நா. முத்துக்குமார் நினைவில்…

நகர்வு

நா.முத்துக்குமார் – வெட்டியெறிந்த வலி- லட்சுமி மணிவண்ணன் (முகநூல் பதிவு)

சி. மோகன் மூலமாகத்தான் நா. முத்துக்குமார் எனக்கு நண்பரானார். சி. மோகன் தனது திருவல்லிக்கேணி அறையை விட்டுவிட்டு கடற்கரைப் பக்கமாக மற்றொரு அறையில் தங்கியிருந்த சமயம். அப்போது எங்களுக்கு சி.மோகனின் அறை, நாகராஜ் மேன்ஷன், ராஜமார்த்தாண்டன் அறை எல்லாம் நேசிப்பிற்குரிய போக்குவரத்துப் பாதைகள். நாகராஜ் மேன்ஷன் ராஜமார்த்தாண்டன் அறையோடு விக்கிரமாதித்யன் அண்ணாச்சிக்குத்தான் தொடுப்பு அதிகம். சி.மோகன் அறை எங்கள் அறையைப் போன்றிருந்தது. சி.மோகனின் அறைகள் அனாதைத்தனத்தைக் கொண்டிருப்பவர்களைக் கொண்டாடுபவை. தனிமையை துதிப்பவை. இலக்கிய ஆர்வமும், பன்முகத் தாக்கமும் தேவையென உணரும் தனிமைக்கு சி.மோகனின் அறைகளில் பெரிய முக்கியத்துவம் உண்டு.

வசதி, வாய்ப்புகள், புகழ் என எந்தத் திறத்தினராக இருந்தாலும் அவர்களை ஒருங்கிணைக்கும் ஆற்றலை இந்த அறையின் பண்பு கொண்டிருந்தது. யாரும் கைவிடப்படுவதில்லை என்கிற கிறிஸ்துவின் வாக்கியம் மோகனின் அறைகளுக்குப் பொருந்தும். நான் சொல்லக்கூடிய விஷயங்களின் காலம் இரண்டாயிரம். இந்த அறையோடு என்னுடைய பழக்கம் திருவல்லிக்கேணியிலிருந்தே தொடங்கிவிட்டது. முத்துக்குமார் அப்போதே சினிமாவில் புகழ் பெற்றுவிட்டார். ஓய்வின்றி உழைத்தார். நேரம் கிடையாது. ஆனால் இந்த கர்த்தரின் அறையோடு அவருக்கு சமயம் இருந்தது. மோகன் அழைத்தார் என்றால் எப்போது வருவேன் என்பதைச் சொல்லிவிட்டு சரியாக வருவார். மோகன் மீது மானசீக நேசம் அவருக்கு இருந்தது.
மோகனின் அறைதான் அவருக்கு நவீன தமிழ் இலக்கியத்தின்பால் கவர்ச்சி ஏற்படக் காரணம். அனாதைத்தனத்தைக் கையாள்வது எப்படி என்பதை அந்த அறையே அவருக்கு கற்றுத் தந்திருக்க வேண்டும். கற்றுத் தந்தது. தீவிர இலக்கியத்தாலும், கலையாலும் மட்டுமே தனிமையிலிருந்தும், அனாதைத்தனத்திலிருந்தும் கழற்ற முடியும் என்பது அவருக்குள் ஆழமாகப் பதிந்தது. அவர் ஏற்கனவே பழகி வந்த பாதையோ இதற்கு முற்றிலும் மாறுபட்டது, பாசாங்குகள் நிறைந்தது. அந்தப் பாசாங்குகளின் அக அழுத்தத்திலிருந்து வெளியேற மோகனின் அறை உதவியது மட்டுமல்லாமல் புதிய பாசாங்கற்ற, பட்டவர்த்தனமாக உலகைக் காட்டியது.

முத்துக்குமார் நவீன இலக்கியத்தின் அத்தனை காரணகர்த்தாக்களையும் பாகுபாடின்றி நேசித்தமைக்கும், மதித்தமைக்கும், உதவிகள் புரிந்தமைக்கும் இந்த அறையில் அவர் கொண்டிருந்த தொடர்பிற்கும் சங்கதி உண்டு. அந்த அறைக்குச் செல்லும் ஒன்றிரண்டு சந்தர்ப்பங்களில் முத்துக்குமார் வந்திருக்கிறார். அதுபோல சென்னை புத்தக விழாக்களை ஒட்டி அகரம் கதிர் உட்பட இந்த அறையில் தொடர்புள்ளவர்கள் கூடுவதுண்டு. அத்தகைய ஒரு சில சந்தர்ப்பங்களில் அவரும் உடனிருந்திருக்கிறார். அந்த அறைக்கு வருகிற குஞ்சுக் குருமானிகள் கூட தன்னகந்தையைக் கையிலெடுத்து வைத்து பிசைந்து காட்டிக் கொண்டேதான் இருப்பார்கள். நோயுற்ற எங்களைப் போன்ற குழந்தைகளின் பொதுப் பண்பு அது. அகந்தையின் கரத்திலிருந்து ஒருபோதும் கீழிறங்குவதே இல்லை.

