நாம தினமும் பாக்குற சமையல்காரங்களோட தினசரி வாழ்க்கைச் சம்பவங்களையும் சங்கடங்களையும் உள்ளது உள்ளபடி பேசும் நாவல் குதிப்பி.. குதிப்பிங்கிறது வட்டகையில சோறு கிண்டிவிடுற பெரிய கரண்டி. பக்கத்திலேயே இருந்தும் பாக்காம இருக்கோம்.. கிட்டத்திலேயே இருந்தும் புரிஞ்சுக்காம இருக்கோம்கிற மாதிரி உணர வைக்குற கதை. கலங்க வைக்குது.

கதை முழுசும் தேனி தான். தேனிக்காரங்க பேச்சுதான். படிக்கப் படிக்கப் பக்கத்து கடையில் உட்கார்ந்து பேசுறதும் தெருவுல நடக்குறதும் வார்த்தைகள்ல வர்ற மாதிரி இருக்கு. அக்கம்பக்கத்துல் பேசுறது மொத்தமும் காதுல விழுந்துக்கிட்டே தானே இருக்கு. காது நம்மகிட்ட கேட்டுக்கிட்டா கேக்குது? அச்சு அசல் பேச்சு மொழி. நாவல் முழுக்க நம்ம தெருக்காரங்க தான் பேசுறாங்க. படிக்கும் போதே கண்ணுக்குள்ள படமா ஓடுது. நம்ம மக்களுக்கே உரிய அந்த நக்கல், நையாண்டி, திமிரு, தெனாவட்டு, சண்டியர்த்தனம் எல்லாம் அங்கங்க.. அப்படியப்படியே இருக்குது..

சேது, சாரதி, வளர்மதி, கடைக்காரரு, பாக்கியம், அக்காண்டிப் பெரியம்மா, ஆண்டாளு, வாசு, சண்முகம் தோழர், வசந்தி, சரவணன், முஜிபூர், ரமேஷ், துரைப்பாண்டி, கவுண்டரம்மா, சின்னக்காளை, நாயுடு டாக்டரு – இவங்க தான் முக்கியக் கதாபாத்திரங்கள். கடைக்காரரு வச்சிருக்கிற பாத்திரங்களும் கதையில வர்ற பாத்திரங்கள் தான். குறிப்பாக சாரதி குடும்பத்தைச் சுற்றிச் சுழல்கிறது கதை. மொத்தத்தில பாத்திரங்களும் பாத்திரங்களைக் கையாளுகிற ஆளுகளும்தான் நாவலின் முக்கியக் கதாபாத்திரங்கள் அனைவரும். கதையில வர்ற கடைக்காரருக்கு ரோட்டுல ஆளு கிடந்தாலும் சரி பாத்திரம் கிடந்தாலும் சரி ஒரே பதறல்தான்.

தனிப்பட்ட முறையில் எனக்கும் சமையல்காரங்களுக்கும் மறக்க முடியாத சம்பவம் ஒண்ணு இருக்கு. போன வருசம் தை மாசம் குழந்தைகளுக்கு காதுகுத்து வச்சிருந்தோம். காதுகுத்து வச்சுருக்கோம்னு தான் பத்திரிகையிலேயே போட்டிருந்தேன். வாத்தியார்கள் தொடர்ந்து வேலைநிறுத்தம், போலீசு ஒருபக்கம் திடீர் திடீர்னு சங்கத்து ஆளுகள அரஸ்ட் பண்ணுறது என பரபரப்பா இருந்த சமயம். இப்படியெல்லாம் ஆகும்னு நமக்கென்னா தெரியும். விசேஷ வீட்டை விட்டுப்புட்டு கம்பத்தில் போயி ஒரு கடையில ஒளிஞ்சு படுக்க வேண்டியதாயிடுச்சு. அதிலயும் சிறப்பான சம்பவம்கிறது விசேஷம் அன்னைக்கு மதியம் தான். மதியச் சாப்பாடு செய்ஞ்சு வச்சிட்டு, மூணாறு போயிட்டு அப்படியே இங்க வந்துட்டோம்ணே செத்த நேரம் சாய்ஞ்சுட்டு இந்தா வந்திர்றோம்னு சொல்லிட்டு போன சமையல் ஆளுகளுக்கு மூனு நாலு மணிக்கு போனடிச்சா அதே ஆளுங்க தான் பேசுறாங்க. ஆனா வேற வேற ஆளாப் பேசுறாங்க. சரக்கு உள்ள போயிடுச்சு. மக்கள் மண்டபத்துக்கு அதிகமாக வரக்கூடிய நேரம், சாப்பாடு, மத்த அயிட்டங்கள் பற்றாக்குறை ஆயிடுச்சு. அப்புறம் நாகராசு மாமா புண்ணியத்துல சமாளிச்சோம்னு வைங்க. அப்புறம் ஆறு, ஏழு மணிக்கு மேல குளிச்சு பட்டையும் கிட்டையுமா நம்மாளுக வந்தாங்க.. எங்க அம்மாவுக்கு வந்துச்சே கோபம்.. போட்டபோடுல ஒரே ஓட்டம் தான். ரொம்பப் படுத்தி எடுத்திட்டாங்க அன்னைக்கு. நாகராசு மாமா மட்டும் இல்லைன்னா ரொம்ப சங்கடமாயிருக்கும்.

