
-பிரியா
மழையில் நனைந்து போன விறகுகள் எரிய மறுக்க அடுப்பு புகையில் சூழப்பட்டு போராடிக்கொண்டிருந்தாள் ஒச்சம்மா. தகரங்களால் சுற்றிக் கட்டப்பட்டு கூரையிலும் தகரம் வேயப்பட்டிருந்த ஒரு சிறிய மறைப்பு அது. மறைப்பின் வெளியே அவளின் கணவன் மாடசாமி கொஞ்சம் சுள்ளிகளைச் சேகரித்து சிறு துண்டுகளாக்கிக் கொண்டிருந்தார்.
கொஞ்சம் தள்ளி அந்த மறைப்பின் எதிரே புதிதாய் கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் வீடொன்று முக்கால்வாசி வேலை முடிந்து தயாராகிக் கொண்டிருக்க, அதன் ஒரு பக்க சுவற்றின் சிமெண்ட் பூச்சு வேலையினை இரு இளைஞர்கள் இணைந்து செய்து கொண்டிருந்தனர். அவர்களில் கொஞ்சம் உயரமாய் இருந்தவன் இவர்களின் மகன் முருகன், மற்றொருவன் இவர்களின் உறவுக்காரப் பையன் சத்தி. நால்வரும்தான் அந்த வீட்டின் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த மேஸ்திரியிடத்தில் பெரியவர்கள் இருவரும் கடந்த பத்து வருடங்களாகப் பணியிலிருந்தனர். அவர் எங்கெல்லாம் வீட்டு வேலை காண்டிராக்ட் எடுக்கிறாரோ அங்கெல்லாம் சென்று இப்படி ஒரு மறைப்பினை உருவாக்கிக் கொண்டு, வேலை முடியும் வரை அங்கேயே தங்கியிருப்பார்கள்.
அவ்வப்பொழுது ஏதேனும் வேலை இருந்தால் மட்டும் ஒரு வாரம், பத்து நாட்கள் என்று விடுமுறை எடுத்துக்கொண்டு ஊருக்குச் சென்று வருவார்கள் இல்லையெனில் வாரத்தில் ஏழு நாட்களும் அங்கேதான். ஆனால் இப்படி எந்த வசதிகளும் அருகிலிள்ளாத, காய்கறிகள் வாங்கக் கூட நான்கு கிலோ மீட்டர்கள் நடந்து செல்ல வேண்டிய நிலையில், ஒரு சிறு நகரத்தின் விரிவாக்கப் பகுதியில் தங்கியிருப்பது இதுவே முதல் முறை.
ஒச்சம்மா ஈர விறகுடன் போராடி எப்படியோ சிரமப்பட்டு சமையலை முடித்து சத்தமிட வெளியில் இருந்த மூவரும் வந்து சாப்பிட அமர்ந்தனர். சாப்பட்டினை வடித்து, தக்காளியைக் கொண்டு எதையோ செய்திருந்தாள் அவ்வளவுதான் அன்றைக்கான அவர்களின் உணவு, அதுவே அவர்களுக்குப் பழகியும் விட்டது. சாப்பாட்டினிடையில் மாடசாமிதான் பேச்சை ஆரம்பித்தது,
“அந்த ஊட்டுக்காரன் வேற இனி அங்க வந்து ஒறங்கக் கூடாதுனு சத்தம் போட்டுட்டு போறானே இன்னைக்கு இராத்திரிக்கு எங்க கெடக்க”
“அவங்க என்ன இன்னைக்கா சொல்றாக எப்பவுந்தா சொல்றாக ஆனா நாம அங்கனதான ஒறங்குறோம் அப்புறம் என்ன” என்றான் முருகன்.
