கதையல்ல… எல்லாமே காதல் – ந. முருகேச பாண்டியன் தொகுத்த தமிழகக் காதல் கதைகள் தொகுப்பு குறித்து

நகர்வு

என்றும் எப்போதும் புதிதாய் இருப்பதும் புதிதாய் மகிழ்விப்பதும் காதல் என்ற ஒற்றைச் சொல்லும் ஓராயிரம் உணர்வும்தான். தமிழ் எழுத்தாளர்கள் எழுதிய காதல் குறித்த கதைகளின் தொகுப்பாக வந்திருக்கிறது தமிழகக் காதல் கதைகள் என்ற இந்த தொகுப்பு.

கு. அழகிரிசாமி தொடங்கி மித்ரா அழகுவேல் வரை காதலின் எழுத்து குறித்த ஒரு சுவாரசியப் பயணம். மாஸ்டர்ஸ் என்றும் மாஸ்டர்ஸ் என்று நிரூபிக்கிறார்கள் ஆதவனும் கந்தர்வனும் ஆ. மாதவனுன் மெளனியும். நிலவமிர்தம் அவள் மேனியை மஞ்சனமாட்டியது என்கிறார் ஒரு வரியில் கு. அழகிரிசாமி. அம்மாடி என்கிறது மனது. எவற்றின் நடமாடும் நிழல்கள் நாம் என்ற புகழ்பெற்ற வரியை உள்ளடக்கிய மெளனியின் கதை அவரின் மொழியிலேயே ரகசியம் பேசுகிறது. கு. ப ராஜகோபாலனின் நூருன்னிஸா சிறுகதை இன்றைய காலகட்டத்தில் சாத்தியமாகுமா என்று தோன்றினாலும் அந்த காதல் நிபந்தனை ஆகாயம் வரைக்கும் புருவம் உயர்த்த வைக்கிறது. ஆதவனின் நிழல்கள் கதை அற்புதம் செய்கிறது. எப்போதுமே சிறுகதையில் மாமன்னன் பிரபஞ்சன். இப்படி தொடங்கி இப்படி வளர்ந்து அப்படி முடியும் அழகான காதல் போல கதை எவ்வித சிடுக்குமின்றி எளிதாக முடிகிறது.

கந்தர்வனின் காடுவரை கதை ஒரு சிறுகதைதான். ஆனால் ஒரு நாவல் ஏற்படுத்தும் நடுக்கமும் பதற்றமும் இந்தச் சின்னக் கதையில். முதல் வரியிலேயே துயரம் அறிவித்து விட்டாலும் அந்த ஆங்கிலோ இந்தியப் பையனுக்கும் அய்யர் வீட்டுப் பெண்ணுக்கும் ஏற்பட்ட காதலுக்கு மனம் மகிழ்கிறது. கல்யாணத்துக்கு குதூகலிக்கிறது. பிறிது நிகழும் துயரத்துக்கு உள்ளூர அழுகிறது. அட்டகாசமான நடையில் அற்புதமான கதை. கோபிகிருஷ்ணன் கதை மனித மனதை எடை போடுகிறது. மன வைத்தியர் எழுதிய கதை என்றால் சும்மாவா. கோப்பம்மாள் எழுதிய கோணங்கியை பின்னாளில் நாம் இழந்துவிட்டோம்தான். லலிதா என் பக்கத்து வீட்டுக்குப் பக்கத்து வீட்டுக்குப் பக்கத்து வீட்டுப் பெண் என்று ஜாலியாய் காதல் சொல்கிறார் சுஜாதா. வா. மு. கோமுவின் குட்டிப் பிசாசு படித்துவிட்டு சிரித்துக்கொண்டே இருக்கலாம். காதலும் சேர்ந்து சிரிக்கும்.

க. சீ. சிவகுமார். காலம் சீக்கிரம் பறித்துவிட்ட காந்த மலர். க. சீ எழுதிய வெளிச்ச நர்த்தனம் படிக்கையில் அப்படித்தான் தோன்றுகிறது. புல்நுனித் திவலைப் போல், புல்லாங்குழலைப் போல், மண் துகள்களை பொன்னாய் மாற்ற மணல் ஆரண்யத்தின் மையத்தில் பூத்த மாயமலர் போல் என எழுதிக்கொண்டே போகிறார். நாம்தான் இழந்துவிட்ட புன்னகை குறித்து சோகம் கொள்கிறோம். பாஸ்கர் சக்தியின் செண்பகப்பாண்டியும் சோகமாய் சிரித்துக்கொண்த்டே யதார்த்தம் காட்டுகிறார். காதலின் அபாயக் கோட்டைத் தொட்டுக் கடக்கிறது பாரதிபாலனின் மனசோட நிறம் கதை. இழந்த காதலை இன்னொரு காதலில் மீட்டெடுக்கும் லட்சுமி சரவணகுமாரின் ஜீசஸின் முத்தம் நிறைவான காதல் கதை.

திகட்டத் திகட்ட வலிக்க வலிக்க பித்து நிரம்பிய கோப்பையில் காதலை ஊற்றுகிறார் சந்திரா. டி. ராஜேந்தருடன் இணைந்து காதல் கிச்சுகிச்சு மூட்டுகிறார் நர்சிம். புதிதாய் இரு காதல்களை அறிமுகப்படுத்துகிறார் கவிதா சொர்ணவல்லி. மிக அழகாக நாகரீகமாக சுவையாக ரசிக்கவைக்கிறது அருணாராஜின் காஃபி. இன்னும் சில கதைகள்; இன்னும் சில காதல்கள். காதலின் தினத்துக்கு பரிசு தர ஏற்றவகையில்.

பதிவை பகிர

Add your first comment to this post

You cannot copy content of this page