்டிக் கேட்டார்.

மாமாவின் முகம் பெண் முகம் போலாயிற்று. புன்னகை பொலிந்து சிரிப்பாய் மாறிற்று. ஏகாந்த சிரிப்பு. உதட்டு சுழிப்பும். ஆட் காட்டி விலை மேலும் கீழும் அசைந்தது. அதற்க்குள் யாரோ வேப்பிலை ஒடித்து வந்து விட்டார்கள். கருப்பாயி பாட்டி சாமி வந்து ஓட்டமும் நடையுமாய் வந்தாள். வாசலுக்கும் வீட்டுக்கும் ஓடினாள். மாமாவுக்கும் துடிப்பு அதிகமானது. எதோ நல்லது நடக்கப்போகிறது என்று குலசரமும், கோசலையும் உணர்ந்தார்கள்.

7

கோவில் கோமரத்தார் உள்ளூரிலும் வெளியூரிலும் இருந்தார்கள். குலசரம் எல்லோருக்கும் சொன்னான். தனிக்கொடை போடுவதாகவும். அதை தனிக்கொடை என்று நினைக்க வேண்டாம் என்றும், பொதுக் கொடையாகவே நினைக்க வேண்டும் என்றும் சொன்னான்.கொஞ்சம் வசதிக் குறைவானவர்களுக்கு தானே டிகெட் எடுத்துக் கொடுக்கவா என்று கேட்டான். வேலைக்குப் போக வசதியாக சனிக்கிழமை கொடையை வைத்திருந்தான். சென்னை திருச்சி மதுரையில் இருப்பவர்களை ஒரு பஸ்ஸில் கூட்டிக்கொண்டு வந்து கொண்டு போய் விட்டுவிடலாம் என்று குமாரசாமி தாத்தா யோசனை சொன்னார். யார் வருகிரார்களோ இல்லையோ சாமியாடுபவர்கள் வரவேண்டும். எல்லா சாமியும் ஆடித்தான் குலசரத்தின் சாமி முண்டனிடம் கேட்க வேண்டும்.  முண்டன் வந்து ஆடும் ஒரே ஒரு பெரியப்பா முறை செல்லைய்யா சென்னையிலிருந்து  கண்டிப்பாக வந்து விடுவதாகச் சொல்லிவிட்டார், மகள் கல்யாண விஷயம் பற்றியும் அவரிடம் சொல்லி குலசரம் கண் கலங்கினான். அவர் என் பேத்தி கல்யாணமில்லாடா. நீ சொல்லணுமா? வருவேன். கண்டிப்பா வருவேன். என்றார். அவர் வந்தால் சாமியே வந்ததுபோல என்பது முடிவாகிவிட்டது.

சொன்ன எல்லோரும் கோவில் கொடைக்கு வந்துவிட்டார்கள். சொல்ல விட்டுப் போனவர்களும் விஷயம் கேள்விப்பட்டு வந்து விட்டார்கள். கோவில் கொடைகளின் போது ஊர் கட்டும் களை கூடியிருந்தது. தன் தனிக்கொடை போல குலசரம் நடந்து கொள்ளவில்லை. வழக்கமாக கோவில் கொடை நடத்துபவர்களிடம் பணத்தைக் கொடுத்து சாமி மனம் குளிர எல்லாம் செய்யுங்கள் என்று சொல்லி விட்டான். வழக்கமான கோவில் கொடைகளின் போது நடக்கும் பாட்டுக் கச்சேரியோ, ஆட்டம் பாட்டமோ மட்டும் இல்லை. எல்லா உற்சாகத்தையும் மீறி வருத்த இழைகள் குலசரத்துக்கும் அவன் மனைவிக்குமிடையே ஓடிக் கொண்டிருந்த்து. பூவக்கா முதல் நாளே வந்துவிட்டாள். அடுக்களை நிர்வாகத்தை எடுத்துக் கொண்டாள். பிச்சைய்யாவை வரச்சொல்லி வீட்டிலேயே அடுப்பு கூட்டி சமைக்கச் சொல்லி விட்டார்கள். வருவோர் எவரையும் சாப்பிடாமல் விடவில்லை. 

கோசலைக்குப் பார்த்திருக்கும் மாப்பிள்ளைக்குச் சொல்லிவிட வேண்டுமா என்பது ஒரு கேள்வியாக தொக்கி நின்றது. இன்னும் நிச்சயதார்த்தம் கூட நடக்கவில்லை. அவர்கள் நம் வீட்டில் கை நனைக்கவில்லை. சொல்ல வேண்டிய அவசியமில்லை என்று குமாரசாமி தாத்தா சொல்லிவிட்டார்.

ஊரிலுள்ள எல்லா கோவில் சாமிக்கும் மாலைபோட ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. கொட்டுக்காரர்கள் அக்கா வீட்டில் இளைப்பாறினார்கள். வில்லுக்காரர்கள் சமுதாய மண்டபத்தில் இருந்தார்கள். மைக் செட் அலறியது. பெரும்பாலும் டி.எம் சௌந்தர்ராஜன். சீர்காழி கோவிந்தராஜன். பித்துக்குளி முருகதாஸ் பாட்டுகள்.

சாமிக்கு குற்றாலம் தண்னீர் கொண்டுவர வருங்காலத்தில் சாமியாடப் போகிறவர்கள் போனார்கள். குற்றாலம் தண்ணீர் கொண்டு வந்து சாமிக்கு ஊற்றி பூஜை நடக்கும் சாயங்கால பூஜை. அதன் பின் அர்த்த ராத்திரி பூஜை. அந்தப் பூஜையில்தான் சாமி முழு வீச்சுடன் இருக்கும். சாமியிடம் கேட்க முடியும்.

முண்டன் சாமியாடப் போகும் செல்லையாப்பா மாலைக் கொடை வரைக்கும் வந்து சேரவில்லை. வருவார் என்று எல்லோரும் சொன்னார்கள். சென்னைக்குப் போன் செய்தபோது அவர் புறப்பட்டதாகவும் வழியில் சுகவீனமாகி திருச்சியில் இறங்கி விட்டதாகவும் வீட்டில் சொன்னார்கள். அவரிடம் போன் இல்லை. வழியில் எதிர்ப்படும் ஆட்கள் யாராவது அவருக்கு உதவ முன்வந்தால் போனில் பேசுவார். அவர் வந்து எதாவது பஸ்ஸில் இறங்கினால் ஊருக்கு கூட்டிவர டி.வி. எஸ் வண்டியில் ஆள் நின்றது. அவர் எதாவது போன் செய்தாரா என்று அரை மணிக்கொருமுறை போன்செய்து கேட்டுக்கொண்டார்கள். எல்லோரும் வந்த பஸ்ஸில் அவர் வந்திருக்கலாம் என்று குலசரம் பெத்தாவிடம் சொன்னான்.

நம்ம கோவிலுக்கு நாமதான போகணும் என்று அவர் சொன்னதாக அவள் சொன்னாள். அந்த அந்தக் காலத்து மனிதர் எப்படியும் வந்து விடுவார் என்றும், அதையே நினைக்காமல் வேறு வேலை பார்க்கும் படியும்  குமாரசாமி தாத்தா சொன்னார். ஆனால் மனம் போகவில்லை. சாமியிடம் என்ன குறை வைத்தேன் என்று கேட்காமல் சாப்பிடக்கூட கூடாது என்றுதான் அவன் இருந்தான். அவனை அறிந்த சாலாவும் சாப்பிடவில்லை. 

மாலைப் பூசை முடிந்து ஊர் சற்று உறக்கமும், விழிப்புமாக இருந்தபோது கொட்டுச் சத்தம் கேட்டது. அமைதியைக் கிழித்துக்கொண்டு வந்து காதுகளில் அறைந்தது.வீடுகளைப் பூட்டும் சத்தம், ஆட்கள் நடக்கும் சத்தம். அவசரக் குளிப்புச் சத்தம். நாய்க் குரைப்பு. பசுக்களின் சத்தம் எல்லாம் அடங்கி கோவில் சாமியாட்டத்திற்காக தயாரானது.

குமாரசாமி தாத்தா நாதஸ்வரக் காரரைப் பார்த்து கையசைத்தார். நாதஸ்வரம் நின்றது. ஆடு வெட்ட சேர்ந்த மங்கலத்திலிருந்து வந்தவன் இடுப்பிலிருந்த கத்தியை உருவி  குட்டி ஆட்டை முதலில் அறுத்தான். காலை வெட்டி வாயில் திணித்தது முத்தாலம்மனுக்கு எதிரே வைத்தான். சாமியாடிகள் வேட்டியைச் சுற்றிக் கட்டினார்கள். கால்சட்டை, சாட்டை, அரிவாள், மணிக் கம்பு. பிணமாலை வண்ணார் தீவெட்டிகளை இன்னும் செய்து கொண்டிருந்தான். அவனுக்குப் பக்கத்தில் வாளியில் முடிந்த தீவெட்டிகள் எண்ணையில் மூழ்கிக் கொண்டிருந்தன. 

ஆடுகள் சுடல் மாடனுக்கும், கருப்ப சாமிக்கு எதிரே நின்றன. நீண்ட அரிவாளைக் கும்பிட்டுக் கொண்டிருந்தவன் குமார சாமி தாத்தவைப் பார்த்தான். அறுத்தே போடு. வெட்டி துண்டாகலன்னா மனசு கஷடமாயிரும் என்றார். கரகரவென்று அறுபடும் ஆட்டின் உயிர்க் குரல் கேட்டது. முண்டம் கீழே விழுந்து ரத்தம் தெறிக்க துள்ளி அடங்கியது. கூட்டம் மூச்சுப் பேச்சில்லாமல் நின்றது.

 செல்லையாப்பா யாரும் எதிர்பாராத வகையில் கோவிலுக்குள் வந்தார். குலசரம் முகம் பிரகாசமாயிற்று. அதற்காக காத்திருந்தவள் போல கருப்பாயி ஆச்சி ஓடினாள். தாத்தா கையை உயரே தூக்கி கையை அசைக்கத்த் துவங்கினார். நாதஸ்வரக்காரர்கள் முழு மூச்சையும் ஊதினார்கள். வானம் நோக்கி ஊதி, காதுகளைக் குறிவைத்தான் சின்னதாக பூமியை நோக்கி வட்ட மடித்தான். பார்த்துக் கொண்டிருந்த  கொட்டுக்காரன்  டும் டும் டும் என்று முழங்க, சின்ன அசைவு பெரிய அசைவு சின்ன அசைவு பெரிய அசைவு கொண்டு சாமிகள் ஆட ஆரம்பித்தன.

 பண்டாரம் பெரிய வாளி சந்தனத்தை எடுத்து வந்து அள்ளி ஒவ்வோருவரின் மார்பிலும் பூசி, கையில் கோர்த்திருந்த மாலைகளில் ஒன்றை எடுத்துப் போட்டான். வழக்கமாக சாமி ஆடாதவர்களில் சிலருக்கும் சாமி வந்து உருண்டார்கள். கொட்டும் நாதஸ்வரமும் சேர்ந்து முழங்க எல்லாச் சாமிகளும் உக்கிரமாக ஆடின. எல்லாச் சாமிகளும் இன்னும் அமைதியாகவே நிற்கும் செல்லையா பெரியப்பாவின் முன் கூடினர். சாமி வருத்தக் கூடிய டாண் டண்டன் டான் டாண்டண்டண்டான் கொட்டு முழங்கியது, நாதஸ்வரம் தொடர்ந்தது. 

 ”ஆய்…’ கோபக்கார சுடலை முறைக்க, பண்டாரம் சுடலை கையில் தீவெட்டியைக் கொடுத்தான். கருப்பாசாமி அரிவாளை வைத்துக் கொண்டு துடிதுடித்து ஆடியது. காருப்பாச்சியும் இன்னும் இரு பெண்களும் குலவையும் ஓட்டமுமாக இருந்தனர்,

”வரப் போறியா இல்லையா?”

குமாரசாமி தாத்தா சத்துக்கு மீறி கத்தினார். ஒரு காலத்து சாமியாடிதான் அவர்.. சாட்டை எடுத்தாரென்றால் அது திரியாகும் வரை தன்னை அடித்துக் கொள்பவர்.

தாத்தா கைதட்ட திடீர் அமைதி

செல்லையாப்பா அமைதியாக நின்றார். எல்லாச்சாமியும் அவருக்கு திருநீறு பூசினார்கள். குலசரம் அருகிலேயே நின்றான். சாலாட்சியும், கோசலையும் ஒரு ஓரமாய் நின்றார்கள். கருப்பசாமி செல்லையாப்பாவுக்கு முன்னால் நின்று தரையில் மணிக்கம்பை குத்திக் குத்தி சுழன்று ஆடியது.

நடு நிசி.

ஒரு கொட்டுக்காரனும், தீவட்டி சகிதமாக பண்டாரமும், துணைக்கு ஒருவரும் சுடலை மாடசாமி வேட்டைக்குப் போன திசையில் ஓடினார்கள். சாமி நிலையில்லாமல் ஓடியது. கோவில் தாண்டி குளம், கருவேல மரங்கள், ஒத்தையடி பாதை, சாமியின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் கொட்டுக்காரனும், பண்டாரமும் ஒரு மேட்டில் நின்று விட்டார்கள். இருட்டுக்குள் தீவெட்டி வெளிச்சம் அங்கும் இங்கும் ஓடியது. திடீரென காணவில்லை. இருவரும் பதட்டமாகப் பார்த்து நின்றார்கள். தூரமாய் மீண்டும் வெளிச்சம். கொட்டுக்காரன் பலமாக கொட்டை அடிக்கத் துவங்கினார். ஆங் ஆங் என்று சாமி ஓடி வந்தது. கோவிலை நோக்கி ஓடியது. இருவரும் பின் தொடர்ந்தார்கள்.

 சுடலை மாடன் வேட்டை முடிந்து வருவதைப் பார்த்து மற்ற கொட்டுக்கள் முழங்கத்துவங்கின. வில்லுக்காரரும் சேர்ந்து கொண்டார்.வேட்டைக்குப் போய் வரும் சுடலைமாடன் பாட்டு கேட்டது. சாமி வந்து வில்லுக்காரர்களுக்கு முன் ஆடியது.

 இன்னும் கொஞ்ச நேரமே பூசைக்கு இருந்தபோது செல்லையாவுக்கு சின்ன உதறல் வந்தது. அவரைச் சுற்றி மேள தாளங்கள் முழங்க அவர் ஆவேசம் வந்து துள்ளினார். அவரது வேட்டி சட்டை மாற்றி காவி வேட்டி கட்டப்பட்டது, ஆணிச் செருப்பில் அவர் அங்கும் இங்கும் ஓடினார். கக்கக் கட்டைகளை வைத்து துள்ளினார். குலவைச் சத்தம் கேட்டது. ஆட்டம் முடிந்து கொஞ்சம் அமைதி வந்தபோது, தாத்தாவின் கையசைவு பார்த்து சத்தம் நின்றது. பக்கத்தில் நின்றவர்கள் விலக, தாத்தா குலசரத்தை கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு வந்து முண்டனுக்கு முன்னால் நிறுத்தினார்.

சாமி அவனை கோபமாகப் பார்த்தது

”நா எதாவது தப்பு பண்ணியிருந்தா மன்னிக்கணும்.”

கை கூப்பினான்.

சாமி அவனையே பார்த்தது. பெருங்குரலெடுத்து விசும்பி விசும்பி அழுதது. குலசரத்தைப் பார்க்காமல் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டது

”யார பாத்து யாரு முகத்த திருப்பறது. உன் புள்ள இல்லையா?’

குமாரசாமி தாத்தா குரல் கொடுத்தார்

”ஆவ் ஆவ்” என்று சாமி அங்கும் இங்கும் போனது. மார்பிலடித்துக் கொண்டது.

”என்ன வேணும் உனக்கு .. ”

என்று விட்டு

”சாமி கிட்ட நீயே கேளு.” என்று குலசரத்திடம் குமாரசாமி தாத்தா சொன்னார்,

காலில் விழுந்தவன்.

”என்ன வேணும்ன்னு சொல்லுங்க. என்ன குறை வச்சேன். பிச்சக்காரனா உன் வாசல்ல நின்னு அழுதேன். என்ன ஆளாக்கணும்னு சொல்லிட்டு வெளியூர் போனேன். தொட்டதெல்லாம் துலங்குச்சு. பணம் செல்வாக்கு எல்லாம் இருக்கு. உனக்கு என்ன குறை வச்சுறப்போறேன்.”

குலசரம் சாமியிடம் உள்ள பஞ்சாயத்தை அன்றைக்கே தீர்த்துவிடப் போவது போலப் பேசினான்.

சாமி சிரித்தது, பின் அழுதது.

சொல்லு சொன்னாத்தான தெரியும்’

தாத்தா சாமிக்கு அருகில் வந்து சொன்னார். சாமிக்கு இன்னொரு மாலை, இன்னும் கொஞ்ச சந்தனம், இலையில் இனிப்புகளை வைத்து பூவக்கா நீட்டினாள். சாமி கர்ஜனையுடன் தட்டி விட்டது, கூட்டத்தினர் ஆளுக்காள் எடுத்துக் கொண்டார்கள்.

