அனுபவம்: இலங்கைப் பயணம் (2)- டிஸ்கவரி புக் பேலஸ் வேடியப்பன்

நகர்வு

நூல் வெளியீடு மற்றும், நூலகங்களுக்கான நூல் கொடை முடிந்ததும் மறுநாள் மதியம் (ஆகஸ்ட் 6) மதிய உணவுக்காகவும், சிறு பயணமாகவும் கல்முனை கடற்கரை வரை சென்று வந்ததும், கல்முனைதான் எழுத்தாளர் உமா வரதராஜன் அவர்களின் ஊர் என்று அறிந்து அவரிடம் பேசினோம். வெளியில் இருப்பதாகவும், மாலை உங்களைச் சந்திக்கிறேன் என்று சொன்னார். சொன்னது போலவே கல்லாறு சதீஷ் அவர்களின் வீட்டில் சந்திப்பு நடந்தது. ஈழ இலக்கியம் மற்றும் இதர இலக்கியங்கள் என உரையாடலின் முடிவில் கல்லாறு சதீஷ் அவருக்குப் பொன்னாடை போர்த்தி மரியாதை செய்ய முற்பட்டார். ஆனால் நமது இருவரின் விருந்தாளியைக் கௌரவிப்போம் என்று அந்த கொண்டாட்டத்தை மடைமாற்றிவிட்டார். உண்மையில் நேரம் போதவில்லை. உரையாடல் நிகழ்ந்த குறுகிய நேரத்தில் ஈழத்தின் பல எழுத்தாளர்களைக் குறிப்பிட்டு அறிமுகப்படுத்தினார்.

அடுத்து ஒரு இலக்கியப் பயணம் என்றே திட்டமிட்டு வருவதாக முடிவானதும் விடைபெற்றோம். இரவு உணவு கல்லாறு சதீஷின் பாரியார் (மனைவி) உஷா ரஜனி அவர்களின் தடபுடலில் இடியப்பம் சொதி – ஆணம் / கருவாட்டுப்பொடி / சோறு / மீன் குழம்பு/ மீன் சொதி/ கோழிக் குழம்பு/ கோழி வறை என ஈழத்தின் பாரம்பரிய உணவு வகைகளை ஒரு பிடி பிடித்தோம். திறப்பு விழா கண்டு இரண்டு வாரமே ஆகியிருந்த சதீஷின் புதிய வீட்டு மொட்டைமாடிக்குச் சென்று கல்லாறு கிராமத்தின் இரவுக் காட்சிகளையும், கடலையும் பார்த்து மகிழ்ந்தோம்.

இதற்கிடையில் இலங்கையில் இருக்கிறீர்களா என்று கேட்டு அண்ணன் எழுத்தாளர் ராஜ் சிவா அவர்கள் ஜெர்மனியிலிருந்து அழைத்ததோடு, மருமகன் கல்முனையில்தான் இருக்கிறார் அவரைப் பார்க்கலாமா? என்று கேட்டார். ஆனால் அப்போதைக்கு நேரம் கிடைக்கவில்லை என்றாலும் விரைவில் பார்க்க முயற்சி செய்யலாம் என்று அண்ணனிடம் சொன்னேன். மறுநாள் திட்டப்படி வாட்சப் வழியாகவும், முகநூல் வழியாகவும் அங்கிருந்து அக்கரைப்பட்டுக்கு அவசியம் வாருங்கள் என்று மிகுந்த அழைப்பு விடுத்திருந்த எழுத்தாளர் கவிஞர் றியாஸ்குரானா அவர்களைச் சந்திப்பது என்ற முடிவானது.

ஆனால் ஒவ்வொரு காலையும் அதது ஒரு திட்டத்தோடு விடிகிறது. மாலை செல்லவேண்டிய பயணத்துக்கு விடியற்காலையே பயணத்தைத் துவங்கி அங்கிருந்து திருகோணமலை நோக்கிச் சென்றோம். இங்கிலாந்தில் இருப்பதாகவே நினைத்துக்கொண்டிருந்த பாலசிங்கம் சுகுமாறன் முதல்நாளே ஒரு அழைப்பை விடுத்திருந்தார். அவரது மகளின் நினைவாக அவர் ஏற்படுத்தியுள்ள அனாமிகா கலை பண்பாட்டு மையத்திற்குக் கடந்த வருடமே நடிகர் திரு நாசர் அவர்களுடன் நானும் செல்ல வேண்டியது, இந்தப் பயணத்தில் அது கட்டாயமாகிவிட்டது. அதனால் கவிஞர் றியாஸ்குரானா அவர்களைச் சந்திப்பது என்ற தீர்க்கமான திட்டம் சமாதானத்துடன் கைவிடப்பட்டது.

