– துரை. அறிவழகன்

அம்மாசியின் இளம்பிராயத்து ஞாபகக் குகையில் மலைப் பூவரச மரமும், தைலம்மா நினைவும் அரைத்துப் பூசின தோட்டு மஞ்சளாக ஒட்டிக் கொண்டிருந்தது. அடர்ந்த நிழலும், மார்கழி பனியின் குளிர்ச்சியும் சுமந்த மலைப் பூவரசம் மரத்தடியில் இதய வடிவிலான பூவரச இலையைச் சுருட்டி ‘பீப்..பீப்..’ என நெஞ்சுக் காத்தையெல்லாம் வாய்க்குக் கொண்டு வந்து பீப்பி ஊதிக் கொண்டிருப்பாள் தைலம்மா; பீப்பி ஊதும் போது வாய் குவிந்து குருவி வாயாகிவிடும். 

நொய்யல் ஆற்றங்கரை வனமெங்கும் கூழைக்கெடா, நீர்க்காக்கை, நாமக்கோழி, சாக்குருவி குரல்களோடு பூவரச இலை பீப்பியின் ஒலியும் கலந்து தைலம்மா இதயச் சிரிப்பாய் ஒலிக்கும். பீப்பி ஊதியபடி ஆற்றங்கரையோர வனத்தைச் சுற்றி வரும் போதும் பச்சரிசி மாவுருண்டையை வாயில் அதக்கிக் கொண்டிருப்பாள் தைலம்மா. போதாததற்கு இடுப்பில் சொருகி இருக்கும் நீலநிற சுருக்குப் பையில் வறுத்த ஈசலும், கருப்பட்டியும் கலந்து நாளெல்லாம் கொறிக்க வைத்திருப்பாள். நீல நிற வெல்வெட் சுருக்குப் பையில் வெள்ளி கோடுகள் பூக்கோலம் போட்டிருக்கும்.

தைலம்மாவோடு எப்பவும் சேர்ந்தே சுற்றி வருவார்கள் அவளுடைய சேக்காளிகள் பூங்கோதையும், சிட்டாளும். சேக்காளிகள் கையில் பனை மட்டை சுமந்து திரிவார்கள். வனத்துக்குள் வெக்கை ஓடத் தொடங்கியவுடன் பூவரச மரத்தடியில் வாக்கூடு, கொட்டாம்பெட்டி, கருப்பட்டிப்பெட்டி, கிண்ணிப்பெட்டி என விதவிதமான சித்திரங்கள் பனை மட்டையிலிருந்து உருவாகத் தொடங்கிவிடும். எந்த வெக்கையும் பூவரச மர குளிர்ச்சியை எதுவும் செய்து விட முடியாது. மரமெல்லாம் பூத்து நிற்கும் மஞ்சள் பூக்களோடு குழந்தைகளை காத்து நின்றது மலை பூவரசு. மலைப் பூவரசத்தைச் சூழ்ந்து செழித்து சில்லிப்பு காட்டி நின்றன அத்தி, கனக சம்பா, புரசு, நீர்மருது, புங்கன், கருப்பாலை, இலுப்பை மரங்கள். தங்க நிறப் பூக்கள் கொண்ட கனகசம்பா மரத்தின் நீரோடிய இலை நரம்புகளில் பட்டுத் தெறிக்கும் சூரிய துணுக்குகள் வனமெங்கும் பிஞ்சுக் கை ரேகையாக படர்ந்து இருக்கும்.

மரங்களுக்கு மேல் ஓயாது றெக்கையடித்துத் திரியும் நாரை, சீம்புறு, சாக்குருவி, செம்புத்தான் பட்சிகள். இரவெல்லாம் வேட்டை முடித்து கண் சொருகிப் போய் பூவரசு மரத்து இலைக்கூட்டுக்குள் பகலெல்லாம் அடைந்து கிடக்கும் கூவைகள்.

சின்னாறு, நீலியாறு, கொடிகுவரியாறு, சாடியாறு, காஞ்சிமா ஆறு என பனை ஓலைப் பட்டையின் ரேகைகளாக ஓடிய நீர்வரத்தை வாங்கிக் கொண்டு சாடிவயலில் சிற்றோடைகள் ஒன்று சேர குமருப் பெண் செழிப்பாக பிரவாகமெடுத்து ஓடியது நொய்யல் ஆறு. கெளுத்தி, விரால், பனையேறி கெண்டை என வெள்ளி ஒளியாக மீன் குஞ்சுகள் பாய்ச்சல் காட்டிக் கொண்டிருக்கும்  ஆற்றின் போக்கெங்கும்.

நாச்சிவலசு குடியிருப்புகளைத் தாண்டி ஆற்றங்கரை வனத்தையும் தாண்டி பனங்காடு, காட்டுக் கிழவியின் கூந்தலாக விரிந்து கிடந்தது; கிணற்றுச் சேரத்தில் முளைத்திருக்கும் செடிகளில் கூடுகட்டி நாச்சிவலசுக்குள் குரல்காட்டித் திரியும் சிட்டுக் குருவிகளோடுதான் அம்மாசியின் பொழுது விடியும். பனி விலகி சூரியன் முளைத்த சுவடில் காடு நோக்கி நகர்ந்துவிடுவான் அம்மாசி. 

காடைகளின் குரல் ஒலித்துக் கொண்டிருக்கும் பனங்காடு. பனைமரப் பொந்துகளில் இருந்து அதிசயமாக முகம்காட்டும் பனங்காடைகள். பனங்காடை மட்டுமில்லாது காட்டுக்காடை, வாள்காடை, பூங்காடை, பக்காடை, அரிக்காடை என எண்ணற்ற காடைகள் காட்டு புதர்களுக்குள் கூடமைத்து ஒளிந்து வாழ்ந்தன. தைலம்மாவும் அவள் சேக்காளிகளும் கூடும் பூவரச மரத்துக்கு அருகில் இருந்துதான் காடை கவுதாரிகளை வேட்டையாடுவான் அம்மாசி. 

மாட்டு ரோமத்தை மெல்லிய கயிறாக்கி நுணியில் சுருக்கு முடிச்சு போட்டு கம்புகளில் கட்டி கண்ணி வைத்து காடை, கௌதாரிகளை வேட்டையாடுவதில் சமர்த்தன் அம்மாசி. மரக்கூட்டத்துக்குள் மறைந்து கொண்டு அம்மாசி அச்சு அசல் காடை கவுதாரி போல் எழுப்பும் சீழ்க்கை ஒலிக்கு ஏமாந்து வரும் பட்சிகள் அம்மாசியின் கண்ணிக்கு தப்ப முடியாது. நொய்யல் ஆத்தங்கரைக்கு வரும் கொக்குகளும் சில சமயங்களில் அவன் கண்ணியில் மாட்டிக் கொள்ளும்.

மாட்டுச் சாணத்தில் புதைத்து சுட்ட காடை முட்டைகளோடும், நெருப்பில் வாட்டிய காடைகளோடும் பூவரச மரத்தடியில் தைலம்மாவைச் சந்திப்பான் அம்மாசி. இடுப்பில் சொருகி இருக்கும் சுருக்குப் பையில் வைத்திருக்கும் ஈசலும், கருப்பட்டியும் கலந்த பண்டத்தை அம்மாசிக்குக் கொடுப்பாள் தைலம்மா. பூங்கோதைக்கும், சிட்டாளுக்கும் கூட திறக்காத தைலம்மாவின் சுருக்குப் பை அம்மாசிக்கென்றால் திறந்துவிடும் அதிசயத்தைப் பார்த்தபடி இருக்கும் பூவரசு மரம்.

பேரூர், குனியமுத்தூர், வெள்ளலூர், இருகூர், சூலூர், ஓரத்துப்பாளையம்  தடங்களில் வழி அமைத்துக் கொண்டு பொங்கிப் பாய்ந்து கொண்டிருந்தது நொய்யல் ஆறு.

பூவரச மரக்காட்டுக்கு தைலம்மாவும், காடை வேட்டைக்கு அம்மாசியும் போகாத நாட்களில் நொய்யல் ஆத்துக்கு மீன்பிடிக்கப் புறப்பட்டுவிடுவார்கள் இருவரும். கையை விட்டு விலகிப் போகாமல் சுத்தி வரும் வெள்ளாட்டை தைலம்மாவோடு கிளம்புவதென்றால் கசாலையில் கட்டிவிட்டு, நழுவி நழுவி கீழிறங்கும் டவுசரை இழுத்து அரைஞான் கயிற்றை மேலேவிட்டு இறுக்கிக் கொண்டு கிளம்பிவிடுவான் அம்மாசி. 

வெள்ளாட்டுக்கு புளியந்தழைகளையும், பசுந் தீவனங்களையும் போதுமான அளவு கொல்லையிலிருந்து கொண்டு வந்து அதன் காலடியில் போட்டுவிட்டுத் தான் கிளம்புவான். சொம்பில் கரைத்துக் காத்திருக்கும் புளித்தண்ணியை குடித்து வயித்தை ரொப்பிக் கொண்டு உலகத்தையே பிடித்துவிடப் புறப்பட்டவர்கள் போல நடப்பார்கள் இருவரும்: கையில் தூண்டிக் கம்பு இருக்கும்.

வாழை முளைத்த சேத்து மண் தடத்தில் தோண்டத் தோண்ட நெளியும் புழுக்களை அரித்து கொட்டாங்கச்சியில் நிரப்பிக் கொண்டு நடைபோடுவார்கள். ஆத்தை அடையும் போது கால் பறக்க ஓடி வந்து சேர்ந்து கொள்வார்கள் சிட்டுவும், பூங்கோதையும்.

தூண்டில் முள்ளில் சிக்காமல் புழுவை மட்டும் நேக்காக அரித்துக் கொண்டு போகும் தந்திரக்கார மீன்களெல்லாம் உண்டு நொய்யல் ஆற்றில். தூண்டிலைப் போட்டுவிட்டு தக்கை இழுபடுவதை கண்கொத்திப் பாம்பாக பார்த்திருந்து லாவகமாக இழுத்து சிக்கிக் கொண்ட மீனை கைபிடிக்குள் கொண்டு வருவதில் அம்மாசி கில்லாடி. காடைக்குக் கண்ணி வைக்கவும், கெண்டைக்குத் தூண்டில் போடவும் கைகாரன் அம்மாசி.  அவன் ராசிக்கும், கைவாகுக்கும்  கெண்டை, கெழுத்தி, விரால், உளுவ என்று வகை வகையான மீன்கள் வலையில் சிக்கிக் கொள்ளும். உற்சாகம் கொப்புளிக்க, பிடிபடும் மீன்களை மண் சட்டியில் பத்திரப்படுத்துவார்கள் தைலம்மாவும் அவள் சேக்காளிகளும். “ஆத்தாடி, எம்புட்டு மீன்க” வாயும், கண்ணும் அப்படித்தான் விரிந்து விடும் தைலம்மாவுக்கு.  தைலம்மா, சிட்டாள், பூங்கோதை எழுப்பும் உற்சாக ஆரவாரம் இன்னும் நாலு மீன் சேர்த்துப் பிடிக்க வைக்கும் அம்மாசியை. வெயில் ஏற ஏற சூடு பரவும் பாறைகளில். ஆத்து நீர் கதகதப்பு சுகத்தில் மீன்களெல்லாம் புரண்டு விளையாடும். பாறை இடுக்குகளில் பாசி படிந்த வேர் முண்டுகளுக்குள் இருந்து முகம் காட்டும் மீன் குஞ்சுகள். 

கொக்குகளும், நாரைகளும், மடையான்களும் கூட்டம் கூட்டமாக மேற்கு நோக்கி பறந்து மறையும். ஆற்றோர நாணல் புதர்களுக்குள் மறைந்து திரியும் பூச்சிகளை தேடி மேய்ந்து கொண்டிருக்கும் சிறு பட்சிகள். அம்மாசி மீன் பிடிக்கும் பகுதிக்கு சற்று எட்டத்தில் கூத்தம்பட்டி சிறுவர்களின் அக்குறும்பு தாங்க முடியாததாக இருக்கும். கூத்தம்பட்டி சிறுவர்கள் காட்டும் பாய்ச்சலில் மீன்கள் பதறியடித்து நீருக்குள் முங்கி காணாமல் போகும். அந்தமானைக்குப் போய் அவர்களை நாலு அப்பு அப்பத் தோணும் அம்மாசிக்கு. தைலம்மா முன்பாக அப்படிச் செய்யாமல் தன்னை அடக்கிக் கொள்வான் அம்மாசி. ஆனாலும் அவனுக்குள் ‘பொசு பொசுப்பு’ அடங்காது. அரக்கப் பறக்க மறைந்த மீன்கள் அம்மாசியின் தூண்டிலுக்கு வெகு தூரத்திற்கு அப்பால் போய்தான் முகத்தைக் காட்டும்.  