“எலேய் எப்பயும் சொல்றமாதிரி இல்ல. இன்னைக்கு ரொம்ப கோவமா பேசுனாரு. அவங்க ஒறவுக்காரங்க யாரோ இங்கனதா இருக்காங்களாமா அவங்க இராத்திரிக்கு வந்து பாப்பாங்கனு சொன்னாரு”
இந்த மறைப்பை சமைக்கவும், பொருட்களை வைக்கவும் மட்டும் பயன்படுத்திக்கொண்டு, அருகில் இரண்டு தகரம் வைத்து இன்னொரு சிறு மறைப்பை உருவாக்கியிருந்தனர். அது குளிப்பதற்கும், அவசரத் தேவைகளுக்குமாய் உபயோகப்பட்டு வந்தது. அருகில் காலியாயிருந்த வீட்டின் திண்ணையை இரவில் உறங்குவதற்குப் பயன்படுத்திக் கொண்டிருந்தனர். ஆனால் இதில் அந்த வீட்டின் உரிமையாளருக்கு ஆரம்பம் முதலே விருப்பம் இல்லை. இவர்களைக் கண்டாலே அவருக்குப் பிடிக்காது. அவ்வப்போது சும்மாவாகிலும் வீட்டைப் பார்வையிடுவதற்காக வருபவர், இவர்களின் பொருட்களை வீட்டினருகில் கண்டால் கண்டபடி திட்டிவிட்டுத்தான் செல்வார்.
“அழுக்குப்பிடிச்ச பசங்க, எப்ப பாத்தாலும் வீட்ட நாறடிச்சுட்டு கெடக்குறானுக” என்று கிளம்பும் வரையிலும் வாயில் முணகிகொண்டும் அக்கம் பக்கம் இருப்பவர்களிடம் குறை சொல்லிக் கொண்டும் இருப்பார்.
“அவர கொற சொல்லி என்னத்துக்கு, இராத்திரி கெடந்துட்டு வெள்ளன படுக்கையைக் கூட எடுக்கறதில்ல, அப்படியே குவிச்சு வெச்சுட்டு வாறது. லட்சக் கணக்குல செலவு செஞ்சு வீடு கட்டுனவனுக்கு வீட்டு வாசல்ல இப்படித் துணி குவிஞ்சு கெடக்குறதப் பாத்தா கோபம் வரத்தாஞ் செய்யும், நம்மலும் கொஞ்சம் அனுசரிச்சுப் போகனும்ல” என்றாள் ஒச்சம்மா.
அவள் ஒருத்தியைத் தவிர ஒருவரும் காலை எழுந்து படுக்கையை எடுத்து வைப்பதோ, பயன்படுத்திய இடத்தை சுத்தம் செய்வதோ கிடையாது. ஒச்சம்மாளும் சொல்லி சலித்துவிட்டாள். வயது ஐம்பத்தைந்தை கடந்த நிலையில், கட்டிட வேலையும் செய்து, மாடசாமியின் சின்ன சின்ன உதவிகளுடன் இவர்களுக்கு மூன்று நேரமும் ஆக்கி இறக்கவே அவளுக்குப் போதும் போதும் என்றாகிவிடும்.
மூன்று மகன்களைப் பெற்று இரண்டு பேருக்குத் திருமணமும் முடித்தாயிற்று. மூன்றாமவன் இதோ இவர்களுடன் இருக்கிறான். இதற்கு மேலும் அவளால் எத்தனை உழைக்க முடியும். இப்பொழுதும் அவள் பல்லைக் கடித்துக்கொண்டு அனைத்தையும் சமாளிக்கக் காரணமே மூன்றாமவனுக்கும் நல்லபடி ஒரு காரியத்தை முடித்துவிட்டால் போதும் என்பதுதான். அது மட்டும் நடந்துவிட்டால் சொந்த ஊரில், சொந்த வீட்டில் சென்று அக்கடாவென்று அமர்ந்துவிடுவாள். உடல் அத்தனை களைத்துவிட்டது. அவளுக்கு மட்டுமில்லை மாடசாமிக்கும் சேர்த்துதான்.
“சரி சரி இப்ப என்னத்துக்கு, இந்த மறைப்பையே இன்னும் கொஞ்சம் நல்லா சரி பண்ணி இங்கனக்குள்ளயே படுப்போம்” என்றான் சத்தி.