ஆனா, தோழர் காமுத்துரை அவர்களின் இந்த நாவலைப் படிக்கும் போது தான் தெரியுது சமையல் ஆட்களோடு ஒவ்வொரு நாப்பொழுதும் அப்படித்தான் தொடங்குது. அப்படித்தான் முடியுது. அட்வான்ஸ்ங்கிற பேர்ல வாங்குறதும் குடி, மிச்சப் பணமும் குடி.. ரெண்டுக்கும் இடையில் அலுப்பில்லாம வேலை செய்யுறோம்கிற பேர்ல கொஞ்சம் குடி.. ஆக மொத்தம் நெருப்பில உழைச்சு வேகுற மனுசங்க காசு எதுவும் வீடு போயிச் சேர்றது இல்ல. வீட்டுல இவங்கள நம்பிக் கெடக்குற பொண்டாட்டி, புள்ளைங்க நிலைமை தான் ரொம்பக் கஷ்டம். மொத்த ஒழப்பையும் குடிச்சி அழிக்கிற பொழப்பா மாறிப்போச்சு. குடியில இருந்து மீளவும் முடியாம விடவும் முடியாம தவிக்கிற தவிப்பா இருக்கு விளிம்பு நிலை மக்களோட பொழப்பு.

அல்லி நகரத்துல ஒரு லாரிக்காரர் வீட்டுல வேலபேசப் போயி முஜிபூரும் ரமேஷும் பேசும் பேச்சுக்கள். அவரு நான் ஓனரே இல்லையேங்கிறதும், நான் சரக்கு தான் ஏத்திட்டுப் போவேன், ஆளுகள ஏத்தினதே கிடையாதுங்கிறதும் முஜிபூர் சொன்ன பேச்சை மாத்தாம ஊண்டி அடிக்கிறதும் கலக்கல்..

வேலை பேச போகும் முன்னாடி முஜிபூரத் தேடிக் கண்டுபிடிச்ச ரமேஷ் ஒரு பீடி ஓசி கேட்க, இந்த வெளக்கெண்ணைக்குத்தேந் தேடுனியாக்கும்னு முஜிபூர் பொங்குவது..

நீ வந்தா மட்டும் போதும்ணே.. நாலே நாலு அயிட்டம்னு சொல்லி பாண்டி கோயிலுக்கு கூப்பிட்டுக்குப் போயிட்டு பார்ட்டிக்காரன் கொடுக்கிற இம்சையும் ஒரு கட்டத்துக்கு மேல ரொம்பக் கடுப்பான சேது ம்ம் சொல்லு சாயங்காலத்துக்கு என்ன செய்யலாம். இட்லி, தோசை.. மல்லிச் சட்னி, தேங்காய்ச் சட்னி.. தக்காளிச் சட்னி.. அப்புறம் மறுநாள் காலைக்கு… இப்படியே அவனுக்கு சேர்ந்தாப்ல பேசி, கடைசில, “ஆமாப்பா.. எங்கய்யனும் ஆத்தாளும் ஒனக்கும் ஒங் குடும்பத்துக்கும் தொண்டூழியம் செய்யத்தான பெத்துப் போட்டிருக்காக.. வெக்கமில்லாம புருசனும் பொண்டாட்டியும் பேசறீக பாரு.. கோயில் தளத்துக்கு வந்தா ஒண்ணு ரெண்டு கூடமாட ஆகும். செய்யுறம்னம். இப்ப நீ வீட்டுக்கு கொண்டு போயி திங்கிறதுக்கும் ஆக்கித் தரணுமாக்கும்.. வேலைக்காரன்னா அம்புட்டு எளக்காரம்..? சேவலத் தூக்கிட்டு ஓடிப்போயிரு.. இல்ல.. ஒண்ணொண்ணா எடுத்துக் காக்காய்க்கு அன்ன மாறிருவே.. ஆமா..!” எனக் கொதிப்பது யதார்த்தமான பதிவு. அந்த அத்தியாயம் முழுக்க திரும்பத் திரும்ப படிக்கலாம்.

