
– உமா மகேஸ்வரி
குளம் பச்சைப் பசேலென்று வட்ட இலைகள் விரியக் கிடந்தது. பச்சைக் குளம். அதில் வெண்ணல்லிப் பூக்கள் பிராத்திக்கக் குவிந்த கரங்கள் போலப் பொங்கி நின்றன. இன்று விடுமுறை நாள் . கல்லூரியிலிருந்து கடைசி ஆறுமாதப் பயிற்சிக்காக இருவரும் இங்கே வந்தவர்கள். நிதி நேற்று மாலை கான்டீனில் அவளுக்கும் காபியைத் தானே வாங்கி வந்து, எதிரில் உட்கார்ந்தபடி,
“நாளை வெளியே போலாமா “என்றான் அவளிடம்.
“ம்” என்றாள் மோனா.
எதற்கெடுத்தாலும் பெரும்பாலும்”ம்” அல்லது “ம்ஹூம்” போன்ற ஒற்றைச் சொல் பதில்கள் தான். சமயத்தில் அதுவும் இல்லாமல் மேல் கீழாகவோ அல்லது இடவலமாகவோ தலையாட்டல். ஒரே வாக்கியமாகப் பேசி எப்போது கேட்கப் போகிறேனோ என்றெண்ணினான். அவனுடன் என்றில்லை பொதுவாகவே எல்லோருடனும் அவள் மௌனச்சாமி தான். பெயரும் பொருத்தமாக ‘மோனா’ என்று வைத்திருக்கிறார்கள்.
அவளைப் பார்த்தான். நீல நிறச் சேலை பாந்தமாக இருந்தது. நீண்ட நேரம் பார்க்கவும் பயமாக இருந்தது. அவளைப் போலவே குளத்தின் மீது பார்வையை அலைய விட்டபடி, எந்த முன் யோசனையோ திட்டமோ இல்லாமல் விருட்டென்று குள மத்தியில் இருந்து வான் தொடும் பறவை போல் தானாகவே அச்சொற்கள் வெளி வந்து விட்டன.
“மோனா, நாம் கல்யாணம் பண்ணிக்கலாமா”
ஒரு வினாடி அவள் கண்களைப் பார்த்தான். அவ்வளவு தான். அவள் கரு விழிகள் மேல் இமைக்குள் செருகி விட்டன. பற்கள் கீழுதட்டில் பதிந்து ரத்தம் கோர்த்தது. அவள் மயங்கிச் சரிந்தாள் .
“என்னாச்சு”என்று ஹிந்தியில் கேட்ட படி யாரோ ஒரு பெண்மணி ஓடி வந்து அவளைத் தாங்கினாள். யாரோ வந்து பையிலிருந்த பாட்டில் தண்ணீரை அவள் முகத்தில் தெளித்தார்கள். யாரோ அதில் கொஞ்சம் பருகத் தந்தார்கள். அவள் மெதுவாக விழித்தாள். “Doctor here” என்று யாரோ கை காட்ட, “கூட வரவா” என்று அந்தப் பெண்மணி கேட்டார்கள். இவள் மறுத்துத் தலையசைத்தாள் “ஒன்றுமில்லை, லேசான தலை சுற்றல்” அவனுக்கு மட்டுமல்ல, அவள் முகமும் சங்கடத்தில் சிவந்து விட்டது.
“இல்லை மோனா, நாம் இங்கிருந்து டேராடூனுக்குக் காரில் போக ரொம்ப நேரமாகும். எதற்கும் பக்கத்தில் இருக்கும் ஹாஸ்பிடலுக்கு போய் விடலாம். அதான் நல்லது”
“நோ, நிதி ப்ளீஸ் ஐ’ம் ஆல் ரைட். கொஞ்சம் பசிக்குது. அவ்ளோ தான்”
“சரி, உன் இஷ்டம்” என்று பேண்ட்டின் பின் பாக்கெட்டில் இருந்த மொபைலை எடுத்து அவர்கள் வந்த டாக்ஸி நம்பரை அழைத்தான் .
