நாம தினமும் பாக்குற சமையல்காரங்களோட தினசரி வாழ்க்கைச் சம்பவங்களையும் சங்கடங்களையும் உள்ளது உள்ளபடி பேசும் நாவல் குதிப்பி.. குதிப்பிங்கிறது வட்டகையில சோறு கிண்டிவிடுற பெரிய கரண்டி. பக்கத்திலேயே இருந்தும் பாக்காம இருக்கோம்.. கிட்டத்திலேயே இருந்தும் புரிஞ்சுக்காம இருக்கோம்கிற மாதிரி உணர வைக்குற கதை. கலங்க வைக்குது.

கதை முழுசும் தேனி தான். தேனிக்காரங்க பேச்சுதான். படிக்கப் படிக்கப் பக்கத்து கடையில் உட்கார்ந்து பேசுறதும் தெருவுல நடக்குறதும் வார்த்தைகள்ல வர்ற மாதிரி இருக்கு. அக்கம்பக்கத்துல் பேசுறது மொத்தமும் காதுல விழுந்துக்கிட்டே தானே இருக்கு. காது நம்மகிட்ட கேட்டுக்கிட்டா கேக்குது? அச்சு அசல் பேச்சு மொழி. நாவல் முழுக்க நம்ம தெருக்காரங்க தான் பேசுறாங்க. படிக்கும் போதே கண்ணுக்குள்ள படமா ஓடுது. நம்ம மக்களுக்கே உரிய அந்த நக்கல், நையாண்டி, திமிரு, தெனாவட்டு, சண்டியர்த்தனம் எல்லாம் அங்கங்க.. அப்படியப்படியே இருக்குது..

சேது, சாரதி, வளர்மதி, கடைக்காரரு, பாக்கியம், அக்காண்டிப் பெரியம்மா, ஆண்டாளு, வாசு, சண்முகம் தோழர், வசந்தி, சரவணன், முஜிபூர், ரமேஷ், துரைப்பாண்டி, கவுண்டரம்மா, சின்னக்காளை, நாயுடு டாக்டரு – இவங்க தான் முக்கியக் கதாபாத்திரங்கள். கடைக்காரரு வச்சிருக்கிற பாத்திரங்களும் கதையில வர்ற பாத்திரங்கள் தான். குறிப்பாக சாரதி குடும்பத்தைச் சுற்றிச் சுழல்கிறது கதை. மொத்தத்தில பாத்திரங்களும் பாத்திரங்களைக் கையாளுகிற ஆளுகளும்தான் நாவலின் முக்கியக் கதாபாத்திரங்கள் அனைவரும். கதையில வர்ற கடைக்காரருக்கு ரோட்டுல ஆளு கிடந்தாலும் சரி பாத்திரம் கிடந்தாலும் சரி ஒரே பதறல்தான்.

தனிப்பட்ட முறையில் எனக்கும் சமையல்காரங்களுக்கும் மறக்க முடியாத சம்பவம் ஒண்ணு இருக்கு. போன வருசம் தை மாசம் குழந்தைகளுக்கு காதுகுத்து வச்சிருந்தோம். காதுகுத்து வச்சுருக்கோம்னு தான் பத்திரிகையிலேயே போட்டிருந்தேன். வாத்தியார்கள் தொடர்ந்து வேலைநிறுத்தம், போலீசு ஒருபக்கம் திடீர் திடீர்னு சங்கத்து ஆளுகள அரஸ்ட் பண்ணுறது என பரபரப்பா இருந்த சமயம். இப்படியெல்லாம் ஆகும்னு நமக்கென்னா தெரியும். விசேஷ வீட்டை விட்டுப்புட்டு கம்பத்தில் போயி ஒரு கடையில ஒளிஞ்சு படுக்க வேண்டியதாயிடுச்சு. அதிலயும் சிறப்பான சம்பவம்கிறது விசேஷம் அன்னைக்கு மதியம் தான். மதியச் சாப்பாடு செய்ஞ்சு வச்சிட்டு, மூணாறு போயிட்டு அப்படியே இங்க வந்துட்டோம்ணே செத்த நேரம் சாய்ஞ்சுட்டு இந்தா வந்திர்றோம்னு சொல்லிட்டு போன சமையல் ஆளுகளுக்கு மூனு நாலு மணிக்கு போனடிச்சா அதே ஆளுங்க தான் பேசுறாங்க. ஆனா வேற வேற ஆளாப் பேசுறாங்க. சரக்கு உள்ள போயிடுச்சு. மக்கள் மண்டபத்துக்கு அதிகமாக வரக்கூடிய நேரம், சாப்பாடு, மத்த அயிட்டங்கள் பற்றாக்குறை ஆயிடுச்சு. அப்புறம் நாகராசு மாமா புண்ணியத்துல சமாளிச்சோம்னு வைங்க. அப்புறம் ஆறு, ஏழு மணிக்கு மேல குளிச்சு பட்டையும் கிட்டையுமா நம்மாளுக வந்தாங்க.. எங்க அம்மாவுக்கு வந்துச்சே கோபம்.. போட்டபோடுல ஒரே ஓட்டம் தான். ரொம்பப் படுத்தி எடுத்திட்டாங்க அன்னைக்கு. நாகராசு மாமா மட்டும் இல்லைன்னா ரொம்ப சங்கடமாயிருக்கும்.

