ரெண்டு பொண்டாட்டி சினிமாக்கள்- தொடர் – கணேசகுமாரன்

நகர்வு

முந்தானை முடிச்சு- கே. பாக்யராஜ்

பழம் தின்று கொட்டை போட்ட ஏவிஎம் என்னும் சினிமா ஆலமரத்தின் மறக்க முடியாத அசைக்க முடியாத சிக்னேச்சர் இந்த முந்தானை முடிச்சு. தமிழ் சினிமா வரலாற்றிலும் மறுக்க முடியாத ஒரு சில்வர் ஜூப்ளி சினிமா. தமிழ் சினிமாவின் சென்டிமென்ட் ஹிட் திரைக்கதையில் ஒன்றுதான் சித்தி கொடுமை. நிஜத்தில் எப்படியோ… சினிமாக்கள் சித்திகளை அதாவது சின்னம்மாக்களை கொடூரமானவர்களாகத்தான் சித்தரிக்கும். இயக்குநர் கே. பாக்யராஜ் இந்த சூட்சுமத்தை வெற்றிக்கான ஒன்றாக மாற்றி கெட்டியாகப் பிடித்துக்கொண்டார். அதற்கு முந்தானை முடிச்சு வலுவான தளம் அமைத்துக் கொடுத்தது.

இந்தத் திரைப்படம் கூட சித்தி கொடுமையை ஒரு கோடு காட்டி இருந்தாலும் கே. பாக்யராஜ் என்னும் புத்திசாலி திரைக்கதை மன்னனால் படத்தின் தொடக்கத்திலிருந்தே வேறுவிதமாய் கதை பின்னப்பட்டிருக்கும். வெகுளி ஊர்வசிக்கும் சிடுமூஞ்சி பாக்யராஜுக்கும் கெமிஸ்ட்ரி எவ்வாறு ஒத்துப்போகும் என்பதே பார்வையாளனின் கேள்வியாய் இருக்க பாக்யராஜின் முதல் மனைவியாக படத்தில் கெளரவத் தோற்றம் காட்டும் பூர்ணிமாவின் மரணத் தருவாய் சத்தியம்தான் படத்தின் முக்கிய முடிச்சு என்பது திரைக்கதை அசத்தலில் மறைந்திருக்கும்.

படம் வெளியான சமயத்தில் பாக்யராஜின் நிஜ வாழ்வைப் பிரதிபலித்தது போல் சில காட்சிகள் வைக்கப்பட்டிருந்தது படத்தின் ப்ரொமோசனுக்கு பெரிதும் உதவியாய் இருந்தது. ஊர்வசிக்கு முதல் படம். பாக்யராஜின் அறிமுக கதாநாயகிகள் மேல் தனி கவனம் வரத் தொடங்கியது இந்தப் படத்தின் பரிமளா ஊர்வசி ஏற்படுத்திய தாக்கத்தினால்தான். படத்தின் சீரியஸ் காட்சிகள் ஹியூமரில் முடிவது போலவே சிரிப்புக் காட்சிகளின் முடிவு சீரியஸாக முடியும்.

வெகு இயல்பாக படத்தில் நுழைக்கப்பட்டிருக்கும் முருங்கக்காய் விஷேச காட்சிகளைப் போல் பாக்யராஜால் கூட இன்னொரு படத்தில் யோசிக்க முடியவில்லைதான். பவுனு பவுனுதான், இது நம்ம ஆளு போன்ற படங்களில் இதுபோன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தாலும் முருங்கக்காய் அளவுக்கு எதுவும் ரீச் ஆகவில்லை. கே. பாக்யராஜ் என்றாலே முருங்கக்காய் ஆனது போல் முந்தானை முடிச்சு என்றால் பட்டு டீச்சரை மறக்க முடியாது.

படத்தின் இன்னொரு ப்ளஸ் இளையராஜாவின் இசை எனலாம். பாக்யராஜ் படங்கள் என்றால் மட்டும் இளையராஜாவின் ஆர்மோனியத்துக்கு தனி உற்சாகம் பிறந்துவிடும் போல. டைட்டில் பாட்டிலிருந்தே அவரின் இசை ராஜாங்கம் தொடங்கிவிடும். வா வா வாத்தியாரே, கண்ணத் தொறக்கணும் சாமி போன்ற குத்துப் பாடல்களுக்கும் ஈடாக அந்திவரும் நேரம் மெலடியும் சின்னஞ்சிறு கிளியே சோகமும் இசை ரசிகனால் முணுமுணுக்கப்பட்டன. வெளக்கு வச்ச நேரத்திலே பாட்டில் வரும் தன்னானன்னா ஜதி பிறந்த கதை கோடம்பாக்கத்தில் சுவாரசியமாய் முணுமுணுக்கப்பட்ட ஒன்று.

மற்றபடி கதாநாயகனுக்கு படத்தில் இரண்டு தாரம் என்பதைத் தவிர இந்தத் தொடருக்கான முதல் கட்டுரைக்கும் இந்தப் படத்துக்கும் பெரிதாய் சம்பந்தமில்லைதான்.

பதிவை பகிர

Add your first comment to this post

You cannot copy content of this page