குளத்துப் படியிலேயே காத்திருந்தார்கள்.
“இப்ப பரவாயில்லயா”
“ம்”, என்றதும் சிரித்து விட்டான் .
“நல்லா வழக்கமான மோனாவாகிட்ட”
அவளின் மேல் கீழான தலையாட்டல். டாக்ஸி வந்ததும் பின்புறக் கதவை அவளுக்காகத் திறக்கப் போனவனை,
“நிதி, நிதி ப்ளீஸ், நானே திறந்துக்குவேன்” என்று தடுத்துத் தானே திறந்து உட்கார்ந்தாள். வந்தது போலவே முன் சீட்டிற்கு ஓடியவனை,
“நிதி, நிதி இங்கேயே உட்காரலாமே” எனவும் திகைத்து விட்டான்.
“ஓ, உட்காரலாமே” என்று கவனமாக இடைவெளி விட்டுக் கதவை ஒட்டி உட்கார்ந்தான். வண்டி கிளம்பியது.
“விழுந்துடப் போறிங்க” என்று ஒரு சின்னச் சிரிப்பொலியில் இன்னும் திகைத்து அவள் புறம் சற்றே நகர்ந்தான். “ஒரு நல்ல ஹோட்டலில் நிறுத்துங்க” என்று ஓட்டுநரிடம் சொல்லி விட்டு, கண்களை மூடிக் கொண்டான். கல்யாணம் என்றதும் ஏன் மயங்கினாள்? ஏதோ ஒன்று கசப்பாக நடந்திருக்கிறது. கேட்டால் மறுபடி மயங்கி விழுந்தாலும் விழுவாள். எதற்கு வம்பு? இருந்தாலும் ஒரு அழகிய பெண்ணுடனான என் முதல் சந்திப்பு இப்படி ஆகி இருக்க வேண்டாம். அவள் கோயிலுக்கு என்பதற்காக உடுத்தி இருந்த புடவையைப் பாராட்டி ஆரம்பித்திருக்கலாமோ? ஒரு துல்லிய நீலப் புடவை பூக்கள் அச்சிடப்படாத, ஜரிகை எதுவும் போடாத வெற்று நீலப் புடவை. வெற்று நீலம். இச்சொல்லில் மனம் திடுக்கிடுகிறது. நீலத்தில் எப்போதும் எதுவோ நிரம்பித் தானே இருக்கிறது. காதலின் நீலம், ஆகாய நீலம், கடல் நீலம், மழை நீலம், வெறுப்பின் நீலம், விஷ நீலம்… அவன், அவள் தொண்டையை ஒரு கணம் பார்த்தான். சங்கு நீலம், பொன் நீலம் என்றெண்ணினான். ஆனால் அவளிடம் சொல்லவில்லை.
சிறிய ஆனால் சுத்தமான ஹோட்டல் ஒன்றில் டாக்ஸி நின்றது. காலியான கிரானைட் மேஜைகள், நாற்காலிகள், கண் கூசும், கை வைக்கத் தயங்க வைக்கும் அதி சுத்தம். உள் நுழைந்து சுவரோர மூலையில் எதிர் எதிரே அமர்ந்தார்கள்.
“என்ன சாப்பிடுற”
“மொஸாம்பி ஜூஸ். யூ நோ, அது ஸ்கின் டோனுக்கு ரொம்ப நல்லது” புன்னகைத்தாள்.
“சரி, எதாவது சாப்பிட்டு விட்டு உன் மொஸாம்பியைக் குடிச்சுக்கோ, வேறென்ன ரொட்டி, பராத்தா தான் கிடைக்கும். நம்ப ஊர் தோசை, இட்லியா கிடைக்கப் போகுது.”.
