சரவணன் சந்திரன் – ஜிலேபி சிறுகதைத் தொகுப்பு

நகர்வு

பல நாவல்களும், கட்டுரைத் தொகுப்புகளும் எழுதியுள்ள எழுத்தாளர் சரவணன் சந்திரன் அவர்களின் ஜிலேபி சிறுகதைத் தொகுப்பு கோவை புத்தகத் திருவிழாவில் வெளியிடப்பட்டது. யாவரும் பதிப்பகம் மூலமாக வெளிவந்திருக்கும் இந்தச் சிறுகதைத் தொகுப்பு குறித்து இளங்கோவன் முத்தையா எழுதிய முன்னுரையிலிருந்து…

இந்தத் தொகுப்பில் எனக்கும், இன்னும் சில நண்பர்களுக்கும் பிடித்தமான கதை ‘சிக்னேச்சர்’ தான். குடும்ப உறவுகளுக்குள் நிகழும் சில வினோதமான, ஆழ்மனச் சிக்கல்களைத் தொட்டுச் செல்லும் கதை அது. கொஞ்சம் சறுக்கினாலும், கூடக் குறைத்து எழுதினாலும் வேறொரு தலைகீழான உணர்வைக் கொடுத்துவிடக் கூடிய கதை அது. இக்கதையில் சரவணன் சந்திரன் அதை அழகாகக் கையாண்டிருந்தார்.

புத்தகத்தின் தலைப்பாக மாறியிருக்கும் ஜிலேபி கதையும் மனித மனதின் நுட்பமான ஒரு உணர்வைப் பேசும் கதைதான். “ஒரு கதையாக எழுதும் அளவுக்கு இது அப்படி ஒரு முக்கியமான விஷயமா?” என்று முதல் முறை படிக்கும்போது தோன்றவே செய்தது. பின்பு நிதானமாக யோசிக்கையில், நிகழ் வாழ்வில் இப்படியான நுணுக்கமான பிரச்சனைகளால் எத்தனையோ பேர் வாழ்க்கையே புரண்டு போயிருக்கிறது என்பதையும் புரிந்து கொள்ள முடிந்ததால் இவையும் எழுதப்பட வேண்டியதுதான் என்று நினைத்துக்கொண்டேன்.

பாவம், புண்ணியம், கூட்டுக் குடும்பங்களில் மனிதர்களுக்கிடையே நிகழும் நுணுக்கமான பிரச்சனைகள், தனி மனிதர்களின் மன விகாரங்கள், குற்றவுணர்வு இவை சரவணன் சந்திரனுடைய படைப்புகள் பெரும்பாலானவற்றின் ஊடுபாவாக இருப்பதை உணர்ந்திருக்கிறேன். இந்தத் தொகுப்பிலுள்ள கதைகளிலும் அவற்றை அவரது வாசகர்களால் உணர முடியும்.

ஒரு ஹாக்கி கோச்சுக்கும், விளையாட்டு வீரனுக்கும் மைதானத்துக்குள் நடக்கும் ஒரு விஷயம் மைதானத்தைத் தாண்டி எப்படியெல்லாம் அவர்கள் மனதுக்குள் வினையாற்றும் என்கிற கோணத்தில் சொல்லப்பட்ட ‘யாதவப் பிரகாசர்’ பரவலாக பல வாசகர்களால் பாராட்டப்பட்ட ஒன்று. சரவணன் சந்திரன் சில முடிச்சுகளை முடிந்து வைத்து, அவற்றைக் கதையின் இறுதியில் அழகாக அவிழ்த்திருந்தார்.

குற்றவுணர்வு கொடுக்கும் பெரும் மனவுளைச்சலைப் பேசிய ‘மூக்குத்தி’ கதை தனிச்சிறப்பான ஒன்று. கணநேரத் தடுமாற்றங்கள் தீராவலியைக் கொடுத்துவிடும் அனுபவங்களை அறிந்தவர்களின் மனதை நெருடும் கதை அது.

‘ஒரு சொல்’ என்னவெல்லாம் செய்துவிடும் என்பதைச் சொல்லும் கதைகள் ‘அவக்’, ‘பட்டு’ மற்றும் ‘முகம்’ ஆகிய கதைகள். இக்கதைகளின் அடிநாதம் கதையில் வரும் ஏதேனும் ஒரு பாத்திரம் சொல்லும் ஒரு சொல்தான். அந்த ஒரு சொல் ஏற்படுத்திவிடும் மனவுளைச்சல்களையும், விலகுதல் மனப்பாங்கையும், குற்றவுணர்வையும், அவமானத்தையும் பேசும் கதைகள் அவை.

இளங்கோவன் முத்தையா.

பதிவை பகிர

Add your first comment to this post

You cannot copy content of this page