ஆனா, தோழர் காமுத்துரை அவர்களின் இந்த நாவலைப் படிக்கும் போது தான் தெரியுது சமையல் ஆட்களோடு ஒவ்வொரு நாப்பொழுதும் அப்படித்தான் தொடங்குது. அப்படித்தான் முடியுது. அட்வான்ஸ்ங்கிற பேர்ல வாங்குறதும் குடி, மிச்சப் பணமும் குடி.. ரெண்டுக்கும் இடையில் அலுப்பில்லாம வேலை செய்யுறோம்கிற பேர்ல கொஞ்சம் குடி.. ஆக மொத்தம் நெருப்பில உழைச்சு வேகுற மனுசங்க காசு எதுவும் வீடு போயிச் சேர்றது இல்ல. வீட்டுல இவங்கள நம்பிக் கெடக்குற பொண்டாட்டி, புள்ளைங்க நிலைமை தான் ரொம்பக் கஷ்டம். மொத்த ஒழப்பையும் குடிச்சி அழிக்கிற பொழப்பா மாறிப்போச்சு. குடியில இருந்து மீளவும் முடியாம விடவும் முடியாம தவிக்கிற தவிப்பா இருக்கு விளிம்பு நிலை மக்களோட பொழப்பு.

அல்லி நகரத்துல ஒரு லாரிக்காரர் வீட்டுல வேலபேசப் போயி முஜிபூரும் ரமேஷும் பேசும் பேச்சுக்கள். அவரு நான் ஓனரே இல்லையேங்கிறதும், நான் சரக்கு தான் ஏத்திட்டுப் போவேன், ஆளுகள ஏத்தினதே கிடையாதுங்கிறதும் முஜிபூர் சொன்ன பேச்சை மாத்தாம ஊண்டி அடிக்கிறதும் கலக்கல்..

வேலை பேச போகும் முன்னாடி முஜிபூரத் தேடிக் கண்டுபிடிச்ச ரமேஷ் ஒரு பீடி ஓசி கேட்க, இந்த வெளக்கெண்ணைக்குத்தேந் தேடுனியாக்கும்னு முஜிபூர் பொங்குவது..

நீ வந்தா மட்டும் போதும்ணே.. நாலே நாலு அயிட்டம்னு சொல்லி பாண்டி கோயிலுக்கு கூப்பிட்டுக்குப் போயிட்டு பார்ட்டிக்காரன் கொடுக்கிற இம்சையும் ஒரு கட்டத்துக்கு மேல ரொம்பக் கடுப்பான சேது ம்ம் சொல்லு சாயங்காலத்துக்கு என்ன செய்யலாம். இட்லி, தோசை.. மல்லிச் சட்னி, தேங்காய்ச் சட்னி.. தக்காளிச் சட்னி.. அப்புறம் மறுநாள் காலைக்கு… இப்படியே அவனுக்கு சேர்ந்தாப்ல பேசி, கடைசில, “ஆமாப்பா.. எங்கய்யனும் ஆத்தாளும் ஒனக்கும் ஒங் குடும்பத்துக்கும் தொண்டூழியம் செய்யத்தான பெத்துப் போட்டிருக்காக.. வெக்கமில்லாம புருசனும் பொண்டாட்டியும் பேசறீக பாரு.. கோயில் தளத்துக்கு வந்தா ஒண்ணு ரெண்டு கூடமாட ஆகும். செய்யுறம்னம். இப்ப நீ வீட்டுக்கு கொண்டு போயி திங்கிறதுக்கும் ஆக்கித் தரணுமாக்கும்.. வேலைக்காரன்னா அம்புட்டு எளக்காரம்..? சேவலத் தூக்கிட்டு ஓடிப்போயிரு.. இல்ல.. ஒண்ணொண்ணா எடுத்துக் காக்காய்க்கு அன்ன மாறிருவே.. ஆமா..!” எனக் கொதிப்பது யதார்த்தமான பதிவு. அந்த அத்தியாயம் முழுக்க திரும்பத் திரும்ப படிக்கலாம்.

சாரதிக்கும் வளர்மதிக்குமிடையிலான கூடல், கொஞ்சல்… புதுமணத் தம்பதிகளான வாசு, ஆண்டாளின் தேக்கடிப் பயணம், கொஞ்சல்கள், தழுவல், உரசல்கள் எல்லாம் கேமரா ஒளிப்பதிவு போல காட்சிகளை கண்ணுக்குள் கொண்டு வருகிறது..

சீசன் இல்லாத நேரங்களில் சபரிமலைக்கு டீ விற்கச் செல்லும் சமையல் வேலைக்காரர்கள் போலீசிடம் சிக்கி சின்னாபின்னமாகி வருகிற சம்பவங்கள் கேட்கப் புதிது. வலி பெரிது.

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழான்னு சொல்லி ஆள் திரட்டுவது, ஆம்பளைக்கு முன்னூறு ரூவாயும் குவார்ட்டரும் பிரியாணியும் பொம்பளைக்கு இருநூறுன்னு சொல்லி ஆளுங்கட்சிகள் ஆள் திரட்டுவதும் ஊசிப்போன புளிச்சாதம் கொடுப்பதும் அசல் பதிவுகள்.. அன்னைக்கு நான் கூட முகநூல்ல பதிவு போட்டுருந்தேன்.. அப்பப்பா என்னா மழை.. என்னா மழைன்னு.. ஆமா, மழைன்னு சொல்லி மாவட்டம் முழுக்க பள்ளிக்கூடத்துக்கு லீவு விட்டுட்டு பள்ளிக்கூடத்து பஸ் எல்லாம் பொதுக்கூட்டத்துக்கு ஆளேத்தப் போயிடுச்சு. “இங்க அவகவக பகுமானத்தக் காமிக்கக் கூட்டியிருக்காக இதுனால ஒனக்கோ ஒம்புள்ளைக்கோ பிரயோசனமிருக்கா?” என்கிற அக்காண்டிப் பெரியம்மாவின் கேள்வி மிக நியாயமானது.