அவள் சொன்னவற்றையே தனக்கும் சொல்லிவிட்டு, “உடனடியாகக் குடிக்க என்ன இருக்கு?” பரிமாறுபவரைக் கேட்டான். அவன் கண்ணாடிக் கதவுள்ள ப்ரிஜ்ஜைக் காட்டினான்.
“கோக்?” அவள் தலையசைத்ததும் கோக் டேபிளுக்கு வந்தது.
கண் கலங்க அதை உறிஞ்சியவளை, “ஏன்,எதுக்கு அழுற”
“இவ்ளோ அக்கறை அப்பா தவிர யாரும் காட்டியதில்லை”
“ஓ, ஆனா அழாத. உன் அறையில் போய் அழுதுக்கோ. இது பொது இடம் “
“ம்” அவள் கண்ணைத் துடைத்துக் கொண்டாள்.
வந்த ரொட்டியை அவசர அவசரமாக வழக்கமாகச் செய்யும் நுனி விரல் நளினங்களற்றுச் சாப்பிட்டாள். அவன் தன் வட்டிலில் இன்னும் விரல் வைக்கும் முன்பே.
வயிறாரச் சாப்பிட்டு விட்டு அவளுடைய சாத்துக்குடி ஜூஸையும் குடித்து விட்டு வெளியேறினர்.
காரை நெருங்கியதும், “நிதி, நீங்க இப்ப முன் சீட்ல உட்கார்ந்துக்கிறிங்களா ?”
“அதான பார்த்தேன் ” என்று அவன் மனதில் நினைத்து முடிக்கு முன்,
“ப்ளீஸ், நான் தூங்கணும்” என்று ஒரு சிறு பூனைக் கொட்டாவி விட்டாள் மெஸஞ்சர் ஸ்டிக்கர் மாதிரியே.
“பாவம் இவ” என்று எண்ணினான்.
அவள் பின் சீட்டில் சாய்ந்து கால்களைக் குறுக்கிப்படுப்பதைப் பார்த்த டிரைவர் சிறிய தலையணையை எடுத்துத் தந்தார். அவளைப் பற்றிய அவருடைய விசாரணைக்குப் பதில் சொன்னான், லேசான களைப்பு என்று மட்டும். டேராடூன் வந்து சேர நன்றாக இருண்டு விட்டது. அவளுடைய தனி அறை வந்தது. ஆங்காங்கே சிறிய வீடுகள் போன்ற வசிப்பிடங்கள். முதுகலைப் படிப்பிற்கும், ஆய்வுகளுக்கும். டாக்ஸி நின்றதும் தானாக விழித்த அவள், “நிதி, நீ இங்கேயே இன்று மட்டும் தங்குறியா” பெருந்திகைப்பை முகத்திலிருந்து மறைக்க முடியவில்லை.
“சட்ட திட்டங்கள் உனக்கு இருக்குமே”
“ஆமா, அப்ப நான் உன் அறைக்கு வந்துடுறேனே, அழைச்சுட்டுப் போவியா” தயங்கும் சன்னக் குரல்.
“ம். அதில் ஒரு பிரச்னையும் கிடையாது”
“ஒரு நிமிஷம்”என்று இறங்கியவள், அவள் அறைக்கு சென்று ஒரு சிறு பையுடன் வந்தாள்.
அவனுக்கோ மறைக்க முடியாத சந்தோஷம். முதன் முறையாகத் தன்னை அவள் ஒருமையில் அழைத்ததையும் கவனித்தான். அவன் அறைக்கு வழி சொன்னான்.
“அவ்ளோ சுத்தமா இருக்காது”
“பரவால்ல நிதி .ஒரு நாள் தானே “
தனது அறையைத் திறந்தான். “நீ உட்காரு” என்று விட்டு அவசர அவசரமாகத் துணிகளை ஒதுக்கினான். தரையைப் பெருக்கினான். நல்ல வேளை, விருந்தினருக்கான சிறு கட்டில் ஒன்றும் இருந்தது. ஆனால் அதை அதே அறையில் தான் போட வேண்டும். வராந்தா மிகச் சிறியது.