கொட்டாங்கச்சியில் பாதிக்கு மேல் புழுக்கள் காலியாகியிருக்கும் போது மண் சட்டியில் நிறைந்த மீன்கள் ‘தளக்…புளக்’ கென்று புரள ஆரம்பித்துவிடும். கொழம்பு வைத்தால் நாலு வீடு ஒரு நேரத்திற்கு திருப்தியாகச் சாப்பிடலாம். கருவேலங்காட்டைத் தாண்டி, கரும்பு வாசம் மூக்கில் இனிக்க மீன்பிடி முடித்து நான்கு பேரும் வீடு சேரும் போது, பொழுது உச்சத்தை தொட்டுவிடும். தைலம்மாவின் மச்சு வீடு நாழி ஓடுகளால் வேயப்பட்டிருந்தது. வாசலில் எப்போதும் சிலுசிலுத்து நிற்கும் முரட்டு வேப்ப மரமொன்று. தொன்ம வாசனையை சுமந்தபடி நாழி ஓட்டுப் பாசிப் பூவாய் மலர்ந்திருந்தது அம்மாசி தைலம்மா உறவு.

வீட்டு முற்றத்தைத் தாண்டினால் பண்டம் பாடிகளின் மூத்திர கவிச்சி அடிக்கும் தொழுவம். தொழுவத்தில் ஆறடி மனுச நீளத்துக்கு கல் தொட்டிகளில் ததும்பி நிற்கும் தவிட்டுத் தண்ணி; பண்டம், பாடிகள் எறப்பு வாங்காமல் எப்போதும் குளுந்து போய் இருந்தன. பேரூர், குனியமுத்தூர், வெள்ளலூர்,இருகூர், சூலூர், ஒரத்துப்பாளையம் வழியாக பாஞ்சு கொண்டிருந்த நொய்யல் ஆத்துப் போக்கு நாச்சிவலசு, கூத்தம்பட்டியையும் செழிப்பாக வைத்திருந்தது. நொய்யல் ஆத்து செழுமையை வாங்கி வளர்ந்தாள் தைலம்மா. 

காட்டு பூவரச மரத்திற்கு அருகில் நின்றிருக்கும் இலுப்பை மரத்தில் அணங்கு அடைந்து கிடப்பதாக கிராமத்தில் பேச்சு அலையோடிக் கிடந்தது. நாச்சிவலசு, கூத்தம்பட்டி பெருசுகள் அஞ்சி ஒதுங்கிப் போன இலுப்பை மரப் பொந்தில் குருவி முட்டை திருடித் தின்பதை மட்டும் அம்மாசி நிறுத்தவே இல்லை. அவனுக்கும், தைலம்மாவுக்கும் துளிகூட அச்சமே இருப்பதில்லை.

“வரட்டுமே எந்த அணங்கு என்ன செய்யுதுனு பாப்போமே” என்று தைலம்மாவிடம் வீரம் பேசுவான் அம்மாசி. பூவரசு மரத்தைத தொட்டுப்போனது யானைகளின் வழித்தடம். வயது முதிர்ந்த பெண் யானை தலைமையில் கடந்து போகும் யானைக் கூட்டத்தைப் பார்ப்பதில் பூரித்துப் போவாள் தைலம்மா. துண்டுபடாமல் நீண்டு கிடந்த காட்டில் பசுந்தீவனங்களை ஒடித்துத தின்றபடி அலையும் யானைகள். 

“அதுதான் கொம்பன்; வழிகாட்டி யானை” என்பான் அம்மாசி. யானைகளைப் பற்றிய நிறைய விஷயங்களை தைலம்மாவுக்கு அவன்தான் சொல்வான். சில்லு கொம்பன், கட்ட கொம்பன், மொன்ன வாலு என ஒவ்வொரு யானையைப் பற்றியும் கதைகதையாகச் சொல்லுவான் அம்மாசி. அம்மாசியின் கதைகளைக் கேட்டு கண்ணெல்லாம் விரிந்துவிடும் தைலம்மாவுக்கு.

ஒத்தைக் கொம்பு யானையையோ, சூறை நாற்றமடிக்கும் யானையையோ தூரத்தில் பார்த்துவிட்டால் எச்சரிக்கை ஆகிவிடுவான் அம்மாசி. தைலம்மாவையும் இழுத்துக்கொண்டு அரவங்காட்டாமல் பதுங்கிவிடுவான்.

“ரொம்ப ஆபத்தானவன் இந்த ஒத்தக் கொம்பன். சிக்குனோம் நம்மள சிதறடிக்காம விடாது” என்பான் யானை மறைந்த பிறகு அம்மாசி. காட்டுக்குள் யானைகளுக்கான சோளம், பனிவரகு என மானாவாரி பயிர்கள் தான்தோன்றியாக முளைத்துக் கிடந்தன.

குருவி முட்டைகளை சேகரிக்க தைலம்மா, பூங்கோதை, சிட்டு ஆகியோருடன் வனத்துக்குள் புகும் அம்மாசி யானை வழித்தடங்களை எச்சரிக்கையாக பார்த்து நடப்பான். யானை தடத்தில் குவிந்து கிடக்கும் சாணத்தில் கால் புதைத்து மிதிப்பதென்றால் கொள்ளைப் பிரியம் தைலம்மாவுக்கு. சாணத்தின் சூட்டை வைத்து யானைகள் கடந்து போன நேரத்தை கணக்கிட்டுவிடுவான் அம்மாசி. யானைகளை விட வாசனை பிடிப்பதில் சூரனாயிருந்தான் அம்மாசி. யானைகளைப் போல, ஒரு முறை நடந்து போன வழித்தடம் அவன் மூளைக்குள் பதிந்துவிடும். 

கவண் கல்லோடு அம்மாசி புறப்பட்டுவிட்டால் காட்டு பட்சிகளுக்கு ஆபத்துதான்.  ஆக்காட்டி குருவிகள் மட்டும் அவன் வாசனையைப் பிடித்து தப்பிவிடும். “கரக்…கரக்..” என்று குரலெழுப்பியபடி திரியும் ஆக்காட்டி குருவிகள் அம்மாசி அரவம் தென்பட்டவுடன் குரல் மாற்றி ஒலி எழுப்பி தங்கள் இனத்து மற்ற குருவிகளை எச்சரிக்கும். காட்டுக்குள் குருவியின் மொழி கடத்தப்பட்டு அலை அலையாகப் பரவும்.

மூங்கில், உன்னு, இருவாட்சி, வெட்டாலம் போன்ற நாட்டு மரங்களின் இலை தழைகளையும், பசுமையான புற்களையும் வயிறு முட்ட மேய்ந்து விட்டு காட்டுப் பாதையில் யானைகள் போடும் சாணத்திற்குக் கூடிவிடும் குரங்கு, இருவாச்சி, கீரிப்பிள்ளை, பட்டாம்பூச்சி போன்ற உயிரிகள். யானைச் சாணத்தின் மணம் காட்டுக்குள் எப்படித்தான் பரவுமோ தெரியாது! அதுக்காகவே எதிர்பார்த்திருக்கும் பறவைகளும், விலங்குகளும் சாண மலையைச் சூழ்ந்து கொண்டு நொடிப் பொழுதில் காணாமல் ஆக்கிவிடும்.

யானைகள் ஒடித்துப் போடும் காட்டு மரங்களின் இழை தழைகளின் இடைவெளியில் சூரியனின் மஞ்சள் ரேகைகள் காடெல்லாம் படலாக பின்னிக் கிடக்கும். யானை வழித்தடத்தின் இருபுரமும் அத்தி, கடம்ப மரம், நொச்சி, பிலு மரங்கள் சில்லிப்புடன் நிற்கும். மரக்கூட்டங்களுக்கு இடையில் புற்றுகளையும், தேரைகளையும் பார்க்கலாம். குப்பென்று மணத்தோடு பன்னீர் மரங்களும் பூத்து நிற்கும். அகன்ற கரும்பச்சை நிற இலைகளுக்கு மத்தியில் பூத்து நிறைந்திருக்கும் வெள்ளை நிற பன்னீர்பூக்கள் காடெங்கும் வசீகர மணத்தை பரப்பி நிற்கும்.

“புற்றுகளும், தேரைகளும், வெள்ளை நிற பூக்கள் பூக்கும் காட்டு மரங்கள் இருக்கும் இடத்தில் நீரோட்டம் அப்படித்தான் இருக்கும்” என்பான் அம்மாசி. யானைகள் தோண்டிப் போட்ட குழிகளில் இருந்து பொங்கிப் பெருகும் ஊத்து நீர் குடித்தபடி பயணிப்பார்கள் தைலம்மா, அம்மாசி பட்டாளம். ஊத்து நீரின் சில்லிப்பும், சுவையும் கொடுக்கும் தெம்பில் நாலு சுத்து அதிகம் சுத்தி வருவார்கள். குருவி முட்டைகள் இருக்கும் பொந்துகளை அடையாளம் கண்டுபிடித்துவிடுவான் அம்மாசி. காய்ந்த வைக்கோல்களையும், காட்டுக் குச்சிகளையும் கொண்டு கட்டப்பட்ட கூட்டுக்குள் இருக்கும் பறவை முட்டைகளை ‘சரசர’வென்று மரத்தில் ஏறி தாய்க் குருவி அசந்த நேரத்தில் களவாடிவிடுவான் அம்மாசி.

காட்டு சுள்ளிகளை பொறுக்கி வந்து அங்கேயே சுட்டுத் தின்று விட்டுத் தான் நகர்வார்கள் அம்மாசியும் அவன் பட்டாளமும். ஆக்காட்டி குருவிகள் பொடி கற்களைக் குவித்து தரையில் கட்டியிருக்கும் கூட்டிலுள்ள சாம்பல் புள்ளி முட்டைகள் மட்டும் அம்மாசியின் வேட்டைக் கண்களில் இருந்து தப்பிவிடும். அம்மாசியின் பார்வையெல்லாம் மரப் பொந்துகளிலும், உச்சாணிக் கொம்புகளில் கட்டப்பட்டிருக்கும் கூடுகளிலும்தான் இருக்கும். வழித் தடங்கள், ஓரத்து புதர் அடைசலுக்குள் பதுங்கிக் கிடக்கும் குருவி முட்டைகள் அம்மாசியிடமிருந்து தப்பிவிடும்.

நொய்யல் படுகையில் விரிந்து நிற்கும் வில்வம், வாகை, காட்டு எலுமிச்சை, கடம்பு, நீலத்திருவத்தி, நாகலிங்கம், மஞ்சக்கடம்பு, மகிழம், இலந்தை மரக்கூட்டங்களின் வளவுக்குள் அம்மாசிக்கான தடம் நீண்டு கிடக்கும். பனிக்காலத்தில் அம்மாசியின் தடத்தில் காட்டு மல்லிகள் மெத்தென்று விரிப்பாக குவிந்து கிடக்கும். காட்டு மல்லி குவியலுக்குள் இருந்து உடை மர முட்கள் ஆங்காங்கே எட்டிப் பார்க்கும். காட்டுப் பாதையில் உதிர்ந்து கிடக்கும் மகிழம் பூக்களை எடுத்து தலையில் சொருகிக் கொள்வார்கள் தைலம்மாவும், சிட்டும், பூங்கோதையும். மரத்தில் ஏறி மகிழம் பழங்களை பறித்து வருவான் அம்மாசி.

இரவெல்லாம் வேட்டைக்குப் போய் வந்த களைப்பில் ஆயிரக்கணக்கான பழந்தின்னி வௌவால்கள் அடைந்து கிடக்கும் இச்சி மர தோப்புக்குள் மட்டும் தைலம்மாவை அழைத்துச் செல்லமாட்டான் அம்மாசி. இச்சி மர தோப்புக்குள் இருக்கும் சுடலைசாமி என்றால் மட்டும் அம்மாசிக்கு கொஞ்சம் பயம். நாச்சிவலசு, கூத்தம்பட்டி கிராமத்து மக்கள் சுள்ளி பொறுக்கக் கூட இச்சித் தோப்புப் பக்கம் வருவதில்லை. வௌவால்கள் அடையும் பக்கம் சின்ன அரவங்கூட காட்டமாட்டார்கள். சுடலைச்சாமி பொக்கிஷமாக நினைத்து வௌவால்களுக்கு சின்ன தொந்தரவும் கொடுக்க மாட்டார்கள்.  ஆல மரம் போன்ற விழுதுகள் சடை சடையாகத் தொங்கும் இச்சி மரமெங்கும் தலை கீழாகத் தொங்கிக் கிடக்கும் வௌவால்கள். இச்சி மர தோப்புக்குள் தனிக் காட்டு ராஜாவாக ஆட்சி செய்து கொண்டிருந்தார் சுடலை. அணங்கு கதைகளை நம்பாமல் இலுப்பை மரப் பொந்தில் குருவி முட்டை திருடும் அம்மாசி சுடலைசாமியிடம் மட்டும் வால்தனம் காட்ட மாட்டான்.

