திரைப்புதையல் – 11: திகம்பர சாமியார்:

நகர்வு

Thigambarasamiyar

நம்பியார் 11 வேடங்களில் அசத்திய புலனாய்வுப் படம்.

– சோழ. நாகராஜன்

அந்த நாளிலேயே இப்படியொரு படமா என இன்றைக்கும் எண்ணி வியக்கவைக்கிற படங்களின் வரிசையில் வைக்கத்தக்க மற்றொரு படம்தான் தமிழில் வெளிவந்த “திகம்பர சாமியார்”.

இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வந்தால் அது வெளிவந்து 73 ஆண்டுகள் நிறைவடைகிறது.

ஆம், 1950 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22 ஆம் நாள்தான் திகம்பர சாமியார் தமிழகத் திரையரங்குகளுக்கு வந்தது.

இதன் கதை அந்நாளின் புலனாய்வு நாவல் புகழ் வடுவூர் துரைஸ்வாமி ஐயங்கார் எழுதியது.

அதாவது, அதே பெயரில் வெளிவந்த வடுவூராரின் நாவல்தான் படத்தின் கதை.

மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பில் டி.ஆர்.சுந்தரம் இயக்கிய இந்தப் படத்தின் கதை இதுதான்:

“கும்பகோணத்தைச் சேர்ந்த சட்டநாதன் நேர்மையற்ற வழக்கறிஞர். அவரது தம்பி மாசிலாமணியோ எதற்கும் உதவாத ஒரு பொறுப்பற்ற பேர்வழி.

கதையின் நாயகி வடிவாம்பாள். அவளைத் தனது உதவாக்கரைத் தம்பி மாசிலாமணிக்கு மணமுடித்துவைக்க முயலுகிறார் சட்டநாதன்.

வடிவாம்பாளுக்கோ கண்ணப்பன் என்ற அழகிய இளம் வாலிபன்மீது காதல். அவனையே கைப்பிடிக்க விரும்புகிறாள்.

இந்தச் சூழலில்தான் திகம்பர சாமியார் என்று தன்னைச் சொல்லிக்கொண்டு சந்நியாசி ஒருவர் வக்கீல் சட்டநாதன் வீட்டிற்கு வருகிறார்.

அவரது வருகைக்குப்பின் சட்டநாதனின் நேர்மையற்ற வாழ்க்கையின் ஒவ்வொரு சம்பவமாக சாமியாரின் முயற்சியினால் அம்பலமாகிறது.

திகம்பர சாமியாரும் பல வடிவங்களை எடுக்கிறார்.

அதன் காரணமாகக் கதையில் பல திருப்பங்கள் நிகழுகின்றன.

இறுதியில் தனது முயற்சிகளில் வெற்றிபெறுகிறார் திகம்பர சாமியார்.

காதலி வடிவாம்பாளைக் காப்பாற்றிக் காதலன் கண்ணப்பனிடம் ஒப்படைக்கிறார்.

ஒருவனைக் குறைந்தது நான்கு நாட்கள் தொடர்ந்து தூங்கவிடாமல் செய்தால் அவன் தன் மனதிலுள்ள ரகசியங்களைச் சொல்லிவிடுவான் என்கிற ரீதியிலான உளவியல் அணுகுமுறை சில ஆண்டுகளுக்குமுன் வெளிவந்த பிரபுதேவா இயக்கி, விஜய் நடித்த போக்கிரி படத்தில் இடம்பெற்றிருந்தது.

தான் கைதுசெய்த பிரகாஷ்ராஜின் மனதிலுள்ள ரகசியங்களை அறிய அவரை உறங்கவிடாமல் செய்வதன்மூலம் முயலுவார் விஜய்.

இந்த உத்தி அந்நாளிலேயே திகம்பர சாமியாரில் இடம்பெற்றிருந்தது என்றால் வியப்பான ஒன்றுதானே?

ஆம், உளவியல் ரீதியிலான இந்த உத்தியை அப்போதே இந்தப் படத்தில் வைத்திருக்கிறார்கள்.

ஒரு மர்மக் கதையமைப்புக்கேயுரிய திருப்பங்களைக் கொண்டிருந்தது இந்த திகம்பர சாமியார் திரைப்படம்.

