வெளி ரங்கராஜன்

தஞ்சைப் பின்புலத்தில் தமிழின் முக்கிய இலக்கியப் படைப்பாளிகளான கு.ப.ராஜகோபாலன், தி.ஜானகி-ராமன்,எம்.வி.வெங்கட்ராம் ஆகியோர் வரிசையில் வைத்து கணிக்கப்படுபவர் கரிச்சான்குஞ்சு. கு.ப.ராஜ-கோபாலனின் எழுத்துக்கள் மீதுள்ள அபிமானத்தால் அவருடைய கரிச்சான் என்கிற புனைப்பெயரை எடுத்துக்கொண்டு கரிச்சான்குஞ்சு என்ற பெயரில் படைப்புகள் செய்தவர் இவர் 50க்கும் மேற்பட்ட சிறுகதைகள், ஒரு நாவல், 2 குறுநாவல்கள், 6 நாடகங்கள் மற்றும் 5 மொழிபெயர்ப்பு நூல்கள்  என படைப்பிலக்கியத்தின் பல துறைகளிலும் பங்களிப்புகள் செய்தவர். சமஸ்கிருதத்தில் ஆழ்ந்த புலமையும், வரலாறு மற்றும் தத்துவவியல் குறித்த ஈடுபாடுகளும் கொண்ட கரிச்சான்குஞ்சு பல்வேறு வரலாற்று மாந்தர்களையும், சமகால வாழ்வின் விசித்திர மனிதர்களையும் தன்னுடைய படைப்புகளில் உலவவிட்டவர். வறுமை மற்றும் இயலாமைகளுக்கிடையிலும் வாழ்க்கை குறித்த கொண்டாட்ட உணர்வும், அதன் புதிர்த்தன்மை குறித்த பல்வேறு அனுமானங்களும் கொண்டவர். அதனாலேயே எந்த வகைமைக்குள்ளும் சிக்கிக்கொள்ளாமல் வாழ்வின் பன்முகத்தன்மையில் நம்பிக்கை கொண்டு பல்வேறு கருத்தோட்டங்களுடனும் தன்னுடைய தொடர்புநிலையை உருவாக்கிக்கொண்டவர்.

அவருடைய நாடகப் படைப்புகளிலும் இத்தகைய பார்வைகள் எதிரொலிப்பதை பார்க்கமுடியும். சரித்திரத்துடன் உரையாடல் என்கிற அம்சம் கு.ப.ரா, புதுமைப்பித்தன் போன்ற அந்த காலகட்ட படைப்பாளிகளிடம் அதிகமாக வெளிப்படுகிறது. முக்கியமாக வரலாற்றின் குருட்டுப் பார்வையால் கறைபடிந்த பாத்திரங்களை ஒழுக்கம் குறித்த பழமைவாத கண்ணோட்டங்களிலிருந்து விலக்கி புதிய பார்வையில் அப்பாத்திரங்களின் நடத்தைகள் குறித்து ஒளி பாய்ச்சுவது என்பது அவர்களின் உத்தியாக இருந்தது. அவ்வகையில் ராமாயண அகலிகையின் அழகியல் மனம் குறித்தும், அவள் உயிர்பெற்று மீண்டும் கல்லாவது குறித்தும் கு.ப.ராவும், புதுமைப்பித்தனும் புதிய பார்வைகளை தங்கள் நாடகங்களில் வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

அதேபோல் கரிச்சன்குஞ்சுவும் மணிமேகலை காப்பியத்தில் வரும் மாதவி மற்றும் மணிமேகலை பாத்திரங்களை தன்னுடைய `காலத்தின் குரல்`நாடகத்தில் ஒரு புதிய கண்ணோட்டத்தில் உலவ விடுகிறார்.மணிமேகலை எழுதப்பட்ட காலகட்டம் என்பது இந்தியாவில் பெளத்த மதத்துக்கும், சநாதன வைதீக மதங்களுக்கும் இடையே ஏற்பட்ட கருத்துப் போராட்டங்களின் பின்புலத்தில் எழுதப்பட்ட ஒரு காப்பியம்.மாதவி மணிமேகலையை கண்ணகியின் மகளாகவே பாவித்து அவளை நடனமாட அனுப்பாமல் துறவை வலியுறுத்துகிறாள். மணிமேகலையும் புத்த மதத்தில் ஈடுபாடு கொண்டு அது போதிக்கும் துறவுநிலையின் குறியீடாக இருக்கிறாள். தன்னுடைய நடனக்கலையையும், காதலையும் துறந்து அட்சய பாத்திரமேந்தி பசித்தவர்க்கு சோறிட்டு பசிப்பிணி போக்கும் மானுட சேவையில் தன்னை ஈடுபடுத்திக்கொள்கிறாள். உதயகுமாரன் கொலையால் சினம் கொண்ட அரசனும், அரசியும் அவளை பழிவாங்க துடித்தாலும், புத்த மதம் பரப்பிய மாறுதல் என்ற அம்சத்தின் தாக்கத்தை உணர்வதாக கரிச்சான்குஞ்சு நாடகத்தை உருவாக்கியுள்ளார். சடங்குகளையே பற்றிக்கொண்டிருந்த சநாதன இந்து மதத்துக்கும், மடங்களை நிறுவி சாதிப் பாகுபாடின்றி மக்கள்சேவையில் ஈடுபட்ட புத்த மதத்துக்கும் இடையே ஏற்பட்ட கருத்துப் போரில் மணிமேகலையின் பாத்திரம் பிரகாசிப்பதாக கரிச்சான்குஞ்சு அப்பாத்திரத்தை உருவாக்கி தன்னுடைய சமூகவியல் பார்வைக்கு அழுத்தம் கொடுத்துள்ளார்.