”என்ன கோபம் ஆங்.”.

தாத்தாவின் குரல் உக்கிரமாக இருந்தது. சாமியை வரவைக்கும் மேளம் தட்டச் சொல்லி தாத்தா மேலே கையைத்தூக்கி படபடவென்று அசைத்தார். கொஞ்சம் இடைவெளி விட்டிருந்த மேளக்காரன் அடித்து நொறுக்கினான். பண்டாரம் குமாரசாமி தாத்தாவுக்கு மாலையைப் போட்டு சந்தனம் பூசினான். மேளச் சத்தம் தாத்தாவுக்கும் சாமியைக் கொண்டு வந்தது. முண்டனைப் பிடித்த கையை தாத்தா எடுக்கவே இல்லை. 

”சொல்லு…’

என்றபடி திருநீற்றை அள்ளிப் பூசினார்

”என்ன ஆனாதை ஆக்கிட்டியேப்பா. யாருமில்லாம போவேன். ஊருமில்லாம போவேன்.”

முண்டன் ஆண்குரலும் பெண் குரலுமாகச் சேர்ந்து அழுதது. அது பார்த்து பெண்கள் அழுதார்கள். ஆண்கள் கலங்கினார்கள்

”என்ன சொல்லுத, நாங்கள்லாம் இருக்கமில்ல”

”உனக்கு பெறகு?”

”எனக்குத்தான் ஆம்பள வாரிசு நீ குடுக்கலையே”

”ஓவென்று சாமி அழுதது. தரையில் கிடந்து உருண்டது. முண்டம் துள்ளுவது போல துள்ளித் துள்ளி அடங்கியது.

தாத்தாவால் ஈடுகொடுக்க முடியவில்லை. நின்றிருந்த மற்ற சாமிகளுக்கும் துடிப்பு அடங்கிப் போயிற்று

பூவக்கா பானகம் கொண்டு வந்தாள். முண்டனை தாத்தா மடியில் கிடத்தி, வெங்கலச் சொம்பைக் கொடுத்தார். இரு கை பிடிக்கும் சொம்பு. சாமி நிமிடத்தில் காலிசொம்பை வீசியது

”திருநீரு பூசு”

திருநீற்று மரவையை தாத்தா நீட்டினார்.

சாலாட்சி கோசலையை இழுத்து வந்தாள்.

”பூசு கல்யாணம் ஆகணும் அவளுக்கு.”

சாமி பார்த்தது. கோபம் கொண்ட பார்வை. உக்கிரமான பார்வை. மாட்டேன் என்று தலையசைத்துக் கொண்ட்து

”ஏன்?”

”அனாதையாக்காதீங்கப்பா என்னைய.”

சாமி எல்லோரையும் பார்த்தது. குமாரசாமியையும் பார்த்தது. சரியா? என்பது போல கண்ணசைவில் கேட்டது. அவர் கையைப் பிடித்து கண்ணில் ஒற்றிக் கொண்டது. குலசரத்தை அணைத்துக் கொண்டது. காலில் விழுந்த சாலாட்சியை பார்த்து.” தருவியா?” என்றது. அவள் புரியாமல் பார்த்தாள்.

”தருவேன்னு சொல்லு”

அவளுக்கு இன்னும் குழப்பமாக இருந்தது

”நீயாவது சொல்லுப்பா”

”என்ன வேணும்ன்னு நா கேட்டுக்கிட்டுத்தான இருக்கேன்.”

”அவனும்தான கேக்கறான். உன் பெரியப்பன் செத்த பின்னால உனக்குப் பின்னால சாமிக்குன்னு யாரு இருக்கா. சுடல மாடன், கருப்பசாமி, முத்தாலம்மனுக்கெல்லாம் ஆளு இருக்கு. உன் சாமிக்கு இல்லையே. அனாதை ஆயிருவேன்னு அழுகுது. நீதான குடுக்கணும். என்ன என்னன்னு கேட்டா.. தரேன்னு சொல்லு. சாமிக்கு வாரிச தரேன்னு சொல்லு.”

குலசரம் ஒன்றும் புரியாமல் பார்த்தான்.

சாமிக்கு விக்கல் எடுத்தது தண்ணி தண்ணி என்று ஆளுக்கொரு திசையில் ஓடினார்கள். கூட்டம் விலக்கினார்கள். பனை விசிறி கொண்டுவந்து காற்று வீசினார்கள். 

சூரியன் வரதுக்குள்ள கற்பூரம் காட்டுங்க.

பண்டாரம் மணியடித்தான். ஒவ்வொரு சாமிக்கும் காட்டினான். எல்லோரும் ஒற்றிக் கொண்டார்கள். இலைகள் போடப்பட்டன. சாப்பிட்டார்கள்.

குலசரமும், சாலாட்சியும். கோசலையும் அமைதியாக இருந்தார்கள்.

எல்லாம் முடிந்து வீட்டுக்கு வந்தார்கள் அலுப்பு ஆயாசத்தோடு இரண்டு நாள் தூங்கினார்கள். மூன்றாவது நாள் பெரியப்பா கிளம்பினார். சட்டை, வேட்டி, பெரியம்மாவுக்கு புடவை, மகளுக்கு புடவை. பணம் எல்லாம் கொடுத்து பொதிகை ரயிலில் டிக்கெட் வாங்கி அனுப்பி வைத்தான். ரயில் கிளம்பும் முன்  செல்லையா பெரியப்பா,” குலசரம் என்ன விட்டுறாதப்பா” என்று சொன்னார். பெரியப்பா சென்னை சென்று சேரவில்லை. ரயிலிலேயே உயிர் பிரிந்துவிட்டது. அவனுக்குத்தான் போன் வந்தது. சென்னை பெரியம்மாவுக்கு போன் செய்தபோது, இனி என்னைத் தேடாதே. வரமாட்டேன் என்று அவர் போனில் பேசும்போது சொன்னதாகச் சொல்லி அழுதாள். அவன் சென்னைக்கு கார் எடுத்து வந்து மகனாக எல்லாக் கடன்களையும் முடித்தான். இனி முண்டன் சாமிக்கு அவன் மட்டும்தான் இருக்கிறான் என்ற நினைப்பு மனதை அழுத்தியது.

அதன் பின்

கோசலையை பார்த்துவிட்டுப் போன, வெளியூர் மாப்பிள்ளையை சூழ்நிலை சரியில்லை என்று சொல்லி கல்யாணப் பேச்சை குலசரமே நிறுத்தி விட்டான். சாலாட்சி அழுதாள். கோசலை ஒன்றும் சொல்லவில்லை. அதன் பின் கோசலைக்கு மாப்பிள்ளை பார்க்கும் மனசே வரவில்லை. அவனிடம் அது பற்றி யாரும் கேட்கவில்லை. 

சாலாட்சி தனி அறைக்குள் இருந்து கொண்டாள். யாருடனும் பேச்சு இல்லை. சிரிப்பு இல்லை. எங்கோ வெறித்து யாரையோ பற்றி யோசிப்பது போல இருந்தாள். ஒரு இரவு அவளைக் காணவில்லை. பதறிப்போய் தேடினான் குலசரம். ஊரே விழித்துக் கொண்ட்து. கோசலை கோவிலில் முண்டனுக்கு முன்னால் இருந்தாள். அனைவரும் பதற அவள் எதுவும் நடக்காத மாதிரி புன்னகைத்தாள். குலசரம் கோபம்கொண்டு முண்டன் பீடத்தைப் பார்த்தான். எம் மகள இந்தக் கதிக்கி ஆக்கிட்டியே என்று மாலைகளைக் கழற்றி எறிந்தான். முட்டிக் கொண்டான். ரத்தம் வழிந்தது, ஆஸ்பத்திரிக்கு தூக்கிப் போனார்கள்.

 சாலாட்சிக்கும் மனசு விட்டுப் போயிற்று. சுவையாக சமைக்கவும், உடுத்தவும், அலங்காரம் செய்யவும், வீட்டைவிட்டு வெளியே செல்லவும் மனசே இல்லை. எத்தனை பேர் என்னென்னவிதமாகவோ கூப்பிட்ட போதும் கோசலை குளிக்க மறுத்தாள். பேச மறுத்தாள். வெளியே வர மறுத்தாள். சாமி அவளை ஆட் கொண்டுவிட்டது என்று சொன்னார்கள். கோசலை இன்னும் கொஞ்சநால் அப்படியே இருந்தால் அவள் மயிர் இறுகி  சடை விழுந்து விடும் என்று சொன்னார்கள்.

குமாரசாமி தாத்தா படுத்துவிட்டார். அவரால் எழுந்து வர முடியவில்லை. கோவிலுக்கு கூட்டிப் போய் சாமி வருத்தி அவரைப் படுக்க வைத்து விட்டதாக ஆச்சி எல்லோரிடமும் குலசரத்தைப் பற்றி குறை சொல்லிப் புலம்பினாள். இரு முறை குலசரம் பேசப் போனபோது ”பேச என்ன இருக்கு” என்று விரட்டி விட்டாள்.

கொஞ்ச நாளில் தாத்தா சீவன் போய்விடும் என்று சொல்லப்பட்ட போது, குலசரம் தாத்தாவைப் போய்ப் பார்த்தான். கையைப் பிடித்துக் கொண்டார்,

“இப்படி ஆயிருச்சே” அழுதான்.

“என்ன ஆயிருச்சு. நீ சாமிக்கு ஒரு ஆம்பள பயல கொடுக்காட்டி அது உன் பொம்பள புள்ளைய உன்ன விட்டுப் போக விடாது. உனக்குப் பின்னால சாமிய அனாத ஆக்கிறாத.”

தாத்தா மெல்லிய குரலில் அவனுக்குப் புரியும்படி சொன்னார்.

குலசரத்துக்குப் புரிந்தது. சம்மதம் என்பது போல தலையசைத்தான். வீட்டுக்கு வந்த அவன் தன்னைப் பார்க்கும் விதம் வேறு விதமாக இருப்பதை சாலாட்சி உணர்ந்தாள்.

சுபம்

இறுக
கட்டிவைத்த பின்னும்
எங்கேயோ
எப்போதோ
துளிர்த்து விட்டவை
கிளைபரப்பி
மெல்லத் தலைநீட்டுகிறது.
பொருட்டென மதியாது
கண்டும் காணாமலும்
கடந்து போனாலும்
எட் டி எட்டிப் பார்த்து
இருப்பைக் காட்டி
கவனமீர்க்க முயலும்
வெட்கங்கெட்ட
மனசை
என்ன தான் செய்வது?


என்னை நான்
உதிர்த்து எத்தனையோ
நாட்களாகிவிட்டன.
இறுமாப்பின்
இறுதி கண்ணியையும்
இழந்தாகி விட்டது.
உன் ப்ரியங்களை
என் வரமென
நெஞ்சும் நிறைத்தாயிற்று.
இன்னமும்
என்ன தான் வேண்டுமாம்?
காரணமற்று
அவ்வப்போது
வெறுமையில் விறைத்துப்போகும்
பொல்லாத மனசுக்கு?

மதுரா

எனக்கு எதுவும் புரியாமலில்லை
தூயா

சூறாவளியின் ஆக்ரோஷத்தில்
நான் ஒரு திசையிலும்
நீ ஒரு திசையிலும்
மாட்டிக் கொண்டு தவிக்கிறோம்.

காலத்தின் மாய விளையாட்டில்
உன்னையும் என்னையும் பொம்மைகளாக்கி
மந்திரங்கள் ஓதி விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்

சிவப்பு பொம்மையாக உன்னையும்
கருப்பு பொம்மையாக என்னையும்
பாவிக்கிறார்கள்.

பொம்மைகளின்
மீது
ஆணி அடிக்க அடிக்க
உன்னுள் நானும்
என்னுள் நீயும்
ஆழப் பயணிக்கிறோம்.

சூடேற்றி நம்மை
பஸ்பமாக்கும்
ரஸவாதமெல்லாம்
கரைந்திடச்செய்யும்
மனோதிடத்தில்
நாமிருக்கிறோம்.

கனம் கனம்
வெடிக்கும் நினைவுகளின்
பேராற்றலை
சேகரித்து
வாழ்வைச் சமைப்போம்
தூயா.


நான் கொஞ்சம்
அழுது கொள்கிறேன்.

என் இயலாமையால்
என் கோழைத்தனத்தால்
என் அதிகபிரசிங்கித்தனத்தால்
என் வெட்டிப் பெருமையால்
என் ஆண் திமிரால்
என் அறிவாளித்தனத்தால்

நான் அதிகம்
அழுது கொண்டிருக்கிறேன்.

நானும் என் நிழலும்
சேர்ந்து இத்துயரைப் பருகிக்
கொண்டிருக்கிறோம்.

பருகப் பருக
துயரின் போதையில்
என்னை அழித்துக் கொண்டிருக்கிறேன்.

காலம்
கடத்தும் பேச்சில்
உணர்வுகள் செத்துக்
கிடக்கின்றன.

இப்போது
வெய்யில் இல்லாததால்
என் நிழல் இல்லை
நிழல் இல்லாததால்
நானில்லை

நானுமில்லை
நிழலுமில்லை
அழுகையில்லை
மறத்துப்போன
என் உள்ளத்தை பார்த்து
நான் கொஞ்சம்
அழுது கொள்கிறேன்.

சில துளி காதல்
சில துளி காமம்
சில துளி மரணம்
சில துளி இயலாமை
பல துளி வெறுமை
இந்தக் கோப்பையை மூழ்கடித்திருக்கும் துளிகளின் ஆக்ரோஷம்..

எல்லா துளிகளும் வெப்பத்தில்
அனல் கனத்து
மூச்சு முட்டுகிறது
கோப்பையை பற்றிக் கொண்டு சுவைத்துக்
கொண்டிருக்கிறது கைகள்..

அகத்தில் பயணிக்கும் புறத்துளிகளை புறத்தில் பயணிக்கும் அகத்துளிகள் எல்லாம்
செரித்து வலு சேர்க்கிறது இந்த கோப்பை

                        ---------------

கூடுவிட்ட பறவை ஒன்று
சிறகசைத்துப் பறக்கிறது.

தூறலின் ஈரம் தாங்கிய
கனத்த சிறகுகள்
பிணமாய்
செயலிழந்ததில்
வேதனையை விழியில் கக்கிக் கொண்டே தனது வறண்ட நாவால்
எச்சிலைக் கூட்டி விழுங்கியது.

அனலும் பனியுமாய்
மேனி எங்கும் ஏக்கம் கொண்ட
பறவை
கூடைவிட்டு உயிரில் கரைய எத்தனிக்கிறது.

                        ---------------

நீண்ட இரவில்
நீண்டுக் கொண்டிருக்கும்
கனவை உறைய வைக்கிறது பனி

உறைந்து உடையும்
கனவின் பாகங்களில்
பிரதிபலிக்கிறது
என் நிர்வாணம்.

                        ---------------

அங்கே
நான்
வெறுக்கப்படுகிறேன்

அங்கே
நான்
அவமானப்படுத்த படுகிறேன்

அங்கே
நான்
ஒதுக்கப்படுகிறேன்

அங்கே
என்
வெற்றிகள்
எல்லாம் குப்பைக்கூளங்கள்

திடீர் என்று தோன்றவில்லை
அந்த வார்த்தை

காலம் கடந்து
பரிணமிக்காத
பழைய வார்த்தை

நரகலினை விஞ்சும்
அழுக்கும் அருவருப்பும்
கொண்ட வார்த்தை

இவன் நம்ப
ஆள் இல்லை

(அல்லது)
இவன்
நம்ப
சாதி இல்லை…

                        ---------------

என் வீட்டு பூனைக்குட்டி
அலைந்துக் கொண்டே
இருக்கிறது.

மியாவ் மியாவ்
சத்தம்
என்னை
இம்சிக்கிறது.

கோவத்தில்
வெளியே தள்ளி
கதவை சாத்தி
போர்வைக்குள் புதைந்துக் கொண்டேன்.

நிசப்தத்தின் கனம்
சூழ்ந்தது

நாயிடம்
மாட்டிக் கொண்டதா?
சாலையில் வாகனத்தில் சிக்கி
உயிர் இழந்ததா ?
கற்பனைகள்
என்னை இம்சித்தது.

கதவைத் திறந்து தேடினேன்.