அது ஒரு இதமான இளவெயில் காலம். அன்று அம்மாசி காடை வேட்டைக்குப் போய்விட்டான். தைலம்மா ஓலை கொழுக்கட்டைகளை குண்டானில் அள்ளிக் கொண்டு பூவரசு மரத்தடியில் அமர்ந்திருந்தாள். சிட்டுவும், பூங்கோதையும் கருப்பட்டிப் பெட்டியும், கிண்ணிப்பெட்டியும் முடைய பனை மட்டைகளை சேகரித்துக் கொண்டு தைலம்மாவோடு குளுந்த நிழல் பகுதியில் சேர்ந்து அமர்ந்து கொண்டார்கள். கூப்பிடு தூரத்தில்தான் காடைகளுக்குக் கண்ணி வைத்து அம்மாசி காத்திருந்தான். மரக்கூட்டங்களின் சலசலப்புக்கு மத்தியில் வில்லாகப் பாய்ந்த ஒலியாக அவனது சீழ்க்கைச் சத்தம் விட்டு விட்டு கேட்டுக் கொண்டிருந்தது. கருத்த மேகக் கூட்டத்தின் அசைவாக தூரத் தொலைவில் யானைக் கூட்டம் நகர்ந்து போனது. பூவரசு மரத்திற்கு அருகில் இருந்த இலுப்பை மரக் கிளைகளில் சாம்பல் நிற அணில் ஒன்று ‘கீச்’சொலி எழுப்பியபடி அலைந்து கொண்டிருந்தது.

பூவரசு மரத்தடியில் மண்டிக் கிடந்த செடிகளுக்குள் அலைந்து திரிந்த தேன் சிட்டுக்கள் தான் முதலில் தைலம்மாவின் வேதனைக் குரலைக் கேட்டன. இலுப்பை மரத்தில் அறை தூக்கத்தில்  அசந்திருந்த கூவை ஒன்று பதட்டத்துடன் அரைக் கண் விழித்துப் பார்த்தது. வயிற்றைப் பிடித்துக் கொண்டு குன்னிப் போய் உட்கார்ந்திருந்த தைலம்மாவை நெருங்கி ஆசுவாசப் படுத்த முயன்றார்கள் சிட்டுவும், பூங்கோதையும். காடைகளுக்குக் கண்ணி வைத்து காத்திருந்த அம்மாசியின் செவிப்புலனை தொட்டுவிட்டது தைலம்மாவின் ஈனக்குரல். நொய்யல் படுகையிலிருந்து மாட்டு ரோமம் கட்டப்பட்ட கண்ணி குச்சிகளை அநாதரவாக விட்டு விட்டு பதறிப் போய் பூவரசு மரத்தடி நோக்கி ஓடினான் அம்மாசி.

“ஒண்ணுமில்ல…ஒண்ணுமில்ல… நீ போய் உன் வேலையப் பாரு” என்று தைலம்மாவை நெருங்கவிடாமல் அம்மாசியை விரட்டி அடித்தார்கள் சிட்டும், பூங்கோதையும். பூவரசு மரத்தோடு ஒண்டிக் கொண்டிருந்த தைலம்மாவை ஆத்து நடையாக அழைத்துப் போய் வீடு சேர்த்தார்கள் சிட்டும், பூங்கோதையும். வீடெல்லாம் கூடிவிட்ட கிராமத்து சனங்களுக்கு மிளகு, தோட்டு மஞ்சள், வெத்தலை, பாக்கு, சக்கரையெல்லாம் கொடுத்து சந்தோஷப்பட்டான் தைலம்மா அப்பன்.

கிணத்தடி இலைச் சருகு குவியலில் தைலம்மாவை உட்கார வைத்து நீரூற்றினார்கள் நாச்சிவலசு நரை பூத்த பெண் மக்கள். வெள்ளி முளைத்த அந்தப் பொழுதில் பதுங்கி நின்ற அம்மாசியை கவனித்துவிட்டாள் ஊர்க் கிழவி ஒருத்தி. ‘என்னமோ ஏதோ’ வென்று மறுகி மறுகி சுத்திக் கொண்டிருந்தான் அம்மாசி.

“பாரு, நீ இனியும் காட்டுப் பக்கம் போய் குதியாட்டமெல்லாம் போடக்கூடாது. அம்மாசி பயலோடு சேந்து சுத்துற வேலையெல்லாம் இனி கூடாது” நாச்சிவலசு நூத்துக் கிழவி சொன்னதுக்கு தலை ஆட்டி வைத்தாள் தைலம்மா. வயித்தவலி விடாமல் துரத்தியது தைலம்மாவை. உளுந்தங்கஞ்சி, நெய் கத்திரிக்காய் என்று விதவிதமான பண்டமெல்லாம் சாப்பிட்டும் வயித்துச் சூடு ஆறவில்லை தைலம்மாவிற்கு. பச்சை முட்டையில் நல்லெண்ணை ஊற்றி கொடுத்துப் பார்க்கச் சொன்னாள் நூத்துக் கிழவி. எந்த கை வைத்தியத்துக்கும் மட்டுப் படவில்லை தைலம்மா வயித்துவலி.

இலுப்பை மரத்து கூவையின் அலறல் தைலம்மாவின் காதுக்குள் ஒலித்துக் கொண்டே இருந்தது. இலுப்பை மர குருவிகளின் எச்ச வாடை தைலம்மாவின் மூச்சை அடைத்து வயித்தைக் குமட்டியது. குருவிகளின் றெக்கையடிப்பாக கண்ணில் பூச்சி  பறந்தது. நாச்சிவலசு கீழத்தெரு கிழவி வெயிலுகாத்தாள் சிவப்பு பட்டுத் துணியை விரித்து சோழி உருட்டிப் பார்த்தாள். தைலம்மா கண்களின் பாப்பா ஒரு நிலையில்லாமல் அலை பாய்ந்தது. தொழுவத்தில் கட்டிக் கிடந்த மயிலையும், காங்கேயனும் வெயிலுகாத்தாளைப் பார்த்து வெருண்டன. நீட்டி மடக்கி உட்கார்ந்து கொண்டு உருண்டு நின்ற சோழியைப் பார்த்து விரல் மடக்கி கணக்குப் போட்டாள்.

வெயிலுகாத்தாளைத் தொடர்ந்து வந்த ஊர் சனங்கள் சோழியையும், கிழவியையும் நிலை குத்திப் பார்த்தபடி இருந்தார்கள். தைலம்மாவின் ஆத்தாவும், அப்பனும் வெயிலுகாத்தாள் முகக்குறியை பார்த்தபடி நின்றார்கள். “ஒடம்பு மலர்ந்த நேரம் இப்படியா நோவு வந்து சேரணும். எந்தக் காத்து கருப்பு இப்படி போட்டு ஆட்டுதோ தெரியலையே” என்றபடி போயிலையை வாய்க்குள் ஒதுக்கினாள் மட்லம்மா.

சுத்தி நின்ன சனங்களை ஒரு வட்டம் பார்த்துவிட்டு தைலம்மாவின் அப்பனிடம் நிலை குத்தியது வெயிலுகாத்தாள் கிழவியின் கண்கள். கிழவியின் கண்கள் உக்கிரம் ஏறி கொள்ளிக் கனலாக தகதகத்துக் கொண்டிருந்தது. கையில் வெத்திலையை எடுத்து விபூதியை குவித்து நடு விரலால் வட்டம் போட்டாள்.

“ம்ம்ம்… என்ற உக்கிரமான செருமல் கிளம்பியது கிழவியிடமிருந்து. ஏதோ பிடிபட்டது போல் தலையை ஆட்டிக் கொண்டாள். கன்னி மூலையில் தொங்கிக் கொண்டிருந்த மஞ்சணப்பை காத்து வேகத்தில் ஆடியது. கிணத்தடி நீர் வாய்க்காலாக ஓடி வாழையை நனைத்து தென்னை மர வேரைச் சுற்றி தேங்கி நின்றது. தென்னையில் கட்டப்பட்டிருந்த வெள்ளாடு ‘ம்மே’ என்று குரலெழுப்பியபடி வாய்க்கால் ஈரத்தில் வாய் வைத்தது.

“ஆத்தா கூட்டுல கைவச்சிருக்கா. ஆத்தாதான் வெகுண்டு தொரத்துரா” இழுத்து வாங்குன மூச்சோடு வெயிலுகாத்தாள் வாயிலிருந்து தெறித்து விழுந்தது வார்த்தைகள். “சுடலைசாமி நீதானப்பா காப்பாத்தணும்”, கிழவி சொன்னதைக் கேட்டு கூடி இருந்த சனங்களில் ஒருத்தி தன்னையறியாமல் அரற்றினாள்.

“எடத்த காட்டு தாயி. பரிகாரத்தையும் சேத்து சொல்லிரு” தைலம்மாவின் அப்பன் வெலவெலத்துப் போய் கேட்டான்.

“காடு, மேடென்று நேரங்காலம் தெரியாம சுத்துனா இப்படித் தான் வென வந்து சேரும். எங்க போய் வெனயத்த தேடிக்கிட்டு வந்து இப்படி நிக்கிறாளோ தெரியலியே”, பரிதாபமாக முணங்கினாள் தைலம்மாவின் ஆத்தாகாரி. வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த கூட்டத்தில் பயந்து பதுங்கி நின்ற சிட்டும், பூங்கோதையும் வெலவெலத்துப் போய் விட்டார்கள். எந்த குட்டு எப்படி உடையப் போகிறதோ? இருவருக்கும் பேச்சு மூச்சு அடைபட்டு விட்டது.

ஆட்டுக் கொட்டிலில் ‘தேய்..தேய்..’ என்று குரலெழுப்பியபடி  நின்ற அம்மாசியின் நினைவெல்லாம் தைலம்மாவின் நிலையை நினைத்துத் தான் தவியாய் தவித்தி நின்றது.  கண்ணு தைலம்மா வீடு நோக்கி தைத்து நிக்க கை மட்டும் வெள்ளாட்டுக்கு பசுந்தீவனங்களை காட்டிக் கொண்டிருந்தது;  வெயிலுகாத்தாள் தைலாம்மா வீட்டு முற்றத்தைத் தாண்டி உள்ளே போவதைப் பார்த்ததில் இருந்து உயிர் நழுவி உடல் கூடாகி நின்றான் அம்மாசி.

“குருவிக அலையுது. எச்ச வாட மூச்ச அடைக்குது; காளியாத்தா கூட்டுக்குள்ள சேக்காளி கையவிட்டது இவ பக்கம் பாஞ்சிருச்சு. நொய்யல் வண்டல் ஓர காட்டு மரத்த காட்டுது. இலுப்ப மரம் சிலுசிலுக்குது”, மூச்சு வாங்க சொல்லி நிறுத்தினாள் கிழவி. வெடவெடத்து ஆடிய உடம்பிலிருந்து தாரை தாரையாக நீர் வழிந்தது. 

பொறி தட்டியது போல தைலம்மாவின் அப்பன் அவளுடைய சேக்காளிகளைத் தேடினான். கால் நரம்புகள் சுண்டி இழுக்க அதுக்கு மேல் ஒண்டி ஒழிய முடியாத பரிதாபத்தோடு முகத்தைக் காட்டினார்கள் சிட்டும், பூங்கோதையும.

பூங்கோதையும், சிட்டுவும் இலுப்பை மரத்தை அடையாளம் காட்டுவதாக ஒத்துக் கொண்ட பிறகு வெயிலுகாத்தாள் கிழவி கொஞ்சம் கொஞ்சமாக ஆசுவாசப்பட்டாள். மூச்சிரைப்பும், உக்கிரமும் மட்டும் தணியவில்லை.

“பொங்க வச்சு, கெடா வெட்டி ஆத்தாவ சாந்தி பண்ணுங்க. எல்லாம் சரியாப் போகும்”

கிழவி சொல்லியது காளியாத்தாவே உத்தரவு கொடுத்தது போல் குளுந்து போனார்கள் தைலம்மாவின் ஆத்தாளும், அப்பனும். மஞ்சப் பால் குடித்து வேர்வை அடங்கி ஆசுவாசப்பட்டாள் கிழவி. கண்ணில் ஒத்திக் கொண்டு கிழவி திருநீறு பூசிய பிறகு சற்று தெளிச்சியானாள் தைலம்மா. சிட்டும், பூங்கோதையும் தான் இன்னும் ஒரு நிதானத்துக்கு வராமல் மிரண்ட மயிலைக் கன்னாக நின்றார்கள்.

“நாங்க ஒண்ணும் செய்யல. அம்மாசிதான் இலுப்பை மரக் குருவி கூட்டிலிருந்து முட்டையை களவாண்டான். அவன் தான் மாட்டு வரட்டியில் சுட்டு எல்லாருக்கும் கொடுத்தான்” நடுங்கி வாய் குழறி விஷயத்தைப் போட்டு உடைத்தாள் சிட்டு. விஷயம் வெளிப்பட்டுப் போனதில் தப்பிப் பிழைத்தார்கள் சிட்டும், பூங்கோதையும்.

“சுள்ளி பொறுக்கக் கூட இலுப்ப மரத்துப் பக்கம் போறதில்ல. ஆத்தா அணங்கா ஒறஞ்சு நிக்குற மரத்துல கால் பதிக்க என்ன நெஞ்சுறம் இந்த அம்மாசிக்கு. இதுகளும் தான் வாய் அலைஞ்சு வாங்கித் தின்னுறுக்குகளே’, கூடி நின்ன கூட்டத்திலிருந்து முகத்தை அஷ்ட கோணலாக்கி ஒருத்தி சொன்னாள்.

