புத்தகம்: பால காண்டம்
பதிப்பகம்: டிஸ்கவரி புக் பேலஸ்
ஆசிரியர்: நா.முத்துக்குமார்
பக்கங்கள்:71
விலை:90

மறைந்த திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞருமான திரு நா.முத்துக்குமார் அவர்களுடைய புத்தகம் “பாலகாண்டம்”. அவருடைய நினைவுகளில் உள்ள சிறுவயது நிகழ்வுகளை மையமாகக் கொண்டு எழுதியது. “இரண்டாம் தொப்புள்கொடி” தலைப்பில் அக்காவின் கண்ணீருக்கு அடர்த்தி அதிகம் என்று அவரின் பார்வை நம்மை சிந்திக்க வைக்கிறது.

“தாஜ்மஹால்தாசன்” தலைப்பில் அவர் குறிப்பிட்ட கவிஞரின் காதல் கவிதைகள் ஒவ்வொன்றும் அருமை. (a+b)2 என்ற தலைப்பில் எழுதியிருக்கும் கணக்கு வாத்தியாரின் வாழ்க்கையும் அவருடைய மறைவும் புதிராக முடிந்ததில் பெரிய சோகம்.

ஒவ்வொரு தலைப்பிலும் நா. முத்துக்குமார் அவர்கள் சிறு வயது நினைவுகளை கவிஞனுக்கு உண்டான வார்த்தை ஜாலங்களுடன் விளையாடி இருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும்.கடவுளைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கும் ஒரு பகுதி மிகவும் சுவாரசியமானது. மற்ற எழுத்தாளர்களுக்கும் கவிஞனாக உள்ள எழுத்தாளருடைய புத்தகத்திற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு என்பதை பாலகாண்டம் புத்தகம் வாசிக்கும் போது நன்றாக உணர முடிந்தது.

இந்த புத்தகம் படிக்கும் ஒவ்வொருவருக்கும் தனது இளமைக்கால நினைவுகள் வந்து போனால் அவர்கள் அனைவரும் தற்போது குறைந்தபட்சம் 30 வயது தாண்டி இருக்கும் என்று நினைக்கிறேன். ஒரு சிறப்பான கவிஞனை, பாடலாசிரியரை, எழுத்தாளரை, படைப்பாளியை குறுகிய காலத்தில் மண்ணில் இருந்து மறைந்தாலும் அவருடைய படைப்புகள் மறையாது என்பதற்கு நா.முத்துக்குமாரும் சான்று. வாசகர் அனைவரும் வாசித்து மகிழ வேண்டிய புத்தகம்.

இப்படிக்கு
ராஜேஷ்.நெ.பி
சித்தாலப்பக்கம், சென்னை

நசீமா ரசாக்

பிருந்தா சாரதி எழுதிய “எண்ணும் எழுத்தும்” என்ற கவிதை நூலை சில நாட்களுக்கு முன் வாசித்து முடித்தேன். நூலின் இந்த தலைப்பே எடுத்ததும் சிறிது வியப்பைத் தந்தது.  எண் என்றால் காசு, பணம் என்று புழங்கும் நம் வாழ்க்கையில், சற்று மாறுபட்டு வாழ்க்கையின் தத்துவத்தோடு அதை இணைத்து இவர் எழுதி இருக்கும் விதமே சிறப்பு.

புத்தகத்தின் வாசலில் எனக்குப் பிடித்த கவிக்கோ அப்துல் ரகுமான் ஐயா அவர்களின் அணிந்துரையில்,

“பிருந்தா சாரதி எண்களைப் பற்றியே

எண்ணி எழுத்தாகி இருக்கிறார்.

எண்ணையே எழுத்தாக்கியிருக்கிறார்”

என்ற வரிகளைப் படித்தவுடன் புத்தகத்தின் கனத்துடன் சேர்த்து, உடனடியாய் அதைப் படித்து முடிக்கும் ஆர்வமும் அதிகரித்தது.

பரந்து விரிந்த ஆற்றில் காத்திருந்து மீன்களைப் பிடிக்கும் மீனவனின் பொறுமையைப் போல ஒவ்வொரு எண்ணிற்கும் காத்திருந்து உணர்வுகளைக் கொடுத்திருக்கிறார் ஆசிரியர்.

“ஒன்றில் தான் இருக்கின்றது இன்னொரு உயிர்” என்று ஒன்றைப் பற்றி

மட்டும் சொல்லாமல் அதில் நகைச்சுவை கலந்த வரிகளையும் கொடுத்துச் சிரிக்கவும் வைக்கின்றார்.

“நாலு பேர் நாலுவிதமா பேசக்கூடும்” என்று ஆரம்பிக்கும் வரிகள் சமூகம் கொடுக்கும் அழுத்தத்தால் பலியாகாமல் வாழுங்கள் என்ற அறிவுரையை உரக்கச் சொல்கிறது.

“காடாறு மாதம் நாடாறு மாதம்” என்ற வரிகளில் விறுவிறுப்பான விவாதத்தை விக்கிரமாதித்தனுக்கும் வேதாளத்துக்கும் இடையில் நிகழ்த்தி வாழ்க்கையின் தத்துவத்தை மௌனத்தில் முடிக்கின்றார்.

ஒன்றுமில்லாமல் இருக்கும் பூஜ்ஜியம் தான் இறுதியில் எல்லாமும் ஆகின்றது, எல்லாமும் ஆகிய அனைத்தும் இறுதியில் பூஜ்யத்தில் முடிந்து விடுகின்றது என்ற கருத்து இவர் வரிகளில் இல்லாமையே எல்லாமும் என்ற வெற்றிடத்தை உருவாக்கிவிட்டு அதையே வெற்றியின் இடமாகவும் மாற்றி விடுகிறது. இதை இறுதியில் சொல்லக் காரணம் இந்தப் பூஜ்ஜியத்தைப் பற்றி எழுதவே இவர் அதிக காலம் எடுத்துக் கொண்டதாக “என்னுரை”யில் சொல்லி இருப்பதுதான். 

வெற்றிடம், காலம், அகம், முடிவில்லா காத்திருப்பு என்ற தலைப்புகளின் வழி காதல், காலம், ஞானம், தத்துவம் என்று எண்களாய் உருமாறி  ஒவ்வொன்றும் வெவ்வேறு விதமான இரசத்துடன் இருக்கும் இந்த கவிதைகள் பிரபஞ்சத்தின் பேரன்பை காதலின் மூலமாக, அதன் இயக்கத்தைப் பூஜ்ஜியத்தின் வழியாகச் சொல்லி வாழ்க்கையின் முழுமையை வாசகனுக்குக் கடத்தி இருக்கின்றன.

ரூமி சொல்லும் காதலிலும், ஞானத்திலும் மணக்கும் அத்தரின் வாசனையை “எண்ணும் எழுத்தை” வாசிக்கும்போதும் நுகர முடிந்ததை மறுப்பதற்கில்லை.

எளிமையான வரிகளில் எண்களின் மூலம் வாசகனுக்குள் ஒரு உருமாற்றத்தை நடத்தியிருக்கும் பிருந்தா சாரதி அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.