“இங்கயே வா”
“ஆமாம் அப்புறம் வேற எங்க போறது. இந்த வீடும் முடியறக்கு ஆச்சில்ல கொஞ்ச நாள் தான எப்படியோ இருப்போம்”
“ஹ்ம்ம் மழ வேற ஏறிக்கிட்டு நிக்குதேடா எப்படி இருக்க”
“எதாச்சும் செய்யுவோம். மிஞ்சிப் போனா ஒரு மாசம் அவ்வளவுதான”
“தரையெல்லாம் சொத சொதனு கெடக்கு. மழத்தண்ணி மேல இருந்தும் உள்ள வருது எப்படி சமைக்க எங்க படுக்க” முணங்கிக் கொண்டே ஒச்சம்மா காலி தட்டைக் கையிலெடுத்துக்கொண்டு வெளியில் வந்தாள்.
மாலை 6.30 மணியளவில் வேலை முடித்து ஒச்சம்மாவும், மாடசாமியும் கைகால்களைக் கழுவிக்கொண்டு அங்கிருந்த மணலின்மீது சென்று அமர்ந்தனர். முருகனும், சத்தியும் கூட வேலையை முடித்து வர, கிளம்புவதற்குத் தயாரான மேஸ்திரி சத்தியை அழைத்துப் பேசினார்.
“என்னடா சொன்னாரு மேஸ்திரி. பொங்கலுக்கு ஊருக்குப் போகனும்னு கேட்டியா? தீவாளிக்கும் போகல டா. இப்பவாச்சும் போகனும்ல. மாடு கண்ணுகளுக்கு பொங்க வைக்கனும், ஆரி அடிச்சு போட்டு அப்படியே வெச்சுட்டு வந்தது, போயி என்ன ஏதுனு பாக்கனும் என்ன சொன்னாரு?” இடைவிடாமல் பேசினார் மாடசாமி.
“என்ன சொன்னாரு… அந்த வீட்டுக்காரங்க பேசுனதப் பத்தி கேட்டாரு. பொங்கலுக்கு ஊருக்குப் போறதப் பத்தி இப்ப ஏதுஞ்சொல்ல முடியாதுனு சொல்லிட்டாரு. நாங்கேக்கவும் அத அப்புறம் பேசிக்கலானு அனுப்பிட்டாரு” மூவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர்..
மறுநாள் ஞாயிற்றுக் கிழமை, விடுமுறை நாள். காலை சாவகாசமாய் எழுந்து சமைத்து சாப்பிட்டு ரோட்டில் மெதுவாய் அங்குமிங்கும் நடைபயின்று கொண்டிருந்தனர். அவர்கள் மறைப்பின் வலது புறமிருந்த வீட்டுக்காரர் பேச்சுக்கொடுத்தார். அந்த பகுதியிலேயே அவர்களிடம் கொஞ்சமேனும் பேசுவதும், வீட்டில் ஏதேனும் விஷேசமென்றால் அவர்களை அழைத்து உணவும், இனிப்புகளும் வழங்குவதும் அந்த ஒரே ஒரு வீட்டுக்காரர் மட்டும்தான். இவர்களும் எப்பொழுதாகிலும் நேரம் கிடைக்கும்போது அங்கு சென்று பேசிக்கொண்டிருப்பார்கள்.
“என்ன பொங்கலுக்கு ஊருக்குப் போலயா”
“எங்க… மேஸ்திரி இன்னும் ஒண்ணுஞ் சொல்லல” என்றார் மாடசாமி.
“உங்க ஊருல பொங்கல் எல்லா கொண்டாடுவீங்க தான?”
“ஆமா பின்ன. வீட்டுக்கு வெள்ள அடிச்சு, மாடு கன்னுகல குளிப்பாட்டி, அதுகளுக்குப் பொங்க வெச்சு சாமி கும்புடுவோம். அக்கம் பக்கத்துல இருக்கவங்கனு ஒரு பத்திருபது பேர கூப்புட்டு சோறாக்கி போடுவோம். இதுதானே நமக்குப் பண்டிக” என்றார் ஒச்சம்மா.