அதேபோல் `கழுகு`தொகுப்பில் உள்ள ஐந்து நாடகங்களிலும் காப்பிய மாந்தர் குறித்தும், வரலாற்று மன்னர்கள் குறித்தும் ஒரு கேலிச் சித்திரத்தை உருவாக்கியுள்ளார். `வில் எங்கே` நாடகத்தில் காட்டுக்கு வந்து மரவுரி தரித்தும் வில்லேந்தத் துடிக்கும் ராமனை சீதை கேலி செய்கிறாள். `ஈஸ்வர் அல்லா தேரா நாம்` நாடகத்தில் இரு கடவுள்களும் சமம் என்று போலி ஒற்றுமை பேசும் இந்து அடிப்படைவாதத்தை அம்பலப்படுத்துகிறார். `மேதினி` மற்றும் `ரஸியா சுல்தான்` நாடகங்களில் வீண் சண்டையிட்டு மடிந்த ராஜபுத்திர மற்றும் இஸ்லாம் மன்னர்கள் பற்றியும், அரசியலில் பெண்கள் பகடைக்காய்களாவதையும், பிற்போக்கு வாதங்களை எதிர்த்து பெண் எழுச்சிபெறுவதையும் சித்தரிக்கிறார். `கழுகு` நாடகத்தில் ஆங்கிலேயர் இந்தியாவில் நுழைய ஏதுவாக குறுநில மன்னர்களின் சுயநல ஆசைகளும், அதிகாரப் போட்டிகளும் அமைந்தது சுட்டிக்காட்டப்படுகிறது. இந்த நாடகங்கள் எல்லாம் வரலாற்று சம்பவங்களுக்கு பின்னால் உள்ள மனித பலகீனங்கள் மீது கவனத்தை உருவாக்குவதாக அமைந்துள்ளன.

காப்பியப் பாத்திரங்களும், வரலாற்றுப் பாத்திரங்களும் மாறுபட்ட கண்ணோட்டங்களில் புதிய விளக்கம் பெறும் நாடகக் களன்களை உருவாக்குவது எப்போதும் ஒரு நாடகப் படைப்பாளியின் முக்கிய தேர்வாகவே உள்ளது. ஆனால் பெரும்பாலும் இந்த நாடகங்கள் உரையாடலை மடக்கிப்போட்டு கதைசொல்லும் பாணியிலேயே இயங்குகின்றன. நாடகக் கணங்களை தேர்ந்தெடுத்து அவற்றின் மோதல்கள் உருவாக்கும் ஒரு நாடக இயங்குதளத்தை கட்டமைப்பதும், அந்த வரலாற்றுடனான உரையாடல்களை சமகாலப் பார்வையுடன் செழுமைப்படுத்துவதிலேயே ஒரு நாடகப் படைப்பாளியின் வெற்றி உள்ளது. அதில் குறைந்த அளவில் வெற்றி பெற்றவையே கரிச்சான்குஞ்சுவின் நாடகங்கள் எனக்கூற முடியும். ஆனால் காப்பிய மாந்தர்களையும்,வரலாற்று மாந்தர்களையும் மறுவாசிப்பு செய்வதும், காலத்தின் கேள்விகளுக்கு அவர்களை உட்படுத்துவதும் இப்படைப்புகளில் கவனம் பெறுவது ஒரு நேர்மறையான அம்சம்.