நான் அறிந்தவரையில் முத்துக்குமாரிடம் தன்னகங்காரத்தை ஒருமுறை கூட பார்த்ததில்லை. இந்த தன்னகங்காரமற்ற அவரது குழந்தைத்தனத்தை வெகுவாக ரசித்தேன். என்னைப் போன்றவர்களுக்கு கைவரப்பெறாத பண்பு இது. 2005 ல் என்னுடைய எதிர்ப்புகள் மறைந்து தோன்றும் இடம் கவிதைத் தொகுப்பு வெளியீட்டு விழாவிற்குப் பிற நண்பர்களுடன் இணைந்து நாகர்கோவில் வந்திருந்தார். சந்தியா பதிப்பகம் வெளியீடு அது. ஊர்ப்பக்கம் ஒரு கோவிலில் கிடா வெட்டிக் கொண்டாடினோம். அவரை அந்த விழாவிற்கு அழைத்திருக்கவில்லை. சந்தியா பதிப்பகம் நடராசன், சி.மோகன், ராஜகோபால், கள்ளழகர் ஆகியோருடன் இணைந்து தன்னிச்சையாக அவரும் வந்து கலந்து கொண்டார். இலக்கிய நண்பர்களை அதிகமாகக் கொண்டிருந்த விழா அது. கோணங்கி,கைலாஷ் சிவன், பாலை நிலவன், முத்து மகரந்தன் உட்பட நிறைய பேர் அந்த நிகழ்வில் உண்டு.

ஊரில் நண்பர்கள் முத்துக்குமாரை மட்டும் அடையாளம் கண்டுகொண்டார்கள். அவர் பேரில் அவர்கள் மிகுந்த அன்பு பாராட்டினார்கள். சுற்றி வளைத்துக் கொண்டு அவர்கள் அன்பினில் மாட்டிக் கொண்டார். இதுபோன்ற சந்தர்ப்பங்களில் கூசும் தன்மை கொண்டவர் அவர். ஆனால் அன்று அவர்களுடன் உற்சாகமாக இருந்தார். அப்போதுதான் முத்துக்குமாரின் பாடல்கள் வழியே அவர்கள் அவரை தினமும் தொடர்பு கொண்டு வருகிறார்கள் என்பது தெரிந்தது. விழா நடைபெற்ற வளாகத்திலிருந்து அவர்களையும் தனது வாகனத்தில் வெளியே அழைத்துச் சென்று அந்த பகுதியையெல்லாம் சுற்றிவிட்டுத் திரும்பினார்கள். அவர்கள் எப்போது என்னைக் கண்டாலும் முத்துக்குமார் நலமா எனக் கேட்கத் தொடங்கினார்கள். அன்றைய நாளில் அவர் மிகவும் உற்சாகமாகக் காணப்பட்டார். அந்த விழாவிற்குப் பின்னர் எனக்கும் அவருக்குமான நட்பு விலகவே இல்லை.

நள்ளிரவுகளில் அழைத்தாலும் கூட அவர் எனது அழைப்புகளை எடுக்கத் தவறியதில்லை. ஒருமுறை இரவு மிகவும் பிந்தி விட்டது. தீராத அன்பில் ஒரு நண்பர் அவருடைய பாடல் ஒன்றை மனப்பாடமாகச் சொல்லிக் கொண்டிருந்தார். இப்போதே அவரிடம் பேசவேண்டும் என தொல்லை தர முத்துக்குமாரை நள்ளிரவிற்கும் பிந்தைய பொழுதில் அழைத்தேன். தூங்கி எழும்பிக் காலையில் பேசும் குழந்தையின் பாவத்தில் பேசிக் கொண்டிருந்தார். வேலை நெருக்கடிகளிலும் அழைப்பை எடுக்க இயலவில்லையெனில் குறுஞ்செய்தி அனுப்பி விட்டு திரும்ப அழைப்பார். முத்துக்குமாரின் இழப்பு என்பது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதத்தில் இருக்கக்கூடும். எனக்கு எனது உடலுறுப்பில் ஒன்றை வெட்டியெறிந்த வலி.

