புத்தகப் பேச்சு – மீன் காட்டி விரல் – கவிதைத் தொகுப்பு

நகர்வு

கவிதையில் ஜீவன் இருக்க வேண்டும். அதை வாசகன் உணர வேண்டும். ஜீவனுக்கு அரு வடிவம் என்றாலும் அது பறவையிலும், விலங்கிலும், மரத்திலும், மனிதனிலும் வெவ்வேறாக உணரப்படுகிறது. கசாப்புக் கடையிலும், விபத்திலும், மருத்துவமனையிலும் வெளியேறும் உயிருக்கு நாம் காட்டும் உணர்வுகளில் வித்தியாசம் உண்டு. ஒவ்வொரு புத்தகத்தின் ஜீவனும் வெவ்வேறு அடையாளங்களைக் கொண்டவை. அவற்றின் தாக்கமும் வெவ்வேறானவை.

மீன் காட்டி விரல் சுட்டும் மீனைப் பொறுத்துதான் அதன் ஜீவனை நாம் உணர முடியும். எப்படியான மீன்களை கவிஞர் நமக்கு அடையாளப்படுத்துகிறார் என்பதை இப்பதிவில் நாம் காணலாம். மனித உணர்வுகளை யதார்த்தமாகப் பிரதிபலிக்கும் கவிதைகள் என்று அணிந்துரையில் கி.சரஸ்வதி எழுதியது போல ந. சிவநேசனின் கவிதைகள் வெளிக்கொணரும் உணர்வுகளும் வெவ்வேறானவை, மனிதர்களைப் போல.

மழையை யாருக்குத்தான் பிடிக்காது. மழையில் நனைந்தால் சளி பிடித்துக் கொள்ளும் காய்ச்சல் வந்து விடும் என்ற பயமுறுத்தல்களுக்கு மத்தியில் பெரும் ஓசையோடு மழையோடு ஆடும் மனம் யாருக்குத்தான் இல்லை. ஜன்னல் வழி மழையைத் தீண்டும் விரல்களுக்கு மோதிரம் கூட சுமைதான். குளியல் என்ற கவிதையில் குளித்துக் கொண்டிருக்கும் கயலைக் காண காட்டுகிறார்.
*
மழையில் குளிக்கும் ஆசை கொண்டவள்
அம்மாவுக்கு பயந்து உள்ளே ஓடுகிறாள்
யாரும் பார்க்காத நேரம்
சன்னலிலிருந்து கை நீட்டி
விரலுக்கு மட்டும்
குளித்துக் கொள்கிறாள்
*
ஒரு கவிதையில் பேருந்துக்குள் நுழைந்துவிட்ட பலூனால் பேருந்தே பறக்கத் தொடங்குகிறது. இன்னொரு கவிதையில் வாங்கி வந்த சேலையோடு உடுத்திக் காட்டிய பெண்ணும் வீட்டிற்குள் நுழைகிறாள். பிறிதொரு கவிதையில் ஒரு குருவியின் பொருட்டு ஒரு செடி மரமாக வளர்கிறது நம் தோட்டத்தில். நாமும் குருவிக் குஞ்சியாக வாய் பிளக்கிறோம். நாம் சாதாரணமாகக் கடந்து செல்லும் பலவற்றில் கவிஞரின் நுணுக்கப் பார்வை விரிகிறது. இப்படித்தான் பூஜ்ய ஒளிப்பேழையிலிருந்து வரும் ஒளியின் கையெழுத்தைக் காட்டுகிறார்.
*
ஜீரோ வாட்ஸ் பல்பின்
கம்பி இழைகளில் தெரிகிறது
ஒளியின் கையெழுத்து
*
அறுந்த செருப்பை ஊக்கில் கோத்து அணிந்திருப்போம். ஆனால் இப்படிப் பார்த்திருக்க மாட்டோம். அப்படிப் பார்க்கும் போதுதான் அணிகலனாகிறது.
*
அறுந்துப் போன
செருப்பின் காதில்
தோடாக மின்னுகிறது ஊக்கு
*
வாழ்வே ஓர் இனிமையான சுமைதான். அது நகர்தல்களை இரசிக்கும் பாங்கிலிருக்கிறது.
*
பண்டிகை நாளில்
வெங்காயம் விற்று வருகிறான்
வண்டிக்காரன்
தொலைதூரத்தில் குடும்பம் தொலைத்தவனின்
கொண்டாடாத துக்கத்தை கைமாற்றி
துண்டு மைசூர்பாகை
கையில் திணிக்கிறாள் சிறுமி
இப்போது
மெதுவாக நகரும்
வண்டியில் கனக்கிறது
இனிப்பின் சுமை
*
சில கவிதைகளில் பிரமாண்டமாய் பிரமிப்பு வீற்றிருக்கிறது. அது நம்மையும் பற்றிக் கொள்கிறது.

*
வெட்ட வெளியில்
உறங்குபவன்
இமைகளால்
வானத்தை மூடுகிறான்

*

முதல் பக்கம் தொடங்கி கடைசி பக்கம் வரை பயணித்து புத்தகத்தை மூடுகையில் கவிதைக்குள் தொலைந்து விடுகிறது நம் மனம், சுகமாகத்தான்.


*
பாலத்தைக் கடக்கும்
இரயில் பெட்டியொன்றில்
இதுவரைப் பார்த்திடாத
ஆற்றை
இச்சன்னலுக்கும்
அச்சன்னலுக்கும் ஓடியோடி
இரசிக்கும் சிறுவனின் கண்களில்
வனம் கடக்கையில்
கூண்டுக்குள் ஆர்ப்பரிக்கும்
கிளியின் தவிப்பு
*
உணர்வுகளை வார்த்தைகளில் கலந்துவிடும் கைத்திறன் சிவநேசனுக்கு வாய்த்திருக்கிறது.
பால்யத்தை நினைவுபடுத்தும் கவிதைகள், வறியவனுக்கு செழுமையை ஊட்டும் கவிதைகள் என்று பல திசைகளில் சிறகு விரிக்கின்றது இப்புத்தகம்.

பொக்கிஷம் என்பது பதுக்கப்படுவதும் பாதுகாக்கப்படுவதுமாய் இருக்கிறது. இப்புத்தகம் நாம் அனுபவிப்பதற்கான தரமான பொக்கிஷமாகத் திகழ்கிறது. மீன் காட்டி விரலில் தமிழைக் காட்டும் அழகு அலாதியானது.

-கனவு திறவோன்

நூல் : மீன் காட்டி விரல்
ஆசிரியர் : ந. சிவநேசன்
வெளியீடு : மெளவல் பதிப்பகம்
விலை : 120 ரூபாய்

பதிவை பகிர

Add your first comment to this post

You cannot copy content of this page