எலியை கவ்விக் கொண்ட அதன் கண்களில் நான்
சிக்கிக் கொண்டேன்

 வெளி ரங்கராஜன்

தஞ்சைப் பின்புலத்தில் தமிழின் முக்கிய இலக்கியப் படைப்பாளிகளான கு.ப.ராஜகோபாலன், தி.ஜானகி-ராமன்,எம்.வி.வெங்கட்ராம் ஆகியோர் வரிசையில் வைத்து கணிக்கப்படுபவர் கரிச்சான்குஞ்சு. கு.ப.ராஜ-கோபாலனின் எழுத்துக்கள் மீதுள்ள அபிமானத்தால் அவருடைய கரிச்சான் என்கிற புனைப்பெயரை எடுத்துக்கொண்டு கரிச்சான்குஞ்சு என்ற பெயரில் படைப்புகள் செய்தவர் இவர் 50க்கும் மேற்பட்ட சிறுகதைகள், ஒரு நாவல், 2 குறுநாவல்கள், 6 நாடகங்கள் மற்றும் 5 மொழிபெயர்ப்பு நூல்கள்  என படைப்பிலக்கியத்தின் பல துறைகளிலும் பங்களிப்புகள் செய்தவர். சமஸ்கிருதத்தில் ஆழ்ந்த புலமையும், வரலாறு மற்றும் தத்துவவியல் குறித்த ஈடுபாடுகளும் கொண்ட கரிச்சான்குஞ்சு பல்வேறு வரலாற்று மாந்தர்களையும், சமகால வாழ்வின் விசித்திர மனிதர்களையும் தன்னுடைய படைப்புகளில் உலவவிட்டவர். வறுமை மற்றும் இயலாமைகளுக்கிடையிலும் வாழ்க்கை குறித்த கொண்டாட்ட உணர்வும், அதன் புதிர்த்தன்மை குறித்த பல்வேறு அனுமானங்களும் கொண்டவர். அதனாலேயே எந்த வகைமைக்குள்ளும் சிக்கிக்கொள்ளாமல் வாழ்வின் பன்முகத்தன்மையில் நம்பிக்கை கொண்டு பல்வேறு கருத்தோட்டங்களுடனும் தன்னுடைய தொடர்புநிலையை உருவாக்கிக்கொண்டவர்.

அவருடைய நாடகப் படைப்புகளிலும் இத்தகைய பார்வைகள் எதிரொலிப்பதை பார்க்கமுடியும். சரித்திரத்துடன் உரையாடல் என்கிற அம்சம் கு.ப.ரா, புதுமைப்பித்தன் போன்ற அந்த காலகட்ட படைப்பாளிகளிடம் அதிகமாக வெளிப்படுகிறது. முக்கியமாக வரலாற்றின் குருட்டுப் பார்வையால் கறைபடிந்த பாத்திரங்களை ஒழுக்கம் குறித்த பழமைவாத கண்ணோட்டங்களிலிருந்து விலக்கி புதிய பார்வையில் அப்பாத்திரங்களின் நடத்தைகள் குறித்து ஒளி பாய்ச்சுவது என்பது அவர்களின் உத்தியாக இருந்தது. அவ்வகையில் ராமாயண அகலிகையின் அழகியல் மனம் குறித்தும், அவள் உயிர்பெற்று மீண்டும் கல்லாவது குறித்தும் கு.ப.ராவும், புதுமைப்பித்தனும் புதிய பார்வைகளை தங்கள் நாடகங்களில் வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

அதேபோல் கரிச்சன்குஞ்சுவும் மணிமேகலை காப்பியத்தில் வரும் மாதவி மற்றும் மணிமேகலை பாத்திரங்களை தன்னுடைய `காலத்தின் குரல்`நாடகத்தில் ஒரு புதிய கண்ணோட்டத்தில் உலவ விடுகிறார்.மணிமேகலை எழுதப்பட்ட காலகட்டம் என்பது இந்தியாவில் பெளத்த மதத்துக்கும், சநாதன வைதீக மதங்களுக்கும் இடையே ஏற்பட்ட கருத்துப் போராட்டங்களின் பின்புலத்தில் எழுதப்பட்ட ஒரு காப்பியம்.மாதவி மணிமேகலையை கண்ணகியின் மகளாகவே பாவித்து அவளை நடனமாட அனுப்பாமல் துறவை வலியுறுத்துகிறாள். மணிமேகலையும் புத்த மதத்தில் ஈடுபாடு கொண்டு அது போதிக்கும் துறவுநிலையின் குறியீடாக இருக்கிறாள். தன்னுடைய நடனக்கலையையும், காதலையும் துறந்து அட்சய பாத்திரமேந்தி பசித்தவர்க்கு சோறிட்டு பசிப்பிணி போக்கும் மானுட சேவையில் தன்னை ஈடுபடுத்திக்கொள்கிறாள். உதயகுமாரன் கொலையால் சினம் கொண்ட அரசனும், அரசியும் அவளை பழிவாங்க துடித்தாலும், புத்த மதம் பரப்பிய மாறுதல் என்ற அம்சத்தின் தாக்கத்தை உணர்வதாக கரிச்சான்குஞ்சு நாடகத்தை உருவாக்கியுள்ளார். சடங்குகளையே பற்றிக்கொண்டிருந்த சநாதன இந்து மதத்துக்கும், மடங்களை நிறுவி சாதிப் பாகுபாடின்றி மக்கள்சேவையில் ஈடுபட்ட புத்த மதத்துக்கும் இடையே ஏற்பட்ட கருத்துப் போரில் மணிமேகலையின் பாத்திரம் பிரகாசிப்பதாக கரிச்சான்குஞ்சு அப்பாத்திரத்தை உருவாக்கி தன்னுடைய சமூகவியல் பார்வைக்கு அழுத்தம் கொடுத்துள்ளார்.

அதேபோல் `கழுகு`தொகுப்பில் உள்ள ஐந்து நாடகங்களிலும் காப்பிய மாந்தர் குறித்தும், வரலாற்று மன்னர்கள் குறித்தும் ஒரு கேலிச் சித்திரத்தை உருவாக்கியுள்ளார். `வில் எங்கே` நாடகத்தில் காட்டுக்கு வந்து மரவுரி தரித்தும் வில்லேந்தத் துடிக்கும் ராமனை சீதை கேலி செய்கிறாள். `ஈஸ்வர் அல்லா தேரா நாம்` நாடகத்தில் இரு கடவுள்களும் சமம் என்று போலி ஒற்றுமை பேசும் இந்து அடிப்படைவாதத்தை அம்பலப்படுத்துகிறார். `மேதினி` மற்றும் `ரஸியா சுல்தான்` நாடகங்களில் வீண் சண்டையிட்டு மடிந்த ராஜபுத்திர மற்றும் இஸ்லாம் மன்னர்கள் பற்றியும், அரசியலில் பெண்கள் பகடைக்காய்களாவதையும், பிற்போக்கு வாதங்களை எதிர்த்து பெண் எழுச்சிபெறுவதையும் சித்தரிக்கிறார். `கழுகு` நாடகத்தில் ஆங்கிலேயர் இந்தியாவில் நுழைய ஏதுவாக குறுநில மன்னர்களின் சுயநல ஆசைகளும், அதிகாரப் போட்டிகளும் அமைந்தது சுட்டிக்காட்டப்படுகிறது. இந்த நாடகங்கள் எல்லாம் வரலாற்று சம்பவங்களுக்கு பின்னால் உள்ள மனித பலகீனங்கள் மீது கவனத்தை உருவாக்குவதாக அமைந்துள்ளன.

காப்பியப் பாத்திரங்களும், வரலாற்றுப் பாத்திரங்களும் மாறுபட்ட கண்ணோட்டங்களில் புதிய விளக்கம் பெறும் நாடகக் களன்களை உருவாக்குவது எப்போதும் ஒரு நாடகப் படைப்பாளியின் முக்கிய தேர்வாகவே உள்ளது. ஆனால் பெரும்பாலும் இந்த நாடகங்கள் உரையாடலை மடக்கிப்போட்டு கதைசொல்லும் பாணியிலேயே இயங்குகின்றன. நாடகக் கணங்களை தேர்ந்தெடுத்து அவற்றின் மோதல்கள் உருவாக்கும் ஒரு நாடக இயங்குதளத்தை கட்டமைப்பதும், அந்த வரலாற்றுடனான உரையாடல்களை சமகாலப் பார்வையுடன் செழுமைப்படுத்துவதிலேயே ஒரு நாடகப் படைப்பாளியின் வெற்றி உள்ளது. அதில் குறைந்த அளவில் வெற்றி பெற்றவையே கரிச்சான்குஞ்சுவின் நாடகங்கள் எனக்கூற முடியும். ஆனால் காப்பிய மாந்தர்களையும்,வரலாற்று மாந்தர்களையும் மறுவாசிப்பு செய்வதும், காலத்தின் கேள்விகளுக்கு அவர்களை உட்படுத்துவதும் இப்படைப்புகளில் கவனம் பெறுவது ஒரு நேர்மறையான அம்சம்.

–இரா.கவியரசு 

ஆடையைத் தூக்கும்
கடலின் மூச்சு
கீழிழுக்கும் விரல்களை
மிதக்க விடுகிறது
யார் கண்ணிலும் சிக்காமல் நகைக்கிறேன்
நீள்துயில் கலைந்தெழும்
மர்லின் மன்றோ
இன்னொரு டேக் என்கிறாள்
அவளது ஆடையைத் தீண்டுகிறேன்
தலைகீழாகப் பூத்திருக்கும்
செம்பருத்தி
அலையடித்து நடனமிடுகிறது
சுரங்கப்பாதை மின்விசிறியிலிருந்து
குளிர்காற்றை அனுப்புகிறவன்
கண்களைக் கீழே கவிழ விடுகிறான்
கேமிரா
ஆக்சன்
கட்
இப்போது திருப்திகரம்தானே
என்றபடி நகருகிறாள்
உங்கள் வீடு எங்கே இருக்கிறது
நானும் வரட்டுமா ?
கடற்கரையில்
மிதக்கும் பாலித்தீன் பையினுள்
சுடரொன்று அசைகிறது
உயரப் பறந்து எரியும் தீ
நறுமணப் புகையின் தனிமை
அதைக்காட்டியவாறே
தலையைக் கோதுபவள்
உனக்கு வேண்டியதெல்லாம்
தொடைகளின் காட்சிதானே
டேக் ஓ.கே ஆகிவிட்டது
பார்த்துக் கொண்டே இருக்கலாம்
தடையேதுமில்லை என்கிறாள்
ஆடையை உள்ளே
புதைத்துக் கொள்கிறேன்

ஐசக் பேசில் எமரால்ட்

1

இருபத்தியொரு வருடங்களுக்குமுன், தங்கம் கேசட்கடை தொடங்கிய போது வெளியூரில் இருந்து கூட்டம்கூட்டமாக வந்து வீடியோ கேசட் வாடகைக்கு வாங்கி செல்வர். தொழில்நுட்பம் முன்னகர்ந்து செல்ல சிறிதுகாலம் கழித்து சிடி மயமானது. அப்போது முன்னைவிட கூட்டம் சற்றுக்குறைவுதான் என்றாலும் சத்தமும், மீன் எச்சியின் மணமும், ரப்பர் பேன்டினால் சுற்றப்பட்ட செல்போன்களும், டாப்அப் அட்டையை சுரண்டி சுரண்டி ஆள்காட்டி விரல் நுனியின்  கருமைநிற கறையும், அந்திநேர பிராந்தி வாடையின் வீச்சமும் இருந்துக்கொண்டே இருக்கும். வால்புட்டான்களின் வருகைதான் குறைய தொடங்கியிருந்தது. எந்நேரமும் புதுப்பட பாடல்களின் ஒலி அப்பகுதியில் பரவி கேட்டுக்கொண்டே இருக்கும். மாடியில் இருக்கும் லெனினிஸ்ட் அலுவலகத்திற்கு அவ்வப்போது போலிஸ் வருவதுண்டு. அப்போது மட்டும் சத்தம் குறைவாக ஒலிக்கும்.

குதூகல சூழலை இழக்க மனமின்றி, அருகேயுள்ள கடை வியாபாரிகள் நேரம் போக இதர வேளைகளில் கேசட் கடையில் சங்கமிப்பர். கடையின் நான்கு மூலைகளிலும் மண்பானைக்குள் வூஃபர் வைத்து இடிஇடியென டும்டும். மேலிருந்து கீழிறங்கும் ‘சில்’ சத்தத்திற்காக ஒரு டியூட்டர். என்னதான் நெட், விங்க் மியுசிக் வந்தாலும் ஒர்ஜினல் கேசட்டில் கேட்கும் தரம் வரவே வராது என சொல்லிக்கொண்டிருப்பார். மழை நாட்களில் அந்த ஈரத்துடன் கூடிய தூறலிசையும் சேர்ந்து ஒலிக்கும் பாடல்கள், வீட்டில் சீக்கு வந்து விழுந்து நேரம் குறிக்கப்பட்டிருக்கும் அன்புமிகு நோயாளிக்காக தலையில் சும்மாட்டை சொருகிக்கொண்டு, டாக்டர் எழுதின மருந்துசீட்டை மழையில் நனையாதபடி கறை படிந்த அழுக்குவேட்டியில் சுருட்டி மடித்து நனைந்துக் கொண்டே ஓடுபவர்களும் ஒரு நிமிடம் அந்த மழைநேர இசையில் எதிர்மறை சிந்தனையை சற்று நேரம் தள்ளிப்போட வாய்ப்பை நல்கியதுண்டு.

இப்போதெல்லாம்  அந்த வீதியின் பெரும்பான்மையான கடைகள் காலை ஒன்பது மணிக்கே திறந்து விடுவார்கள். முன்பெல்லாம் எட்டு மணிக்கு திறந்த கேசட்கடை மட்டும் இப்போது பதினோரு மணிக்கு திறக்கிறது. வீட்டிலிருந்து கிளம்பினால் பத்து நிமிடத்திற்குள் வந்துவிடும் தூரம்தான். அன்று ஷட்டரை திறக்கையில் அருகே இருக்கும் மளிகைக் கடைக்காரர் ஜோஷியின் சத்தம் மட்டும் தான் தங்கத்தின் காதில் விழுந்தது.

“என்னடே…! இன்னைக்கும் பதினோரு மணிக்கு தான் உனக்கு விடிஞ்சுதா…?!”

முன்பு பதிலளிக்கும் மனம் இருந்தது. கொஞ்சம் நாட்களுக்கு முன்பு புன்னகை. இப்போது எதுவுமில்லை. அதற்கு காரணம் என்றும் எதுவுமில்லை. கடைக்கு முன் ஸ்மார்ட் கார் ஒன்று நின்றுக்கொண்டிருந்தது. அந்த காரிலிருந்து ஒருவர் மளிகை பொருட்கள் வாங்குவதற்காக வந்திருக்கலாம் என்பதை உணர்ந்துக்கொண்டு, வழக்கம்போல் தங்கம் கடையை சுத்தம் செய்ய தொடங்கினார். மளிகைக்கடைக்காரர் ஜோஷி அந்த வயிறு பெருத்தவரிடம் நடந்த உரையாடல் காதில் விழுந்தது.

“கொஞ்சம் பொறுப்பா…! சாருக்கு ஆத்தியம் கொடுத்து முடிச்சிடுறேன்…!”

தேங்காய் புண்ணாக்கு வாங்க தஞ்சியோடு நின்ற சிறுவனுக்கு எரிச்சலேறியது.

“சார்… கார் புதுசா…” எப்போவும் வேற ஒரு காரில் தானே வருவீங்க…? செவப்பா இருக்கும்…!” சொல்லும்போதே கார் மீது கொதி கொள்வது போல் தான் முகத்தை வைத்திருப்பார் என தங்கத்தினால் உணர முடிந்தது.

“இது என் மருமகனோடது… அவன் வெளிநாட்டுக்கு போய்ட்டான்.. அதான், நான் கொண்டு வந்தேன்…”

“நல்லா இருக்கு… இது எவ்வளவு சார் ஆகுது…?”

எவ்வளவு பெருக்கி சுத்தம் செய்தாலும் தினம் குப்பை எப்படித்தான் கடைக்குள் வந்து சேர்கிறது என்று எண்ணிக்கொண்டு பெருக்கின குப்பையை அள்ளி கடைக்கு உள்ளே இருக்கும் குப்பைத்தொட்டியில் போட்டார். அந்த கார் கிளம்பும் சத்தம் கேட்டது.

“பிலேய்… ஏன் தேச்சிய படிய..?” மங்கலான குரலில் காதில் விழுந்தது.

