புத்தகம் புதுசு – இகவடை பரவடை – ஷங்கர் ராமசுப்ரமணியன்

நகர்வு

கவிஞரும் எழுத்தாளருமான ஷங்கர்ராமசுப்ரமணியன் எழுதிய கவிதை வடிவிலான குறுநாவல் இகவடை பரவடை வெளியாகியுள்ளது. புதிய நூல் குறித்து ஆசிரியரின் குறிப்பு…

என் அம்மா இங்கே மண்ணில் காற்றில் நீரில் பேதமற்று கலந்து கிடப்பதால் எதையும் வேண்டும் வேண்டாமென்று நான் ஒதுக்கமுடியாது என்ற போதம் வந்திருக்கும் இந்தக் கட்டம் அத்தியாவசியமானது. எனது அகக்கடைக்கும் புறக்கடைக்கும் இடையே இப்போது சுவர் இல்லை; அழுக்கும் பிசுக்கும் மட்டுமே திடமேற்றிய ஒரு கிழிந்த துணித்திரை, மழையிலும் காற்றிலும் அடித்து, வெளியே ஒரு கொடுங்காலத்தின் வருகையை எனக்கு உரைப்பதைப் போன்றுள்ளது.

நானும் இதுவரை சேகரிக்கப்பட்ட அறிவுகளும் நீதியற்று நாதியற்று நாற்சந்தி சாலையில் நிற்கும் ஒரு சித்திரம்தான் வந்து சேர்ந்திருக்கும் இடம். பிறந்த இடமாகவும் பால்ய பிராயகால நினைவுக்கிடங்காகவும் திருநெல்வேலி; ஆளுமையும் உலகப் பார்வையும் ருசிகளும் விரிவுகொண்ட சென்னை; இரண்டையும் நிழல் சித்திரங்களாக ஆக்கியிருக்கிறேன். உயிர், உணவு, மொழி, ரசனையை அளித்து மறைந்துவிட்ட அம்மா; என் வாழ்க்கையின் நடுப்பகுதியில் தற்செயலாய் வந்து நினைவில் மின்னும் ஒரு பருவத்தைப் பரிசாகத் தந்து, என்னை மறுபடி சிருஷ்டித்து, உருக்குலைத்து, நீங்காத பைத்தியத்தை, அழலை, அடங்காத தீயை, அது அளிக்கும் உயிர்ப்பைத் தந்துவிட்டு நீங்கிப்போன அவள்; இரண்டு பேரும்தான், இதுவரைக்குமான எனது அனுபவக் கல்வியின் – இந்தப் படைப்பின் – மூல ஆசிரியர்கள்.

சத்தமாக, மௌனமாக இந்தப் படைப்புக்குள் தமது ரேகைகளைப் பதித்திருப்பவர்கள் நகுலன், விக்ரமாதித்யன். எனது தனி அனுபவச் சேகரத்தை, ஒரு நெடிய மானுட வரலாற்றுப் பரப்பில் வைத்துப் பார்க்கும் ஒரு மூலகம், திராவிடவியல் ஆய்வாளரான ஆர் பாலகிருஷ்ணனின் ‘ஒரு பண்பாட்டின் பயணம்: சிந்து முதல் வைகை வரை’ நூலில் பணியாற்றியபோது கிடைத்தது.

வேரல் பதிப்பக வெளியீடாக வந்திருக்கும் இந்நூல் தற்போது விற்பனையில். டிஸ்கவரி புக் பேலஸில் கிடைக்கும்.

நூல் : இகவடை பரவடை
ஆசிரியர்: ஷங்கர்ராமசுப்ரமணியன்
வெளியீடு: வேரல் பதிப்பகம்
விலை: 140 ரூபாய்

பதிவை பகிர

Add your first comment to this post

You cannot copy content of this page