“சரிதான் விடுங்க. கொழந்தைங்க என்னமோ நாக்கு ருசிக்கு செஞ்சிருச்சுங்க. காளியாத்தா வெளையாட்டு அதுகளுக்கு தெரியுமா என்ன?” சுத்தி நின்ற எல்லோரையும் மட்டுப்படுத்திவிட்டு சிட்டு, பூங்கோதை நெத்தியிலும் திருநீறை பூசிவிட்டாள் கிழவி.

“வீட்டு கன்னி தெய்வம் துடியா இருக்கு. சொன்ன மாதிரி பொங்க வச்சு, கெடா கொடுத்துருங்க. காலத்துக்கும் ஆத்தா காவலா நின்னு குலத்த காப்பா” 

கிழவி வாயிலைத் தாண்டி காணிக்கையோடு மறைந்த பிறகு ஊர் சனங்கள் ஒவ்வொருவராக களைந்தார்கள்.

வயித்து வலி கண்டு துடிச்ச தைலம்மா முகம் அம்மாசி கண்களுக்குள் உறைந்து போனது. அதுதான் அவன் அவளைக் கடைசியாகப் பார்த்தது. அசலூருக்கு வாக்கப்பட்டுப் போய்விட்டதுகூட செய்தியாகத் தான் அவனுக்குக் கிடைத்தது. சிட்டும், பூங்கோதையும் கூட அதற்குப் பிறகு பூவரச மரத்துப் பக்கம் போவதில்லை. பூவரசு மரத்தடியில் பனை ஓலைகள் காஞ்சு சருகாகிக் கிடந்தது. எப்போதாவது காட்டுப் பக்கம் காடை பிடிக்கப் போகும் அம்மாசி பூவரசு மரத்தை ஏக்கத்தோடு பார்த்து வளர்ந்தான்.

தைலம்மாவுக்கு பூவரச மரத்தடியில் நெருப்பில் வாட்டிய காடையையும், மாட்டுச்சாண வரட்டியில் சுட்ட காடை, குருவி முட்டைகளையும் கொடுத்து அவள் கொண்டு வரும் ஓலை கொழுக்கட்டையையும், கருப்பட்டி கலந்த ஈசலையும் வாங்கிச் சாப்பிட்டு யானை வழித் தடங்களில் வனத்தைச் சுத்தி வந்த போது அம்மாசிக்கு வயது பதிமூன்று. இப்போது வயது அறுபதைத் தாண்டிவிட்டது. நரை விழுந்து பால்யத்து வனப்பெல்லாம் இழந்து எங்கோ ஒரு காட்டுக்குள் ஐம்பத்தைந்து வயது கிழவியாக களை பிடுங்கிக் கொண்டோ, மாடுகளுக்கு தீவனம் அறுத்துக் கொண்டோ இருக்க வேண்டும் தைலம்மாள் இப்போது. நினைக்கவே காந்தல் அலையோடி நெஞ்சு எரிந்தது அம்மாசிக்கு. 

நாச்சிவலசைச் சுத்தி சிலுசிலுத்து பாய்ந்து கொண்டிருந்த ஓடைகள் தைலம்மாவைப் போல தடம் மறைந்து போய்விட்டன. தீத்திப் பள்ளம், பீட் பள்ளம், ஸ்பிக் பள்ளம் என தடம் மறைந்து போன ஓடைகளால் பிரவாகமெடுத்து ஓடிக்கொண்டிருந்த நொய்யலும் சீக்குப் பிடித்து  நூலாக மெலிந்து போய்விட்டது.

 பனங்காடுகளெல்லாம் அழிந்து பனங்காடைகள் திசை தெரியாமல் மறைந்துவிட்டன. நூத்துக்கணக்கான பறவைகளையும், மரங்களையும் தெரியாத ஒரு தலைமுறை உருவாகிவிட்டது. பால்ய நாட்களின் நினைவுக் குகையைத் தவிர எல்லாமும் அந்நியமாகிவிட்டது அம்மாசிக்கு.

தைலம்மாவோடு அலைந்து திரிந்த மலைக் காடுகளை ஒட்டிய கிராமங்களில் யானைகளின் வழித் தடங்களை அழித்து சிமெண்டு வீடுகள் முளைத்துவிட்டன. சீதை, தைலம், பைன் மற்றும் வேலிக்காத்தான் போன்ற மரங்களின் விதைப் பரவலால் நாட்டு மரங்கள் அழிந்துவிட்டன. அழகுக்காக நடப்பட்ட கேமிரா, ஸ்காட்ச் ப்ரூம், ஈப்படோரியம், பார்த்தீனியம் போன்ற வெள்ளையர்களால் நடப்பட்ட புதர்ச் செடிகள் புல்வெளிகள் மீது படும் சூரிய ஒளியை மறைத்ததால் புல்வெளிகள் அழிந்து யானைகளின் உணவு ஆதாரம் அழிந்துவிட்டது. யானைகள் காட்டிலிருந்து அருகில் இருக்கும் கிராமங்களுக்குள் புகுந்து கரும்பு தோட்டங்களையும், வாழை தோப்புகளையும் அழிக்கத் தொடங்கிவிட்டன.

அம்மாசியின் கைவாகு பேசி நின்ற  மஞ்சக் கொல்லையிலும், கரும்புக் காட்டிலும் யானைகள் புகுந்து அழிச்சாட்டியம் பண்ணின. களத்து மேட்டில் கொட்டாய் அமைத்து இரவெல்லாம் காவல் காத்ததில் ஒடம்பு நோவு கண்டுவிட்டது அம்மாசிக்கு.

மலைக் கிராமங்களில் வெடிச்சத்தம் அடிக்கடி கேட்க ஆரம்பித்துவிட்டது. காட்டுவாசிகளின் பறை ஓசைக்கு பழகி விலகிப் போயிருந்த யானைகள் வெடி சத்தத்தில் நரம்புகள் அறுபட சிதறுண்டன.

நொய்யல் ஆறாக சாடிவயல் பகுதியில் ஒன்றுதிரண்ட ஓடைகளின் மறைவு நாளில் கொம்பன் யானைகளும் மறைந்து போயின. கொம்பன்கள் நடந்த தடத்தில் வௌவால் எச்ச வாடை படர்ந்து புராதன நினைவை சுமந்து நின்றன. தாய் யானை தோண்டிய நீருற்றுகள் மணல் மூடி தூர்ந்துவிட்டன. வெடிச் சத்த அதிர்வில் பெண் யானைகளின் பாலுணர்வு சுரப்பிகளும் தூர்ந்துவிட்டது. ஆண் துணை சேராமல் வெக்கை மூச்சோடு பெண் யானைகள் மறைந்த திசையெங்கும் வௌவால் எச்ச வாடை காலத்தின் முகத்தில் புழுதியை அறைந்து நின்றது.

மிளகாய் கொல்லையில் நீர் பாய்ச்சி விட்டு திரும்பும் போதோ, கரும்பு காட்டில் அறுப்பு முடித்து தோகை நரம்புகள் படிந்த நெஞ்சோடு திரும்பும் போதோ சிட்டுவைப் பார்ப்பான் அம்மாசி. தைலம்மா அசலூரில் வாக்கப்பட்டு தடம் மறைந்து வாழ்ந்து வந்தால், சிட்டுவோ உள்ளூர் சம்சாரிக்கு வாக்கப்பட்டு தடம் தேய்ந்து கொண்டிருந்தாள்.

பனி காலத்தில் காடெல்லாம் பூத்து சிரிக்கும் காட்டு மல்லியாக கதை பேசித்திரிந்த சிட்டுவும் மாறித்தான் போயிருந்தாள். ஒற்றை வார்த்தை பேசுவதற்குள் நெஞ்சுக் கூட்டில் முள் தைத்தவளாக சிதறுண்டு நகர்ந்தாள்.

முதிர்ந்த கிழவியான பிறகும் இலுப்பை மர அணங்கு பயமும், இச்சி வனத்தில் தலை கீழாகத் தொங்கிக் கொண்டிருந்த வௌவால்களின் நினைவு பயமும் அம்மாசியை விட்டு பத்தடி விலகி நின்றே பேச வைத்தது சிட்டுவை. அம்மாசியோடு ஒட்டிக் கொண்டு தொடர்ந்தது அவனது குருவி முட்டை திருட்டின் வெப்ப சலனம்.

“நான் பாத்தும் காலமாகிப் போச்சு. கடைசியா பாத்தப்ப கண்ணை சுத்தி கருப்பு வளையம் போட்டு வத்திப் போய் இருந்தா”, தைலம்மாவைப் பற்றி சிட்டு சொன்னதைக் கேட்டு திராணியற்று எச்சிலை முழுங்கி நெஞ்சாறிக் கொண்டான் அம்மாசி.

சாயமும், கழிவும் கலந்து நொய்யல் ஆத்தை முடமாக்கியது போல் பால்ய உறவுகளின் விரிசல் அம்மாசியை முடமாக்கிவிட்டது. பூங்கோதையைப் பற்றி கேட்க நினைத்து கேட்காமலேயே இருந்துவிடுவான். தூரத்தில் எறவு வாங்கி நின்று கொண்டிருந்த வெள்ளாட்டின் ஈன முனங்கல் போலாகிவிட்டது அம்மாசியின் குரல்.

இனி வரும் தலைமுறைகளுக்குத் தெரியாத அலையோடி நின்ற நினைவுகளோடு ஆளுக்கொரு திசையில் சுமக்க முடியாத ஞாபக அடுக்குகளோடு நடந்து மறைந்தார்கள் சிட்டும், அம்மாசியும். அவர்களின் வெக்கையோடிய மூச்சை வாங்கிக் கொண்டு நூலாக நொண்டியபடி ஓடியது நொய்யல் ஆறு.

*********       

துரை. அறிவழகன்

அப்பாவுக்கு மாற்றலாகி வந்த அந்தப் புதிய  ஊரும், புதிய வீடும், வீட்டைச் சுற்றியிருந்த சூழலும் எனக்கும், தங்கைக்கும் உடனடியாக பிடித்துப் போய்விட்டது. மதுரை காலனியில் குடியிருந்த போது பார்க்கக் கிடைக்காத காட்சிகள் சிவகங்கை புதுவீட்டைச் சுற்றி அமைந்து அந்த பத்து வயதில் என்னை கிளர்ச்சியுறச் செய்துவிட்டது. தீப்பெட்டி அடுக்கியது போன்ற மதுரை காலனி வீடு அல்ல இந்தப் புது இடம். வேம்பு, இலுப்பை, அசோகா என சூழ்ந்திருந்த மரங்களும், கண்மாய், குளங்களும் ரம்மியமான மன நிலையைக் கொடுத்து பூர்வீக கிராமத்து நினைவை மலரச் செய்தன.

ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் திருவிழா என்றால் பூர்வீக கிராமத்திற்கு எங்களை அழைத்துப் போய்விடுவார் அப்பா. அரசமரமும், கண்மாயும் வழித்தடத்தில் இருந்து வரவேற்கும் பனை சூழ்ந்த ‘வலையன் வயல்’ தான் எங்களது பூர்வீக கிராமம். பூர்வீக மச்சு வீட்டுக்கு எதிரில் இருந்த கசாலை நெடியோடு இருந்தது சிவகங்கையில் இந்தப் புது இடம். முற்றத்தில் இருந்த வேப்பமரம் தேடி வரும் பறவைகளைப் போல கூடும் வசந்தா நகர் சிறுவர்கள் என்னோடும், தங்கையோடும் வெகு இயல்பாக கலந்துவிட்டார்கள். புது பள்ளியில் சேர இன்னும் சில நாட்கள் இருந்தன. புதுப் பள்ளிக்கூடத்தைப் பார்ப்பதற்கு முன்பாக வசந்தா நகர் வாண்டுகளோடு ‘அமுதா டாக்கீஸை’ பார்த்துவிட்டோம் நானும் தங்கையும். பெரிய பள்ளிக் கூடத்தில் படித்த ஜோதி தான் வசந்தா நகர் வாண்டுகளுக்கு  எல்லாம் லீடர்.

ஜோதியோடு அனுப்புவதென்றால் எந்த வீட்டிலும் எதிர்ப்பு வருவதில்லை. அப்படி ஒரு நம்பிக்கை அவன்மீது. அப்பாவுக்கும் ஜோதி மீது ஒரு நம்பிக்கையும் பற்றுதலும் ஏற்பட்டுவிட்டது.

“இப்ப இருந்தே நாலு இடம் தனியா போய் வரப் பழகட்டும்.நம்ம கொடுக்கப் பிடிச்சுக்கிட்டே வளைய வந்தா கரையேற முடியாது” என்று அம்மாவை அடக்கிவிடுவார் அப்பா.