கண்ணாடியை ஈரத்துணியால் துடைத்து, மேரிமாதா போட்டோவின் கீழ் ஊதுவத்தியை பற்ற வைத்துவிட்டு இருக்கையில் அமர்ந்தார். அருகே நாளிதழ்கள் கிடந்தது. கண்ணாடியை போட்டு முதல் பக்கத்திலிருந்து ஆரம்பித்தார். அப்போது ரோட்டிற்கு எதிரே சர்ச் தெருவில் ஹாலோபிளாக்ஸ் கடை போட்டுருக்கும் நேசமணி சிறிது நேரம் அமர்ந்துவிட்டு சென்றார். கேசட்கடை ஆரம்பித்த காலங்களில் இருந்தே பாடல் கேட்பதற்காக தினசரி வந்துவிடுவார். இப்போது வருவதில்லை என்று சொல்ல முடியாது. முன்போல் வரத்து இல்லை. முன்பு வருகையில் உடல் ரோம மயிர்கள் நேர்த்தியாக வனப்புடன் காணப்படும். இப்போதெல்லாம் வியர்வை துடைத்தவாறே தான் உள்ளே நுழைவார். ரோமமும் அழுக்கேற தொடங்கியிருந்தது. இந்த தொழில் சமீபத்திய பத்து வருடங்களுக்கு முன் ஆரம்பித்திருந்தார். அதற்குமுன் ஓடு சூளை வைத்திருந்தார். கண்டன் விளை தான் ஓடு சூளைக்கு பிரசத்தி பெற்ற இடம். சிறு வயதில் பேருந்தில் அந்த பகுதியை கடக்கும்போது செந்நிற கடலுக்குள் நீந்தி பசுமை வயலை அடையும் ஒரு விசித்திரமான உணர்வு ஏற்படுவதுண்டு. மேற்கு குமரியில், செங்கல் சூளைகளும், முந்திரி தொழிற்சாலையுமே முதன்மை தொழிலாக இருந்தது. கிழக்கினருக்கு போட்டியாக அப்போவே ஓடு சூளை துவங்கியிருந்தார் நேசமணி. ஓடுகளின்  தரம் என்ன என்பது ஊரறிந்தது. அப்போதே தேவை குறைந்திருந்த காலம்தான். ஆனால் அதற்குப்பின் சுத்தமாக வியாபாரம் நொடித்து போனது. அதனால் என்ன ஆகும்..? கடன் பெருகியது. மகனை வட்டிக்கு வாங்கியும், மனைவியின் சீதன நகையை விற்றும் கல்லூரியில் சேர்த்திருந்தார். அவன் ஒழுங்காக படிப்பதில்லை, நண்பர்களுடன் ஊர் சுற்றுகிறான், கல்லூரிக்கு தினம் செல்வதில்லை என்பது குறித்த கவலைகள் அனைத்தையும் மறக்கடிக்க கேசட்கடை தான் இருந்த போக்கிடம். அங்கிருந்து செல்லும்போது பாரத்தை இறக்கி வைத்த நிம்மதி பெருமூச்சு கிடைக்கும்.

மறுநாள் நேசமணி வழக்கமாக வருகிற நேரம்தானே என எதிர்பார்த்து ஹோட்டலில் இருந்து சூடாக சாயா பிளாஸ்கில் அவருக்கும் சேர்த்து வாங்கி வைத்துக்கொண்டு காத்திருந்தார். அப்போது தான் ஜோஷியின் மூலம் அந்த இடி விழுந்தது. வூஃபர் சத்தம் டப்பென்று நின்று மயான அமைதியை கொடுத்தது. ஷட்டரை சாத்திவிட்டு செருப்பும் போடாமல் நேராக மருத்துவமனைக்கு ஓடினார். ஒரு ஆம்புலன்ஸ் வேன் நின்றுக்கொண்டிருந்தது. நான்கைந்து பேர் சுற்றி நின்றுக் கொண்டிருந்தார்கள். நேசமணி உள்ளே அமர்ந்து இருந்தார். தங்கம் வாயடைத்து போயிருந்தார். சிறிது நேரத்தில் இரண்டு ஆண் செவிலியர்கள் ஒரு வெள்ளைத்துணியால் சுற்றிய பிரேதத்தை ஸ்ட்ரக்ச்சரில் கொண்டுவந்து ஆம்புலன்சின் உள்ளே ஏற்றினார்கள். அளவில் பெரிய பிரேதமாக இல்லாமல் பொக்கம் குறைவாக இருந்தது, அங்கிருந்தவர்களை மனம் உடைந்து வெம்ம செய்தது. சடலத்தின் தலைப்பகுதி நேசமணியின் மடியில் கிடத்தப்பட்டது. பெண் செவிலியர் ஒருவர் மகன் அணிந்திருந்த சட்டைத்துணியை எடுத்து உள்ளே கொடுத்தார். அன்றைக்கு நேசமணி அணிந்திருந்த சட்டையும் அதே டிஸைன். ஆம்புலன்ஸ் கிளம்பியது. நேராக கடைக்கே திரும்பினார். மளிகைக் கடைக்காரர் ஜோஷி மூலமே தங்கத்திற்கு அனைத்தும் தெரிய வந்தது .

நேசமணியின் மகன் கல்லூரியில் சேர்ந்ததில் இருந்தே பைக் வாங்கியே ஆகவேண்டும் என்று பிடிவாதம் பிடித்துள்ளான். இதனால் அப்பா, மகனுக்கு இடையே பிணக்கு ஆரம்பித்திருந்தது. மகள் பள்ளிக்கூடம் படித்துக் கொண்டிருந்தாள். தன் அருகாமை வீடுகளில் உள்ள நடுநிலை வகுப்பில் படிக்கும் பெண் குழந்தைகளுக்கு இப்போதே நகை செய்ய தொடங்கி விட்டார்கள் என்பது மனதில் அழுத்திக்கொண்டே இருந்தது. அதற்கு மனைவி ஒரு கூடுதல் காரணம். வழக்கமாக பைக் வாங்கி கேட்பது கல்லூரி போன நாட்களில் இருந்தே தொடங்கியிருக்கிறது.

“முதல்ல வண்டியை ஸ்டார்ட் பண்றதுக்கு கால் எத்துமா..? வண்டி ஓட்டுற ஆளோட சைச பாரு…!”

இந்த வார்த்தைகள் தினசரிதான். அதற்கு விளைவாக அவ்வப்போது மூன்று தலைமுறைக்கு முன்னர் பிலாவு மரத்தினால் செய்யப்பட்ட பழைய ஜன்னல் ஒன்றின் கம்பியில் அம்மாவின் சேலையை கட்டிக்கொண்டு வண்டி வாங்கித் தரவில்லை என்றால் தொங்கிவிடுவேன் எனக் கூறுவான். அப்போது கூடுதல் ரெண்டு, மூன்று விஷம வார்த்தைகளோடு அந்த நிகழ்விலிருந்து மீள்வது வாடிக்கை. பின்னர் அந்த நிலம் கொடுக்கும் தோற்றம் எந்த மனநிலையையும் மாற்றி தரும். வியாபாரத்துக்கு அல்லாமல், கூட்டுக் கறிக்காக வீட்டின் அருகே காய்கறி தோட்டம் இருக்கும். கோபத்தில் ரெண்டு குப்பைக்கீரையை பிடுங்கி எறிந்தால் அடங்கி விடுவான். தேங்காய் பால் கலந்த கோதுமை உருண்டையை சுற்றி சீனி தூவி சுடசுட மகனுக்காக எடுத்துக்கொண்டு அறையருகே வந்தபோது தான் மகன் கண்கள் சிவந்து, நாக்கு தள்ளி சரிந்து கிடந்தது தெரிந்தது. தான் கட்டி துவைப்பதற்காக கழற்றிப்போட்ட அழுக்கு சேலையில் மகன் செத்துக் கிடக்கிறான். சமையல் வேலை முடிந்தபின் நனைக்கலாம் என எண்ணியிருந்தாள். தம்பிக்காரன் அக்காவிற்காக கிறிஸ்துமஸ் கோடியாக வாங்கிக் கொடுத்த இந்த சேலையை கட்டி கண்ணாடி முன் பார்த்தபோது தன்னிலை மறந்து போயிருந்தாள். இன்று அதே சேலையில் அசைவு இல்லாமல் கிடக்கும் பெற்ற மகன். இப்போதும் அன்றுப்போல் தன்னிலை அற்றவளாகவே காணப்பட்டாள். மனப்பூர்வம் செய்தானா..? அறியாமல் நிகழ்ந்ததா..? அவன் செயலுக்கு மதிப்பு அளிக்காததால் அடுத்த நகர்விற்கு செல்லலாமா என மனம் எண்ணியதா..? தான் உயரம் குறைந்தவன் என்றதால் இந்த சமூகம் தன்னை குறைத்து மதிப்பிட்டதாக உணர்ந்தானா..?  அதுதான் உண்மை எனில் வார்த்தைகளை உதிர்த்த தந்தையால் தாங்கிக் கொள்ள முடியுமா..? உயரம் குறைவாக இருந்ததால் மகனுக்கு சைக்கிள் கற்றுக்கொடுப்பதில் நேசமணி போராடியிருந்தார். கடைசி வரையில் அவரால் கற்றுக் கொடுக்கவே முடியவில்லை. காரணம் பெரிய சைக்கிள் தான் தன்வசம் இருந்தது. கால் எட்டவில்லை. ஆனால் ஒருநாள் அவனாகவே சைக்கிள் ஒட்டிக் கொண்டு வந்தபோது அவருக்கு ஏற்பட்ட மகிழ்ச்சி வெளிக்காட்டாமல் உள்ளேயே வைத்திருந்தார். அப்போது இருந்த உள மற்றும் வரவு செழிப்பில் சீக்கிரம் மகனுக்கு ஒரு மோட்டார் வண்டி வாங்க வேண்டும் என்று மனதிற்கு நினைத்ததும் உண்டு. இனி வாங்கினால் என்ன? வாங்கவில்லை என்றால் என்ன..? மகனின் மரணம் எதனால் நிகழ்ந்திருக்கும் என்பதற்கான விடை யாருக்கும் தெரியப்போவதில்லை.

காலம் வேகமாக நகர்ந்துக்கொண்டே குடும்பசுமை எனும் நயிந்துப்போன சேலைக்கயிறு கழுத்தை நெரிக்க தொடங்கியிருந்தது. ஊரில் உள்ள முக்கால்வாசி ஓடு சூளைகளும் இழுத்து மூடிவிட்டு முதலாளிகளாக இருந்தவர்கள் தொழிலாளியாக வெளிநாட்டுக்கு போய்க்கொண்டிருந்தார்கள். செங்கல் சூளைகள் ஹாலோபிளாக்ஸ் என்ற சிமென்ட்கல் நிறுவனங்களாக மாறத்தொடங்கின. தன்னுடைய அடுத்த தலைமுறைக்கான தொழில் இல்லைதான். வேறு வழியில்லை. அவனும் தன் சகோதரன் இல்லையா? அவனுடன் தொழில் போட்டிக்காக இல்லை. அந்த மனநிலையிலும் நேசமணி இல்லை. அவ்வாறு ஹாலோபிளாக்ஸ் தயாரிப்பு  நிறுவனம் தொடங்க்கப்பட்டது.

2.

கேசட்கடையில் பாடல் சத்தம் சற்று அதிகமாகவே இருந்தது. முன்புப்போல் மெல்லிசை இல்லாததால், பாட்டு இரைச்சலாக மண்டையை குடைந்துக் கொண்டிருந்தது. வாங்கிய மளிகைக்கு கணக்கு போடுவது ஜோஷிக்கு சிரமமாக இருப்பதாக உணர்ந்து கடுப்பாகி உள்ளே வந்தார். கடைக்குள் யாருமில்லை.

“கடையை திறந்து வச்சிட்டு எங்க போறான் இவன்…?” மனதிற்குள். சத்தத்தை குறைக்க ஆங்கங்கே தேடிக்கொண்டிருந்தார். எவனாவது சல்லிப்பயல்கள் தன் கடையில் சாதனங்களை திருடி விடுவார்களோ என்று அடிக்கடி வெளியே வந்து பார்த்துக்கொண்டார். கபோர்டுகளில் விற்காமல் வைக்கப்பட்டிருந்த கேசட்டுகள், அழுக்கேறி காணப்பட்ட டேப் ரெக்கார்டர் மற்றும் சிடி கேசட்டுகள், செல்போன் புழக்கத்திற்கு வந்த காலக்கட்டத்தில் உள்ள நோக்கியா போன்களின் உதிரி பாகங்கள் என அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. “இந்த கடையில அப்படி என்ன தான் வியாபாரம் பண்றான்…? எப்படி கடைக்கு வாடகை கொடுக்கிறான்..?, சம்பாதிக்காம என்னத்துக்கு கடை..?, பூட்டிட்டு வீட்டுல கிடக்கலாம் இல்ல…? இப்படி சவுண்ட் கூட்டி வச்சு மனுசன டார்ச்சர் பண்றதுக்கு..” என்று மனதில் நினைத்துக்கொண்டார். கடைசி வரைக்கும் சிடிபிளேயர் எங்கே என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை. அது கண்டுபிடிக்க முடியாதுதான். தூசி படியக்க்கூடது என இரண்டு அடுக்கு மஞ்சள்  துணிக்குள் மறைத்து வைத்திருந்தார். அதற்குள் தங்கம் வந்திருந்தார். வந்தவேகத்தில் சத்தத்தை குறைத்தார். எதுவும் பேசிக்கொள்ளவில்லை. ஜோஷி கடைக்குள் சென்று மீண்டும் கணக்குவழக்குகளை பார்க்கத் தொடங்கினார்.

சூரியன் மேற்கு நோக்கி செல்ல துவங்கும் வேளையில் கடையினுள் தன் கதிர்களை பாய்ச்சுவதுண்டு. பச்சைநிறத்துணியை நெடியகம்பினால் துணிமுனையை கொக்கியினுள் சொருகினார். ஒரு பழைய மோசர்பியர் திரைப்பட சிடியை எடுத்து நன்றாக துடைத்து போட்டார். சத்தம் யாரும் கேட்காதவண்ணம் டிவியை ஆன் செய்துவிட்டு மேஜையில் தலைவைத்து தூங்க தொடங்கினார். மின் விசிறியும் வெக்கை காற்றை சுருட்டி கீழ் இறக்கிக் கொண்டிருந்தது.

பத்து வருடங்களுக்கு முன் நிலைமை இப்படி இல்லை. கேசட் கடையில் போடப்படும் படத்தைக் காண கூடி நின்றுக் கொண்டிருப்பார்கள். இன்றும் ஏசி காற்று வாங்கிக்கொண்டு மனிதர்கள் நிற்பதுண்டு.. அரசியல், சினிமா பற்றின விவாதங்கள் காரசாரமாக நடந்துக்கொண்டே இருக்கும். ஒரு பிரபல தலைவருடன் எடுத்த புகைப்படத்தை கடைச்சுவரில் மாட்டி வைத்திருந்தார்.

சிறுசேமிப்பிற்காக பணம் சேகரிக்க வந்தவன் தூங்கிக் கொண்டிருந்தவரை எழுப்ப மனமில்லாமல் அடுத்தக் கடையை நோக்கி சென்றான். பழையப் படங்களை ரீமேக் செய்யும் காலம் பத்து வருடங்களுக்கு முன் தொடங்கியிருந்தது. பழையதில் இருந்து புதிதாக்குகையில் பழையது எப்படி இருக்கும் என்ற ஆர்வமுள்ள நுண்ணுணர்வு கொண்ட ஒரு பள்ளிச்சிறுவன் வந்து பழைய படத்தை வாங்கி சென்ற அன்று வாழ்வு குறித்த பெரும்நம்பிக்கை ஏற்பட்டிருந்தது. இப்போது யாரும் சிடி வாங்க வருவதில்லை. ஆனால் காலாவதியான பொருட்களை காலி செய்யவும் மனமில்லை. புதிய திரைப்படங்களின் திருட்டு சிடி வியாபாரத்திற்கான சந்தை உருவான நேரத்தில் மறைத்து வைத்து திருட்டுத்தனமாக நிறையபேர் புதுப்பட சிடி விற்றார்கள். அப்போது அந்த நகரத்திலேயே திருட்டு சிடி இல்லாத கடை தங்கம் கேசட்கடை மட்டும்தான். தினம் வரும் வாடிக்கையாளர்களில் தொண்ணூறு சதவீதம் திருட்டு சிடி அல்லது பிட்டு சிடி வாங்க வந்தவர்கள். “அதெல்லாம் நம்ம கடையில விக்குறது இல்ல” என்ற புன்னகையை மட்டும்தான். அவ்வப்போது எல்லா கடைகளையும் போல் ஏதாவது சிக்கும் என்ற நம்பிக்கையில் போலீஸ் அவ்வப்போது வந்து கடையை திரக்கி பார்ப்பதுண்டு. நிறைய பேர் அந்த கேசட் வாங்கி வித்தா நாலு காசு பார்க்கலாம் என அறிவுரை சொல்வதும் உண்டு.

யார் அதெல்லாம் கேட்பது…? பிழைக்க தெரியாத மனிதன் என்ற பிம்பம் உருவாகும். உருவாக்கட்டும். அதனாலென்ன இப்போ…? பொருட்களை விற்கும்போதும் “இதெல்லாம் சைனா ஐட்டம், கொஞ்சம் மிஸ் ஆனாலும் போச்சு” என்று சொல்லி தான் வியாபாரம் நடக்கும். அதனால் தானே இப்படியொரு வேனிற்கால அந்தி வேளையில் நிம்மதியாக தூங்க முடிகிறது…!

