சங்க இலக்கியம் பேசியது காதலையா? காமத்தையா? ஜெயமோகன் உரையை முன்வைத்து கரிகாலன்

நகர்வு

க்க்

கடந்த சில நாட்களாக கோவையில் ஜெமோ நிகழ்த்திய சங்க இலக்கிய உரை சமூக ஊடகங்களில் பேசு பொருளாகியிருக்கிறது. சங்க இலக்கியத்தில் காதல் இல்லை. காமம்தான் இருக்கிறது என அவர் பேசிய இரண்டு வரியை வைத்துக்கொண்டு ட்ரோல் செய்து வருகிறார்கள். ஒரு நீண்ட உரையை ஒரு வரியில் சுருக்கிப் பார்ப்பது அபத்தம். அவரது பேச்சின் சுருக்கத்தை இவ்வாறு புரிந்துகொண்டால்கூட பெரிதாக தவறொன்றுமில்லை.

ஆண் பெண் உறவு குறித்த நவீன ஆய்வை ரட்ஜர்ஸ் எனும் அயலக பல்கலைக்கழகம் நிகழ்த்தியது. இந்தப் பல்கலையைச் சேர்ந்த ஹெலன் ஈ ஃபிஷரின் கூற்றுப்படி, ஆண் பெண் உறவில் காமம்தான் முதலில் தோன்றுவதாகக் கூறுகிறார். அடுத்தது ஈர்ப்பு. மூன்றாவது நிலைதான் பிணைப்பு. இதுதான் காதலின் பரிணாமம். தாய்வழிச் சமூகத்தில் காதல் இல்லை. காமமே இருந்தது. நிலவுடமைச் சமூக அமைப்பின் பொருளியல் விழுமியங்களே காதலை ஒரு பண்பாடாக்கியது.

சங்க இலக்கியத்தில் காதல் 89 இடங்களில் வருகிறது. காமம் என்கிற சொல் 91 இடங்களில் வருகிறது என்கிறார் பேராசிரியர் மாதையன்.
காமத்தைக் கையாளுதல், காம விழைவை நெறிப்படுத்துதல் என்பதே அக இலக்கியங்களில் கற்பாகப் பேசப்பட்டது. சங்க காலத்தில் திருமணத்துக்கும் முந்தைய களவொழுக்கத்தில் காமம் பரிமாறப்பட்டது. இதுவும் கற்பின் ஒரு நிலையாகவே கருதப்பட்டது.
சங்ககால கற்பு விரிவான ஆழமான பொருள் நிறைந்தது. கற்பு என்பதன் வேர்ச்சொல் கல்… கல்லுதல் ஆகும். கற்பு என்பது அறிதல் முறை. காமத்தை அறிதலே கற்பு.

‘யாரும் இல்லைத்தானே கள்வன்
தானது பொய்ப்பின் யான் எவன் செய்கோ
தினைத்தாள் அன்ன சிறு பசுங்கால் ஒழுகு நீர் ஆரல் பார்க்கும்
முருகும் உண்டுதான் மணந்தஞான்றே’. இது குறுந்தொகையில் 25 வது பாடல். திணைப்புலம் காவல் செய்யும் தலைவி வேட்டை சமூகத்தின் எச்சமான ஆண். புணர்ச்சியில் ஈடுபட்டவனை முன்கூட்டி தெரியாது. திரும்ப வருவானா? தெரியவில்லை. இங்கு செயல்படுவது காதலா? இல்லை. இது வேட்கை அடிப்படையிலான புணர்ச்சி.

காலம் வளர்கிறது. காதல் அடிப்படையிலான புணர்ச்சி எனும் நிலை உருவாகிறது.
‘யானும், நீயும் எவ்வழியறிதும்
செம்புலப் பெயனீர்போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே’ என களவொழுக்கம் மாற்றம் பெறுகிறது.

அகப்பாடல்களில்,
‘முட்டுவேன் கொல்? தாக்குவேன் கொல் இவள் உயிர் தவச் சிறிது, காமமோ பெரிது’,
‘மருந்து பிறிதில்லை யான் உற்ற நோய்க்கே’ போன்ற தீவிர காமத்தைக் கேட்க முடிகிறது.

