புத்தகப் பேச்சு – அடையாற்றுக்கரை – நாவல்

நகர்வு

இந்திய சுதந்திரப் போராட்ட தியாகியின் மகளான மதுரையைச் சார்ந்த திருமதி சரோஜினி கனகசபை அவர்கள் குறைந்த காலத்தில் 200 புத்தகங்களைப் பற்றி ரிவ்யூ எழுதியிருக்கிறார். அவரின் பார்வையில் அடையாற்றுக்கரை நாவல் குறித்து…

சென்னை ஓவியக் கல்லூரியில் பயின்ற சினிமா கலை இயக்குநர் மு. து. பிரபாகரன் தென்சென்னை வாழ்வியலைப் பேசும் ஒரு மாபெரும் சுவர் ஓவியத்தை இந்த நாவலில் தீட்டி இருக்கிறார். எளிய மக்களின் துயரங்கள், நம்பிக்கைகள், கனவுகள், போராட்டங்கள் அவற்றை ஓவியமாகத் தீட்ட தன் கையில் இருக்கும் வண்ணங்கள் அனைத்தையும் செலவிட்டு இருக்கிறார். ஒரு புகைப்படத்தில் காணப்படும் எளிய மனிதரின் ஆழ்மனதைப் பேச வைப்பதின் மூலமாகக் கதை சொல்லும் உத்தியைக் கையாள்கிறார்.

அடையாற்றுக் கரை எனும் இந் நாவல் பிழைப்புத் தேடி, வெளியூரில் இருந்து சென்னைக்கு வந்த மக்கள், வறுமைக்கு ஆட்பட்டு, வாழ்க்கையை வாழ முடியாமல் தவிப்பதையும், வறுமை அழைத்துச் செல்லும் கொடுமையான பாதையையும் மையமாக வைத்து எழுதப்பட்ட நூல். நகர உருவாக்கத்தின் ஊடாக, ஏழைகள் வாழ முடியாமல், பல கொடுமைகளுக்கு உடன்படுதலை இந்தக் கதையில் பதிவு செய்கிறார். சென்னையில் உள்ள ஆற்றோரப் பகுதிகளும், சிறுசிறு சந்துகள் கூட ஏழைகளின் வாழ்விடமாக மாறியதைக் கதை விளக்குகிறது. அடையாற்றுக் கரையை மையமாகக் கொண்டு அந்தக் கரையோரம் வாழும் மக்கள் குழுவினர் பற்றி முதன்முறையாக இந்நாவல் பேசுகிறது. இங்கிருக்கும் மக்கள் என்ன செய்கிறார்கள்? எப்படி வாழ்கிறார்கள் என்று யாருக்கேனும் தெரியுமா என்னும் கேள்வியை நம்முன் வைக்கிறார்.

சென்னையில் உயர்தர, நடுத்தர வர்க்க வீடுகளில் பணியாளர்களாக மற்றும் கூலிகளாக, கட்டிட மேஸ்திரி, சித்தாள்கள், வீட்டு வேலையாட்கள், சுகாதாரப் பணியாளர்கள் என்று இருப்பவர்கள் இவர்களே. இவர்களுக்கான வாழ்வாதாரம், மருத்துவம் ,கல்வி போன்றவை என்னவாக இருக்கிறது என்பது குறித்த கவலை யாருக்கும் இல்லை. இவர்களைத் தேவைக்குப் பயன்படுத்தும் கூட்டமாக வைத்துக் கொள்ளவே அரசியல் கட்சிகள் விரும்புகின்றன என்று ஆசிரியர் கூறுகிறார். ‘நீர் நிலை ஆக்கிரமிப்புகள்’ என்று சொல்லி வெளியேற்றப்படும் இம்மக்கள், சென்னையை விட்டு 40 கிலோ மீட்டர் தூரத்தில், சுற்று வட்டாரத்தில் எந்தக் குடியிருப்புகளும் இல்லாத திறந்த காடுகளில், இன்னொரு நீர் பிடிப்பு நிலத்தில்தான் குடியமர்த்தப்படுகின்றனர். இன்றைய கண்ணகி நகரம், செம்மஞ்சேரிகளில் குடியேற்றப்பட்டு இருப்பவர்கள் இவர்களே. இவர்களுக்கு நிரந்தரமான வாழ்விடம் இல்லை. ஆக்கிரமிப்பாளர்கள் என்ற பெயரில் இவர்கள் துரத்தப்படுகிறார்கள். அவர்கள் ஆக்கிரமிப்பாளர்கள் இல்லை என்று இந்த நாவல் மிகக் கடுமையாக வாதிடுகிறது.