ஜோஷியின்  உடன்பிறந்த தம்பி வீட்டில் ஒரு வாரத்திற்கு முன்னர் புதிதாக கார் வாங்கியிருந்தார்கள்.தம்பியின் மகன் இந்த தடவை கல்யாணம் முடித்துதான் வெளிநாட்டிற்கு கிளம்ப வேண்டும் என பெற்றோர் முடிவு செய்தமையால், வருவதற்கு முன்னரே சம்மந்தம் பேசி முடித்து விட்டார்கள். நூற்றியொன்று பவுன் நகை, பத்து லட்சம் பணம் கையில், திருமண செலவு அதில் தான். கெட்டுத்தாலியே பதினோரு பவுனுக்கு கனமாக செய்யவேண்டும் என்று மாமியார் விருப்பம் என ஓட்டன் மூலம் தகவல் வந்துள்ளது. பதிலுக்கு திருமணத்திற்கு முன்னரே ஐந்து பவுனுக்கு நீள தங்கமாலை போட்டு விடுவார்கள். அதைப் பற்றி கவலை இல்லை. காரணம் பெண் வீட்டில் இரண்டு மகள்கள் என்பதால் சொத்தை பாதியாக பிரித்து எழுதி விடுவார்கள். இதைத் தவிர புதிய காரும் தருகிறார்கள். தின்ன சோறு இல்லை என்றாலும், உடுக்க உடை கிளிந்திருந்தாலும் இதெல்லாம் செய்தே ஆகவேண்டும். அது ஒரு மரபின் தொடர்ச்சி. ஆனால் அடுத்த வாரம் பெண் பார்க்க போகும்போது வாடகைக்காரில் போனால் அவ்வளவு கவுரவமாக இருக்காது என்றெண்ணி தான். தம்பியின் மகன் நல்ல நிலைக்கு எட்டியதில் மகிழ்ச்சி தான் என நினைத்துக் கொண்டிருந்தாலும் தன்னால் ஒரு கார் வாங்க முடியவில்லையே என்ற ஏக்கம் ஜோஷிக்கு இருந்துக் கொண்டே இருந்தது. ஊரிலேயே பெரிய அடுப்பங்கடை, அதில் பிரமாண்டமான அலமாரி வைத்த வீடு தம்பியின் வீடு என்றார்கள். அதெல்லாம் கூட பெரிதான பாதிப்பை ஏற்படுத்தவில்லை. வசதி சமமாக இருந்த காலக்கட்டத்தில் சிறுசிறு உரசல்கள் அண்ணன், தம்பிக்குள் இருந்துக் கொண்டிருந்தது. ஆனால் சமம் குலையும்போது ஒட்டு உறவே இல்லாமல் ஆகிவிடுகிறது. அதற்கான காரணம் எதுவும் சொல்லிக் கொள்ளும்படியாக இருந்ததில்லை.

ஆரம்பத்தில் முறுக்காங்கடையாக தொடங்கி, சில மாதங்களிலேயே கடையை விஸ்தாரப்படுத்தியிருந்தார். இத்தனைக்கும் மளிகைக்கடையில் கச்சோடம் சோடைப்போகிறது என்று சொல்லமுடியாது. தினசரி தேவைகள், மாத தேவைகள், மனைவிக்காக திருவனந்தபுரம் மெடிக்கல் காலேஜ் சென்றதன் சாட்சியாக எடைக்கு போட்டால் இரண்டு கிலோ தேறும் அளவிற்கு கம்பியில் குத்தி வைக்கப்பட்டுள்ள மருந்து சீட்டுகள், மகளின் படிப்பிற்கான கல்வி கட்டணம் என அனைத்திற்கும் சரியாக இருந்தது. பண்டுப்போல் மாம்பட்டை விற்றுக் கொண்டிருந்தால் சீக்கிரம் கார் வாங்கி இருந்திருக்கலாம் என்றும் அடிக்கடி யோசனை வருவது உண்டு. காசை விரையம் செய்யும் எந்த போதை அடிமை பழக்கவழக்கங்கள் எதுவுமில்லை. ஆனாலும் கார் வாங்க முடியவில்லை. மகள் படிப்பை முடித்து ஒரு கர்நாடகாவில் உள்ள பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சிப்படிப்பை தொடர்ந்துக்கொண்டிருக்கிறாள். கைச்செலவுக்கு அங்கேயே பணம் கிடைக்கிறது என்று சொல்லியிருந்தாள்.  

மகள், தம்பி மகனை விட இரண்டு வயதிற்கு மூத்தவள். அவளுக்கும் ஒரு கல்யாணம் பண்ணிப் பார்க்க முடியவில்லையே என்ற நிராசை இருந்தாலும் ஒரு கார் வாங்க முடியாததுதான் அன்றைய சிணுங்கலுக்கு முக்கிய காரணம். வாடிக்கையாளரிடம் புருவத்தை உயர்த்தி பேசினால் அடுத்த முறை கடையை மாற்றி விடுவார்கள். கடையை மூடும் சமயத்தில் இரணியல் ஹவ்வாய் தியேட்டருக்கு இரவுக்காட்சிக்கு செல்லும் போதை வாலிபர்கள் சிகரெட் கேட்டு வாங்கினார்கள். எரிச்சலுடன் கொடுத்துவிட்டு பணத்தை பெற்றுக் கொண்டார். ஒரு நல்ல வியாபாரத்தோடு கடையை சாத்தலாம் என மூடாமல் இருந்தார்.  நல்லவேளையாக கருப்பட்டி கச்சோடகாரர் செல்லத்துரை வந்தார்.

“ஆ… நானும் இருக்காதுன்னு நெனச்சேன்… நல்லவேள மூடல.. இல்லனா நாள கஞ்சி காய்ச்சிருக்க முடியாது…” என்றார் ஏத்தன்குலையை இறக்கி வைத்தப்படி.

“ஏன் ஓய் இவ்ளோ நேரம்…?”

“தங்கச்சி வீட்டுக்கு போயிருந்தேன், பஸ் வரல… கடைசி பஸ் விட்டேன்…”

“பிறவு… எப்டி வந்தீரு…?

“வந்தேன்… சிக்கடிச்சிட்டு ஒரு தாயோளி கொண்டு வந்து விட்டான்…”

“வேற எண்ணமும் வேணுமா ஓய்…? எத்தன கிலோ போட…?”

“ரெண்டு கிலோ போதும் ஓய்…”

“சீ.ஓ தானே…?”

“ஹ்ம்ம்… ரேசன்ல இப்ப பச்சரிசிதான் நெறைய கொடுக்குறானுவ…”

“அத தூர தட்டாம புட்டு அவுச்சு பொண்டாட்டிக்கும் கொடுத்து நீரும் தின்னும் ஒய்…”

“கோழிகளுக்கு அவுச்சு தட்டுனா.. அதுகளும் இப்போ தின்னுறது இல்ல…”

அரிசியை செய்திதாளில் பொதிந்துக்கொண்டே “நாடன் முட்ட இருந்தா கொண்டு வாரும் ஓய்…”.

“இனி வீட்டுக்கு தானா..?”

“ஆ… இது கொள்ளாம், நல்ல வேழம் கேட்கிய நீ…?”

சுற்றிமுற்றி பார்த்துக்கொண்டு “பண்டெல்லாம் கச்சோடம் தீர பதினொன்னு ஆகும்…!” என்றார் தங்கம்.

“எங்க… இப்போ நாம வீட்டுக்கு போவேலேங்கி, பொலையாடி மவனுங்க ஒம்பது மணிக்கே கோழி பிடிச்ச காம்பவுண்ட் யாறி சாடியாணுவ…”

“அது ஒண்ணும் இல்லடே… எல்லாம் செழிப்பு தான் காரணம்… எல்லாம் வீட்டுக்கு ஒண்ணொன்னு வெளிநாட்டுல கெடக்குதுவா இல்லா..! அப்போ வித்தா தான் கஞ்சி குடிக்க முடியும்…”

செல்லத்துரை வாழைக்குலையை தூக்கிக்கொண்டு “வாரேன் ஓய்…”

கை, கால் கழுவிட்டு கடைய மூடுறதுக்கு முன் ஒரு தடவை கேசட் கடைக்கு சென்று தங்கத்திடம் புன்னகைக்கலாம் என்று தோன்றியது. கழுவிக்கொண்டு சாரத்தில் முகத்தை துடைத்தபடி வந்து பார்க்கையில் கடை மூடப்பட்டு இருந்தது. சிறிய நெருடலுடன் கடையை மூடினார். சரி நாளைக்கு அவன்கிட்ட பேசலாம் என சுய மனசமாதானம் செய்தார். சைக்கிளை மிதித்துக்கொண்டு வீட்டை நோக்கி மிதித்தார். தம்பி வீட்டில் விளக்கு எரிந்துக் கொண்டிருந்தது. காம்பவுண்டிற்கு வெளியே நண்பர்களுடன் கார் அருகே நின்றுக் கொண்டிருந்தான். சிறிய வயதில் பெரியப்பா என மடியில் கொஞ்சி விளையாடியவன். கையில் முறுக்கு செயினும், இருட்டில் மினுங்கும் சட்டையும் அணிந்திருந்தான். தாடியும், நீள கிறுதாவும் என வெளிநாட்டில் இருந்து வந்தவர்களுக்கான தோரணையோடு நின்றுக்கொண்டிருந்தான். சைக்கிளில் கவனிக்காதவாறு கடந்து சென்றார். ஆனால் இருட்டில் மின்னிய கை செயின் எத்தனை பவுன் என்பது ஜோஷிக்கு தெரியும்.

காலை கழுவிவிட்டு வீட்டின் உள்ளே நுழைந்தார். வெயிலில் உலர வைத்த சுக்கு மாங்காய் எடுக்கப்படாமல் இருந்தது. தஞ்சியோடு கொண்டு உள்ளே வைத்தார். தேங்காய்  குவித்துப்போடப்பட்டிருக்கும் அறையைத் திறந்து தேங்காய்களை எண்ணிப்போட்டார். மனைவி உறங்கி போயிருந்தாள். காலையில் சோறு கட்டுவதற்காக வாழை இலையை அடுத்த கண்டத்தில் ஏறி வெட்டோத்தியினால் வெட்டினார். மழை பெய்திருந்ததால் மண் ஈரமேறிப் போயிருந்தது. இருட்டில் கால் வைத்தபோது ரெண்டடி இடது கால் உள்ளே சென்றது. நீர்தொட்டிக்கு அருகே வந்து தொழியில் நீர் ஊற்றிவிட்டு உள்ளே வரும்போது அருகேயுள்ள வாழைத்தோப்பில் யாரோ நின்று பார்ப்பது போலிருந்தது. உடனே ஜன்னலில் இருந்த டார்ச் எடுத்து அடிக்கையில் கரியிலை அசைந்தது. யாருமில்லை. உள்ளே வந்து விளக்கணைத்தார்.

சாப்பிட மனமில்லை. நாளைக்கு மீன் வாங்கி பொரிச்சு சாப்பிடணும். மிளகு ரசம் வைக்க சொல்லலாம். அடுப்பங்கடைக்கு சென்று விளக்கைப் போட்டார். பூனை ஒன்று சுவர் மேலே ஏறி வெளிப்பக்கம் தாவியது. அஞ்சரைப் பெட்டியை திறந்தார். ரசம் வைப்பதற்கான பொருட்கள் இருக்கிறதா என்று பார்த்துக்கொண்டார். மீன்காரி காலையிலேயே கரைமடியை கொண்டு வருவது வாடிக்கை. விலைகுறைக்க மாட்டாள் எனினும் அவளிடமே வாங்கிக் கொள்ளலாம். ஒரு செம்பு நிறைய கிணற்று நீரை அள்ளிக்குடித்துவிட்டு விளக்கை அணைத்தார்.

3.

தங்கம் வழக்கம்போல பதினோரு மணிக்கு கடையை திறந்தார். கடையை சுத்தம் செய்துவிட்டு ஊதுவத்தி கொளுத்தி வைத்தபோது நேசமணி வந்திருந்தார்.

“வாரும் மச்சான்… இந்த சைட்லாம் வர தோணியிருக்கே…”

“உனக்கு விஷயம் தெரியும் இல்ல…”

“என்ன விஷயம்..?” சற்று குரலைத் தாழ்த்தி,

“நம்ம ஜோஷி செத்த விஷயம் தான்…”

அப்போது தான் மளிகை கடை திறக்காததும், அவரது குரல் கேட்காததும் உணர முடிந்தது. எதுவும் கேட்க முடியவில்லை. புரிந்துக் கொண்ட நேசமணியே.

“நாண்டுகிட்டு செத்துருக்கான்… வா… ஒண்ணு போய் பார்த்திட்டு வருவோம்”

“எத்தன மணிக்கு அடக்கம்…?”

“அந்திக்கு அஞ்சு மணிக்கு…”

“நீரு போவும் மச்சான், நான் அதுக்கு கணக்கு பண்ணி வரேன்…”

அவர் கிளம்பின பிறகு சாலையையே பார்த்துக்கொண்டிருந்தார். கரமடி மீன் கொண்டுவரும் மீன்காரி, மீன் அனைத்தையும் விற்றுக்கொண்டு, இடுப்பில் பணப்பையை குலுக்கியபடி கடந்து சென்றாள். அவள் எப்போதுமே மீன் பாத்திரத்தை கையால் பிடித்துக்கொண்டு நடப்பதில்லை. ஆனால் இன்று அப்படியில்லை. அத்தனையும் மாறியிருந்தது. உள்ளே சென்று பாட்டிலை எடுத்து தண்ணீர் குடித்தார். மாதா போட்டோவில் கொளுத்தி வைக்கப்பட்ட ஊதுவர்த்தியை எடுத்து, புகைந்துக்கொண்டிருந்த அதன்முனையில் நீரைதெளித்து அணைத்து குப்பைத் தொட்டியில் போட்டார். தூசி படிந்திருந்த டேப்ரெக்கார்டரை துணியால் துடைத்து ஆன் செய்து, ஒரு பழைய கேசட்டை போட்டார். சத்தம் கரகரத்தது. கீச்சிட்டது. பாடல் மட்டும் ஒலிக்கவில்லை. ஆனால் கேசட் சுற்றிக்கொண்டே இருந்தது. அது வாகனங்களின் சக்கரங்கள் போல் சுழன்றது.

முற்றும்

–சக.முத்துக்கண்ணன்.

“மு.ராசா யாரு?”

கை தூக்கினான்.

”நீ நாலாப்பு பெயில்றா இங்க வந்து நில்லு”

முதல் நாள் ப்ரேயரிலேயே பெரிய சார் பெயிலானவங்களைப்  பிரிச்சி நிக்க வச்சிட்டார். ராசா அப்படி தனியாப் போய் வராண்டாவில்  நின்றிருப்பதைத் திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே வந்தேன்.  அவனும், பாசாகி அஞ்சாப்பு போன வரிசையைப் பார்த்துக் கொண்டே நின்றிருந்தான். அவனோடு மூணு பேர் பெயில் லிஸ்ட்டில் நின்றிருந்ததாய் நினைவு. ஒவ்வொரு வருசமும் இப்படித்தான், வகுப்புக்கு நாலைந்து  நிற்க வைத்து விடுவார்கள். அப்படி நாலாப்பில் பெயிலாகி நின்றிருந்த மத்த பசங்களின் முகம் இப்போது எவ்வளவு யோசித்தும் ஞாபகத்துக்கு வரவில்லை. நிச்சயமா அப்ப யாருன்னு தெரிஞ்சே இருந்திருக்கும். சொல்லப் போனால் விளையாடும் போது அவிங்கள கிண்டல் கூட செய்திருப்பேன். ஆனா ராசா அப்படியில்லை. என் கூட்டுக்காரன். எப்ப விளையாடப் போனாலும் ஒண்ணாவே திரிவோம்.  மத்தியானம் சத்துணவு சாப்டதும் ஸ்கூல் கிட்ட இருக்க அழகர் சாமி கோயிலுக்கு  புல் ரவுண்டு விளையாடப் போவோம். பழங்காலத்துக் கோயில்; ஒசரமான கதவு போட்டு மூடியேருக்கும்.  கதவுக்கு எதுத்தாப்ல நீளமா நடை பாதை.  ரோட்டை முட்டுற எடத்து பாதை  நல்லா அகலங்சகலமா இருக்கும். ரோட்டோரம்  வடக்க ஐயர் வீடும், அதுக்கெதுத்தாப்ல கிரில் கேட் போட்ட ஒரு சத்திரமும் ஒசரமா நிக்கும். திசைக்கு ஒண்ணா நாலு வட்டம் போட்டு நாங்க நிக்க சமுக்கமான இடம். புல் ரவுண்டு  சுத்த லாயக்கான இடம்.

புல் ரவுண்டு என்பது பேஸ் பால் மாதிரித்தான். ஆனா பேட் மட்டும் இதில்  இருக்காது. கையமடக்கி வச்சித்தான் அடிக்கனும். அடித்த பந்தை எதிர் டீம் பொறுக்கி வந்து சேர்க்கும் வரை ரவுண்ட் அடிக்கலாம். கால் ரவுண்டு – அரை ரவுண்டு – முக்கா ரவுண்டு – முழு ரவுண்டு. ஒரே அடியில் முழு ரவுண்டும் அடித்தோமானால் நம்ம டீமில் அவுட்டான ஒருத்தனை உள்ள சேத்துக்கலாம். 

நான் அஞ்சாப்பு போன முதல் நாள் மதியம் வழக்கம் போல புல்ரவுண்டு விளையாடப் போனோம். ராசா நீலக்கலர் பந்து ஒண்ணு வச்சிருந்தான். அது வழுவழுன்னு தேஞ்சு போன பந்து. அப்படியிருக்கும் பந்துதான் எங்களுக்கு அடிச்சி விளையாட தோதா இருக்கும்.  கெட்டியாருக்க புதுப்பந்த அடிச்சா கை வலிக்கும். அந்த நீலப்பந்து, விரல வச்சு  அமுக்கினாலே உள்ள போகும். கைய மடக்கி வச்சு தைரியமா அடிக்கலாம். 