சாரதிக்கும் வளர்மதிக்குமிடையிலான கூடல், கொஞ்சல்… புதுமணத் தம்பதிகளான வாசு, ஆண்டாளின் தேக்கடிப் பயணம், கொஞ்சல்கள், தழுவல், உரசல்கள் எல்லாம் கேமரா ஒளிப்பதிவு போல காட்சிகளை கண்ணுக்குள் கொண்டு வருகிறது..

சீசன் இல்லாத நேரங்களில் சபரிமலைக்கு டீ விற்கச் செல்லும் சமையல் வேலைக்காரர்கள் போலீசிடம் சிக்கி சின்னாபின்னமாகி வருகிற சம்பவங்கள் கேட்கப் புதிது. வலி பெரிது.

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழான்னு சொல்லி ஆள் திரட்டுவது, ஆம்பளைக்கு முன்னூறு ரூவாயும் குவார்ட்டரும் பிரியாணியும் பொம்பளைக்கு இருநூறுன்னு சொல்லி ஆளுங்கட்சிகள் ஆள் திரட்டுவதும் ஊசிப்போன புளிச்சாதம் கொடுப்பதும் அசல் பதிவுகள்.. அன்னைக்கு நான் கூட முகநூல்ல பதிவு போட்டுருந்தேன்.. அப்பப்பா என்னா மழை.. என்னா மழைன்னு.. ஆமா, மழைன்னு சொல்லி மாவட்டம் முழுக்க பள்ளிக்கூடத்துக்கு லீவு விட்டுட்டு பள்ளிக்கூடத்து பஸ் எல்லாம் பொதுக்கூட்டத்துக்கு ஆளேத்தப் போயிடுச்சு. “இங்க அவகவக பகுமானத்தக் காமிக்கக் கூட்டியிருக்காக இதுனால ஒனக்கோ ஒம்புள்ளைக்கோ பிரயோசனமிருக்கா?” என்கிற அக்காண்டிப் பெரியம்மாவின் கேள்வி மிக நியாயமானது.

வீரபாண்டித் திருவிழாவுக்கு நடிகை கே.ஆர்.விஜயா வர்றது சம்பந்தமாக நான் சின்னப்புள்ளையில இருந்து கேள்விப்பட்டிருக்கேன். கதையில பொருத்தமா வச்சிருக்காரு. பொதுவா கோயில் திருவிழாக்களுக்குப் போறதே இல்ல. இத்தனை வருசத்துல ரெண்டு தடவ தான் வீரபாண்டிக்குப் போயிருக்கேன். ஆனா, கதையில வர்ற இந்த தீப்பெட்டி சீனு பற்றி கேள்விப்பட்டதில்ல. விவரம் பத்தாதுணு நினைக்கிறேன். வெளிச்சத்துல நூறு தொழிலு நடக்குதுனா இருட்டுக்குள்ளயும் நடந்துக்கிட்டுதான் இருக்குது. முப்பது ரூவாய்க்கு மூனு தீக்குச்சி.. விதிமுறைகள் வேற. தீக்குச்சி அணையுறதுக்குள்ள பாத்துக்க வேண்டியது தான். அந்தப் பத்து ரூவாய்க்கு தன் உடலை நிர்வாணமாக் காட்டுற நிலையிலயும் பொம்பளைக இருக்காங்களான்னு ஆச்சரியமா தான் இருக்கு. இது மட்டுமில்லாம திருட்டு, பாலியல் தொழில், அங்கிட்டும் இங்கிட்டும் நடந்துகிட்டு தடவுறது, தழுவுறது எல்லாம் திருவிழாவின் இன்னொரு பக்கமாக நடந்துகிட்டு தான் இருக்குது.