“நீ அங்கே தூங்கு. நான் இதில்”என்று சிறிய கட்டிலைக் காட்டினான்.
“சிரமமில்லையே..”
“ம்ஹூம்” என்றான் அவளிடமிருந்து தொற்றப்பட்டவனாக.
அவள் குளியலறைக்குப் போய் இரவாடையை அணிந்து வந்தாள். தொளதொளப்பான பைஜாமாவில் மிகவும் சிறிய பெண்ணாகத் தெரிந்தாள். அவனும் உடை மாற்றி வருதற்குள் தூங்கி இருந்தாள் அல்லது அப்படி நடிக்கிறாளோ. அவன் தன் கட்டிலில் சரிந்தான். இவள் மனம் முற்றிலுமாகத் தனக்காகத் திறந்து விட்டது என்று புன்னகைத்தான். இரவு முழுவதும் உறங்கவில்லை. அடுத்த நாள் வழக்கம் போல் வகுப்புக்கள். அந்த வாரத்தில் இன்னொரு முறை அவன் அறையில் தங்கினாள். அவனும் மாலை நேரங்களில் அவள் அறையில் அவளைச் சந்தித்தான்.
தனித்த இரவெல்லாம் குறுஞ்செய்திகள், குரல் அனுப்பல்கள். பிறகு சிறு சிறு தழுவல்கள், முத்தங்கள் என இருவர் நாட்களும் இனிய நிறங்கொண்டன.
உறங்காத இரவுகளில் எதையெதையோ நினைத்துப் புரண்டு கொண்டிருப்பாள். இதையெல்லாம் அவனிடம் சொல்ல வேண்டும். எப்போது எப்படி என்று தான் தெரியவில்லை.
****
வீடு மதிய வெயிலில் விறைத்து நின்றது. முன்புற புளிய மரத்தின் அயர்ந்த தோற்றமும் உதிர் இலைகளும், புடைத்த நரம்புகளாகத் தெரியும் கிளைகளும் எதையோ சொல்லி எச்சரித்துக் கொண்டிருக்கின்றன. அதன் நிழல் வீட்டின் வாசலில் சாய் சதுரமாக வீழ்ந்திருக்க, அதில் நின்றிருந்தது அந்த பைக். எப்போதும் ஏற்படும் கசப்பும், அருவருப்பும் அவள் மனதில் படர்ந்தன. பள்ளி நாட்களில் வீடு திரும்புகையில் அவன் அங்கிருந்தால் மிகைச் செல்லத்தோடு “பேபி, ஸ்கூல் முடிஞ்சதா” என்று கன்னத்தைத் தடவித் தட்டும் அந்த விரல்கள். அவள் உடனடியாக தன் கன்னத்தைத் துடைத்துத் தடமழித்துக் கொள்வாள். யதேச்சையாகப் படுவது போல் அவளுடலை உரசுவான். இடுப்பை, மார்பை அழுத்திய போது அவள் ஒரு தடவை அறைந்து விட்டாள்.
“நடந்து வாறப்ப தெரியாமபட்டிருக்கும்” என்பாள் அம்மா.
