மாய உலகின் மந்திர எழுத்துகள் – மல்லாந்த நிலையில் ஒரு கரப்பான்பூச்சி கதைத் தொகுப்பு குறித்து

நகர்வு

#பாலைநிலவனின் முதல் தொகுப்பு வெளியாகி கிட்டத்தட்ட 14 வருடங்களுக்குப் பிறகு இரண்டாவது தொகுப்பான #மல்லாந்த நிலையில் ஒரு கரப்பான்பூச்சி கதைத் தொகுப்பு வெளியாகியுள்ளது. சிறுகதைகளுக்கான வரையறை தகர்த்த முந்தைய தொகுப்பு போலவே இந்தத் தொகுப்பும் அமைந்துள்ளது. ஒருவகையில் பலமும் பலவீனமும் அதுவே.

காமம் சிறப்பாக எடுத்தாண்டிருக்கும் இந்தத் தொகுப்புக் கதைகள் சமவெளியில் நடந்தாலும் எழுத்து வேறொரு உலகை சிருஷ்டிக்கிறது. ஆசிரியரின் எண்ணமும் எழுத்தும் கவிதையாய் அமைந்திருப்பது கதைகளின் மாய உலகுக்குள் வாசகன் நுழைய எளிதான பாதையைத் திறந்து வைக்கிறது.

பெரும்பாலும் மரணங்கள், தற்கொலைகள் குறித்த நீண்ட விவரணை, உடல்களின் அலைவுறும் பங்களிப்பு என தமிழ் எழுத்து அதிகம் தொட்டிராத பகுதிகள் ஆசிரியரின் மாய எதார்த்தப் புனைவில் விரிகின்றன. மொழிபெயர்ப்புக் கதைகளோ என எண்ண வைத்துவிடும் நில அமைப்பும் எழுத்து வீச்சும் கதைகளில் தென்படுவது 14 வருடங்களுக்கு முன்பான கதைகளோ என யோசிக்க வைக்கிறது.

ஜெவின் நாய்களும் ராஜியின் எருமைகளும் என்ற கதையும் அந்தக் கதை வழி ஆசிரியர் வாசகனுக்கு அளிக்கும் படிம வித்தைகளும் பிரமாதமான ஒன்று. ஆகாசம் கடலின் நிறம் என்ற கதையில் இடம்பெற்ற ‘குற்ற உணர்வை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா…அது சந்து பொந்துகளில் தன் மார்பை ஒரு பழைய துருப்பிடித்த கத்தியால் கீறிக்கொண்டே பலரையும் எதிர் கொள்கிறது. உயர் ரக மதுபான விடுதிகளில் அது தலையைச் சாய்த்த ஒரு கெட்டித்த முகமாகவும் பரிமாணம் கொள்கிறது’ என்ற வரிகளைப் போலத்தான் ஆசிரியரிடம் வாசக மனம் எதிர்பார்க்கிறது. அதுபோல் புத்தகம் முழுவதும் எழுத்துப் பிழைகள் கதைகளின் அர்த்தம் மாற்றும் அளவுக்கு மலிந்து கிடக்கின்றன. வெளிவரும் முன்பு ஒருமுறை சரி பார்த்திருக்கலாம்.

நூல் : மல்லாந்த நிலையில் ஒரு கரப்பான்பூச்சி
ஆசிரியர் : பாலை நிலவன்
வெளியீடு : படைப்பு பதிப்பகம்
விலை : 320 ரூபாய்
.

பதிவை பகிர

Add your first comment to this post

You cannot copy content of this page