வீரபாண்டித் திருவிழாவுக்கு நடிகை கே.ஆர்.விஜயா வர்றது சம்பந்தமாக நான் சின்னப்புள்ளையில இருந்து கேள்விப்பட்டிருக்கேன். கதையில பொருத்தமா வச்சிருக்காரு. பொதுவா கோயில் திருவிழாக்களுக்குப் போறதே இல்ல. இத்தனை வருசத்துல ரெண்டு தடவ தான் வீரபாண்டிக்குப் போயிருக்கேன். ஆனா, கதையில வர்ற இந்த தீப்பெட்டி சீனு பற்றி கேள்விப்பட்டதில்ல. விவரம் பத்தாதுணு நினைக்கிறேன். வெளிச்சத்துல நூறு தொழிலு நடக்குதுனா இருட்டுக்குள்ளயும் நடந்துக்கிட்டுதான் இருக்குது. முப்பது ரூவாய்க்கு மூனு தீக்குச்சி.. விதிமுறைகள் வேற. தீக்குச்சி அணையுறதுக்குள்ள பாத்துக்க வேண்டியது தான். அந்தப் பத்து ரூவாய்க்கு தன் உடலை நிர்வாணமாக் காட்டுற நிலையிலயும் பொம்பளைக இருக்காங்களான்னு ஆச்சரியமா தான் இருக்கு. இது மட்டுமில்லாம திருட்டு, பாலியல் தொழில், அங்கிட்டும் இங்கிட்டும் நடந்துகிட்டு தடவுறது, தழுவுறது எல்லாம் திருவிழாவின் இன்னொரு பக்கமாக நடந்துகிட்டு தான் இருக்குது.

குடிச்சுக் குடிச்சு தங்களோட உடம்பையும் குடும்பத்தையும் அழிச்சுக்கிற சமையக்காரங்களை ஒருங்கிணைச்சு சங்கம் கட்டிவிட போராடுகிற சண்முகம் தோழர் நம்ம கூடவே நிக்கிற மாதிரி இருக்கு. சேது, சாரதியோட சமையல் வேல செய்யுற பாக்கியம் மகள் வசந்தி. படிப்புல கெட்டிக்காரி.. டாக்டர் ஆவது இலட்சியம்னு படிக்கிற பொண்ணு நீட் பரிட்சையில தோல்வியடையுறதும். தற்கொலை செய்ஞ்சுக்குவாளோன்னு தாய் பதறுவதும்.. திணிக்காதே.. திணிக்காதே.. நீட் தேர்வைத் திணிக்காதே.. தரம் உயர்த்து.. தரம் உயர்த்து.. தமிழ்வழிக்கல்வியைத் தரம் உயர்த்துனு மாணவர்கள் போராடுவதும் நிகழ்காலம்.. “தமிழகத்தில் டீக்கடை வைத்திருந்த பன்னீர்ச்செல்வம் முதல்வர் ஆகிறார். குஜராத்தில் டூ விற்ற மோடி பிரதமராகிறார். ஆனால் பிளஸ்டூவில் 1200க்கு 1184 பெற்ற எங்களது சகோதரி அனிதா நீட் தேர்வில் தோற்றுப் போகிறாள். இது யாருடைய சதி.. எங்களுக்கு அளிக்கப்பட்ட கல்வியிலிருந்து , கல்வி முறையிலிருந்து தேர்வினை வைக்க வேண்டும்.. எனது தாய்மொழியே பயிற்று மொழி ஆக்கப்பட வேண்டும்” என்கிற மாணவர்களின் முழக்கங்கள் நம்பிக்கையூட்டும் எதிர்காலம். இந்தப் போராட்டத்தை எதிர்புறம் இருக்கிற மண்டபத்தில் இருந்து பார்க்கிற சமையல்காரர்கள் தங்களுக்கும் சங்கம் கண்டிப்பாக வேண்டும் என்று பேசிக்கொள்வது சண்முகம் தோழரின் விடாமுயற்சிக்கு கிடைத்த வெற்றி என்று தான் சொல்ல வேண்டும்.

ஒரு இடத்தில் கடைக்காரரின் ஒரு நாள் ஷெட்யூல் வருகிறது. ஆத்தாடி, படிச்சதும் தான் கடைக்காரரின் கன்னப் பளபளப்புக்கு காரணம் தெரியுது.. நீங்களும் படிச்சுப் பாருங்க.. “எழுந்ததும் பல்தேய்த்துவிட்டு காலைக்கடன் கழிப்பார். காப்பி தயாரானதும் காலைச் செய்திகளோடு காப்பியைக் குடித்துவிட்டு, பத்துப் பதினைந்து நிமிடம் வாசிப்பு அல்லது டி.வி.பார்த்தல், காப்பி வயிற்றில் காணாமல் போனதும் குளியலறை. அது முடிந்ததும் தலை துவட்டிய துண்டை இடுப்பில் கட்டினபடியே ஒரு நாள் விட்டு ஒருநாள் விட்டு ஒருநாள் மொட்டை மாடியில் முகச்சவரம். வாரத்தில் ஒருநாள் மீசையும் புருவமும் கத்தரிக்கப்படும்.. அப்படியே இறங்கி வந்து உடைமாற்றிக் கிளம்ப எட்டு முப்பது ஆகி விடும். பத்து மணிக்கு காலைச் சாப்பாடு கடைக்கு வரும். மதியமும் இரவும் வீட்டில் வந்து சாப்பிடுவார்.”

சின்னக்காளை தன் பொண்டாட்டி செத்துப் போச்சுன்னு வந்து நிக்கிறப்ப, நம்மளயும் கூட கொஞ்சம் கோபிக்கத்தான் வைக்கிறாரு கடைக்காரர். நாய்க்கு ரொம்பவே பயப்படுவார்னு தெரியுது.

க்காளக்க… வக்காளி, தாயளி – இதுபோல இன்னும் நிறைய வார்த்தைகள் பல இடங்களில் வருகிறது. மாமன், மச்சான்களோட பேசும் போது நூத்துக்கு தொண்ணூறு தடவை பயன்படுத்துவார்கள்.. அதை அப்படியே கையாண்டிருக்கிறார் தோழர் காமுத்துரை.. பல இடங்களில் அவரே கத்தரி போட்டிருக்கிறார்.. பீப் சவுண்ட்..