நாங்கள் நதிக்கரையை ஆக்கிரமித்தோம் என்றால் நகரமாக்கப்பட்டபோது எங்க தாத்தன் முப்பாட்டன் போன்றோர் தான் உயிரைக் கொடுத்து இந்நகரை நிர்மாணித்தார்கள் என்று குரல் எழுப்புகிறது இந்நாவல். நாங்கள்தான் ஆக்கிரமித்தோம் என்று சொன்னால் ஒரு காலத்தில் சீரோடும் சிறப்போடும் இருந்த ஏரிக்கரைகள் எல்லாம் எங்கே போயின? இவற்றையெல்லாம் ஆக்கிரமித்து வீடுகள் கட்டி நாங்களா குடியேறி இருக்கிறோம்? நுங்கையூர் ஏரி, மாம்பழம் ஏரி, மயிலாப்பூர் குளம் இவையெல்லாம் யாரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது? நதியைக் கால்வாயாக மாற்றி கழிவுநீர் செல்லும் பாதையாக மாற்றியது யார் என்ற கேள்விகளை இந்த நூல் எழுப்புகிறது.

இயற்கையின் அழிவுக்கு காரணமானவர்கள் எல்லாம் நகரத்தின் குடிமக்களாகவும், ஆரம்ப நிலைகளில் கடும் பாறைகளாகவும், முள்வேலிகளாகவும் கிடந்த இடங்களைத் தன் அயராத உழைப்பின் மூலம் சரி செய்து நகரமாக மாற்றிய கடுமையான உழைப்பாளிகளான விளிம்பு நிலை மக்கள் ஆக்கிரமிப்பாளர்களாகவும் ஆக்கப்பட்டு இருக்கும் அரசியலை இந்த நூல் எடுத்துரைக்கிறது. விளிம்புநிலை மக்களின் வாழ்வியல்,
படிப்பறிவில்லாத தாழ்த்தப்பட்ட மக்களின் கோபம், வறுமை சூழ் காதல், பிறரது துன்பங்களைத் தானும் ஏற்றுக் கொள்ளும் எளிய இரக்க மனோபாவம் போன்றவற்றை மிகவும் எளிமையாகவும் யதார்த்தமாகவும் இந்நூலில் எடுத்தியம்பட்டு உள்ளது. தன்னைச் சுற்றியுள்ள சக மனிதர்களின் ஆசாபாசங்களை, அவர்தம் வாழ்வியல் சூழல்களை எளிமையாகக் கொண்டு பழைய சென்னையின் உண்மை மனிதர்களை அவர்களின் ரத்தமும் சதையுமான வாழ்க்கையைச் சொல்லும் நாவல் இது. நாவலில் நிறைய வரலாற்றுக் குறிப்புகள் இருக்கின்றன.

1977 இல் வந்த புயல் சென்னை அடையாற்றுக் கரையோர மக்களின் வாழ்க்கையைப் புரட்டி போட்டு சென்றுள்ளது. கரையோரத்தில் இருந்த வீடுகள் அடையாறில் அடித்துக் கொண்டு போகும் காட்சிகள், வீட்டில் வளர்த்த பிராணிகளும், புயலில் சிக்கித் தவித்த மனிதர்களும் வெள்ளச் சுழிப்பில் சிக்கிக் கொண்டு வங்க கடலில் சென்று கலந்த காட்சிகள் நம் கண் முன் நடப்பது போல் ஆசிரியர் காட்சிப்படுத்தி இருக்கிறார். இக்கதையில் வரும் அம்பேத்குமார் என்ற கதாபாத்திரத்தினை தெளிவான சிந்தனையுடன் அடையாற்றுக் கரையோர மக்களின் வாழ்வியல் குறித்து யோசிக்கும்,
நியாய அநியாயங்களை அலசும், மக்களுக்காக குரல் கொடுக்கும் பாத்திரம் ஆக ஆசிரியர் படைத்துள்ளார். கல்வியின் மேன்மையை உணர்ந்தவராக ‘நல்லாப் படிங்கடா… அப்பத்தான் நம் நிலை உயரும், இந்த குப்பை கூளங்களுக்குள் வாழும் வாழ்க்கை நிலை மாறுபாடு அடையும், பொருளாதார முன்னேற்றம் மற்றும் சுயச் சார்பு அடைய இயலும்’ என்று தன் மக்களிடம் பேசுகிறார். கல்வி ஒன்றுதான் நம்மைக் கரை சேர்க்கும் என்பதை மக்களிடம் வலியுறுத்திக் கொண்டே இருக்கிறார்.

