புத்தகம் புதுசு – பூர்ணிமையூறிய செவ்வரிக் கயல் – இளங்கோ கிருஷ்ணன்

நகர்வு

காயசண்டிகை, பட்சியன் சரிதம், வியனுலகு வதியும் பெருமலர் போன்ற கவிதைத் தொகுப்புகளுக்குப் பிறகு கவிஞர் இளங்கோ கிருஷ்ணனின் புதிய தொகுப்பான பூர்ணிமையூறிய செவ்வரிக் கயல் கவிதைத் தொகுப்பு கோவை புத்தகத் திருவிழாவில் வெளியிடப்பட்டது. கவிதைத் தொகுப்புக்கு கவிஞர் மண் குதிரை எழுதிய அணிந்துரையிலிருந்து…

மனிதனின் மிகப் ‘பழைய பழக்கம்’ காதல். அந்தக் காதலைப் ‘புதிய பழக்க’மொன்றின் சுவாரஸ்யமான
தடுமாற்றங்களுடன் திக்குமுக்காடச் செய்கின்றன இளங்கோ கிருஷ்ணனின் இந்தக் கவிதைகள்.
பொறுமை, நிதானம், அமைதி எனக் காதலில் கடைப்பிடிக்கவே முடியாத லட்சணங்களை இந்தக்
கவிதைகள் கைக்கொள்ளப் பிரயத்தனப்படுகின்றன; பரிதவிக்கின்றன; பதற்றப்படுகின்றன. காதலின்
திருக்கோயிலில் கடவுளும் பிசாசுமான ‘அவ’ளிடம் மன்றாடுகின்றன; புலம்புகின்றன. காதலின் வறுமையைக் கடக்கத் தெரியாமல் கவிதைகளிடமே சொல்லிப் பிதற்றுகிறான் கவிஞன். ‘கெட்டிக்காரத்தனமில்லா’ ஓர் எளிய கவிஞன் வேறு என்ன செய்வான்? லட்சியவாதம் தோற்று சித்தாந்தங்கள் குழப்பமடைந்து வரும் 21ஆம் நூற்றாண்டு வாழ்க்கையிலிருந்து பேதமை நிறைந்த இந்தக் கவிதைகள் உங்களை சொஸ்தப்படுத்தும். நண்பர்களே, உங்கள் பகுத்தறிவுச் சித்தாந்தங்களால்
இந்தக் கவிதைகள் விமர்சனத்துக்கு உள்ளாகலாம். ஆனால் சிறுதெய்வ வழிபாட்டின் எளிய நம்பிக்கையைப் போல உங்கள் வாழ்க்கையில் ஒளிவீசக் கூடியவை இளங்கோ கிருஷ்ணனின் இந்தக் காதல் கவிதைகள்.

-மண் குதிரை

நூல் : பூர்ணமையூறிய செவ்வரிக்கயல்
ஆசிரியர் : இளங்கோகிருஷ்ணன்
வெளியீடு : யாவரும் பதிப்பகம்
விலை : 140 ரூபாய்
தொடர்புக்கு: 90424 61472


பதிவை பகிர

Add your first comment to this post

You cannot copy content of this page