குடிச்சுக் குடிச்சு தங்களோட உடம்பையும் குடும்பத்தையும் அழிச்சுக்கிற சமையக்காரங்களை ஒருங்கிணைச்சு சங்கம் கட்டிவிட போராடுகிற சண்முகம் தோழர் நம்ம கூடவே நிக்கிற மாதிரி இருக்கு. சேது, சாரதியோட சமையல் வேல செய்யுற பாக்கியம் மகள் வசந்தி. படிப்புல கெட்டிக்காரி.. டாக்டர் ஆவது இலட்சியம்னு படிக்கிற பொண்ணு நீட் பரிட்சையில தோல்வியடையுறதும். தற்கொலை செய்ஞ்சுக்குவாளோன்னு தாய் பதறுவதும்.. திணிக்காதே.. திணிக்காதே.. நீட் தேர்வைத் திணிக்காதே.. தரம் உயர்த்து.. தரம் உயர்த்து.. தமிழ்வழிக்கல்வியைத் தரம் உயர்த்துனு மாணவர்கள் போராடுவதும் நிகழ்காலம்.. “தமிழகத்தில் டீக்கடை வைத்திருந்த பன்னீர்ச்செல்வம் முதல்வர் ஆகிறார். குஜராத்தில் டூ விற்ற மோடி பிரதமராகிறார். ஆனால் பிளஸ்டூவில் 1200க்கு 1184 பெற்ற எங்களது சகோதரி அனிதா நீட் தேர்வில் தோற்றுப் போகிறாள். இது யாருடைய சதி.. எங்களுக்கு அளிக்கப்பட்ட கல்வியிலிருந்து , கல்வி முறையிலிருந்து தேர்வினை வைக்க வேண்டும்.. எனது தாய்மொழியே பயிற்று மொழி ஆக்கப்பட வேண்டும்” என்கிற மாணவர்களின் முழக்கங்கள் நம்பிக்கையூட்டும் எதிர்காலம். இந்தப் போராட்டத்தை எதிர்புறம் இருக்கிற மண்டபத்தில் இருந்து பார்க்கிற சமையல்காரர்கள் தங்களுக்கும் சங்கம் கண்டிப்பாக வேண்டும் என்று பேசிக்கொள்வது சண்முகம் தோழரின் விடாமுயற்சிக்கு கிடைத்த வெற்றி என்று தான் சொல்ல வேண்டும்.

ஒரு இடத்தில் கடைக்காரரின் ஒரு நாள் ஷெட்யூல் வருகிறது. ஆத்தாடி, படிச்சதும் தான் கடைக்காரரின் கன்னப் பளபளப்புக்கு காரணம் தெரியுது.. நீங்களும் படிச்சுப் பாருங்க.. “எழுந்ததும் பல்தேய்த்துவிட்டு காலைக்கடன் கழிப்பார். காப்பி தயாரானதும் காலைச் செய்திகளோடு காப்பியைக் குடித்துவிட்டு, பத்துப் பதினைந்து நிமிடம் வாசிப்பு அல்லது டி.வி.பார்த்தல், காப்பி வயிற்றில் காணாமல் போனதும் குளியலறை. அது முடிந்ததும் தலை துவட்டிய துண்டை இடுப்பில் கட்டினபடியே ஒரு நாள் விட்டு ஒருநாள் விட்டு ஒருநாள் மொட்டை மாடியில் முகச்சவரம். வாரத்தில் ஒருநாள் மீசையும் புருவமும் கத்தரிக்கப்படும்.. அப்படியே இறங்கி வந்து உடைமாற்றிக் கிளம்ப எட்டு முப்பது ஆகி விடும். பத்து மணிக்கு காலைச் சாப்பாடு கடைக்கு வரும். மதியமும் இரவும் வீட்டில் வந்து சாப்பிடுவார்.”

சின்னக்காளை தன் பொண்டாட்டி செத்துப் போச்சுன்னு வந்து நிக்கிறப்ப, நம்மளயும் கூட கொஞ்சம் கோபிக்கத்தான் வைக்கிறாரு கடைக்காரர். நாய்க்கு ரொம்பவே பயப்படுவார்னு தெரியுது.

க்காளக்க… வக்காளி, தாயளி – இதுபோல இன்னும் நிறைய வார்த்தைகள் பல இடங்களில் வருகிறது. மாமன், மச்சான்களோட பேசும் போது நூத்துக்கு தொண்ணூறு தடவை பயன்படுத்துவார்கள்.. அதை அப்படியே கையாண்டிருக்கிறார் தோழர் காமுத்துரை.. பல இடங்களில் அவரே கத்தரி போட்டிருக்கிறார்.. பீப் சவுண்ட்..