முருகப்பன், கன்னிமா, முனுசாமி, பஞ்சவர்ணம், சம்பங்கி, தொப்புளான், மூக்காயி, முத்தம்மா, மாரியம்மா, ஏழுமலை, மாரிமுத்து, மணி, முனியம்மாள், குமார், தர்மன், விசாலாட்சி, கோமதி, மீனாட்சி, பக்கிரி, பொம்மி, அம்பேத்குமார், சந்தோஷ், நிரஞ்சனி போன்ற பேர்கள் நாவலில் முக்கியமான கதாபாத்திரங்கள். மீனாட்சி என்பது ஒரு கிளி. குப்பை அள்ளும் வேலை செய்யும் முனுசாமி தன் திருமணத்திற்கு முன்பான வாழ்க்கை குறித்தும், அவனுடைய மனைவி பஞ்சவர்ணத்திற்கும் அவனுக்குமான காதல் குறித்தும், அவனுடைய அத்தை, மாமா, சம்பங்கி – தொப்புளான் குறித்தும், திருநங்கை சுகன்யாவின் கதையையும் அந்தக் கிளியிடம் சொல்வது போல் கதையை அமைத்துள்ளார். சுகன்யாவின் கதாபாத்திரம் மிகவும் மனம் வருந்தச் செய்தது.

பஞ்சவர்ணம் தன் தாயிடம் சுகன்யா மற்றும் முனுசாமி இடையேயான நட்பை தவறாகப் பேசும் இச்சமூகத்தின் இழிவான முகத்தைக் கிழித்தெறிகிறாள். அந்தப் பகுதி படிக்கும்போது மிகவும் நெகிழ்வாக இருந்தது. பஞ்சவர்ணத்தின் தாய் சம்பங்கி அனைவரிடம் சண்டையிடும் கதாபாத்திரமாக இருந்தாலும் அனைவர் மீதும் இரக்கப்படும், வறுமை நிலையிலும் தன்னிடம் இருப்பதை அள்ளிக் கொடுக்கும் குணம் உள்ளவளாக படைக்கப்பட்டுள்ளார். மாரிமுத்துவின் கதாபாத்திரம் ஓரிடத்தில் ‘படிப்பு என்பது கடைநிலை மனிதர்களின் மூச்சுக்காத்துன்னு உணர்ந்தேன்… இந்தப் படிப்பு சுவாசத்தை அதிகரித்தால் நம்மை வாழவைக்கும் என்பதைத் தெரிந்து கொண்டேன். இதைத் தனக்கான இணக்கம் பெறாமல் போனால் பல நூற்றாண்டு வகுத்து வந்த சாமியின் காலடியில் வைத்த பரம்பரை தொழில் ஒட்டி கூவத்தின் கழிவுக்குள் அடைத்து விடும் என்று நான் அறிந்தேன்’ என்று சொல்கிறது.

படிப்பின் முக்கியத்துவம் அறிந்து நன்றாக படித்து உயர் பதவிக்கு வருகிறார் மாரிமுத்து. ஆனால் தான் பெற்ற பதவியால் தன் வாழ்விடத்தில் எந்த ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்த அவர் முனையவில்லை. நினைத்திருந்தால் கொஞ்சம் மக்களுக்காவது வழிகாட்டியாக திகழ்ந்து அவர்கள் வாழ்வியலை உயர்த்தி இருக்கலாம். இதனை தன் வாழ்வின் கடைசி நாளில் உணர்கிறார். மாரிமுத்துவின் தாயார் தங்களுடைய கடந்த கால வாழ்வியல் நினைவுகளை உறவுகளைத் தூக்கி எறிந்து விட்டு மகனின் பதவிக்கேற்ப படித்த காமாட்சியை மணம் முடித்து வைக்கிறார். தன் உயர்வுக்கு காரணமான அத்தை மற்றும் தான் உயிருக்கு உயிராக நேசித்த அத்தையின் மகளைப் பிரிந்து தாயாரின் கட்டாயத்தின் பேரில்
காமாட்சியை மணம் முடிக்கும் போது மனம் நொறுங்கிப் போகிறார்.