ஆன மேலதே ஏறுவேன்னா அந்தளவுக்கு நம்மகிட்ட அய்வேசு வேணும்ல.. ஆமா திங்க வேண்டீதே தீனி.. மானங்கெட்ட தீனி.. ஒரு பீடு எடுத்தால் ஓசிப் பீடியும் செலவாகுமே.. வெறகு வச்சு எரிச்சாலும் கேஸ்ல வச்சு எரிச்சாலும், ஏன் கரண்டு அடுப்பே வச்சு எரிச்சாலும் வேக்காடு சட்டிக்குத் தான்.. படப்போட மேஞ்ச மாடுகள உருவிப்போட்டுத் திங்கச்சொன்னா காணுமா.. என மக்கள் போகிற போக்கில் பயன்படுத்தும் சொலவடைகள், பழமொழிகள் ரசிக்கவும் ருசிக்கவுமானவை..

உடல்நிலை சரியில்லாமல் போன சாரதி, தனக்குப் பதிலாக தனது மனைவியை சமையல் வேலைக்கு அனுப்புவதும் அதிகாலை நாலு மணிக்கு எழுந்து போன சாரதி மனைவியைப் பதற்றமாகத் தேடுவதும் குப்பென வியர்த்து நிற்பதும் அதனைத் தொடர்ந்து டீக்கடையில் முனியாண்டியும் ரமேஷும் பேசும் பேச்சுகளும் என பாவம் அந்தச் சம்பவத்தின் தொடர்ச்சியாகவே இறந்தும் போகிறான்..

குடிகாரச் சமையல்காரர்கள் என்ற நிலையிலிருந்து கேட்டரிங் படித்த சமையல்காரனாகிறான் சாரதியின் மகன் சரவணன். பலருக்கும் தொழில் கற்றுக் கொடுத்த சேது சரவணனையும் அரவணைக்கிறான். அன்றைய தினம், ஆர்வமிகுதி சரவணனுக்கு ஆபத்தை வரவழைக்குது. சாதம் வேகும் வட்டகை சரவணன் மேல் சரிகிறது.. அடித்துப் பிடித்துத் தூக்கிக் கொண்டு ஆட்டோவில் ஏற்றிச் செல்கிறார்கள்.. வலியில் மயங்கிய சரவணன் விழித்துப் பார்க்கையில் வலி தெரியாமல் இருக்க கொஞ்சம் குடிச்சுக்கோன்னு குவார்ட்டர் பாட்டிலை நீட்டுகிறான் கோயிந்தன்.. சரவணன் கண்களில் தன் அப்பனின் குடியால் வாழ்வில் நொந்து நொந்து நூலாகிப் போன வளர்மதி தெரிகிறாள்..

இந்த கொரானா முழுமுடக்கத்தின் முதலில் படித்த நாவல் தோழர் காமுத்துரை அவர்கள் எழுதிய குதிப்பி தான். தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நடத்தி வருகிற கம்பம் சந்திப்பு இணையவழி நிகழ்வில் முதல் நூலாய் அறிமுகம் செய்யத் திட்டமிட்டதும் இந்த நூல் தான். 2019ஆம் ஆண்டின் இறுதியில் பிரபஞ்சன் நினைவுப் பரிசு பெற்ற இந்நாவலை டிஸ்கவரி புக் பேலஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

விளிம்பு நிலை மக்களின் வாழ்வை அவர்கள் உடனிருந்து தன் கேமராக் கண்களால் பதிவு செய்து தனக்கே உரிய பாணியில் மண்ணின் மொழியில் மக்களின் மொழியில் வழங்கியுள்ளார். நம் அருகிலேயே வாழும் மக்களின் வாழ்க்கையின் துயரங்களையும் இன்னல்களையும் கிண்டிக் கிண்டி, கண்டும் காணாமல் இயல்பாகக் கடந்து செல்லும் கண்களுக்கு காணத் தருகிறது இந்தக் குதிப்பி.. வாங்கிப் படியுங்கள்.. உங்கள் தெரு மக்களோடு இந்தப் புத்தகத்தின் வழியாக வாழுங்கள்.. இங்கு தனிமனித இடைவெளியெல்லாம் தேவையில்லை.

————————————————————————————————————————————————————————————-

வெளியீடு: டிஸ்கவரி புக் பேலஸ்
சென்னை- 600078
தொடர்புக்கு: 044 48557525, 8754507070

விமர்சகர்
தேனி சுந்தர்
94880 11128

சரவணன் சந்திரன்

தொலைக்காட்சித் துறையில் இருந்தபோது, ஒரு நிகழ்ச்சி செய்யவேண்டுமெனத் திட்டமிட்டிருந்தேன். எந்தக் கணம், என்னை அடியோடு மாற்றியது? என்கிற அடிப்படைக் கேள்வியை எழுப்புவதே அந்நிகழ்ச்சி. உதாரணமாக, சில கதைகளையும் மேலதிகாரிகளுக்குக் கொடுத்திருந்தேன். வழக்கம்போல அது, இன்னொரு மேஜைக்கு நகரவில்லை. பல இடங்களில் கடைவிரித்தும் கொள்வாரில்லை என்பதால் அம்முயற்சியைக் கைவிடவும் செய்தேன். அது நடந்து மாமாங்க காலமும் ஆகிவிட்டது. இப்போதெல்லாம் நேற்று அடித்த சதத்தைக்கூட இன்றைக்கு ஞாபகம் வைத்திருப்பதில்லை. இன்றைக்கு எத்தனை ரன் அடித்தாய் என்ற கேள்வி ஓடுகிற எல்லைக்கோட்டிற்குள் துரத்துகிறது. அடிக்கிற காலத்தில் எகிறி அடித்துவிட வேண்டுமென்பதையும் நினைவில்கொள்ளுங்கள். பந்து நமக்குச் சாதகமாக எழும்புகிறதா என்பதையும் உற்றுக் கவனிக்கவேண்டும். அப்போதுதான் கோட்டைத் தாண்டி அது வெளியே போகவும்செய்யும். மொத்தத்தில், நாமெல்லாம் கையடக்கப் பந்துகளே. ஓங்கி ஒரு மோதிரக் கையால் அடிபட்டால் 180 மீட்டர் உயரத்திற்குப் பறக்கவும் செய்யலாம், யார் கண்டது?