சிறுவயதில் அம்மாவை இழக்கும் குழந்தைகள் வாழ்நாளெல்லாம் அன்பிற்கான ஏக்கம் கொண்டிருப்பார்கள். எனக்கும் அவருக்குமான பொதுத்தன்மைகளில் ஒன்று இது. நாங்கள் இருவரும் அது குறித்துப் பேசிக் கொண்டிராவிட்டாலும் அமைதியில் அந்த ஓர்மையிருந்தது. அதுபோலவே அப்பாவை இழக்கும் பெண் குழந்தைகளிடமும் இந்த அன்பிற்கான ஏக்கம் துளைத்துக் கொண்டே இருக்கும். இது ஒரு அவதி. அப்பாவை இழக்கும் ஆண்குழந்தைகள் நேர்மாறானவர். பின்னர் அம்மாவிடமிருந்து பெறுகிற அழுத்தங்களால் லௌகீகமாக கறார் பேர்வழிகளாக அவர்கள் இருப்பார்கள். முத்துக்குமார் ஏராளமானவர்களுக்கு கண்ணுக்குத் தெரிந்தும் தெரியாமலும் நன்மைகள் செய்துகொண்டே இருந்தார். அவற்றை அவர் செய்துவிட்டு சிந்திக்கும் பண்பு கொண்டவரும் இல்லை. நினைவுபடுத்துபவரும் இல்லை. உறவின் காரணங்களில் அவற்றைத் தொடர்புபடுத்துபவரும் இல்லை. விகடனில் அவர் ஒரு தொடரை எழுதிக் கொண்டிருந்தபோது இரண்டொருமுறை அழைத்துப் பாராட்டியிருக்கிறேன். விளங்கிக்கவே இயலாத அளவிற்கு அவ்வளவு சந்தோஷப்பட்டார். புகழின் உச்சியில் இருக்கும் ஒருவருக்கு இத்தகைய குணங்கள் வாய்ப்பது அபூர்வம்.

அவரது நடையுடை பழக்கங்களை மிகவும் ரசித்திருக்கிறேன். அவற்றில் அன்பின் நெளிவு சுழிவுகள் உண்டு. அதிகார மமதை கிடையாது. கோவில்பட்டியில் முருகபூபதியின் திருமண விழா கொண்டாட்டமாக நடைபெற்றது. எதிர்ப்புகள் மறைந்து தோன்றும் இடம் கவிதைத் தொகுப்பு வெளிவந்து ஒருசில மாதங்கள் கழிந்து என நினைக்கிறேன். முந்தைய நாள் இரவு சி.மோகனுடன் சினிமா நண்பர் ஒருவருடன் வந்திறங்கினார். அந்தக் காலத்தில் இப்போது போலில்லை. சினிமா ஆட்கள் வெற்றுப் பேதைகளாக இருப்பார்கள். நானும் பாலை நிலவனும் சாலையின் அந்தப் பக்கமாக இருந்து மோகனையும், முத்துக்குமாரையும் ஓங்கிச் சத்தமிட்டு அழைத்தோம். எனக்கு எழுதுகிறவர்கள், நண்பர்களை பெரும்பாலும் பெயர் கூறி அழைப்பதே பழக்கம். முத்துக்குமாருடன் வந்திருந்த சினிமா அபிமானி பெயர் கூறி அழைத்ததில் திடுக்கிட்டு எங்களிடம் சீற்றமுற்றார். அப்போதே அவரை கைகழுவிப் புறக்கணித்து விட்டு எங்களுடன் இணைந்து கொண்டார். பிறகு திருமண வீட்டில் மறுநாள் எங்கெங்கோ பிரிந்து கலைந்து விட்டோம்.

திருமணம் முடிந்த மறுநாள் காலையில் விடுதியின் வெளியே கலக்கத்துடன் நின்ற அவரை ஏன் என்று நானும் பாலைநிலவனும் விசாரித்தோம். அவரிடம் ஒரு தடுமாற்றம் இருந்தது. கோவில்பட்டியை பொறுத்தவரையில் கோணங்கியிருக்க அங்கே எவருக்கும் எந்த இடர்பாடும் கிடையாது.
‘‘ஒன்றுமில்லை மணிவண்ணன்… உடன்வந்தவர்கள் விட்டுச் சென்றுவிட்டார்கள் என நினைக்கிறேன். ஏற்கனவே மோகன் ஊருக்குச் செல்லவேண்டும் என்பதைச் சொல்லியிருந்தார். மற்றவர்களிடந்தான் பிரயாணச் சீட்டும் இருக்கிறது. என்ன செய்வதென்று தெரியவில்லை. இங்கிருந்து சென்னைக்குப் பேருந்தேற என்ன செய்ய வேண்டும்? அருகில் ATM ஏதேனும் இருக்குமா?” என்று கேட்டார்.