“ஓ மாடெல்லாம் இருக்கா… அதையெல்லாம் யாரு பாத்துக்கறா? வீட்டுல யார் இருக்கா” கேட்டுக்கொண்டே வெளியே வந்தார் வீட்டுக்காரரின் மனைவி.
“ரெண்டு மருமவளும், ஒரு மவனும் அங்கனதா இருக்காங்க. 4 மாடு இருக்கு, காடு மாடெல்லா அவங்கதா பாத்துட்டு இருக்காங்க”
“ஒரு மகந்தானா… அப்ப இன்னொரு மகன்?”
“அவன் பெங்களூருல எங்களமாறிதான் ஒரு மேஸ்திரிகிட்ட வேலைல இருக்கான். அப்போ அப்போ வந்து போவான்”
“அப்ப ரெண்டு மகனுகளும் சம்பாதிக்குறாங்கள நீங்க ஏன் இங்க வந்து இப்படி கஷ்டப்படுறீங்க மழையிலயும் குளுருலயும்”
“என்ன செய்ய ரெண்டு மகனுக்கு கல்யாணம் பண்ணி, ஊடு கட்டி கொஞ்சம் கடனாகிடுச்சு. எங்க ஊருல கூலி எல்லா அதிகமில்லமா பொம்பள ஆளுக்கு நாளுக்கு இருனூறும், ஆம்பளக்கி முன்னூத்தம்பது, நானூறும் குடுப்பாங்க. அத வெச்சு என்ன செய்ய. இங்கன மேஸ்திரி எனக்கு நானூறு குடுக்குறாரு, அவரு ஐந்நூறும், மகன் அறுனூறும் வாங்குறாங்க. எப்படியோ கொஞ்சம் கடனடச்சுட்டு இவனுக்கும் ஒரு காரியத்த முடிச்சுட்டா ஊரோட போயிடுவோம்”
ஒச்சம்மா மனதிலிருந்ததைப் பேசி முடிக்க, வீட்டுக்காரரின் மனைவி என்ன சொல்வதென்று தெரியாமல் அமைதியாகி விட்டார்.
அன்றிரவு சரியான மழை, வானம் ஊற்றித் தீர்த்தது. பெயருக்காயிருந்த மறைப்பின் சந்துகளிலெல்லாம் தன்ணீர் சாரலாயும், மழையாயும் உள்ளே நுழைய, மேட்டுப்பகுதியிருந்து ஓடி வந்த வெள்ளம் தன் பங்குக்கு முன்பகுதி சந்து வழியாய் நுழைந்தது.
பாதி இராத்திரியில் எழுந்து வெள்ளம் சூழ்ந்த மறைப்பை விட்டு, பழையபடி நால்வரும் அந்த வீட்டின் திண்ணையில் தஞ்சமடைந்தனர். அவர்களின் கெட்ட நேரமோ என்னமோ, இரவு தூங்காத அழுப்பில் காலை கொஞ்சம் அதிகம் தூங்கிவிட, விடிந்ததும் விடியாததுமாய் அங்கு வந்த வீட்டுக்காரர் அவர்கள் திண்ணையில் சுருண்டிருப்பதைக் கண்டு ருத்திரதாண்டவமே ஆடிவிட்டார்.
செய்வதறியாது நால்வரும் கூனிக்குருகி, படுக்கையைச் சுருட்டிக் கொண்டு மறைப்பை நோக்கி வந்தனர். அந்த இடமே முந்தைய நாளின் தண்ணீர் முழுவதும் நிறைந்து சகதியாய் ஆகியிருந்தது. குளிரில் நடுங்கியபடி என்ன செய்வதென்று அறியாமல் போர்வையைப் போர்த்திக்கொண்டு மணலின் மீது அமர்ந்திருக்க, மாடசாமி மட்டும் மெதுவாய் நடந்து சென்று சற்று தொலைவில் இருந்த டீக்கடையில் சூடாக டீ குடித்துவிட்டு மற்றவர்களுக்கும் வாங்கி வந்தார்.