இப்போது அதில் ஒரு கதை ஞாபகத்திற்கு வருகிறது. அரிசியில் கல்லைத் தேடுவதைப் போல அதில் தரவுகளைத் தேடாதீர்கள். அந்தக் கதையின் ஆன்மாவை மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள். நட்சத்திர ஹோட்டலொன்றுக்கு ஒரு தகப்பனும் தாயும் மகளும் போகிறார்கள். தாய்க்கும் தந்தைக்குமிடையில் சண்டை இன்னொரு மேஜையில் உக்கிரமாக நடக்கிறது. இருவரும் பிரிவதற்காக அங்கே வந்திருக்கிறார்கள். சிக்கலில்லாமல் சொத்துகளைப் பிரித்துக்கொள்வதற்காக அடித்துக் கொண்டிருந்தார்கள். ஒருகட்டத்தில், ஆளை வைத்து உன்னைக் கொலை செய்துவிடுவேன் என்றெல்லாம் தடித்த வார்த்தைகள் வந்து விழுந்தன. இதையெல்லாம் தூரத்திலிருந்த இன்னொரு மேஜையில் அமர்ந்து பத்து வயதுச் சிறுமி மஃபின் கடித்தபடி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.

அப்போதுதான் முதல் குண்டு அந்த வளாகத்திற்குள் வெடித்தது. சுதாரித்து மனிதர்கள் சிதறி ஓடினார்கள். மேஜைக்குக் கீழே பதுங்கி அமர்ந்தார்கள். கணவனும் மனைவியும் தூரத்தில் மேய்ந்துகொண்டிருந்த தன்னுடைய குஞ்சையும் வாரிச் சேர்த்தணைத்து அந்த மேஜைக்கு அடியில் உயிரைக் கையில் பிடித்து அமர்ந்திருந்தார்கள். அந்தக் கணத்தில் அவர்கள் இருவரும் சேர்ந்து வாழவேண்டுமெனத் தீர்மானித்தார்கள். அந்தக் கணம், இந்தக் கணம் என்கிறார்களே! அது எவ்வளவு அடர்த்தியானது தெரியுமா?

விளையாட்டாக, ஒருதடவை அந்தக் கணம் என்றால் என்ன என்பதை விரட்டிப் போய்ப் பார்த்தேன். அடுத்த நாள் காலையில் மிகச்சரியாக பத்து ஐம்பதிற்கு ஒரு வேலையைச் செய்யவேண்டுமெனத் திட்டமிட்டேன். காலை எழுந்ததுமே பதற்றம் தொற்றிக்கொண்டது. ஒன்பது அம்பதா? எனக் குழப்பம் வந்தது. நினைவை விரட்டிப் பிடித்து இல்லையென உறுதி செய்துகொண்டேன். மறந்துவிடுவேன் என நினைத்து பத்து மணிக்கெல்லாம் வேப்ப மரத்தடியில் கட்டிலைப் போட்டு அமர்ந்துவிட்டேன். நான் வளர்க்கிற வெள்ளாடுகளுக்கு மேரி பிஸ்கெட் போட்டு நேரத்தைப் போக்கினேன். இடையில் வந்த தொலைபேசி அழைப்புகளை வேகவேகமாகத் துண்டித்தேன். பத்து ஐம்பதிலேயே இருந்தது குறி.

பத்து நாப்பது வரை எந்தப் பிரச்சினையுமில்லை. அடுத்த பத்து நிமிடங்களைக் கடந்ததை விவரித்தால் இன்னொரு அத்தியாயம் எழுதவேண்டும். அப்படியெல்லாம் எழுதுவதற்கு எனக்கு விருப்பமே இருப்பதில்லை. ஒரே தாவலில் ஓடையைத் தாவிக் குதித்துவிட வேண்டும் என்று நினைக்கிறவன். ஆனால் அப்போது நொடிகளின் வேகத்திற்குக் கட்டுப்பட்டிருந்தேன். ஒவ்வொரு நொடியும் எவ்வளவு நீளமானது என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்தேன்.

பத்து நாப்பத்தொன்பது வரும்போது தொலைபேசியில் அந்த எண்களையே பார்த்துக் கொண்டிருந்தேன். எப்போது வரும் ஐம்பது? சீரான மூச்சுச் சத்தம் மட்டுமே கேட்டது. என்னைச் சுற்றி என்ன நடக்கிறது? என்பது உறைக்கவில்லை. அது ஒருமாதிரியான கனவுநிலை. ஆழ்ந்த அமைதியில் இருந்தேன். பத்து ஐம்பது ஆனபோது, அந்த வேலையைச் செய்தபோது கிடைத்த திருப்திக்கு அளவேயில்லை. நிதானமாகப் பிறகு நிறைய அதைப் பற்றி யோசித்துப் பார்த்தேன்.

