பிரபல பின்னணிப் பாடகி பவதாரிணி மரணம்…

நகர்வு

Bhavatharini-1

இசைஞானி இளையராஜாவின் மகளும், பின்னணிப் பாடகருமான பவதாரிணி உடல்நலக்குறைவால் வியாழனன்று காலமானார். அவருக்கு வயது 47.

1984-ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ‘மை டியர் குட்டிச் சாத்தான்’ படத்தில் இடம்பெற்ற ‘திதிதே தாளம்’ பாடலின் மூலம் பின்னணி பாடகராக அறிமுகமானார் பவதாரிணி.

தொடர்ந்து, ‘ராசய்யா’, ‘அலெக்சாண்டர்’, ‘தேடினேன் வந்தது’, ‘காதலுக்கு மரியாதை’, ‘அழகி’, ‘பிரண்ட்ஸ்’, ‘தாமிரபரணி’, ‘உளியின் ஓசை’, ‘கோவா’, ‘மங்காத்தா’, ‘அனேகன்’ உள்ளிட்ட பல படங்களில் அவர் பாடியுள்ளார். 

2000-ம் ஆண்டில் வெளியான ‘பாரதி’ படத்தில் ‘மயில் போல பொண்ணு ஒண்ணு’ பாடலுக்காக பவதாரிணிக்கு தேசிய விருது வழங்கப்பட்டது.

தவிர, கடந்த 2002-ம் ஆண்டு ரேவதி இயக்கத்தில் வெளியான ‘மித்ர் மை பிரண்ட்’ படத்தின் மூலம் பவதாரிணி இசையமைப்பாளராகவும் அறிமுகமானார்.

தொடர்ந்து, ‘பிர் மிலேங்கே’ (இந்தி), ‘அமிர்தம்’, ‘இலக்கணம்’, ‘மாயநதி’ படங்களுக்கு அவர் இசையமைத்துள்ளார்.

பாடகி பவதாரினிக்கு கடந்த 2005 ஆம் ஆண்டு சென்னையை சேர்ந்த ஆர். சபரி ராஜ் என்பவருடன் திருமணம் நடந்தது.

இவர் பிரபல பத்திரிக்கையாளர் ராமச்சந்திரன் அவர்களுடைய மகன் என்றும் கூறப்படுகிறது.

சபரி ராஜ் அவர்கள் சென்னையில் புகழ்மிக்க விளம்பர நிறுவனம் ஒன்றை நடத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது.

இவர்களுடைய திருமணம் கடந்த 2005 ஆம் ஆண்டு கொல்லூர் மூகாம்பிகை அம்மன் கோவிலில் நடைபெற்றது.

அதன் பிறகு செப்டம்பர் 19ஆம் தேதி சென்னை மேயர் ராமநாதன் செட்டியார் அரங்கில் இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது.

பவதாரணி கடந்த 5 மாதங்களாகப் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிகிறது. ஆயுர்வேத சிகிச்சைக்காக இலங்கை சென்று சிகிச்சை பெற்று வந்தார்.

வியாழனன்று இலங்கையில் மாலை 5 மணி அளவில் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார்.

அவரது உடல் வெள்ளிக்கிழமை மாலை சென்னை கொண்டுவரப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

முதல்வர் இரங்கல்:

“பிரபல பின்னணிப் பாடகியும் இசைஞானியின் அன்பு மகளுமான பவதாரிணியின் அகால மரணத்தால் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

இசைமேதைகள் நிறைந்த குடும்பத்தில் பிறந்த பவதாரிணி, தேனினும் இனிய தனது குரல்வளத்தால் இளம் வயதிலேயே ரசிகர்களின் நெஞ்சில் தனியிடம் பிடித்தவர் ஆவார்.

கேட்டதும் அடையாளம் கண்டுகொண்டு பரவசமடையச் செய்யும் மிகவும் தனித்துவமான குரல் அவருடையது.

பாரதி திரைப்படத்தில் தனது தந்தையின் இசையமைப்பில் பாடிய ‘மயில் போல பொண்ணு ஒன்னு’ பாடலுக்காக இளம் வயதிலேயே தேசிய விருதும் பெற்றவர்.

இசையமைப்பாளராகவும் பல படங்களுக்குப் பணிபுரிந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இன்னும் பல்லாண்டுகள் வாழ்ந்து இசையுலகில் எத்தனையோ சாதனைகளைச் செய்திருக்க வேண்டிய பவதாரிணியின் திடீர் மறைவு இசையுலகில் ஈடுசெய்தற்கரிய இழப்பு.

அவர் விட்டுச் செல்லும் இடம் அப்படியே இருக்கும்.

தனது பாசமகளை இழந்து துடிக்கும் இசைஞானிக்கும், பவதாரணியின் சகோதரர்கள் யுவன் சங்கர் ராஜா, கார்த்திக் ராஜா உள்ளிட்ட குடும்பத்தினருக்கும் திரையுலகினருக்கும் ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

இயக்குநர்கள் பாரதிராஜா, பா.ரஞ்சித், கலைஞானி கமல்ஹாசன் உள்ளிட்ட திரைத்துறையினரும், அரசியல் பிரமுகர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பதிவை பகிர

Add your first comment to this post

You cannot copy content of this page