இன்று கல்லூரி வகுப்பு சீக்கிரம் முடிந்து விட்டது. ஸ்கூட்டியை நிறுத்தி விட்டு ஹெல்மட்டைக் கழற்றியபடி படியேறினால் உள்ளே.. இவன். மனம் துவள்கிறது. படியில் உட்கார்ந்து பார்த்த போது அந்த பைக்கின் இறுமாப்பும், விறைப்பும் அவளை விதிர்க்கச் செய்தது. அது வாசலில் நின்றால் கதவு வெறுமனே சாத்தி இருந்தாலும், பூட்டி இருந்தாலும் படியில் அமர்ந்து அவன் வெளியேறக் காத்திருப்பது வழக்கமாகி விட்டது. ஒரு முறை தன் அறையில் இருந்து காலி தண்ணீர் பாட்டிலோடு சமையலறைக்குப் போன போது, இருவரும் அவள் கதவருகே நிற்பதை அறியாத மயக்க உலகில் இருந்தார்கள். அவன் இடது கையை அம்மாவின் தோளில் வைத்தபடி, வலது கையிலிருந்த மொபைலைக் காட்டி,
“இப்படிப் பண்ணலாமாடா, இது பிடிக்குதா”, என்று கேட்க அம்மா சிணுங்கிக் கொண்டிருந்தாள். மோனா தண்ணீர் பிடிக்காமலே அரவமின்றி அறைக்குத் திரும்பி விட்டாள்.
மற்றொரு நாள் வகுப்புகள் சீக்கிரம் முடிய வீட்டுக்கு வழக்கத்துக்கு மாறாக வெகு நேரம் முன்பே வந்திருந்தாள். டாய்லெட் போகவென்று அவசரமாகத் தன்னிடமிருந்த இன்னொரு சாவியால் வீட்டுக் கதவைத் திறந்து உள் நுழைந்தாள். அம்மாவின் அறையைத் தாண்டித் தான் அவள் மாடியறைக்குப் போக முடியும். படியேறிக் கடக்கும் போது கேட்ட மோக முனகல்கள். திறந்த கதவு வழி யதேச்சையாகக் கண்ணில் பட்ட கட்டிலில் அவர்கள் இருவரும், விசித்திரமான கோணத்தில்.. இப்போதும் அவர்கள் அவளைக் கவனிக்கவியலாத மிதப்பிலிருந்தாள். பயத்தில் ஒரு சொட்டு சிறுநீர் கசிய சத்தம் காட்டாமல் தன் அறைக்கு ஓடினாள். அழுதாள். பிறகு தெளிந்தாள். அம்மாவின் அந்தரங்கத்தின் சிமிழ் தன் முன் தவறித் திறந்திருக்கக் கூடாது தான். இதில் தலையிடவோ, விமர்சிக்கவோ, நீதி சொல்லவோ அவள் விரும்பவில்லை. அப்பாவிடம் அம்மாவிற்குப் போதாமைகள் இருக்கலாம்.. ஆனால் அப்பா… அவள் கண்ணீர் திரள அசையாமல் காத்திருந்தாள் அம்மாவின் கூர்மையான சிரிப்பொலி அடிவயிற்றில் குத்தியது. கதவு ஒருக்களித்துத் திறந்திருந்தது. காலையிலேயே வந்திருப்பான். அவளுள் கடுங் குரோதம் திரண்டது.
“இருந்துட்டுப் போலாமே ” கொஞ்சலான அம்மாவின் குரல்.
“வருவேன்ல?” என்றபடியே அவன் மேல் நோக்கி வாரப் பட்ட தலைமுடியால் தள்ளி விட்டு, மணிக்கட்டிற்கு இறங்கிய தங்கக் காப்பை மேலேற்றியபடி வெளி வந்தவன் அவளைப் பார்த்ததாக தோன்றவில்லை. சாவதானமாகத் தன் பைக்கை நோக்கி நடந்தவாறே “ஏன் மோனா, வெளியவே உட்கார்ந்திருக்க?” என்று பைக் ஹாண்டிலைத் திருகிச் சீறிக் கிளம்பினான்.
“அடிக்கடி வா தினேஷ்” அம்மாவின் அப்பட்டமான சரசக் குரல். அவன் தலையசைத்தபடி பைக்கின் உறுமலோடு மறைந்தான்.
கறுப்பு ரவிக்கைக்குக் கீழே பிதுங்கிய அம்மாவின் சந்தன நிற இடுப்புச் சதையும், மதர்த்த மார்பகங்களும், அவற்றைத் தெளிவாகக் காட்டிய ஸூத்ரூ புடவையும்.. அவளுக்குக் கூசியது.