பக்திப் புராணப் படங்களும், ராஜா – ராணி கற்பனைக் கதையம்சங்களைக்கொண்ட படங்களுமே பெரும்பாலும் தமிழ்த் திரையை ஆக்கிர மித்துக்கொண்டிருந்த அந்தக் காலத்தில் சமூக உள்ளடக்கங்களைக் கொண்ட படங்கள் இடையிடையே அபூர்வமாகவே வந்துகொண்டிருந்த நிலையில் முற்றிலும் புதுமையானதொரு கதையம்சத்தோடு, உளவியல் – புலனாய்வு – திரில்லர் எனும் ரசிகர்களின் ஆர்வத்தை மேலிடச்செய்யும் தன்மைகளோடு வெளிவந்த இந்த திகம்பர சாமியார் அந்த நாளின் ஒரு புதுமைச் சித்திரமாகவே உணரப்பட்டது.

அதுதான் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தின் தனித்துவம்.

20 ஆம் நூற்றாண்டின் துவக்க காலத்தில் புலனாய்வுப் புனைவுகளுக்கு வாசகர்கள் மத்தியில் ஒரு தனியீர்ப்பு இருந்தது.

அது தமிழ் சினிமாவிலும் எதிரொலித்தது.

ஜே.ஆர். ரங்கராஜூ, ஆரணி குப்புஸ்வாமி முதலியார், வை.மு.கோதைநாயகி அம்மாள், வடுவூர் துரைஸ்வாமி ஐயங்கார் முதலானோர் அப்போது புலனாய்வு எழுத்தில் முன்னணியிலிருந்தனர்.

அவர்களில் வடுவூராரின் நாவல்களே பல பாகங்களாக வெளிவந்து, விற்பனையிலும் சாதித்தன.

திகம்பர சாமியாராக தனது இளமைக் காலத்தில் தான் கொண்டிருந்த அழகிய தோற்றத்தால் ரசிகர்களைச் சுண்டியிழுத்தார் பின்னாளின் வில்லனாகத் தமிழ் சினிமாவில் முத்திரைபதித்த நடிகர் எம்.என்.நம்பியார்.

வக்கீல் சட்டநாதனை அம்பலப்படுத்துகிற முயற்சியில் நம்பியார் 11 வேடங்களில் தோன்றினார்.

அதுவொரு வியக்கவைத்த சாதனையாகப் பார்க்கப்பட்டது.

காதலன் கண்ணப்பனாக பி.வி. நரசிம்ம பாரதியும், நாயகியாக அந்நாளின் புகழ்மிக்க டி.கே.எஸ். சகோதரர்களின் நாடகக் குழுவில் இயங்கிவந்த எம்.எஸ்.திரௌபதியும் நடித்தார்கள்.

வக்கீல் சட்டநாதனாக நடிப்பில் அடக்கிவாசித்துத் தனித்துவம் காட்டும் வெகுசில அபூர்வ நடிகர்களுள் ஒருவரான டி.பாலசுப்பிரமணியம், அவரது தம்பி மாசிலாமணியாக டி.கே.ராமச்சந்திரன் உள்ளிட்டோர் நடித்தார்கள்.

உறங்கிவிடாமல் மூன்று நான்கு நாட்கள் வக்கீல் சட்டநாதனை விழித்தே இருக்கச் செய்யும் கதையின் போக்கிற்குத் தோதாக லலிதா – பத்மினி மற்றும் பேபி கமலா ஆகியோரின் நடனக் காட்சிகளும் இடம்பெற்றிருந்தன.

அந்தக் காட்சிகளை நடனக்கலை மேதை வழுவூர் இராமையா பிள்ளை வடிவமைத்திருந்தார்.

மருதகாசி, கா.மு.ஷெரீஃப், கே.பி.காமாட்சி, தஞ்சை ராமையாதாஸ் ஆகியோரோடு புதிதாகப் பாட்டெழுத வந்திருந்த கண்ணதாசனும் பாடல் இயற்ற, மொத்தம் 12 பாடல்கள் படத்தில் இடம்பெற்றிருந்தன.

படத்திற்கு ஜி. ராமநாதனும் எஸ்.எம். சுப்பையா நாயுடுவும் இணைந்து இசையமைத்திருந்தார்கள்.

நம்பியாரின் திறம்பட்ட நடிப்பிற்காகவும் ரசிகர்களின் மனதில் நின்ற சில பாடல்களுக்காகவும் இந்த திகம்பர சாமியார் வெற்றிகரமாக ஓடி நல்ல வசூலையும் அள்ளித் தந்தது.

பதிவை பகிர

Add your first comment to this post

You cannot copy content of this page