ஒரு பப்ஸைக் கூட கையில் ஏந்த முடியாமல் கைகள் நடுங்குகிறவனாக இருந்த நான், எப்படி பதற்றமற்றவனாக மாறிப்போனேன்? இப்போதும் பதற்றம் வருகிறது. ஆனால் பதற்றம் அதுதான் என்பதைக் கண்டுபிடித்த சிலநிமிடங்களில் அதைக் கடக்கவும் முயல்கிறேன். என்ன ஆனது எனக்குள்? அப்போதுதான் என்னுடைய பால்ய நண்பரொருத்தர் பல வருடங்களுக்குப்பிறகு என்னைப் பார்க்க வந்திருந்தார். போராளியாக இருக்கும் எங்களுடைய இன்னொரு நண்பர் குறித்துப் இருவரும் பொதுவாக பேசிக்கொண்டோம். பெயரெல்லாம் வேண்டாமென்று தோன்றுகிறது. அவருடைய உயிருக்கு அடுத்த நிமிடத்தில்கூட உத்தரவாதம் இல்லை என்கிற நிலையில் நடமாடிக் கொண்டிருக்கிறார். “ஆனா, நான் பாத்தேன் சரவணா. அவன்ட்ட துளிப் பதட்டம் இல்ல” என்றார், என்னுடைய நண்பர். அதற்கான காரணமும் அவருக்குத் தெரிந்தேயிருந்தது. உளவியலை பாடமாக எடுத்துப் படித்தவரும்கூட. அவரே அதற்கான பதிலையும் எங்களுடைய பால்ய மொழியில் சொன்னார். “அவன் கிடைக்கிற ஒவ்வொரு நாளையும் போனஸா பாக்க ஆரம்பிச்சிட்டான்” என்றார். எத்தனை சத்தியமான  வார்த்தைகள்?

வெற்றி என்றால் என்னவென்று, முகத்திற்கு நேராக என்னிடம் ஒருமுறை கேள்வியொன்று வந்து விழுந்தது. அடுத்த நாள் காலையில் உயிரோடு இருப்பது என உடனடியாகவே பதிலளித்தேன். நம்புவதற்குச் சங்கடமாக இருக்கும். ஆனால் அதுதான் முகத்திலடிக்கிற உண்மை. அந்தப் போராளியின் ஒருநாள் அடர்த்தியான வாழ்க்கையும்கூட. இந்தப் பக்குவமெல்லாம் வருவதற்கு பழனி கோயிலில் ரெண்டாயிரம் தடவை ஒரே மூச்சில் ஏறி இறங்கவேண்டும். ஆனால் வாழ்க்கை இயல்பான போக்கில் கற்றுக் கொடுத்துவிட்டது அவருக்கு.

அவரைப் பற்றி நிறைய பேசினோம். பதற்றம் வரும்போதெல்லாம் அவர் குறித்து யோசித்துக்கொள்ள வேண்டுமென முடிவெடுத்தேன். இந்த இடத்திற்கு எப்படி வந்து சேர்ந்தேன் என்பதை நினைக்கையில் ஆச்சரியமாக இருந்தது. உடன் வாழ்பவர்களெல்லாம், “இவ்வளவு நிதானமா பேசாத. கொஞ்சம் சத்தமா சட்டுன்னு முடி” என்று இப்போதே சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். அவர்களின் நேரத்தை எடுத்துக்கொள்ளக்கூடாது என்பதற்காக வலிந்து கூட்ஸ் வண்டியைப்போல பேசுகிறேன்.

இப்போதெல்லாம் எனக்கு நிதானமாகப் பேசவேண்டுமென்றே தோன்றுகிறது. கல்லூரியில் நான் பேசும்போது கொஞ்சம் நிறுத்து என்பார்கள். தலைகீழான மாற்றம். விவசாயத்திற்கு வரும்போது மனதளவிலும் உடலளவிலும் நிறையச் சிக்கல்கள் இருந்தன. எந்நேரமும் நெஞ்செரிச்சலுக்கான மாத்திரையோடே அலைவேன். வயிறு பற்றி எரிந்துகொண்டிருக்கும். எந்நேரமும் மேஜைக்குக் கீழே வெடிக்கப்போகும் குண்டைப்போல இருந்தது சூழல். அப்போது மகிழ்ச்சியும் இருந்தது. ஆனால் அதிலிருந்தெல்லாம் வெகுதூரம் விலகியிருந்தேன்.

பார்ட்டிகளுக்குப் போனால், மூலையில் மஞ்சள் வெளிச்சம் விழும் மேஜையில் அமர்ந்து காலை படபடவென ஆட்டிக் கொண்டிருப்பேன். நா.முத்தண்ணன் இறந்துபோன சமயத்தில், தம்பிகள் சிலருடன் காரில் போய்க் கொண்டிருக்கும்போது, திடீரென நெஞ்சு வலிப்பதைப் போல இருந்தது. ஓடிப்போய் மருத்துவமனையில் பரிசோதித்தபோது ஒரு இதுவும் இல்லை என சிரித்துக்கொண்டே அனுப்பிவைத்தார் மருத்துவர். “முதல்ல அந்த வேலைச் சனியனை விட்டுத் தொலை. பூமியில கஷ்டமில்லாத வேற வேலையே கிடைக்காதா?” என்றார், நான் பெரிதும் மதிக்கும் அந்த மருத்துவர். ஆனால் இப்போது அந்த வேலையையே ரசித்துச் செய்வேன் என்பது வேறு கதை.

இரண்டாயிரம் செடிகள் கருகிவிடும் என்கிற இக்கட்டான நிலையில் ஆம்புலன்ஸ் வேகத்தில் கிளம்பி ஓடிவந்தேன். பதினைந்து நாளில் மறுபடியும் திரும்பிப் போய்விட வேண்டும் எனத் திட்டமிட்டு, அதற்கான துணிமணிகளுடனே வந்தேன். காலம் என்ன செய்தது என்பதைச் சொல்லியும் தெரியவேண்டுமா? ஆரம்பத்தில் செடிகளுடனான ஒட்டுதல் இல்லாமலேயே இருந்தேன். அதன் அடிப்படைகூடத் தெரியாது. தண்டைத் தொட்டுக்காட்டி வேர் என்பேன். நாவல் செடியைக்காட்டி மாமரம் என்பேன். தோப்புகள்தான் சிக்கல் எனக்கு. காடுகளில் ஓடியாடி அலைந்திருக்கிறேன். ஆனால் அது என்ன மரம்? என உற்றுக் கவனித்ததில்லை.