அமுதா டாக்கீஸில்’ மாலை காட்சிக்கு ஜோதி தலைமையில் தான் ‘சங்கர் சலீம் சைமன்’ சினிமா பார்க்கச் சென்றோம். எப்படிப் பட்ட கூட்டமென்றாலும் புகுந்து டிக்கெட்டோடு வந்துவிடுவான் ஜோதி. டூரிங் டாக்கீஸை அப்போது தான் முதன் முறையாக நான் பார்த்தது. தரை டிக்கெட்டில் குளு குளுப்பான மண் தரையில் உட்கார்ந்து படம் பார்த்தது பூர்வீக கிராமத்து டூரிங் டாக்கீஸில் ‘காத்தவராயன்’ பார்த்த நிகழ்வை எனக்கு நினைவுபடுத்தியது.

அழகான இசைக்கு வண்ணமயமான பல்புகளோடு உயரே எழுந்த சிவப்பு பட்டு துணியிலான திரைச்சீலையை முதன் முதலாகப்  பார்த்ததும் அமுதா டாக்கீஸில் தான். மாலைக் காட்சிக்கு குறிப்பிட்ட நேரம் என்று எதுவும் கிடையாது. ஆர்.டி. பர்மனின் பிரபலமான இந்தி இசை ஒலிக்க சிமிட்டி சிமிட்டி எரியும் வண்ணவிளக்குகள் கோர்க்கப்பட்ட பட்டு திரைச்சீலை உயரும். நன்றாக இருட்டுப் படும் வரை கருப்பு வெள்ளையில் காந்தி, நேரு பற்றிய செய்திப் படங்கள் ஓடிக்கொண்டிருக்கும். ஒவ்வொரு ரீல் முடிந்து அடுத்த ரீல் மாட்டும் ஐந்து நிமிட இடைவெளியில் கழுத்தில் கயிறு கட்டி தொங்கவிடப்பட்ட தட்டில் முறுக்கு, கடலை மிட்டாய், இஞ்சி மரப்பா, சீடையுடன் நாலைந்து சிறுவர்கள் சுற்றி வருவார்கள். சினிமா ஓட ஆரம்பித்தவுடன் முறுக்கு வாசத்தை விட்டு விட்டு சிறுவர்கள் அரங்குக்கு வெளியே மறைந்துவிடுவார்கள்.

ஊரை விட்டு விலகி இரயில்வே நிலையத்துக்கு அருகில் முற்றத்தில் நின்ற வேப்ப மரத்தோடு எந்நேரமும் வீசும் குளிர்ந்த காற்றுடனும் ஒரு பரவசத்தை ஏற்படுத்தியது அந்தப் புது வீடு. எத்தனை முறை பெருக்கி சுத்தம் செய்தாலும் அடுத்த அரைமணி நேரத்தில் பூவையும், பழுத்த பழங்களையும், முதிர்ந்த இலைகளையும் வாசலெங்கும் உதிர்த்துவிடும் வேப்பமரம். வேப்ப மரமே கெதியென கிடக்கும் சில காகங்கள்.

அருகாமை வீடுகளில் இருந்த குழந்தைகள் பிரம்புக் கூடையுடன் வேப்பம் பழம் பொறுக்க அதிகாலையில் வந்து விடுவார்கள். வெயிலோடிய வீட்டு முற்றங்களில் விரிக்கப்பட்ட அரிசி சாக்கில் பிதுக்கி எடுக்கப்பட்ட வேப்பம் பழத்து  கொட்டைகள் பரப்பப்பட்டு பகலெல்லாம் காய்ந்து கொண்டிருக்கும்.. அருகில் இருந்த செக்கில் காய்ந்த வேப்பங் கொட்டைகளை எடைக்குப் போட்டு சேமியா ஐஸ்ஸும், மிட்டாய்களும் தாராளமாக வாங்கிச் சாப்பிடுவார்கள் வசந்தா நகர் வாண்டுகள். புது இடத்தின் பழக்க வழக்கங்கள் ஒரு சில நாட்களிலேயே எனக்கும், தங்கைக்கும் பழகிப் போய்விட்டது.. காய்ந்த வேப்பங் கொட்டையை ஓட்டோடு எடைக்குப் போட்டால் ஒரு விலை; ஓட்டை உடைத்து விட்டு பச்சை வாசத்துடன் போட்டால் கூடுதலான விலை என்ற செக்குக்காரரின் கணக்கெல்லாம் எனக்கு அத்துபடியாகிவிட்டது. சினிமாவுக்கோ வேறு தின்பண்டங்களுக்கோ நாங்கள் வீட்டை எதிர்பார்ப்பதே இல்லை.

நாங்கள் வேப்பங் கொட்டையை பொறுக்கிக் கொண்டிருக்கும் போது பல் விலக்க வாகான குச்சிகளை உடைத்துக் கொள்வார் அப்பா. பிரஷ் வைத்து விலக்குவதெல்லாம் அவருக்கு திருப்திப்படாது. நானும் தங்கையும் வேப்பங் கொட்டையின் ஓட்டை உடைத்து பச்சை நரம்போடிய பருப்புகளைத்தான் செக்கில் எடைக்குக் கொடுப்போம். கொஞ்ச நாளிலேயே செக்கு உரலிலிருந்து கிளம்பி அந்த இடத்தையே சூழ்ந்திருக்கும் வேம்பு வாடையின் கசப்பு எங்களுக்குப் பழகிப் போய்விட்டது. கையில் சேரும் காசில் வசந்தா நகரிலிருந்த தாஜ் புரோட்டா கடையில் முட்டை புரோட்டாவும், அருகிலுள்ள பெட்டிக் கடையில் மாயாவி கதைப் புத்தகங்களையும் வாங்கிக் கொண்டு தான் வீடு திரும்புவோம்.

புது இடத்தில் எங்களை அதிகம் கவர்ந்தவர் அருகில் குடியிருந்த வண்டித் தாத்தா. அவர்தான் எங்கள் மீது மிகப்பெரிய கவர்ச்சியைப் பாய்ச்சியவர்.      அந்தப் பகுதியில் இருந்த குழந்தைகளுக்கு அவரது உண்மையான பெயர் தெரிந்திருக்கவில்லை. குழந்தைகள் உலகில் வெண்தாடியோடு தோன்றி அவர்களால் வைக்கப்பட்ட ‘வண்டித் தாத்தா’ பெயரே நிலைத்து விட்டது. எப்போதோ ‘கோவிந்து’ என்று கூப்பிட்ட நினைவு பெரியவர்களை விட்டு அழிந்து குழந்தைகள் வைத்த பெயரே அவர்களின் ஞாபக அடுக்குகளுக்குள் பதிந்துவிட்டது. கோவிந்து என்று யாராவது கூப்பிட்டால் கூட வண்டித் தாத்தா திரும்பிப் பார்ப்பாரா என்பது சந்தேகமே.

சிவகங்கை அரண்மனை வாசலில் இருந்து தொண்டி வழித் தடத்தில் நகர பரபரப்பு இல்லாத வெளியில் ரம்மியமான சூழலில் அமைந்திருந்தது வசந்தா நகர். ஒரு மேட்டையும் இரண்டு வேப்ப மரத்தையும் தாண்டினால் பெரிய தோப்பின் முகப்பில் ஒரு ஓட்டு வீட்டில் குடியிருந்தார் வண்டித் தாத்தா. வாழையும், தென்னையும், பப்பாளியும் செழித்து நின்ற தோப்பு அது. குதிரை தாத்தாவின் காவலில் குலை தள்ளி நின்றன வாழைகளும், தென்னைகளும். ஓட்டு வீட்டை ஒட்டிய சின்ன தென்னங்கீத்து வேயப்பட்ட கொட்டில்தான் வண்டித் தாத்தாவின் குதிரை லாயம்.  குதிரையைப் பற்றிய அவரது பிரஸ்தாபங்கள் வாய்வழி கதைகளாக அந்தப் பகுதி முழுவதும் பரவியிருந்தது.

ஈரோடு,  அந்தியூர் குருநாதசாமி கோவில் திருவிழாவின் மூன்றாம் நாள் கூடிய சந்தைக்கு ராஜஸ்தானிலிருந்து விற்பனைக்கு வந்திருந்த மார்வாரி குதிரையை விலை கொடுத்து வாங்கி வசந்தா நகருக்கு ஓட்டி வந்தபோது வண்டித் தாத்தாவின் பூரித்துப் போயிருந்த முகத்தைப் பற்றிய கதைகள் அந்தப் பகுதியை விட்டு இன்னும் மறையவில்லை. வாங்கிய புதிதிலேயே அவரோடு ஒட்டிக் கொண்டு சமத்தாக வந்து சேர்ந்தது மார்வாரி குதிரை. வசந்தா நகருக்கே ஒரு கம்பீரத் தோற்றத்தை ஏற்படுத்திவிட்டது மார்வாரிக் குதிரை. மண்ணை சீய்க்காமல் கால்களை தூக்கி வைத்து மார்வாரி குதிரை நடக்கும் அழகும், கம்பீரமும் சொல்லி மாளாது.

“என்னைப்போல ராஜ ரத்தம் ஓடும் குதிரையாக்கும்” என்று வாய் ஓயாமல் பார்ப்பவர்களிடமெல்லாம் பெருமை பொங்கச் சொல்வார் வண்டித் தாத்தா. சாதாரண நாட்டுக் குதிரை வைத்திருந்த போதே தன்னை ‘வேலு நாச்சியார்’ பரம்பரை என்று சொல்லிக் கொண்டு ராஜ நடை போட்டு சுற்றி வரும் வண்டித் தாத்தாவின் அலட்டலும் பெருமை பேச்சும் மார்வாரி குதிரை வந்தவுடன் சொல்லமுடியாத அளவிற்கு விரிந்துவிட்டது போயிலை கரையேறிய பல்லாக வண்டித் தாத்தாவின் முகம் மாறிவிடும் குதிரையின் பெருமை பேசும் போது. அலெக்ஸாண்டர் கூட தன் குதிரை குறித்து அவ்வளவு பெருமை பட்டிருக்க மாட்டார். வெண்தாடிக்குள் மறைந்து கிடக்கும் வண்டித் தாத்தாவின் முகத்தில் ஒரு ராஜகளை வந்துவிடும் மார்வாரி குடிரையப் பற்றி பேசும் போது..

மார்வாரி குதிரை வந்தவுடன் வண்டியையும் அலங்கரித்து, ரதம் போல் மாற்றிவிட்டார் வண்டித் தாத்தா. வாகை, கருவேல மரங்களால் செய்யப்பட்ட வண்டியை பூ வேலைப்பாடுகள் கொண்ட திரைச் சீலைகளாலும், பலவித மணிகளாலும், பட்டு நூல் குஞ்சங்கலாலும் அலங்காரம் செய்து ஜமீன் காலத்து சாரட் வண்டிகளை தோற்கடித்துவிட்டார் வண்டித் தாத்தா. உட்கார்ந்து பயணம் செய்ய வசதியாக சிவப்பும், நீலமும் கலந்த பட்டு மெத்தையில் வண்டி ஜொலித்தது. ஓட ஆரம்பித்து விட்டால் வண்டியின் இருபுரமும் உள்ள சன்னல்கள் வழியாகப் புகும் காத்து பயணிப்பவர்களை மெய்மறக்கச் செய்துவிடும்.

அரண்மனை வாசல் குதிரை வண்டி நிலையத்தில் ராஜ அந்தஸ்து கிடைத்துவிட்டது வண்டித் தாத்தாவிற்கு. குளிர் காலத்தில் உபயோகப்படுத்த ஜமுக்காளம் எப்போதும் வண்டியில் இருக்கும். லாயத்தில் எந்த நேரமும் தீவனத்துக்குகுறைவிருக்காது. பசும் புல் மட்டுமல்லாமல், கம்பு, சோளம் கலந்த கலவையும் தயாராக இருக்கும். பனி காலத்தில் நெல் கஞ்சி குடித்து உடம்பில் சூடு ஏற்றிக் கொள்ளும் மார்வாரி குதிரை.

புது இடம் எங்களைப் போலவே அப்பாவுக்கும் பிடித்துப் போய்விட்டது. தோப்பும், குதிரை லாயமும், வேப்ப மரமும் அவருக்குள் அவரது கிராமத்து மணத்தைப் பரவவிட்டிருக்க வேண்டும்.

அந்த ‘வசந்தா நகர்’ குடியிருப்பில் இருந்து சைக்கிள் இல்லாத குழந்தைகள் வண்டித் தாத்தாவின் குதிரை வண்டியில் தான் பள்ளிக்கூடம் சென்றார்கள்; என்னிடமும் சைக்கிள் இல்லாதது என்னை சந்தோஷப்படுத்தியது.

வண்டித் தாத்தாவையும், குதிரை வண்டியையும் அப்பாவிற்குப் பிடித்துப் போய்விட்டது. அப்பாவிற்கும் கொஞ்சம் குதிரையைப் பற்றி தெரிந்திருந்தது.  இரண்டு கண்களுக்கும் மேலே நெற்றிப் பொட்டில் இரு ந்த “ஸ்தான சுழி”யைப் பார்த்தவுடன் வண்டித் தாத்தாவிடம் சொன்னார்,

 “நல்லா சுழி உள்ள குதிரையாத்தான் அமைந்துள்ளது. ‘ஸ்தான சுழியும்’. கழுத்தில் உள்ள ‘ராஜ முந்திரி’ சுழியும் உன்னைய எங்கேயோ உயர்த்தப் போகுது”.