“என்னை விட ஓரிரு வயசு பெரியவனாயிருப்பான். மகன் போன்றவனோடு அம்மாவுக்கென்ன பேச்சும்,சிரிப்பும்” என்று நினைத்தவள் “அதைப் பற்றி எனக்கென்ன? அவர்கள் இஷ்டம். இதில் எனக்கென்ன பிரச்னை?” என்று வாஷ் பேஸின் குழாய் நீரை முகத்தில் வடிய, வடிய ஊற்றவும் மனம் சற்றுத் தணிந்தது. முற்றத்துத் திண்ணையில் குத்துக்கால் வைத்து, முழங்காலில் முகம் புதைத்து உட்கார்ந்தவளுக்கு எங்கேயாவது போய் விட வேண்டும் போலிருந்தது. அப்பாவின் அலுவலகமும் அடுத்த ஊரில் இருந்தது. அங்கேயே அறை எடுத்துத் தங்கியிருந்தார். வாரக் கடைசியில் தான் வீட்டுக்கு வருவார். இந்த வீட்டை விட்டு எங்கேயாவது போய் விட வேண்டும். எங்கேயாவது… எவ்வளவு விடுபடுதலைத் தருகிற, இனிமையாக மனதைப் பறிக்கிற சொல். நெடுங்காலமாக மனதாழத்தில் குமிழியிட்டுக் கொண்டிருக்கிறது.
எங்கேயாவது.. எங்கேயாவது.. எங்கேயாவது.. மனிதப் பாதங்களே படாத தடங்களேயற்ற இடம்.. பாதைகளோ, திசைகளோ, இலக்குகளோ அற்ற எங்கேயோ இருக்கிற இடம் அது.
என்னை முந்திக் கொண்டு என் பொன்னிறத் துப்பட்டா பறந்து போய்க் கொண்டிருக்க மலர்களும் பறவைகளும் மரங்களும் நட்சத்திரங்கள் திக்குகள் சிதறச் சிறகடிக்கும்.
இந்த அம்மா இல்லாத இடம் .அப்பாவும் அங்கில்லை. எப்போதுமே “என்னம்மா, எப்படிஇருக்க,நல்லாச் சாப்பிடும்மா” எனும் மூன்றே வாக்கியங்களையே எப்போதும் பேசுகிற, நெற்றியில் விழும் ஒற்றை முடிக் கற்றையை நுனி விரல் பட்டு விடாத கவனத்தோடு ஒதுக்கி விடும் அப்பா.. ‘அப்பா’ என்று உச்சரிக்கும் போதே உடலில் பரவும் சிலிர்ப்பு..
ஆனால்..
வேண்டாம், அவரும் வேண்டாம். நான்.. நான் மட்டுமே.. நானே எல்லாமுமான நான். மிருதுவாகப் பாதம் பட இருந்தும் செம்மண் வெளியும், அதிசயமான மணல் நிற ஆகாயமும், தன் போக்கில் தலையசைத்தும், தவம் காத்தும் நிற்கும் மரங்களும் மலைகளும் நீண்ட இசைக் குறிப்பாய் ஓடும் நதியும் எல்லாம் நான், நானே தான்.
அந்தத் தெரியாத இடம் என்னை அமைதிப்படுத்தும். ஆனந்தமாக்கும். கடும் நீலச் சுவர்களும், தடதடக்கும் மின் விசிறியும் அவளைக் கலைத்தன.
“அம்மா” எப்படியும் கண்களைத் ததும்ப வைக்கும் வார்த்தை. அந்த மரம்.. மலர்களோ, இலைகளோ, கிளைகளோ அற்ற மரம்… அடியில் உட்கார்ந்திருக்கும் அம்மாவின் மீது கருப்பு வரிகளை வரையும் மரம். அம்மாவின் மடியில் சாய்ந்திருக்கும் அவன். முகம் அவள் மார்பை நோக்கித் திரும்பி இருக்கிறது. கைகள் இடுப்பை இறுக அணைத்துக் கொண்டிருக்கின்றன.. அவள் தலையை உலுக்கித் தன் எண்ணங்களைக் கலைத்தாள். இவை எல்லாவற்றிலிருந்தும் விடுபட்டால் போதும்.