அவர் கையிலிருந்த அனைத்துப் பணத்தையும் பிறருக்கு செலவு செய்துவிட்டது தெரிந்தது. உடனடியாக கோணங்கியை அழைத்து கோணங்கி மூலமாக அவரைச் சென்னைக்குத் திருப்பி அனுப்பினோம். நான் சொல்ல நினைத்த விஷயம் வேறு. அவர் கோவில்பட்டி வந்திறங்கும்போது டிராலி சூட்கேஸ் சாலையில் உருட்டிக் கொண்டே வந்தார். அப்போது அது புதிது. அபாரக் கவர்ச்சியில் இருந்த அந்தக் காட்சி இப்போதும் என் கண்முன்னே நிற்கிறது.

ஒருமுறை சென்னையில் நடைபெற்ற ஒரு புத்தக விழாவில் இருவரும் கலந்து கொண்டோம். என்னுடைய ‘வெள்ளைப் பல்லி விவகாரம்’ சிறுகதை நூலை உயிர்மை வெளியிட்ட விழா. அவர் வேறு ஏதோ ஒரு புத்தகத்தை வெளியிடவோ, பெற்றுக் கொள்ளவோ வந்திருந்தார். அப்போது வெளியில் நின்று பேசிக்கொண்டிருந்த போது ஒல்லியான வெள்ளை நிற சிகரெட் எடுத்துப் பற்ற வைத்தார். மிகு கவர்ச்சி. என் கையில் இருந்த சிகரெட்டை வீசி விட்டு அவருடன் இருந்த ஒல்லியான வெள்ளை நிற சிகிரெட்டை வாங்கிப் பற்றவைத்துக் கொண்டோம். அந்த ஒல்லி வெள்ளை சிகரெட்டை வேறெந்த உலக நாயகன் பற்ற வைத்திருந்தாலும் அதன் பேரில் எனக்கு கவர்ச்சி ஏற்பட்டிருக்காது.

நமக்குப் பிடித்தமான எழுத்தாளர்களிடமிருந்தோ, நண்பர்களிடமிருந்தோ உடல்மொழியில் சில உதிரி பாகங்கள் நம்மிடம் வந்து இணைவதுண்டு. அதில் சில பொருந்தியும் போகும். அப்படி முத்துக்குமாரிடமிருந்து தொற்றிய சில பாகங்கள் என்னிடம் உண்டு. அந்த ஒல்லி வெள்ளை சிகரெட் பற்றி தீராநதியில் எழுதிய ஓம் சக்தி ஓம் பராசக்தி தொடர்பத்தியில் ஓரிடத்தில் குறிப்பிட்டிருந்தேன் சற்று பகடியாக. படித்துவிட்டு அழைத்த அவர்… ‘‘அது மிகவும் விலை மலிவானதுதான் மணிவண்ணன். நீங்கள் பிடிக்கும் சிகரெட்டைக் காட்டிலும் மிகவும் மலிவுதான். நான் வரும்போது நிறைய வாங்கி கொண்டுவருகிறேன்” என்றார்.

சிகரெட்டை வாங்கிவிடமுடியும். அந்த ஒல்லியான வெள்ளை நிறக் காட்சியை எப்படி விலைக்கு வாங்க முடியும்? முத்துக்குமார் மறைவை என்னால் ஏற்கவும் முடியவில்லை. நம்பவும் முடியவில்லை. அப்படியில்லை அவர் எதோ வேலை நெருக்கடியில் இருக்கிறார் குறுஞ்செய்தி கூட அனுப்ப இயலாத அளவிற்கு என்பதாகவே நினைவில் இருந்து விட்டுப் போகட்டும். உண்மைகளை வைத்துக் கொண்டு என்னதான் சாதித்துவிடப் போகிறோம்?