ஆன மேலதே ஏறுவேன்னா அந்தளவுக்கு நம்மகிட்ட அய்வேசு வேணும்ல.. ஆமா திங்க வேண்டீதே தீனி.. மானங்கெட்ட தீனி.. ஒரு பீடு எடுத்தால் ஓசிப் பீடியும் செலவாகுமே.. வெறகு வச்சு எரிச்சாலும் கேஸ்ல வச்சு எரிச்சாலும், ஏன் கரண்டு அடுப்பே வச்சு எரிச்சாலும் வேக்காடு சட்டிக்குத் தான்.. படப்போட மேஞ்ச மாடுகள உருவிப்போட்டுத் திங்கச்சொன்னா காணுமா.. என மக்கள் போகிற போக்கில் பயன்படுத்தும் சொலவடைகள், பழமொழிகள் ரசிக்கவும் ருசிக்கவுமானவை..

உடல்நிலை சரியில்லாமல் போன சாரதி, தனக்குப் பதிலாக தனது மனைவியை சமையல் வேலைக்கு அனுப்புவதும் அதிகாலை நாலு மணிக்கு எழுந்து போன சாரதி மனைவியைப் பதற்றமாகத் தேடுவதும் குப்பென வியர்த்து நிற்பதும் அதனைத் தொடர்ந்து டீக்கடையில் முனியாண்டியும் ரமேஷும் பேசும் பேச்சுகளும் என பாவம் அந்தச் சம்பவத்தின் தொடர்ச்சியாகவே இறந்தும் போகிறான்..

குடிகாரச் சமையல்காரர்கள் என்ற நிலையிலிருந்து கேட்டரிங் படித்த சமையல்காரனாகிறான் சாரதியின் மகன் சரவணன். பலருக்கும் தொழில் கற்றுக் கொடுத்த சேது சரவணனையும் அரவணைக்கிறான். அன்றைய தினம், ஆர்வமிகுதி சரவணனுக்கு ஆபத்தை வரவழைக்குது. சாதம் வேகும் வட்டகை சரவணன் மேல் சரிகிறது.. அடித்துப் பிடித்துத் தூக்கிக் கொண்டு ஆட்டோவில் ஏற்றிச் செல்கிறார்கள்.. வலியில் மயங்கிய சரவணன் விழித்துப் பார்க்கையில் வலி தெரியாமல் இருக்க கொஞ்சம் குடிச்சுக்கோன்னு குவார்ட்டர் பாட்டிலை நீட்டுகிறான் கோயிந்தன்.. சரவணன் கண்களில் தன் அப்பனின் குடியால் வாழ்வில் நொந்து நொந்து நூலாகிப் போன வளர்மதி தெரிகிறாள்..

இந்த கொரானா முழுமுடக்கத்தின் முதலில் படித்த நாவல் தோழர் காமுத்துரை அவர்கள் எழுதிய குதிப்பி தான். தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நடத்தி வருகிற கம்பம் சந்திப்பு இணையவழி நிகழ்வில் முதல் நூலாய் அறிமுகம் செய்யத் திட்டமிட்டதும் இந்த நூல் தான். 2019ஆம் ஆண்டின் இறுதியில் பிரபஞ்சன் நினைவுப் பரிசு பெற்ற இந்நாவலை டிஸ்கவரி புக் பேலஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

விளிம்பு நிலை மக்களின் வாழ்வை அவர்கள் உடனிருந்து தன் கேமராக் கண்களால் பதிவு செய்து தனக்கே உரிய பாணியில் மண்ணின் மொழியில் மக்களின் மொழியில் வழங்கியுள்ளார். நம் அருகிலேயே வாழும் மக்களின் வாழ்க்கையின் துயரங்களையும் இன்னல்களையும் கிண்டிக் கிண்டி, கண்டும் காணாமல் இயல்பாகக் கடந்து செல்லும் கண்களுக்கு காணத் தருகிறது இந்தக் குதிப்பி.. வாங்கிப் படியுங்கள்.. உங்கள் தெரு மக்களோடு இந்தப் புத்தகத்தின் வழியாக வாழுங்கள்.. இங்கு தனிமனித இடைவெளியெல்லாம் தேவையில்லை.

————————————————————————————————————————————————————————————-

வெளியீடு: டிஸ்கவரி புக் பேலஸ்
சென்னை- 600078
தொடர்புக்கு: 044 48557525, 8754507070

விமர்சகர்
தேனி சுந்தர்
94880 11128