பறவைகளின் பெயர்களெல்லாம் ஓரளவிற்குத் தெரியும். ஆனால் கொத்திவிடுமோ என ஒரு சிறு சிட்டுக்குருவியைக் கண்டால்கூடப் பயப்படுவேன். அதைச் சிறுவயதில் சுட்டுச் சாப்பிட்ட நினைவே உடனடியாக வரும். முந்தாநாள், இளங்கோவன் முத்தையாவிடம் சொல்லிக்கொண்டிருந்தேன். தவிட்டுக் குருவியொன்று பிஸ்கெட் சாப்பிட வருகிறது என்றபோது, “எல்லாத்தையும் கெடுத்து வச்சிருக்கீங்க” என்றார், உடனடியாக. தொலைபேசியை வைத்தபிறகு, இதை எழுதுவதற்காகவே விரிவாக யோசித்தேன். இளங்கோ கல்லாணை அண்ணன் வந்தபோது, “டேய், கிங்ஃபிஷர் இவ்வளவு பக்கத்தில வந்திருச்சுன்னா. உன்னை நம்பிருச்சுன்னுதான் அர்த்தம். அது லேசில பக்கத்தில வராது” என்றார்.

பொதுவாகவே, இப்படி ஒரு கதை கேட்டிருக்கிறேன். அது உண்மையா என்றும் தெரியவில்லை. தவிட்டுக் குருவிகள் ஒரு இடத்தில் அச்சமில்லாமல் உலவத் துவங்கினால் மற்ற பறவைகளும் இயல்பாகவே வந்துவிடும். தவிட்டுக் குருவிகளை முதலில் அனுப்பி வேவு பார்ப்பார்கள்போல. அப்புறம் மெதுவாய் காலைத் தூக்கி, வெளிவட்டத்தில் மற்றவர்கள் வைப்பார்கள். நாமே என்ன செய்வோம்? சேக்காளியை அனுப்பி வேவு பார்த்துவிட்டுத்தானே வேலி தாண்டுவோம். வந்து உறவாடும் பறவைகளைக் கூர்ந்து பார்த்திருக்கிறேன். மிகச்சரியாக மழைக்கு முதல்நாள் காகமொன்று தயிர்ச்சோறை வாய் நிறைய அள்ளிக்கொண்டு கூட்டிற்குப் போகும். குஞ்சுகளுக்கு அல்லாமல் வேறு யாருக்கு எடுத்துப் போகும்?

லகுடு நாவலில் அதைப் பற்றியெல்லாம் கொஞ்சமாக எழுதவும் செய்திருக்கிறேன். பறவை காணலுக்கு மிக முக்கியமானதே அசைவின்றி இருத்தல். அதிலும் பக்கத்தில் வருகிறதென்றால், இன்னும் சிலையாக உறைந்துபோதல். அந்த நேரத்தில் செல்பி எடுக்க, தொலைபேசியைத் தூக்க உடலை அசைக்கக்கூட முடியாது. ஆழ்ந்த அமைதியில் சிலையைப் போல அமர்ந்திருக்க வேண்டும். அது சாத்தியமானவகையில் இந்தப் பேருண்மைக்கு நன்றி சொல்லியே ஆகவேண்டும்.

எதிலும் ஒட்டாமல் அலைந்துகொண்டிருந்த நான், ஒருநாள் என்னையும் அறியாமல் மெதுவாக செடிகளை கவனிக்கத் தொடங்கினேன். நிச்சயம், அதுதான் உள்ளே இழுத்துப் போட்டது. அதிகாலையொன்றில் கொய்யா மொட்டுகளின்மீது மழைத்துளி ஒட்டியிருந்ததை அருகில் பார்த்தபோது மகிழ்ச்சியாக இருந்தது. அந்தக் கணத்தில், சட்டென அந்த உலகம் உள்ளிழுத்துக் கொண்டது. “பரவாயில்லையே சார்… சிட்டில இருந்து வந்து கோடையத் தாக்காட்டீங்களே!” என்றார் ஒருத்தர். நானா செய்தேன்? மழை வந்ததால் தப்பித்தேன். ஆனால் அந்த வார்த்தைகள் ஆழமான உள்விளைவுகளை எனக்குள் உருவாக்கின. ஆழமான நம்பிக்கையொன்று படர்ந்தது. அது, விஷமில்லா கனியொன்றை என்னாலும் உற்பத்தி செய்துவிடமுடியுமென்கிற அர்ப்பணிப்புடன்கூடிய நம்பிக்கையாகவும் இருந்தது.

அவை என்மீது ஆதிக்கம் செலுத்த அனுமதிக்கத் துவங்கினேன். எப்போது அப்படிச் செய்தேன் என்பதே தெரியவில்லை. அதற்குமுன்னர் பழனி நகரத்தில் வீடெடுத்து இங்கே வந்து போகவேண்டுமென முடிவெடுத்திருந்தேன். சட்டென அந்த முடிவைக் கைவிட்டேன். குறைந்த வாய்ப்பில் இங்கேயே தங்கவேண்டுமென முடிவெடுத்ததற்கு ஒரு காரணமும் இருந்தது. விவசாயத் துறை சார்ந்த நண்பரான ஜார்ஜ், “டெய்லி எந்திரிச்சதும் அது முகத்தில முழிக்கணும் தலைவரே. ‘நம்ம ஆளு, நம்மளப் பாக்காம எந்த வேலையும் பாக்கமாட்டாரு’ன்னு செடிக நம்பணும்” என்பார். நிஜமாகவே செடிகளுடன் உரையாடிக் கொண்டிருக்கும் மனிதர் அவர்.