காமத்தை இயல்பாக எடுத்துக் கொண்டது சங்க கால சமூகம் என்பதில் உண்மையிருக்கிறது. உற்பத்தியிலும் விளைவை அனுபவிப்பதிலும் ஆணும் பெண்ணும் சம பங்காற்றிய காலத்தில் காமத்தை துய்ப்பதிலும் சமத்துவமிருந்தது. ஆண் வழங்குபவன் பெண் பெறுபவள் என்கிற ஏற்றத்தாழ்வு இல்லாமல் காமம் செயல்பட்ட காலமது. ஆனால், நிலவுடமைச் சமூகம் இறுக்கம் பெறுகிறபோது நிலை மாறுகிறது. இலக்கியங்கள், பெண் உடலைக் கட்டுப்படுத்தும் சூழல் உருவாகிறது.

‘காமம் செப்பல் ஆண் மகற்கு அமையும் யானே பெண்மை தட்ப நுண்ணியதின் தாங்கி’ என பெண்ணின் குரல் பலவீனமடைகிறது. ஆண் பெண்ணை அபரிமிதமான சக்தியாக, பிரபஞ்ச ஆற்றலாக பார்க்கிறான். அவளை அடக்கி ஆள நினைக்கிறான். அதன் விளைவாகத்தான் கற்பை சுருக்கி பெண்ணுக்கான கை விலங்காக்கினான். பெண் காமம் குறித்த ஆணின் அச்சமே துர்க்கை வடிவம். பெண்ணை ஆண் அணங்காகப் பார்க்கிறான். அதாவது தெய்வமாகவும் பிசாசாகவும். டாவோ இயற்பியல் பேசும் காப்ரா (Fritjof Capra), ‘மனிதன் பெண்ணை பிரபஞ்சமாகப் பார்க்கிறான். அவளை அடக்கும் ஆளுமையைப் பெற விரும்பியே சுற்றுச் சூழலை அவன் அழிக்கிறான்’ என்கிறார்.

ஆண் பார்வை, பெண்ணின் காமத்தை வெறும் lust என்கிறது. மாறாக, காமம் என்பது ஒரு அறிதலாக மனித சமூகத்தில் வளர வேண்டும். அது வெறும் இச்சையாக சமூகத்தில் சுருங்கிக் கிடக்கிறது. அல்லது அலட்சியமாக புறக்கணிக்கப்படுகிறது. ஆனால் காமத்தை நம் அக இலக்கியங்கள் களவியலாக/ கற்பியலாக உயர்ந்த இடத்தில் வைத்து விவாதிக்கிறது. காதலோ, காமமோ சங்க இலக்கிய உரையாடல் ஆண்/பெண் சமத்துவம் சார்ந்து நிகழ்த்த வேண்டியது. அதற்கான முனைப்பு ஜெமோ பேச்சில் தென்பட்டதா என்பதுதான் விவாதிக்கப்பட வேண்டிய விஷயம். மற்றபடி காதல் குறித்து சினிமா, இலக்கியங்கள் இதர பண்பாட்டு வடிவங்கள் உருவாக்கியிருக்கும் புனிதப் புனைவு பெண்களுக்கு நலம் பயப்பவையாக இல்லை.

காமம் ஏன் lust ஆனது? தாராளமயம், அழகு சாதனப் பொருட்களின் சந்தை, பெண்ணை போகப் பொருளாக்கும் சினிமா உள்ளிட்ட கலை வணிகம்
என காரணம் நிறைய இருக்கிறது. நமது இலக்கியமோ ‘சிறு கோட்டு பெரும் பழம்’ என காமத்தைக் கூறுகிறது. காமத்தை கனி என்கிறது. நமது சிக்கல்களை மூடி மறைப்பதால் அதை தீர்க்க முடியாது; வளர்ந்து கொண்டுதான் போகும். உடைத்து உரையாடி அதைக் களைய முன் வரவேண்டும். ஜெமோவின் உரையாடல் வழக்கம்போல் controversy ஆகியிருக்கிறது. அவர் விரும்புவதும் இதைதான்.

ஜெயமோகன் உரையை முழுமையாக கேட்க கீழே உள்ள லிங்க்கை க்ளிக் செய்யவும்.

https://youtu.be/WsL83XdEAlo


கவிஞர், எழுத்தாளர் கரிகாலன்.

பதிவை பகிர

Add your first comment to this post

You cannot copy content of this page