திரைப்புதையல் – 10: தாசிப்பெண்

நகர்வு

Thiraipputhaiyal 10 Dasippen

– சோழ. நாகராஜன்

அப்போதெல்லாம் அப்படியொரு வழக்கமிருந்தது.

ஒரு படத்திற்கு ஒரேயொரு பெயரை மட்டும் வைப்பதில் அந்தநாள் சினிமாக்காரர்களுக்குத் திருப்தி இல்லாமலிருந்ததுபோலும்.

இரண்டு – மூன்று பெயர்களை ஒரே சினிமாவுக்குச் சூட்டுவது அந்நாளின் இயல்பாக இருந்திருக்கிறது.

அப்படித்தான் தாசிப்பெண் என்றொரு தமிழ்ப்படத்திற்கும் மூன்று பெயர்கள் வைத்திருந்தார்கள்.

தாசிப்பெண் எனும் பெயரோடு நிற்காமல் ஜோதி மலர், தும்பை மகாத்மியம் என்றும் அந்தப் படத்தின் பெயர்கள் இருந்தன.

இருப்பினும் முதல் பெயரே நினைவுகூரப்பட்டிருக்கிறது.

பெயரைப் பார்த்த மாத்திரத்திலேயே இதன் கதை இப்படியானதென ஓரளவு யூகிக்கலாம்.

தேவதாசிமுறை வழக்கத்திலிருந்த காலத்து வாய்மொழி நாடோடிக் கதையொன்றின் தழுவல்தான் இதன் கதை எனக் கூறப்பட்டாலும் நாடக மேதை பம்மல் சம்மந்தம் அவர்களின் இதே பெயரில் மேடையேற்றப்பட்ட நாடகத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இதன் கதை இந்தப்படியாக இந்தது:

‘இளம் தேவதாசியொருத்தியைப் பற்றிய கதைதான் இந்த தாசிப்பெண்.

அவளை அவள் பிறந்த குலத்தின் அந்நாளைய வழக்கப்படி ஜமீந்தார் ஒருவருக்கு ‘ஆசைநாயகி’யாக அதாவது அவளை அவருக்குப் பாலியல்ரீதியாகப் பலியிட முடிவுசெய்கிறது அவளது குடும்பம்.

அவளுக்கு அதில் துளியும் விருப்பமில்லை.

அவளுக்கு சிவபெருமான் மீது மிகப்பெரிய பக்தி.

அவளுக்கு ஒரு காதலன். அவனையே திருமணம் செய்துகொள்ள அவள் படாதபாடு படுகிறாள். தொல்லைகளை அனுபவிக்கிறாள்.

இந்த நிலையில் ஜமீந்தார் அவளைக் கடத்திக்கொண்டுபோகத் திட்டமிடுகிறான்.

அவள் பக்தி செய்யும் சிவபெருமானாலும் பார்வதியாலும் அந்தக் கடத்தல் தடுக்கப்படுகிறது.

தன்மீது கொண்ட அதீத பக்தியை மெச்சி அவளைத் தும்பைச் செடியாக மாற்றுகிறார் சிவன்.

அதனால்தான் சிவ பூசைக்கு உகந்த மலராகத் தும்பைப்பூ இருக்கிறது என்றும் ஒரு புராணக் கதையைக் கூறி இந்தப் படத்தின் இன்னொரு பெயரான தும்பை மகாத்மியம் என்பதற்கு நியாயம் கற்பித்தது.’

தேவதாசிமுறைக்கு எதிரான குரலாக இந்தப் படம் 1943 ல் வெளிவந்தது.

வைணவக் கிருஷ்ணனின்மீது காதல் கொண்ட வடபுலத்து மீராபோல, தென்னகத்து ஆண்டாள்போல, சைவமதக் கடவுளான சிவனை நினைந்துருகும் இந்தப் படத்தின் நாயகியாக ஆர். பாலசரஸ்வதி நடித்திருந்தார்.

புதுமைகள் நிறைந்த இந்தப் படத்தின் இயக்குநர் அன்றைய தமிழ் சினிமாவின் புகழ்மிக்க அமெரிக்கக் கலைஞரான எல்லிஸ் ஆர்.டங்கன்.

மிகச் சிறந்த படத்தொகுப்பாளரான ஆர்.எஸ்.மணி படத்தின் எடிட்டிங் பணியைத் திறம்படச் செய்திருந்தார்.

தற்போது ஒரேயொரு பிரதிகூட கையிருப்பில்லாது போய்விட்ட இந்தப் படத்தின் படப்பிடிப்பு மும்பையின் மினர்வா மூவிடோன் மற்றும் சென்னையின் நியூடோன் ஸ்டூடியோசிலும் மேற்கொள்ளப்பட்டது.