ராசா எங்க டீம். அடிச்சோம்; அன்னிக்கு புல்ரவுண்டா அடிச்சோம். ராசா என்ன விட ஒயரமானவன். அஞ்சு வெரலையும் மடக்கி,  கைய வெரப்பா வச்சு அடிச்சான்னா ஐயர் வீட்டு ஓட்டுக் கூரையைத் தாண்டும். நானும், அவனும் ஒண்ணா டீம்ல இருந்தா ஜெய்ப்பு நிச்சயம்.  அன்னன்னைக்கு மத்தியானத்த வச்சு தான் அந்த நாள் பூராம் சந்தோசமாருப்போம். புல்ரவுண்டு அடிச்சத , கேட்ச் புடிச்சத,  ஓடிவந்து வட்டத்துல கால வக்கிறங்குள்ள அவுட் ஆனத – என பேசிக்கொண்டே பொழுது கழியும். 

பொழுசாய ஸ்கூல் விட்டுப் போகும் போது நாலாப்புலர்ந்து வேமா எங்க வகுப்புக்கு வந்திட்டான். நானும் அவனும் ஒண்ணாச் சேந்து தான் வீட்டுக்குப்போவம். அவன் டவுசர் பாக்கெட்டில் போட்டு வைத்திருந்த பந்து முட்டையாய் எத்திக் கொண்டு  தெரிந்தது. நடந்து வரும்போதே எடுத்து மஞ்சள் பையில் போட்டுக் கொண்டான்.  ரெண்டுபேர் வீட்லயும் புதுப்பை எடுத்துத்தரலை.   நீல வார் போட்ட கவாய் செருப்பும், ஒரு யூனிபாமும்  புதுசு எடுத்துக் கொடுத்திருந்தார்கள். புஸ்தகம் கொடுக்க வரைக்கும் மஞ்சப் பையே போதுமென விட்டு விடுவார்கள்.  ஒரு சிலேட்டு, வாய்ப்பாடு, பாக்ஸ்டப்பா மட்டும் தானே. இன்னும் நாலு நாளைக்கு ஜாலியா இருக்கலாம். டீச்சர் வாய்பாடு மட்டும் தான் வீட்டுப்பாடம்  சொல்லுவாங்க.

“எலேய் கண்ணா எங்கப்பாட்ட சொல்லிறாதடா!”

“செரிடா..”

“புஸ்தகம் கொடுத்தா தெரிஞ்சுரும்ல டா”

“அப்ப அடிவாங்கிக்கிறேன்.” உதட்டைப் பிதுக்கிக் கொண்டான். 

வீட்டுக்குப் போனதும் மொத வேலையா வட வாங்கித்தின்ன அம்மாட்ட காசு வாங்கிருவேன். அவனும் வாங்கி வருவான்.  சேந்தே அழகர் கடையில் போய் சிய்யம் வாங்கித் தின்போம். 

அப்புறமா பந்தெடுத்துட்டு மணி மாமா வீட்டுக்கு போறது. எப்பவாச்சும் நாகராசும் கூட வருவான். பந்தை சுவரில் எறிந்து திரும்ப கைக்கு வரும் படி விளையாடுவோம். அப்படி பிடிக்காமல் விட்டால் அவுட்.  பிடிச்சிட்டா பாயிண்ட். அதிலும் ஒத்த கையில் பிடித்தால் டபுள் பாயிண்ட்.  ராசா மிஸ் ஆகாம கேட்ச் பிடிப்பான்; டபுள் பாயிண்டா அடிப்பான். பந்து கையில் இருந்தால் இப்படி புது புது ரூல்ஸ்சில் விளையாட்டு உருவாகும். மணி மாமா வீட்டுப் பின்பக்க சுவர் உயரமானது. அவன் தான் அங்கு கூட்டுப்போய்  அப்படி விளையாடப் பழக்கினான். ராசாவங்க அம்மா ஏதாச்சும் கடைக்கு போக, வைக்கன்னு அவனுக்கு வேல சொல்லிட்டா நாங்க போய் பந்து வாங்க நிப்போம். ராசா தரமாட்டான். என்னதான் கூட்டுக்காரன்னாலும் இந்த பந்து விசயத்துல மட்டும் ம்ம்கூம் தர மாட்டான். 

ஒவ்வொரு பள்ளிக்கூட நாளிலும்  எப்படா மத்தியானம் வரும்? என காத்திருப்போம். சாப்பாட்டு பெல் அடிச்சதும் டிபன் கொண்டு வந்திருக்க ஒருத்தன் போய் இடம் பிடிச்சு வச்சிருப்பான். கொஞ்சம் லேட்டா போயிட்டாலும் நாங்க விடுறதில்லை. அஞ்சாப்பு என்பதால் எங்க ராஜ்யம் தான்.  மத்தியானம் மத்தியானம் புல்ரவுண்ட் தான். அவனும் நானும் தான் நிறைய தடவ புல்ரவுண்ட் அடிச்சோம். சில சமயம் ஓங்கி அடிச்சா ஐயர் வீட்டு ஓட்டுக் கூரையில் போய் விழும். அவ்ளோ தூரத்துக்கு ராசா தான் அடிப்பான்.  ஒரு சில சமயம் நானும். அப்படி போன பந்து எப்படியும் உருண்டு தண்ணி வாட்டத் தகரத்துக்கு வந்திடும். ஒவ்வொரு வாட்டி தண்ணி வாட்ட தகரத்துலயே உருண்டு வந்து  கீழ விழாம எங்காவது ஒரு இடத்துல சிக்கி நின்னிரும். சத்திர வாசல் கிரில் கேட்டில் ஏறி மேக் கம்பில நின்னு பாத்தா பந்து எங்க நிக்கிதுன்னு தெரியும். அப்பிடி ஏறி கம்பில  நிக்கைல ஐயர் மட்டும் பாத்துட்டார்ன்னு வைங்க அம்புட்டுத்தான். ஒரு வாட்டி ராசா சிக்கி ஐயர்ட்ட கல்லெறி வாங்குனான். நாங்க தெரிச்சு ஓடி வந்திருக்கோம். ஆனா ஏறி பந்து இருக்க எடத்த மட்டும் பாத்துட்டா எடுக்கிறது ரொம்ப ஈசி.  நீட்டக் குச்சிய வச்சி  தண்ணிவாட்டத் தகரத்துல லேசா அந்த எடத்தத் தொட்டம்னாலே பந்து உருண்டு கீழ விழுந்திடும். அதுக்கின்னே நீட்டமான குச்சி ஒண்ண கோயிலுக்கு பின்னால ஒளிச்சி வச்சிருந்தோம். இந்த நீலப்பந்தும் ராசியான பந்து தான். பலதடவை அப்படி சிக்கி எங்க கைக்கு கெடச்சிருக்கு. 

புஸ்தகம் கொடுத்த அன்னிக்கு ராசாவுக்கு திக் திக்ன்னு இருந்திருக்கும். அவனுக்கு நாலாவது புஸ்தகம் பழசு இருக்கதால புதுசு கொடுக்க மாட்டாங்க. பெயில் ஆனவங்களுக்கு நோட்டு மட்டும்தான். அன்னிக்கு மத்தியானம் அவன் சரியாவே ஆடல. கடைசில ஒரே ஒரு புல்ரவுண்டு அடிச்சு டீம ஜெயிக்க வச்சிருந்தான். ஸ்கூல் விட்டதும் என்னோடு வந்தான். பந்து டவுசர் பாக்கெட்டில்  முட்டையா எத்திக்கிட்டு தெரிந்தது. 

‘எலேய் எங்கப்பா அடி நொக்கப் போறார்றா. பந்திருந்தா தூக்கி எறிஞ்சிருவாரு நீயே வச்சிரு. நாளைக்கு வர்றப்ப கொண்டு வா.’ உதட்டைப் பிதுக்கிக் கொண்டே பேசினான்.  

‘செரிடா’

சந்தோசமாய் வாங்கிக் கொண்டேன்.

எங்க வீட்டில் எம்புட்டுத்தான் கெஞ்சிக் கேட்டாலும் பந்து வாங்கித்தரப் போறதில்லை. கேட்டு பல முறை வாங்கிக் கட்டியதான் மிச்சம். ராசாவுக்கு ஐஸ்கூல் படிக்கிற  மாமா இருக்கார். அவரோட பந்த தேஞ்சதும் கொடுத்திடுவார். இப்படிக்கிப்படி எரவப் பந்து கிடச்சாத்தான். 

வடைக்கு அம்மாட்ட காசு வாங்கிட்டு வெளிய வந்தேன்.   இன்னிக்கு எப்படியும்    ராசாவங்கம்மா காசு தரப் போறதில்லை. இந்நேரம் அடிவிழுந்திட்டு இருக்கும். நான் மட்டும் அழகர் கடைக்கு போய் சிய்யம் வாங்கித் தின்னுட்டு  நீலப்பந்தை தரையில் எறிந்து எம்ப எம்ப பிடித்துக் கொண்டே ராசா வீட்டுக்கு  நடந்து போனேன். ஒரே  சத்தமாக இருந்தது. வாசப்படியில் அவங்கம்மாச்சி ரெண்டு காலையும் நீட்டி  உக்கார்ந்திருந்தது. என்னைப் பார்த்ததும்,

”எலேய் நீ பாஸா?”

”ம்ம்” தலையாட்டினேன்.

”அடியே லதா இங்காரு கண்ணெல்லாம் பாசாம். தெருவுல ஓம்மயன் மட்டுந்தென் பெயிலு. இவன் திங்கத்தாண்டி லாயக்கு”.  

உள்ளே திரும்பி கத்திச் சொன்னது. அவங்கப்பா கொல்லையிலிருந்து தலை துவட்டிக் கொண்டே வெளிய வந்தார். ஈர டவுசரில் நெஞ்சுபூராம் முடியோடு அப்படி வந்து  நின்றிருந்தவரை பாக்கவே பயமாக இருந்தது. 

”எலேய் நீ பாசா.. ?”

”ம்.” தலையாட்டினேன். 

”நம்ம தெருவுல வேறாரு பெயில்?” அதட்டலாய் கேட்டார்.

”வேறாருல்ல சித்தப்பா..”

சொல்லிக்கொண்டே பந்தை பின்பக்கமாக வைத்துக் கொண்டேன். 

கொஞ்ச நேரம் நிலைபடியிலேயே நின்றிருந்தார். உள்ளர்ந்து ராசா அழுகிற சத்தம் கேட்டது.. 

இவருக்கு என்ன கோவம் வந்திச்சோ? வேகமா குனிந்து வாசப்படியில் கிடந்த அவரோட செருப்பை எடுத்துக் கொண்டு ”அழுகாதறா அழுகாதறான்னு சொல்லிக்கிருக்கேன்.  வெண்ண. பிய்யத் தின்னாப்ல திங்கத் தெரிது. படிக்கத் தெர்ல”  அவங்கம்மா மறைக்க மறைக்க தள்ளிவிட்டு ஓடிய வேகத்தில் முதுகில்  அடித்தார். அவங்கம்மாச்சி எந்திருச்சு உள்ளே ஓடியது.  நான் அதண்டு போய் நின்னுருந்தேன். கொஞ்சம் தள்ளி வந்து உள்ளே போகாமல் சன்னல் வழியா பார்த்தேன். பொம்பளையாள் மறைக்க மறைக்க சடார் சடார் என அடி. அம்மாவோ அம்மாச்சியோதான் செருப்பைப் புடிங்கி கீழே போட்டார்கள். இவன் தப்பி வெளியில் ஓடிவரப் பாத்தான்.  குனிந்து செருப்பை எடுத்து நாக்கை மடக்கிக் கொண்டு  ஒரு எறி. செருப்பு வந்த வேகத்துக்கு ஒருச்சாய்த்திருந்த கதவில்  பட்டு வாசப்படியில் சட்டென விழுந்ததும் சில நொடிகள் அதன் வார் அதிர நடுங்கி நின்றது. அந்த கவாய் செருப்பில் பெருவிரல் பதியும் இடத்திலும், குதிபடும் இடத்திலும் சைடாக  தேஞ்சு உள்ளே இருக்க  நீலக்கலர் தெரிஞ்சது.

மெல்ல  நகர்ந்து நாகராசு வீட்டுக்கு ஓடினேன். ” லேய்.. லேய்..  ராசாவ அவங்கப்பா பின்னிப்புட்டார்றா.. செருப்பக் கொண்டியேவும்.. பாவம் டா அழுதுக்கிருக்கான் டா..”

அவனும், நானும் வந்து  வாசலை எட்டிப்பார்த்து விட்டு மணி மாமா வீட்டுக்குபோய்  பெரிய சுவற்றின் கீழ் உட்கார்ந்து நடந்ததை பேசிக் கொண்டிருந்தோம். நிமிர்ந்து பார்த்தேன். பந்து பட்ட தடங்கள் வட்டமும், அரைவட்டமுமாக சுவற்றில் தெரிந்தன. 

மறுநாள் காலையில் ஸ்கூலுக்கு கிளம்பும்போது வாசலில் நின்று எட்டிப் பார்த்தேன்.  எப்போதும் எட்டு மணிக்கெல்லாம் வந்து வாசலில் நிற்பவன் ஆளைக்காணாம். எங்கப்பா புதுப்பை தச்சு வச்சிருந்தார். எடுத்து தோளில் போட்டுக் கொண்டு வெளியில் வந்து ராசா வீட்டைத் திரும்பிப் பார்த்தேன். வார் அதிர செருப்பு வந்து விழுந்தது ஞாபகம் வந்தது. அவனைக் கூப்பிடப் போனால் வைவார்களோ? பயமாக இருந்தது. பள்ளிக்கூடம் வந்து விட்டேன். அவனில்லாட்டியும் புல்ரவுண்டு விளாட ஆசை. பந்து என்ட்டதானே இருக்கு. இருந்தும் போக வில்லை. நம்ம பாட்டுக்கு ஓங்கியடிக்க ஐயர் வீட்டுத் தகரத்தில் மாட்டிக்கிச்சின்னா.. நம்மகிட்ட பந்த கேப்பானே..  ஏற்கனவே ஒருவாட்டி அவன் பம்பரகட்டையைத்  தொலச்சு அவங்கம்மாச்சிக்கும் எங்கம்மாவுக்கும் சண்ட வந்திருந்தது.  அதான் நாகாராசோட மதில்ல எறிஞ்சு விளாட தனியாப்  போயிட்டேன். .

அடுத்தடுத்த நாளும் ராசா வரவில்லை.  மூணாவது  நாள் காலையில் நான் பையோடு  வீட்டிலிருந்து இறங்கும் போது ராசா அவங்கப்பாவோடு நடந்து போய்க் கொண்டிருந்தான். அவர் மட்டக்கம்பையும், பூச்சுக்கரண்டியையும் கையில் வைத்திருந்தார். இவன் ஓஸ்சை சுருட்டி கையில் பிடித்திருந்தான். இந்த ஓஸ்சையும் தூக்கு குண்டையும் வைத்து அவங்க வீட்டில் விளையாடி இருக்கிறோம். முதலில் தூக்கு குண்டை பம்பரம் என நினைத்து எடுத்து வந்து விளாண்டோம். அவங்கப்பா வந்து வெளுத்து விட்டார். நானும் ரெண்டு மொத்து வாங்குனேன். இப்போ அதையே பிடித்துப்போகிறான். அவன் என்னை கவனிக்க வில்லை. நேத்து ராத்திரி அம்மா  சொன்னது உண்மைதானா

“ராசா அவங்கப்பா கூட வேலைக்கு போறானாம்டா”

டவுசர் பாக்கெட்டில் முட்டையாய் எத்திக் கொண்டிருந்த நீலப்பந்தைத் தொட்டுப் பார்த்துக் கொண்டேன். 

*****

பின்பக்கம் கொட்டி வைத்திருந்த செங்கல் குவியலிலிருந்து ஒரு செங்கலை மட்டும் தூக்கிக் கொண்டு போய் வேலைத்தளத்தில் போட்டு வரணும். அப்படி போடும் போது செங்கல்  உடஞ்சிறாம பொறுமையாப் போடனும். அம்பது கல் எடுத்துப் போட்டால் ரெண்டு புரோட்டாவுக்கு காசு கொடுத்து அனுப்பி விடுவார்கள். அவங்கப்பாவும் ஒண்ணும் சொல்ல மாட்டார். அப்பல்லாம் புரோட்டான்னா எங்களுக்கு உசிரு. அதுவும் பாண்டியன் கட புரோட்டான்னா சொல்லவே வேணாம்.  அதுக்காகவே ராசா சொன்ன வேலையைச் செய்தான். ஒரே விசையில் ரெண்டு செங்கலைத் தூக்கி நடக்க இன்னொரு சித்தாள் பழகிக் கொடுத்தார். (கொத்தனார் வேலையில் சித்தாள், நிமிந்தாள் என்பது ஜூனியர், சீனியருக்கு ஒப்பானது.)