அப்பா சொன்னதில் புல்லரித்துப் போய்விட்டார் வண்டித் தாத்தா.

“என்னோட காலம் முடியப் போகுது. ஒங்க வார்த்த பலிச்சு வம்சம் விருத்தியாகி தழைச்சு நின்னா அதுவே போதும்”, கூனிக் குறுகி பணிவாகச் சொன்னார் வண்டித் தாத்தா.  அப்போதே என்னையும், தங்கையையும் பள்ளிக் கூடத்தில் விட்டு, அழைத்து வரும் பொறுப்பை வண்டித் தாத்தா ஏற்றுக் கொண்டுவிட்டார்.

 வசந்தா நகரிலிருந்து இரயில்வே காலனி, அமுதா டாக்கீஸ் வழியாக ‘சுவாமி விவேகானந்தா’ பள்ளியை அடைய எடுக்கும் அரைமணி நேரமும் பறப்பது போன்ற உணர்வுதான். ‘கடக்…கடக்..’ என்று ஓடும் வண்டித் தாத்தாவின் குதிரை வண்டி ஓட்டமே பள்ளிக்கூடம் செல்லும் அனுபவத்தை எனக்கு ஆனந்தமாக மாற்றியிருந்தது

நானும், தங்கையும் தான் குதிரை வண்டிப் பயணம்; ராஜா ஹை ஸ்கூலில் படித்த அக்கா சைக்கிளில் போய்விடுவாள். குதிரை வண்டிப் பாதையில் தான் அவளது சைக்கிள் பயணமும். எங்களுக்கு முன்பாகவே கிளம்பிவிடும் அக்காவை அமுதா டாக்கீஸ் தாண்டுவதற்குள் குதிரை வண்டி பிடித்துவிடும். அக்காவைத் தாண்டிச் செல்லும் போது ‘ஹூய்..ஹூய்..’ என்று நானும், தங்கையும் எழுப்பும் கெக்கலிப்பு சத்தத்திற்கு அக்கா அமைதியாக ஒரு புன்னகையை மட்டும் பதிலாக அளிப்பாள். தினசரி நடக்கும் இந்த ரேஸ் விளையாட்டில் வண்டித் தாத்தாவும் குஷியாகிவிடுவார்.

இரயில்வே காலனியை கடந்து மேற்காகத் திரும்பியவுடன் தன்னுடைய பதினான்கு நீலப்பட்டு நூல் குஞ்சங்கள் வைக்கப்பட்ட சாட்டைக் குச்சியை வண்டியின் ஆரக்காலில் ‘தட..தட’க்க வைத்து குதிரையை வேகப்படுத்துவார்.

வண்டித் தாத்தாவோடு நீண்ட காலம் பழகிவிட்ட மார்வாரி குதிரை ஆரக்கால் சத்தத்தில் வாலைத் தூக்கிக் கொண்டு பாய்ச்சலை அதிகரிக்கும். அமுதா டாக்கீஸ், இலுப்பைத் தோப்பு, கிணத்தடி காளியம்மன் கோவில் எல்லாம் வண்டி ஓட்டத்தில் பின்னோக்கிப் போகும்; எல்லா நாளும் அக்காவை முந்திக் கொண்டு வண்டித் தாத்தாவின் குதிரை பாய்ந்தபடி இருந்தது. ஒரு அழகுக்காகவும், ஆரக்காலில் கொடுத்து சத்தம் எழுப்பவும் தான் சாட்டைக் குச்சியை வைத்திருந்தார் வண்டித் தாத்தா. குதிரை மேல் படாமல் காற்றில் சுழலும் குஞ்சங்கள். நெருப்பில் வாட்டிய கொல்லிமலை காட்டு மூங்கிலில் செய்யப்பட்ட பூதடி சாட்டை காற்றில் சுழன்று விநோதமான விசில் சத்தம் எழுப்பும். விசில் சத்தத்தின் சமிக்ஞை புரிதலில் மார்வாரிக் குதிரையின் பயண ஓட்டம் அமைந்திருக்கும்.

“சொரூபராணி ஓடும் அழகைப் பார்த்தீங்களா”, ஒரு நாள் வண்டித் தாத்தா யாழ்ப்பாணத்து போயிலையை பல்லிடுக்கில் அடக்கிக் கொண்டு சொன்னபோது தான் குதிரையின் பெயர் எங்களுக்குத் தெரிய வந்தது. அதற்குப் பிறகு நாங்களும் குதிரை என்று சொல்வதை நிறுத்திக் கொண்டு சொரூப ராணி என்று சொல்லத் தொடங்கினோம். அப்படிச் சொல்வதில் ஒருவித பரவசம் இருந்தது. சொரூபராணியின் காதுகள் உட்புரம் மடிந்து நுனிகள் தொட்டுக் கொண்டிருக்கும். வெள்ளையும், கருப்பும் திட்டுகள் படர்ந்த உடலுடன் ஐந்தரை அடி உயரத்தில் கம்பீரமாக இருக்கும் சொரூப ராணி என்றால் வசந்தா நகர் குழந்தைகளுக்கெல்லாம் கொள்ளைப் பிரியம்.

நாங்கள் கூப்பிட்டு கூப்பிட்டு பழக்கியதில் தன்னுடைய பெயரை தனது நினைவு மண்டலத்தில் பதித்துக் கொண்டது சொரூபராணி. பெயர் சொல்லி கூப்பிட்டபடி ஆசையோடு நெருங்கும்  குழந்தைகளைப் பார்த்து கனைப்பு கனைத்து பச்சைப் புல் வாடை கலந்த வெப்ப மூச்சை பரவவிடும் சொரூபராணி. குதிரையின் விநோத வாடையும், குதிரை லாயத்தின் பசும்புல் நெடியும் வசந்தா நகரத்துக் குழந்தைகள் எல்லோருக்கும் பழகிப் போய்விட்டது.  

தினசரி வழக்கமாக அப்பா, பச்சை பெயிண்ட்டு அடித்த டிரங்கு பெட்டி மேல் இருக்கும் பிலிப்ஸ் ரேடியோ குமிழைத் திருகியவுடன் ” ஆகாஸ்வாணி செய்திகள் வாசிப்பது ‘சரோஜ் நாராயணசாமி’ என  ஒலிக்கத் தொடங்கியவுடன் நானும் படுக்கையில் இருந்து எழுவது வழக்கமாகிவிட்டது. எழுந்தவுடன் சொரூபராணியை ஒரு பார்வை பார்த்து கட்டிலிருந்து சிறிது புல்லை உருவிப் போட்ட பிறகு தான் மற்ற வேலைகள் நடக்கும்.

ஞாயிற்றுக் கிழமைகளில்  அடைத்துக் கொண்ட வாழைத் தார்களுடன் தாத்தாவின் வண்டி அரண்மனை வாசல் தெருவில் கூடும் சந்தைக்கு கிளம்பிவிடும். சொரூபராணியும், வண்டியும் அன்று எந்த அலங்காரமும் இல்லாமல் அபிசேகத்திற்குத் தயாராகும் அம்மன் சிலை போல இருப்பார்கள். எப்பொழுதும் சொரூபராணி நடக்கும் போது ஒலிக்கும் சலங்கை சத்தம் அன்று இருக்காது. பாய்ச்சல் காட்டாமல் நடக்கும் சொரூபராணிக்கு உற்சாகமெல்லாம் குன்றிப் போயிருக்கும் ஞாயிற்றுக்கிழமைகளில். நானும், தங்கையும் கூட வீட்டுக்குள் அடைந்தபடி வானொலிப் பெட்டிக்குள் புதைந்து விடுவோம் அன்று. எனக்கு ‘எம்.எஸ்.வி’ இசை என்றால் தங்கைக்கு ‘இளையராஜா’ இசை’.

தலையணைகள் அடுக்கி இருக்கும் பரணுக்குள் இருந்தபடி தான் ஞாயிற்றுக்கிழமையின் பெரும்பாலான பொழுதுகள் கழியும். ‘அப்துல் ஹமீதின்’ ‘பாட்டுக்குப் பாட்டு நிகழ்ச்சி முடிந்த பிறகுதான் மதிய சாப்பாட்டிற்காக பரணைவிட்டு இறங்குவோம். பாப் இசைப் பாடல்கள் என்றால் எங்களின் ஆர்ப்பாட்டமும், சத்தமும் எல்லை மீறிவிடும். அதுவும் ‘சின்ன மாமியே..உன் சின்ன மகளெங்கே’ பாட்டென்றால் சொல்ல வேண்டியதே இல்லை. குதியாட்டத்தில் வீடே ரெண்டாகிவிடும். தாங்க முடியாமல் போகும் போது அடுப்படியில் இருந்து அம்மா குரல் வெடிக்கும்: “வந்தேன்னா ரெண்டு பேருக்கும் இருக்கு. சத்தமில்லாம வெளையாடத் தெரியாது. வீடா என்ன?” ஒரு நிமிடம் அமைதிக்குப் பிறகு மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறிவிடும். ஓரளவு கத்திப் பார்த்துவிட்டு அடங்கிப் போய்விடுவாள் அம்மா.

திங்கட்கிழமை மீண்டும் ‘ஜல்..ஜல்’ சத்தத்தோடு சாரட் வண்டி தயாராகிவிடும். பள்ளிக்கூடம் போகும் வழியில் அழகி பாட்டி கடைதான் சாரட் வண்டிக்கு முதல் நிறுத்தம். வசந்தா நகரிலிருந்து தார் ரோட்டுப் பாதையை விட்டு மேற்காக நீண்டு போகும் சிவப்பு மண் தடத்தின் முதல் திருப்பத்தில் வேப்ப மரத்தடியில் சின்ன ஓட்டு வீட்டு முகப்புதான் அழகி பாட்டியின் பெட்டிக் கடை. தேன் மிட்டாய், கடலை உருண்டை, மாவுருண்டை, முறுக்கு, கல்கோனா, குருவி ரொட்டி என்று தின்பண்டங்கள் நிறைந்த பத்து பாட்டில்கள், காளிமார்க் கலர், வாழைப்பழம், வெத்தலை சீவல் என பாட்டியின் பெட்டிக் கடை சாமான்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்.

தங்கைக்கு தினசரி கல்கோனா இருக்க வேண்டும். வாயில் போட்டு அதக்கிக் கொண்டு இனிப்பு நீரை உறிஞ்சியபடி தான் இருப்பாள். அழகி பாட்டியின் பெட்டிக்கடையைத் தாண்டி, அமுதா டாக்கீஸையும் கடந்து வடக்கே பிரியும் இலுப்பை தோப்புப் பாதையில் வளையாமல் நேராகப் போனால் மஜீத் தெருவின் மூன்றாவது வீடு தான் அடுத்த நிறுத்தம். அதுதான் ரைகானாவின் வீடு; ரைகானா என் வகுப்பில் படிப்பவள்.  எல்லா பாடங்களிலும் முதல் மார்க் எடுப்பவள் ஆங்கில பாடத்தில் மட்டும் என்னிடம் தோற்றுப் போய்விடுவாள். மதுரை கான்வெண்ட் படிப்பு சரளமான ஆங்கில அறிவை எனக்குக் கொடுத்திருந்தது. குதிரை வண்டி பின்புறமாக கால்களைத் தொங்கவிட்டுக் கொண்டுதான் எப்போதும்  ரைகானா பயணிப்பாள்.

பின்னோக்கிப் போகும் மரங்களையும் வீடுகளையும் பார்த்துக் கொண்டே வரவேண்டும் அவளுக்கு. உட்காரும் இடத்தை மாற்றிக் கொள்ளவே மாட்டாள்; அவ்வளவு பிடிவாதமும் ராங்கித்தனமும் கொண்டவள் ரைகானா. இருந்தாலும் எனக்கு அவள் மீது ஒரு பிரியம் இருந்தது.

தெப்பக்குளத்திலிருந்து தான் சிவகங்கையின் நகரம் ஆரம்பிக்கும். மணிமுத்தாறு, உப்பாறு, விருசுழியாறு, பாம்பாறு, வைகையாறு என சிவகங்கையைச் சுற்றி ஓடும் ஆறுகளின் நீரோட்டம் தெப்பக்குளத்து ஊத்துக் கண்ணை எல்லா காலத்திலும் திறந்து வைத்து குளத்தை சுற்றுச் சுவர் உச்சாணி  வரை தளதளத்து நிறைந்திருக்கும். தெப்பக்குளத்தை சுற்றி வந்தால் சிவன் கோவில் தெருவில் தான் இருந்தது ‘சுவாமி விவேகானந்தா’ பள்ளி. சில்லிப்பான காற்றோட்டத்தில் குளு குளுப்பாக அமைந்திருந்தது பள்ளி.

 சிவன் கோவிலைப் பார்த்த மாதிரியாக சாலைக்கு சற்று இறக்கமாக அமைந்திருந்தது பள்ளிக்கூடம். பள்ளியையும் ரோட்டையும் இணைத்து இருந்தது சின்ன பாலம். பாலத்திற்குக் கீழ் வடக்கு தெற்காக ஓடிக் கொண்டிருக்கும் ஓடை,  மழைக்காலத்தில் மழை நீரோடு செத்தைகளை தேங்கவிடாமல் அரித்துக் கொண்டு ஓடிவிடும். 