வெளி ரங்கராஜன்

ஒரு இலக்கியப்பிரதியும் ஒரு நாடகப் பிரதியும் வேறுபட்ட அளவுகோல்களுடன் இயங்குகின்றன. ஒரு இலக்கியப் பிரதி தன்னளவில் முழுமையானது. ஆனால் ஒரு நாடகப் பிரதி தனக்குரிய நிகழ்விடத்தை மனதில் வைத்தே உருவாக்கப்படுகிறது. ஒரு நாடக உடலின் இருப்பும் அதன் லயமுமே நாடகப் பிரதியை இயக்குகின்றன. அது ஒரு ஓவியச் சிதறல் போல இலக்கியம், கவிதை, இசைத் தன்மை, நடனம் ஆகிய கூறுகளிலிருந்து தனக்கான உத்வேகத்தையும் வடிவத்தையும் எடுத்துக்கொண்டு ஒரு காட்சித்தளத்தில் இயங்குகிறது. நிகழ்வித்தலுக்கான சங்கேதங்களாகவும், குறியீடுகளாகவும், குறிப்புகளாகவும் தான் அவை வடிவம் கொள்கின்றன. ஒரு நாடகப் பிரதியில் இயல்பான வாசிப்பு நிலையில் அதன் முழுப்பரிமாணமும் கிடைப்பதில்லை. அதற்கான ஒரு நாடக உடலை முன்னிறுத்தி ஒரு பிரத்யேகமான வாசிப்பை கோரும் போதுதான் அதன் பல்வேறு தொடர்புநிலைகள் புலப்படுகின்றன. நிகழ்வின் போதே பிரதி இன்னும் முழுமை அடைகிறது.

மேற்கத்திய நாடகங்கள் ஒரு பிரதி சார்ந்த கலாச்சாரத்திலிருந்து உருவானவை. ஆனால் நம்முடைய கீழை நாடகக் கலாச்சாரம் பிரதி சார்ந்தது அல்ல. அது நிகழ்கலை மரபுகள் சார்ந்தது. நம்முடைய நாட்டுபுறக் கலைமரபுகளின் வடிவாக்கத்தையே இந்திய நாடகம் சார்ந்துள்ளது. இலக்கியப் படைப்பாளிகளால் புதிய நாடகப் பிரதிகள் அவ்வப்போது எழுதப்பட்டு வந்திருக்கின்றன.  பரவலாக வாசிக்கப்பட்டாலும் அவை நிகழ்தளத்துடன் தொடர்பற்று இருந்ததால் ஒரு செறிவான நாடக இயக்கமாக விரிவடையவில்லை.  தமிழிலும் புதுமைப்பித்தன் கு.ப.ரா., தி, ஜானகிராமன் போன்றவர்கள் புதிய நாடகப் பிரதிக்கான படைப்பு முயற்சியில் ஈடுபட்டாலும் அவர்களுடைய புனைவுலகின் நீட்சியாகவே அவை பார்க்கப்பட்டன. நம்முடைய காலம்காலமான மகாபாரத நிகழ்வுகள் வெவ்வேறு காலகட்டங்களில் எண்ணற்ற கூத்துப்பிரதிகள் உருவாகக் காரணமாக இருந்திருக்கின்றன. நிகழ்வு தரும் உத்வேகமே ஒரு புதிய பிரதிக்கான உத்வேகமாக அமைகிறது. இலக்கிய நிலைப்பாடுகளின் பலத்தில் உருவாகும் பிரதிகள் சில பொறிகளை உருவாக்கினாலும் அவை அதிக நீட்சி பெறுவதில்லை.

நம்முடைய புனைவு எழுத்தாளர்களில் முத்துசாமி மட்டுமே நாடகப் பிரதியின் இயங்குதளம் குறித்த பார்வை கொண்டவராக இருந்தார். அவருடைய சிறுகதைகள் போன்று அவருடைய நாடகங்கள் எழுதப்படவில்லை. தமக்குரிய ஒரு இயங்குதளத்துடனேயே அவை செறிவாக அர்த்தப்படுகின்றன. வெவ்வேறு நிகழ்விப்புகளில் அவை வெவ்வேறு விதமாக தோற்றம் கொள்கின்றன. அரசியல் விளையாட்டாகிப் போவதை சொல்லும் முத்துசாமியின் நாற்காலிக்காரர் நாடகம் அதன் முரண்பட்ட பிம்பங்களால் பல்வேறுபட்ட நிகழ்வுகளுக்கு இடமளித்தது. தொன்மம், பெளரானிகம், பாலியல் தன்மை ஆகியவற்றின் இழைகள் கொண்ட கிரிஷ் கர்னாடின் நாடகப் பிரதிகள் பரவலான வாசிப்புசுவை கொண்டிருந்தபோது சந்திரசேகர கம்பார் மற்றும் காவாலம் நாராயண பணிக்கர் ஆகியோரது பிரதேசத்தன்மை கொண்ட பிரதிகள் வேறுபட்ட வாசிப்பை கோரின. எம்.டி. முத்துக்குமாரசாமியின் ‘சைபீரிய நாரைகள் இனி இங்கு வரப்போவதில்லை’ நாடகப் பிரதி ஒருபுறம் அரசியல் உள்ளீடுகள் நிறைந்ததாகவும், மறுபுறம் சங்கீத ஆலாபனைகள் கொண்டதாகவும் வாசிக்கப்பட்டது. அண்மைக்காலங்களில் நிகழ் வெளியில் பெரும் பாய்ச்சலை நிகழ்த்திவரும் முருகபூபதியின் நாடகப் பிரதிகளை அதன் பின்புலத்தில் உள்ள நாடக நிலம் மற்றும் இசை நடனக்கூறுகளின் அனுமானமின்றி வாசிக்க முடியாது.

