கால இயந்திரத்தில் மதுரை பயணம் – தூங்காநகர நினைவுகள் நூல் குறித்து

நகர்வு

பள்ளிப்பருவத்தில் தனக்கு வரலாறு என்றால் எட்டிக்காய் என்னும் நூல் ஆசிரியர் அ. முத்துக்கிருஷ்ணன் வாசகனின் விரல் பிடித்து ஆயிரம் வருடங்களுக்கு முன்பு அழைத்துச்சென்று மதுரையை அக்குவேறாக ஆணிவேராக சுட்டிக்காட்டும் நூல்.

வாராந்திர தொடர் என்ற உணர்வைத் தோற்றுவிக்கும் ஒவ்வொரு அத்தியாயத்தின் கடைசிப் பத்தி உறுத்தலைத் தவிர மிக ஆழமான ஒரு சரித்திரப் பயணம் என்றே கூறலாம் இந்நூலை. வழுவழு பக்கங்களில் வண்ணமயமான படங்களுடன் எழுத்தாளருடன் ஒரு டூரிசம் நாட்களாய் விரிகிறது புத்தகம்.

‘தமிழ் பிராமி கல்வெட்டுகளின் சிறப்பம்சங்களில் ஒன்று மதிரை என்ற சொல் குறிப்பிடப்பட்டுள்ளதுதான். இந்த மதிரை என்ற சொல் 2,200 ஆண்டுகளுக்கு முன்பான இன்றைய மதுரையின் பெயராக இருந்து வந்துள்ளது என்பதன் மூலம் நமது மதுரையின் தொன்மையை நம்மால் உணர முடிகிறது’ என சரித்திர சான்றுகளுடன் புத்தகம் முழுவதும் மதுரையின் தோற்ற மயக்கத்தை சிறப்பித்துக்கொண்டே செல்கிறார் ஆசிரியர். நூலின் இடையிடையே தென்படும் பல அபூர்வத் தகவல்கள் கூடுதல் சுவை தருகின்றன. ‘மிளகு இந்திய மருந்து என்றே ஐரோப்பியாவில் குறிப்பிடப்பட்டது. நல்லெண்ணெயின் பயனை கிரேக்கர்கள் கி. மு. ஐந்தாம் நூற்றாண்டிலேயே நன்கு அறிந்திருந்தனர். நல்லெண்ணெய் பண்டைய தமிழரின் உணவுப் பண்டங்களில் ஒன்றாகும்.’ என மதுரை வரலாற்றுடன் பிறிதான தகவல்களும் தந்துள்ளார்.

மன்னர்களின் பெயர்களையும் போர் வருடங்களையும் ஞாபகத்தில் வைத்துக்கொள்ள முடியாதுதான் பள்ளியில் வரலாறு தனக்குப் பிடிக்காமல் போன காரணமாய் ஆசிரியர் முதல் பக்கத்தில் சொல்லிவிட்டு அதே பரிட்சையை வாசகனுக்கு வைக்கிறார் ஹொய்சாளப் பேரரசு முதல் நாயக்கர் ஆட்சிவரை என்ற கட்டுரையில். வரிசையான ஆட்சிமுறையும் மன்னர்களின் பெயர்களையும் வருடங்களையும் கடந்து செல்வதற்குள் மூச்சு முட்டிவிடுகிறது. கான் சாகிப் கதை, தாது வருடப் பஞ்சத்தின் நிலை, குஞ்சரத்தம்மாளின் வாழ்க்கை கதை என பல அத்தியாயங்கள் அறியாத நிஜங்களை அபூர்வமாக அள்ளித் தருகின்றன.

நூலின் ஆரம்பத்திலிருந்தே ஸ்ட்ரிக் ஆபீசராய் தகவல் அளித்து வந்த எழுத்தாளர் ரயில் வருகை, தபால் ஆட்சி (குறிப்பாக ரன்னர்கள் பற்றிய பத்திகள் வெகு சுவாரசியம்), ஓவியங்களின் வழியே மதுரை, புகைப்பட சட்டகத்துள்ளான மதுரை என பாதி புத்தகத்துக்குப் பிறகு களை கட்டுகிறார். ஜிகிர்தன்டா, சிந்தாமணி தியேட்டர் என பிற்பாதி வண்ணம் கூட்டுகிறது கூடுதல் விறுவிறுப்பாய்.

நிறைய தகவல்களை நேர்மையாய் சொல்லிவிட வேண்டும் என்ற காரணமோ என்னமோ பல பக்கங்கள் தகவல் களஞ்சியமாய் விரிகின்றன. போலவே துல்லியமாய் என்ற சொல் பல பக்கங்களில் துள்ளியமாய் என்றே துள்ளிக் குதிப்பது சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை குறித்த புத்தகத்துக்கு சிறு திருஷ்டிப்பொட்டு.

பதிவை பகிர

Add your first comment to this post

You cannot copy content of this page