சொரூப ராணியை வரவேற்க ரைகானாவின் தோழிகள் பானுவும் ஷமீரா பேகமும் எங்களை முந்திக் கொண்டு பள்ளிக்கூட வாசலில் காத்திருப்பார்கள். பள்ளிக்கும் அவர்கள் வீட்டிற்கும் நடக்கும் தூரம் தான். சிவன் கோவில் வடக்குத் தெருவில் நேராக நடந்தால் அரண்மனையைத் தாண்டி காந்தி வீதியில், நேரு பஜார் பகுதியில் தான் அவர்கள் வீடு இருந்தது. காந்தி வீதி மீன் வாடையும், பூ வாடையும் அவர்களோடு ஒட்டிக் கொண்டு தொடரும். பானுவின் மரிக்கொழுந்து வாடையில் எங்கள் மீது ஒட்டிக் கொண்டிருக்கும் குதிரை வாடையெல்லாம் காணாமல் போய்விடும்

நல்ல இளவெயில் காலம் அது. பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை. கிராமத்திலிருந்து என் வயதொத்த சித்தப்பா குழந்தைகள் வந்ததில் வீடே பிரகாசமாகிவிட்டது. பரமன், ரவி, நகுலேஸ்வரி மூவரையும் குதிரை லாயத்திற்குத் தான் முதலாவதாக அழைத்துச் சென்றேன். கிராமத்தில் செவலை, மயிலைகளோடும், வெள்ளாடுகளுடனும் திரிந்தவர்களுக்கு குதிரையைப் பார்த்தவுடன் குஷி கிளம்பிவிட்டது.

ஆசையோடு தொட்டுத் தொட்டுப் பார்த்தாள் நகுலேஸ்வரி. “எவ்வளவு அழகாக இருக்கிறது. குதிரை வண்டியில் தான் நீ பள்ளிக்கூடம் போகிறாயா?”

என்னை முந்திக் கொண்டு “ஆமாம்” என்பது போல் ஒரு கனைப்பு கனைத்தது சொரூபராணி.  குதிரையின் பெயர் கூட சித்தப்பா பிள்ளைகளுக்குப் பிடித்துப் போய்விட்டது.

“ஊருக்குப் போனதும் முதல் வேளையாக வண்டி மாட்டுக்கு பேர் வைக்கணும்” என்றான் பரமன். கிராமத்தில் வில்லு வண்டி இருந்தது. ஆனால் சாரட் வண்டி போல் அலங்காரமோ, உட்காருவதற்கு வெல்வெட் மெத்தையோ இருக்காது. வைக்கோல் பரப்பி, மேலே ஒரு சாக்கை விரித்து வைத்திருப்பார் சித்தப்பா.

மேற்கூரையில்லாமல் வானம் பார்த்திருக்கும் கிராமத்து வில் வண்டி; மயிலை, செவலை போல் கழுத்தில் மணி தொங்கிக் கொண்டிருப்பது தான் ஒரே ஒற்றுமை. புது ஆள்களைப் பார்த்துவிட்டால் பல்லை ஒரு தினுசாக கடித்துக் கொண்டு கனைக்க ஆரம்பித்துவிடும் சொரூபராணி. போதாதற்கு பொசு பொசுவென்று நீண்டு முழங்காலுக்குக் கீழ் வரை தொங்கிக் கொண்டிருக்கும் வாலை உயர்த்திக் கொண்டு கழுத்தைத் திருப்பி புது விருந்தாளிகளுக்கு ஒரு உற்சாக வரவேற்பு கொடுக்கும் சொரூபராணி.

சொரூபராணிக்கு ஐந்து வயதுதானிருக்கும் என்று வண்டித் தாத்தா சொல்லியிருக்கிறார். ‘வசந்தா நகருக்கு’ சொரூபராணி வந்து சேர்ந்த கதையையும், அதன் உடம்பில் ஓடும் ராஜ ரத்தம் குறித்த பெருமையையும் வண்டித் தாத்தா சொன்ன விஷயங்களோடு எனது கற்பனையையும் சேர்த்துச் சொல்லி மூவரையும் வியப்பில் ஆழ்த்திவிடுவேன். அதோடு நிறுத்தாமல் வண்டித் தாத்தாவும், ராணி வேலு நாச்சியார் பரம்பரையில் வந்தவர் என்பதையும் சொன்னவுடன் மூன்று பேரும் ‘ஆ’ என்று வாய்பிளந்துவிடுவார்கள்.

“கசாலை நெடி  இந்த குதிரை கொட்டிலிலும் அப்படியே அடிக்குது”, மூக்கை உறிஞ்சியபடியே சொல்வாள் நகுலேஸ்வரி.

“மாட்டு வாடை தான் குதிரைக்கும்”, பெரிய மனித தோரணையில் சொல்வான் பரமன்.

“அதெல்லாம் இல்லை. ஒவ்வொண்ணுக்கும் ஒரு வாடை” இலுப்பை தோப்பு வௌவால் எச்சவாடையையும், ரைகானா வீட்டு கெடா நெடியையும் மனதில் வைத்து இடையில் புகுந்து நான் சொல்வேன்.

எங்கள் பேச்சில் அதிக அக்கறை எடுத்துக் கொள்ளாமல் கொட்டிலின் மூங்கில் படல் மேல் இருந்த புல்லை உருவி சொரூபரானிக்குக் கொடுத்துக் கொண்டிருப்பாள் நகுலா. எங்கள் எல்லோரையும்விட அவள்தான் சொரூபராணியிடம் அதிகம் ஒன்றிப் போயிருப்பாள். கிராமத்தில் வெள்ளாட்டங் குட்டிக்கு புளியம்பழம் ஊட்டிவிடும் அதே தோரணையோடு சொரூபராணியின் முகத்துக்கு நேராக புல்லை நீட்டுவாள். அதுவும் வெகு ஆர்வமாக வாங்கிக் கொண்டு சுவாரஸ்யமாக அரைக்கும்.

படலில் எக்கி எக்கி நகுலா எடுத்துப் போடும் புல் தழையை வாங்கி அசராமல் அரைத்து முழுங்கும் சொரூபராணி. எனக்கே இது ஆச்சர்யத்தைக் கொடுத்தது. யார் கொடுத்தாலும் ஒரு கைக்கு மேல் மோந்து பார்த்துவிட்டு முகத்தைத் திருப்பிக் கொள்ளும் சொரூபராணி அதிசயமாக நகுலா கொடுக்கக் கொடுக்க ஆசையோடு வாங்கி கபளீகரம் செய்யும்.

வசந்தா நகரில் யார் வீட்டுக்கு விருந்தாளிகள் வந்தாலும் உற்சாகமாகிவிடுவார் வண்டித் தாத்தா. அவரது தோற்றமும் தோரணையும் தலைகீழாக மாறிவிடும். எப்பொழுதும் வெள்ளை வேட்டியும் முண்டா பனியனுமாக காட்சியளிப்பவர் கலர் வேட்டியும், கை வைத்த பனியனுமாக புது அலங்காரத்தில் ராஜ கம்பீரமாக ஆகி விடுவார் வண்டித் தாத்தா; பார்வையும் கூட மாறிவிடும். வண்டி கூட்டுக்கு மேல் வண்ணமயமான புது ஜமுக்காளம் முளைத்து. ஊரைச் சுத்திக் காட்ட சாரட் தயாராகிவிடும்.

வசந்தா நகரிலிருந்து மேற்காக அரண்மனையை நோக்கிப் போகும் சாலையில் சாரட்டைப் பறக்கவிட்டு, அரண்மனையை ஒரு சுற்று சுற்றி வந்து, காந்தி மார்க்கெட்டுக்குள் புகுந்து வெளியேறி, சிவன் கோவிலுக்கு தெற்கில் தெப்பக்குளத்தைச் சுற்றி அமுதா டாக்கீஸ் நோக்கிப் போகும் செம்மண் தடத்தில் வண்டியை ஓடவிடுவார். மஜீத் நகரையும், அமுதா டாக்கீஸையும் கடந்து மேற்கு நோக்கி போய் இரயில் நிலையத்து நுழைவு வாசலில் இருக்கும் ஜெயவிலாஸ் டீ கடையில் வண்டியை நிறுத்துவார்.

வண்டித்தாத்தா சாரட் வந்துவிட்டால் தயாராக இருக்கும் பால்பன் பழைய செய்தித் தாளில் சுற்றப்பட்டு சாரட்டுக்கு வந்துவிடும். வண்டித் தாத்தா எண்ணிக்கையைச் சொல்லும் முன்பாகவே குத்து மதிப்பாக பத்து பால்பன்னுகள் வந்துவிடும். ஜெயவிலாஸ் கடை கலர் தேங்காய் பூ தூவப்பட்ட இனிப்பான பால்பன் சாப்பிட்ட யாரும் அதன் ருசியில் வாய் ஊறாமல் இருக்க மாட்டார்கள், இதில் பெரியவர், சிறியவர் வித்தியாசமெல்லாம் கிடையாது. அன்று முழுவதும் ஆகும் செலவு வண்டித் தாத்தாவுடையது; அதில் அப்படி ஒரு பெருமை அவருக்கு. சுற்றி முடித்து வசந்தா நகரை அடையும் போது அதிகம் பூரித்துப் போய்விடுவது வண்டித் தாத்தாதான்.

சிவகங்கையை சுற்றி வந்த பிறகு பசும் புல் தீவனத்தை எந்த களைப்பையும் முகத்தில் காட்டாமல் மேயத் தொடங்கிவிடும் சொரூபராணி. வசந்தா நகர் தொடங்கி, அரண்மனையைச் சுற்றி அமுதா டாக்கீஸ், இரயில் நிலையம் வழியாக மீண்டும் வசந்தா நகரை சேரும் தூரம் குத்துமதிப்பாக இருபது கிலோமீட்டர் இருக்கும். அஞ்சு சுற்று களைப்பில்லாமல் சுற்றி வரும் சொரூபராணி. சாரட்டை ஓட்டிக் கொண்டே தென்படும் ஒவ்வொரு காட்சியின் பின்னணி வரலாறையும் சொல்லிக் கொண்டிருப்பார் வண்டித் தாத்தா.. குதிரையின் சலங்கை சத்தத்தை மீறி ஒலிக்கும் வண்டி தாத்தாவின் கம்பீரக் குரலில் காட்சிக் கதைகள் ஒரு திரைப்பட ஓட்டமாக குழந்தைகள் கண் முன்னால் விரியும்.

கிராமத்தில் வெள்ளத்தாயி பாட்டி திண்ணையில் உட்கார்ந்தபடி வெத்திலையை இடித்துக் கொண்டு சொல்லும் கதைகளை விட சுவாரஸ்யம் மிக்கவை வண்டித் தாத்தா சொல்லும் கதைகள். சிவகங்கை நகருக்குத் தான் அவ்வளவு கதைகள் இருந்தது. திறந்து விடப்பட்ட மடையிலிருந்து கொல்லையில் பாயும் நீராக பெருக்கெடுக்கும் நம்பவே முடியாத அதிசயக் கதைகள் வண்டித் தாத்தாவின் வாயிலிருந்து.

பனி பெய்து, பவளமல்லிகள் வீட்டைச் சுற்றி பூத்து நின்ற ஒரு நாளில் பையூர் பழமலை நகர் திருவிழாவிற்குப் போகும் முடிவுடன் வந்தான் ஜோதி. அவன் முடிவெடுத்துவிட்டால் அந்த முடிவில் மாற்றம் இருக்காது. வசந்தா நகரிலிருந்து சிவகங்கை அரண்மனைக்குப் போகும் திசைக்கு நேரெதிராக மேற்கு திசையில் தொண்டி போகும் சாலையில் இருந்தது பையூர் பழமலை நகர். வசந்தா நகரிலிருந்து குதிரை வண்டி பயணத்தில் பத்து நிமிடத்தில் அடைந்துவிடலாம். அசோகா மரங்கள் சூழ்ந்த, ஓடை ஓடிக்கொண்டிருந்த பசுமையான முந்நூறுக்கும் மேல் நரிக்குறவ குடும்பங்கள் வசித்த பகுதி அது. வருடத்துக்கு ஒரு முறை தங்கள் குலதெய்வம் ‘கொடூரக் காளி’க்கு எருமை, ஆட்டுக்கிடாக்களை பலி கொடுத்து பிரம்மாண்டமாகக் கொண்டாடுவார்கள் நரிக்குறவர்கள். அந்தத் திருவிழா நாளில் ஏதேதோ ஊர்களில் சுற்றித் திரியும் அவர்களின் சொந்த, பந்தங்கள் எல்லாம் பையூரில் கூடி விடுவார்கள்.

சித்தப்பா பிள்ளைகளோடு ஜோதியும், நானும் திருவிழா பார்க்கப் புறப்பட்டு விட்டோம். திருவிழா கூட்டத்திற்கு வருவேன் என அடம் பிடித்த தங்கையை அழைத்துச் செல்லவில்லை. ஜோதிதான் தடுத்துவிட்டான்.