அப்பாவிடமும் மோனா எதையும் சொல்லவில்லை .சொல்ல முடியுமா என்ன?.அம்மாவிற்கும், அவளுக்கும் இடையே ஒரு நிசப்தச் சுவர் முளைத்தது. ஏன் என்று அம்மாவுக்குப் புரியவில்லை.
துணிகளை மடித்தவாறே அம்மா,
“தினேஷ்க்கு உன்னய ரொம்ப ப் பிடிச்சிருக்கு, ரொம்ப நல்ல பொண்ணுனு சொல்றான்” என்ற போது சங்கடமாக உணர்ந்து பதிலேதும் சொல்லவில்லை.
“தினேஷ் எதேதோ படிச்சிருக்கான் .இப்பக் கூட கரஸ்பான்டன்ஸ் கோர்ஸ் ஏதோ படிக்கிறான். வீடு முழுக்க பளிங்கும்,கிரானைட்டும் தான். எல்லாம் ஏ.சி. ஆனா ஒரு கர்வம் இல்ல அவனிடம்” என்றெல்லாம் சொன்ன போது எதுவோ தன் மேல் மோத வருவதாக உணர்ந்தாள். இவ்வளவு பெரிதாக வருமென்று எண்ணவில்லை.
“தினேஷ் உன்னைக் கல்யாணம் செஞ்சுக்கிறேன்கிறான்.. நல்ல படிப்பு. வசதி. அப்பாவின் கடன்களும் அடைப்பட்டு விடும்”. அம்மாவின் கண்கள் தாழ்ந்திருந்தன. “அப்பாவிடமும் சொல்லி விட்டேன்…” அம்மாவை முறைத்தாள்.
முதன் முறையாக அப்பாவைத் தேடி அவர் அறைக்குப் போனாள். அறையல்ல, சிறிய வீடு. அப்பா அவளைப் பார்த்து அதிர்ந்தார்.
“ஏம்மா, போன் பண்ணினா நானே வந்திருப்பேனே”
“அப்பா” அழுகையினூடே உடைந்த சொற்களால் தினேஷையும், அம்மாவையும் பற்றிச் சொன்னாள். குற்றச்சாட்டாக அல்ல, தற்காப்பாகத் தான். அப்பா நொறுங்குவதைப் பார்க்கத் தாங்க முடியவில்லை.
பிறகு தான் அப்பா அவளை மேற் படிப்புக்காக டெல்லி அனுப்பினார். அங்கிருந்து டேராடூன். அப்புறம் இந்த நிதி. தப்தரீஸ்வரர் ஆலயம். நிதியின் மனதிற்குள் அவள் நெடுங்காலமாகத் தேடிய அந்த இடம். எங்கேயோ என்று அவளை அலைக்கழித்த அந்த இடம். ஒருக்களித்திருந்தவள் திரும்பி உறங்கும் அவனைப் பார்த்தாள்.
“மற்றதெல்லாம் கல்யாணத்திற்கு அப்புறம் தான்” என்று சொல்லிக் கொண்டிருக்கிறான் இன்னமும்.
கண் மூடிப் புன்னகைத்தாள். அவளுக்குள் அந்தக் கரும் பச்சைத் தடாகம் ஆழ்ந்து விரிந்தது. அடுத்த முறை அவனோடு போகும் போது குளம் நிறைய அந்தக் குவிந்த அல்லி மொட்டுக்கள் “குப்” பென்று அடுக்கடுக்காய் விரிந்து சிரித்துக் கொண்டிருக்கும்.