இதை புவனேஸ்வரி பிக்சர்ஸ் தயாரித்தது.

படத்தின் நாயகன் – நாயகியின் காதலன் குரலில் உச்சம் தொட்ட டி.ஆர்.மகாலிங்கம்.

படத்தில் சிவபெருமான் வேடத்தில் நடித்ததோடு, பாலசரஸ்வதியுடன் இணைந்து ஒரு நடனமும் ஆடிக் கலக்கியவர் எம்.ஜி.ஆர்.

அது அவரின் துவக்க கால சினிமா. எனவே, ஒரு துணைக் கதாபாத்திரத்தில்தான் நடித்தார். அதிலும் தனது பக்தைக்கு அருள்பாலிக்கும் சிவனாக.

எம்.ஜி.ஆரும் பாலசரஸ்வதியும் ஆடிய நடனம் அப்போது பேசப்பட்டது.

படத்தில் மொத்தம் 30 பாடல்கள் இடம்பெற்றிருந்தன. டி.ஆர்.மகாலிங்கமும், பாலசரஸ்வதியும் போட்டி போட்டுக்கொண்டு பாடல்களைப் பாடியிருந்தார்கள்.

பிரபல லலிதா வேங்கடராமனும், சலூரு ராஜேஸ்வர ராவும் இணைந்து இசையமைத்திருந்தார்கள்.

லலிதா இந்தப் படத்தில் பாடவும் வீணை இசைக்கவும் செய்திருந்தார்.

1938 வெளியான ஏ.வி.எம்.மின் நந்தகுமார் படத்தில் பாடி தமிழ் சினிமாவின் முதல் பின்னணிப் பாடகி என்னும் பெயரினை வரலாற்றில் பெற்றவர்தான் இந்த லலிதா என்பது பலரும் அறியாத அரிய செய்தி.

இன்னொரு வியப்பான செய்தியும் இந்தப் படத்தின் தொடர்பில் உண்டு.

படம் உருவான காலம் இரண்டாம் உலகப்போர் நடந்த சமயம். கடுமையான ஃபிலிம் தட்டுப்பாட்டின் காரணமாக படத்தின் நீளம் 13,623 அடியாக மட்டுமே இருந்தது.

அதாவது வெறும் 13 ரீல்.

அப்போதெல்லாம் வழக்கமாக படங்களை 18, 20, 22 ஆயிரம் அடிகள் எடுப்பது சர்வசாதாரணம்.

எனவே, இந்தப் படம் ஓடுகிற நேரம் குறைவானதாக ரசிகர்கள் உணராதவாறு இந்தப் படத்துடன் கிழட்டு மாப்பிள்ளை என்ற ஒரு துண்டுப் படத்தையும் இணைத்துக் காட்டினார்கள்.

படத்தில் வழக்கம்போல தனி ஆவர்த்தனம் செய்தனர் அந்நாளைய நகைச்சுவை மேதமை இணையான கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனும் டி.ஏ.மதுரமும்.

படத்தின் பிரதான கதையாடல் தேவதாசிமுறைக்கு எதிராக, தான் விரும்பும் ஆடவனைத் திருமணம் செய்துகொள்ள விழையும் ஒரு பெண்ணைப் பற்றியதாக இருக்க, அதற்கு மாறாக இன்னொரு நியாயத்தை உணர்த்துவதாக கலைவாணர் தனது நகைச்சுவைப் பகுதியை அமைத்து அப்போதே ஒரு புதுமைப் புரட்சியைச் செய்திருந்தார்.

தனக்கு விருப்பமில்லாத ஆடவனுடன் திருமணம் செய்துவைக்கப்பட்ட நிலையில் மதுரத்துக்கு ஊர்ஊராகப்போய்ப் பட்டுத்துணி விற்கும் என்.எஸ்.கே. மீது நாட்டம் ஏற்படுவதாக இருந்தது இந்தப் படத்தில் கலைவாணரின் நகைச்சுவை.

இந்த நாளிலும் நினைத்துப்பார்க்க முடியாத இப்படியானதொரு பெண் சமத்துவம் – பெண் விடுதலையை முன்மொழியும் ஒரு உள்ளடக்கத்தை அப்போதே கலைவாணர் துணிந்து தனது நகைச்சுவையில் வைத்தது ரசிகர்களை வியப்பிலாழ்த்தியிருக்கும்தானே?

பதிவை பகிர

Add your first comment to this post

You cannot copy content of this page