“இரத்தஆறு ஓடும் இந்த மாதிரி இடத்துக்கெல்லாம் ரொம்பவும் சின்னப் பிள்ளைகளை கூட்டிட்டுப் போகக் கூடாது”. ஜோதியை ஆமோதித்துப் பேசுவார் வண்டித் தாத்தா. இரத்த ஆறைப் பார்க்க ஆர்வம் கிளம்பிவிடும் எனக்கு.

பையூர் பழமலை நகரின் ஓடைக்கும் நரிக்குறவர்கள் குடிசைக்கும் இடையில் கிளை பரப்பி நின்ற ஆலமரத்தடியில் சாரட்டை நிறுத்தி, சொரூபராணியை அவிழ்த்து ஆலமரத்துக்கு அடுத்து நிற்கும் புங்க மரத்தூரில் கட்டி விடுவார். வண்டித் தாத்தா. வண்டி பலகைக்குக் கீழ் தொங்கிக் கொண்டிக்கும் வலையிலிருந்து வண்டித் தாத்தா எடுத்துப் போடும் புல்லை அசைபோட்டபடி புங்க மரக்காத்தில் ஆசுவாசமாக நிற்கும் சொரூபராணி. நாங்கள் எல்லோரும் ஆலமரத்தடியில் ஜமுக்காளத்தை விரித்து உட்கார்ந்து கொண்டு வேடிக்கை பார்க்க ஆரம்பித்து விடுவோம்.

நரிக்குறவ குழந்தைகள், சத்தமாக ஒலித்துக் கொண்டிருக்கும் டப்பாங்குத்துப் பாடலுக்கு உடலை அசைத்து ஆடிக் கொண்டிருப்பார்கள்; யாரும் கற்றுக் கொடுக்காத தான் தோன்றி ஆட்டம் அவர்கள் ரத்தத்தில் ஊறிப் போயிருக்க வேண்டும். வாத்திய இசைக்கு ஏற்ப கையும், காலும் நேர்த்தியாக ஆடிக் கொண்டிருக்கும். வாலிபர்கள் கருப்புக் கண்ணாடியுடனும், கழுத்தில் தொங்கவிடப்பட்ட டிரான்சிஸ்டர் பெட்டியுடனும் வயசுப் பெண்களை சுற்றி வருவார்கள்.

பலி கொடுக்கத் தயார் நிலையில் எருமைகளும், கெடாக்களும் வரிசையாக நிறுத்தப்பட்டிருக்கும்.  சாமியாடி கிழவர் பலி எருமை ரத்தத்தை சிந்தவிடாமல் குடிக்க சிவந்து உருண்ட கண்களோடு கொடூரக் காளி உத்தரவுக்காகக் காத்திருப்பார்.

பிரகாசமாக நிற்கும் ஆகாயத்தில் கழுகுகள் வட்டமிடும். இலுப்பை தோப்புக்கு வடக்காக ஓடிக் கொண்டிருந்த ஓடையில் இருந்து அலுமினிய பாத்திரங்களிலும், பிளாஸ்டிக் குடங்களிலும் நீரை மொண்டு வந்து குடிசை வாசல்களில் சேர்ப்பார்கள் நரிக்குறவ பெண்கள். குடிசைகளை சுற்றிய செம்மண் தரையெங்கும் நீர் தெளிக்கப்பட்டு பூமிச் சூடு காத்தில் பரவி நிற்கும். எத்தனையோ ஆண்டுகள் பார்த்துப் பழகியதில் அசிரத்தையாக போயிலையை மென்றபடி இருப்பார் வண்டித் தாத்தா. ஜோதியும் அதிக சுவாரஸ்யமில்லாத முகத்துடன் காட்சியளிப்பான்..

ஆனாலும் காட்சிகளை ஒருவித கிறக்கத்துடன் எங்களுக்கு விவரித்துக் கொண்டிருப்பான் ஜோதி. அறுபட்ட கழுத்தில் வாயைப் புதைத்து, சாமியாடி இரத்தம் குடிக்கும் காட்சியைப் பார்த்து சிலிர்த்துப் போய் கைமுடியெல்லாம் குத்திட்டுவிடும். “நல்ல வேளை தங்கையை அழைத்து வராதது”, என்னையறியாமல் மனதுக்குள் நினைத்துக் கொள்வேன்.

கொடூரக் காளியின் உத்தரவு கிடைத்து பலி கொடுக்கப்பட்ட எருமைகள் நரிக்குறவப் பெண்களால் உப்பும், மஞ்சளும் தடவப்பட்டு பிரம்புக் கூடைகளில் துண்டுதுண்டாக்கப்பட்டு நிறைக்கப்பட்டிருக்கும். எருமைக் கறி தனியாகவும், ஆட்டுக் கெடா கறி தனியாகவும் வைக்க பிரம்புக் கூடைகள் தனித்தனியாக இருக்கும். பையூர் திருவிழாவுக்கு வந்து சேர முடியாத நாடோடி நரிக்குறவ சொந்தங்கள் எல்லோருக்கும் கறியில் பங்கு போய்விடும்.

நரிக்குறவ பெண்கள் கல் சட்டியுடனும், அரைக்கப்பட்ட மிளகாயுடனும் கறியை வாட்டுவதற்கு தயாராக இருப்பார்கள். சாமியாடி வெறி இறங்காமல் வாய், மார்பெல்லாம் ரத்தம் வழிய மூச்சு வாங்கி நிற்பார். மூத்த நரிக்குறவர்கள் காளியாத்தாவை நினைத்து சாமியாடி கிழவன் நெற்றியில் திருநீறை பூசிவிடுவார்கள். மர நிழலில் ஆசுவாசமாக உட்கார வைக்கப்படும் சாமியாடியின் துடி அவ்வளவு எளிதில் அடங்காது ; சாமியாடியிடமிருந்து உக்கிர ஆங்கார குரல் எழும்போதெல்லாம் நரிக்குறவ பெண்கள் நாக்கைச் சுழற்றி விநோத குரல் எழுப்புவார்கள். பையூர் பகுதி ஆகாயத்தில் காக்கைகளும், பருந்துகளும் திடுக்கிட்டு சுற்றிச் சுற்றி பறந்தபடி அலையும்.

காட்டுக் கருவை நெருப்பில் வாட்டி பக்குவப்படுத்தப்பட்ட கறியை இரண்டு கையிலும் அள்ளி ஆகாய வெளி நோக்கி எறிவார் சாமியாடி. கறித்துண்டுகள் ஆகாய்த்தில் கரைந்து மறைய குறத்திகளின் குலவை ஓங்காரம் அடையும். வெண்கலச் சொம்பில் கரைத்து வைக்கப்பட்டிக்கும் மஞ்சள் பால் குடித்து கொஞ்சம் கொஞ்சமாக துடி அடங்குவார் சாமியாடி. பலி கொடுக்கப்பட்ட எருமை, ஆட்டுக்கெடா ஈரல்கள் மட்டும் தேக்கு இலைகளில் பரப்பப்பட்டு சாமியாடிக்கு படைக்கப்பட்டிருக்கும்.

அடி வயிறெல்லாம் கலங்கிப் போய் நானும், சித்தப்பா பிள்ளைகளும் உட்கார்ந்திருப்போம். ஜோதியும், வண்டித் தாத்தாவும் எதுவுமே நிகழாதது போல் வெகு இயல்பாக இருப்பார்கள்; சாமியாடியின் உக்கிரமோ, குறத்திகளின் ஓங்காரக் குரலோ, தலை கீழாகப் பறந்து கொண்டிருக்கும் பறவைகளோ அவர்களை சிறிது கூட சலனப்படுத்தாது.

பையூர் வாடை தங்கிப்போய்விட்டதை நாப்பது வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ஒரு பனி நாளில் குல தெய்வ கெடா வெட்டில் உணர்ந்தேன். காரைக்குடிக்கு மாற்றலாகி வந்த பிறகும் சிவகங்கையின் வண்டித் தாத்தாவும், பையூர் நினைவுகளும் ஆழமாக பதிந்து போய் என்னுள் கிளை பரப்பி நின்றன.

காரைக்குடி முத்துப்பட்டிணம் பருப்பூரணிக்கும் சின்ன முத்துமாரியம்மன் கோவிலுக்கும் இடையில் இருந்த திரேஸாள் இல்லத்திற்கு குடி வந்த போது எனக்கு வயது பனிரெண்டு. மீண்டும் தீப்பெட்டி போன்ற வீடு மனதைச் சுருங்கச் செய்து சிவகங்கை நாட்களை நினைத்து ஏங்கச் செய்தது. திரேஸாள் இல்லத்திலிருந்து தெற்காகத் திரும்பி முத்துப்பட்டிணம் முதல் வீதியில் நடந்தால் நியூசினிமா தியேட்டர். புது இடத்தில் சினிமா தியேட்டரைத்தான் மனம் பரபரத்துத் தேடிக் கண்டுபிடித்தது. அமுதா டாக்கீஸைப் போல் நியூசினிமா தியேட்டர் பிரமிப்பு எதனையும் எனக்குள் பாய்ச்சவில்லை.

முத்துப்பட்டிணத்தில் இருந்து அண்ணாநகரில் சொந்தவீட்டில் குடியேறி முடி வெளுத்துப் போன ஒரு நாளில் சிவகங்கை செல்லும் வேலை வந்து மீண்டும் மனதை புத்துணர்ச்சி ஆக்கியது. அப்பா இறந்த பிறகு அவர் வேலை செய்த சிவகங்கை அலுவலகத்திலிருந்து சில பழைய சான்றிதழ் பேப்பர்களை சேகரித்து வரவேண்டிய வேலை. அலுப்பூட்டிய பயணத்தை, வண்டித் தாத்தா, சொரூபராணி, அமுதா டாக்கீஸ், ஜெயவிலாஸ் டீக்கடை பால்பன், என சில பசுமை நினைவுகள் தோன்றி மலர்ச்சிப்படுத்தின.

நீண்ட காலம் இறுகிய முதுமையிலிருந்து, மின்மினிகள் பறந்து திரிந்த ஈரநிலம் நோக்கிப் பாய்ந்தது மனம். உறைந்து கிடந்த பிம்ப காட்சிகள் மழை நேரத்து மண் வாசனையாக கிளர்ந்து பயண ஏற்பாட்டை துரிதப்படுத்தியது.

காட்சிகள் மாறிப்  பழைய தடங்கள் மறைந்து போய் இருந்தது சிவகங்கை. அரண்மனை வாசலில் குதிரை வண்டிகள் மறைந்து மூக்கு நீண்ட ஆட்டோ ரிக்ஷாக்கள் முளைத்து நின்றன. பசும் புல் சிதறிக்கிடந்த செம்மண் தரையிலிருந்து தாங்க முடியாத பெட்ரோல் வாடை கிளம்பி மூக்கைத் தாக்கியது.

பாசி படிந்து ஊற்றுக் கண் மூடப்பட்ட சிவன்கோவில் தெப்பக்குளத்தில் பேருக்கு ஈரம் ஒட்டிக்கொண்டிருந்தது. கொக்குகளும், நாரைகளும் எங்கோ மறைந்துவிட்டன. வண்டித் தாத்தாவோடு பயணித்த தடங்களில் கருவைகள் மண்டிவிட்டன. கருவைக்குள் உடும்பும். பாம்பும் ஊர்ந்து மறைந்தன. நடைபதையின் இருபுரமும் தேன்சிட்டுகளின் ஈனக் குரல் ஒலித்துக் கொண்டிருந்தன. ஜெயவிலாஸ் டீக்கடை இருந்த இடத்தில் தகரக் கொட்டகையின் கீழ் வல்கனைசிங் கடை இயங்கிக் கொண்டிருந்தது.

வசந்தா நகரின் அடையாளமாய் நின்ற அசோகா மரங்களும், வேப்ப மரங்களும் வேரோடு மறைந்துவிட்டன். வாழைத் தோப்புகளும், தென்னந்தோப்புகளும் அழிந்து போன இடத்தில் இத்துப் போன ஓட்டு வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தான் சிறுவனொருவன். பாத்திரம் தேய்த்து ஈரம் ஒட்டிக் கொண்டிருந்த கையை சேலைத் தலைப்பில் துடைத்தபடி அருகில் நின்றிருந்தாள் அவன் அம்மா. வசந்தா நகருக்குள் இருந்து ஒலி எழுப்பியபடி வந்த ஆட்டோ, சிறுவனை ஏற்றிக் கொண்டு நீண்ட மண் தடத்தில் பறந்து மறைந்தது. வேலைகள் முடிந்து பஸ்ஸேறி திரும்பும் போதுதான் சிறுவன் நின்றிருந்த இடத்தின் அடையாளம் புரிபட்டது. சொரூப ராணி நின்றிருந்த கொட்டில் இருந்த இடம்தான் அது. பேரூந்தின் பாய்ச்சலில் ஒன்றிரண்டு இலுப்பை மரங்கள் பின்னோக்கி போய் மறைந்தன.

.