பக்கத்திலிருந்த  திண்ணையில் சீனாச்சட்டியை வைத்து முதலில் ஒரு கல் அப்புறம் ஒரு கல் என ரெண்டு செங்கல் எடுத்து வைத்து தோள்பட்டை உயரத்திலிருக்கும் அத்திண்ணையிலிருந்து ஈசியாக தலைக்குத் தூக்கிக்கலாம். அம்பது நடை போக வேண்டியிருந்ததை இருபத்தைந்தாக முடித்து சீக்கரம் புரோட்டா காசோடு வீட்டுக்கு வந்திடலாம். 

அவன் சாப்ட்டு நேரா ஸ்கூலுக்குத்தான் வருவான். அந்நேரம் சாப்பாட்டுப் பெல் முடிஞ்சி நாங்க பூராம் உள்ளே போயிருப்போம். கொஞ்சம் முந்தி வந்திருந்தா புல்ரவுண்டு விளாடிருக்கலாம். பெரும்பாலும் அவன் வர்ற நேரத்துக்கு பெல் அடிச்சுருக்கும். ஸ்கூல் கேட்டிலேயே நின்னு பாத்துட்ருப்பான். பெரிய சார் அந்த பக்கமா வந்தா,  ஒரே ஓட்டம் தான். அப்படியே அழகர்சாமி கோயிலில் கொஞ்ச நேரம் சுற்றி விட்டு இன்டர்வல் பெல் சத்தம் கேட்டு ஓடிவருவான். நாங்க ஒண்ணுக்கு இருக்க வெளிய தான் வருவோம். பார்த்து பந்தை வாங்கிக் கொள்வான்.  ஒருத்தனா எப்படி புல் ரவுண்டு விளையாட? அவனாக பந்தை எறிந்தும் பிடித்தும் விளையாடுவான் போல.  சாந்தரம்  எங்களோடு சேர்ந்து வீட்டுக்கு வருவான். போகப்போக அவனாக விளையாடப் பிடிக்கவும் இல்லை. சாந்தரம் போகும் போது கூட இவனை பார்த்து, நாளைக்கு பெரியசாரிடம் சொல்லப் போவதாக பசங்க சொன்னதும் பயந்துவிட்டான். அப்புறம் சீக்கிரம் வேலை முடிந்தாலும் ஸ்கூலுக்கு வருவதில்லை.   வேறெங்காவது சுத்திக் கொண்டு திரிவான். ஸ்கூலைக் கடந்து கிழக்கே  இருக்கும் சுடுகாட்டுத் தெருப்பக்கம் போகக் கூடாதென ஒருமுறை எங்களை வீட்டில் கண்டித்திருக்கிறார்கள். அவன் போக ஆரம்பித்தான். அங்குதான் காசு வச்சி லாக் விளையாடுவார்கள். பெரிய பசங்களோடு சேர்ந்து பழகினான்.  மேற்குத் தெரு ரமேஸ் அண்ணனோடு சேர்ந்து மீன்புடிக்க போனான். வீட்டுக்கு கொண்டு வந்தா ஆத்துக்கு ஏன்டா போனன்னு அடி விழும். ஒரு நாள் சாந்தரம் நானும் அவனும் மதன் வீட்டில் போய் மூணு கெண்டையைக் கொடுத்து விட்டு வந்தோம். மதனோட அப்பா இவனுக்கு ஒர்ருவா கொடுத்தார். ரெண்டு பேரும் போளி வாங்கித் தின்னோம். டவுசர் பாக்கெட்டில் இருந்த பந்தை எடுத்து தரையில் எறிந்து எம்ப எம்ப பிடித்துக் கொண்டே வந்தேன். அவன் கைக்கு தூக்கி போட்ட போது  ஒத்தை கையில் பிடிக்க வந்தவன் தவறி கீழே விட்டான். அது உருண்டு அந்த பக்கம் போன போது கூட அவன் கண்டுக்கவில்லை. நான் தான் ஓடிப்போய் எடுத்து வந்தேன். 

ராசா இனி  ஸ்கூல் பக்கம் வரப்போவதில்லை என்று தெரிந்த பிறகு புல்ரவுண்டு விளையாட இடம் பிடித்தோம். அடிச்சேன்; ஆச தீர அடி; கைய வெறப்பா வச்சு ஓங்கி ஓங்கி அடி; நீலப்பந்து அந்த வாக்குல பறந்தது. தண்ணி வாட்டத் தகரத்தில் சிக்கி, நீட்டக் குச்சி வச்சி தட்டி எடுத்தோம். தொலையவில்லை ; ராசியான பந்து. 

சாய்ந்தரம் வீட்டுக்குப் போய் சேரும் போது தெருச்சனமே ராசா வீட்டில் கூடி இருந்தது. மணி மாமா தான் சொன்னார், “ராசா ஆத்துக்கு குளிக்க போயி சகதில சிக்கிச் செத்துப் போனான்டா..”. ஓடிப்போய் கூட்டத்தில் நுழைந்து உள்ளே எட்டிப் பார்த்தேன். தரையில் மல்லாக்க கிடந்தான். பல் தெரியும்படி வாய்திறந்தே இருந்தது. யூனிபாமோடு இருந்த என்னை ராசாவங்கம்மா  இழுத்து தோளில் சாய்த்துக் கொண்டு அழவும் கூட்டம் கே..ன்னு சேர்ந்தழ அந்நிமிட ஓல அதிர்வில்  நடுங்கி, பயந்து நானும் அழுதேன். 

“ஸ்கூலுக்கு போயிருந்தா உசுரோடயாவது இருந்திப்பியே..யய்யா..  இப்டி ஒன்ன பெயிலாக்கி கொன்னு போட்டாய்ங்களே..யெய்யா..” அவங்கம்மாச்சி ஒப்பாரி வைத்தது. யாரோ என்னைத் தோள்பட்டையைப் பிடித்து பின்பக்கமாக இழுத்தார்கள்.  தேமிக் கொண்டே கூட்டத்திலிருந்து விடுபட்டு பின்னுக்கு வந்தேன். என் சித்தி தான் அப்படி  வம்படியாய் இழுத்துக் கொண்டு வந்தது. ராசாவை மாலைகட்டி தூக்கிப் போகும் போது அப்பாவின் விரலைப் பிடித்துக் கொண்டு நானும் போட்டிருந்த யூனிபார்மோடு நடந்து போனேன். எங்க ஸ்கூல் கேட்டைக் கடக்கும் போது ஞாபகம் வந்து பார்த்துக் கொண்டேன். என் டவுசர்  பாக்கெட்டில் இருந்த ராசாவின் பந்து, முட்டையாக எத்திக் கொண்டு தெரிந்தது. 

முற்றும்

–கார்த்திக் பிரகாசம்

“இந்த நாள் இந்தளவிற்கு ஈவிரக்கம் இல்லாமல் விடிந்துவிட்டதே”

இறுதித் துடிப்பை இன்றே எட்டிவிடும் உத்வேகத்தில் இதயம் உதறித் துடிக்கிறது. தாங்கவொண்ணா சுமையை வேகநேரம் தூக்கிச் சுமந்திருந்து இறக்கியது போல் கை கால்கள் நடுங்குகின்றன. வியர்வைத் துளிகள் வேர்த்து விறுவிறுவென்று உடல் முழுதும் விரவுகின்றன. உட்கார முடியவில்லை.

அரை மணி நேரத்திற்கு முன்பு தான் ஜிலேபி ரமேஷ் போன் போட்டு சொன்னான்.

“சங்கர் செத்துட்டான்”என்று..

இன்று விடிந்ததே இவ்வுலகில் சங்கரின் இருப்பை இன்றோடு விலக்கிக் கொள்ள தானா. இதற்கு விடியாமலே இருந்திருக்கலாமே..

‘ஏதோ பொண்ணு விஷயம் போலடா. வீட்லயே தூக்கு மாட்டிக்கிட்டான். கூடவே இருந்த எங்கிட்ட கூட சொல்லாம விட்டுட்டான் பாரேன். தங்கச்சியும் அம்மாவும் கதறாங்க. அவங்க மூஞ்சில முழிக்க முடியலடா. ‘ஏப்பா ரமேஷூ. உன்னோட தான எம் மவன் எப்பவும் சுத்திக்கிட்டு இருப்பான். என்னப்பா ஆச்சு’ன்னு அம்மா கேக்றாங்க. எனக்கு என்ன சொல்றதுன்னே புரியலடா. நடுத்தெருவே சங்கர் வீட்டு முன்னாடி கூடி நின்னு அழுதுட்டு இருக்கு. பாக்கவே கஷ்டமா இருக்கு மச்சான். நீ உடனே கெளம்பி வா’ மேற்கொண்டு எதுவும் பேச முடியாமல் கண்ணீரில் சொத சொதவென நனைந்திருந்த குரலில் சொல்லி போனைக் கட் செய்துவிட்டான்.

பிரியமானவர்களின் மரணத்தின் போது நமக்கும் ஒரு தற்காலிக மரணம் நிகழ்கிறது. யார் சொல்லி காலம் நிற்கப் போகிறது. புலம்பும் மனமே சமாதானத்தைத் தந்து மீண்டும் புதிதாய் புலம்பியது. ஈரம் சொட்டும் கிழங்கு திப்பியாய் நசநசவென ஒட்டி வழுக்கியவாறிருந்த சிந்தனையில் உறைந்தபடி அமர்ந்துவிட்டேன்.

மணி ஐந்து நாற்பத்தைந்து. உடனடியாகக் கிளம்ப வேண்டும். ஆறரை மணிக்கு கோவை எக்ஸ்பிரஸை பிடித்தால் பணிரெண்டு மணிக்குள் சேலம் போய்ச் சேர்ந்துவிடலாம்.

எந்த நாள் கிழமையானலும் கூட்டத்திற்கு குறைவே இருப்பதில்லை இந்த இரயிலில். பெரும்பாலான காலை நேரக் கூட்டமெல்லாம் அரக்கோணம் காட்பாடி கூட்டம் தான். அதன் பிறகு ஓரளவிற்கு கூட்டம் குறைந்துவிடும். சந்தைக் கடை போல ஒரே இரைச்சல். படிக்கட்டின் பக்கத்திலேயே நின்றுக் கொண்டேன். தூரத்து வானத்தில் பறக்கும் பெயர் தெரியா பறவைகளும், விதவையைப் போல தனித்து விடப்பட்ட மரங்களும், பெயருக்கு மட்டும் நீரை வைத்திருக்கும் ஆறுகளும் தெளிவாய் தெரிவதற்காக கண்ணாடியை மாட்டிக் கொண்டேன். பின்னோக்கிச் செல்பவையெல்லாம் அதனுடனே சேர்த்து என்னையும் இழுத்துச் சென்றன. காலச் சக்கரமும் நினைவுகளில் எப்போதும் உயிர்ப்புடன் இருக்கும் இறந்தகாலத்திற்குள் சுழன்றது.

‘ஓட்ட பள்ளிக்கூடம்’ என்று உள்ளூர் வட்டாரங்களில் அழைக்கப்படும் ‘மாநகராட்சி நடுநிலை பள்ளி’யில் தான் சங்கரும் நானும் இரண்டாவது முதல் ஏழாவது வரை படித்தோம். என்னுடைய வளரிளம் பருவத்தை முழுவதுமாக ஆக்கிரமித்திருக்கும் சங்கரின் நட்பு எப்படி அறிமுகமானது என்று கொஞ்சமும் என் நினைவில் இல்லை.சங்கருக்கு ஒரு அண்ணண் ஒரு தங்கை. அண்ணண் படிக்கவில்லை. தங்கை அதே பள்ளியில் படித்தாள். என் தங்கையும் சங்கரின் தங்கையும் ஒரே வகுப்பு. எங்களைப் போலவே அவர்களுக்குள்ளும் நட்பானது நிறைந்திருந்தது. ஔவையார் தெருவிற்கு அடுத்த நடுத் தெருவின் கடைசி மூலையில் ஏழ்மையின் அடையாளமாக சங்கரின் வீடு இருக்கும். இப்போது நினைத்து பார்த்தால் அப்பாவின் குடிப்பழக்கம் சிறுவயதிலேயே அவனை வெகுவாக பாதித்திருந்தது புரிகிறது. சங்கரின் அப்பா பூவேலை செய்பவர். மாரியம்மன் காளியம்மன் கோவில் பண்டிகைகளின் போது அம்மனை ஊர்வலமாகக் கொண்டு வரும் தேரின் பூ அலங்காரங்களை அவரும் அவருடைய சகாக்களும் மற்றும் சங்கரின் அண்ணணும் செய்வார்கள். விடிய விடிய நடக்கும் அந்த வேலை. சங்கரும் நானும் உளுத்தங் கஞ்சிக் குடித்துக் கொண்டு கோவில் வளாகத்திலேயே சுத்தி இருப்போம். அவ்வப்போது சங்கரின் அப்பா குரல் கொடுப்பார். அவனும் நானும் ஓடுவோம். சிறுசிறு மூங்கில் குச்சிகளில் கட்டப்பட்டிருக்கும் கோழிக்கொண்டை பூக்களைத் தூக்கிக் குடுப்போம். அவர் அதை மெலிசாக வளைத்து தேரின் மேல் வைக்க மூங்கில் வாழை மரம் மற்றும் காதித அட்டைகளால் வடிவாக அமைக்கப்பட்டிருக்கும் அலங்காரத்தில் அழகாகச் செருகி இறுதி வடிவம் கொடுப்பார். பசை தடவப்பட்ட காகித அட்டைகளில் ஏற்கனவே உதிர்ந்து வைக்கப்பட்டிருக்கும் பூக்களை ஒட்டுவோம். வேலை முடிந்து சங்கரின் வீட்டிலேயே தூங்கி விடுவேன். எப்போது உறங்கினோம் என்றே நினைவில் இருக்காது. காலையில் எழும்போது சங்கரின் அப்பா போதையில் எல்லாரையும் கெட்ட கெட்ட வார்த்தைகளில் திட்டிக் கொண்டிருப்பார். நான் விழித்ததைப் பார்த்ததும் நீ வீட்டிற்குக் கிளம்பு என்று அவசரப்படுத்தி அனுப்பி விடுவான்.

எத்தனையோ முறை அவன் வீட்டில் தங்கியிருக்கிறேன். சாப்பிட்டிருக்கிறேன். உண்மையாகச் சொல்ல வேண்டுமானால் அவன் வீட்டில் முழு உரிமை எடுத்துக் கொள்ளும் சூழ்நிலையை எனக்கு உருவாக்கிக் கொடுத்திருந்தான். ஆனால் அதை போன்றதொரு நிலையை என் வீட்டில் அவனுக்கு நான் உண்டாக்கித் தர தவறிவிட்டேன் என்பதை ஒத்துக் கொண்டே ஆக வேண்டும். ஏன் என்றுத் தெரியவில்லை. ஒருவேளை அப்பாவின் கண்டிப்பும் அதனால் எப்போதுமே என் மனதில் உறைந்துப் போயிருந்த பயமும் ஒரு காரணமாக இருக்கலாம். அவன் வீட்டில் நான் தங்கிய அளவிற்கு என் வீட்டிற்கு அவன் வந்ததில்லை. நானும் அழைத்திருக்கிறேனே தவிர வற்புறுத்தியதில்லை. ஒருவேளை அன்று நான் வற்புறுத்தி இருந்திருந்தால், ‘சங்கர் இறந்துவிட்டான்’ என்றுச் சொல்லும் போது எந்த சங்கரென்று என் அம்மா இன்று கேட்டிருக்கமாட்டார்.

அரக்கோணத்தில் பெருங்கூட்டமொன்று இறங்கியதும் படிக்கட்டில் இடம் கிடைத்தது. வீட்டு வாசற்படியில் உட்காருவது போல் வசமாக அமர்ந்துக் கொண்டேன்.

எங்கள் இருவருக்கும் நெருக்கமான நண்பன் அப்பு. ஏனோ அவனுக்கு எங்களின் மீது அவ்வளவு பாசம். அந்நாட்களில் எங்களுக்கு தீனிப் பஞ்சம் இல்லாமல் இருந்தது அப்புவால் தான்.டீச்சர் அவனை டீ வாங்கி வர அனுப்பும் போதெல்லாம் வடை போண்டா பலகாரங்களின் தூள்களைப் பேப்பரில் கட்டியெடுத்து வந்துத் தருவான். அருமையாக இருக்கும். பலகாரத்தை விட அதன் தூள்களே சுவையானவை என்றுத் தோன்றும். மேலும் ஒண்ணுக்கு பெல் அடிக்கும் போது கட்டில் கடை பாட்டியிடம் மாங்கா, வெடாங்கா, இலந்த வட, தேங்கா பர்பி என்று தினமும் ஏதாவது வாங்கித் தருவான். அப்போதே அவன் அந்த பாட்டியிடம் அக்கௌன்ட் வைத்திருந்தான்.