நெஞ்செரிச்சல் மாத்திரைகளை எப்போது நிறுத்தினேன் என்பதே நினைவில் இல்லை. அந்தச் சமயத்தில்தான் உடலையும் மனதையும் ஊன்றிக் கவனிக்கவேண்டுமென முடிவுசெய்தேன். செய்கிற வேலையில், கைநடுங்காமல் துல்லியத்தைக் கொண்டு வரவேண்டுமெனவும் திட்டமிட்டேன். தாத்தா பூ செடி கேள்விப்பட்டிருப்பீர்கள்தானே! அந்தச் செடி, எல்லாப் பருவத்திலும் எப்படியிருக்குமென எனக்கு நன்றாகத் தெரியும். மெல்லமாக அதன் இதழ்களை விரித்து உள்ளுக்குள் இருக்கும் அத்தனை நெழிவுகளையும் நெருங்கிப் பார்த்திருக்கிறேன். பொறுமையாக அந்த வேலையை ஒரு வேலையாகவே வைத்துச் செய்வேன்.

ஒரு அதிகாலை நேரத்தில் என்னுடைய உணவுப் பழக்கமும் மாறியது. அங்கேயே கிடைக்கும் கீரைகள், பழங்கள் என பலதும் பறித்துச் சாப்பிட்டுக்கொள்வேன். கோவைக் கீரையில் துவங்கி கள்ளிப் பூ வரை எல்லாவற்றையும் வதக்கிச் சாப்பிட்டு விட்டேன். கள்ளிப் பழங்களை சின்ன வயதிற்குப் பிறகு இப்போதுதான் சாப்பிட்டேன். உடல் மெல்ல சீரடைய ஆரம்பித்தது. பதற்றத்திற்கும் நெஞ்செரிச்சலுக்கும் நேரடியாகச் சம்பந்தமிருக்கிறது என்பதை அனுபவபூர்வமாகவே உணர்ந்தேன்.

ஒவ்வொரு விஷயத்தையும் அதன் அடிப்படையிலிருந்து தெரிந்துகொள்ள வேண்டும் என்கிற ஆழமான முடிவிற்கு வந்து சேர்ந்தேன். தாத்தா பூ செடி செயல்படும்விதம், உடல் செயல்படும்விதம், நாய்க்குட்டிக்கு வந்த மேஞ்ச் செயல்படும்விதம் என எல்லாமும் ஒருவகையில் ஒன்றுதான். கூடவே  மனதை, செல்ல நாய்க்குட்டி மாதிரி பழக்குவிப்பதற்கான பயிற்சிதான் மிகக் கடுமையானது. உண்மையிலேயே, உடலுக்கு உண்டான மரியாதையைக் கொடுத்துவிட்டால் அது தன்னைப் போல அமைதியாகி விடுகிறது. சண்டிக்குதிரை வேலையெல்லாம் இந்த மனம்தான் செய்கிறது. நான் வளர்க்கிற நாய்க்குட்டி டோனியைப் போல கொஞ்சம் முரட்டு சுபாவம். ஆனாலும் பழக்கப்படுத்துகிறேன்.

உடலும் மனமும் இயைந்துவருகிற நேரத்தில், எதை வேண்டுமானாலும் செய்துவிடலாம் என்றே தோன்றுகிறது. கார் ஓட்டுவதற்கே பதற்றப்பட்டவன் என்பது நெருங்கிய நண்பர்களுக்குத் தெரியும். ஆழமாகச் சொல்வதென்றால், இப்போது விமானம் கிடைத்தால், ஆரம்பக்கட்ட பதற்றங்களுக்குப் பிறகு அது செயல்படும்விதத்தை எளிமையாகவே புரிந்துகொள்வேன் என நம்புகிறேன். அதற்குத் தேவை துல்லியமான கவனம். பதற்றமில்லாமல் இருந்தால் எளிதாகவே கூடிவிடும் அது என்பதையும் உணர்கிறேன். ஒரு குண்டூசியை ஆட்டாமல் வானத்தில் ஏந்திப் பிடித்திருப்பதைப் போல அரிதான செயலாகவும் அது இருக்கக்கூடும்.

அதற்காகக் கிளம்பி, எல்லோரும் காடு கரைகளுக்கு ஓடிப் போய்விட வேண்டும் என்பதல்ல. கிடைக்கிற நிலத்தில் பதற்றங்கள் அலையடிக்காமல், கவனத்தைக் குவிப்பது என்றே நான் புரிந்துகொள்ள விரும்புகிறேன். என் இயல்புப்படி, என்றேனும் ஒருநாள் இங்கிருந்தும் வெளியேறி இன்னொரு புதிய நிலத்தில் நடைபோடுவேன் என்றே தோன்றுகிறது. பதற்றமாக உள்ளே நுழைந்த ஒருவனை வெப்பம், குளிர், மழை, காற்று எல்லாமும் சேர்ந்து துவைத்தெடுத்து, கொய்யாவில் படரும் ஒரு சிறுபூச்சியாக உருமாற்றம் செய்திருக்கிறது. பதற்றங்களே இல்லாத சிலந்தியாக இந்தக் கணத்தில் உணர்கிறேன்.

*

பத்து மணிக்கெல்லாம் வேப்ப மரத்தடியில் கட்டிலைப் போட்டு அமர்ந்துவிட்டேன். நான் வளர்க்கிற வெள்ளாடுகளுக்கு மேரி பிஸ்கெட் போட்டு நேரத்தைப் போக்கினேன்

“அவன், கிடைக்கிற ஒவ்வொரு நாளையும் போனஸா பாக்க ஆரம்பிச்சிட்டான்” என்றார்

தாத்தா பூ செடி செயல்படும்விதம், உடல் செயல்படும்விதம், நாய்க்குட்டிக்கு வந்த மேஞ்ச் செயல்படும்விதம் என எல்லாமும் ஒருவகையில் ஒன்றுதான்