இரண்டாண்டுகளுக்கு முன்னர் இருக்கும் என நினைக்கிறேன். திருச்செந்தூரிலிருந்து பேசினார்.
‘‘மணிவண்ணன் எங்கே இருக்கிறீர்கள்? திருச்செந்தூருக்கு ஒரு படப்பிடிப்பிற்காக வந்தேன். இங்கே இருப்பு கொள்ளவில்லை. நாகர்கோவில் வருகிறேன் எங்கேயாவது போவோம்” என்றபடி கிளம்பி வந்தார்.
நான் அப்போது சபரிமலைக்கு மாலையிட்டு விரதத்தில் இருந்தேன். கன்னியாகுமரியின் பல்வேறு இடங்களுக்குச் சுற்றித் திரிந்தோம். நான் மாலையிட்டிருப்பதும், விரதத்தில் இருப்பதும் அவருக்கு ஆச்சரியமாக இருந்தன. திரும்பும்போது வீட்டிற்கு வந்து குழந்தைகளுக்கு ஆசி கூறிச் சென்றார். மற்றொரு முறை நாகர்கோவிலில் மெஸ் போன்ற ஏதேனும் உணவகத்தில் மீனுணவு சாப்பிட வேண்டும் என விரும்பினார். நான் நல்ல கடைகளுக்குச் சென்றுவிடுவோம். அதுதான் நல்லது என்று சொல்லிப் பார்த்தேன். அவர் ஏற்கவில்லை. யாரோ அவரிடம் கன்னியாகுமரி மாவட்டத்தில் மெஸ் போன்ற உணவகத்தில்தான் மீனுணவு சிறப்பாக இருக்கும் என்று சொல்லி ஏற்றியிருந்தார்கள். அப்படியே பிரபலமான ஒரு கடைக்கு அழைத்துச் சென்றேன். அவரால் அந்த எரிப்பில் சாப்பிடவே முடியவில்லை. கண்கள் கலங்க எழுந்து விட்டார்.

நான் என்னுடைய புத்தகங்களில் ஏதேனுமொன்றை அவர் வெளியிடவோ, அல்லது பெற்றுக் கொள்ளவோ வேண்டும் என ஆசைப்பட்டேன். நடைபெறவில்லை. இரண்டு மாதங்களுக்கு முன்பு படிகம் நவீன கவிதைக்கான இதழ் வெளிவந்தபோது அந்த இதழை ஞானக்கூத்தன் வெளியிட முத்துக்குமார் பெற்றுக்கொள்ள வேண்டும் என விரும்பினோம். ஒத்துக் கொண்டார். ஒருவாரம் கழித்து அழைத்து
‘‘மணிவண்ணன் அதே தேதியில் என்னுடைய கல்லூரி நண்பர்கள் காஞ்சிபுரத்தில் சந்திக்க ஏற்பாடு செய்திருக்கிறார்கள். கடந்த முறை என்னால் கலந்து கொள்ள முடியவில்லை. தவறாக எடுத்துக் கொள்வார்கள். ஆனால் உங்கள் நிகழ்வில் கலந்து கொள்வதே எனது விருப்பமாக உள்ளது. உங்கள் நிகழ்வில் சமயத்தை சற்று மாற்றிக் கொள்ள முடியுமா?” எனக்கேட்டார்.

ஞானக்கூத்தன் உடல்நிலை சரியில்லாத நிலையிலும் ஒத்துக் கொண்டிருக்கிறார். இனி எல்லாவற்றையும் மாற்றவேண்டி வருமே முத்துக்குமார் என்றேன். இந்த முறை நான் வர இயலாததத்திற்குப் பதிலாக சி.மோகனை நிகழ்ச்சியில் பெற்றுக் கொள்ளச் சொல்லுங்கள் என்று சொன்னவரும் அவரே. அவர் சொன்னதன் அடிப்படையிலேயே படிகம் இதழின் ஆசிரியர் ரோஸ் ஆன்றா இதழை வெளியிட ஞானக்கூத்தனையும் பெற்றுக்கொள்ள சி.மோகனையும் நிகழ்வில் சேர்த்துக் கொண்டது. சரி அடுத்த முறையில் எப்படியும் வருவேன் என்றார்.

ஒருமாதத்திற்கு முன்னர் பேசும்போது ‘‘டைபாய்டு காய்ச்சல் மணிவண்ணன். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுத் திரும்பியிருக்கிறேன். எப்போதும் மிகவும் களைப்பாக இருக்கிறது” என்றார். நீங்கள் சரியான நேரத்திற்கு சாப்பிடாமல் வயிற்றில் புண்கள் ஏற்பட்டிருக்கும். அந்த மருந்துகளை எடுத்துக் குணம் வரட்டும். பின்னர் இங்கு வந்து தெரிசனங்கோப்பு மகாதேவ ஐயரிடம் முழுவதுமாக ஒருமுறை பரிசோதித்து ஆயுர்வேத மருத்துவம் செய்து கொள்வோம் என்று சொல்லியிருந்தேன். வருகிறேன் என்றே அவரும் சொல்லியிருந்தார்.

லக்ஷ்மி மணிவண்ணன்

பதிவை பகிர

1 thought on “நா. முத்துக்குமார் நினைவில்…”

பின்னூட்டம் இடுக


You cannot copy content of this page