இது சேனையூர் அனாமிகா பண்பாட்டு மையத்தின் இரண்டாம் ஆண்டு துவக்கவிழா நேரம் என்பது அங்கு நாங்கள் செல்லும்வரை தெரியாது. சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த ஒரு பெண் பிள்ளையிடம் அனாமிகா பண்பாட்டு மையத்திற்கு வழி கேட்டோம். நான் அங்கேதான் போகிறேன் என்று வழிகாட்டினார். உண்மைதான் அன்று அருகிலுள்ள இரண்டு பள்ளிகளிலிருந்து பாடசாலைப் பிள்ளைகள் மையத்தில் குவிந்திருந்தார்கள். சேனையூர் அனாமிகா பண்பாட்டு மையத்தின் ஓராண்டு நிறைவு விழா புத்தகக் கண்காட்சியும் கருத்தரங்கும் எனத் திட்டமிடப்பட்டிருந்தது.

சேனையூர் மத்திய கல்லூரி அதிபர் திரு.பாக்கியேஸ்வரன், கட்டைபறிச்சான் விபுலானந்தா வித்தியாலய அதிபர் திரு.பு.சுதாகரன் ஆகியோர் கலந்துகொள்ள பெருமளவு மாணவர்கள் பங்காற்றினார்கள். நானும் அண்ணன் பொன் காசியும் உரையாற்றினோம்.

அனாமிகா பண்பாட்டு மையத்தின் நூலகத்திற்குக் கடந்தாண்டு டிஸ்கவரியில் இருந்து வழங்கிய நூல்கள் சிறப்பாகக் காட்சிப்படுத்தி இருந்ததைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்தேன். என்றாலும் உண்மையான மகிழ்ச்சி என்பது அதில் இல்லை. இங்கிலாந்தில் இருக்கும் நாடகக் கலைஞர், ஆய்வாளர் திரு பாலசிங்கம் சுகுமார் அவர்கள் அங்கேயே நிம்மதியாக வாழ்வைக் கொண்டாடிக் களிக்கலாம். ஆனால் அப்படி இல்லாமல், சுனாமியால் மறைந்த தனது மகளின் நினைவாக ஒரு பண்பாட்டு மையத்தை இங்கே திறந்து வைத்து அங்கே உள்ள குழந்தைகளுக்கு முறையான வாசிப்புப் பழக்கத்தையும், கலை ஆர்வத்தையும் ஊட்டுகிறார்; புத்தகக் காட்சி நடத்துகிறார். ஒரு அறையில் வரிசையாக பத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் கணினி கற்றுக்கொள்கிறார்கள். பண்பாட்டு மையத்தின் பின்புறத்தில் அழகான களரி நாடகத்திற்கான திறந்தவெளி பயிற்சி மைதானம் அமைத்து தொன்மையான கலையைப் பயிற்றுவிக்கிறார். இதெல்லாம்தானே உண்மையான மகிழ்ச்சி. இங்கேயும் வறுத்த மீனும், மீன் சொதியும், சோறும் என மதிய உணவை முடித்ததும் கலாபூர்வமான அவரின் அனாமிகா பண்பாட்டு மையத்தின் வாசலில் நின்று ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டு அங்கிருந்து ஆட்டோவில் திருகோணமலை நோக்கிப் புறப்பட்டோம்.

தொடரும்

பதிவை பகிர

2 Comments

Chola Nagarajan

இலங்கையே ஒரு அழகிய சுவாரஸ்யங்கள் நிறைந்த தீவு. அதில் தங்களின் பயணமும் அங்கே தாங்கள் சந்தித்த நம் சொந்தங்களும் மேலும் ரசனைமிக்க அனுபவங்களாய் எங்களுக்கு வாசிப்பு விருந்தாகக் கிடைக்கச் செய்யும் தங்களின் எழுத்து இன்னமும் கூடுதல் சிறப்பு!

You cannot copy content of this page