பிரதிக்கும் நிகழ்விப்புக்குமான சங்கேதங்களும் குறியீடுகளும் சோதிக்கப்படாத நிலையிலேயே தமிழ்ச்சூழலில் இவை இரண்டும் வெவ்வேறு தளங்களில் நிகழ்வதான உணர்வு உள்ளது. நாடகப் பரிமாணங்களின் பலத்தில் அல்லாமல் வெறும் வாசிப்பின் நீட்சியாகவும், கருத்துக்குவியல்களின் திரட்சியாகவும் எழுதப்படும் பிரதிகள் நாடகமாக விரிவுகொள்ளும் சாத்தியங்கள் குறைவு. இன்று நாடக நிகழ்வுகள் அருகிவிட்ட நிலையிலேயே நாடகப் பிரதிகளின் உருவாக்கத்தில் எழுச்சியற்ற சூழல் உள்ளது. மனித ஸ்பரிசத்தையும், மனித உடலின் நெகிழ்வுகளையும் நிகழ்கலைகளே மீட்டெடுக்க முடியும். வீரியமான நிகழ்தளம் குறித்த அக்கறைகளுடன் எழுதப்பட்ட பிரதிகள் குறித்த மாறுவாசிப்பும், எழுதப்படாத பிரதிகளின் சாத்தியங்கள் குறித்த அனுமானமும் இன்று அவசியமானதாக இருக்கின்றன.

நாடகத்தளத்தில் வெளிப்பாடு கொள்ளும் மனித உடல்கள் அதிக வலியுறுத்தல்கள் இன்றி மனித இயல்புகளின் பல்வேறு நெகிழ்வுகளை சரளமாக புலப்படுத்தும் சாத்தியங்கள் கொண்டிருக்கின்றன. மனித உடல்களின் ஊடாக வெளிப்பாடு கொள்ளும் இருப்பின் நியாயங்கள் அறவியல் வரையறைகளைக் கடந்து செல்லும் முகாந்திரங்களை எளிதில் வழங்கிவிடுகின்றன. முக்கியமாக பெண் உடல் குறித்த வெற்று பாலியல் முன்அனுமானங்களிலிருந்து விடுபட்டு காட்சித்தளங்களில் வடிவம் கொள்ளும் பெண் உடல் குறித்த சமூகப்புரிதலும், பரிவும் ஆண் பெண் உறவு நிலைகள் குறித்த நுண்ணுணர்வுத் தளங்களை மேம்படுத்தும் வல்லமை கொண்டவையாக இருக்கின்றன. தாய் மகன் உறவு குறித்த இடிபஸ் மன நிலை ஒரு இலக்கிய வாசிப்பில் தரும் அதிர்வுகள் ஒரு ஸ்தூலமான நாடக இருப்பில் அதிகம் சமனப்பட்டுவிடுவதை நாம் பார்க்க முடியும்.

இவ்வாறு ஒவ்வொரு நிகழ்வும் பிரதிக்கு புதிய பரிமாணம் அளிக்கிறது. பிரெக்ட், ஜெனே போன்றவர்கள் ஒவ்வொரு நிகழ்வுக்கு பிறகும் தங்கள் பிரதிகளை திருத்தி எழுதியிருக்கிறார்கள். மரபை அறியவும், மரபைக் கடந்து செல்வதற்கான உத்வேகங்களையும், எழுச்சிகளையும் பெறுவதற்கான முகாந்திரங்களைக் கொண்டிருப்பதாலேயே இன்று அரங்கச் செழுமை கொண்ட கலாச்சாரங்கள் மனித நடத்தைகள் குறித்த புரிதலை முன்னெடுத்துச் செல்வதில் முன்னோடிகளாக விளங்குகின்றன.