அவருடைய குழந்தைகள் சந்தோஷ் மற்றும் நிரஞ்சனி மருத்துவத்துறையில் அமெரிக்காவுக்குச் சென்று பணிபுரிகின்றனர். இந்த நாடு நமக்கு வேண்டாம் என்று அமெரிக்காவுக்குச் சென்று விடுகின்றனர். இந்த நாவலின் முக்கிய பாத்திரமான மாரிமுத்து, நாவலின் முடிவில் நாகரிகமுடைய அமெரிக்காவில் இருக்கப் பிடிக்காமல் அடையாற்றுக்கரைக்கு திரும்ப விரும்புகிறது. இவற்றின் மூலம் எது நாகரீகம்? எது அழுக்கு என்கிற அழுத்தமான கேள்வியை இந்தப் பாத்திரத்தின் மூலம் முன் வைக்கிறது நாவல்.

வட்டார மொழி தமிழ் கொச்சைத் தன்மையாக இருப்பதாக படிக்கும்போது தோன்றியது. பின்னர் மக்களின் வார்த்தைகளின் வழி கசியும் அன்பின் சொற்களை மெல்ல மெல்ல வாசிக்கையில் மொழி புரிபட ஆரம்பித்தது. கூவம் அடையாறு கரையோரங்களில் குடிசைகளில் வாழும் இவர்கள் நகரம் வெளியேற்றும் அழுக்கை சுவாசிப்பவர்களாகவே இருக்கிறார்கள். இங்குள்ள மக்கள் அனைவரும் வட மாவட்ட கிராமங்களில் இருந்து பிழைப்பிற்காக இங்கு குடியேறியவர்கள். சென்னையை ஆரம்ப காலங்களில் உருவாக்கியவர்களே இவர்கள்தான். அவர்கள் ஏன் அங்கேயே இருக்கிறார்கள் என்று நாம் கேட்கலாம். ஆனால் வேறு வழியின்றி அங்கேயே வாழ நிர்பந்திக்கப்படுகிறார்கள் என்பதுதான் உண்மை என்று பிரபாகரன் அவர்களின் அடையாற்றுக் கரை நாவல் குறிப்பிடுகிறது. சென்னையின் பூர்வீகத்தைக் குறித்து மற்றும் ஆற்றோர மக்களின் வாழ்வியல் அறிந்து கொள்ள விரும்புவோர் இந்தப் புத்தகத்தை வாசியுங்கள்.

நூல்: அடையாற்றுக்கரை

ஆசிரியர்: மு.து.பிரபாகரன்

வெளியீடு: டிஸ்கவரி பப்ளிகேஷன்

விலை ரூ.400

பதிவை பகிர

One Comment

மோகனா சுகதேவ்
மோகனா சுகதேவ்

அருமை! சிறந்த விமரிசனம்! ஆசிரியரின் முயற்சி மிகவும் பாராட்டப்பட வேண்டிய ஒன்று. கூவம், அடையாறு, பக்கிங்ஹாம் கால்வாய் என்று சென்னையை ஊடறுத்து சென்ற நீர்வழிகள் நமது அலட்சியத்தால் காலப்போக்கில் முகத்தை சுழிக்க வைக்கும் சாக்கடைகளாக மாறிப் போய் விட்டன. அதையொட்டி வசிக்கும் மக்களையும் தீண்டத்தகாதவர்களாக நினைக்க வைத்தன. இந்த நாவல் அந்த எண்ணத்தை மாற்றி அவர்களுக்கு உரிய மதிப்பைப் பெற்று தரும் என்ற நம்பிக்கையை விதைக்கிறது. வாழ்த்துக்கள்!

You cannot copy content of this page