அப்புவிற்கு இடது விழி மையத்திலிருந்து விலகி சற்று ஓரமாக இருக்கும். மேல் வகுப்பு மாணவர்கள் எதற்கோ அவனை ‘டோரி’ என்றுக் கிண்டலடித்து விட்டனர். அதை அப்பு சொன்னது தான் தாமதம். மதிய ஒண்ணுக்கு பெல்லின் போது அவர்களோடு சண்டை போட்டு உருண்டுவிட்டோம். சங்கர் இரண்டு மூன்று பேரை அடித்தான். ஒரு குண்டனின் மீது ஏறி குத்து குத்தென்று குத்தினான். இவன்தான் அப்புவை டோரி என்று முதலில் சொல்லியிருக்கிறான். அதன்பின்னரே மற்றவர்களும் கூட்டுச் சேர்ந்திருக்கின்றனர்.அந்தக் குண்டன் அடுத்த நாள் பள்ளிக்கே வரவில்லை. அப்புவிற்கு இவ்வளவு தான் என்று இல்லை சந்தோஷம். சாயந்தரம் ஆளுக்கொரு ‘லவ் ஓ’ வாங்கிக் கொடுத்து எதையோ சாதித்த திருப்தியில் சிரித்த முகத்துடன் வீட்டிற்குச் சென்றான்.

அடுத்த நாள் ஏழாம் வகுப்பிற்கு குரூப் போட்டோ எடுப்பதாக ஹெட் மாஸ்டர் சொல்லி இருந்தார். ஆதலால் அப்பவும் நானும் ஈர முகத்தில் பவுடர் பூசி, முதுகிலும் கொஞ்சம் பவுடர் தெளித்து, நெற்றியில் விபூதி அடித்து, சட்டை பாக்கெட்டில் ரெனால்ஸ் பேனா வைத்து சீக்கிரமாகப் பள்ளிக்குச் சென்று சங்கருக்காக காத்திருந்தோம். போட்டோ எடுக்க நேரம் நெருங்கிக் கொண்டே இருந்தது. போட்டோ ஷாப்பில் இருந்து வந்திருந்தவர்கள் தங்கள் கருவி மற்றும் உபகரணங்களை பொருத்திக் கொண்டிருந்தனர். மற்ற மாணவர்களெல்லாம் போட்டோ எடுக்கப் போகும் குஷியில் இருந்தனர். அவர்களும் சீவி சிங்காரித்து அந்த நிமிடத்துக்காக காத்திருந்தனர். எங்களுக்கோ சங்கர் இன்னும் வரவில்லையே என்ற கவலை. ஒருவேளை சங்கர் இல்லாமலே போட்டோ எடுத்துவிடுவார்களோ. நானும் அப்புவும் சிவகாமி டீச்சரிடம் சென்று, ‘சங்கர் இன்னும் வரவில்லை. நாங்கள் போய் கூட்டி வருகிறோம்’ என்றோம். நீங்களும் போயிடு வராம இருக்கவா. அதெல்லாம் ஒண்ணும் வேணாம். நேத்தே சொல்லி தானா விட்டாங்க. பரவால்ல. இருக்குறவங்க மட்டும் மரத்துக்குக் கீழ போட்ருக்க பெஞ்சுல போய் உட்காருங்க’ என்று கண்டித்து அதட்டினார்.

நாங்கள் ஒண்ணுக்கு போவது போல பாத்ரூம்க்கு நழுவி விட்டோம். எல்லாரையும் உயரப்படி வரிசையாக நிற்க வைத்துக் கொண்டிருந்தார் சிவகாமி டீச்சர். நைசாக எட்டி பார்த்து காம்பௌண்ட் கேட்டை திறந்து வெளிய சென்றோம். அடித்த பவுடர்லாம் வியர்வையில் நனைந்து பிசுபிசுவென்று ஒழுக சங்கரின் வீட்டை நோக்கி நடந்தோடினோம். திரௌபதி அம்மா கோவில் பக்கத்தில் செல்லும் போது சங்கரே எதிரில் வந்தான். எதுவும் பேசாமல் ஆளுக்கொரு கையால் அவனை இழுத்துக் கொண்டு பள்ளிக்குச் சென்றோம். சிவகாமி டீச்சர் சிடுசிடு முகத்துடன் எங்களை நோக்கியிருந்தார். எங்கள் மூவரையும் பார்த்ததும் கோபத்தில் கத்தினார். போதா குறைக்கு கருப்புக் குடையுடன் போட்டோ எடுக்க காத்திருந்தவரும் – அந்த ஆள் வேறு பார்ப்பதற்கு ரெஸ்லிங்லில் வரும் ரிகிஷி போல குண்டாக – பார்வையிலேயே பயந்தொடுக்கிவிட செய்பவராக – கண்டபடி திட்டினார். உயரமாக இருப்பதால் சங்கரை பின் வரிசையில் நிற்க வைத்தார் டீச்சர். நான் டீச்சரின் பக்கத்தில் அமர்ந்தும், அப்பு இரண்டாம் வரிசையில் நின்றும்,

கண்ண மூடமா எல்லாரும் கேமராவ பாருங்க…

ஸ்மைல்… ஸ்மைல்…

‘கிளிக்’ சத்தம். மீண்டும் ஒரு ‘கிளிக்’ சத்தம்.

முடிஞ்சது. எல்லோரும் வகுப்பிற்குச் சென்றோம்

பின்பு சாவாசமாக ‘ஏன்டா லேட்டு’ என்று சங்கரிடம் விசாரித்தோம்.

“சாயந்தரம் வீட்டுக்குப் போய் தான்டா பாத்தேன். நேத்து போட்ட சண்டைல பாக்கெட்டுக்குக் கீழ சட்ட கிழிஞ்சிருக்கு. இருக்கிறது இந்த ஒரு யூனிபார்ம் தான். லேட்டா வந்தா போட்டோ எடுத்து முடிச்சிருவாங்க அப்டியே கிளாஸ்ல ஒக்கந்தாரலாம்னு நெனச்சேன்”

அன்று அதன்பின் நாங்கள் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. அடுத்தநாள் ஒரு வெள்ளைச் சட்டையை வீட்டிற்குத் தெரியாமல் எடுத்துவந்து சங்கருக்கு கொடுத்தான் அப்பு. சங்கர் நெகிழ்ந்து விட்டான். சங்கரின் அந்த முகம் அப்படியே நெஞ்சில் பதிந்துவிட்டது. அன்று முழுவதும் நான் சங்கருடனோ அப்புவிடமோ பேசவே இல்லை.

சங்கருக்கு சட்டை கொடுக்க வேண்டுமென்று எனக்குத் தோன்றவில்லையே’ அழுகைத் தொண்டையை அடைத்து நின்றது.

அந்தப் போட்டோ இன்னமும் என்னிடம் இருக்கிறது. இடது பாக்கெட்டின் கீழ் குறுக்காக இரு கைகளையும் மடித்தவாறு சங்கர் நிற்பான். ஒல்லியான தேகம் என்றாலும் வசீகரமானவன்.

எங்கள் பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை மட்டுமே இருந்தது. எட்டாவது முடிந்ததும் நான் வேறு பள்ளிக்குச் சென்றுவிட்டேன். படிப்பு ஏறாததால் அப்புவும், வசதி இல்லாததால் சங்கரும் படிப்பை அத்தோடு நிறுத்திவிட்டார்கள். பள்ளிக்கு பக்கத்திலிருந்த மெக்கானிக் ஷெட்டிலேயே அப்பு வேலைக்குச் சேர்ந்துவிட்டான். அப்பாவோடு பூக்கடைக்குச் சென்றான் சங்கர்.

அதன்பின் வார இறுதி நாட்களில் மட்டுமே அவர்களைக் காண முடியும். அதுவும் முதலாளி விடமாட்டார் என்பதனால் அப்பு ஊர் சுத்த வரமாட்டான். நானும் சங்கரும் மட்டும் ஞாயிற்றுக்கிழமையானால் நண்டு பிடிக்கப் போவோம். சங்கருக்கு நீச்சல் தெரியும். கிணற்றில் உள் நீச்சல் கூட போடுவான். நான் பயத்தில் தண்ணீரில் இறங்கியதே இல்லை. கை, கால்களை நனைத்துக் கொள்வதோடு சரி.

நின்றிருந்த கூட்டமெல்லாம் காட்பாடியில் இறங்கியது. ஆங்காங்கே ஓரிரு இருக்கைகள் கூட காலியாக இருந்தன. அதென்னவோ கிடைக்காத போது இருக்கும் ஏக்கம், அதுவே காலம் தாழ்ந்து கிடைக்கையில் அர்த்தமில்லாமல் போகிறது. படிக்கட்டிலேயே அமர்ந்து விட்டேன்.

வண்டி நகர்வதற்கும் போன் அடிப்பதற்கும் சரியாக இருந்தது.

‘விஷயம் தெரியும்ல. கெளம்பிட்டியா’

‘தெரியும் மோகா. ரமேஷ் சொன்னான். காட்பாடி தாண்டிட்டேன்’

‘நானும் ஓசூர் வந்துட்டேன். நீ சீக்கிரம் வா’

‘சரி என்னதான்டா ஆச்சு. உனக்கு ஏதாவது தெரியுமா’

“ஜாதிப் பிரச்சனைன்னு பேசிக்குறாங்கடா. பாவி பய நம்மகிட்டே எதுவுமே சொல்லலையே. அக்கம் பக்கத்துல போலீஸ் விசாரிச்சுட்டு இருக்காங்கலாம் ரமேஷ் சொன்னான்……”

சிக்னல் கிடைக்காமல் கட் ஆகிவிட்டது.

காற்று வேகமாக அடித்தது. தட்டு தடுமாறி போனைப் பாண்ட் பாக்கெட்டில் வைத்தேன்.

மூன்று வருடத்திற்கு முன்பு என் காதல் விஷயத்தைச் சொன்ன போது சங்கர் கேட்டான்,

‘என்ன சொல்றாங்க அந்தப் பொண்ணு வீட்ல’

“நமக்கும் அவங்களுக்கும் சேராது. நாம வேற ஆளுங்க அவங்க வேற ஆளுங்க. அந்தப் பையன மறந்துரு நாங்க நம்ம ஜாதில இருக்குற நல்ல பையனா பாத்துக் கல்யாணம் பண்ணிவைக்கிறேன்னு சொல்லிருக்காங்க. அவளும் எனக்கு ஜாதிலாம் முக்கியம் இல்ல. அவன்தான் எனக்கு வேணும். கல்யாணம் பண்ணா அவனதான் பண்ணுவேன். இல்லனா செத்துருவேன்னு சொல்லிருக்கா. அதுக்கு அவங்க, ‘அந்த’ ஜாதிக்காரன கல்யாணம் பண்ணி, எங்கள சந்தி சிரிக்க வெச்சி, நம்ம சாதிசனத்து முன்னாடி இத்தன நாளா நாங்க கட்டிக் காப்பாத்துன குடும்ப மானத்த வாங்கறதுக்கு நீ செத்துத் தொலையறதே மேல்னு சொல்லிருக்காங்க”

‘ஜாதியா.! மசுருக்கு லாயக்கில்லாத ஒரு கருமத்த எதுக்கு இந்த மனுஷனுங்க மண்டைல ஏத்திக்கிட்டு சுத்துறானுங்க தெரில’

‘விடுடா.. அவவன் கௌரவம் அவவனுக்கு முக்கியம்’. நான் சொன்னேன்.

‘மயிரு இதுல கௌரவம் எங்க இருந்துடா வந்துச்சி. பொண்ணுக்குப் புடிச்ச பையனக் கட்டி வைக்கிறது தான் பெத்தவங்களுக்குக் கௌரவம். அதைவிட்டுட்டு ஜாதி சடங்கு சம்பிரதாயம் மதம் மண்ணாங்கட்டினுட்டு. மொத்தத்துல இவனுங்களும் சந்தோசமா இருக்கமாட்டாங்க நம்மளையும் சந்தோசமா வாழ விடமாட்டனுங்க. பாக்குற வரைக்கும் பாரு இல்லனா ரெஜிஸ்டர் ஆபீஸ் போய் செலவுக் கிலவு இல்லாம அமைதியா கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோசமா குடும்பம் நடத்துற வேலைய பாரு’

‘பெத்தவங்க இல்லாம எப்புடி கல்யாணம் பண்றதுனு அந்தப் பொண்ணு யோசிக்கிறா சங்கரு’

ஜாதிய கட்டியழற பெத்தவங்கள வச்சிக்கிட்டு வேற என்னடா பண்ண முடியும். நாமளா அவங்கள ஜாதி பாக்கச் சொன்னோம். இல்ல நான் தெரியாம கேக்றேன்.

“ஒருத்தனோட பீய்ய பாத்து அவன் இன்ன ஜாதின்னு சொல்ல முடியுமா.? இல்ல அந்த நாத்தத வச்சி.? முடியாதுல. எந்த ஜாதி பீய்யா இருந்தாலும் நாறதான செய்யும். அத புரிஞ்சிக்காம என் ஜாதி பீ தான் ஒசந்த பீ. என் ஜாதி பீ தான் ஒசந்த பீன்னு ஊரெல்லாம் கத்தி மூஞ்சில பூசிக்கிட்டு சுத்துவாய்ங்களா.. இவனுங்க உடம்பெல்லாம் பூசிக்கிறது மட்டுமில்லாம நமக்கும் பூசிவிட பாக்குறானுங்க”சங்கர் கொதித்தான்.

அன்று ஜாதி உணர்வை எதிர்த்து கொதித்தெழுந்த சங்கரா இப்போது ஜாதி பிரச்சனையால் தற்கொலை செய்துக் கொண்டான். அதிர்ச்சியாக இருக்கிறது.

ஜோலார்பேட்டைக்குள் நுழைந்து விட்டது ரயில்.

இன்னும் ஒன்றரை மணிநேரத்தில் சேலம் ஜங்ஷன் வந்துவிடும்.

போன முறை சேலம் போய் கொண்டிருக்கும் போது ஜோலார்பேட்டையை கடக்கையில்தான் சங்கர் போன் செய்தான்.

‘சொல்லு சங்கரு’

‘எங்கடா இருக்க’

‘தோ… ஜோலார்பேட்டைல இருக்கேன். இன்னும் ஒன்றரை மணி நேரத்துல வந்துருவேன்டா.’

நான் ஜங்ஷன் வந்து பிக்கப் பண்ணிக்கிறேன்.

‘பிக்கப் பண்ணிக்கிறியா.. எப்பிடிடா. வண்டி வாங்கிட்டியா’

‘ஆமாடா.. ஆட்டோ வாங்கிருக்கேன். லோன்ல’

‘செமடா சங்கரு’

‘சரி சரி வா. நான் வெயிட் பண்றேன்’

அன்று அவனை ஜங்ஷனில் ஆட்டோவுடன் பார்க்கும் போது எனக்கு உண்டான சந்தோஷம், நான் எதையோ என் வாழ்வில் சாதித்தது போலிருந்தது. டிரைவர் சீட்டிலேயே அவனோடு உட்கார வைத்துக் கொண்டான். ஐந்து ரோடு, குரங்கு சாவடி, ராமகிருஷ்ணா பார்க் எல்லாம் சுற்றி ஒரு ரவுண்டு அடித்து வீட்டில் விட்டான்.

‘காசு குடுத்தேன். எவ்வளவு சொல்லியும் மறுத்தான். என் பாக்கெட்டிலேயே திணித்துச் சென்றுவிட்டான்’

“சேலம் ஜங்ஷன் உங்களை அன்புடன் வரவேற்கிறது”என்று மூன்று மொழிகளில் கம்ப்யூட்டர் குரல் எந்தவித உணர்ச்சியும் இல்லாமல் கரகரக்கிறது. எப்போதும் ஊருக்கு வந்திறங்கும் போது இருக்கும் பூரிப்பும் சந்தோஷமும் இந்தமுறை இல்லை.

கண்ணீரைத் துடைத்துக் கொண்டு ரயிலில் இருந்து இறங்கினேன்.

ஊரில் வந்திறங்கும் போது உண்டாகும் ஆனந்தத்தில் ஒரு துளிக் கூட இல்லை. ஏன் வந்தோம் என்று மனம் கிடந்து உலாத்துகிறது. அடுத்த அடி எடுத்து வைக்க கால்கள் தயங்குகின்றன. நிலையில் இல்லாமல் கண்ணீரைத் துடைக்கவும் திராணி இல்லாமல் கைகள் செயலற்றுத் தொங்குகின்றன. அந்த ஆவின் பாலகத்தில் தான் நானும் சங்கரும் ‘டீ’குடிப்போம். அவன் படிக்கவில்லை என்றாலும் ஊருக்கு வந்து போகும் போதெல்லாம் எனக்கு ஏதாவது புத்தகம் வாங்கித் தருவான். அலமாரியில் இருப்பதில் நான் வாங்கிய புத்தகங்களை விட அவன் வாங்கி தந்த புத்தகங்களே அதிகம்.

நடுத் தெருவில் எல்லோரும் கூட்டம் கூட்டமாக ஆங்காங்கே நின்று அழுதவாறு இருந்தனர். சங்கரின் சொந்தங்களாக இருக்கக் கூடும். கால்களை யாரோ கயிறு கட்டி பின்னே இழுப்பது போல நடுங்கித் தயங்கின.

வீட்டு வாசலில் பெருங்கூட்டம். ஒதுக்கிக் கொண்டு உள்ளே போனேன்.

சங்கரை தரையில் கிடத்தியிருக்கிறார்கள். உயிர் இல்லாதது போலவே இல்லை. இப்போதும் அதே வசீகரம்.

முற்றும்.