ஆனால் எது எப்படியாகினும் அன்றைக்கும் அவர்கள் வேலைக்குச் செல்ல வேண்டி இருந்தது. மேஸ்திரி மாலை நால்வரையும் அழைத்து பக்கத்து வீட்டுக்காரர் தனக்கு தொலைபேசியில் அழைத்திருந்ததாகவும், இனிமேல் எக்காரணம் கொண்டும் அந்த வீட்டிற்குச் செல்லக் கூடாது என்றும் உறுதியாகக் கூறினார். மாடசாமி மேஸ்திரியிடத்தில் அப்படியானால் வேறு ஏதேனும் வீடு வாடகைக்குப் பிடித்துத் தரும்படி கேட்க,
“உங்களுக்கு சம்பளம் குடுக்குறதும் இல்லாம வீடு வேற பாத்துக் கொடுக்கனுமா? நீங்க பாட்டுக்கு எங்கயோ போய் உக்காந்துட்டா இங்க இருக்க சாமானெல்லாம் யாரு பாத்துக்கறது. பொழப்பில்லாமயா உங்கள இங்கயே குடி வெச்சுருக்கேன்?” என்று அவர் பங்குக்கு அவரும் கத்தி விட்டுச் சென்றார்.
மேலும் இரண்டு நாட்கள் இப்படியே சென்றது, பொங்கலுக்கு நான்கு நாட்களே இருக்க மழையும் விட்டபாடில்லை. தொடர் மழையினால் வேலையும் நடைபெறாததால் நால்வரும் சும்மாவே பொழுதைப் போக்கிக் கொண்டிருந்தனர். அன்றைக்கு மாலை எங்கிருந்தோ காரில் வந்த மேஸ்திரி முருகனை அருகில் அழைத்துப் பேசினார். அவர் அழைக்காமல் அருகில் சென்றால் கோவம் வருமென்பதால் மற்ற மூவரும் அமைதியாக ஆங்காங்கே இருந்த இடத்திலேயே இருந்து கொண்டு அவர்கள் பேசுவதைக் கேட்க முயற்சித்துக் கொண்டிருந்தனர்.
மேஸ்திரி நகர்ந்ததும் மூவரும் வேகமாய் முருகனை நெருங்கி என்ன ஏதுவென்று கேட்க,
“பொங்கலுக்கு ஊருக்குப் போக சொல்லிட்டார்…” என்றான் முருகன்.
“கடவுளே சந்தோஷம், எப்படி ஒரு வாரம் லீவு எடுத்துக்கலாமா” மாடசாமி அவசரமாய் இடைமறித்தார்.
“ஒரு வாரமா… பதினைஞ்சு நாள் போக சொல்லிட்டார்…” முருகன் புன்னகையுடன் பதிலளிக்க, மூவரின் முகத்திலும் ஆயிரம் வாட்ஸ் பல்பு எறிந்தது.
“பதினைஞ்சு நாளா… சந்தோஷம் போ…. எப்படியோ போயிட்டு திரும்பி வந்தா பத்திருபது நாள்ள இந்த வீடு வேலையும் முடிஞ்சுடும் எடத்த காலி பண்ணிடலாம்…” ஒச்சம்மா பெருமூச்சு விட்டாள்.
“அதுதான் இல்ல” கேள்விக்குறியுடன் மூவரும் முருகனைப் பார்த்தனர்.
“மேஸ்திரி இங்கயே இன்னும் ரெண்டு வீடு பேசிருக்காராம்… பொங்கல் முடிஞ்சு பூஜ போடறாராம். அதுனால இன்னும் கொஞ்ச நாளைக்கு இங்கதா இருக்கனும்னு சொல்லிட்டார். வீடும் எதுவும் பாக்க முடியாதாமா இந்த மறப்பையே சரி பன்ணிக்க சொல்லிட்டார்”.
முருகன் பேசியதைக் கேட்டு மாடசாமியையே கன்ணிமைக்காமல் சிறிது நேரம் பார்த்த ஒச்சம்மா, அங்கிருந்து எழுந்து சென்று, மறைப்பைச் சுற்றிலும், அதன் உள்ளும் நோட்டமிடத் தொடங்கினாள்.